Jump to content

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது...

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.

நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர்.

- வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.

"ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.

வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது.

"பை... பை..."

"ஸீ யூ!"

"சீரியோ!"

- கண்டக்டரின் விசில் சப்தம்.

அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.

பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.

மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.

வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.

அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.

பஸ்ஸைக் காணோம்!

அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.

எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.

பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.

"ஹேய்... இட் இஸ் மை பஸ்!..." அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கிறாள்.

"பை... பை..."

"டாடா!"

கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து 'பிரஸ் பட்டன்' வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... 'இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்' என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்...

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களூம் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்...

"பஸ் வரலியே; மணி என்ன?" என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.

"ஸிக்ஸ் ஆகப் போறதுடீ" என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், "அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்" என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.

"ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்" என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி...

"சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ" என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.

பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.

"பை... பை!"

"தாங்க் யூ! என் பஸ்ஸீம் வந்துடுத்து" என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸீக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களூம் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.

அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.

அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட்வரை விழிகளை ஓட்டி ஓர் ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.

அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.

"ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்" என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.

அவனது முகத்தைப் பார்த்த அவளூக்குக் காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; "நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு... மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..."

"ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்" என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...

அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்.

இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே...

"ம்... கெட் இன்."

இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...

அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.

அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.

'ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்' என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளூக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.

"இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?... ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இதுமேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு 'ஜம்'னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹீம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!"

- "அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்" அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.

அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் 'பவரை வேஸ்ட் பண்ணப்படாது' என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.

பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.

'ஹம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே' என்று மனத்திற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - 'டப்' என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - 'அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே'- ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.

"தாங்ஸ்" - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - 'அப்பா, என்ன வாசனை!' - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.

ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் 'அம்மா'' என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களூம் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸீம் ஒரு பக்கம் உருளுகிறது.

"ஸாரி" என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.

ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.

தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...!

"இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?"

"ஓ! எங்க வீடு அங்கே இருக்கு" என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.

"இருக்கட்டுமே, யார் இல்லேன்னா" என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.

"என்னடி இது வம்பாப் போச்சு" என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.

கார் போய்க்கொண்டே இருக்கிறது.

நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.

சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.

தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளூம் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ."

'நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?... இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது... அழுதா இவர் கோபித்துக் கொண்டு 'அசடே! இங்கேயே கிட'ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே... நாளைக்கு ஜீவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணணுமே! வேலை நிறைய இருக்கு.'

அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் 'வைய்ப்பரை'யே வெறித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டு விடுகிறாள்.

"இப்ப நாம எங்கே போறோம்" - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.

"எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்..."

"நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா..."

"ஓ எஸ் திரும்பிடலாம்"

- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைத்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.

காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.

திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: "ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டெளனா?"

அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடிஇடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.

அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.

அப்போது ரேடியோவிலிருந்து ஒரு 'ட்ரம்ப்பட்'டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ 'ட்ரம்'களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி 'உனக்குப் பிடிக்கிறதா' என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் 'ஆம்' என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.

ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு 'காட்பரீஸ்' சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.

அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, 'ஒட்டு உசரமாய்'. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.

"ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!" சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.

காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.

"எங்கே?" என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. "எங்கே போறீங்க?"

"எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்" என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.

அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.

"என்ன அது?"

"சூயிங்கம்."

"ஐயே, எனக்கு வேண்டாம்!"

"ட்ரை... யூ வில் லைக் இட்."

அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.

"நோ!" - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.

அவளூக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறான்: "தாங்க் யூ!"

அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.

அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கெளரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.

"டூ யூ லைக் திஸ் கார்?" "- இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: "ஓ! இட் இஸ் நைஸ்."

அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: "உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?" என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.

"ரியலி...?"

"ரியலி!"

அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. "டூ யூ லைக் மீ?" 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?'

"ம்" விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.

வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.

"ரொம்ப நல்லா இருக்கு இல்லே?" - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.

"நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே..."

"பயமா? எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?" அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: "எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு..."

"எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்?" என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.

"மே ஐ கிஸ் யூ?"

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.

திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...

அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.

வெளியே...

வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!

ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.

"நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா..."

காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷீஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.

உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மெளனமாக அழுது கொண்டிருக்கிறாள்.

முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு 'சூயிங்கம்'மை மென்று கொண்டிருக்கிறான்.

இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு 'ஹோ' வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.

அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளூக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட - அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே...

நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெறியேறிப் பிளிறுகிறதே...

அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். "என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?"

அவனது கை "டப்" என்று ரேடியோவை நிறுத்துகிறது.

"டோண்ட் ஷவ்ட் லைக் தட்!" அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். "கத்தாதே!"

அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். "எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களூக்குக் கோடிப் புண்ணியம்" என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் "என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே" என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.

"ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்" என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்...

அந்த இருண்ட சாலையில் கண்களைக் கூசவைக்கும் ஓளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.

"சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!" அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். "ஐ ஆம் ஸாரி... உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்."

...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.

இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.

சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களூம் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

'இங்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்' என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். "வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு... ம்" அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்று கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.

அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய்க் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.

"ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!" என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: "ஐ ஆம் ஸாரி!"

அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ! அந்தப் பார்வை!

அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. "என்ன..." என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.

"ஒண்ணுமில்லே" என்று கூறி அவள் நகர்கிறாள்.

அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.

கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.

மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: "என்னடி இது,

அலங்கோலம்?"

அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். "அம்மா!" என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!

அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்து விட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.

"என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு" தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: "ஏன்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு"

தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.

அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். "மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது... நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து... ஐயோ! அம்மா... அவன் என்னெ..."

- அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.

"அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..." என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.

அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.

"என்னடி, என்ன விஷயம்?" என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.

"ஒண்ணுமில்லை, இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிரிருப்பான்" என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.

"சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?" பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.

வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக் குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா...

'இவளை என்ன செய்யலாம்?... ஒரு கெளரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?... தெய்வமே! நான் என்ன செய்வேன்?' என்று திரும்பிப் பார்த்தாள்.

அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்று கொண்டிருந்தன...

'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன' என்று தோன்றிற்று.

- அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது...

'அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?'

'ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?' அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.

நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு "ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்" என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்...

"அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்" என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். 'என் தலையெழுத்தே' என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

'இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!' என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!

பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.

குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: "உனக்கு அவனைத் தெரியுமோ?..."

"ம்ஹீம்..."

"அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!"

- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.

'ம்... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்' - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.

ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். 'அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?'

"இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!" என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். "நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்லே. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பாக்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஓண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு... நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி.... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாததுளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..."

கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.

"அதென்ன வாயிலே 'சவக் சவக்'ன்னு மெல்லறே?"

"சூயிங்கம்."

"கருமத்தைத் துப்பு... சீ! துப்புடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா" என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.

சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை "கொழந்தே, 'எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு'ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வயசுக்கு வந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கிற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்" ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: "சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..."

"பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ" என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.

அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல, அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.

அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.

(எழுதப்பட்ட காலம்: 1966)

நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994

மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1

http://www.tamilnation.org/literature/mode...yakantan/18.htm

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரும் அதிர்ச்சியை தமிழ் எழுத்துலகத்தில் ஏற்படுத்தியிருந்தது இந்தச் சிறுகதை.. 40 வருடங்கள் கழிந்தபின்னும் முதன்முதலாய் வாசிப்பவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.

இந்தச் சிறுகதையின் விரிவாக "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்தையும் ஜெயகாந்தான் படைத்திருந்தார். அதைப் படமாக எடுத்தபோது (லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்கள்). எனினும் படத்தின் முடிவும் கதையின் முடிவும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிலநேரங்களில் சிலமனிதர்கள் கூட சுவாரசியம் குன்றாமல் நன்றாகவே போகும்.

ஆனால் என் கருத்தென்னவென்றால், ஜெயகாந்தன் சிறுகதையோடே நிறுத்தியிருக்கலாம், அதை நீட்டி முழக்கி பெரியதொரு நாவலாக்கியிருக்கத் தேவையில்லை.

சிறுகதையின்பின் என்ன நடந்தது என்பதைத்தான் நாவலாக்கியிருந்தார். நல்லவேளை, அந்த நாவலுக்குப்பின் என்ன நடந்ததென்று அடுத்த நாவலை இதுவரை படைக்கவில்லை. இப்போது அவரிருக்கும் நிலையில் அப்படியொரு நாவல் வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் அளவுக்கு நாவல்கள் அதிர்ச்சி தரா. எழுத்துநடையை விட்டுப்பார்த்தால் அவரது நாவல்கள் சராசரியாகவே இருக்கும்.

