Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும்

 

Johnsan Bastiampillai  

 

-புருஜோத்தமன் தங்கமயில் 

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது.   

அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன.  

மக்களின் இறைமைக்கு எதிரான அரசமைப்பையோ, அரசமைப்பின் மீதான திருத்தங்களையோ அரசாங்கம் கொண்டுவரும் போது, எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்ப்பது வழமையாகும். 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் முன்மொழிந்த போதும் அதுதான் நடந்தது.   

ஆனால், அந்த எதிர்ப்பு நடவடிக்கை, மும்முரமாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு சம்பிரதாயத்துக்காகவே நிகழ்ந்தது. எதிர்க்கட்சிகள் பலவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு, தமது பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டன. ஓர் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுவதற்குரிய மனத்திடத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தவில்லை. அப்படியான நிலையில், ஒற்றை மனிதரிடம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக ஒப்படைக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம், எந்தவித பிரச்சினைகளும் இன்றி, நிறைவேறிவிடும் என்ற நிலை தோன்றியிருந்தது.  

ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பலையொன்று மெல்லமெல்ல எழுந்து, இன்றைக்கு மூர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. அது, மஹிந்த ராஜபக்‌ஷவைத் தொடரும் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவை முன்னிறுத்தும் ‘வியத்மக’காரர்களுக்கும் இடையிலான மோதலின் விளைவாகும். 

20ஆவது திருத்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை உரிமை கோருவது சார்ந்து, ஆளுங்கட்சிக்குள் குழப்பம் நீடித்தது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் தந்தை யார், என்கிற கேள்வி எழுந்தது. ஒருகட்டத்தில், அதற்கான பொறுப்பை, கோட்டா ஏற்றுக்கொண்டார்.   

கிட்டத்தட்ட, ஜே.ஆர் காலத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் தாண்டிய அதிகாரத்தை நோக்கிய வரைபை, கோட்டா முன்மொழிந்து இருக்கின்றார் என்கிற உணர்நிலை, மஹிந்தவையும் பாரம்பரிய அரசியல்வாதிகளையும் அதிர்ச்சியுற வைத்தது. அதன் விளைவுகள்தான், இன்றைக்குப் பௌத்த பீடங்கள் உள்ளிட்ட மத நிறுவனக் கட்டமைப்புகளின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.  

ஜனாதிபதி கோட்டாவின் ‘வியத்கம’ தரப்பும் அதன் இணக்க சக்திகளுமே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வரைந்தன. கோட்டா என்கிற ஒருவரிடத்தில், அதிகாரங்களைக் குவித்தால் போதும் என்கிற நிலைப்பாட்டோடுதான், 20ஆவது திருத்தச் சட்டமூலம் வரையப்பட்டது.   

ஒப்புக்காகவேனும் மஹிந்தவிடமோ, பொதுஜன பெரமுன என்கிற கட்சியிடமோ, கூட்டணிக் கட்சிகளிடமோ ஆலோசனை பெறப்பட்டு இருக்கவில்லை. அதுதான், 20ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியிடப்பட்ட போது, அதை யார் உரிமை கோருவது என்கிற சிக்கல் ஆளுங்கட்சிக்குள் எழுந்தது.   

ஜனாதிபதி நினைத்தால், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களைப் பதவி நீக்கலாம்; பதவியில் அமர்த்தலாம். நாடாளுமன்றத்தின் பதவிக் காலம், ஒரு வருடத்தைத் தாண்டியதும், ஜனாதிபதி நினைத்தால் கலைக்கலாம் உள்ளிட்ட பல விடயங்கள், பாரம்பரிய அரசியல்வாதிகளைச் சீண்டின. அதாவது, பாதுகாப்புச் செயலாளராக, ஜனாதிபதி கோட்டா இருந்த காலத்தில், பாதுகாப்புத் தரப்பினரைக் கடுமையான உத்தரவுகளுக்கு அமையச் செயற்படுத்தியது போன்றதொரு தோரணையை, இப்போது அரசியல்வாதிகளிடம் பிரயோகிக்க முனைகிறாரோ? அதற்காக அவர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கையாள எத்தனிக்கிறாரோ என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் உதயமானது.   

