Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம் மட்டுமே வாழ்க்கையா..?

Featured Replies

குடந்தை பஸ் நிலையம்.

மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...!

சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு.

ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்பா சாகும்போது சொல்லிட்டுப் போனாரு.. " டேய் தம்பி.. கடைசி பொண்ணைக் கட்டிக் கொடுக்கற வரைக்கும் அய்யாவை விட்டுப் போயிடாதே..! பாவம்.. பொழைக்கத் தெரியாத மனுஷன்.." அதனாலேயே இன்னும் இந்த டப்பாவை ஓட்டிக்கிட்டு இருக்கான்..ராசு.

சம்பளம்ன்னு ஒண்ணும் பெருசா வராது.. ராசு தன் அத்தைப் பொண்ணைதான் கட்டிக்கிட்டான்.. ம்ம் எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டியவள்.. ராசுவோட பத்தாக்குறை சம்பளத்துல கஷ்ட ஜீவனம்தான்.. புகை படிந்த ஓவியம்போல கண்ணில் ஒரு சோகத்துடன் இருப்பாள்.. ராசுவுக்கு ஒரே பையன்.. ரகு..! அப்பா பேரையே வச்சான்.. அதுவும் கொஞ்சம் சீக்காளிப் பிள்ளைதான்.. வர்ற வருமானத்துல நல்ல வைத்தியம் பார்க்க வழியில்லே.. என்ன பண்ண..?

ரகுவுக்கு 5 வயசு. நோஞ்சானா இருக்கும்.. நெஞ்சுக்கூடு முட்டி பாவமா இருக்கும்.. சமயத்தில் ராசுவோட மனநிலை தெரியாம பிடிவாதம் பிடிக்கும்.. ராசு ரெண்டு வைப்பான் முதுகில.. ஒடுங்கிய நெஞ்சுக்கூடு தெறிப்பது போல் குழந்தை விசிக்கும்.. ராசுவுக்கு கோபம் போய் பரிதாபம் வரும்.. "சரிடா தம்பி.. [அப்பா பேருங்கறதாலே ரகுன்னு கூப்பிட மாட்டான்] அழாதே.. அப்பாவை அடிச்சுடு..!" என்பான். குழந்தை அதிர்ந்து குச்சிக் கையால் இலேசாக தட்டும்.. குழந்தையின் பலவீனம் அறிந்து, 'இதைப் போய் அடித்தோமே' என அப்பன் கண்ணில் நீர் பெருகும்.. அடித்தது அப்பாவுக்கு வலித்ததோ என, குழந்தை மீண்டும் அதிரும்..மெல்ல எழுந்து அப்பன் கண் துடைக்கும்.. ராசு நெஞ்சோடு அணைத்து மருக, குழந்தை கீரிப் பிள்ளையாய் ஒட்டிக் கொள்ளும். கலையரசி எட்டி நின்று இந்தக் கூத்தை பார்ப்பாள்.

ஏதோ நினைவில் இருந்தவனை கண்டக்டர் கிழம் உசுப்பியது.. வெற்றிலை குதப்பிய வாயால் மழலை பேசிற்று.. ழாசு.. சீட்டுல உக்காழு... "கிழுபா" வந்துழுவான்.. பாசஞ்சழ் அந்த வண்டிக்கு போயிழுவாங்க.. ம்ம்ம்" ..!" அதுவும் சரிதான்.. டப்பா வண்டியில எவனுக்கு போக பிடிக்கும்..? "கிருபா" பஸ் டீவி.. மெத்தை சீட்டு, பளீர் கலர்ன்னு அட்டகாசமா இருக்கும்.. சுப்பய்யர் டப்பாவோ அரதப் பழசு.. அரைகுறை வேலையின் வெளிப்பாடா அங்கங்க பல்லை இளிக்கும்.. ஏதோ ராசுவோட திறமையால லைன்ல நிக்காம ஓடும்.. அவனும் போயிட்டா சுப்பய்யர் நிலைமை இன்னும் மோசம் ஆயிடும்.

சொன்ன மாதிரியே தேர் போல கிருபா வந்து நின்னுச்சு.. கட்டையில வண்டியைப் போட்டுட்டு டீவியை இன்னும் சத்தமா வச்சு, மியூசிக் ஆரனை ரெண்டு தடவை அடிக்க, டப்பா பஸ் கூட்டம் பாதி எறங்கி கிருபாவுக்கு போயிடுச்சு..! கிருபா வண்டி டிரைவர் நக்கலா சிரிச்சுகிட்டே எறங்கி ராசுகிட்ட வந்தான்.. அவனும் ஒருகாலத்தில ராசுவிடம் தயாரானவந்தான்.. லெஃப்ட்லேயே அணைஞ்சு ஓட்டுவான்.. ராசு அப்படி ஓட்டாதேன்னு கொல்லோ கொல்லுன்னு கொன்னு உருப்படியாக்கி விட்ட பய அவன்..

