Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்!

 

spacer.png

சினிமா... கொண்டாட்டத்திற்கான ஒன்று. ரசிகர்கள் விசிலடித்து ஆடிப்பாடிக் கொண்டாடித்தீர்க்கும் இந்த சினிமா அதி அற்புதமானது. சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகன், சினிமாவிடமிருந்து என்ன எதிர்பார்ப்பான்? இரண்டரை மணி நேரத்துக்கான நேர்த்தியான என்டர்டெயின்மென்ட் மட்டும்தான். அதைக் கொடுக்க சினிமா எப்போதுமே தவறியதில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல ஜானர்களும் சினிமாவில் இருக்கிறது. ஆக்‌ஷன், காமெடி, அட்வென்சர், மியூசிக்கல், த்ரில்லர், வரலாற்றுப் படங்கள் என ரசிகனின் விருப்பத்துக்கேற்ப படங்களும் வெளியாகும். உறுதியான ஹிட்டையும் கொடுக்கும். இந்த ஜானர்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானது ரொமான்டிக் காமெடி ஜானர். அதென்ன ரொமான்டிக் காமெடி ஜானர்... இந்தக் கட்டுரையில் பார்த்துவிடலாம்.

காதலாகி காதலில் உருகும் காதல் படங்களைக் கண்டு ரசித்திருப்போம். விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் 96 பெரிய ஹிட்டானது. பள்ளிப்பருவத்தில் மலரும் காதல்... பிறகு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் காதலர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த காதல் எப்படியெல்லாம் கொண்டாடப்படும் என்று பேசியிருக்கும் 96 மாதிரியான படங்கள் 100% காதல் படம். சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, சூர்யாவின் வாரணம் ஆயிரம், நயன்தாரா ஆர்யா நடித்த ராஜா ராணி, விஜய்க்கு காதலுக்கு மரியாதை, அஜித்துக்கு காதல் மன்னன், மாதவனுக்கு அலைபாயுதே என லிஸ்டைப் போட்டுக் கொண்டே போகலாம். அதுமாதிரி காமெடி படங்களுக்கென ஒரு லிஸ்ட் எடுத்தால் வசூல்ராஜா, இம்சை அரசன், கலகலப்பு, ரஜினி முருகன், தில்லுமுல்லு, காதலா காதலா, தெனாலி என இப்படியும் ஒரு பட்டியல் நீளும். சரி, இந்த இரண்டு ஜானர்களில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமானது ரொமான்டிக் காமெடி ஜானர். இந்த ஜானரில் லேட்டஸ்ட் என்று பார்த்தால், ஓ மை கடவுளே படத்தைச் சொல்லலாம். அசோக் செல்வன், ரித்திகா, வாணி போஜன் நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ரெகுலரான காதல் கதை தான். ஆனால், வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் இருக்கும். அதீத காதல் படமாகவும் ஆகிவிடக் கூடாது. அதே நேரத்தில் காமெடி படம் என்கிற டோனுக்கும் சென்று விடாமல், காதலை காமெடியாகச் சொல்ல வேண்டும். படத்தின் களம் காதல்தான். அதை காமெடியோடு சமைத்தால் ரொமான்டிக் ஜானர் ரெடி. இந்த ROM COM ஜானரில் தமிழ் சினிமாவில் படங்கள் குறைவுதான். காதலர் தினமென்றாலே, காதல் படங்களை மட்டும்தான் பேச வேண்டுமா... கொஞ்சம் வித்தியாசமாக ரொமான்டிக் காமெடி ஜானரை ஜாலியாகப் பேசிவிடுவோம்.