 இதை மஹிந்தவோ, அவரது ஆதரவுத் தரப்போ, ஆரம்பத்தில் இருந்தே இரசிக்கவில்லை. ஆனால், இதை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பத்தில் இருந்தன. அந்த நேரத்தில்தான், புதிய அரசமைப்பை வரைவதற்கான நிபுணர்குழு, நீதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அந்தக் குழுவிலும், ஜனாதிபதி கோட்டாவின் ஆதரவுத் தரப்பினரே உள்வாங்கப்பட்டனர். கடந்த காலத்தில், அரசமைப்புப் பணிகளில் ஈடுபட்டவரும் அனுபவமுள்ள அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ் கூட, புதிய அரசமைப்புக்கான குழுவில் உள்வாங்கப்படவில்லை.  

அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், ஏற்கெனவே ஆளுங்கட்சிக்குள் பெரும் அதிருப்தி உண்டு. ஜனாதிபதி கோட்டா, தங்களின் ஆலோசனைகளை மீறி, அலி சப்ரியை நீதி அமைச்சராக்கி இருக்கிறார் என்பதாகவே, அந்த அதிருப்தி இருந்தது. அப்படியான நிலையில், புதிய அரசமைப்புக்கான குழு, அலி சப்ரியின் சிரேஷ்ட சட்டத்தரணியும் கோட்டாபயவுக்காக வழக்குகளில் ஆஜராகி வந்தவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டது.   

இது, 20ஆவது திருத்தச் சட்டமூலம் வரையப்பட்டது மாதிரியான நெருக்கடியான சூழலொன்றை, புதிய அரசமைப்புக்கூடாகவும் வழங்கிவிடும் என்று மஹிந்த நினைத்தார். அப்போதுதான், அவர் ஒரு பழுத்த அரசியல்வாதியாகச் செயற்படத் தொடங்கினார்.  

ராஜபக்‌ஷர்களிடம் முரண்பாடுகள் காணப்பட்டாலும், அவற்றை அவர்கள், பொது வெளியில் காட்டிக் கொள்வதில்லை. ஒற்றுமையும் அதற்கான அர்ப்பணிப்புமே தங்களது அடிப்படை என்று காட்டிக் கொள்வார்கள்; ராஜபக்‌ஷர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்கிற தோரணயை வெளிப்படுத்துவார்கள். அது, ஒரு கட்டத்தில் வாக்குகளாகவும் மாறிவந்திருக்கின்றது.  

அப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து, ராஜபக்‌ஷ சகோதரர்கள், தங்களுக்குள் வெளிப்படையாக முரண்பட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, அதை ஓர் அரசியலாக முன்னெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.  ஜனாதிபதி கோட்டாவிடம், எல்லா அதிகாரமும் செல்வதை, மஹிந்த கொஞ்சமும் விரும்பவில்லை. அவர், 19ஆவது திருத்தத்தில், நாடாளுமன்றத்தோடு பகிரப்பட்ட அதிகாரங்களைத் தக்க வைப்பது சார்ந்துதான், ஆர்வத்தோடு இருக்கிறார்.   

ஆனால், நல்லாட்சிக் காலத்துக் குழப்பங்களைக் களைவது தொடர்பில், தென் இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதிகளை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாகத்தான் செய்யலாம் என்கிற தோற்றப்பாடு உருவாக்கப்பட்ட நிலையில்தான், அவரது கையை மீறிச் சென்றது. இதை, அவர் ஓர் அரசியல்வாதியாகக் கையாளத் தொடங்கினார். ஆளுங்கட்சிக்குள் இருக்கும் விமல் வீரவங்சவைக் கொண்டு, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான குரலை எழுப்ப வைத்தார். அது, மெல்ல மெல்ல அடுத்தவர்களையும் குரல் எழுப்பும் தைரியத்தைக் கொடுக்க வைத்தது.   

