Jump to content

மனு இன்று - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

மனு இன்று - ஜெயமோகன்

October 28, 2020

manu-198x300.jpg

அன்புள்ள ஜெ

நான் அரசியல் கருதி இந்த கேள்வியை கேட்கவில்லை.அதன் மூலமாக உங்களை சர்ச் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதும் என் நோக்கம் இல்லை.

சமீபத்தில் திருமாவளவன் பேசிய மனுஸ்மிருதி பற்றிய சில கருத்துக்கள் விவாத பொருளாக மாறிவிடுகிறது. நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட தாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது நல்லதா கெட்டதா என்ற தெளிவும் இன்றுவரை இல்லை. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் பல விஷயங்கள் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பதாக ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

அரசியல் சர்ச்சை இல்லாமல் எனக்கு ஒரு நடுநிலையான பல்வேறு அம்சங்களை பொருத்திய பார்வையும் , தெளிவும் உங்களிடமிருந்து எப்போதும்  எனக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான பேருக்கு கிடைப்பதுண்டு. அதே வகையில் நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?

மீண்டும் ஒரு முறை இது தத்துவமும் வரலாறும் சார்ந்த கேள்வியாகவே உங்களிடம் நான் முன்வைக்கிறேன்.

அன்புடன்

எஸ்.நடராஜன்

கோவை

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அண்ணா அவர்களுக்கு

வணக்கம்.

தங்கள் எழுத்தின் மீதான ஈர்ப்பு கொண்ட எண்ணிலடங்கா தங்கள் வாசகர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் பெருமையடைகின்றேன். இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் அதுவும் அரசியல் சார்ந்து.

என்னவெனில், சமீப காலமாக மனுஸ்மிருதி பற்றிய சர்ச்சை திரு. தொல்.திருமாவளவன் மூலமாக தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தாங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். தாங்கள் மனுஸ்மிருதி பற்றிய கட்டுரை ஒன்றை தயவு கூர்ந்து தங்கள் தளத்தில் வெளியிட வேண்டுகின்றேன்.

மேலும் “வேறெவரையும் தலைவர் இடத்தில் நிறுத்திப் பார்க்கவும் இயலவில்லை. தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களுடனான விழாக்களுக்கு அழைக்கப்பட்டுள்ளேன், அவற்றை தவிர்த்தே வந்திருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான்.” என திரு தொல்.திருமாவளவன் பற்றிய தங்கள் பார்வையை தாங்கள் ஒரு இடத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

இவ்விசயத்தில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகளைக் காணும்பொழுது பெரிய முரண்பாட்டையும், தமிழகத்தின் அரசியல் அவலநிலைையும் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது. தயவு செய்து தங்களிடமிருந்து விளக்கம் வேண்டுகின்றேன். நன்றி! வாழ்க வளமுடன்!

அன்புடன் தங்கள் பிரியமுள்ள வாசகன்

வே.ந. கோவிந்தராஜன், 

அன்னூர்.

 

————-

அன்புள்ள நடராஜன்,கோவிந்தராஜன்,

சைவமும் வைணவமும் சேர்ந்தே எழுப்பிய கேள்வி.

ஒவ்வொரு அரசியல்- மத விவாதம் எழும்போதும் இணையத்தில் ‘ஜெயமோகன் ஏன் இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை?’ என்று எவரேனும் கேட்பார்கள். அதைக்கேட்டு என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் எப்போதும் விவாதம் அடங்கட்டும் என்று காத்திருப்பேன். நான் பேசவிரும்புபவர்கள் விவாதங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல, நிதானமாக சமநிலையுடன் அறியவிரும்புபவர்கள். விவாதங்களில் ஒருகுரலாக ஒலிப்பதுபோல வீண்வேலை பிறிதில்லை.

நான் ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்பவர்கள் எவருக்கும் என் கருத்து முக்கியமே அல்ல. இரு தரப்புகளிலிருந்துமே அப்படி கேட்கிறார்கள். இரு தரப்புமே ஏற்கனவே நிலைபாடு எடுத்துவிட்டார்கள். அந்நிலைபாட்டையே நான் எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், சற்று மாறுபட்டாலும் வசைபாட துடிக்கிறார்கள்.

அவர்களின் நிலைபாட்டை எடுத்தால்கூட போதாது, அவர்களின் மொழியிலேயே அதைச் சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் எடுக்கும் அத்தனை நிலைபாடுகளிலும் நான் நிலைமாறாமல் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அவர்களின் அரசியல்தலைமைக்கு கொடிபிடிக்கவேண்டும். அந்த விசுவாசத்தை இடைவெளியில்லாமல் நிரூபித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

உண்மையில் இவர்கள் இருதரப்புமே ‘நீ ஏதாவது சொல், நாங்கள் வாயாரத் திட்டிக்கொள்கிறோம்’ என்றுதான் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் வெறிதணிந்து அப்பால் சென்றபின் நான் பேசுவது இதனால்தான். இதையும்தான் திரிப்பார்கள், வளைப்பார்கள், முத்திரைகுத்தி வசைபாடுவார்கள். ஆசாரவெறியர்களும் அரசியல்வெறியர்களும் ஒரேகுரலில்தான் பேசுவார்கள். அறியாமைக்கே உரிய தன்னம்பிக்கையுடன், எள்ளலுடன் அவர்கள் துள்ளிக்குதிப்பார்கள். ஆனால் இதற்கு ஒரு பத்துபேர் உண்டு. எனக்கு அவர்கள்தான் தேவை.

திருமாவளவன் பேசலாமா?

மனுநீதி பற்றிய விவாதத்தில் என் தரப்பைச் சொல்ல விரும்புகிறேன்.  சென்ற இருபதாண்டுகளில் பல இடங்களிலாக நான் சொன்னவைதான் இவை. அனைத்தும் ஒரே தலைப்பின்கீழ் தொகுத்திருக்கிறேன்

திருமாவளவன் அவர்கள் சொன்னது என்ன? அதை மூன்று அலகுகளாகப் பிரித்துக்கொள்கிறேன்.

அ. மனுநீதி பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது

ஆ. மனுநீதி இந்துமதத்தின் அடிப்படைநூல்

இ. ஆகவே இந்துமதம் பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது.

இதை அவர் எந்த தருணத்தில் சொல்கிறார்? மனுநீதி தலித் மக்களை இழிசினராக அடையாளப்படுத்தி ஒடுக்கச் சொல்கிறது. அதைப்பற்றிய விவாதத்தில் தலித்துக்களை மட்டுமல்ல, பெண்களையும்கூடத்தான் ஒடுக்கச் சொல்கிறது என்று சுட்டிக்காட்டும் பொருட்டு அதைச் சொல்கிறார்

அவர் சொன்னவற்றுக்குச் செல்வதற்கு முன்பு கேட்கவேண்டிய வினா ஒன்று உண்டு. அவர் ஏன் அதைச் சொல்லவேண்டும்? மனுநீதியை ஏன் இப்போது எதிர்க்கவேண்டும்? மனுநீதிதான் இன்று புழக்கத்தில் இருக்கிறதா? இந்துக்கள் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்களா?

அதற்கான பதில் ஒன்றே. இன்றும் தலித்துக்கள் மேல் பிறப்புசார்ந்த இழிவைக் கற்பிக்கும் அத்தனைபேரும் மனுவையே மேற்கோள் காட்டுகிறார்கள். நீங்கள் இணையத்திலேயே பல பிராமண உபன்யாசகர்கள் பிராமணர்களின் பிறவிமேன்மை, தீண்டாமையின் அவசியம், பெண்களை வீட்டுக்குள் ஒடுக்கிவைக்கவேண்டியதன் தேவை, ஒவ்வொருவரும் பிறப்படிப்படையிலேயே தொழிலைச் செய்யவேண்டும் என்னும் நெறி, விதவை மறுமணம் என்பது பாவம் – என்றெல்லாம் பேசும் காணொளிகளைக் காணலாம். அவர்கள் அனைவரும் மனுவையே மேற்கோள்காட்டுகிறார்கள். மனுநீதியை ஒட்டி மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிற்காலத்தைய நெறிநூல்களை மேற்கோள் காட்டுகிறார்கள். “சாஸ்த்ரம்” என்று அவர்கள் சொல்வது மனுவைத்தான்.

மனுநீதி என்றுமே இந்தியாவெங்கும் பரவலாக புழக்கத்தில் இருந்ததில்லை. இந்தியாவின் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேர் குலநீதிகளால்தான் ஆட்சிசெய்யப்பட்டார்கள். ஆசாரங்களும் வழக்கங்களுமே நீதியை கட்டமைத்தன. மனுநீதி அரசவைகளில் அறுதியாக மேற்கோள்காட்டப்பட்டது. வைதிகமதம் சார்ந்த களங்களில் நெறியாக முன்வைக்கப்பட்டது.ஆனால் வைதிகர்களின் பேச்சு எடுபடும் இடங்களில் எல்லாம் அது முடிவுகளை தீர்மானித்தது.