spacer.png

தமிழ் சினிமா வரலாற்றில் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியான ஒரு ரொமான்டிக் காமெடி படமென்றால் அது ‘அடுத்த வீட்டுப் பெண்’. வேதாந்தம் ராகவய்யா இயக்கத்தில் 1960இல் வெளியானது. முதன்முறையாக டைட்டில் கார்டினை அனிமேஷன் கார்டூனில் போட்ட படம் அது. கதை என்னவென்றால், அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறார் மன்னார். லீலா கொஞ்சம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்தில் ரொம்ப ஆர்வம். அதனால் அவளுடைய காதலை அடைய மன்னார், தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகராக நடித்து, கடைசியில் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள்கிறார். இதுதான் கதை. 60-களில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களுக்கு நடுவே ஒரு டிரெண்ட் செட்டிங் படமாக, வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியானது ‘அடுத்த வீட்டுப் பெண்’.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, 1964களில் ஒரு படத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது ‘காதலிக்க நேரமில்லை’. ஒரு படம் வெளியாகி 55 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் புதியது போன்ற உணர்வுடன், கொண்டாடப்படுகிறதென்றால் அது நிச்சயம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை’தான். ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் என்று பலரது நடிப்பில் வெளியானது. படத்தின் கூடுதல் ப்ளஸ் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களின் இசை. இப்போது கேட்டாலும் மில்லினியம் யுகத்துக்கான இசையை ஒத்த உணர்வைத்தரும். காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் டிசைனிலேயே கொண்டாட்டத்துக்கான மனநிலையை ரசிகர்களுக்குக் கொடுத்திருப்பார்கள். மாடி மேலே... என்ன பார்வை... அனுபவம் புதுமை என அனைத்துப் பாட்டுமே கிளாசிக் ஹிட். இன்னுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி ஜானரில் வெளியான முதல் கலர் படமும் இதுதான்.

 

ஒரு மலையின் உச்சியிலிருந்து இன்னொரு மலையின் உச்சிக்குத் தாவினாற்போல் தன் படங்களின் கதைநிலத்தை ஒன்றுக்கொன்று யூகிக்கவே முடியாத வித்தியாசங்களைக் கொண்டு அமைத்திருப்பார் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். பாலையாவின் மூன்று பிள்ளைகளுக்குமான காதலும், அதில் நடக்கும் சொதப்பலும், ஆள் மாறாட்ட சேட்டைகளும், அதன் பிறகான மூன்று பேருக்குமான திருமணத்தோடு முடியும் ஹேப்பி எண்டிங் கதை. நாகேஷ், ரவிச்சந்திரன், முத்துராமன் என மூவருக்குமான காதல் டிராக்குமே காமெடி அதகளத்துடன் இருக்கும். இப்படியான ஒரு கதையானது அன்றைய காலத்தில் தமிழ் சினிமாவில் ரொம்ப புதிது. அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை, வில்லன்கள் இல்லை, அழுமூஞ்சி காட்சிகள் இல்லை... காதலும் காமெடியும் மட்டுமே. இப்போதும் சிரிக்க வைக்கிறது காதலிக்க நேரமில்லை.

இந்த வரிசையில் நினைவுக்கு வரும் இன்னொரு படம் நினைத்தாலே இனிக்கும். கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஜெயப்பிரதா நடிப்பில் 1979இல் வெளியானது நினைத்தாலே இனிக்கும். இந்தப் படத்தை மியூசிக்கல் ரொமான்டிக் காமெடி ஜானர் என்று கூறலாம். ஏனென்றால் எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன் - எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூட்டணியில் படத்தில் மொத்தம் 14 பாடல்கள். அன்றைய காலத்தின் டிரெண்டிங் பேஷன் படம். ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படமும் இதுதான். சிங்கப்பூருக்குச் செல்லும் இசைக்குழுவில் இருக்கும் கமல்ஹாசன் ஒருபக்கம் மைக்கில் பாடுவது, இன்னொருபக்கம் காதலியாகிவிட்ட ரசிகையைத் தேடுவதுமாக கதை நகரும். இதற்கு நடுவே ரஜினியின் காதல் கதை ஒரு தனி டிராக். சீரியஸான கதை என்றில்லாமல்... இலக்கே இன்றி பயணிக்கும் கதையில் காதலை காமெடியோடுச் சொல்லியிருப்பார்கள்.

spacer.png

ரொமான்டிக் காமெடி ஜானருக்கு கமல் நிறைய திரைப்படங்களைத் தொடர்ந்து கொடுத்திருக்கிறார். அதில் ரொம்ப முக்கியமானது மைக்கேல் மதன காமராஜன். கிரேஸி மோகனின் மாஸ்டர் பீஸ். கேரளத்து ஆண்குட்டியான காமேஷ்வரன், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் மைக்கேல், பெத்த பிள்ளையாக இருப்பினும் தத்துப்பிள்ளையாக வளரும் மதனகோபால், தீயணைப்பு வீரனாக சுப்ரமணியம் ராஜூ இந்த நால்வரின் கதையும், காதலும்தான் படம். ஊர்வசி மற்றும் குஷ்புவுடனான கமலின் காதல் போர்ஷனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து, ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டதெல்லாம் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது.

