Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

  • மேட் மெக்ராத்
  • பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்
ஜோ பைடன் : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்ன திட்டம் இருக்கிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஜோ பைடன் முன்னிறுத்தும் திட்டம், இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எல்லாருடைய திட்டங்களையும் விட அதீத லட்சியவாதத்தோடு இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. 

பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் மேட் மெக்ராத் இதை விரிவாக அலசுகிறார்.

மீண்டும் இணைவோம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், பூமியின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. மீண்டும் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருக்கிறார். அது அதிகமாக விவாதிக்கப்படுகிறது.

ஒபாமா அரசு 2016ல் பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது. அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது, மீண்டும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இணையும் என்றும், அதிபரானதும் இதுவே தனது முதல் செயல்பாடாக இருக்கும் எனவும் பைடன் உறுதிப்படுத்தினார். 

ஆனால் சொந்த நாட்டில் எந்த அளவுக்கு கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே பைடனின் மீதான உலகளாவிய நம்பகத்தன்மை அமையும்.

தீவிர ஜனநாயக கட்சியின் அலெக்ஸாண்ட்ரியா ஒகேசியோ கோர்டஸ் போன்றவர்கள் "Green New Deal" என்ற ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். 

அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான கரிம உமிழ்வுகளைக் குறைக்கும் விதத்தில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதனுடன் ஒப்பிடும்போது பைடனின் பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டம், கொஞ்சம் மிதமானது என்றே சொல்லவேண்டும். ஆனாலும், பைடனின் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், இதுவரை அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்ட காலநிலைத் திட்டங்களிலேயே முற்போக்கான திட்டமாக அது இருக்கும்.

என்ன திட்டம்?

2035க்குள் அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியைக் கரிமம் அற்றதாக மாற்றுவதாகவும், 2050க்குள் உமிழ்வுகளை முற்றிலுமாகத் தவிர்க்கப்போவதாகவும் பைடன் தெரிவித்திருக்கிறார்.

ஜோ பைடன் : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்ன திட்டம் இருக்கிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES

நிகர உமிழ்வுகளை இவ்வாறு முற்றிலும் தவிர்க்க வேண்டுமானால், எந்த அளவுக்குக் கரிம உமிழ்வு வெளியிடப்படுகிறதோ, அதே அளவுக்கான கரிமம் மீண்டும் வளிமண்டலத்துக்குள் செலுத்தப்படவேண்டும். உதாரணமாக, மரங்களை அதிகம் நடுவதன் மூலமாக, கரிமத்தை மீண்டும் வளிமண்டலத்துக்குள் செலுத்த முடியும்.

அதிபராக பதவியேற்ற பின்பு, நான்கு வருடங்களில் சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து நான்கு மில்லியன் கட்டிடங்களை ஆற்றல் செயல்திறன் மிக்கவையாக மாற்றப்போவதாக பைடன் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் உமிழ்வுகளைக் குறைக்க முடியும் என்கிறார் அவர்.

பொதுப்போக்குவரத்தில் அதிக முதலீடு செய்வது, மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்வது, பொது இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்துவது, ஆற்றலை வீணாக்காத நல்ல வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது ஆகிய திட்டங்களை பைடன் முன்வைக்கிறார். இவை எல்லாமே கரிம உமிழ்வுகளைக் குறைக்கும் என்பதோடு இன்னொரு முக்கிய பயனும் இருக்கிறது: வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

"உமிழ்வுகளைக் குறைக்கும் அதே நேரத்தில், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்விதமாக பைடன் திட்டங்களை வகுத்திருக்கிறார். மின்சார வாகனங்கள் அதிகமாக ஊக்குவிக்கப்படும். ஆற்றல் செயல்திறன் மிக்க கட்டிடங்கள் ஊக்குவிக்கப்படும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான, இயற்கைசார்ந்த தீர்வுகள் முன்னெடுக்கப்படும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு சூழல் பாதுகாப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்தால் எல்லா துறைகளிலுமே வேலைவாய்ப்பு அதிகரிக்கும்" என்கிறார் ஒபாமா அரசில் பணியாற்றிய மூத்த காலநிலை அதிகாரி ஆண்ட்ரூ லைட்.

கூட்டாட்சி நிலத்தில் fracking அனுமதிக்கப்படாது எனவும் பைடன் அறிவித்திருக்கிறார். எண்ணெயும் எரிவாயுவும் எடுப்பதற்காக, பாறைகளுக்குள் வேதிப்பொருட்களை செலுத்துவார்கள். இதுவே fracking என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும்.