அப்படி அவர்கள் மேற்கோள் காட்டும் மனுவை எதிர்ப்பது இங்குள்ள தலித் மக்கள் இயல்பாகச் செய்யக்கூடியதுதானே? மனசாட்சி உள்ளவர்கள் யோசியுங்கள். நீங்கள் அமெரிக்காவிற்குச் சென்று வாழ்கிறீர்கள். அங்கே நியோநாஜி குழுவைச்சேர்ந்த வெள்ளையர் சிலர் ஒர் இனவெறி நூலை மேற்கோள்காட்டி ‘இந்தியர்கள் பிறப்பிலேயே இழிவானவர்கள் .அவர்களை இழிதொழில் செய்யமட்டுமே அனுமதிக்கவேண்டும்’ என்று பேசிக்கொண்டிருப்பதை கண்டால் அந்நூலை விமர்சிக்க மாட்டீர்களா? அதை எதிர்க்க மாட்டீர்களா?

அதை அந்த வெள்ளையர் தங்கள் ஆதாரநூல் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்களும் அப்படியே எடுத்துக்கொள்வீர்கள் இல்லையா? அந்நிலையில் அந்நூல் வெள்ளையர்களின் ஆதார நூல் அல்ல என்று மறுத்து கண்டிக்கவேண்டியது யார் பொறுப்பு? அந்நூலை ஏற்காத, இனவெறி இல்லாத வெள்ளையர்களின் பொறுப்புதானே? அதைத்தானே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள முற்போக்கினர் செய்கிறார்கள்?

ஒரு வெள்ளையர் அந்நூலையோ, அதை வெள்ளையர்களின் ஆதாரநூல் என்று சொல்பவர்களையோ ஒரு சொல்கூட கண்டிக்காமல் நீங்கள் அந்நூலை எதிர்ப்பதை மட்டும் வெறிகொண்டு கண்டிக்கிறார் என்றால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? அந்நூலை வெவ்வேறு சமாளிப்புகள் வழியாக நியாயப்படுத்துகிறார் என்றால், அதிலுள்ள ‘நல்ல’ அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார் என்றால் அவர் யார்?

சில மாதங்களுக்கு முன் விஸ்வஹிந்து பரிஷத்தின் ஆர்.பி.வி.எஸ் மணியன் என்பவர் பேசும் ஒரு காணொளி இணையத்தில் உலவியது. அதில் அவர் ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கல்வியையே கற்கவேண்டும் என்றும், அவரவர் அவரவர் இடத்தில் இருந்தால் பிரச்சினையில்லை என்றும் வாதிட்டிருந்தார். அதுவே மனுவின் ஆணை, அந்த மனுநீதியையே மோடி அரசின் புதியகல்விக்கொள்கை கொண்டுவருகிறது என்று அவர் சொன்னார்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் விஸ்வஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். அதை எத்தனைபேர் கண்டித்தார்கள் என்று பாருங்கள். ஒருசிலர் “அது அவர் ஒரு தனியரங்கிலே பேசினதுங்க” என்று சமாளித்தனர். பொதுமேடையில் அப்படியெல்லாம் பேசமாட்டாரம், கவனமாக இருப்பாராம். இன்றும் தனியரங்குகளில் மனுநீதியின் சாதிமேட்டிமையை பேசிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். காணொளிகள் குவிந்துகிடக்கின்றன இணையத்தில்.மெல்லமெல்ல வெளிப்படையாகவே ‘நான் மனுவை ஆதரிக்கிறேன்’ என எழுதவும் தொடங்கிவிட்டனர்.

ஆர்.பி,வி.எஸ் மணியன் உட்பட சாதிவெறியர்கள் மனுநீதியை முன்வைத்துப் பேசும்போது அந்த அப்பட்டமான சாதிமேட்டிமைப் பேச்சை ஐநூறுபேர் அமர்ந்து மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நவீனக்கல்வி அடைந்தவர்கள், நகரமக்கள், சென்ற முந்நூறாண்டுகளில் உலகம் சென்றடைந்த ஜனநாயகம் சமத்துவம் போன்ற விழுமியங்களை அறிந்தவர்கள். அவர்கள் வெளிநாடு சென்றால் வெள்ளையர்களிடம் அவற்றையெல்லாம் எதிர்பார்ப்பவர்கள், அதற்காகப் போராடுபவர்கள். அவர்களுக்கு இந்த இரட்டைநிலை பற்றி வெட்கமே இல்லை

எவர் இந்துமதத்தை இழிவு செய்கிறார்கள்? திருமாவளவன் இந்துமதத்தின் விமர்சகர், எதிர்ப்பாளர். அவருடைய நிலைபாடு அது. விமர்சிக்க, எதிர்க்க அவருக்கு அவருடைய வாழ்க்கைசார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு. அக்காரணம் இருக்கும் வரை அந்த எதிர்ப்பு இருக்கும். அது இங்கே என்றுமிருந்தது. சென்ற இருநூறாண்டுகளாக மனிதசமத்துவம் என்னும் கருத்து இங்கே எழுந்து வருந்தோறும் வலுவடைந்துள்ளது. எதிர்க்கக்கூடாது என எவர் சொல்லமுடியும்? எதிர்த்தால் வசைபாடுவோம் என்பதைப்போல ஜனநாயகவிரோதம் வேறு உண்டா?

இந்துமதத்தை இழிவுசெய்பவர்கள் இன்னமும் சாதிவெறியையும் ஆசாரவெறியையும் உமிழ்ந்துகொண்டிருக்கும் மேல்சாதிக் கீழ்மக்கள்தான். அவர்கள் இந்த மரபு அளிக்கும் மெய்ஞானத்தை, தத்துவநோக்குகளை, கலைச்செல்வங்களை , வாழ்க்கைநெறிகளை இழிவுசெய்கிறார்கள். அவை அனைத்துக்கும் மேலாக தங்கள் சீழ்பிடித்த சாதிவெறியை தூக்கி வைக்கிறார்கள்.

அதைவிட தங்களிடமிருக்கும் அந்த இருட்டை நியாயப்படுத்த இந்து மதத்தின் மெய்ஞானத்தை, தத்துவத்தை, கலைச்செல்வங்களை, வாழ்க்கைநெறிகளை திரித்து மேற்கோள்காட்டுகிறார்கள். உலகின் முன், இளைய தலைமுறைமுன் இந்த ஞானமரபும் மதமும் கீழ்மைகொண்டு நிற்கச் செய்கிறார்கள்

ஒரே வரியில் சொல்வதென்றால் ஸ்மிருதியின்பொருட்டு சுருதிகளை திரிக்கிறார்கள். அன்றாடவாழ்வின் ஆசாரங்களின் பொருட்டு ,அதில் கிடைக்கும் அற்ப உலகியல் லாபங்களின் பொருட்டு, கீழ்மைநிறைந்த ஆணவநிறைவின்பொருட்டு, ஞானத்தையும் மெய்மையையும் சிதைக்கிறார்கள். அது தத்துவநோக்கிலும் ஆன்மிகநோக்கிலும் பெரும்பிழை.மீளா இருளில் ஒடுங்கிக்கொண்டு மட்கிநாறச்செய்யும் பாதை.

அந்த காணொளிகள் ஒரு தலித்தின் உள்ளத்தில் என்ன பதிவை ஏற்படுத்தும்? ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றால் அவர் பதவி வகிக்கும் அமைப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? இங்கே இந்துத்துவம் பேசுபவர்களில் எத்தனைபேர் அவரைக் கண்டித்தனர்? எல்.முருகன் என்ன சொன்னார்?

அப்படிக் கண்டிக்காதவர்களுக்கு இங்கே பேச அறம் உண்டா என்ன? அறவுணர்ச்சிகொண்ட இந்துக்கள் முதலில் அவர்களை கண்டிப்போம். அவர்கள் இந்துக்களின் குரல் அல்ல, ஒரு தேங்கிப்போன பகுதியின் முடைநாற்றமன்றி வேறல்ல என்று ஓங்கிச் சொல்வோம்.அதன்பின் மேலே பேசுவோம்.

தலித்துக்கள் இங்கே இன்னமும் மனுநீதியே கோலோச்சுகிறது என்று நம்ப வழிவகுப்பவர்கள் இங்கே மனுநீதியை முன்வைத்து சாதிசார் மேட்டிமைத்தனத்தையும் பழமைவாதவெறியையும் பேசிக்கொண்டிருக்கும் கீழ்மக்கள்தான். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே மனுநீதியை திருமாவளவன் எதிர்க்கிறார். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. அது அடிப்படை மானுட உரிமைக்கான குரல், தன்னை ஒடுக்கும் குரலை ஒருவர் எதிர்க்கக்கூடாது என்று சொல்வோமென்றால் அதற்கு நிகரான அநீதியும் ஆணவமும் வேறென்ன?

மனுநீதியும் பெண்களும்

இனி திருமாவளவனின் கூற்றுக்கு வருவோம். மனுநீதியில் பெண்கள் பிறப்பியல்பால் பாலியல்பிறழ்வுக்குச் செல்லும் மனம்கொண்டவர்கள், அதாவது விபச்சாரத்தன்மை கொண்டவர்கள், என்று இருக்கிறதா?

