Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் கலாச்சார இனவழிப்புக்கு உள்ளாகும் உவீகர் இன முஸ்லிம் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கலாச்சார இனவழிப்புக்கு உள்ளாகும் உவீகர் இன முஸ்லிம் மக்கள்

 

 

ஆகக் குறைந்தது பத்து இலட்சம் உவீகர் (Uighurs) முஸ்லிம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மையங்களின் வலையமைப்பின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை அண்மையில் பெற்றுக்கொள்ளப் பட்ட இரகசிய ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

இவ்வாறான தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுபவர்கள், சீன அரசினால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும், முகாம்களுக்கு உள்ளே இவர்கள் எவ்வாறு அரசின் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுக் கண் காணிக்கப்படுகிறார்கள் போன்ற விடயங்களையும் இந்த இரகசிய ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

இரகசியமாகப் பேணப்பட்ட இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய புலனாய்வு ஊடகவியலாளரின் பன்னாட்டு சம்மேளனம், அசோசியேற்றட் பிரெஸ்ஸை (Associated Press) உள்ளடக்கிய ஏனைய பன்னாட்டு ஊடகங்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், பிரமாண்டமான இந்தத் தடுப்பு முகாம்கள் எப்படி இயங்குகின்றன என்பது தொடர்பாக மிக முக்கியமான தகவல்களையும் வழங்கியிருக்கின்றது.

Uyghur Muslims and US-China Relations | Uyghur Muslims and US-China  Relations

முஸ்லிம் மக்களை அதிகளவில் கொண்ட சிறுபான்மைக் குழுமங்களைச் சார்ந்தவர்களைத் தடுத்து வைக்க, எப்படிப்பட்ட மூலோபாயங்களை சீன அரசு கைக்கொள்கிறது என்பதையும் அவர்களுக்கு மூளைச்சலவை செய்வதோடு மட்டுமன்றி, அவர்கள் நாளாந்தம் பேசுகின்ற மொழியைக்கூட எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும் இந்த ஆவணங்கள் வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கின்றன.

தடுப்பு முகாம்களில் காணப்படும் காவல் கோபுரங்களைப் பற்றியும் எப்போதும் பூட்டப்பட்டு வைத்திருக்கப்படும் இரட்டைக் கதவுகள், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தப்பிச்செல்வதைத் தடுப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள வீடியோக் கமராக்கள், அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பவற்றுடன் பெரும்பான்மையான சீன மக்களினால் பேசப்படும் மண்டறின் மொழியை அவர்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறார்கள், அரசின் கொள்கைகளை எவ்வளவுக்கு மனனம் செய்கிறார்கள், குளித்தல், கழிப்பிடங்களைப் பயன்படுத்துதல் போன்ற மிக அடிப்படையான செயற்பாடுகள் தொடர்பான கடுமையான விதிமுறைகளை எப்படிக் கைக்கொள்கிறார்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக, அவர்களை வகைப்படுத்தும் புள்ளியிடுதல் முறையைப் பற்றியும் இந்த ஆவணங்கள் மிக விரிவான தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

“இது ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) முன்வைத்த வழிமுறைகளைத் தழுவி மேற்கொள்ளப்படும் ஒரு இனவழிப்பு” என்று மனித உரிமைச் சட்டத்தரணியான ஆசலன் இவ்திக்கார் (Arsalan Iftikhar) அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

“இவை வெறும் கட்டுக்கதைகளே” என்று ஐக்கிய இராச்சியத்துக்குரிய சீனத் தூதுவர் லியூ சியாஓமிங் (Liu Xiaoming) கசிந்த இந்த ஆவணங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார்.

தொழில்நுட்பவியலின் பயன்பாடு

ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) உவிகர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் ஏனைய இனங்களைச் சார்ந்த முஸ்லிம்களும் இந்தத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் தாபனம் தெரிவிக்கும் அதே வேளையில், கடும் போக்குள்ளவர்களை நீக்கி புதிய திறன்களை அவர்களுக்குக் கற்பிக்கும் தொழிற்பயிற்சிக்கூடங்களே இவை என்று சீன அரசு இவற்றுக்கு விளக்கம் கொடுக்கிறது.

Despite China's denials, its treatment of the Uyghurs should be called what  it is: cultural genocide

பெறப்படும் தரவுகளும் செயற்கை விவேகமும் (artificial intelligence) சமூகத்தைக் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்ற விடயத்தை இந்த ஆவணங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

பிரமாண்டமான கண்காணிப்புத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், விசாரணை செய்யப்படுவதற்கோ அல்லது தடுத்து வைக்கப்படுவதற்கோ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கட்சி அதிகாரிகளை உள்ளடக்கிய பல பத்தாயிரக்கணக்கானவர்களின் பெயர்களை கணினிகளால் ஒரு வாரத்துக்குள்ளேயே வெளியிட முடிந்தது.