இன்றைக்கு அது, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திருப்பதாகக் கொள்ள முடியும். அதாவது, மத நிறுவனங்கள் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கும் கட்டம் என்பது, மஹிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில் நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.  

பௌத்த பீடங்களில் வரிசையில் முதலாம், இரண்டாம் நிலையில் இருப்பவை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள். அவை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், தமக்கிடையில் பேசிக் கொண்டிருக்கின்றன.   ஏற்கெனவே, மூன்றாம், நான்காம் நிலையில் இருக்கும் அமரபுர, ராமன்யா பீடங்கள், எதிர்ப்பை வெளியிட்டுவிட்டன. தென் இலங்கையைப் பொறுத்தவரை, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் வார்த்தைகள்தான் அதி முக்கியமானவை. அவை எடுக்கும் நிலைப்பாடுகளை நோக்கிய திரட்சி என்பது, தவிர்க்க முடியாதது.   

தற்போதைய, கோட்டா - மஹிந்த அதிகாரப் பங்கீட்டுப் போட்டியில், அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், மஹிந்த பக்கம் இருக்கும் நிலையே காணப்படுகின்றன. அப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விடயம், இன்னும் நலிந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.  

ஏற்கெனவே, 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வியாக்கியானத்தில், உயர்நீதிமன்றம் சில விடயங்களில் தலையீடு செய்திருக்கின்றது. அதாவது, ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்கிற கட்டத்தை, குறைந்தது இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னராகவே கலைக்க முடியும் என்கிற மாற்றங்களைச் செய்யுமாறு வியாக்கியானப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அதுபோல, தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் கடமையை, ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றது. இப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் அதன் அடுத்த கட்டங்களை நோக்கி, எப்படி நகரப் போகின்றது என்கிற கேள்வி, தவிர்க்க முடியாததாகின்றது.  

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்று, ஆட்சியில் இருந்த போதிலும், ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு இடையிலான அதிகாரப் பங்கீட்டுக் குழப்பம், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வருகையை, சிலவேளை தடுத்து விடலாம்.   

அவ்வாறு நிகழ்ந்தால், 19ஆவது திருத்தத்தின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட அடிப்படை ஜனநாயகமும் மக்களின் இறைமையும் குறிப்பிட்டளவு தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.   

இல்லையென்றால், ஒற்றை மனிதரிடம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வழங்கும் மன்னராட்சிக் காட்சிகளுக்காக, நாம், எம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/20ஆவது-திருத்த-சட்டமூலமும்-சகோதர-யுத்தமும்/91-256878

20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது

 

J-எம்.எஸ்.எம். ஐயூப்

அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நகல் மீதான உயர்நீதிமன்றத்தின் விசாரணை, கடந்த ஐந்தாம் திகதி முடிவடைந்ததோடு, அதன் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு, 10ஆம் திகதி அனுப்பப்பட்டு இருந்தது.   

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஓரிரு வாசகங்களை மாற்ற வேண்டும் என்றும், ஏனையவற்றை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்றம் வியாக்கியானப்படுத்தி உள்ளதாகத் தெரியவருகிறது.  

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பின்னர், சபாநாயகரால் பகிரங்கப்படுத்துவதே மரபாகும். இருந்தபோதிலும், அதற்கு முன்னரே, அது வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. சில பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் இவ்வாறு கசிந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.   

இவ்வாறு, அது எப்படிக் கசிய முடியும்? உயர்நீதிமன்றம் நேரடியாக ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் மட்டுமே தனது வியாக்கியானத்தை அனுப்ப வேண்டும். அவ்வாறாயின், அது உயர்நீதிமன்றம் மூலமாகவோ, ஜனாதிபதி மூலமாகவோ, சபாநாயகர் மூலமாகவோ தான் கசிந்து இருக்க வேண்டும். இவர்கள், அவ்வாறு செய்வார்களா? சிலவேளை, இவர்களின் அலுவலகங்களில் உள்ள எவராவது, எவ்வகையிலாவது, திருடி வெளியிட்டு இருக்க வேண்டும்.   

