Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வின் 46/1 தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்போம்: ஜயநாத் கொலம்பகே விசேட செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்:- ஆர்.ராம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பிளவுபட்டுள்ளது

இலங்கைக்கு எதிராக மேற்குலம் செயற்படுகிறது

தமிழ் மக்களுக்கு ஐந்து பிரச்சினைகளே உள்ளன

புலிகளின் நீட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் விரைவில் பேச்சு

வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது

உள்ளக ரீதியான பொறிமுறையே முன்னெடுக்கப்படும்

பொருளாதார தடைகள் அனைத்து இனத்திற்குமானதே

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் 46/1பிரேரணையை நாம் முழுமையாக நிராரிப்போம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்.பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். 

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, 

DSC_2280.JPG

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையை முழுமையாக நிராகரித்து விட்டீர்களே?

பதில்:- உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பிலான தகவல்களும், தரவுகளும் உண்மைக்கு புறம்பானவையும் சட்டரீதியாக தவறானவையுமாக காணப்படுகின்றன. அத்துடன் பல விடயங்கள் தாம் நினைத்தவாறே குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கொரோனா நிலைமைகளால் ஐ.நா.உயர்ஸ்தானிகரோ அல்லது அவரது பிரதிநிதிகளோ இலங்கைக்கு வருகை தந்திருக்கவில்லை. 

அவ்வாறு எவருமே வருகை தந்திருக்காத நிலையில் இவ்வாறான காட்டமான அறிக்கையை எவ்வாறு தயாரித்தார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனையும் சில தரப்புக்களும், இங்குள்ள மேற்குலக தூதரகங்களும் வழங்கிய விபரங்கள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே உயர்ஸ்தானிகரின் அறிக்கை கண்ணாடி அறை மேசையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகின்றோம். 

DSC_2286.JPG

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் போர் பற்றி மிகக் சொற்ப விடயங்களே கூறப்பட்டுள்ளதோடு, கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்றதாகவே பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அத்துடன் அறிக்கையானது, நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத் தன்மையிலும் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளிலும் தலையீடுகளைச் செய்வதற்கானதொரு முயற்சியாகவும், மேற்குல நாடுகளின் தேவைக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

கேள்வி:- பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் பிரேரணையை சமர்ப்பித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனவே?

பதில்:- ஐ.நா.உயர்ஸ்தானிகரின் மீளாய்வு அறிக்கையினுடைய நோக்கத்தின் நீட்சியாகவே இந்தப் பிரேரணையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தப் பிரேரணை பற்றிய கலந்துரையாடல்கள் தற்போது நடைபெறுகின்றன. அக்கலந்துரையாடல்களில் எமது நாட்டின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி சி.ஏ.சந்திரப்பிரேம பங்கேற்று வருகின்றார். நாமும் அக்கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நெருக்கமாக அவதானித்து வருகின்றோம். 

இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கை பங்கேற்பதானது அந்தப் பிரேரணைக்கு ‘இணை அனுசரணை’ அளிப்பதாக கொள்ள முடியாது. நாம் அந்தப் பிரேரணைக்கு ஒருபோதும் இணை அனுசரணை வழங்கப்போவதில்லை. பதிலளிக்கும் கடமையுள்ள நாடு என்ற வகையிலேயே கலந்துரையாடல்களில் பங்கேற்கின்றோம். அதில் தவறாக முன்மொழியப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றோம். 

கேள்வி:- தற்போது நடைபெற்று வரும் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்:- தற்போது வரையில் 46ஆவது அமர்வினை நாம் வெற்றிகரமாகவே கையாண்டு வந்திருக்கின்றோம். உயர்ஸ்தானிகரின் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது எமக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. 15 நாடுகளே எதிராக இருந்தன. அதேபோன்று பிரித்தானியா தலைமையிலான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோதும் எமக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. 

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, மேற்குலக நாடுகளும், அந்த நாடுகள் செல்வாக்கு செலுத்தும் சில நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை. ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன. அந்த வகையில் பார்க்கின்றபோது இலங்கை விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பிளவுகள் உள்ளன என்பது தெளிவாக வெளிப்படுகின்றது. 

கேள்வி:- இலங்கை விவகாரத்தில் மேற்குல நாடுகள் செல்வாக்குச் செலுத்துவதாக கூறுகின்றீர்களே அதற்கான காரணம் என்ன?

