Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் மாருதியன்

 

 

Commander-Lieutenant-Colonel-Maruthiyan.jpg

அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் மாருதியன் / றஞ்சன்

நாம றஞ்சனை பார்க்கவேணும்

அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம். மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டதுதான் அம்பாறை மாவட்டம்.

அந்தக் கானகம் எமக்கு பரிச்சயமானதாக இருந்தாலும் புதிதாகச் செல்பவர்களுக்குப் பயம் நிறைந்திருக்கும். அக்காட்டினுள் இருக்கும் புலிகளின் பாசறையில் பகல் வேளைகளில்கூட சூரியனைக் காண முடியாது. எத்திசையில் இருக்கின்றோம் என்பது தெரியாது. அத்தோடு பல மிருகங்களின் வெவ்வேறுபட்ட மிகப் பயங்கரமான சத்தங்கள். மொத்தத்தில் தனியாகச் செல்வதென்பதே சிலருக்கு முடியாத காரியம். ஏனெனில் திசைமாறி வேறெங்கோ சென்றுவிடுவோம். மிருகங்கள் தாக்கும் என்ற அச்சம். இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 90ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நாங்கள் மட்டக்களப்பில் இருந்து அக்கானகத்தில் உள்ள எமது முகாம் ஒன்றிற்கு பணி நிமித்தம் சென்றிருந்தோம் ஒருநாள். நன்றாக சேட் கை உயர்த்தி மடிக்கப்பட்டு முகம் முழுதாக மழிக்கப்பட்டு (முகச்சவரம்) M.16 துப்பாக்கியின் குழல் (பரல்) ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் சாதாரண உயரம் கொண்ட அழகான புலிவீரன் தனியாக எங்கோ இருந்து கானகத்தின் நடுவில் அமைந்திருந்த எமது முகாமிற்கு வந்தான். அங்கு அவன் எம்மை நோக்கி வருகின்றான். எம்மில் சிலருக்கு அவனைத் தெரியாது. அப்போது எமக்குப் பக்கத்தில் வந்தபின் அருகில் இருந்த போராளி ‘வணக்கம் றஞ்சண்ணன்’ என்று சொல்ல நாங்கள் பெயரை அறிந்துகொண்டோம். பின் எங்களது பெயர்களைக்கேட்டு அறிமுகமாகி பின்னர் சந்திப்போம் எனச் சிரித்தவாறு சொல்லிவிட்டு விடைபெற்றான்.

அதன் பின்னர்தான் நாங்கள் இவர் யார் என்று எமக்குப் பக்கத்தில் இருந்த போராளியிடம் விசாரித்தோம். அப்போராளி அவரைப் பற்றிச் சொன்னார். இவர்தான் முன்னுக்கு நிற்கும் அணியின் பொறுப்பாளர் என்று. (அங்கு முன்னுக்கு என்பது அக்காட்டின் எல்லை. எதிரியின் முகாம்களை அண்மித்த பிரதேசம்) அப்படித்தான் நாங்கள் அவனை ஆரம்பத்தில் தெரிந்து கொண்டோம். ஆனால், முன்னுக்கு நிற்கும் அணியின் பணி அங்கு கடினமானது. வேவுக்குச் செல்வது, எதிரி காட்டுக்குள் வராமல் தடுப்பது, உணவுப் பொருட்கள் எடுக்கச் செல்லும் போராளிகளுக்கு பாதை காட்டுவது என இன்னோரன்ன பணிகள். அதில், அங்கு உணவுப்பொருட்கள் எடுக்கச் செல்வதென்பதைச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. எதிரியோடு சண்டை பிடிப்பதைவிடக் கடினமானது.

ஏனெனில் எதிரியின் பிரதேசத்திற்குள் வாழும் எமது மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிக்கும் பொருட்களை பல இடங்களில் இருந்து எடுத்து அதை ஓர் இரவுக்குள் எமது பிரதேசத்திற்குள் கொண்டுவர வேண்டும். அதன்பின்தான் கானகத்தில் உள்ள எமது முகாமிற்குக் கொண்டு சென்று சமைத்து உண்ணுதல், களஞ்சியப்படுத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பணிகள்தான் றஞ்சனுக்கு அப்போது வழங்கப்பட்டிருந்தன. அதன் நிமித்தம் நாங்கள் அவரின் இடத்திற்குச் செல்வோம். அப்போதுதான் அவருடைய நட்பு எமக்குத் தெரிந்தது.

