Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார்

 

தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம். எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் நேற்று சிங்கள தரப்பிற்கு சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அத்துடன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அரச தரப்பு எப்படி உதாசீனம் செய்தது என்பது பற்றிய தகவல்களையும் அம்பலப்படுத்தினார்.

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில், நேற்று (03) உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். கஜேந்திரகுமார் உரை ஆற்றியபோது அமைச்சர் சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உட்பட பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் இடையூறுகளையும் கூச்சல்களையும் மேற்கொண்டனர். இத்தனைக்கும் மத்தியில் கஜேந்திரகுமார் தெளிவாகவும் துணிச்சலாகவும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வகையிலும் உரை ஆற்றியமை  தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேர்மையாகக் கூறுவதானால் மிகுந்த தயக்கத்துடனேயே இந்த விவாதத்தில் கலந்து கொள்கிறேன். எதற்காகத் தயக்கம் என்றால், பாதுகாப்பு அமைச்சு விவகாரமானது இனங்களை துருவங்களாக ஆக்கியுள்ளது. இந்த அவையில் ஆற்றப்படும் உரைகள் மட்டுமல்லாது, இந்த அவைக்கு வெளியிலும் இதுதொடர்பான கருத்துகள் இனங்களை துருவங்களாகவே வைத்திருக்கிறது. அதனடிப்படையில் இவ்விவகாரங்களைக் கையாளுவதில் இந்த அவையில் மோசமான நிலையே காணப்படுகிறது. இவ்விடயத்தில் எதிரான கருத்துகள் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இப்புறச்சூழலில் இவ்விடயம் பற்றிப் பேசுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என ஒருவர் கேள்வியெழுப்பலாம். இருந்த போதிலும் என்னைத் தெரிவுசெய்த மக்களின் சார்பில் சில கருத்துகளைத் தெரிவிப்பது எனது கடமை. அதனை நான் ஆற்றவேண்டியுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி, அப்போது விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராகவிருந்த திரு. நடேசனும், சமாதான செயலகத்திற்கு பொறுப்பாகவிருந்த திரு. புலித்தேவனும் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த 150 ஆயிரம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர்.

அந்த மக்கள் தொடர்பான கரிசனையையும், இதுதொடர்பில் அவர்களது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாதிருந்தால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பது அவர்களது கருத்தாகவிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அப்போது அமைச்சராகவிருந்த திரு. பசில் இராஜபக்சவை நான் தொடர்புகொண்டு பேசினேன். அன்றைய தினம் மே பதினாறாம் திகதி, மாலை 4 மணியிலிருந்து இரவு பத்துமணிவரையான காலத்தில் ஏறத்தாள 10 தடவைகள் எமக்கிடையிலான உரையாடல்கள் இடம்பெற்றன என எண்ணுகிறேன். எவ்வாறு அந்த 150 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது தொடர்பிலேயே நாம் பேசிக்கொண்டோம்.

இறுதியில், பாதுகாப்பு அமைச்சு உடன்பட்டுக் கொண்டதன் பிரகாரம் இரவு எட்டுமணிக்கு ஒரு தீர்மானத்திற்கு நாம் வந்தோம். அதன்படி பசில் இராஜபக்சவும் நானும், இரண்டு அருட்தந்தையர்களுடன் இணைந்து வன்னிக்குச் சென்று அங்கிருந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வை செய்வதாக முடிவெடுத்தோம். 16ம் திகதி இரவு எட்டுமணிக்கு இந்த முடிவு எட்டப்பட்டாலும் அடுத்தநாள் நடைபெறவிருந்த பாதுகாப்புச் சபையே இதனை இறுதி செய்வதாகவிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அப்போது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜோர்டன் நாட்டிற்கு சென்றிருந்தார். அவர் மறுநாள் 17ஆம் திகதி காலையில் நாடு திரும்பவிருந்தார். அவர் நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் இந்த விடயத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த மக்கள் தொகை நூற்றியம்பதாயிரமா அல்லது நூறாயிரமா எனச் சரியாகக் கூறமுடியாவிட்டாலும் பெருந்தொகையான மக்கள் அங்கிருந்தனர்.

17ஆம் திகதி காலை 11 மணியளவில் நான் ரூபவாகினி தொலைக்காட்சியை பார்த்தபோது அங்கிருந்த அனைத்து மக்களும், ஐமபதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மக்கள் எவரும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கேட்டு நான் பதற்றப்பட்டேன். எனக்குத் தெரியும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் 460 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தது. இது அரசாங்க பணியகங்களால் வழங்கப்பட்ட புள்ளிவிபரம். அதற்குபின்னர் வெளியேற்றம் ஏற்பட்டது, இறப்புகள் ஏற்பட்டன. இந்த கணிப்பீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமல்ல யுத்தம் பற்றி கண்காணிப்பிலிருந்த எல்லா நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருந்தன.

