Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவின் இருகளப் போர் – கலாநிதி அமீரலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவின் இருகளப் போர் – கலாநிதி அமீரலி

 
  • கலாநிதி அமீரலி

Dr.Ameer-Ali-2.jpgர்வதேச நாணய நிதி தொடக்கம் உலக வங்கி ஊடாக உலக நாடுகளின் நிதி நிலைமைகளைப் பற்றிக் கண்காணிக்கும் பல உலகளாவிய இராட்சத நிறுவனங்கள் வரை எல்லாமே, ஒன்றன்பின் ஒன்றாக, இலங்கையின் கடன்பளு ஆபத்தான ஒரு நிலைக்கு அந்நாட்டின் பொருளாதாரத்தை வளரமுடியாமல் தடுக்கிறதென்றும் இந்த வருடக் கொள்ளை நோயால் ஏற்பட்ட மந்த நிலையிலிருந்து இலகுவாக மீழ்வது கடினமென்றும் இடையறாது எச்சரித்து வருகின்றன. அத்துடன் அவ்வாறு மீழ்வதற்குரிய பொருளாதார மாற்று மருந்துகள் கசப்பானவை எனினும் அவற்றைத் துணிந்து கையாளாகாதவரை பொருளாதாரப்பிணி தீராதென்றும் அவை மேலும் வலியுறுத்துகின்றன. ஆனால் இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சும் அந்த எச்சரிக்கைகளை மேற்கு வல்லரசுகளின் எடுபிடிகளான ஒருசில நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சி நாடகத்தின் ஓர் அங்கமென உதறித்தள்ளி நாட்டின் பொருளாதாரக் கஷ்டங்களுக்குப் பொன்மூலாம் பூசுகின்றனர். உண்மையிலேயே நாடகமாடுவது இவர்களா உலக நிதி நிறுவனங்களா?

gota-660.pngநாட்டுப்பற்றுள்ள எந்த ஒரு குடிமகனும் தனது நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே குறைத்துப்பேசி அதனைச் சீரழியவேண்டுமென்று விரும்ப மாட்டான். மாறாக, அது வளரவேண்டும், செழிப்படைய வேண்டும் என்பதையே விரும்புவான். ஏனெனில் அதன் செழிப்பிலேதான் அவனுடைய செழிப்பும் பிணைந்துள்ளது. ஆனால் உண்மையை ஒருவர் கூறும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் பாசாங்கு செய்வது ஆபத்தானது. அதைத்தான் ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்துகொண்டிருக்கின்றனர். தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது.

பொதுமக்களிடையே அரசியல் செல்வாக்குப் பெறுவதற்காக, கண்மூடித்தனமான வரிச்சலுகைகளை தொழில் அதிபர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் வழங்கி, தன்னிறைவு என்ற பெயரில் இறக்குமதிகளைக் குறைத்து அதனால் வரும் இறக்குமதி வரி வருமானத்தையும் இழந்து, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாட்டை உண்டுபண்ணி அதனால் விலைவாசியை அதிகரிக்கச் செய்து அரசின் வருமானத்தைப் பாழாக்கி மக்களின் வாழ்க்கைச் செலவையும் உயர்த்தியவரே ஜனாதிபதி கோத்தாபய. இவையெல்லாம் கொறோனா வருவதற்கு முன்னரே நடந்தவை. கொறோனா அவற்றைத் தோற்றுவிக்கவில்லை, வலுப்படுத்தியது மட்டுமே. இன்றோ ஏற்றுமதிகளின் சந்தைச் சுருக்கமும், இறக்குமதிகளின் அவசியமும், வெளிநாட்டுக் கடன் சுமையும், அன்னியச் செலாவணி வீழ்ச்சியும், நாணய மதிப்பிறக்கமும், சேர்ந்து அரசின் நிதி நிலையை வங்குறோத்து மட்டத்துக்குத் தள்ளும் ஆபத்தையும் உண்டு பண்ணியுள்ளதால் ஏற்கனவே பட்ட கடனுக்குரிய வட்டியைக்கூட ஒழுங்காகக் கட்டுவது கடினமாகிவிடும் என்பதாலேயே மேற்கூறிய உலக நிறுவனங்கள் அரசுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகின்றன. அதனை உதாசீனஞ் செய்து வெற்றிப் பெருமிதம் பேசுவது மக்களை ஏமாற்றும் ஒரு வித்தை என்றே கூறுவேன்.