பழகுவதற்கு இனிமையான இவனிடம் ஒரு வைராக்கியத்தைக் கண்டோம். எந்நேரமும் எதிரியைக் கொல்லவேண்டும் என்றுதான் சொல்வான். இவன் சும்மா இருந்த நாட்களை நான் அறியவேயில்லை. அப்படிப்பட்டவன்தான் றஞ்சன். றஞ்சனின் குடும்பம் ஓர் அளவான குடும்பம். அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்றான தம்பிலுவில்லில் உள்ள செல்லத்துரை தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவனது இயற்பெயர் பிரபாகரன். இவனுக்கு ஒரு சகோதரன். இவன் 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்து விட்டான். (2ம் லெப். யோசப்) அடுத்து இன்னுனொரு சகோதரி இருக்கிறாள். அளவான அந்தக் குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்த இவன், குடும்பநிலை காரணமாக சில வருடங்களில் கல்வியை நிறுத்திவிட்டுத் தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டான். சிறுவயதிலேயே மிகவும் துடிப்புள்ளவனாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்குள்ளவனாகவும் விளங்கினான்.

அக்காலகட்டத்தில்தான் விடுதலைப்போராட்டம் முனைப்புப்பெற்று தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. சிங்களப்பேரினவாதிப் படைகளின் தமிழ்மக்கள் அழிப்புப் படையான விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரீ.எவ்) எண்பதுகளின் நடுப்பகுதியில் பல தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்தனர். அதன் தாக்கம் தான் இவனைப் போராட்டத்தின் பால் ஈர்த்தது. 1986இன் பிற்பகுதியில் தன்னையும் தனது பதினாறு வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டான்.

அம்பாறை இரண்டாவது பயிற்சிப் பாசறையில் இவன் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு நடந்த இராணுவத்திற்கெதிரான பல நடவடிக்கைகளில் பங்கு கொண்ட இவனது திறமையைக் கண்ட இவனது பயிற்சியாசிரியரும், அப்போதைய அம்பாறை மாவட்டத்தின் தளபதியுமான அன்ரனி அவர்கள் தனது உதவியாளனாகத் தேர்ந்தெடுத்து நடவடிக்கைகள் பலவற்றில் பங்குகொள்ள வைத்தார். அதில் இவனது திறமை பன்மடங்கானது.

இவர்களது பயிற்சி முடிந்த சிறிது காலத்தின் பின் இந்திய அமைதிப்படை எமது மண்ணுக்கு வந்தது. பின் அமைதிப்படையினர் ஆக்கிரமிப்புப் படையாக மாறினர். அதில் இவன் தளபதி அன்ரனியோடு, இந்தியப் படையுடனான அம்பாறை மாவட்டத்தின் அனைத்துத் தாக்குதலிலும் பங்குகொண்டு பெரும் அனுபவம்மிக்க புலிவீரனாக மிளரத் தொடங்கினான். இவன் 1990இன் முற்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் அழைப்பின் பேரில் தளபதி அன்ரனி அவர்கள் வடதமிழீழம் வந்தபோது, அவருடன் கூடவே வந்து ‘இதயபூமியில்’ தலைவரைச் சந்தித்து மீண்டும் தென்தமிழீழம் வந்து சேர்ந்தான். இக்காலகட்டத்தில் தென்தமிழீழப் போராளிகள் கணிசமானவர்கள் தலைவரைக் கண்டது அரிது. அப்படி தலைவரை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வீரச்சாவடைந்தால் நின்மதியாக இருக்கும் என்று கதைத்த பல போராளிகள் அவ்வாசை நிறைவேறாமலேயே வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் றஞ்சன் போன்ற ஒருசில போராளிகள் பார்த்துவிட்டு வந்து தலைவரைப் பற்றிச் சொல்லும் கதைகள் அலாதியாக இருக்கும். மீண்டும் தென்தமிழீழம் வந்த றஞ்சன் அப்போது மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் துணைத் தளபதியாக இருந்த லெப். கேணல் றீகன் அவர்களுடன் ஒரு அணிப் பொறுப்பாளராக நிற்கும்போதுதான் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.