யுத்தம் நடைபெற்ற நேரத்தில் நான் எங்கேயிருந்தேன் என சரத் வீரசேகர அன்றைக்கு கேள்வியெழுப்பியிருந்தார். அப்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன், எனக்கிருந்த உரிமைகளையும், அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளக்கூடய வசதிகளையும் பாவித்து அந்த மக்களைக் பாதுகாப்பதே எனது பணியாகவிருந்தது. அந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

போர் ஆரம்பித்தபொழுது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் 460 ஆயிரத்துக் மேற்பட்ட மக்கள் இருந்தபோதிலும், ஆரம்பத்திலிருந்து அங்கு 70 ஆயிரம் மக்களே இருந்ததாக அரசாங்கம் கூறிவந்தது. எழுபதாயிரம் மக்களுக்கு ஏற்ற அளவிலேயே உணவுப்பொருட்களும் மருந்துவகையும் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன. இதுதான் உண்மை. இதனையே அரசாங்கம் மேற்கொண்டது. இறுதியில் 320 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் மெனிக்பார்ம் உட்பட பல இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இவ்வாறு அரசாங்கம் மக்கள் எண்ணிக்கைப்பற்றி பொய்யான தகவல்களை வழங்கி, ஒரு யுத்தச்சூழலில் அங்கிருந்த மக்கள் தொகையில் ஓரு சிறு பங்கினருக்கே உணவும், மருந்துப் பொருட்களும் வழங்கியதாயின் அதன் நோக்கம் என்னவாகவிருக்கும்? இதற்கு சாட்சியாக நானிருந்தேன்.

மே 16ம் திகதி நான் திரு. பசில் ராஜபக்சவை தொடர்புகொண்டபோது, மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்கு ஏதுவாக விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதற்கு உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால் யுத்தம் நிறுத்தப்பட்டவில்லை. இதிலிருந்து அதன் நோக்கமென்ன என்பதனை நாம் உய்த்தறிய முடியும். அங்கிருந்த மக்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ அழிப்பதுதான் அதன் நோக்கமில்லையா? இந்த நோக்கம் வெளிப்படுத்தபடவில்லையா? இதுதான் தமிழ்மக்களுக்குத் தெரிந்த உண்மை நிலவரம். அதனாலேயே இந்த அமைச்சானது மக்களை இனங்களின் அடிப்படையில் துருவங்களாக வைத்திருக்கிறது எனக்குறிப்பிட்டேன்.

இந்த உண்மை நிலவரத்தின் மத்தியிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 164 ஆயிரத்திற்கு அதிகமான மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் எதுவுமில்லை.

இன்று இச்சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் 52க்கு அதிகமான உயர் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அந்த நாடுகளின் உள்நுழைவு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு உள்நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது? இந்த உயர் அதிகாரிகளுக்கு இவ்வாறு நடைபெறுவது நியாயமற்றது எனில் இந்த அதிகாரிகள் குற்றமிழைக்கவில்லை என்றால் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பது இந்த அரசாங்கத்தின் கடமையில்லையா? உங்களுடைய நலன் நோக்கில் இது அவசியமானதல்லவா? இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். ஒரு விசாரணையை நடாத்துங்கள். ஒரு சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லையென்றால் அதற்கு உடன்படுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்?

தயவுசெய்து இவ்வாறு தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் இவ்வாறு தயக்கம் காட்டும்போது, சர்வதேச சமூகத்தின் மத்தியில் உங்களைப்பற்றி தவறான அபிப்பிராயம் ஏற்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள சமூகங்கள் தொடர்ந்தும் பிளவுபட்டு நிற்கும். பாதுகாப்பு அமைச்சு இத்தகைய பிளவுகளை ஏற்படுத்துகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த அமைச்சின் பெயரை மாற்ற வேண்டும். இந்த அமைச்சானது தமிழ் இனப்படுகொலைக்கான அமைச்சு என அது அழைக்கப்பட வேண்டும். அல்லது தமிழ் விரோத அமைச்சு என அழைக்கப்பட வேண்டும். இவ்வாறுதான் நாங்கள் உணர்கிறோம். அதனை ஏன் மறுக்கிறீர்கள்?

சரத் வீரசேகர காவற்துறைக்கு பொறுப்பான அமைச்சர். இச்சபையில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை தடை செய்ய வேண்டும என வெட்கமின்றிக் கூறுகிறார். அவர்கள் இந்தச் சபையிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும் எனவும் கூறினார்.
பல்வேறு நாடுகளும், என் போன்றவர்களும் யுத்தவலயத்தில் சிக்குண்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோரியிருந்தோம். கடந்த மாதம் 22ம் திகதி இச்சபையில் கௌரவ மகிந்த சமரசிங்க உரையாற்றும்போது, அந்த மக்கள் வெளியேறுவதனை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச விரும்பவில்லை எனக்குறிப்பிட்டார். ஏனெனில் பிரபாகரன் வெளியேறிவிட முடியும் என அவர் கருதினாராம். ஒரு மனிதருக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்தொழிக்க நீங்கள் முடிவுசெய்தீர்கள். இதனைத்தான் போர்க்குற்றங்கள் என அழைக்கப்படுகிறது. இதனையே இனப்படுகொலை என அழைக்கப்படுகிறது. மக்களை முழுவதுமாக அல்லது பகுதியாக அழிப்பதாக முடிவுசெய்வதனையே இனப்படுகொலை என அழைக்கப்படுகிறது.