சென்ற மாதம் பிரதமரும் நிதி அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வாசித்த வரவுசெலவு அறிக்கையில் விபரிக்கப்பட்ட விரைவான பொருளாதார மீட்சிக்கான வழிவகைகளும் செயற் திட்டங்களும் செயற்படுத்தப்பட வேண்டுமாயின் அதற்குப் பாரிய அளவு நிதி வேண்டும். தற்போது உலக அரங்கிலும் உள்நாட்டிலும் நிலவுகின்ற பொருளாதாரச் சூழலில் அவர் எதிர்பார்ப்பது போல் வெளிநாட்டு மூலதனங்கள் இங்கே வந்து குவியும் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற்கனவு. மேலே சுட்டிக்காட்டப்பட்ட எச்சரிக்கைகள் இலங்கையின் நிலையைப்பற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊதப்பட்ட அபாயச்சங்கு என்பதை அவர் உணர வேண்டும்.

அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதி போன்ற ஸ்தாபனங்களின் உதவியைப் பெறவேண்டுமானால் அவை விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியே ஆகவேண்டும். அவ்வாறு இணங்கினால் அதனால் பெரிதும் பாதிக்கப்படுவோர் சாதாரண மக்களே. அது ஆட்சியாளர்களின் அரசியல் செல்வாக்குக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதனால் அந்த நிதி உதவியை வேண்டாமென இதுவரை தட்டிக்கழித்து வருகின்றனர். ஆனால் எத்தனை நாளைக்கோ இந்தத் தட்டிக்கழிப்பு? அந்த உதவியைத் தவிர்த்தால் தொடர்ந்தும் வெளிநாட்டு நாணயச்சந்தையில் வட்டிக்குக் கடன் படுவதைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் ஏற்கனவே பட்ட கடனைத் தீர்க்கத் திண்டாடும் ஒரு நாட்டுக்கு மீண்டும் கடன் வழங்கும்போது வட்டிவீதம் உயர்த்தப்படுவது உறுதி. அப்படி வட்டி உயர்ந்தாலும் பரவாயில்லை என்று கருதிக்கொண்டு கடன்பட்டால் அது நாட்டின் எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கையையே ஈடுவைப்பதற்குச் சமனாகும். அந்தக்கடனால் பொருளாதாரத்தை வேகமாக வளர்த்து விரைவில் தீர்க்கக்கூடிய வாய்ப்புகளொன்றும் இல்லாமல் வெறும் அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு கடன்படும் பொறுப்பற்ற செயலை நெடுங்காலத்தைப்பற்றிச் சிந்தியாத குறுங்கால அரசியல் தலைவர்களின் ஈனத்தனமான செயலென்று அழைப்பதில் எந்தத்தவறும் இல்லை.

இத்தனைக்கும் மத்தியில் ஆபத்து வேளையில் உதவும் நண்பன் நான் என்று சொல்லிக்கொண்டு சீனா உதவிக்கரம் நீட்டுகின்றது. எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற முது மொழியை ராஜபக்ச அரசினரும் அவர்களின் ஆலோசகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். சீனாவிடம் ஏற்கனவே பட்டகடனைத் தீர்க்க முடியாததன் காரணமாகத்தானே நல்லாட்சி அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்தது? நாட்டின் இறமையை எப்படியும் பாதுகாப்பேன் என்று வீராப்புப் பேசும் கோத்தாபய ராஜபக்ச, சீனாவின் முதலீடுகளாலும் அது வழங்கும் கடன்களாலும் இலங்கை படிப்படியாக சீனாவின் ராஜதந்திர வலைக்குள் சிக்கி ஒரு கைக்கூலி நாடாக மாறிவருவதை ஏன் உணர மறுக்கிறாரோ?