அப்படியே இன்னொரு கிளாசிக்காக அவ்வை சண்முகி படத்தைக் கொடுத்தார் கமல். இந்த முறை மீனாவுடன் டூயட். வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார் கமல் - மீனா தம்பதி. கருத்து வேறுபாடால் கமலைப் பிரிந்து செல்கிறார் மீனா. மீனாவை மீண்டும் காதலில் விழவைக்க, மகளைப் பார்த்துக் கொள்ள பெண் வேடமிடுகிறார் கமல். அவ்வை சண்முகியாக கமல் செய்யும் அட்டகாசமும், மீனாவுடனாக காதலும் என கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருப்பார்கள். நிச்சயமாக இது, கமலின் லேண்ட்மார்க் சினிமா. “சட்டம் கல்யாணத்த பிரிக்கலாம்… ஆனா காதல பிரிக்க முடியாது…” - நச் வசனத்தோட முடியும் படம். படத்தின் ப்ளஸ் வசனங்கள்தான். “சென்ட் வாசம் தூக்கலா இருக்கே… குளிக்காம வந்துட்டியோன்னு கேட்டேன்…”, “கல்லா போதாதாம் கஜானா கேட்குது”, “பேச்சுவார்த்தை நடக்கும்போது வன்முறை கூடாது”, “அவிங்க அப்பா பணக்காரர், எங்கப்பா ஏழை ஆச்சே…” என சொல்லிக்கொண்டே போகலாம். ரொமான்டிக் காமெடி ஜானருக்கு வசனங்கள் ரொம்ப முக்கியம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும்.

 

இந்த லிஸ்டில் அவசியம் சேர்க்க வேண்டிய படம் மின்சார கனவு. 1997இல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபு தேவா, அரவிந்த் சாமி மற்றும் கஜோல் நடிப்பில் வெளியானது. முக்கோணக் காதல் கதை. கஜோலை ஒன்சைடாக காதலிக்கும் அரவிந்த் சாமி. எப்படியாவது தன்னை கஜோல் காதலிக்க வேண்டும் என்பதற்காக பிரபு தேவாவை அழைத்து வருகிறார். கதை அப்படியே மாறுகிறது. காதலே பிடிக்காத கஜோலுக்கு பிரபு தேவா மீது காதல் மலர்கிறது. காதலின் உணர்வைப் போகிற போக்கில் கடத்திவிட்டு, காமெடியோடு படத்தைக் கொண்டு போயிருப்பார் இயக்குநர் ராஜீவ் மேனன். எந்த அளவுக்கு இது ரொமான்டிக் காமெடி என்றால், காதலே பிடிக்காத கஜோலை ஸ்ட்ராபெர்ரி பெண்ணாக்கிய அளவுக்கு லவ்வாங்கி படம்.

ஆக்‌ஷனிலோ, மாஸ் கமர்ஷியலாகவோ ஒரு கதையைப் பிடித்துவிடலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, சுவைமிக்க ஒரு கதை கிடைத்தால் மட்டுமே அதை ரொமான்டிக் காமெடி ஜானரில் பொருத்த முடியும். வழக்கமான காதல் கதையைக் கொஞ்சம் வித்தியாசப்படுத்த வேண்டும். அப்படியான ட்ரீட்மென்ட் ரொம்ப அவசியம். அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளியான ‘டும் டும் டும்’ படம் ஒரு வெரைட்டியான ட்ரீட். மாதவன் - ஜோதிகாவுக்குத் திருமணம் நிச்சயமாகிவிடும். ஆனால், இருவருக்குமே கல்யாணத்தில் விருப்பமில்லை. தகடுதத்தோம் போட்டுப் பார்த்தும் திருமணத்தை நிறுத்த முடியாமல் போகும். ஆனால், எதிர்பாராத விதமாக தானாகவே திருமணம் நின்று போகும். கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன இருவருமே, காதலிக்கத் தொடங்கினால் எப்படி இருக்கும்? நச்சென பிடித்த நாட்’டை கச்சிதமாக திரையில் கொடுத்திருப்பார்கள்.