கடவுளே, இந்நாட்டின் எதிர்காலச் சந்ததி இந்தக் கலாச்சாரத்தையே தங்களின் முதுசமாகப் பெற்றுக்கொள்ளப் போகிறது. அதற்கு இடமளிக்கக்கூடாது. இந்தச் சபையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கிற மூத்த உறுப்பினர்களை நான் இனவாதி என்று கூறமாட்டேன். ஆனால் இன்று பாதுகாப்பு மற்று பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக நியமனங்கள் பெற்றவர்கள் விடயத்தில் அவ்வாறு கூறமுடியாதுள்ளது.

நீங்கள் இதனை முழுநாட்டுக்குமான பாதுகாப்பு அமைச்சு எனக் குறிப்பிடுகிறீர்கள். பாதுகாப்பு அமைச்சில் 20 பிரிவுகள் உள்ளன அவற்றுள் 16 வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. ஆறு தலைமைப் பணியகங்கள் உள்ளன. அவற்றுள் நான்கு வடக்குகிழக்கில் அமைக்கப்பட்டுள்ளன. யாருடைய பாதுகாப்புக்காக இவ்வாறு நடைபெறுகிறது? யார் உங்களது எதிரி? வீடுதலைப்புலிகள் தான் உங்களது எதிரிகள் என்றீர்கள். ஆனால் தமிழ் மக்களையே நீங்கள் ஒடுக்குகிறீர்கள். அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் இதனையே தெரியப்படுத்துகிறீர்கள்.

கடவுளின் பேரில் இது பற்றி மீளச் சிந்தியுங்கள். இன்றைக்கு நீங்கள் முன்மாதிரியாக காட்டுகிற விடயங்கள் இந்த நாட்டை சாபத்திற்கு உள்ளாக்கப் போகிறது. நீங்கள் எங்களை அழிக்க முடியும். ஆனால் நீங்கள் உங்களையும் சேர்த்து அழித்தொழிக்கப் போகிறீர்கள்.

இவ்வாறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகையில், நேற்று தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று முஸ்லீம்கள் பாதிப்பிற்கு உள்ளாகுகிறார்கள். நாளை உங்களது சொந்த இனத்திற்கு இது நடக்கும். உங்களுக்கு போட்டியானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்களிற்கு எதிராக இவ்வாறுதான் நடந்து கொள்வீர்கள். இது கீழ்நோக்கிச் செல்லும் சுருள் போன்றது. இங்குள்ள உறுப்பினர்கள், பின்வரிசையிலிருந்து குழப்பம் விளைவிப்பவர்களை நான் குறிப்பிடவில்லை, இந்த அவையிலிருக்கு மூத்த உறுப்பினர்கள் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பார்களேயானால் இந்த நாடே நாசமாகும். அதனை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

நான் திரும்பத் திரும்பக் கூறிவருகிறேன். நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். எனது நண்பர்கள் சிங்களவர்கள். நான் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்தவன். 1983ம் ஆண்டு இனவன்முறையின்போது ஜனாதிபதி சட்டத்தரணி ஆனந்த விஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி கோசல விஜயதிலக, திரு.ஸ்ரான்லி வில்லியம்ஸ் போன்றவர்களே எங்களைக் காப்பாற்றினார்கள். அவ்வாறான மனிதர்களையே எனக்குத் தெரியும். பத்துவருடங்களுக்கு முன் இச்சபையின் உறுப்பினராக வந்தபோது, விடுதலைப்புலிகள் இருந்தபோதுகூட இவ்வவையில் இவ்வாறான கலாச்சாரம் இருக்கவில்லை. சக உறுப்பினரகள் கூறுகிற கருத்துகளை ஏற்றுக்கொள்ளவிட்டாலும், நடத்தப்படும் உரைகளை கிரகிக்க விரும்புவர்களாகவும், கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவர்களாகவும் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த சீரழிந்த நிலைமக்குத் தான் இந்த நாடு வந்திருக்கிறது.

தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம்.

எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என்றார்.

கஜேந்திரகுமார் உரையாற்றிய போது அமைச்சர் சரத் வீரசேகர, எதிரணி எம்.பி சரத் பொன்சேகா தொடர்ந்து குறுக்கிட்டனர். சரத் வீரசேகரவிற்கு பதிலளித்த கஜேந்திரகுமார்- நான் சொல்வதை நீங்கள் ஏற்கவில்லை. பொய் என்கிறீர்கள். நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. பொய் என்கிறேன். அதனால்தான் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணைக்கு செல்வோம் என்கிறேன். அதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?“ என கேள்வியெழுப்பினார்

 

 

http://www.samakalam.com/செய்திகள்/அழிவு-கலாசாரத்தை-அடுத்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.