ஆம், பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல்மீறலுக்கான இயல்பு கொண்டவர்கள் என்றே மனுநீதி சொல்கிறது. பெண்களை இரண்டாம்நிலைப் பிறப்புகள், கட்டுப்படுத்தி வைக்கப்படவேண்டியவர்கள் என்றே சொல்கிறது. வரிவரியாக மேற்கோள்காட்ட முடியும்.மொழியாக்கச் சிக்கலென்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது. தெளிவாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, விளக்கப்பட்டுள்ளது. அதன் ஆதரவாளர்களால் மேலும் திட்டவட்டமாகவே பொருள் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் மனுநீதி சொல்வது அதை மட்டும்தானா? இல்லை. மனுநீதி பெண்கள் குலம், குடும்பம், ஆசாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டவர்கள் என்று சொல்லுமிடத்தில் அவர்கள் இயல்பில் ஒழுக்கநெறியை மீறும்தன்மை கொண்டவர்கள், ஆகவே கட்டுப்படுத்தப்படவேண்டியவர்கள் என்று சொல்கிறது. ஆண்களாலும் குடியாலும் ஆசாரங்களாலும் தெய்வங்களாலும் அவர்கள் காக்கப்படவேண்டும் என்கிறது. தந்தை கணவன் மைந்தனால் அவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும், சுதந்திரத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது.

ஆனால் அதே மனுஸ்மிருதி நன்கு வகுக்கப்பட்ட குலம், குடும்பம், ஆசாரம் ஆகியவற்றின் சிறப்பைப் பற்றி பேசும்போது பெண்களால்தான் அவை நிலைநிற்கும் என்றும், பெண்களே குடும்பத்திற்கும் வருந்தலைமுறைக்கும் காவல் என்றும் சொல்லி அவர்களை தெய்வநிலைக்கும் கொண்டுசெல்கிறது. பெண்கள் சற்றேனும் துயருறும் குடி அழியும் என்கிறது. பெண்களை முன்வைத்தே குடும்பநெறிகள் வகுக்கப்படவேண்டும் என்கிறது.

இந்த இருநிலைப் பார்வை எங்கிருந்து வந்தது? அதைப் புரிந்துகொள்ள நெறிநூல்கள் எப்படி உருவாகின்றன, எப்படி செயல்படுகின்றன என்பதை வரலாற்றுப்பூர்வமாக அணுகவேண்டும். ஒற்றைவரி மட்டையடியாளர்களுக்கு இந்த நீண்ட விளக்கம் சலிப்பூட்டும். ஆனாலும் நம் சூழலில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

நெறிநூல்கள் உருவாகும் முறை

ஒரு சமூகச்சூழல் மெல்லமெல்ல உருவாகி வரும்போது அதனுடன் இணைந்தே நெறிகளும் உருவாகி வருகின்றன. அதற்கு அச்சமூகச்சூழலின் இனக்குழுப்பூசல்கள், நிலப்பகுதியின் தன்மைகள் என பல காரணிகள் உண்டு. அவ்வாறு ஒரு விரிந்த பரப்பில் வைத்து இத்தகைய விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசும் எல்லா தரப்பும் வீண்வெறிகள் மட்டுமே. மார்க்சியர்களானாலும் திராவிட இயக்கத்தவரானாலும் இந்துத்துவர்களானாலும்.

எதிரியை வெறிகொண்டு தாக்குவதும் தன் தரப்பை வெறிகொண்டு நியாயப்படுத்துவதுமாக அது ஒருவகை குருட்டுத்தனம். மிகச்சிலராவது சமநிலையுடன் பார்க்கவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.

நெறிநூல்களின் உருவாக்கத்தை புரிந்துகொள்ள உதவியான அடிப்படைப் பார்வை மானுடப்பரிணாமம் பற்றிய ஐரோப்பிய மானுடவியல்- சமூகவியல் அணுகுமுறையே. அதுவே மார்க்ஸியப் பார்வையாக மேலதிக நீட்சி கொள்கிறது. அது போதாது, அதில் விடுபடல்கள் உள்ளன என்று எண்ணுவோர் கூட அதை எடுத்துக்கொண்டு அதிலுள்ள போதாமைகளை நிரப்பியபடியே மேலே பேசமுடியும்.அல்லது மேலும் தெளிவு அளிக்கும் பார்வையை முன்வைக்கவேண்டும். இந்தப்பார்வை இங்குள்ள பழமைவாதிகளின் நம்பிக்கைவெறிக்கு உவப்பானதாக இருக்காது. ஆனால் அறிவார்ந்த பாதை இப்போதைக்கு இதுவே.

நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுண்டு. எந்த நெறியும், எந்த ஆசாரமும் எந்த நம்பிக்கையும் எவராலும்  ‘உருவாக்கப்படுவது’ அல்ல. அவை ,வாழ்வின்போக்கில் உருவாகி திரண்டுவருபவை மட்டுமே. அவற்றில் எவற்றை நிலைநிறுத்துவது என்பதையே சமூகஅதிகார அமைப்பு தீர்மானிக்கிறது. ஆகவே எந்த நெறியும் ஆசாரமும் நம்பிக்கையும் சமூகத்தில் எங்கேனும் ஒருவடிவில் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஒரு நெறித்தொகுதி உருவாகி வந்ததை அறிய அது எப்போது உருவாகி வந்ததோ அதற்கு முந்தைய காலத்தை தரவுகளின் அடிப்படையில் ஊகித்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த முந்தைய காலகட்டத்திலிருந்து அடுத்த காலகட்டத்தை உருவாக்கி எடுப்பதற்காகவே அந்த நெறித்தொகை உருவாகியிருக்கிறது. முந்தையகாலத்தில் இருந்த நெறிகளில் இருந்து அடுத்த காலகட்டத்திற்குரியவை எடுத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியநிலத்தில் தொன்மையான பழங்குடிப் பண்பாடு [Tribal culture] பல ஆயிரமாண்டுகளாக பரிணாமம் கொண்டு வந்து பரவியிருந்திருக்கிறது. அதிலிருந்து அடுத்தகட்ட நிலப்பிரபுத்துவம் [Feudalism] உருவாகி வந்தபோது அதற்குரிய நெறித்தொகைகள் உருவாகி வந்தன. நிலப்பிரபுத்துவம் உருவாகி நிலைபெற்ற பின்னரும்கூட பழங்குடிப்பண்பாடு ஆங்காங்கே நீடித்து ,இன்றுவரை நிலைகொள்கிறது

இன்றுமுள்ள அந்த பழங்குடிப் பண்பாட்டின் கூறுகளை தொகுத்து இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பழங்குடிவாழ்க்கை எப்படி இருந்திருக்குமென தெளிவாக ஊகிக்கமுடியும். அதற்கு தொன்மையான நூல்களிலும் சான்றுகள் குவிந்திருக்கின்றன. அதன் அடிப்படை இயல்புகள் என்னென்ன?

ஒன்று, அது மிகச்சிறு குழுக்களாக, குழுக்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து இடைவெளியில்லாமல் போரிட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. இனக்குழுப்போர் குடிப்போர் குடும்பப்போர் என வன்முறையே அதன் வாழ்வுமுறை – இப்போதுகூட வடகிழக்கே அந்த உளநிலை நீடிக்கிறது.

இரண்டு, நிலத்தை அது நிரந்தர உடைமையாக கருதவில்லை, ஆனால் வாழ்விடத்துக்காக தொடர்ந்து போரிட்டது.

மூன்றாவதே இவ்விவாதத்தில் முக்கியமானது. பெண்ணை வைத்தே குலம் வரையறைசெய்யப்பட்டது. பெண் குலச்சொத்தாக கருதப்பட்டாள். ஆகவே அவளுடைய உடல் குலத்தால், ஆண்களால் காக்கப்பட்டது.

போரிட்டுக்கொண்டே இருந்த நிலையற்ற பழங்குடிக் காலகட்டத்தில் இருந்து நிலையான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை உருவாக்கும்பொருட்டே நெறித்தொகைகள் உருவாயின. பழங்குடி வாழ்விலிருந்து நிலப்பிரபுத்துவ காலகட்டம் உருவாகும் பரிணாமத்தில் அவை இயல்பாக வகுக்கப்பட்டன. பழங்குடிவாழ்க்கையில் இருந்த நம்பிக்கைகள் மற்றும் நெறிகளில் இருந்து எந்தெந்த நெறிகள் அடுத்தகட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை கட்டமைக்க ஏற்றவையோ அவை மட்டும் தொகுக்கப்பட்டன. அவை மேலும் மேலும் தெளிவாக்கப்பட்டன

அவ்வாறுதான் தொன்மையான நீதிநூல்கள் அனைத்தும் உருவாகி வந்தன. ஸ்மிருதிகள் அவ்வாறு உலகமெங்கும் உள்ள தொன்மையான நெறிநூல்களில் ஒரு வகைதான்.ஹாமுராபி, மோசஸ், கன்ஃபூஷியஸ் ,முகமது நபி என உலகமெங்கும் நெறிநூல்களை உருவாக்கியவர்களின் நீண்டபட்டியலை நாம் காணலாம். அந்த நெறிநூல்களினூடாகவே உலகம் நாம் காணும் பண்பாட்டுப் பரிணாமத்தை அடைந்தது.