spacer.png

இந்த லிஸ்டில் கமலின் இன்னுமிரண்டு படங்களைச் சேர்க்கலாம். முதலாவதாக பஞ்சதந்திரம். அட கதை இதுதானா என யோசிக்க வைக்கும் சிம்பிள் கதை. காதலித்துத் திருமணம் செய்யும் கமலும் சிம்ரனும் கருத்து வேறுபாடால் பிரிந்து விடுகிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க நான்கு நண்பர்கள் என்ன செய்கிறார்கள், ஒரு பெண்ணை மறக்க இன்னொரு பெண் கான்செப்ட், அதனால் பொய்க்கு மேல் பொய்... இறுதியில் சின்ன கல்லு பெத்த லாபம், அதோடு க்ளைமாக்ஸில் படம் முடியும். மற்ற படங்களெல்லாம் க்ளைமாக்ஸில் முடியாமல், அதுக்கு முன்னாடியே முடிஞ்சிடுமா என கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இந்தப் படமும் சரி, அனுமன் பக்தரான கமல், எப்படி காதலில் விழுகிறார் என சொல்லியிருக்கும் பம்மல் கே.சம்பந்தமும் சரி, இரண்டுமே கவனிக்க வேண்டிய காமெடியான காதல் படங்கள்.

காலம் மாறுகிறது. டிரெண்டும் மாறிவிட்டது. நவீன யுக இயக்குநர்கள் திரைக்கு வர ஆரம்பிக்கிறார்கள். பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் - அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு நம்ம லிஸ்டில் முக்கிய இடம் கொடுக்கலாம். ஏனெனில், ஒரு காதல் சொதப்பினால் என்னவாகும். காதலிப்பவர்களுக்கு கஷ்டம், அதைப் பார்ப்பவர்களுக்கு காமெடி. இவ்வளவுதான் கான்செப்ட்.

இந்த வரிசையில் அடுத்தது உன் சமையலறையில். 45 வயதைத் தாண்டிவிட்ட பிரகாஷ்ராஜுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ராங் கால் மூலமாக கனெக்டாகிறார் சினேகா. காதலில் விழ, இருவரும் சந்தித்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அதன் பிறகான கதையோடு நீள்கிறது திரைக்கதை. வயது தாண்டிவிட்டவர்கள் காதலில் விழும் போது என்ன மாதிரியான மனநிலை இருக்கும்? எப்படி கல்யாணம் வரைச் செல்கிறது என்பது வெரைட்டியான டாபிக். இந்தப் படத்தோடு, ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தையும் லிஸ்டில் சேர்த்துவிடலாம். பிரசன்னா - லேகா வாஷிங்டன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. ஹீரோவுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இதனால் திருமண வாழ்க்கை என்னவாகும் என்பதை ஜாலியாக டீல் செய்திருக்கும் படம். பிரசன்னாவுக்கு இது தைரியமான ஓர் அட்டெம்ட்டு.

காதலே சொல்லாமல் காதலைப் பேசி விடமுடியுமா? முடியும். காதலும் கடந்து போகும் படத்தில் காதலின்றி காதல் மொழிப் பேசியிருக்கிறார்கள். ஜெயில் ரிட்டர்ன் விஜய் சேதுபதி, அரசியல்வாதி நண்பன் பார் லைசன்ஸ் வாங்கித் தருவான் எனக் காத்திருக்கிறார். அவரின் எதிர்வீட்டுக்குக் குடி வருகிறார் வேலை இழந்த ஐ.டி பெண் மடோனா செபாஸ்டியன். வேலை தேடும் ஹீரோயினுக்கும், வேலை செய்யத் தெரியாத ஹீரோவுக்கும் நடுவில் காதல் பூனை மாதிரி குறுக்கில் சென்றால்?.... காதலைத் தாண்டிய புது உணர்வை ரசிகர்களுக்குப் புகுட்டியது கா.க.போ!