ஜோ பைடன்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆனால், இதில் முரண் என்னவென்றால், கூட்டாட்சி நிலத்தில் மட்டுமே தடை இருக்கும் என்கிறார் பைடன். 90% fracking செயல்பாடுகள் தனியாருக்கும் அரசுக்கும் சொந்தமான இடங்களில் நடத்தப்படுகின்றன. ஆகவே பைடனின் தடையால் பெரிய மாறுதல் ஏற்படாது.

உலகளாவிய சராசரி வெப்பநிலை இலக்கு எட்டக்கூடிய தூரத்தில்தான் இருக்கிறது

உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகக்கூடாது என்று அறிவுறுத்துகிறது பாரீஸ் ஒப்பந்தம். ஆனால், 2018ல் ஐ.நா விஞ்ஞானிகள் பலரும், இரண்டு டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை 1.5 டிகிரி செல்சியஸாகக் குறைத்தால், இன்னும் அதிகமான பலன் இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்கள். இதனால் பல சிறு தீவுகள் மூழ்காமல் காப்பாற்றப்படும். பல லட்சம் மக்கள் பருவகாலப் பேரிடர்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். பனியே இல்லாத கோடைகாலம் போன்ற இடர்கள் வராமல் ஆர்டிக் பகுதி பாதுகாக்கப்படும்.

2050க்குள் உமிழ்வுகளே இல்லாத நிலையை பைடன் சாதித்துவிட்டால், 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்குக்கு அது மிகவும் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

"இப்போது பைடன் அதிபராக வரவிருக்கிறார். சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், தென்கொரியா ஆகிய நான்கு நாடுகளும் 2050க்குள் உமிழ்வுகளை அறவே நிறுத்துவதாக முடிவெடுத்திருக்கின்றன. இந்த நான்கு நாடுகளும்தான் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் உலகத்தின் மொத்த பசுமைக்குடில் உமிழ்வுகளில் பாதிக்கும் பொறுப்பாளர்கள்"என்கிறார் பில் ஹாரே. உலகின் கரிம உமிழ்வுத் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் Climate Action Tracker-ன் உறுப்பினர் இவர்.

" உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. இது மட்டும் நடந்தால் பாரீஸ் ஒப்பந்தம் சொல்லியிருக்கிற 1.5 டிகிரி இலக்கு நம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிடும்" என்கிறார் ஹாரே.

இன்னும் இன்னும் சமரசங்கள்

ஜோ பைடன் : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள என்ன திட்டம் இருக்கிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES

மக்கள் பிரதிநிதிகள் சபையில் இப்போது ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மயாக இருப்பர். ஆனால் அமெரிக்க செனட்டைக் கட்டுப்படுத்துவது ரிபப்ளிகன் கட்சிதான். இந்த கொள்ளை நோய் காலத்திலும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் ரிபப்ளிக்கன் கட்சி சுணக்கம் காட்டி வருகிறது.

ஆனால் ஜனவரியில் ஜோர்ஜாவில் நடக்க இருக்கிற இடைத்தேர்தல் மூலமாக செனட் டெமோக்ராட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமானால் இது மாறலாம்.

இல்லாவிட்டாலும் தனது சில பருவநிலை திட்டங்களை மேலவை ஏற்கும் என்று பைடன் நம்புகிறார். அதற்கும் முகாந்திரங்கள் உண்டு. 

அதிபர் டிரம்பின் நிலைப்பாடு என்பது காலநிலை மாற்றத்தை மறுதலிப்பதாகவே இருந்தது. ஆனாலும், கடந்த இரு வருடங்களில், காலநிலை மாற்றம் சார்ந்த விஷயங்களில் ரிபப்ளிகன் கட்சியினரின் மனப்பாங்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கனிந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

அவ்வப்போது "ரிபப்ளிகன் கட்சியினர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவுவார்கள்" என்று நம்பத்தகுந்த சில விஷயங்களும் நடந்திருக்கின்றன. 

குளிர்சாதனப் பெட்டிகளில் hydrofluorocarbons (HFCs) என்று அழைக்கப்படும் வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பசுமைக்குடில் வாயுக்களிலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்துபவை இவைதான். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக செப்டம்பரில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டபோது டெமோக்ராட்டுகளும் ரிபப்ளிகன் கட்சியினரும் இணைந்தே ஆதரவு தெரிவித்தார்கள். வனவிலங்குகளையும் வாழிடங்களையும் பாதுகாப்பதற்காக Bipartisan Wildlife Conservation Act என்ற ஒரு மசோதாவையும் செனட் நிறைவேற்றியது.