யுகசந்தி சிறுகதை வாசித்திருக்கிறீர்களா?

அதுவும், எழுதப்பட்ட காலத்தோடு ஒப்பிடும்போது பெரியதொரு துணிச்சல்தான்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. யுக சந்தி - ஜெயகாந்தன்

கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.

"பாட்டி...பாட்டி' பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி."

"வண்டி வேணுங்களா அம்மா?"

"புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம்" ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:

"எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.

பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?...

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?

தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.

வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.

அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.

"என்னப்பனே மகாதேவா" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.

பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.

பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌித் தெரிந்தது.

---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது.....

பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்.

"பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான்.

"யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.

"ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்."

"நல்லாயிருக்கட்டும்....பகவான

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்கள் ஒன்றையும் காணோம்.. :)

நம்மவர்களில் பலருக்குத் தமிழ் இலக்கியங்களில் அவ்வளவு பரிச்சயமில்லைப் போலுள்ளது.. அல்லது நீண்ட சிறுகதைகளை வாசிக்க நேரமில்லையோ தெரியவில்லை. எனினும் பலருக்கு இலக்கியம் படைப்பதில் உள்ள ஆர்வத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை. அண்மையில் கூட ஒரு புலம் பெயர் எழுத்தாளர் தான் பல நவீன தமிழ் புத்தகங்களைக் கேள்விப்பட்டதில்லை அல்லது பார்த்ததில்லை என்று எழுதியிருந்தார். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் பன்முக வாசிப்புப் பழக்கத்தை முதலில் ஏற்படுத்தவேண்டும். இல்லாவிடில் "அரைத்த மாவையே" திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.

காந்தியின் பொன்மொழி ஒன்று (மில்க்வைற் கனகராஜாவின் புண்ணியத்தில்) ஞாபகத்திற்கு வருகின்றது.

"வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான்"