எந்தச் சட்டமானாலும் சட்டம் என்ற அளவிலேயே அது முற்போக்கானது. ஏனென்றால் சட்டமே அற்ற ஒரு நிலையில் இருந்து ஒரு முன்னகர்வாகவே சட்டம் என்ற ஒன்று உருவாகிறது. அது வளரவும் மேலும் நியாயமாக ஆகவும் வாய்ப்பிருக்கிறது

ஸ்மிருதி என்றால் நினைக்கப்படவேண்டியவை, நினைவில்நிற்பவை, தொன்மையானவை என்று பொருள். பல ஸ்மிருதிகள் இருந்துள்ளன. இருபத்துநான்கு ஸ்மிருதிநூல்களின் பெயர்கள் நூல்களில் காணக்கிடைக்கின்றன. என் வீட்டிலேயே நான்கு ஸ்மிருதிநூல்களை வைத்திருக்கிறேன். யமஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி ஆகியவற்றின் மூல ஏடுகள் கிடைத்துளன. [கேரளத்தில் மிகப்பிற்காலத்தையதான சங்கரஸ்மிருதி உள்ளது ] அவற்றில் ஒன்றுதான் மனுஸ்மிருதி. ஒப்புநோக்க அதுவே கடைசியானது.

ஸ்மிருதிகள் என்ன செய்கின்றன? அவை புதிய நெறிகளை உருவாக்கி மக்கள்மேல் கொண்டுவந்து சுமத்தமுடியாது. உலகில் எங்கும் அவ்வண்ணம் நிகழ்ந்ததில்லை. மானுடப்பரிணாம வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்த எவரும் அப்படிச் சொல்லமாட்டார்கள். ஏற்கனவே ஒரு சமூகத்தில் புழங்கும் நெறிகளையே தொகுத்து அளிக்கமுடியும். அவைதான் ஏற்கப்படும். ஸ்மிருதிகளின் பெயர்களே சுட்டுவதுபோல ஏற்கனவே ‘நினைவில் நீடித்த’ நெறிகளின் தொகுதிகள் அவை. ஸ்மிருதிகள் அவற்றுக்கு ஒரு அதிகாரத்தை, மாற்றமில்லாத தன்மையை, புனிதத்தை கற்பிக்கின்றன, அவ்வளவுதான்.

ஸ்மிருதிகள் சொல்லும் நெறிகளின் நோக்கம் உறுதியான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை உருவாக்குவதே. அது பழங்குடிச் சமூகத்துடன் ஒப்பிடும்போது முற்போக்கானது, பொருளியல் வளர்ச்சியை உருவாக்குவது, பண்பாட்டுநோக்கில் மானுடகுலத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தது. அதேசமயம் இன்றைய நோக்கில் அது பழைமையானது, பயனற்றது. இதுவே மார்க்சியநோக்கு.

உலகமெங்குமே நிலப்பிரபுத்துவம் மூன்று அடிப்படைகளின்மேல்தான் அமைக்கப்பட்டது. பழங்குடிவாழ்வின் அடிப்படைகளாக முன்னரே சுட்டிக்காட்டிய மூன்றும் இவ்வாறு மறு அமைப்பு செய்யப்பட்டன. ஐரோப்பாவிலும் சரி, ஆசியாவிலும் சரி இதுதான் வரலாறு.விதிவிலக்கே கிடையாது.

அ.பிறப்படிப்படையிலான தொழில்பகுப்பு மற்றும் சமூக அதிகாரப்படிநிலை.

ஆ.நிலம் மீதான  உரிமை. நிலம் ஓர் உடைமையாக ஆதல்

இ.பெண்மீதான கட்டுப்பாடுகள்.பெண் ஓர் உடைமையாக ஆதல்.

நான் பலமுறை எழுதியதுண்டு, இங்கே பலர் சொல்லிக்கொண்டிருப்பது போல சாதிப்பிரிவினை இந்தியாவுக்கு மட்டுமே உரிய ஒரு வழக்கம் அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் பிறப்படிப்படையிலான தொழிற்பிரிவினை, மேல்கீழ் அடுக்கு உண்டு. ஒவ்வொரு ஊரிலும் அது ஒவ்வொரு வகை. ஐரோப்பா சீனா ஜப்பான் வரலாற்றை மேலோட்டமாக புரட்டிப்பார்த்தாலே அவர்களின் பிறப்படிப்படையிலான அடுக்குமுறை எப்படி இருந்தது என்பது தெரியும்

பிறப்பு அடிப்படையான தொழிற்பிரிவினையும் சமூகப்படிநிலைப் பகுப்பும் இல்லாத நிலப்பிரபுத்துவச் சமூகங்கள் எங்கும் இல்லை. இருக்கவும் முடியாது. ஏனென்றால் பிறப்படையாளம் என்பது கண்கூடானது, மாறாதது. மேலும் அதை தெய்வ ஆணை என வகுத்து நிலைநிறுத்த முடியும். அப்படித்தான் அரசர்கள் உலகம் முழுக்க நிலைநிறுத்தப்பட்டனர். இன்றும் இங்கிலாந்திலும் ஸ்வீடனிலும் அரசர் பிறப்படிப்படையிலேயே அரசராகிறார்.

பிறப்படிப்படையிலான தொழிற்பிரிவினை, மேல்கீழ் அடுக்கு என்பது உண்மையில் பழங்குடிச் சமூகத்தின் முதிர்வுநிலையிலேயே உருவாகி வந்துவிட்டது. இந்தியாவிலுள்ள பழங்குடிச்சமூகங்களில் அனேகமாக அனைத்திலுமே தலைவர், பூசகர்கள் பிறப்படிப்படையிலேயே அவ்வாறு ஆகிறார்கள். அந்த மரபை தெய்வநெறியாக்கி, அறுதியாக வகுத்தது நிலப்பிரபுத்துவம்

பிறப்பு அடிப்படையில் மேல்கீழ் அடுக்கு உருவாகி நிலைபெறப்பெறத்தான் பழங்குடிகளின் குடிப்பூசல்கள், குலப்போர்கள் இல்லாமலாயின. அந்த அதிகார அடுக்கு உருவாகாத எந்த நிலத்திலும் குருதிப்பூசல் ஓய்வதே இல்லை. இன்றும் உலகவரலாறு காட்டுவது அதையே. பிறப்பு அடிப்படையிலான அதிகாரஅடுக்கு [Hegemony] உருவாகி நிலைபெற்றதனால்தான் நாம் காணும் உலகசமூக அமைப்பு உருவாகி நிலைபெற்றது. இந்தியாவில் அதையே நாம் சாதிமுறை என்கிறோம்.

அந்தச் சமூக அமைப்பு ஒரு பொருளியல் கட்டமைப்பின் விளைவு. உழைப்புப் பகுப்பை நிரந்தரமாக ஆக்கிவிடுவதுதான் சாதி என்பது. அது மாறாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்குகிறது. அந்த பொருளாதார அமைப்பு நெடுநாள் நீடித்தமையால்தான் அரசுகள் உருவாயின. பேரரசுகள் உருவாயின. அரசுகளும் பேரரசுகளும் சேர்ந்து உருவாக்கியவைதான் நாம் பேசும் பண்பாடு, கலை, இலக்கியம் எல்லாம். நாம் காணும் அத்தனை இந்தியப் பேரரசுகளும் சாதியையே அடிக்கட்டுமானகாகக் கொண்டவை.

சாதியின்மேல் இயங்கிய பேரரசுகள் உருவாக்கிய பொருளியல் அடித்தளம் மீதுதான் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பேரரசுகள் இல்லையேல் இத்தனை பாசனமுறைகள் உருவாகியிருக்காது. இத்தனை விளைநிலங்கள் உருவாகியிருக்காது. இத்தனை நகரங்களும் சாலைகளும் துறைமுகங்களும் சந்தைகளும் உருவாகியிருக்காது. அவையே நம் வாழ்வின் ஆதாரம். எவரும் நேற்றை நிராகரிக்கமுடியாது

சரி, அவற்றில் சுரண்டல் இருந்ததா? ஆம் இருந்தது. சுரண்டல் இல்லாமல் உலகின் எந்த நாகரீகமும் உருவாகவில்லை. அடிமைமுறை இல்லாத பண்பாடே உலகில் இல்லை. சொல்லப்போனால் இயந்திரங்களே அடிமைமுறையை ஒழித்தன. ஒரே வரியில் சுருக்கவேண்டும் என்றால் நீங்களும் நானும் உண்ணும் சோறு, செல்லும்சாலை, வாழும் நகரம்,பேசும் மொழி எல்லாமே நேற்றைய சாதிமுறையின் படைப்புக்கள்தான். அந்தச்சாதிமுறையிலிருந்த ஒடுக்குமுறையினால் உருவானவைதான். அவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நேற்றைய சாதிமுறைக்கு எதிராக கொந்தளிப்பதுபோல பேதைத்தனம் வேறில்லை.