"அண்ணே நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா..?"ராசுவிடம் கிருபா டிரைவர் கேட்டான்..

"என்னடா..?"

"என்னா என்னடா..? சரியாப் போச்சு போ.. நேத்து சொன்னேன்ல்ல.. எங்க முதலாளி இன்னொரு ரூட் வாங்கியிருக்காரு.. உன்னை வேலைக்கு கூப்பிட்டாருன்னு.. மறந்துட்டியா..?"

கிருபா டிரைவர் சொன்னது மறக்கவில்லை.. அதுவும் அவன் சொன்ன சம்பள விஷயம் ராசுவைக் குடைந்து கொண்டுதான் இருந்தது.. " 3500 ரூபாய் சம்பளம்.. கலெக்ஷன் படி.. 100 , 150 தேறும்.. வண்டியெல்லாம் ரதம் மாதிரி.. பவர் ஸ்டேரிங்கு..பிளசர் கார் மாதிரி ஓட்டலாம்.. உன் வண்டி போல நெஞ்சு வலிக்க ஒடிக்க வேணாம்.. வேணும்ன்னா இன்னொரு 500 ரூவா கூட வாங்கித் தாரேன்.. உன் டிரைவிங்குக்கு டீசல் மிச்சம் ஆகும்ன்னு சொன்னா முதலாளி தருவார்.. வாய்ப்ப உட்டுறாதே.."

என்னண்ணே.. யோசிக்கிற..? பதில் சொல்லு..

நான் அண்ணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு நாளைக்கு நல்ல முடிவா சொல்றேண்டா..!

ம்ம் .. அண்ணி என்ன வேணாம்ன்னா சொல்லப் போவுது.. இந்த டப்பா எப்போ கவுருமோன்னு அண்ணி எவ்வளவு கவலைப் படுது தெரியுமா..?

கண்டக்டர் டைம் ஆயிடுச்சுன்னு சொல்ல, டப்பாவைக் கிளப்பினான் ராசு.. கொஞ்ச தூரம் போயிருக்கும்.. எதிர்த்தாப்பல கேடிபி பஸ் வந்தான்.. அவனும் ராசுகிட்ட தயாரானவன் தான்.. ஹெட் லைட்டைப் போட்டு கையை காட்டி ராசுவை நிறுத்தினான்..

என்னடா விஷயம்..? ஏன் நிறுத்துன..?

"அண்ணே.. சீக்கிரம் போ.. ரகுவுக்கு ரொம்ப முடியல போல.. அண்ணி அழுதுகிட்டு வாசல்ல நின்னுச்சு.. எனக்கு டைம் இல்ல.. உன்கிட்ட சொல்றேன்னு சொல்லிட்டு வெரட்டிகிட்டு வரேன்.. போ சீக்கிரம்..!

ராசுவுக்கு தலை சுற்றியது.. வண்டி ராசுவின் அவசரத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் திணறியது..

[தொடரும்.. அடுத்த பகுதியில் முடியும்..]

_________________

  • தொடங்கியவர்

ராசுவின் வீடு மன்னார்குடியில் இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரப் பயணம்..ராசு ஆக்சிலரேட்டரை மிதிக்க கதறியவாறு சக்திக்கு மீறி விரைந்தது டப்பா..பதறிப் போன கண்டக்டர் கிழம் முன்னால் வந்து ராசுவின் முகம் பார்த்து, தோளைத் தட்டி , நிதானித்து பேசியது..

ராஜூ.. கோபாலன் இருக்கான்.. கவலைப்படாதே..ஒண்ணும் ஆகாது.. இப்போ வழியில எறங்கற டிக்கெட் நிறைய இருக்கு..நீ பாட்டுக்கு வெரட்டிகிட்டு போகாதே.. எல்லாம் ரெகுலர் டிக்கட்.. அவங்களை நம்பிதான் நம்ப டப்பா ஓடுது..நிதானமா டிக்கட் ஏத்தி எறக்கிவிட்டு போ..

ராசு முறைத்தான்.. யாரு எக்கேடு கெட்டாஅலும் உன் பை ரொம்பணும் உனக்கு.. ஏன் நைனா இப்படி இருக்கே..?

என்ன பண்ணச் சொல்றே..? உன்னை எல்லாக் கம்பெனியிலும் இழுத்துப் போட்டுக்குவானுக.. ஆனா இந்த வயசுக்கு மேல என்னை எவன் சேர்ப்பான்..? அதோட வண்டி வேற கண்டிஷன் கம்மியா இருக்கு.. கொஞ்சம் அனுசரிச்சு ஓட்டு..