பதில்:- இலங்கை நடுநிலை வெளிவிகாரக் கொள்கையையே பின்பற்றுகின்றது. இதனால் இலங்கை எந்தவொரு வல்லாதிக்க சக்திகளின்  பக்கம் சாய்ந்தும் செயற்படவில்லை. விசேடமாக மேற்குல நாடுகள் நடுநிலைமையாக இருப்பதை விரும்பவில்லை. அண்மைய நாட்களில் உலகில் செல்வாக்குச் செலுத்தவல்ல மேற்குலக வல்லாதிக்க நாடுகள் தமது பக்கம் இலங்கை சார்ந்திருக்க வேண்டும் என்றும் அவர்களுடன் பாதுகாப்பு, படைகள் சார் ஒப்பந்தங்களைச் கைச்சாத்திடுமாறும் வற்புறுத்தின. அதற்கு இலங்கை இசையவில்லை. அதனால் அந்நாடுகள் கூட்டிணைந்து நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. 

எவ்வாறாயினும், இந்து மா சமுத்திரப்பிராந்தியத்திலே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகியன ஒரு அணியாகவும், சீனா, பாகிஸ்தான் பிறிதொரு அணியாகவும் செல்வாக்குச் செலுத்துவதற்கு போட்டிபோடுகின்றன. இலங்கை, பங்களாதேஷ், மலைதீவு போன்ற நாடுகள் நடுநிலையுடன் செயற்படுகின்றன. 

இலங்கை போன்ற வளர்முக நாடுகள் ஒருபக்கமாக சார்ந்து செயற்பட முடியாது. முதலீடுகள், ஏற்றுமதிகள், தேசிய பாதுகாப்பு, மற்றும் அயலுறவு ஆகிய விடயங்களில் கரிசணைகளைக் கொண்டே தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதை இந்தத் தரப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் ஜப்பான் முன்வைத்துள்ள கருத்துக்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஐ.நா.வில் எத்தகைய முன்மொழிவுகளையும், பொறிமுறைகளையும் தயாரித்து தீர்மானமாக நிறைவேற்றினாலும் சம்பந்தப்பட்ட நாடு அத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையேல் அத்தீர்மானத்தினால் எவ்விதமான பயனும் கிட்டப்போவதில்லை. வெறுமனே, அத்தீர்மானத்தை நடைமுறைச் சாத்தியமாக்குதல் என்ற பெயரில் நிதி விரியமே ஏற்படும் என்று ஜப்பான் கூறியுள்ளது. 

அதுவொரு யதார்த்தமான வெளிப்பாடாகும். எமது நிலைப்பாடும் ஏறக்குறைய அவ்வாறு தான் உள்ளது. அத்துடன் பிலிப்பைன்ஸ் விடயத்தில் அந்நாட்டின் ஏற்புடன் ஐ.நா உள்ளக பொறிமுறையை ஸ்தாபித்துள்ளது. அவ்விதமான முன்மொழிவொன்று செய்யப்படுமாக விருந்தால் அதனை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு தயாராகவே உள்ளோம். 

போர் நிறைவுக்கு வந்து 12ஆண்டுகளாகின்ற நிலையில் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் சில அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களினால் மனத்தாங்கலான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோன்று முஸ்லிம்கள் மத்தியில் இருந்த மதவாதசிந்தனை கொண்ட சிறு குழுவொன்றாலேயே உயிர்த்த ஞாயிறு சம்பவமும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவ்விதமான விடயங்களை தவிர உயர்ஸ்தானிகரின் மீளாய்வு அறிக்கை மற்றும் முன்மொழியப்பட்ட பிரேரணையில் கூறப்படும் வகையில் எவ்விதமான பாரதூரமான விடயங்களும் இங்கு இடம்பெறவில்லை. மூவினங்களும் வாழும் இந்தத் தீவில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். துப்பாக்கிகளைக் காட்டி சமாதானத்தினையும், வாள்களைக் காட்டி நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்திவிட முடியாது. அவை காலவோட்டத்தில் இயல்பாக ஏற்படும் விடயங்களாகும். 