அந்தமுறை நேற்றிருந்தது, அது வரலாற்றின் வழி, அதை இன்று உட்கார்ந்துகொண்டு நாம் எவ்வகையிலும் மாற்றிப் புனைந்துகொள்ள முடியாது. வரலாறு வேறுவகையில் நிகழ்ந்திருக்கலாம் என்று இன்று அமர்ந்து சொல்ல முடியாது. நேற்றைய வரலாறு அடிமைமுறை, ஒடுக்குமுறை, பிறப்படிப்படையிலான சமூக அடுக்கு, நிலப்பறிப்புகள்,கொள்ளைகள், ஈவிரக்கமில்லாத போர்கள், பஞ்சங்களால் ஆனதுதான். இன்று நாம் அவற்றை கடந்துசெல்வது எப்படி, நாளை வேறொரு சிறந்த வாழ்வை உருவாக்குவது எப்படி என்பதே கேள்வி.

இன்றுகூட நாம் வாழும் சமூக அமைப்பு சுரண்டலின்மேல்தான் உள்ளது. முதலாளித்துவ அமைப்பு திட்டமிட்டே வறுமையையும் வேலையின்மையையும் நீடிக்கவைக்கிறது. அவற்றை அஞ்சியே மனித உழைப்பும் வளங்களும் குறைந்த கூலிக்கு விற்கப்படுகின்றன. அந்தச் சுரண்டலின்மேல்தான் நாம் சார்ந்திருக்கும் அரசும் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

நேற்றைய தலித்துக்களைவிட மோசமான வாழ்க்கையை இன்றும் உலகில் பாதிப்பங்கு மக்கள் வாழ்கிறார்கள். அதன்மேல்தான் நீங்களும் நானும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.அதை கடப்பது எப்படி என்பதே கேள்வி. மாறாக நாம் ஏதோ மகாப்பெரிய நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டு நேற்றைய மனிதர்களைப் பழிப்பது கீழ்மை. நாளைய மனிதர்கள் பழிக்க்கத்தக்க வாழ்வையே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நெறிநூல்கள் பழங்குடிவாழ்விலிருந்து எடுத்த ஒழுங்குகளையும் நெறிகளையும் தொகுத்து நிலையான சமூகவாழ்க்கையை பொருளியல் கட்டமைப்பை உருவாக்கின. அரசுகளை அமைத்தன. அவற்றினூடாகவே மானுடம் வளர்ந்தது. நேற்றைய நெறிநூல்கள் நம்மை இங்கே கொண்டுவந்து சேர்த்த ஊர்திகள்.

மாட்டுவண்டியில் இன்று நாம் ஏறுவதில்லை. என்னால் மாட்டை அடித்து இழுக்கவைப்பதை தாளவே முடியாது. நான் காரில் செல்பவன். ஆனால் மாட்டுவண்டியால்தான் என் நாடும் ஊரும் உருவாகிவந்தன என்பதையும் அறிந்திருக்கிறென்.  இன்று மாட்டுவண்டி தேவையில்லை என்பேன். ஆனால் நேற்று மாட்டுவண்டியை ஓட்டியவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லமாட்டேன்

மனுநீதியும் பெண்ணும்

நிலப்பிரபுத்துவம் நிலத்தை உடைமையாக வகுத்தது. அதன் அறுதி உரிமை அரசனுக்குரியது என்று நிலைநாட்டியது. நிலப்பிரபுத்துவகாலத்தின் பேரிலக்கியங்களில் அரசனை மண்ணின் அதிபன், மண்மகளின் கணவன் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதை காணலாம். சிலப்பதிகாரம் காவேரியை சோழனின் மனைவியாகவே உருவகிப்பதை கானல்வரி காட்டுகிறது. நிலம் உடைமையாக ஆனதே நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படை.

நிலப்பிரபுத்துவம் தனியுடைமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதை எங்கல்ஸ் விளக்கி நூற்றைம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பெண்ணின் கருப்பை மீதான கட்டுப்பாடு இல்லாமல் தனியுடைமை சாத்தியமே அல்ல. தனியுடைமை இருக்கும் வரை அக்கட்டுப்பாடு ஏதேனும் ஒருவகையில் நிலைநிற்கும். அதை கற்பு எனலாம், திருமண ஒப்பந்தம் எனலாம். எப்படி சொன்னாலும் அதுதான் ஆதாரவிதி.

எனவேதான் எல்லா நிலப்பிரபுத்துவ நெறித்தொகைகளும் பெண்ணை கட்டுப்படுத்துவதைப் பற்றிச் சொல்கின்றன.குலம், குடும்பம், ஆசாரம் ,தெய்வம் ஆகியவற்றால் பெண் அடக்கியாளப்படவேண்டும்; இல்லாவிட்டால் அவள் கைவிட்டுச்சென்றுவிடுவாள் என்கின்றன. மாதர் கற்பு அழிந்தால் குலத்தூய்மை அழியும், குலத்தின் அடையாளம் அழியும்,குடும்பம் அழியும் — இதைச் சொல்லாத நிலப்பிரபுத்துவகால நெறிநூல் ஏதுமில்லை. உலகில் எங்கும்.

கன்ஃபூஷியஸ் அதைத்தான் சொல்கிறார். யூதர்களின் கபாலா அதைத்தான் சொல்கிறது. பைபிள் நெறிநூல் அல்ல, ஆனால் நெறிகள் அதில் சொல்லப்பட்டுள்ளன. அதில் பெண்ணை பற்றிய இதே பார்வைதான் உள்ளது. குர்ஆன் பெரும்பாலும் நெறிநூல், பெண்களைப் பற்றிய இதே பார்வையைத்தான் அது சொல்கிறது. ஹதீஸ்கள் அதைத்தான் சொல்கின்றன.

சில மதநெறி நூல்கள் பெண்ணை அடிக்கவேண்டிய பிரம்பின் தடிமனைக்கூட வரையறை செய்துவைத்திருக்கின்றன. பாலியல்பிறழ்வுக்கு பெண்ணுக்கு கடுந்தண்டனையும் ஆணுக்கு சொற்பதண்டனையும் விதிக்கின்றன பல மதநெறி நூல்கள். ஒரு பெண்ணை பாலியல்பிறழ்வு என குற்றம்சாட்ட ஆணின் சாட்சியமே போதும் என வரையறைசெய்கின்றன. என்னால் பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டமுடியும். ஏற்கனவே இணையப்பூசல்களில் இருசாராரும் மாறிமாறி அம்மேற்கோள்களைக் குவித்துவிட்டார்கள். நான் மதப்பூசல்களுக்குள் செல்ல விரும்பவில்லை.

எல்லா நூல்களிலும் மனுஸ்மிருதியில் உள்ளதுபோன்ற இருநிலை இருக்கும்.  பெண் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மீறிவிடுவாள், ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பெண் பேணப்படவேண்டிய அருஞ்செல்வம் என அவை சொல்லும். நாம் கட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டினால் அதன் ஆதரவாளர்கள் பெண்ணை பேணவேண்டும் என்று சொல்லியிருக்கும் பகுதியை மேற்கோள்காட்டுவார்கள். கட்டுப்பாடு என்பது பேணும் பொருட்டே என்பார்கள். மதவாதிகளுடன் விவாதிக்கவே முடியாது.

இந்தியாவிலுள்ள அத்தனை நெறிநூல்களிலும் மென்மையாகவோ கடுமையாகவோ இந்த இருநிலைப்பார்வையே முன்வைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமணநூல்களும் இதையே பேசுகின்றன. நம் செவ்விலக்கியங்கள் இதையே பேசுகின்றன. குறள் கற்பு பற்றி சொல்வது இதே பார்வையைத்தான்.

மனுநீதியிலுள்ள அந்த இருபாற்பட்ட பார்வையை குறளிலும் காணலாம். குறள்  ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை’ என்கிறது. கூடவே  ‘பெண்ணிற்பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மையுண்டாகப் பெறின்’ என்கிறது. தெய்வத்தைவிட மேலான பெண் ஏன் கணவனைத் தொழவேண்டும் என்று கேட்கக்கூடாது.

கற்புள்ளவளை தெய்வநிலைக்கு வைக்கும் குறள் பெண்வழிச்சேறல் என்று ஓர் அத்தியாயத்தையே வைத்து பெண்பேச்சை ஆண் பொருட்டாகவே நினைக்கக்கூடாது என்று ஏன் சொல்கிறது என்று கேட்கக்கூடாது. இந்த இருநிலை என்பது முரண்பாடு அல்ல, சென்றகால நிலப்பிரபுத்துவத்தின் ஆதார மனநிலை. தினமும் பேணாவிட்டால் பெண்ணும் நிலமும் ஊடிவிடும் என வள்ளுவர் சொல்வதைக்கொண்டே அந்த மனநிலையை உணரமுடியும்.