அக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் நடந்த அனைத்துத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வெற்றிகள் பலவற்றிற்கு உறுதுணையாக நின்றான்.

1990இன் பிற்பகுதியில் அன்ரனி அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டான். அப்போதுதான் நான் முன்பு சொன்னதைப்போன்று முன்னணிக் குழுவின் பொறுப்பாளராக அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி ராம் அவர்களால் நியமிக்கப்பட்டான். சுமார் ஒன்றரை வருடத்திற்கு மேலாக ஒரு துணிச்சல்காரனாக அங்கு அதே பணியைத் திறம்படச் செய்தான். ஒரு விடயம், அங்கு உணவெடுத்து வருவதுதான் கடினமான பணியென்று முன்பு சொன்னேன். அப்படியான பணிக்காக நாங்கள் செல்லும் போது இவன்தான் முன்னே கிளியருக்குச் செல்வான். எப்போதுமே அவரவர்களுக்கு கொடுக்கும் பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று எப்போதும் கதைக்கும் இவன்இ சாப்பிடுவதென்றால்கூட எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்டுத்தான் சாப்பிடச்செல்வான். போராளிகளுக்கு உணவு கொடுப்பதில் ஒரு தந்தையைப்போலஇ ஏதாவது மிருகங்கள் சுட்டு இறைச்சியோ அல்லது குளங்களில் தனியாகச் சென்று மீன் பிடித்தோ நல்ல கறியோடுதான் உணவு கொடுப்பான். அப்படியாக இவனது பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென்று சொல்பவன் இயங்கிக் கொண்டிருந்தவன், அம்பாறையில் அந்த இறுக்கமான காலகட்டத்தில் இவனது பணி அளப்பெரியது என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் 1992இன் நடுப்பகுதியில் மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்டு ஒரு அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். அக்காலகட்டம் மட்டக்களப்பில் எதிரி, எங்கு கால் எடுத்து வைத்தாலும் இழப்பில்லாமல் முகாமிற்குத் திரும்பியதுமில்லை, புலிகள் இலங்கை இராணுவத்தைக் கொன்று ஆயுதங்கள் கைப்பற்றாமல் தங்கள் பாசறைக்குத் திரும்பியதுமில்லை. அப்படிக் கைப்பற்றிய ஆயுதங்களால் மட்டக்களப்பில் புலிகள் பெருஞ் சேனையாக உருவாகினார்கள். ஆயுதத்தால் தன்னிறைவு பெற்ற புலி அணிகளால் எதிரி கதி தலங்கினான். முகாமைவிட்டு வெளியில் வருவதற்கு அஞ்சினான். அப்படியான புலிகளின் தாக்குதல்களால் உணவுகூட எடுக்கச் செல்லாமல் இருந்த எதிரிமுகாம்கள் பல அக்காலகட்டத்தில் மூடிவிட்டுச் செல்லும் அளவிற்கு இருந்தது. உதாரணமாக 1992இன் கடைசிப்பகுதியில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதில் றஞ்சன் பல தாக்குதல்களில் ஒரு அணிப் பொறுப்பாளராகச் செயற்பட்டான்.