செய்திகளின்படி, திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்கள், அரசமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் அவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அவை நிறைவேற்றப்பட்டு, அதற்குப் புறம்பாக, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், அவை மக்களாலும் அங்கிகரிக்கப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் வியாக்கியானப்படுத்தி உள்ளது.   

உயர்நீதிமன்றம் எத்தகைய வியாக்கியானத்தை வழங்கி இருந்தபோதிலும், ஆளும் கட்சிக்குள்ளேயே சிலர் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகிறது.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்‌ஷவையும் பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆதரித்த சில முக்கிய பௌத்த பிக்குகள் உள்ளிட்ட அக்கட்சியின் சில முக்கிய ஆதரவாளர்கள், இத்திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களைப் பற்றி, கவலையடைந்து இருப்பதாகவும் தெரிகிறது.  

இத் திருத்தச் சட்டமூலம் அமுலுக்கு வந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை பிரச்சினை ஏற்படாது என்றும், அதன் பின்னர் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பொதுஜன பெரமுனவின் முக்கிய ஆதரவாளரான எல்லே குணவன்ச தேரர் தெரிவித்திருந்தார்.   

“20ஆவது திருத்தச் சட்டமூலம்,  கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவிக் காலத்தின் பின்னர், அவரது கழுத்தைப் பதம் பார்க்கும் ஒரு வாளாகலாம்” என, முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கூறியிருந்தார். “மனச் சாட்சியோடு, இதை ஆதரிக்க முடியாது” எனவும் கூறியிருக்கிறார்.   

நாட்டின் அரசியல் நிலைமையைப் பார்த்து, விஜேதாச அடிக்கடி கட்சி மாறியவர்; தமது அரசியல் நிலைப்பாடுகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டவர். அவர், இம்முறை அமைச்சுப் பதவியொன்றை எதிர்பார்த்தார். அது கிடைக்காமல் போகவே, மனமுடைந்து போனதாக அவரே கூறியிருக்கிறார். எனவே, அமைச்சுப் பதவியொன்றைக் குறியாக வைத்துக் கொண்டு, இவ்வாறு கூறுவதாகவும் இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அரசாங்கம், அவரது கூற்றைப் பாரதூரமாகக் கருத்தில் கொண்டிருக்கும்.  

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு, 20 ஆவது திருத்தத்தின் மூலம் வழி வகுப்பதை எதிர்க்கிறார். அவருக்கும், இரட்டைக் குடியுரிமை உள்ளவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையே முறுகல் நிலை இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதாகக் கருத முடியும். 

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அரச நிறுவனங்கள் ஆகியன கணக்காய்வுக்கு உட்படாது என, 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கூறுகிறது. இதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்க்கிறார். “அவற்றைக் கணக்காய்வு செய்வதற்கு, ஏன் பயப்பட வேண்டும்” என அவர் கேட்கிறார்.   

ஆளும் கட்சிக்குள்ளேயே, பலரிடம் இவ்வாறான கருத்துகள் இருப்பதால், அவர்களுக்கு 20ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றி, விளக்கம் அளிப்பதற்காகவென வௌ்ளிக்கிழமை (09) ஆளும் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. சமூக வலைத்தளங்களில், மூத்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் படி, அந்தக் கூட்டம், மாற்றுக் கருத்துடையோரை மேலும் புண்படுத்தி இருக்கிறது. தமது கருத்துகளைத் தெரிவிக்க, பலருக்கு இடமளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.   

இந்த நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள், அதாவது, 150 வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம், அரசாங்கத்தின் தலைவர்களுக்கு ஏற்படக்கூடும். 

நாம், கடந்த வாரம் கூறியதைப் போல், ஆளும் கட்சிக்கும் அதன் நட்புக் கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் 150 ஆசனங்கள் இருந்த போதிலும், ஆளும் கட்சியின் ஓர் உறுப்பினர் சபாநாயகராக இருக்கிறார். அரசாங்கத்தின் 150 ஆசனங்களில், 15 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு உரியது.   