வேறு யாரையும் விட, இந்த மேலவை விவகாரங்களை எப்படிக் கையாள்வது என்பது பைடனுக்கு நன்றாகவே தெரியும். பராக் ஒபாமாவின் அரசில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு ஆறு முறை இவர் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் புதிய கட்டமைப்புகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை பைடனால் கொண்டு வரமுடியுமானால், இரண்டு தரப்புகளையுமே அவரால் திருப்திப்படுத்த முடியும்.

"காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் வேறு பலன்களும் இருக்கிற திட்ட வரைவுகளைக் கொண்டு வருவது பொதுத்தளத்தில் பலரை ஒன்றிணைக்கும்" என்கிறார் Heritage Foundation அமைப்பைச் சேர்ந்த திட்ட வரைவியல் ஆய்வாளர் கேட்டி டப்.

உச்ச நீதிமன்ற பிரச்னை?

பைடனால் செனட்டோடு ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாவிட்டால், அடுத்து நிர்வாஆணைகளை அவர் பிறப்பிக்க வேண்டியிருக்கும். ஒபாமாவும் டிரம்பும் இதே வழிமுறைகளைத்தான் கையாண்டார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் பல சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதற்காகவும், வாகனங்களில் உச்சவரம்புகளை மாற்றுவதற்காகவும் ட்ரம்ப் இந்த வழிமுறையைப் பின்பற்றினார்.

டிரம்ப் மாற்றியமைத்த பல சூழல் வரையறைகளை பைடன் அரசு மீண்டும் திரும்ப கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எக்ஸிக்யூடிவ் வழிமுறையில் ஒரு மிகப்பெரிய பலவீனம் உண்டு. அதில் சட்ட சிக்கல்கள் அதிகம். Clean Power Plan என்ற ஒரு காலநிலை திட்ட வரையறையை ஒபாமா முன்வைத்தபோது உச்சநீதிமன்றம் அதைத் தடுத்தது. பைடனின் காலநிலைத் திட்டங்களுக்கும் இதே நிலை வரலாம்.

புதிய பாரிஸாக மாறும் கிளாஸ்கோ

தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து, அதாவது நவம்பர் 4ம் தேதியன்றுதான் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவு அமலுக்கு வந்தது. 

பைடன் தலைமையிலான அரசு, மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவதாக ஐ.நாவிடம் தெரிவிக்கும். இது நடந்து ஒரு மாதத்துக்குப் பின் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதிகாரபூர்வமாக இணையும்.

"நிச்சயமாக இது ஒரு நல்ல முன்னெடுப்பு. அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால் மட்டுமல்ல. காலநிலை மாற்றம் சார்ந்த அறிவியலை அமெரிக்கா நம்புகிறது என்பதையும் இது உறுதிப்படுத்தும்" என்கிறார் Aosis அமைப்பைச் சேர்ந்த கார்லோஸ் ஃபுல்லர்.

வருடாவருடம் உலக நாடுகள் ஒன்றுகூடி கரிம உமிழ்வுகளை எப்படிக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும். இந்த நிகழ்வுகளில் அமெரிக்கத் தலைமை என்பது இன்றியமையாதது. உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் நெடுங்காலத் திட்டங்களையும் இலக்குகளையும் வகுத்திருக்கின்றன. ஆகவே அடுத்து க்ளாஸ்கோவில் நவம்பர் 2021ல் நடக்கவிருக்கும் மாநாடு நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ல் உலக நாடுகள் தங்களது கரிம இலக்குகளை சமர்ப்பித்திருந்தன. அதைவிட கடினமான இலக்குகளையும் உமிழ்வுகளைத் தடுப்பதற்கான மேம்படுத்தப்பட்ட திட்டங்களையும் உலக நாடுகள் சமர்ப்பிக்கவேண்டும் என்று 2021 மாநாட்டை நடத்தும் பிரிட்டன் எதிர்பார்க்கிறது. 2050க்குள் உமிழ்வுகளை முற்றிலும் ஒழிப்பதாக இன்னும் பல நாடுகள் உறுதியளிக்கவேண்டும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு.

பைடனின் தலைமையிலான செயல்பாடுகளால் அமெரிக்கா காலநிலைக்கான திட்டங்களை முன்னெடுக்கும்போது இந்த இரண்டு இலக்குகளும் எளிதில் சாத்தியப்படும்.

 

https://www.bbc.com/tamil/science-54892929

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.