இரு.. இதுக்கு ஒரு முடிவு வராமலாப் போயிரும்..? அடுத்த தடவை வண்டி மாத்த வேற ஆள் பார்க்கச் சொல்லு உன் முதலாளியை..போதும் உங்க சகவாசம்.. நான் வேற கம்பேனி பாத்துக்கறேன்..

கோபமாகச் சொன்னாலும் டிக்கட் ஏற்றி இறக்கி விட்டு தான் போனான்.. சோதனையாக எதிர் வண்டிகளில் இவனுக்குத் தெரிந்த டிரைவர் யாரும் வரவில்லை.. மனம் பதைக்க மெல்ல மன்னை நெருங்கியது..

ராசுவின் வீடு நகருக்கு வெளியிலேயே இருந்தது.. தூரத்திலிருந்து பார்த்த போது முதலாளி சுப்பய்யரின் பழைய ஃபியட் கார் தன் வீட்டு வாசலில் நின்றிருக்கவே ராசுவின் வயிறு கலங்கியது.. என்னாச்சோ தெரியலையே..? கடவுளே.. கோபாலா..!

வீட்டு வாசலில் டப்பாவை நிறுத்தினான்..குடிக்குள் குடியாக கடைசியில் இருந்தது ராசுவின் போர்ஷன்.. இறங்கி ஓடினான்.. எல்லாக் குடித்தனக் காரர்களும் போர்ஷன் அருகே குழுமி இருக்க ராசுவுக்கு தரை நழுவியது..மெல்ல உள்ளே எட்டிப் பார்க்க...

அழுக்கு நாடாக் கட்டிலில் சட்டமாக சப்பணம் போட்டு சுப்பய்யர் உட்கார்ந்திருக்க, மடியில் குழந்தை ரகு படுத்திருந்தது.. கையில் ஒரு பொம்மை வைத்து ஆட்டிக் கொண்டிருந்தது.. அவருக்கு கீழே தரையில் கலையரசி உட்கார்ந்து சோர்வாக கட்டில் முனையில் தலை சாய்த்திருந்தாள்.. சமையலறையில் இருந்து கையில் கரண்டியோடு, சிவந்த முகத்தில் கரி லேசாக அப்பியிருக்க, புது பட்டுப் பாவாடை தாவணியை இழுத்து சொருகியவாறு வெளியில் வந்த சுப்பய்யரின் கடைசி மகள் லதா, ராசுவைப் பார்த்து, "அப்பா.. அண்ணா வந்துட்டாங்க..!" என்று அறிவித்தாள்..

கலையரசி தலை நிமிர்த்தி பார்க்க, வாசல் கூட்டம் கலைய, இரண்டே எட்டில் குழந்தையை அணுகினான் ராசு. அப்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் சிரித்து, புது பொம்மையை அவனிடம் காட்டியது குழந்தை.. கண்ணில் நீர் துளிர்க்க முதலாளியைப் பார்த்தான்..

"தீவட்டி.. தீவட்டி.. கண்ணத் தொடச்சுக்கோ.. இப்ப என்ன ஆயிடுத்து.. கொழந்தை என்னத்தையோ வாயில போட்டு முழுங்கியிருக்கான்.. தொண்டை அடைச்சு மூச்சு பேச்சு இல்லாமப் போயிடுத்து. இன்னிக்குன்னு பார்த்து நானும் உன் தங்கை லதாவும் உப்பிலியப்பன் கோவிலுக்குப் போக இந்தப் பக்கமா வந்தமா..? பார்த்தா உன் ஆம்படயா அழுதுண்டு நிக்கறா.. சட்டுன்னு காரத் திருப்பிண்டு போயி கொழந்தைய காட்டி தேவலையாக்கிட்டோம்டா.. அழாதே.. காத்தலேருந்து உன் ஆத்துக்காரி ஒண்ணும் சாப்பிடல போல்ருக்கு.. மயங்கி விழுந்துட்டா... அதான் லதா தளிகை பண்றா..! தீவட்டி.!"

முதலாளிக்கு பிடித்தவர்கள் என்றால் தீவட்டி மேல் தீவட்டியாகக் கொளுத்துவார்..

"சரி.. நீ கொழந்தையோட சித்த இரு.. நான் வண்டியை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வரேன்.. பாசஞ்சர்ஸ் கடுப்பாயிடுவா.." முதலாளி கிளம்ப எத்தனிக்க.., இல்ல முதலாளி.. நான் எடுத்துட்டுப் போறேன்.. நீங்க தங்கச்சியை அழைச்சுகிட்டு கோயிலுக்கு போங்க.. என்று சொல்லி, வாசல் பக்கம் நடந்தான் ராசு புதிய முடிவுடன்..!

_________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.