அக்கால கட்டத்தில்தான் 1993இன் முற்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்பில் மட்டு – அம்பாறை மாவட்டப் படையணியொன்று பெரும் திட்டமொன்றுடன் வடதமிழீழத்திற்கு அழைக்கப்பட்டது. அப்படையணிக்கு தலைவர் அவர்களினால் ஜெயந்தன் படையணி என்ற பெயர் சூட்டப்பட்டு பயிற்சிகள் நடந்தது. அப்போது இவன் ஒரு கொம்பனிப் பொறுப்பாளராக இருந்தான். எவ் வேலையைக் கொடுத்தாலும் வேகமாகச் செய்து முடிக்கும் இவனது அணியைப் பயிற்சியிலும் திறமையாகத்தான் செயற்பட வைத்தான். அதனால் ‘தவளை’ நடவடிக்கைக்கான தாக்குதல் திட்டத்தில் இவனுக்கொரு பகுதி கொடுக்கப்பட்டு பயிற்சிகள் நடந்தது. பயிற்சியின் போது தனது போராளிகள் சோர்வடையக்கூடாது என்பதில் கவனமெடுத்தான். எமது படையணியில் உள்ள போராளிகள் அனைவரும் சண்டையில் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் வட தமிழீழத்தில் தலைவரால் புகுத்தப்பட்டிருந்த பெரும் போரியல் நுணுக்கங்களின் அடிப்படையில் போரிட்ட அனுபவம் இல்லாதே இருந்தது. அத்துடன் பல படையணிகளுடன் சேர்ந்து பிடிக்கும் முதல் சண்டையும், பெயர் சூட்டப்பட்ட பின் படையணியின் முதல் சண்டையும் என்பதால் எந்த நேரமும் எமது படையணி யார்? என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும். நமது படையணிக்குத் தரப்பட்டிருக்கும் பகுதிகளை ஏனைய படையணிகளுக்கு முதல் பிடிக்கவேணும். தலைவர் நம்மை நம்பி எடுத்திருக்கின்றார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எந்த நேரமும் கதைப்பான்.

அதேபோல் தாக்குதல் நடந்தவேளை, தலைவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தமது ஆற்றலை ஆரம்பத் தாக்குதலிலேயே நிரூபித்துக் காட்டினார்கள். அதில் றஞ்சனும் ஒருவன். அவனுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை மிக வேகமாகவும் இழப்புக்கள் அதிகம் இல்லாமலும் பிடித்து விட்டான். பின்னர் ஏனைய பகுதிகளுக்கு உதவிக்கு வரவா? எனக்கேட்டுச் சென்று அத்தாக்குதலின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டிய றஞ்சன், ஒரு ஆடம்பரமில்லாத, அமைதியான, தீர்க்க சிந்தனையுள்ள, எதையும் மிக வேகமாகக் கிரகித்து அதற்கேற்ப செயற்படும் ஒரு தலைசிறந்த தளபதியாக றஞ்சன் உருவானான்.

அது 1994 இன் நடுப்பகுதி பூநகரி தவளை நடவடிக்கையில் பங்குகொண்ட போராளிகளில் ஒரு தொகுதியினை தலைவர் அவர்களின் பணிப்பில் தளபதி ராம் அவர்களோடு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் றஞ்சன் அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். அப்போது மட்டு – அம்பாறை மாவட்டத்தின் நிலைமை வேறுவிதமாக இருந்தது. எதிரியின் நடவடிக்கைகள் அதிகரித்திருந்தது. எங்கு பார்த்தாலும் எதிரியின் முகாம்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்று இறுக்கமான காலம்.

போராளிகள் எப்போதாவது கிடைக்கும் கஞ்சியைக் குடித்தே போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்த வேளையது. அப்போதுதான் மட்டக்களப்பிற்கு அணி சென்றது. புலி அணிகள் அங்கு சென்றது ஒரு தாக்குதல் செய்யும் வரைக்கும் எதிரிக்குத் தெரியக்கூடாது என்பதால் மறைவாக இருந்தே தாக்குதல் திட்டத்திற்கான வேவு தொடக்கம் பயிற்சி வரைக்கும் இரகசியமாக இருந்தே செயற்பட வேண்டியிருந்தது. அப்போது உணவுப் பொருட்கள் எடுத்து வருவதே கஸ்ரம். காரணம் நீண்டதூரம், எதிரியின் பதுங்கித்தாக்குதல் அணியின் நடவடிக்கை என்பற்றைக் கடந்து சென்றே கொண்டுவர வேண்டும். அதைக்கொண்டு ஒருநேரம் அல்லது இரண்டுநேரம் கஞ்சி குடித்துத்தான் அத்தாக்குதலுக்கான பயிற்சிகளை எடுத்தனர். அத்தாக்குதல் திட்டமானது மட்டு வாகரைப் பிரதேசத்தின் மையப்பகுதியும், புலிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமுமான கட்டுமுறிவு என்னுமிடத்தில்தான் அம்முகாம் அமைந்திருந்தது. அம்முகாம் இலங்கை இராணுவத்தின் முன்னணிப் படையான (S.F) விசேட படையினரின் ஒரு பலம் வாய்ந்த முகாம். அம்முகாம் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கப்பட்டது. அதில் றஞ்சனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்துமுடித்து அத்தாக்குதலுக்கு வலுச்சேர்த்தான்.