இந்தப்பார்வையை நம் அப்பாக்கள் பாட்டாக்கள் அத்தனைபேரிலும் பார்க்கலாம். ஏன் ,நம் அம்மா பாட்டிகளே அதைத்தான் சொல்வார்கள். இன்றும் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரும்பாலானவர்களின் பொதுவான சிந்தனை இதுதான். ஏனென்றால் நம்முடையது இன்னமும்கூட நம்பிக்கைகளிலும் வாழ்வுமுறைகளிலும் நிலப்பிரபுத்துவச் சமூகம்தான். உலகிலுள்ள மக்களில் வளர்ந்த முதலாளித்துவநாடுகள் தவிர மிகப்பெரும்பாலான சமூகங்களின் மனநிலை இன்றும் இதுதான். நாம் மெல்லமெல்லத்தான் அடுத்த காலம்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

இந்த மனநிலையை மனுவிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ளவில்லை, மக்களின் நம்பிக்கையை மனு தொகுத்திருக்கிறார். கொஞ்சம் மனம்திறந்து பார்த்தால் இங்கே மனுநீதியின் எந்த சாயலும் இல்லாமல் வாழும் தொல்குடிகளிலும்கூட பெண்ணைப்பற்றிய பார்வை இதுவே எனக் காணலாம்.

இந்தியா முழுக்க பழங்குடிகள் பெண்கள் பற்றி கொண்டிருக்கும் மனநிலையை கவனியுங்கள். பலகுடிகளில் அவர்கள் பெண்களை மிகமிக கறாராகவே கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களின் இனக்குழுவுக்குள் அவர்களுக்கு ஒருவகை பாலியல் சுதந்திரம் சிலசமயம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வெளியே இருந்து ஒருவன் ஒரு பெண்ணை தொடமுடியாது. முதல்தண்டனை பெண்ணுக்குத்தான். ஏன் உங்களூர் தெருச்சண்டியர்களிடம் நரிக்குறவர் பெண்களை சீண்டுவீர்களா என்று கேட்டுப்பாருங்கள், நடுங்கிக்கொண்டே ‘அய்யோ’ என்பார்கள்.

இன்னொரு வேடிக்கையான சான்று உண்டு. அத்தனை பாலியல்கதைகளிலும் பெண்ணை வாய்ப்புகிடைத்தால் எல்லை மீறுபவளாகவே காட்டுவார்கள். ஏன்? அதைத்தான் ஆண்மனம் ஆழமாக நம்புகிறது. அதையே ஏற்கிறது. அந்த மனம் ஆயிரமாண்டுகளாக உருவாகி வந்தது, அதற்கு மனு காரணம் அல்ல, உலகமெங்கும் அது ஒன்றே. நம்மிடம் ஏதோ ஒரு பெரிசு அந்த மனப்பதிவைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இளைஞனும் மணம்புரிந்த சிலநாட்களிலேயே எவரேனும் அவனிடம் அதைச் சொல்கிறார்கள்.

ஆணின் குல அடையாளம் பெண்வழியாக உருவாகிறது. ஆணின் வாரிசு என்பது பெண்ணின் சொல்லில் இருக்கிறது. ஆகவே ஆண் பெண்ணின் கருப்பையை கட்டுப்படுத்த விரும்புகிறான். அவள் உடல்மேல் ஆட்சி செலுத்துகிறான். அவளைப்பற்றிய மாளாத பதற்றத்திலும் இருக்கிறான். குலத்தின் அடிப்படையில் சமூகம் வரையறைசெய்யப்பட்ட நிலப்பிரபுத்துவ காலத்தில் பெண் கட்டுப்படுத்தப்படவேண்டியவள், வாய்ப்புகிடைத்தால் மீறுபவள் என்னும் நம்பிக்கை அவ்வாறுதான் உருவானது.அது இல்லாத நிலப்பிரபுத்துவகால நெறிநூலே இல்லை.மனுநீதி அதில் ஒன்று மட்டுமே

இந்தியவரலாற்றில் மனுநீதியின் இடம் என்ன?

இங்கே மனுநீதி ஒரு மூலநூலாக இருந்ததையே வெள்ளையர்களின் மொழியாக்கம்தான் நமக்கே காட்டியது. இந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் கூர்ந்து கவனிப்பவர்கள் மனுநெறி அவற்றில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதையே காண்பார்கள். குலக்கலப்பு என்பது இதிகாச காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நிகழ்கிறது. பாண்டவர்களின் குலவரிசையையே எடுத்துப்பார்க்கலாம். அசுரகுலத்துப் பெண்களை மண்ம்செய்வது நிகழ்ந்தபடியே இருக்கிறது.கிருஷ்ணனின் மனைவியரும் மகன்களில் மனைவியரும் அசுரகுலம் உட்பட வெவ்வேறு குலத்தில் இருந்து வந்தவர்கள்.

மனுவின் நோக்கில் வேதமோத தகுதியற்ற குலத்தில் பிறந்த யாதவனாகிய கிருஷ்ணன்தான் பின்னர் வேதமுதல்வனாகிய பரம்பொருள் என்று வணங்கப்பட்டான். அவனே வேதவிழுப்பொருளாகிய கீதையை உரைத்தான். உபநிடதங்களில் நாம் அனைத்துக் குலங்களிலிருந்தும் ஞானிகள் தோன்றி மெய்மையை உரைப்பதைக் காண்கிறோம்.

மனுநெறி என்பது பிற்காலத்தில், நிலப்பிரபுத்துவத்தின் முதிர்ச்சிக்காலகட்டத்தில், பேரரசுகளை உருவாக்கும்பொருட்டு வகுக்கப்பட்ட நெறி. பல்லாயிரம் இனக்குழுக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி, ஒரே முறைமைக்குள் செலுத்தி பேரரசுகளின் கட்டமைப்புக்குள் கொண்டுவர அது தேவைப்படடது. ஆகவே அது முன்வைக்கப்பட்டது.

ஆனால் அது மேலிருந்து ஒரு கொள்கையாக வலியுறுத்தப்பட்டதே  ஒழிய கீழே அது ஒருபோதும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்தியாபோன்ற ஒரு பெருநிலப்பரப்பில் அது இயல்வதுமல்ல.கீழ்நிலையில் குலநீதியும் குடியாசாரங்களுமே நிலவின. அவை மனுநீதியை விட தொன்மையானவை. இன்றுகூட கிராமப்பஞ்சாயத்துக்கள் குலநீதியால்தான் நடத்தப்படுகின்றன.

மனுநெறி இந்தியச் சாதிமுறையை உறையவைக்க முயன்றது. ஆனால் இந்தியாவில் வர்ணமாற்றமும் சாதிப்படிநிலை மாற்றமும் இடைவிடாது நடந்துகொண்டேதான் இருந்தன.நிலம்வென்ற பழங்குடிகள், அடிநிலைச் சாதிகள் அரசர்களாகி ஷத்ரியர்களாக அறிவித்துக்கொள்வது நிகழ்ந்தபடியே இருப்பதே இந்திய வரலாறு. வெவ்வேறு இனக்குழுக்களின் பூசகர்கள் பின்னர் பிராமணர்களாக ஆகியிருக்கிறார்கள். வணிகம்செய்தவர்கள் வைசியர்களாகியிருக்கிறார்கள். வீழ்ச்சியடைந்து படிநிலையில் கீழே சென்றவர்களும் உண்டு. நூற்றுக்கணக்கான உதாரணங்களை வரலாற்றாய்வாளர் காட்டுவார்கள்

இந்தியாவின் சாதிய இயக்கத்தை மனுவை வைத்து புரிந்துகொள்ளமுடியாது. மனு அதன் ஒரு கூறு, ஒருஅவ்வளவுதான்

இந்துமதத்தின் அடிப்படைநூலா மனுஸ்மிருதி?

மனுஸ்மிருதி ஒரு தொன்மையான நெறிநூல். எப்படியும் ஈராயிரமாண்டு தொன்மை கொண்டது. ஒரு நெறிநூல் அப்படியே மற்றமில்லாமல் ஈராயிரமாண்டு காலம் செல்லுபடியாகும் என்று சொல்பவர் அடிப்படைவாதி அல்லது அறிவிலி. எந்த நெறிநூலாக இருந்தாலும் சரி.

இந்துமரபு மூலநூல்களை இரண்டாகப் பிரிக்கிறது. ஸ்மிருதி, சுருதி. ஸ்மிருதி என்னும் சொல்லின் நேர்ப்பொருள் நினைவிலிருப்பவை அல்லது நினைவில் நிறுத்தப்படவேண்டியவை. சுருதி என்றால் சொல்லப்பட்டவை, ஆணையிடப்பட்டவை, சொல்மட்டுமேயாக நிலைகொள்பவை. இப்பிரிவினை இந்துமெய்ஞானத்தை புரிந்துகொள்ள மிக ஆதாரமானது. ஒரு நூல் ஸ்மிருதியா சுருதியா என்ற கேள்வியே அந்நூலை அறிவதற்கான முதல் ஆதாரம்

சுருதிகள் வழிவழியாகவந்த மெய்ஞானத்தை மட்டுமே முன்வைப்பவை. நித்யசைதன்ய யதியின் சொற்களில் “தூயஞானத்திற்கான தேடல்களும் கண்டடைதல்களும் வழிமுறைகளும் மட்டுமே கொண்டது சுருதி”. இந்துமரபின் சுருதிகள் எவையும் நெறிநூல்கள் அல்ல.முதற்சுருதிகள் எனக் கொள்ளப்படும் வேதங்களில் நெறிகள் பேசப்படவில்லை. அவை வணக்கப்பாடல்கள்,வேள்விப்பாடல்கள் மட்டுமே.