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான்  சொன்னதையே செய்கிறீர்கள். எனவே தொடர்வதில் அர்த்தமும் இல்லை. (ஆயினும், நீங்கள் சொன்னவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை, அதாவது உந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.) 
    • நான் வேறு யோசித்தேன்  இத்தனை மணித்தியாலம் இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தின் போது இடைநடுவில் ஏதாவது நடந்தால் சமுத்திரத்தின் நடுவில்......?
    • எனக்கு ஏற்பட்டுள்ள நேர வசதி இன்மையால் எழுத்தாவணங்கள் படைப்பதை இந்தாண்டு முடிவுடன் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆயினும் அவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்த மட்டும் செய்வேன். எனினும் படிமங்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவேன். இதற்கு முதல் - நான் செய்ய வேண்டும் என்று எனது மனதில் எண்ணி வைத்திருந்த அத்தனை ஆவணத் தலைப்புகளையும் அதனை செய்ய வேண்டிய முறை மற்றும் தகவல் திரட்டும் வழி ஆகியவற்றை நான் இங்கே எழுதி வைத்துச் செல்கிறேன். என்பின் அதனை செய்ய எண்ணுவோர் இதனை வாசித்து இதில் வழிகாட்டப்பட்டுள்ளவாறோ அல்லது அதை விட மேம்பட்ட முறையிலோ  ஆவணத்தை படையுங்கள். எவர் குத்தினும் அரசியானால் சரியே! இந்த வழிகாட்டல்கள் யாவும் உரையாடல் முறையில் அறிவுறுத்தலாக எழுதப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செய்ய விரும்புவோர் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதுகிறோம் என்ற எண்ணத்தோடு சிரத்தை எடுத்துச் செய்யுங்கள்.   1) அணிநடை உடை: புலிகளின் படைத்துறையின் அனைத்துக் கிளைகளும் அணிநடையின் போது தமது படையணி/ பிரிவு/ படை/ அணி - யிற்கான நிறங்களைக் கொண்ட இடைப்பட்டிகள், கழுத்துக்குட்டை, வரைகவி, வரித்தோல் கொண்ட நெடுஞ்சப்பாத்து (படைத்துறைக் கிளையின் வரியின் நிறத்தில் இருக்கும். சிறுத்தைப்படையினரும் தம் சீருடையின் பாணியில் அணிந்திருப்பர்.) ஆகியவற்றை அணிந்திருப்பர். சிறுத்தைப்படையின் மூவணிகளும் கூடுதலாக "கத்தி" ஒன்றினை பளுவில் கொண்டிருப்பர்.  இதனை நீங்கள் ஆவணப்படுத்தும் போது இரண்டாம், மூன்றாம், நான்காம் ஈழப்போர் என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆவணப்படுத்தல் வேண்டும். அப்போதுதான் படிமுறை வளர்ச்சியினை நோக்க இயலும். எதிர்கால ஆராச்சிகளுக்கும் வரலாறு திரித்தலை தவிர்ப்பதற்கும் உதவிகரமாக இருக்கும். இதற்கான தகவல்களை புலிகளின் படிமங்களை உற்று ஆராயுமிடத்தில் கண்டெடுக்கலாம். அதற்கு நீங்கள் யாழில் நான் ஆவணப்படுத்தியுள்ள படிம ஆவணங்களை பாவிக்கலாம்.     2) ஈழப்போரில் அழிக்கப்பட்ட சிங்கள வானூர்திகள் இதனை நீங்கள் செய்யும் போது ஆண்டுகள் அடிப்படையில் செய்யுங்கள். போர் அடிப்படையில் செய்வது உகந்ததன்றென்பது எனது கருத்தாகும்; ஒவ்வொரு ஆண்டும் வானூர்திகள் அழிக்கப்பட்டும் சேதமடையச் செய்யப்பட்டும் வந்தன. எனவே ஆண்டுகள் அடிப்படையில் செய்வதே உகந்ததாகும். இதற்கான ஆவணப்படுத்தல் பாணிக்கான எண்ணக்கரு வேண்டுமெனில் - நான் இதே போன்று சிங்களவரினதும் சிறிலங்காச் சார்புக் கடற்கலங்களுக்கும் செய்த கீழுள்ள ஆவணத்தை ஒருதடவை காணவும். அதனைக் காணுமிடத்து உங்களுக்கு கண்டிப்பாக ஒரு எண்ணக்கரு தோன்றும். இந்த வானூர்திகள் பற்றிய தகவல்களை புலிகளின் ஏடுகள், தமிழ்நெற், புதினம், உதயன் (தனியார் ஏடுகளில் இதை மட்டும் பாவிக்கவும்) ஆகியவற்றிலிருந்து திரட்டலாம். மேலதிக தகவல்களுக்கு சண்டே ரைம்ஸையும் வாசித்தறியலாம் (அப்போது ஒன்றிற்கு இரண்டு தடவை கவனமாக வாசித்தல் வேண்டும்.). சிங்களவரால் கைப்பற்றப்பட்ட கிடைக்கப்பெற்ற செலுத்திக் கோதுகள் யாவும் இரத்மலானை வானூர்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.    