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், ஸ்ரீ ல.சு.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகப் பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. எனவே, தம்மைக் குறிவைத்து அரசாங்கம் செயற்படுவதாக மைத்திரி கருதினால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அவர் வாக்களிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   

ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களை எதிர்த்தாலும், இறுதியில் அதை ஆதரித்து வாக்களிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படலாம். அதை ஆதரிக்காத அமைச்சர்கள், அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும். நாடு எந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும், பதவிகளை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். 

அதேவேளை, ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்குகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்தத் திருத்தத்தை ஆதரிக்காவிட்டால், அவர்களது வழக்குகளில் மோசமான தீர்ப்புகள் கிடைக்கும் வகையில், அரசாங்கம் பொலிஸாரை வழிநடத்தலாம். அவ்வாறான விளைவையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, தற்போதைய அவர்களது வீராப்பு, ஒன்றும் எடுபடப் போவதில்லை.  

எவ்வாறாயினும், மேலதிகமாக ஓரிரு வாக்குகளை, எதிர்க்கட்சியிடமிருந்து பெறுவதை உறுதி செய்து கொள்வதற்கு அரசாங்கம் முயலலாம். 1964ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயகவின் அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பொன்றின் போது, ஒரு வாக்குக் குறைந்ததால் வீழ்ந்தது. அக்காலச் சட்டத்தின் படி, ஆளுநரின் சிம்மாசன உரை தொடர்பான வாக்கெடுப்பின் போதே, இது நடைபெற்றது.   

மரபின்படி, சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பில், ஆளும் கட்சி தோல்வியடைந்தால், அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும். அதன்படி, சிறிமாவின் அரசாங்கம் இராஜினாமாச் செய்தது. அந்த வாக்கெடுப்பின் போது, வாக்களிக்க வந்த பசறை உறுப்பினர் அமராநந்த ரத்னாயகவின் காரில், ஒரு டயர் பழுதடைந்து, அவர் நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் போய்விட்டது. அவர், அன்று வந்திருந்தால் சிறிமாவின் அரசாங்கம் தப்பிப் பிழைத்திருக்கும்.  

எனவே, ஏற்கெனவே மலையக அரசியல்வாதிகள் சிலரை, அரசாங்கத்தின் தலைவர்கள் அணுகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காகவோ வேறு தனிப்பட்ட நலன்களுக்காகவோ, சிறுபான்மையினத் தலைவர்கள், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதாக இருந்தால், அது வரலாற்றுத் தவறு என்றே கூற வேண்டும். ஏனெனில், இத்திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவைப் பார்க்கிலும், மோசமானதொரு சர்வாதிகாரி உருவாகப் போகிறார்.   

சகல உயர்அதிகாரிகளையும் உயர் மட்ட நீதிமன்றங்களின் நீதியரசர்களையும்  நியமிக்கும் வல்லமை பெற்ற, ஒரு ஜனாதிபதி உருவாகப்போகிறார். இந்தநிலையில், அரச இயந்திரம் மட்டுமல்லாது, நீதித்துறையும் ஜனாதிபதிக்குத் தலைவணங்கும் நிலை உருவாகும். அது மட்டுமல்லாது, ஜனாதிபதி என்ன செய்தாலும், அதைத் தட்டிக் கேட்க சட்டத்தில் இடமில்லாமல் போகும்.   

2018ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு முரணாக, ரணில் விக்கிரசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப்பதவிக்கு நியமித்தார். அதன்பின்னர், அரசமைப்புக்கு முரணாக நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் செயற்பாடுகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடிந்ததாக இருந்தமையால், அவரது செயல், சட்ட விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால், இது போன்ற மிகத் தெளிவாக, ஜனாதிபதி சட்டத்தை மீறிய சந்தர்ப்பத்திலாவது அதை எதிர்க்க வழியில்லாமல் போய்விடும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/20ஆவது-திருத்தச்-சட்டமூலம்-உள்வீட்டு-எதிர்ப்புகள்-எடுபடாது/91-256820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.