உபநிடதங்கள் கீதை ஆகியவை மெய்யியலை, தத்துவத்தை பேசுபவை மட்டுமே. அவை மாறாநெறிகளை மானுடம்மீது ஆணையிடவில்லை. வாழ்க்கையை, புடவியைப் பார்க்கும் ஒரு கோணத்தை முன்வைக்கின்றன. விவாதிக்க அழைக்கின்றன. ஊழ்கத்திலமர்ந்து உணர்ந்து மேலே செல்ல வழிகாட்டுகின்றன

ஸ்மிருதிகளே நெறிநூல்கள்.அவ்வாறு பல ஸ்மிருதிநூல்கள் இருந்திருக்கின்றன. அவை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. மாற்றுவதற்கு இந்துமரபில் அனுமதி உண்டு. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேற்ற ஸ்மிருதிகள் உண்டு என்றே சொல்லப்படுகிறது. யமஸ்மிருதி, நாரதஸ்மிருதி,யாக்ஞவால்க்ய ஸ்மிருதி போன்றவற்றில் நான்கு வர்ணங்களும் வேதமோதி வேள்விசெய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை ராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா போன்ற பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.மனு அதை அந்தணருக்கு மட்டும் உரியதாக ஆக்குகிறார்.

ஆகவே மனுவை நிராகரித்து இன்னொரு ஸ்மிருதிநூலை காலத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ளலாம். சுவாமி சித்பவானந்தர் இன்றிருக்கும் இந்து அரசியல்சட்டம் என்பது ‘அம்பேத்கர் ஸ்மிருதி’ என்று சொல்வதுண்டு. அம்பேத்கர் உருவாக்கியது அல்ல, அவரால் தொகுக்கப்பட்டது. அவர்தான் இன்றைய ஸ்மிருதிகர்த்தர். அவரை ஏற்க சராசரி இந்துவுக்கு பெரிய சிக்கலேதும் இருக்கவில்லை.

சுருதிகளே இந்துமதத்தின் அடிப்படைகள். ஸ்மிருதிகள் சென்றகால நடைமுறைநெறிகளாக இருந்தவை மட்டுமே. அப்படி பல ஆசாரநூல்கள் இருந்தன, மறைந்தன. ஆகவே மனுஸ்மிருதி இந்துமதத்தின், இந்துமெய்யியலின் ஆதாரநூல் அல்ல. அது சொல்வது இந்துமதத்தின் கருத்து அல்ல. அது முன்வைப்பது நேற்றிருந்த ஒரு காலகட்டத்தின் மனநிலையையும் நெறியையும் மட்டுமே.

இந்துமதச் சீர்திருத்தங்கள் தொடங்கி இருநூறாண்டுகளாகின்றன. சராசரி இந்து அதை நூறாண்டுகளுக்கு முன்னரே கடந்துவரத் தொடங்கிவிட்டான்.இன்று எந்த இந்துவும் குழந்தைமணம் செய்வதில்லை, எந்த இந்துவும் பெண்ணுக்கு கல்வி மறுப்பதில்லை. இன்று இந்துக்களில் எல்லா சாதியினரும் விதவை மறுமணம் புரிந்துகொள்கிறார்கள். இந்துசாதிப்பிரிவுகள் நடுவே திருமணமும் பெரும்பாலும் ஏற்கப்படுகிறது. அய்யர் வந்து மந்திரமோதி நடத்திவைக்கும் சாதிமறுப்புத் திருமணங்கள் பலவற்றில் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

இன்று மனுநீதி பேசுபவர்கள் முன்னேறும் சமூகத்திற்கு பின்னாலெங்கோ நின்று பிலாக்காணம் வைக்கும் பழமைவாதிகள் மட்டுமே. ஆனால் அவர்களும் எப்போதும் இருப்பார்கள். உலகுக்கு ஜனநாயகத்தைக் கற்பித்த ஐரோப்பாவிலேயே இனவெறியர்கள் இன்றும் உண்டு.ஆனால் அவர்களல்ல ஐரோப்பா.

மனுஸ்மிருதி பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தவில்லை. பெண்கள் சஞ்சலமனம் கொண்டவர்கள் என்று சொல்லும்போதே மறுபக்கம் அவர்களை குலத்தின் குடியின் தெய்வங்களாகவும் நிலைநாட்டுகிறது. ஆகவே மனு பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னார் என்று மேற்கோள்காட்டி அதனடிப்படையில் பெண்களை இந்துமதம் விபச்சாரிகள் என்று சொல்கிறது என்று சொல்வது பிழையான புரிதல்.

இதுவே திருமாவளவன் அவர்களுக்கான பதில். இந்தப்பதில் திருமாவளவனுக்கான பதில் மட்டுமல்ல, சராசரி இந்துவுக்கான விளக்கமும்கூட. அவனும் மனுநீதியைச் சென்று படிக்கமுடியும். எனக்கு வரும் கேள்விகளெல்லாமே படித்த, முற்போக்கான இந்து இளைஞர்களிடமிருந்தே.

இன்றைய விவாதங்களின் போக்கு

இந்த விவாதத்தில் இத்தகைய  விளக்கம்தான் அளிக்கப்பட்டதா? மாறாக மனுநீதி அப்படிச் சொல்லவில்லை, அது பெண்களை போற்றுகிறது என இன்னொரு பத்தியை எடுத்துபோடுகிறார்கள். மனுநீதியை விமர்சித்த திருமாவளவன் இந்துமதத்தையே விமர்சிக்கிறார் என்று பொங்குகிறார்கள்.

அப்போது இயல்பாக வரும் கேள்வி மனுநீதியை நீங்கள் ஏற்கிறீர்களா என்பது. அது பிழையே சொல்லாதது என்கிறீர்களா? அப்படியென்றால் அது சாதியடுக்கு பற்றிச் சொல்வதுதான் உங்கள் நிலைபாடா? மனுநீதிதான் இந்துமதத்தின் ஆதாரநூல் என்கிறீர்களா? அப்படியென்றால் மனுநீதி சொல்வதைத்தான் இந்துமதம் சொல்கிறது என்கிறீர்களா?

அரைகுறைகளும் முட்டாக்குபோட்ட ஆசாரவாதிகளும் சேர்ந்து அதற்கு தெளிவான பதிலைச் சொல்லாமல் குழப்பி நாறடித்துவிட்டனர். மனு நேற்றைய ஸ்மிருதி, அன்றைய வரலாற்றின் ஒரு பகுதி, இன்று அதை நிராகரிக்கவேண்டியதுதான் என்று எத்தனை பேர் சொன்னார்கள்? மனுநெறி என்பது ஸ்மிருதி மட்டுமே, இந்துஞானம் சுருதிகளைச் சார்ந்தது என்று எத்தனைபேர் சொன்னார்கள்?

இன்று ஒரு சாரார் மனுநீதியை இந்துநெறியாகவே முன்வைக்கையில் அவ்வண்ணம் ஓர் எதிர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாவது இயல்பு. இத்தருணத்தில் வரலாற்றுநோக்குடன் மனுநீதியின் இடமென்ன என்று விளக்கி , ஸ்மிருதிகள் சொல்லும் இந்துமெய்யியலின் சாரமென்ன என்று சொல்லி, அவர்களை ஆற்றுப்படுத்துவதை அல்லவா மெய்யறிந்த இந்து செய்யவேண்டும்? இதை அதற்கான ஒரு சந்தர்ப்பமாக அல்லவா அவன் கொள்ளவேண்டும்? அதை செய்தார்களா?

மாறாக தன் சாதிக்காழ்ப்பை உள்ளே மறைத்து மனுநீதியை மழுப்ப முயல்பவன் அல்லவா உண்மையான இந்து எதிரி? இந்துக்களில் ஆறில் ஒரு பங்கினரை அந்நியப்படுத்தும் அந்தப் பதடிகளை அல்லவா நாம் முதலில் எதிர்க்கவேண்டும்?

இந்த ஆதாரமான விவாதமே வெறும் தேர்தலுக்கு முந்தைய கட்சியரசியலின் பகுதியாகச் செய்யப்படுவதே ஆபத்தானது. திருமாவளவன் இதைச் சொன்னதனால் இது இப்படிப் பேசப்படுகிறது. அவர் திமுக கூட்டணியில் இல்லாமல் பாரதியஜனதா கூட்டணியில் இருந்திருந்தால் பேச்சு வேறுமாதிரி இருந்திருக்கும். எல்.முருகன் ஈவேராவை போற்றியபோது எப்படி ஒரு அமைதி நிலவியது என பார்த்தோமே. ஈவேரா சொன்னவற்றைத்தான் அப்படியே, சொல்லப்போனால் இன்னும் மென்மையாக, திருமாவளவன் சொல்கிறார்?