சுருக்கமாகச் சொல்லப்போனால் கோத்தாபய ஏதேச்சதிகார ஆட்சி இன்று எதிர்கொண்டிருப்பது இருகளங்களைக் கொண்ட ஒரு யுத்தம். அன்று முப்படை வீரர்களைக் கொண்டு விடுதலைப் புலிகளோடு மோதி வெற்றிகண்டதுபோல் இந்த யுத்தத்தை ஜெயிக்க முடியாது. அந்த யுத்தத்தில் பொது மக்கள் வெறும் பார்வையாளர்களாகவும் பலிக்கடாக்களாகவுமே இருந்தனர். அவர்களின் ஈடுபாடு தேவைப்படவில்லை. ஆனால் இப்பொழுது நடைபெறும் பொருளாதார யுத்தகளத்தில் அவர்களின் ஈடுபாடும் ஒன்றுபட்ட ஒத்துழைப்பும் இல்லாமல் தனியே படைவீரர்களாலும் அவர்களைத் தாங்கிய செயலணிகளாலும் வெற்றிகாண முடியாது. ஆனால் அந்த ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் சீர்குலைக்கின்றது கோத்தாபயவின் சிறுபான்மை இனங்களுக்கெதிரான அடுத்த போர்க்களம். இந்தக் களத்தைப்பற்றிச் சிறிது விளக்க வேண்டியுள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொடக்கம் இன்றுவரை பெரும்பான்மை இனத்தவரைப் பீடித்துள்ள ஒரு நோய் சிறுபான்மை இனங்களைப்பற்றிய காழ்ப்புணர்வு. இது இலங்கையில் மட்டுமல்ல, பொதுவாகவே பல்லினங்களைக் கொண்ட வளர்ச்சிபெறும் நாடுகளில் நிலவும் ஒரு யதார்த்த நிலை. இதற்கு சிங்கப்பூர் ஒரு விதிவிலக்கு எனக்கருதலாம். அன்றைய பர்மாவிலும் கென்யாவிலும் பிஜித்தீவிலும் இந்தியருக்கெதிராகத் தூண்டிவிடப்பட்ட கிளர்ச்சிகள், மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் சீனர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரங்கள், இஸ்ரவேல் நாடு உருவாகுவதற்குமுன் ஐரேப்பிய நாடுகளில் யூதர்களுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளெல்லாமே சிறுபான்மை இனத்தவரின் செழுமையைக்கண்டு பெரும்பான்மையினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணாச்சியே என்பதை கூறித்தான் ஆகவேண்டும். அதையே சுதந்திர இலங்கையின் வரலாறும் காட்டுகின்றது. இதுவரை யாரும் இதைப்பற்றிப் பேசவுமில்லை, எழுதவுமில்லை.

சுதந்திர இலங்கையின் கல்வித்துறையிலும் அரசாங்க இலாகாக்களிலும் தமிழினம் அன்று முதலிடத்தை வகித்திருந்ததை யார்தான் மறுப்பர்? தற்காலக் கல்வி மேல்நாட்டவர்களால் இங்கே புகுத்தப்பட்டபோது அதனை வாரியணைத்த முதலாவது இனம் தமிழினம். கல்வி கற்பதும் கற்றதைக் கற்பிப்பதும் அவ்வினத்தின் கைதேர்ந்த கலை. வடக்கிலே வரண்ட பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் பிரதான தொழிலாகக் கல்வி மாறியதில் வியப்பில்லை. அத்துடன் உலகத் தமிழர்களின் கலாச்சாரத்தில் கல்விக்கு இறைவனுக்கே நிகரான ஒரு தனி இடமுண்டு என்பதையும் மறத்தலாகாது. இதனால் சுதந்திர இலங்கையின் நிர்வாகத் துறைகளை நிர்வகிப்பதற்கு அவர்களிடமே திறமைசாலிகள் அன்று அதிகம் காணப்பட்டது. ஆனால் காலவோட்டத்தில் அரசியல் ஆதிக்கம் பெரும்பான்மையினரின் ஒரு பூர்வீகச் சொத்தாக மாறியவேளை பொது நிர்வாகத்தில் தாம் வகித்திருந்த முதலிடத்தை எப்படியாவது கட்டிக் காக்கவேண்டுமென்ற நோக்கில் தமிழினம் கையாண்ட சில உபாயங்கள் பெரும்பான்மையினரிடையே காழ்ப்புணர்ச்சியை மட்டுமல்லாது வெறுப்புணர்வையும் தூண்டிவிட்டது.