3) சிங்களக் குடியேற்றம்  1948 தொட்டு ஒவ்வொரு நாளும் தமிழீழத்தின் எந்தெந்தப் பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேர்த்திருத்தல் வேண்டும். ஆதாரங்களை சேர்க்கும் போது IEEE பணியில் செய்தல் வேண்டும். அதுவே இது போன்ற சிக்கலுக்குரிய முக்கிய ஆவணங்களுக்கு சிறந்த முறையாகும். இதை செய்வதால் நாம் எவ்வளவு நிலப்பரப்பினை இழந்துவந்துள்ளோம் என்பதை எம்மால் நோக்க இயலுவதோடு எமது எதிர்கால தலைமுறைக்கு எமது கடந்த கால தலைமுறை வாழ்ந்த நிலங்களை அறியவும் அவர்கள் அத்தீவின் ஆதிக்குடிகளாக இருந்து எப்படி விரப்பட்டார்கள் என்பதை பறைசாற்றவும் இது உதவும். ஆவணப்படுத்தும் போது சேர்த்திருக்க வேண்டியவை:  எந்தத் திட்டத்தின் அடிப்படையில் குடியேற்றம் நிகழ்ந்தது பாதிக்கப்பட்ட ஊரின் அன்றை தமிழ்ப் பெயரும் தற்போதைய சிங்கள மொழிப் பெயரும் நாள் & நேரம் எத்தனை பேர் முதலில் குடியேற்றப்பட்டனர் நிகழ்வு விரிப்பு (இங்கு  பாணியில் ஆதாரங்கள் சேர்த்திருத்தல் இன்றியமையாததொன்றாகும்) படிமங்கள் குடியேற்றத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்கள், வன்புணர்ப்பட்ட தமிழ்ப்பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை  இதால் பாதிக்கப்பட்ட அயல் தமிழ் ஊர்கள் விரட்டப்பட்ட தமிழர்கள் எங்கெல்லாம் ஏதிலிகளாக சென்றனர் ஆதாரங்கள்   4) தமிழீழ நடைமுறையரசிற்குட்பட்ட ஆட்புலங்கள்: ஒவ்வொரு ஈழப்போரிலும் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட ஆட்புலங்களை (மீட்டு தமது ஆளுகைக்குள் வைத்திருந்த நிலப்பரப்பு) சரியாக ஆவணப்படுத்தல் வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை என்பதை நான் நன்கறிவேன். இருந்தாலும் நாம் இதை செய்வதால் - புலிகளுக்குப் பின்னான காலத்தில் சிங்களக் குடியேற்றத்தால் ஒரு ஊர் பாதிக்கப்பட்டு அங்கு எமது தேசத்தவர் வாழ்ந்ததிற்கான சுவடே இல்லாமல் போயிருப்பினும் முன்னாளில் புலிகளின் ஆட்சிக்குட்பட்டதென்பதாவது வரலாற்றிலிருக்கும், குறிப்பாக எல்லையோர சிற்றூர்கள். இதைச் செய்யும் போது அவ்வூர் எச்சமரால் மீட்கப்பட்டது என்பதையும், அச்சமரில் மாவீரரானோர் எத்தனை பேர் (ஏலுமெனில் அவர்தம் தரநிலையுடனான இயக்கப்பெயர்) என்பதெல்லாம் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் அது எத்தனை ஆண்டுகள் எம்மவரின் கட்டுப்பட்டிற்குள் இருந்தது, பின்னர் மீளவும் எப்போது வன்வளைக்கப்பட்டது, அதன் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன என்பதெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும். சில வேளைகளில் அது மீளவும் மீட்கப்பட்டிருக்கும் (ஓயாத அலைகள் மூன்று ஐந்து கட்டங்களாக சுழன்றடித்த போது இடிமுழக்கம், சூரிய கதிர் - 1, உண்மை வெற்றி - 1,2,3 , வெற்றியுறுதி, போர்முழக்கம்- 1,2,3,4,5 , நீர்சிந்து - 1,2 போன்ற படைய நடவடிக்கைகள் மூலம் சிங்களவரால் வன்வளைக்கப்பட்ட தமிழூர்கள் எல்லாம் மீட்கப்பட்டன. இவற்றில் சில அடைகல் என்று பெயர் சூட்டப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்லளவரால் மீளவும் வன்வளைக்கப்பட்டன.)   5) புலிகளின் தரை வழி வலிதாக்குதல்கள் மற்றும் வலுவெதிர்ப்புகள் இதை மூன்றாகப் பிரிக்கவும். ஒன்று கரந்தடித் தாக்குதல்கள் எனவும் மற்றையது புலனாய்வு நடவடிக்கைகள் எனவும் மற்றையதை மரபுவழி வலிதாக்குதல்கள் (offenses) மற்றும் வலுவெதிர்ப்புகள் (defenses) என்றும் பிரித்து ஆவணப்படுத்தவும். ஏறத்தாழ முற்றாக ஆவணப்படுத்துவதென்பது ஏலாத விடையம் என்று எண்ணுகிறேன். இருப்பினும் முயன்றால் எதுவும் முடியும் என்பதை மனதில் நிறுத்தி இந்த வரலாற்றை ஆவணப்படுத்ததும். முயற்சியாளர்களால் கண்டிப்பாக முடியும்.    