Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி

2nd-Lieutenant-Majoori-Veeravengai-Vagnc

சுதந்திரத்தைத் தேடி 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி

இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன்.

வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள்.

மயூரி மாநிறம் நல்ல சொக்கு.

பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள்.

இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள்.

மட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும்.

‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’ அக்கே, அக்கே’ என்று கொஞ்சுவார்கள்.

இருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவல் உலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது.

ஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க? நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க?”

“ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய, கடல், வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க?”

என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன.

பயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு; வகுப்புகளிலும் அப்படித்தான்.

ஒருமுறை சொர்ணமண்ணை, பெண் போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார்.

வஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்லிவிட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார்.

குண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை.

எறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார்.

2nd-Lieutenant-Majoori.jpg

பயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வேலையில் மூழ்கிப் போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள்.

திடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன.

“ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்?” என்று கேட்க,

“என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது.

எதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது.

தங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள்.

“சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள்.

சின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள்.

சண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை.

திடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம்.

ஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

அந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்…..

பின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும், மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ?” என்று கேட்டால்,

“சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்து போவார்கள்.

எழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள்.

பெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா, அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்களை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்.

ஆனால்…… தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்….

“விடக்கூடாது” என்று வெறி வரும்.

“அக்கே பசிக்குதக்கே”

என்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள்.

“அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா”

என்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது…. எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி…. ‘இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும்.

Veeravengai-Vagnchi.jpg

ஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலை எடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம், நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி!

“மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன?”

என்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள்.

“மயூரி, எழும்பு” அதட்டினார்.

கண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து.

“அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எனக்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள்.

பொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார்.

“சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள்.

வஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி,

“ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள்.

ஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து, பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள்.

காட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு,

“ஏன் பாம்பைத் தொங்கவிட்டிருக்கிறீங்கக்கா?” என்றார்கள். அதற்கு நாங்கள்,

“இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம்.

“என்னண்டக்கா சமைக்கிறது?”

“தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா?”

“மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்?”

“இண்டைக்கு புதுக் கொட்டிலில சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப் பார்ப்பம்”

இருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள்.

“நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி.

ஒரு நாள் இருவரிடமும்,

“உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க?” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, “நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்?. எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள்.

சண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள்.

காட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள்.

நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே?

ஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்?

“அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா?” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள்.

சண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து,

“வடிவா இருக்கிறோமாக்கா?” என்று கேட்டு விட்டு,

தங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு,

“நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான்.

சண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

மயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு.

எதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்……

எதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ……

இரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள்.

இரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்கியதும்……

எதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்……

இன்னும் எங்களுக்கு மறக்கவில்லை.

அந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது.

சுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்” என்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது.

நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

நினைவுப்பகிர்வு: போராளி மலைமகள்.
நன்றி – எரிமலை இதழ் (ஆடி 1995).

https://thesakkatru.com/2nd-lieutenant-majoori-veeravengai-vagnchi/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கம்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.