இந்த வரிசையில் இன்னொரு ட்ரீட் மேயாத மான். ஒன்சைடாக காதலிக்கும் பெண்ணுக்காக நண்பர்களை பாடாய் படுத்தும் டார்சர் ஹீரோ. சந்தோஷ் நாராயணனின் மியூசிக்கல் ட்ரீட்டுடன் படமும் கிளாஸ் ரகம். சாதாரண காதல் கதையை வித்தியாசமான ட்ரீட்மெண்டில் கொடுத்திருப்பார்கள். இதற்கு நடுவே விவேக் பிரசன்னா - இந்துஜா காதல் டிராக்கும் படத்துக்கு புது ஃப்ளேவர்....

இந்த லிஸ்டில், மில்லினிய யுகப் படமாக சேர்த்துக் கொள்ள வேண்டியது பியார் பிரேமா காதல். ஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும் இடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும் சமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’ லிவ் இன் என்கிற கான்செப்டோடு வித்தியாசமான டிரீட் கொடுத்திருப்பார்கள். புதுமையான காட்சிகள். காமெடி, அழுகை காதல் ரொமான்டிக் காக்டெயில் இது.

இந்த லிஸ்டில் சொன்ன எல்லாக் கதைகளுமே வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வழிதவறிய ஆடுகள் மாதிரி. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் மட்டுமே, வேறு ஒரு பரிணாமத்தை அடைகிறது. அப்படியான சினிமாக்கள் இவை. ஆனால், இன்னும் அதிகம் படங்கள் வரவேண்டிய ஜானரும் இதுதான்.

 

https://minnambalam.com/entertainment/2021/02/14/7/love-and-romantic-movies-in-tamil-cinema

1 hour ago, கிருபன் said:

காதலாகி காதலில் உருகும் காதல் படங்களைக் கண்டு ரசித்திருப்போம். விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் 96 பெரிய ஹிட்டானது.

 

1 hour ago, கிருபன் said:

இந்த ஜானரில் லேட்டஸ்ட் என்று பார்த்தால், ஓ மை கடவுளே படத்தைச் சொல்லலாம்.

 

1 hour ago, கிருபன் said:

டும் டும் டும்’ படம் ஒரு வெரைட்டியான ட்ரீட்.

 

1 hour ago, கிருபன் said:

இந்த வரிசையில் அடுத்தது உன் சமையலறையில்.

 

1 hour ago, கிருபன் said:

காதலும் கடந்து போகும் படத்தில் காதலின்றி காதல் மொழிப் பேசியிருக்கிறார்கள்.

என்னை மிகவும் கவர்ந்த காதற் படங்கள் இவை.

தவிரவும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, உன்னைத் தேடி, ஆனந்தப் பூங்காற்றே, ஆட்டோக்கிராப், பொக்கிஷம், மௌனராகம், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், கோகுலத்தில் சீதை போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

1 hour ago, கிருபன் said:

இந்த லிஸ்டில் சொன்ன எல்லாக் கதைகளுமே வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வழிதவறிய ஆடுகள் மாதிரி. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் மட்டுமே, வேறு ஒரு பரிணாமத்தை அடைகிறது. அப்படியான சினிமாக்கள் இவை. ஆனால், இன்னும் அதிகம் படங்கள் வரவேண்டிய ஜானரும் இதுதான்.

உண்மை. கடந்த இரு தசாப்தங்களாக மாஸ் ஹீரோ மசாலாப் படங்களும், சமீப காலமாக யதார்த்தமாக இருந்தாலும் வன்முறை அதிகமுள்ள படங்களும், பேய்ப்படங்களும், நகைச்சுவை என்று ஏதோ சில அலம்பலான படங்களுமே அதிகம் வெளியாகின. 

இந்தக் காலத்துக்கென்று ஓ மை கடவுளே போல, 96 போல வித்தியானமான காதல் படங்களை உருவாக்கினால் பெருவாரியான வரவேற்பைப் பெறும் என்பது என் எண்ணமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடி 23 வயதிற்கு போய் காதலிக்க மாட்டோமா என மனம் ஏங்குகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.