இன்னொரு பக்கம் இந்த எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பாளர்கள். இவர்களேதான் பா.ரஞ்சித் ராஜராஜனைப் பற்றிச் சொன்னபோது கொதித்துக் கிளம்பி வழக்கு போட்டவர்கள். திருமாவளவன் மனு பற்றிச் சொன்னதைத்தான் இன்னொரு கோணத்தில் ரஞ்சித் ராஜராஜன் பற்றிச் சொன்னார். தன்னை மனுநீதிக்காவலன் என அறிவித்துக்கொண்டவர்கள் சோழர்கள். சோழர்களை அவதூறு செய்துவிட்டார் என்று ரஞ்சித் மேல் பாய்ந்தவர்கள் இப்போது திருமாவளவனுக்கு கருத்துச்சுதந்திரம் இல்லையா என்று சீறுகிறார்கள்.

இவர்களின் வெற்றுக்காழ்ப்புகள், சாதிய மழுப்பல்கள் , அரசியல் கழைக்கூத்துகளைக் கண்டு திகைத்து, தன் மரபைப்பற்றியே நாணி நிற்பவன் சராசரி இந்து இளைஞன். அவனுக்காகவே இந்த வரலாற்றுப்பின்னணி கொண்ட விளக்கம் எழுதப்படுகிறது

இந்துமதமும் மாற்றுமத விமர்சகர்களும்

இனி, இந்த விவாதத்தின் வேறுசில பக்கங்கள். ஒன்று, இந்த மனுநீதி விவகாரத்தில் நுழைந்து ஆவேசக்குரலெழுப்பி இந்துமதத்தை பழித்தவர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்வர்கள், இஸ்லாமியர். அவர்கள் அதைச் செய்ததன் வழியாகவே திருமாவளவனின் விமர்சனங்களை பொருளிழக்கச் செய்துவிட்டனர்

ஒரு கிறிஸ்தவன் பைபிளைப் பார்க்கட்டும். ஆதமின் விலாவெலும்பே பெண் என்று பைபிள் சொல்வதை அவன் மறுக்கிறானா? ஏவாளின் சஞ்சல புத்தியால்தான் மானுடகுலமே முதல்பாவத்தைச் செய்தது என்று பைபிள் சொல்வதை அவன் மறுக்கிறானா? லோத்தின் மகள்கள் தந்தையிடமிருந்தே கருத்தரித்ததுபோல எத்தனை கதைகள் பைபிளில் உள்ளன என்று பார்க்கட்டும். பெண் ஆணுக்கு அடங்கியிருப்பதைப் பற்றியும் கூடவே பெண்ணை ‘தான் உண்ணாவிட்டாலும் அவளை ஊட்டி’ ஆண் பேணவேண்டியதைப் பற்றியும்தான் பைபிள் பேசுகிறது. அதுவே மனு சொல்வதும்

குர்ஆனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதன் அத்தனை நெறிகளும் ஆணுக்குச் சார்பானவை.இன்றும் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு புறவுலகு மறுக்கப்பட்டுள்ளது. பெண்ணை பேணுவதை ஆணின் கடமை என்று வகுப்பது குர்ஆன். கறுப்பு உடையால் பொத்திவைக்காவிட்டால் பெண் வழிதவறிப்போவாள் என்று நம்புபவர்களாலான ஒரு மதத்தவர் மனுவைச் சுட்டிக்காட்டி இந்துமதத்தை வசைபாடுவது வெறும் மதக்காழ்ப்பும் அவதூறும் மட்டுமே.

நான் முன்னரே சொன்னதுபோல சென்றகாலத்தைய நிலப்பிரபுத்துவ யுகத்தில் உலகிலுள்ள அத்தனை நெறிநூல்களிலும் இருக்கும் ஒரு பொதுப்பார்வை இது. விதிவிலக்கே இல்லை. வேறுபாடே இல்லை. அப்படித்தான் மானுடவரலாறு வளர்ந்து வந்துள்ளது, அந்த மனநிலையில்தான் இன்னமும் முக்கால்வாசி மூழ்கிக்கிடக்கிறது

இந்துமதத்தின் கட்டமைப்பு

அறுதியாக ஒன்று, இந்துமதம் மூன்று அடுக்குகளாலானது.

அ.  அதன் மெய்யியலும் தத்துவமும்.

ஆ. அதன் புராணங்களும் வழிபாட்டுமுறைகளும்.

இ. அதன் நெறிகளும் ஆசாரங்களும்.

முதல்தளத்தைச் சேர்ந்தவை சுருதிகள். அவையே இந்துமெய்ஞானத்தின் ஆதாரங்கள். அவற்றைச் சார்ந்த மெய்த்தரிசனங்கள், அவற்றின்மீதான தத்துவவிவாதங்களினூடாகவே இந்து மதம் தன்னை முன்னெடுக்கிறது.

இரண்டாம் தளத்தைச் சேர்ந்தவை புராணங்கள், இதிகாசங்கள். அவை முதல்தளத்தைச் சேர்ந்த மெய்மையை, தத்துவத்தை புரிந்துகொள்வதற்கான உதாரணகதைகள் மட்டுமே. அவை காலந்தோறும் மாறிவந்துள்ளன. நூலுக்குநூல் மாறுபடுகின்றன. நூலாசிரியர்களின் விளக்கங்களுக்கு ஏற்ப வளர்ச்சிபெறுகின்றன. அவை தன்னளவில் ‘உண்மைகள்’ அல்ல அவை மெய்மைகளைச் விளக்குவதற்கான கதைகள் மட்டுமே.

மூன்றாம் தளத்தைச் சேர்ந்தவை ஆசாரங்களும் நெறிகளும். அவை அந்தந்த காலகட்டத்திற்கு உரியவகையில் வகுக்கப்பட்டவை. காலந்தோறும் மாறிக்கொண்டிருப்பவை. இந்து மதத்தை எடுத்துப்பார்த்தால் நூறாண்டுகளுக்குள் நெறிகளில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதைக் காணமுடியும். அம்மாற்றங்களை நிகழ்த்துபவர்கள் முதல்தளத்தைச் சேர்ந்த ஞானிகளும் தத்துவ அறிஞர்களும்தான்.

அதாவது ‘ஈஸோவாஸ்யம் இதம்சர்வம்’ [இவையனைத்திலும் இறையுறைகிறது] என்பது சுருதி. அது மாறாமெய்மை. புவியை திசையானைகள் தாங்கியிருக்கின்றன என்பது புராணம். இன்னொரு கதையில் வாசுகி தாங்கியிருப்பதாகவும் வரலாம். ‘ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியம் அர்ஹதி’ [பெண் விடுதலைக்கு தகுதியானவளல்ல] என்பது ஸ்மிருதி. அது ஒரு காலகட்டத்தின் நெறி, இன்னொரு காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றப்படவேண்டியது

இந்து மரபிலுள்ள இந்த தெளிவான பகுப்புதான் அது தொடர்ச்சியாக வளர்வதற்கு, புதியவற்றை அனுமதிப்பதற்கு வழிவகுக்கிறது. இந்தப் பகுப்பு வேறுமதங்களில் இல்லை. அங்கே மெய்த்தரிசனம், புராணம், நெறி மூன்றும் ஒன்றே, ஏனென்றால் ஒரே மூலநூலில் அவை உள்ளன. அதை மாற்ற அந்த மதத்தை நம்புபவர்களால் முடியாது. ஆகவே அவர்கள் மூன்றையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

கடவுள் தன் ஒரேமைந்தனை பூமிக்கு அனுப்பினார் என்று நம்பவேண்டுமென்றால் ஆணின் விலாவில் தோன்றியவள் பெண் என்பதையும் நம்பியாகவேண்டும். அல்லது ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை துறக்கவேண்டும். மெய்யியலை, தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொள்ள கிறிஸ்தவத்தில் வழியில்லை.

ஓர் இந்துவுக்கு இந்துமதத்தின் நெறிநூல்களைக் கடந்துசெல்ல முழு உரிமை உண்டு. அவன் ஆசாரங்களை கடைக்கொள்ளவேண்டும் என்பதில்லை.புராணங்களை உண்மையென நம்பவேண்டும் என்பதில்லை, அவை தொன்மங்கள் உதாரணகதைகள் என்று கொள்ளலாம், தன் தேடலுக்கேற்ப அவற்றை மறுஆக்கம் செய்து பயன்படுத்தலாம். ஈராயிரம் ஆண்டுகளாக இங்கே அதுதான் நிகழ்ந்துவருகிறது

ஓரு சைவன் கைலாயத்தில் சிவன் நடனமிடுவது ஒரு யதார்த்த  உண்மை என நம்பவேண்டியதில்லை, அவன் அது ஓர் உருவகம் என அறிவான். சைவமெய்ஞானம் வேறு கைலாயம் என்னும் தொன்மம் வேறு என அவனுக்குத் தெரியும்.  சைவஆசாரம் வேறு சைவமெய்ஞானம் வேறு என்ற தெளிவும் அவனுக்கிருக்கும்.

ஓர் இந்துவின் முன் இருப்பது மெய்மையின் ஒரு வெளி. அதை அறிய, ஊழ்கத்தால் உணர, முடிந்தால் கடந்துசெல்லக்கூட அவனுக்கு உரிமை உள்ளது, கடமையும்.

ஜெ

 

https://www.jeyamohan.in/139809/

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.