கல்விமூலம் போட்டிபோட்டு தமிழினம் வகித்த முதலாம் இடத்தினைக் கைப்பற்றுவதானால் அது நீண்டகாலம் எடுக்கும் என்பதை உணர்ந்த சிங்களத் தலைவர்கள் சில குறுக்கு வழிகளைக் கையாளத் தொடங்கினர். அந்த வழிகளில் ஒன்றுதான் தேசியம் என்ற போர்வையில் நாடாளுமன்னறத்தில் நிறைவேற்றப்பட்ட சிங்கள மொழி மசோதா. அதேபோன்ற இன்னொன்றுதான் 1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகப் பிரவேசப் பரீட்சைப் பெறுபேறுகளை தரப்படுத்தியமை. இப்படியான குறுக்கு வழிகளிலிருந்து விலகி ஒரு மாற்றுவழி காண்பதற்காகவே தமிழினத் தலைவர்கள் சமஷ்டி என்ற போர்வையில் தமிழரசுக்காகப் போராடத் தொடங்கினர். இது ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சியை அரசியலாக்கி, இனப் போராட்டமாக அது மாறி, ஈற்றில் ஓர் உள்நாட்டுப் போரையும் தோற்றுவித்தது. யாழ்ப்பாண மக்களின் அரும் பொக்கிஷமாக விளங்கிய பொது நூலகத்தை சிங்களச் சிப்பாய்கள் தீக்கிரையிட்டமை அம்மக்களின் கல்வி வளாச்சியினால் ஏற்பட்ட காழ்ப்புணர்வினால் என்று கூறின் அது மிகையாகாது.

அதே காழ்ப்புணர்ச்சியே இன்று முஸ்லிம்களுக் கெதிராகவும் பெரும்பான்மையினரைத் தூண்டிவிட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் தற்காலக் கல்வியை காலம் தாழ்த்தியே வரவேற்கத் தொடங்கிய ஓர் இனம். அவர்கள் வர்த்தகத்தையே பெரும்பாலும் நம்பி வாழ்க்கை நடத்தும் ஒரு சமுதாயம். அத்துடன் தென்கிழக்கிலே வாழும் முஸ்லிம்கள் நெற்பயிர் விவசாயத்திலும் முன்னிலையில் நிற்கின்றனர். இவ்விரண்டு துறைகளிலும் அவர்களின் உழைப்பு அயராதது. தாவள வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஊருராகத் திரிந்தும், அங்காடித் தெருக்களில் நின்று வெய்யிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும் பல தியாகங்களின் மத்தியில் பணம் சம்பாதித்து குடும்பப் பாரங்களைத் தாங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகளுள் ஒரு சிலர் பட்டினங்களில் பெரும் வர்த்தகர்களாக மிளிர்கின்றனர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இது அவர்களின் ஓயாத உழைப்பின் வெற்றி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வெற்றியைப் பொறுக்க முடியாததனாலேயே சிங்கள பௌத்த இனவாதிகள் முஸ்லிம் வியாபாரிகளுக்கெதிராக கடைபகிஷ்கரிப்பு இயக்கத்தை அவிழ்த்து விட்டனர். முஸ்லிம்களின் கடைகளை எரித்தனர். தென்கிழக்கு முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் கோத்தாபயவின் அகழ்வாராய்ச்சிச் செயலணி ஈடுபட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

அவ்வினவாதிகளின் தலைவர்கள் கொறோனாவால் மரணித்த முஸ்லிம்களைத் தகனம் செய்ய வேண்டுமென விடாப்பிடியாக நிற்பதும் இந்தக் காழ்ப்புணர்வின் இன்னொரு பக்கமே.