இனங்களை முழுமையாக இலக்கு வைத்து, குறிப்பாக தமக்கென சொந்தமான மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கின்ற, ‘உவிகர்’  என அழைக்கப்படும் துருக்கிய நாட்டைச் சேர்ந்த ஒரு மில்லியன் எண்ணிக்கையைக் கொண்ட சிறுபான்மை மக்களை கண்காணித்து, வகைப்படுத்தி, அவர்களைப் பலவந்தமாக உள்வாங்குதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ஓர் மிகப் பாரிய ஒழுங்கமைப்பை மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

“சீன அரசு உண்மையில் என்ன செய்கின்றது என்பதை முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அறிந்து வைத்திருக்கிறோம்” என்று சீனாவின் தூர மேற்குப் பிரதேசமான ஸிங்ஜாங் (Xinjiang) பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவம் கொண்ட ஏட்ரியன் ஸென்ஸ் (Adrian Zenz) தெரிவித்தார்.

உவிகர் இனத்தவரையும் ஹான் சீன இனத்தவரையும் உள்ளடக்கிய நூற்றுக்கணக்கானோர் வன்முறைகளிலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் இனக் கலவரங்களிலும் கொல்லப்பட்டுள்ள ஸிங்ஜாங் பிரதேசத்தை, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பல தசாப்தங்களாகவே சீன அரசு போராடிக் கொண்டிருக்கிறது.

உவிகர் இனத்தைச் சார்ந்த தீவிரமான போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ‘பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போர்’ என்ற பெயரில் சீன அதிபரான ஸீ ஜின்பிங் (Xi Jinping) 2014ஆம் ஆண்டில் ஒரு தாக்குதலை மேற்கொண்டார்.

அதேவேளை 2016ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் திபெற்றில் முன்னர் பணிபுரிந்த கடும் போக்காளரான ஸீ சென் குவாங்கோ (Xi Chen Quanguo) ஸிங்ஜாங்கின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட போது, இப்பிரதேசத்தின் மீதான ஒடுக்குமுறை கணிசமான அளவு அதிகரித்தது. கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் பெரும்பாலானவை 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்டவை.

‘தாங்கள் கைக்கொண்ட நடைமுறைகள் வெற்றியளித்திருக்கின்றன’ என்று சீன அரசு இந்த ஆவணங்களில் தெரிவிக்கிறது.

“பயங்கரவாதத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும், தீவிரவாதத்தைக் களைவதற்காகவும் உரியகாலத்தில் ஸிங்ஜாங்கில் தாம் முன்னெடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவே, மூன்று வருட காலத்துக்குள் எந்தவிதமான பயங்கரவாத தாக்குதலும் அங்கு இடம்பெறவில்லை” என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான ஜெங் ஷ_வாங் (Geng Suang) தெரிவித்தார்.

கோட்பாட்டுக் கல்வி

பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் கிடைத்திருந்தன. கிடைத்த இந்த ஆவணங்கள் தொடர்பாக நிபுணர்களைக் கலந்தாலோசித்தும் உள்ளடக்கத்தைச் சரிபார்த்தும், ஒப்பங்களை ஒப்பிட்டுப்பார்த்தும் ஆவணங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

தடுப்பு முகாமில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு துண்டுப்பிரசுரம், மக்களை இலக்கு வைக்க தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தும் செய்திக் கையேடுகள், கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது, ஆபாசப்படங்களைப் பார்க்கக்கூடாது, பிரார்த்தனை செய்யாது உணவு உண்ணக்கூடாது என்று தன்னோடு உடனிருந்தவர்களுக்குக் கூறியதற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உவிகர் இனத்தைச் சேர்ந்த உள்ளுர் கட்சிப் பணியாளர் தொடர்பான வழக்கு போன்றவற்றை ஆவணங்கள் உள்ளடக்கியிருந்தன.

தடுப்பு முகாம்கள் தொடர்பாக உவிகர் மற்றும் கசாக் மக்கள் வழங்கிய சாட்சிகள், செய்மதிப் படங்கள், குறிப்பிட்ட பிரதேசத்தைப் பல கட்டுப்பாடுகள் நடுவில் தரிசித்த ஊடகவியலாளரின் பயணங்கள் ஆகியவற்றிலிருந்து ஏற்கனவே பெறப்பட்ட தகவல்களை, மிகப் பலம் வாய்ந்த ஸிங்ஜாங்கின் கம்யூனிச கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான ஆணையத்தினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த தடுப்பு முகாம்களுக்கும் ஸிங்ஜாங் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அதிதீவிர இலத்திரனியல் கண்காணிப்புகளுக்குமிடையேயும் இருக்கின்ற நேரடித்தொடர்புகளை இந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“பிரச்சினைகள் ஏற்பட முன்னரே அவை நடைபெறாது தவிர்ப்பதே இந்தக் கண்காணிப்பின் நோக்கம்” என்று ஒரு ஆவணம் குறிப்பிடுகின்றது.