அம்முகாம் தாக்குதலின் பின் தளபதி ராம் அவர்களால் றஞ்சனுடன் ஒரு அணி அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்ப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைக்குச் செல்வதைச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அப்படி அப்போது அங்கு செல்லும் பாதை எங்கும் எதிரியின் முகாம்களும், ரோந்து அணிகளின் நடவடிக்கைகளும் இருந்தது. அம்பாறை மாவட்டத்தில்தான் இலங்கையின் முன்னைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால், அவரது மகனின் தலைமையில் தமிழர்களை வேறுபாடின்றி அழித்து, தமிழர்களின் பாரம்பரிய வளமிக்க நிலங்களை அபகரித்து, சிங்களவர்களைக் குடியேற்றும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் விசேட அதிரடிப்படை (எஸ்.ரீ.எவ்) எனும் படையினர் இருந்தனர். இருக்கின்றனர். அங்குதான் 1994இன் நடுப்பகுதியில் புலிகளின் நடவடிக்கைகள் கணிசமாக குறைந்திருந்த காலகட்டத்தில்தான் அவ்வாண்டின் பிற்பகுதியில் றஞ்சன் ஒரு சிறிய அணியோடு அம்பாறைக்குச் சென்றான். மட்டக்களப்பிலிருந்து வெளிக்கிடும் போது ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னான். “ஒரு மாதத்திற்குள் ‘எஸ்.ரீஎவ்’ற்கு அடித்து ஆயுதம் எடுக்காமல் விட்டால் நான் வீரச்சாவடைந்து விட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்” நாசுக்காக அதுவும் உறுதியாக எங்களில் சிலரிடம் இரகசியமாக அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள் அவை. சொன்னதைச் செய்பவன் றஞ்சன் என்பதால் அடிப்பான் என்பது எமக்குத் தெரியும். ஆனால் விரைவாகச் செய்யும் சூழல் அங்கு இல்லை என்பதால் நாங்கள் எல்லாம் அது கடினம் என நினைத்திருந்தோம். சொன்னதைப் போலவே ஒரு மாதத்திற்குள் பொத்துவில் ரொட்டைக்குளம் பகுதியில் ரோந்து சென்ற ‘எஸ்.ரீ.எவ்’ இனருக்கு அடித்து ஏழுபேரைக் கொன்று அவனிடம் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினான். அப்படி ஆரம்பித்த அவனது தாக்குதல்கள் அடுத்த மாதமே சிம்பிலாண்டுவ எனும் இடத்தில் அடுத்த தாக்குதலை மேற்கொண்டான்.

அதிலும் ஆயுதங்களைக் கைப்பற்றினான். அப்படியாக தீவிரமடைந்த அவனது தாக்குதல்களால் எதிரி கதிகலங்கி வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவிற்கு றஞ்சனின் நாமம் எதிரியிடம் பிரபல்யமானது. அப்போது எங்கெல்லாம் எதிரிக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அவனது பாதம் பட்டது.

இவனிடம் ஒரு வித்தியாசமான பண்பை நாங்கள் கண்டோம். யார் அபிப்பிராயங்கள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு, அதில் சாத்தியமானவற்றைச் செய்வதும், சாதாரண போராளிகளிடமும் கருத்துக்கள் கேட்டு அதற்கேற்ப அதை பகுத்தறிந்து நல்லவற்றிற்கு போராளிகளைத் தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டி, போராளிகளை வளர்க்கும் தன்மையைக் கண்டோம்.