எத்தனை திறமைசாலிகளைத்தான் ஒரு சமூகம் பெற்றிருந்தாலும் எவ்வளவுதான் கல்வியில் உயர்ச்சி அடைந்திருந்தாலும் ஒரு தமிழனின் வெற்றிக்குப் பின்னால் ஓராயிரம் தமிழரின் தோல்வியும் உண்டு. அதே போன்று ஒரு பிரபல வர்த்தகனின் வெற்றிக்குப் பின்னால் ஓராயிரம் ஏழை முஸ்லிம்களின் தோல்வியும் உண்டு. இந்தத் தோல்விகளும் அவற்றின் சோகக் கதைகளும் பெரும்பான்மையினரின் கண்களிற் படுவதுமில்லை, காதுகளுக்குக் கேட்பதும் இல்லை.

சிறுபான்மையினருக்குள்ளேயே செழிப்புடன் வாழுகின்ற ஒரு சிறுபான்மையினரைக் கண்டு வளர்ந்த காழ்ப்புணர்வை அடிப்படையாகக்கொண்டு உருவாகியதே இலங்கையின் இனவாதமும் மதவாதமும். அதையே ஓரு வெற்றித் துரும்பாகப் பாவித்து ஆட்சிபீடம் ஏறிய கதைதான் கோத்தாபயவின் ஏதேச்சதிகாரம். சிறுபான்மை இனங்களிரண்டையும் அடக்கி ஒடுக்குவதே அந்த ஆட்சியின் இரண்டாவது போர்க்களமாக இப்போது காணப்படுகிறது.

ஒரு கோடியில் நலிவடையும் பொருளாதாரத்திற் கெதிரான போராட்டம். மறு கோடியில் சிறுபான்மையினரை நசுக்குவதற்காக நடைபெறும் போராட்டம். பொருளாதாரக் களத்திலும் சிறுபான்மையினர் களத்திலும் ஒரே நேரத்தில் நடைபெறும் கோத்தாபயப் போரின் அரசியல் தந்திரம் என்ன? பொருளாதாரக் களத்தில் அவரின் தோல்வி நாளுக்குநாள் உறுதியாகின்றது. அதனால் பொது மக்களின் கசப்புணர்வும் அதிகரிக்கின்றது. எல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியுமா? இருந்தும் பொருளாதாரக் கஷ்டங்களால் பொங்கியெழும் கசப்புணர்வை மட்டுப்படுத்துவதற்கு சிறுபான்மை இனங்களை ஒடுக்கி அவர்களின் வளங்களையும் பிடுங்கி பெரும்பான்மையினருக்கு வழங்குவது ஒரு சிறந்த உபாயமாக அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தோன்றுகின்றது.

இந்தக் குறுகிய நோக்கினாலேயே தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசு மறுப்பதும், முஸ்லிம்களின் இழப்புகளைப்பற்றிப் பாராமுகமாக இருப்பதும். இந்தத் தந்திரத்தை பெரும்பான்மையினரின் புத்திஜீவிகளும் அவர்களைக் கொண்ட சிவில் அமைப்புகளும் உணராமலில்லை. அந்தப் புத்திஜீவிகனோடும் அவர்களின் அமைப்புகளுடனும் சிறுபான்மை இனங்களிரண்டும் கைகோர்த்து ஒரு புதிய பாதையில் நடைபோடும்வரை தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கையில் விடிவில்லை. மக்களைப் பிரித்தாள நினைக்கும் கோத்தாபய ஆட்சி பொருளாதாரத்தையும் வளர்க்காது, இன ஒற்றுமையையும் ஏற்படுத்தாது. சர்வதேச அமைப்புகள் இதனை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

கட்டுரையாளர் – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா 

 

https://thinakkural.lk/article/97997

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.