அரசுக்குச் சொந்தமான இராணுவ ஒப்பந்தக்காரர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட இணைந்த செயற்பாட்டுத்தளம்’ (Integrated Joint Operations Platform – IJOP) என்று அழைக்கப்படும் ஒரு ஒழுங்கமைப்பின் ஊடாகவே இக்கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டை விட்டுத் தப்பிச் செல்லுதல், பிரார்த்தனை செய்யும்படி மற்றவர்களைத் தூண்டுதல், அரசினால் கண்காணிக்கப்பட முடியாத அலைபேசி செயலிகளை (phone apps) பயன்படுத்துதல் போன்ற சந்தேகத்துக்கிடமான நடத்தைகளில் ஈடுபடுவோரின் பெயர்களை மேற்குறிப்பிட்ட IJOP இலத்திரனியல் தளத்தில் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

‘சந்தேகத்துக்கு இடமானவர்கள்’ எனக்கருதப்பட்டவர்கள் பின்னர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, வீட்டுக்காவலிலிருந்து மூன்று அடுக்கு கண்காணிப்பைக் கொண்ட தடுப்பு முகாம் வாழ்க்கை அல்லது சிறைவாசம் என்ற ஒழுங்கமைப்பின் பல்வேறு தெரிவுகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்த தடுப்பு முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்படுபவர்கள் கட்டாயக் கோட்பாட்டுக்கல்விக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

சரியான நடத்தையைக் கற்றுக்கொள்ளல்

கோட்பாட்டுக் கல்வியூட்டல் பின்னர் சரியான நடத்தையைக் கற்றுக்கொள்ளும் செயற்பாட்டுடன் இணைக்கப்படுகிறது. உரிய நேரத்தில் தலைமுடி வெட்டுதல் மற்றும் முகச்சவரம் செய்தல், ஒழுங்குக்கிரமமாக ஆடைகளை மாற்றுதல், வாரத்துக்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நீராடுதல் போன்ற நடத்தைகளைக் கற்றுக்கொள்ளுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

‘உய்கர் இனமக்கள் வன்முறை இயல்பு கொண்டவர்கள் எனவே அவர்கள் பண்படுத்தப்படவேண்டும்’ என்ற ஹான் சீன அரசின் பொதுவான கண்ணோட்டத்தை இந்த ஆவணங்களின் தொனி எதிரொலிக்கிறது.

நடைமுறையில் தடுத்து வைக்கப்படுபவர்களின் நாளாந்த வாழ்க்கை ஓர் இராணுவம் நடத்தப்படுவது போன்று இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுவதுடன் அவர்களின் ஒவ்வொரு அசைவும் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

ஒலிபெருக்கியில் பேசுவதன் மூலமே கழிப்பிடத்துக்குச் செல்வதற்கான அனுமதியை என்னால் பெறமுடிந்தது என்றும் தனது அறையில் தனக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பத்து நிமிடங்கள் மாத்திரமே கழிப்பிடப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்று முன்னர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குல்பாக்கர் ஜலிலோவா (Gulbakhar Jalilova) தெரிவித்தார்.

Turkey's Uighurs fear for future after China deportation | Financial Times

“எமக்குத் தரப்பட்ட இந்தக் குறுகிய நேரத்துக்குள் எம்முள் ஒரு சிலரே கழிப்பிடத்துக்குப் போகக்கூடியதாகவிருந்தது.”

மண்டறின் மொழியறிவு, கோட்பாடு, ஒழுங்கு போன்ற விடயங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பெறும் புள்ளிகள் கணினியில் பதிவுசெய்யப்பட்டு அவர்களது வளர்ச்சி ஒப்புநோக்கப்பட்டது.

அதிக புள்ளி பெறுபவர்களுக்கு குடும்ப உறவுகளைச் சந்திக்கும் சலுகை வழங்கப்பட்டதுடன் பயிற்சியை நேரகாலத்துடன் நிறைவுசெய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மதிப்பீடுகளில் குறைவான புள்ளிகளைப் பெறுபவர்கள் மேலும் கடுமையான நிர்வாகத்தைக் கொண்ட தடுப்பு முகாம்களுக்கு நீண்ட காலத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.

கோட்பாடு, சட்டம், மண்டறின் மொழி ஆகியவற்றை ஓராண்டு கற்றுக்கொண்ட பின்னரே, ‘தொழில் திறன் விருத்திக்கு’  மாணவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

தடுப்பு முகாம்களை விட்டு இவர்கள் வெளியேறும் போது தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஆவன அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த சம்பளம் கொடுக்கப்படும் வேலைகளுக்கான ஒப்பந்தத்தில் ஒப்பமிட தாம் வற்புறுத்தப்பட்டதாக தடுத்துவைக்கப்பட்டவர்களில் சிலர் விபரிக்கிறார்கள்.

ஸென்ஸைப் பொறுத்த வரையில் “இது ஒரு கலாச்சார இனவழிப்பு என்பதுடன் ஒரு சமூகத்தை வலுக்கட்டாயமாக மீள வடிவமைக்கும் செயற்பாடு” ஆகும்.

“ஒரு சிறுபான்மைச் சமூகத்தை முற்று முழுதாக மாற்றியமைப்பதே இச்செயற்பாடுகளின் அடிப்படையான நோக்கமாகும்” என்று ஸென்ஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழில் ஜெயந்திரன்

நன்றி – அல்ஜசீரா

http://www.ilakku.org/more-evidence-of-chinas-horrific-abuses-in-xinjiang/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.