1995இன் ஆரம்பத்தில் போர் நிறுத்தம் வந்தது. றஞ்சனுக்கு ஓய்வில்லை, காரணம் அப்போதைய பேச்சுவார்த்தையை அவனால் நம்ப முடியாமல் இருந்தது. ஆதலால் போராளிகளோடு கதைக்கும்போது, சிங்கள அரசு எமது உரிமையைத் தரப்போவதில்லை என்பதால் நாம் சும்மா இருக்கமுடியாது. எனவே பயிற்சி எடுக்கவேண்டும், எம்மை நாம் தயார் படுத்த வேண்டும், என ஓய்வில்லாமல் உழைத்தான். ஒரு சுவாரசியமான விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். போர் ஓய்வுநேரம் நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் போது ஒரு ‘எஸ்.ரீ.எவ்’ படையினன் றஞ்சனிடமே ‘நாம றஞ்சனைப் பார்க்கவேணும் காட்டுவீர்களா?’ என்று கேட்டான். அதற்கு ‘அவரைப் பார்க்கமுடியாது’ என்றான். ‘ஏன் வரமாட்டாரா?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்தில் நின்ற போராளி, ‘விடயத்தைச் சொல்லுங்கள் அவரிடம் கேட்டுவிட்டு வந்து சொல்கிறோம்’ என்றான். அதற்கு அப்படையினன் ‘எங்களுக்கு றஞ்சன் அடிப்பதுதானே? ஏடும் ஆள்தானே. சண்டை வந்தால் எங்களுக்கு அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ’ என்றான். அப்படி றஞ்சனின் தாக்கம் ஒவ்வொரு படையாளையும் தாக்கியதைக் கண்டோம்.

மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. அப்போது றஞ்சன் சொல்வான் எமது முதல் அடியால் சில முகாம்களை எதிரி அகற்ற வேண்டும் அப்படி நமது அடி இருக்கவேண்டும் என்று. அதற்கேற்றாற்போல் ஒரு திட்டம் தீட்டினான். ஒரு ரோந்தில் வரும் படையினரில் ஒருவன்கூட மிஞ்சாமல் கொல்லப்படவேண்டும் என்று தாக்குதல் திட்டம் தயாரானது. அத்திட்டமானது மூன்று நாட்களுக்கு அவ்விடத்திலேயே பதுங்கியிருப்பதுஇ எந்த நேரத்தில் வந்தாலும் அடிப்பது என்ற நோக்கோடு. ஏனெனில் அவன் சிலவேளைகளில் ரோந்து வராமல் விடலாம் என்பதால். ஆனால் நாங்கள் சென்று நிலையெடுத்திருந்த அன்றே அதாவது 08.05.1995 அன்று காலை 5.45 மணி அளவில் வந்தான் எதிரி. தாக்குதல் தொடங்கியது. ரோந்துப்படை புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டது. றஞ்சன் உள்ளே வழிநடத்தினான். வந்த படையில் ஒருவன்கூட மிஞ்சாமல் ரோந்துவந்த இருபது ‘எஸ்.ரீ.எவ்’ இனரும் கொல்லப்பட்டு ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது அப்போது வெற்றிகரமான தாக்குதல். அதில் புலிகள் தரப்பில் எதுவித இழப்பும் ஏற்படவில்லை என்பது றஞ்சனது போர் வியூகத்தின் சிறப்பாகும். இத்தாக்குதல் கஞ்சிகுடியாற்றுக்கும் காஞ்சிராங்குடாவிற்கும் இடையில் நடைபெற்றது. பின்னாளில் கஞ்சிகுடியாறு படைமுகாம் அகற்றப்பட்டதும் அவ்விடம் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதற்கும் றஞ்சனின் தாக்குதலே முக்கியமானது.