6) மூழ்கடிக்கப்பட்ட & சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் கடற்புலிகளின் கடற்கலங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற சமர்களில் மூழ்கடிக்கப்பட்ட மற்றும் சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் கடற்புலிகளின் கடற்கலங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். அதில் எமது கலங்கள் (ஆழிக்கப்பல்கள், சண்டைப் படகுகள், வழங்கல் படகுகள், இடியன்கள்) சேதப்பட்டிருந்தாலோ அல்லது மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ மட்டும் அந்தச் சமர் தொடர்பில் ஆவணப்படுத்தவும். மற்றும்படி அது தேவையற்றதாகும், இத்தலைப்பைப் பொறுத்த மட்டில். மேலும், மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆழிக்கப்பல்களை மட்டும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன். தேவைப்படின் இதையெடுத்து மென்மேலும் விரிவாக்குங்கள்.     7) கடற்சமர்கள் இதற்குள் சிங்களவருடன் எமது கடற்புலிகளும் கடற்புறாக்களும் பொருதிய கடற்சமர்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். நான் ஏறத்தாழ 85% விழுக்காட்டை "புலிகளால் தாக்கப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள்" என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளேன். அதற்குள் ஒரு கடற்சமரில் சிங்களவரின் கடற்கலமொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டிருந்தாலோ அந்தச் சமர் தொடர்பாக என்னால் திரட்டக்கூடிய தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தியுள்ளேன். ஒரு வேளை சிங்களவருக்கு மேற்குறிப்பிட்ட இழப்புகள் ஏற்படவில்லையெனில் அச்சமரை நான் ஆவணப்படுத்தவில்லை.  ஆகவே இதைச் செய்ய விரும்புவோர் நான் விட்டதெல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். பின்னர் என்னுடையதையும் உங்களுடையதையும் ஒன்றாக்கி "தமிழீழக் கடற்சமர்கள்" என்ற பெயரில் வெளியிடுங்கள், தனி ஆவணமாக. அதற்குள் மூழ்கடிக்கப்பட்ட எம்மவரின் கலங்கள் தொடர்பான தகவல்களும் இருத்தல் நன்றாகும்.   😎 சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்களின் செய்திகள் யாவும் உதயன் நாளேட்டிற்குள்ளும் ஈழநாதம் நாளேட்டிற்குள்ளும் உள்ளன (1990 ஜூன் முதல் செப்டெம்பர் வரை). அவற்றை நீங்கள் தேடியெடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.   9) சேகரிக்கப்பட வேண்டிய திரைப்படங்கள் :  அக்கினிப் பறவைகள் பாகம் - 1,2 (2003, 2004 ம் ஆண்டு முறையே வெளியிடப்பட்டது)   10) சேகரிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் :  வன்னிச் சமர்க்களம் இது தமிழீழ வரலாற்றில் மிகவும் முதன்மை வாய்ந்த புத்தகமாகும். ஜெயசிக்குறுயில் இருந்து ஓயாத அலைகள் மூன்றின் ஐந்து கட்டங்களையும் தாண்டி தென்மராட்சியிலிருந்து புலிகள் வெளியேறும் வரையிலான அத்தனை சமர்களங்களினதும் அச்சொட்டான முழு விரிப்பினைக் கொண்ட புத்தகம்! இது 900 சொச்சம் பக்கங்களைக் கொண்டது ஆகும். போரும் வாழ்வும் போராளிகளை பொதுமக்கள் தம் சிறகுகளினுள் வைத்து எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதை பற்றிய புத்தகம் இது. திகிலும் திரிலும் இது ஆனையிறவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்துப் போரளிகளினது பயணப் பட்டறிவுகள் பற்றிய புத்தகமாகும். இப்புத்தகம் எழுதிய போது எழுத்தாசிரியரும் போராளிகளோடே பயணம் செய்தார். அப்போது தன்னால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு செல்லும்படி கூறிய ஒரு தேசப்பாற்றாளர் இவராவார். இப்புத்தகத்தில் பிரதேசவாதத்தை இவர் விதைத்தார் என்றும் இவர்மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கிழக்குப் போர்முனை