Lieutenant-Colonel-Maruthiyan-Ragnchan-s

‘ஹலோ றஞ்சண்ணை எங்க நிக்கிறியள்’ ‘நான் மச்சான் தாண்டியடிக்கும் கோமாரிக்கும் இடையில நிக்கிறன். ‘எஸ்.ரீ.எவ்’ இற்கு தகவல் அனுப்பிவிட்டு ரோட்டில் நிற்கின்றேன். வந்தால் அடித்துவிட்டு வருவேன், அல்லது பின்னேரம் வருவேன். அங்கேயே நில்லுங்கோ சந்திப்போம்’ ‘டேய் தம்பிமார் எழும்புங்கடா. இரண்டு மான் கொண்டுவந்திருக்கிறேன் உரியுங்கடா சமைப்பம்’ என்பான். இப்படியாக எந்த நேரமும் சுறுசுறுப்பாக எதிரிக்கு எதிரான நடவடிக்கையிலும் போராளிகளிற்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்ற பணியிலும் தீவிரமாகச் செயற்படுவான்.

றஞ்சனின் இறுதி நடவடிக்கையாக அது இருக்கும் என்பதை நாம் கனவிலும் நினைக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உணவுப்பொருள் கொண்டு வருவது கடினம் பற்றி முன்பே சொல்லிவிட்டேன். அதேபோன்று உணவுப்பொருள் எடுத்துவந்து முகாமிற்கு வராமல் வேறு ஒரு இடத்திற்குச் சென்று அங்கேயே தங்கி ஒரு தாக்குதல் செய்துவிட்டு வருவதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது.

அக்கரைப்பற்றிற்குப் போய் உணவுப் பொருள் எடுத்து வருவதற்கு 27.08.1995 அன்று இரவு இவர்களது அணி புறப்பட்டது. அங்கிருந்து அன்று இரவே தாங்கள் நிற்கவேண்டிய இடத்திற்குத் திரும்பவேண்டும். இல்லாவிடின் விடிந்துவிடும். விடிந்தால் எதிரி எம் மறைவிடத்தைக் கண்டுவிடுவான். கண்டால் தாக்குதல் திட்டம் பிழைத்துவிடும். அதனால் அன்றிரவு பொதிசுமந்து களைத்துப்போய் வந்த போராளிகளிற்கு ஓய்வில்லை. மிகவும் சோர்வோடு அங்கு வந்தவர்களுள் றஞ்சனோடு சிலர்தான் உணவுப்பொதி சுமக்கவில்லை. காரணம் அவர்கள்தான் முன்னுக்கு கிளியர்பண்ணி வந்தனர். ஆகையினால் பொதிசுமந்து வந்த போராளிகளை உறங்கவிட்டுவிட்டு களைப்போடு வந்த போராளிகளிற்குச் சமைத்துக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் இருந்த குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அங்குதான் 27.08.1995 அன்று அவனின் தீவிரமான விடுதலைப் போராட்டப்பணி முடியவேண்டும் என்றிருந்தது போலும் எப்படியாக மண்ணை நேசித்தானோ அப்படிப் போராளிகளையும் நேசித்தான். தான் நேசிக்கும் அப்போராளிகளிற்கு உணவு கொடுப்பதற்குச் சென்றவேளை எதிரியின் எதிர்பாராத மோதலினால் இந்த மண்ணை முத்தமிட்டு வீரகாவியமானான். ஓயாமல் வீசிய புயல் அவன். இந்த மண்ணில் ஓய்ந்தான்.

“இந்த விடுதலைப்போரில் கூடுதலாக சாதிப்பான் என்று நான் யாரை எதிர்பார்க்கின்றேனோ அவன் விரைவாகவே சாதித்துவிட்டு வீரச்சாவடைகின்றான்” என்று றஞ்சனது இழப்பின் பின் இயக்கத்தின் மூத்த தளபதி கலங்கிய கண்களோடு கூறியிருக்கின்றார் என்றால், றஞ்சன் எனும் போராளியை வேறுயாரும் வேறு எந்த வார்த்தையாலும் சொல்லத்தேவையில்லை.

நினைவுப்பகிர்வு: தயாமோகன்
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (வைகாசி, 2004).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-maruthiyan/

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம். 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.