தென் தமிழீழச் சமர்க்களங்கள் பற்றியவை. களத்தில் சில நிமிடங்கள்  முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் (Forward Defence Lines) நிற்கும் போராளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பட்டறிவுகளை எழுத்தில் கொண்டுவந்த நூல் இதுவாகும். மௌனப் புதைகுழிக்குள் பாகம்-2 சோனகர்களாலும் சிங்களவர்களாலும் தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டு- அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய நூல். Saitanic Force Volume 2, 3 - இந்திய வல்லூறுகள் எம்மவரிற்கிழைத்த நாசங்களை பட்டியலிடும் நூலின் பிற பகுதிகள். ஏறத்தாழ 2000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களாக வெளிவந்த நூல். இதன் முதற்பாகம் மட்டுமே இப்போது காணக்கிடைக்கிறது.   11) மீள உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்:  உதிக்கும் திசையில் உன்னத பயணம் - தலைநகரில் சிங்களப் படைத்துறை, சிங்கள மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படையினர், சிங்கள மற்றும் முஸ்லிம் காடையர்களால் தமிழர்களுக்கு ஏற்பட்ட கரூரங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் தேசத்துரோகி மாத்தையா உள்ளிட்ட வி.பு. மக்கள் முன்னணியினர் சென்று தாம் கண்டவற்றை பதிவாக்கினர். பின்னர் அதனை கட்டுரையாக வெளியிட்டனர். அதனை ஈழநாதத்தின் செய்தியாசிரியராக இருந்த - பெயர் நினைவில்லை -  பின்னாளில் புத்தகமாக்கி வெளியிட்டார். இன்று இப்புத்தகம் இல்லை. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய 1990ம் ஆண்டின் பிற்பகுதிய திருமலை மாவட்ட மக்களின் வாழ்வு பற்றிய சாட்சிகளை பதிவாக்ககொண்ட கட்டுரையிது. மீளவும் புத்த்காமாக பதிப்பிக்க வேண்டியதாகும்.  இது ஈழநாதம் நாளேட்டில் 2/11/1990 முதல் 11/12/1990 வெளிவந்துள்ளது.  இதனை நூலாக்கி விற்கும் போது நீங்கள் செய்த உழைப்பிற்கும் ஊதியமும் வரும், வரலாற்றை மீளவும் உருவாக்கியதாகவும் இருக்கும்.  மாத்தையா என்றவுடன் துரோகி எழுதியது என்று பாராமல் அதன் அதிமுக்கிய உள்ளுடுவனை எண்ணிப்பார்த்து அதை வெளிக்கொணர எத்தனிக்கவும்.  12) உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்: 1996 ஓகஸ்டிலிருந்து ஒக்டோபர் வரை வெளியான உதயன் நாளேட்டில் ஓயாத அலைகள் - 1 தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதுவொரு ஆய்வுக்கட்டுரையாகும். அதுவும் நூலக்கப்பட வேண்டியதாகும். "தமிழ் அலை" என்ற மட்டக்களப்பில் இருந்து மாதம் இருமுறை மட்டும் வெளிவந்த ஏட்டில் மட்டு-அம்பாறையில் மாவீரரான 200இற்கும் மேற்பட்ட போராளிகளின் வரலாறுகள் உள்ளன. இதனை எடுத்து நூலாக்குதல் அவசியமானதாகும். அத்தனை மாவீரரினதும் வரலாறுகளும் விடுபடக் கூடாது. மிக அரிய இதழிதுவாகும். பிரதேசவாத்தோடு ஒருநாளும் தொழிற்படாதீர்கள்.   13) உண்டாக்கப்பட வேண்டிய வலைத்தளங்கள்:   நூல்களிற்கான வலைத்தளம் ஈழத் தமிழ் தேசத்தின் வரலாற்றைக் கூறும் அத்தனை நூல்களையும் சேகரித்து அதனைக் கொண்டு ஒரு வலைத்தளத்தை உண்டாக்கவும். அதில் இந்நூல்களின் ஒரு பதிவினை போட்டு அதன் மூலம் நாம் எமது தலைமுறைகள் பிற இன மக்களிற்கு எமது போராட்டத்தின் நியாப்பாடுகளை கற்பிக்கலாம். இவ்வலைத்தளத்தை உண்டாக்கும் போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ளவும்: எந்தவொரு காலத்திலும் தலைவரின் படத்தையோ அல்லது புலிகளின் எந்தவொரு படத்தையோ இதில் வெளியிடக்கூடாது. ஏனெனில் அது புலிகளின் பரப்புரை வலைத்தளம் என்று படிமத்தை உருவாக்கி அவ்வலைத்தளத்தின் குறிக்கோளை நீர்த்துப் போகச் செய்யும். பரப்புரை வலைத்தளம் என்ற பட்டப் பெயர் கிடைக்குமானால் நாயிலும் எவரும் மதியார் என்பது நினைவிருக்கட்டும். பரப்புரைக்கான எந்தவொரு அடையாளமுமற்றதாக இருத்தல் இன்றியமையாததாகும். ஏற்கனவே உள்ள புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களின் ஒரு பக்கமாக இல்லாமலும் இருத்தல் வேண்டும் பிற புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களிற்கான கொழுவிகளையும் இதன் பக்கங்களில் கொண்டிருத்தல் கூடாது. அதாவது பரப்புரையுடானான் எத்தொடர்பும் இதற்கு இருக்கக் கூடாது. தமிழரின் அரசர்களின் சின்னங்கள், தமிழ் புலவர்களின் சின்னங்கள் என்று எமது பண்பாட்டிற்கான எந்தவொரு அடையாளங்களும் அதிலிருக்கக் கூடாது. முற்றிலும் நவீனாமாக இருத்தல் வேண்டும். இன்னும் சாலச் சொல்லப்போனால் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் சாலச் சிறந்தது.  அறிவிலித்தனமாக சிந்திக்காமல் - தலைவரின் படம் இருந்தால் தான் நல்லம் ... வள வள - எனாமல் குறிக்கோளை அடையும் பாதையைப் பற்றி சிந்திக்கவும், இதை உருவாக்க முயல்வோர்.  இதற்கான சில நூல்களை எனக்கு முன் சிலர் ஆவணப்படுத்த முயற்சித்துள்ளனர். அவர்களிடத்திலிருந்து நான் பெற்ற நூல்களை கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன். விரும்பியோர் பாவிக்கவும்: சமர்களிற்கான வலைத்தளம்: தரை, கடல், வான், மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் என்று எம்மவரின் சமர்களை மட்டும் பட்டியலிடும் வலைத்தளம் ஒன்றை உண்டாக்கவும். உண்டாக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை: இதன் முகப்பிலும் புலிகளினதோ அல்லது தலைவரினதோ படிமங்களை போடக்கூடாது. விரும்பின் எம்மவரின் நிழல் தோற்ற படிமங்கள் (மாலைக்காட்சிகளில் தெரியும் கறுப்படித்த படங்கள்) ஐ பாவிக்கலாம்.  இதுவும் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் உகந்தது. இதன் சமர்களை பட்டியலிடும் போது அச்சமர் தொடர்பான காணொளிகள் படிமங்களையும் பதிவேற்றவும், சரியாக அறிந்திருப்பின் மட்டும். அதனைப் பதிவேற்றும் போது எழிய ஈழத்தமிழ் தேசத்தைச் சார்ந்த புலி வணிகர்களுகே உரிய நாறல் குணமான படிமங்கள் மற்றும் நிகழ்படங்களுக்கு மேல் தமது வலைத்தளத்தின் பெயரையும் முத்திரையையும் தற்புகழிற்காக பதிவேற்றும் நசல் பழக்கத்தை விட்டெறியவும், தயவு கூர்ந்து!   ----------------------------------------------------------------------------     இவ்வளவுதான் நான் எனது மனதில் எண்ணியிருந்தவை. அத்தனையையும் இன்று எழுதிவிட்டேன்.  உங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரியவில்லையாயின் இது முழுமையான ஆவணமன்று என்பதை முதல் வரியில் எழுதிவிட்டு மேற்கொண்டு செல்வது உகந்ததாகும். இவற்றை எல்லாவற்றையும் வடிவாக ஆசறுதியாக ஆராய்ந்து சிறப்பாக ஆவணப்படுத்துங்கள். ஒன்றைக் கூட தவற விடாமல் செய்ய வேண்டும். கவனம் இன்றியமையாததொன்றாகும். இதனை மேற்கொண்டு வரலாறாக்கி இதைவிட இன்னும் பல வரலாற்று நூல்கள் கட்டுரைகளை எமது தலைமுறைகள் ஈழப்போர் தொடர்பில் பதிக்கும் என்று முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது.  சிறப்பாக செய்யுங்கள்.🎉   ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
    • இந்தியாவின் பினாமியாகச் செயற்படாத தலைவர் என்பது சரி. அதற்காக சுமத்திரன் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கு சும்பந்தன்>சுமத்திரன்>மாவை 3 பேரும் காரணம். சுமத்திரன் பிரதான காரணம். மாவை அவரை சுதந்திரமாக முடெிவடுக்க ஆனமதிதத்தது பிழை. ஏற்கனவே கட்சியாலும் முக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவரான சிறிதரனை தலைமையேற்று நடத்த விடுவததே சிறந்தது.
    • ஆராயுங்கள்  விவாதியுங்கள் சிரித்தபடி உங்கள் நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.