தற்போதைய நிலையில், தமிழ் மக்களுக்கு ஐந்து பிரச்சினைகளே உள்ளன. வருமானத்தை பெறுவதற்கான வேலைவாய்ப்பு, வாழ்வதற்கான இருப்பிடங்கள், குழந்தைகளுக்கான கல்வி வசதிகள், சுகதேகியாக வழ்வதற்கான சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியனவே அவசியமாகின்றன. இதனடிப்படையில் மூவினத்தையும் மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

கேள்வி:-பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கையால் வெற்றியீட்ட முடியுமா? 

பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெறுவதற்கான நிலைமைகள் மிகச் சொற்ப அளவிலேயே உள்ளது. ஏனென்றால் 47 உறுப்பு நாடுகளில் அதிகமானவை மேற்குல நாடுகளும் அவர்களின் செல்வாக்கில் செயற்பட்டு வரும் நாடுகளுமே உள்ளன. அவ்வாறன நிலையில் இலங்கை போன்ற சிறு நாடு தனது செல்வாக்கினை காண்பிக்க முடியுமே தவிர பிரேரணையை வெற்றி கொள்வது சவாலுக்குரியது. 

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் அது எவ்விதமான தாக்கங்களைச் செலுத்தும் என்று கருதுகின்றீர்கள்? 

பதில்:- உள்ளக விவகாரங்களுக்கு கலந்துரையாடல்கள் மூலம் உள்நாட்டிலேயே நிரந்தரமான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுகின்றபோது வெளிநாடுகள் மற்றும் அமைப்புக்கள், நபர்களால் உள்ளக விவகாரங்களில் தலையீடுகளைச் செய்ய முடியாது. 

அதனை அடியொற்றி அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கையில் இந்த நாட்டில் உள்ள சிறுகுழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தினையும் படையினரையும் தண்டனைக் உட்படுத்துமாறும், பயணத்தடைகளை விதிக்குமாறும் பொருளாதாரத்தடைகளை போடுமாறும், வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், சொத்துக்களை முடக்குமாறும் கோருகின்றார்கள். 

உதாரணமாக, பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை இனமாக சிங்கள மக்கள் மட்டுமா நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கப்போகின்றனர். இல்லையே அனைத்தின மக்களும் அல்லவா நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றனர். 

ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது நாடொன்றின் முன்னேற்றத்தினை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுப்பதில் தான் அதன் அமர்வுகளுக்கான வெற்றிகள் தங்கியிருக்கின்றன. அதனைவிடுத்து இவ்விதமான தீர்மானங்களை நிறைவேற்றுவதால் எவ்விதமான பயனுமில்லை. 

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் இம்முறை நிறைவேற்றப்படும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நேரடியாகவே நிராகரிப்பீர்களா? 

பதில்:- ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள முதற்கட்ட பிரேரணையை நாம் நிராகரித்துள்ளோம். அந்த வகையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தினையும் நிராகரிப்போம். அவ்வாறு நிராகரிப்பதானது சர்வதேச சமவாயச் சட்ட இணக்கப்பாடுகளை மீறிச்செயற்படுவதென்று பொருள் கொள்ள முடியாது. 

தற்போதைய நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியவது பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு. நிலைபேறான அபிவிருத்தி கவுன்சில் ஆகியவற்றை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். இதனைவிடவும், நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவிடத்தில் போர் எங்கு ஆரம்பித்தது என்பதை கண்டறிவதற்கான பணி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கின்றோம். 

இதய சுத்தியான உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்பதே எமது நிலைப்பாடாகும். மூன்று தசாப்தமாக போர் நடைபெற்றது. கடந்த 12வருடங்களாக அதுபற்றி கதைத்தாகிவிட்டது. 42வருடங்களுக்குப் பின்னரும் அவ்விடயம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசுவதால் பயனில்லை. அவற்றை மறந்து எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து முன்னேறிச் செல்வது குறித்தே கவனத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது உதலாகம ஆணைக்குழு,கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியன நியமிக்கப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டபோது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லையே?

பதில்:- 2009 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் இந்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அக்காலத்திலேயே அவை அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தது. போர் நிறைவடைந்ததன் பின்னர் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. அப்பணிகள் கணிசமாக நிறைவடைந்ததன் பின்னர் இந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. துரதிஷ்வசமாக 2014இல் ஆட்சி மாற்றம் நடைபெற்று விட்டது. இதனால் திட்டமிடப்பட்டு பயணித்து வந்த பாதை முழுமையாக திசை திரும்பிவிட்டது. 

ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அராசாங்கம் உள்ளக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த விடயங்களை அப்படியே நிறுத்திவிட்டு சர்வதேசத்துடன் இணைந்து நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் மக்கள் ஆணைக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது அவ்விதமான முடிவுகளை எடுத்த ஐ.தே.க.வும் அதன் முக்கியஸ்தர்களும் மக்களால் முழுமையாக நிராரிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நாம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கே ஆணைக்குழு அறிக்கைளை மீளாய்வு செய்யும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம். 

கேள்வி:-ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக உள்ளவொரு அமைப்பாகும். விடுதலைப் புலிகள் கொள்கையாகக் கொண்டிருந்த தன்னாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களின் மரபுவழித்தாயகம், உள்ளிட்ட கொள்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பின்பற்றி வருகின்றது. 

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கருதுகின்றது. பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றது. நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றது. கூட்டமைப்புடன் இணைந்து இயங்கும் புலம்பெயர் அமைப்புக்களும் அதனையே விரும்புகின்றது. 

இதனால் தான், ஐ.நா.வில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை கூட்டமைப்பு ஆதரித்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் தேவைகள் இவை அல்ல. தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றார்கள். 

இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 16இலிருந்து 10ஆக குறைந்துள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கொள்கைகளை நிராகரிக்கின்றனர் என்பது தானே அர்த்தம். 

கேள்வி:- வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டங்கள் அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பவில்லையே?

பதில்:- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்;பமாகவுள்ளது. அந்த அடிப்படையில் தான் அவர் போராட்டம் செய்யும் உறவுகளை சந்திப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 

இந்த விடயம் நீடித்துக்கொண்டிருப்பது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறுவதில் பெரும் தாக்கத்தினை செலுத்துகின்றது. ஆகவே தான் இப்பிரச்சினைக்கு தீர்வினை எடுக்கும் வகையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்திடத்தில் பொறிமுறையொன்றை முன்மொழியுமாறு கோரியுள்ளோம். 

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாக கூறப்படுபவர்களில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கலாம். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்து போர்க்களத்தில் மரணித்திருக்கலாதம். ஆகவே அவை பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

அத்துடன் அவ்விதமாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு காணமலாக்கப்பட்ட சான்றிதழை அல்லது மரண சான்றிதழை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. 

கேள்வி:- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகள் அரசாங்கத்தின் இரண்டு ஆணைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றல்லவா அவர்களின் உறவினர்கள் கோருகின்றார்கள்?

பதில்:- பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் அவர்களிடத்தில், அவர்களின் தேவைப்பாடு தொடர்பாக கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்டமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கின்றோம் 

கேள்வி:- அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப், ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது 2012ஆம் ஆண்டில் அவரைச் சந்தித்தாகவும் அவரிடத்தில் சரணடைந்த 316பேருக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பியபோது அவர்கள் உயிருடன் இல்லை என்ற தொனிப்பட பதிலளித்தாகவும் கூறியுள்ளாரே?

பதில்:- அவரது கூற்று வெளியான வேளையில் ஜனாதிபதியிடத்தில் அதுதொடர்பில் நான் கவனத்திற்கு கொண்டுவந்து கலந்துரையாடினேன். ஜனாதிபதி அவ்விதமான எந்தவொரு கூற்றையும் தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றார். ஆனால் ஸ்டீபன் ராப் அவ்வாறு கூறியதாக கூறுகின்றார். இவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றது. ஆகவே இவ்விதமான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும். 

மேலும், ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தால் எட்டுவருடங்கள் கழித்து அதனை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஓய்வு பெற்ற பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை ஏன் இப்போது தெரிவிக்க வேண்டும். அவர் பதவியில் இருந்த காலப்பகுதியிலேயே இந்த விடயத்தினை வெளிப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குச் சென்றிருக்கலாமே? அவர் அதனை ஏன் செய்யவில்லை. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்து தற்போது புலம்பெயர் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெறும் நிழ்வில் இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார் என்றால் நிதிப்பின்னணி இருக்கின்றதா என்ற ஐயங்களும் எமக்கு ஏற்படுகின்றன.

கேள்வி:- இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர் உள்ளிட்டவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகின்ற நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது?

பதில்:- நாம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 2இலட்சத்து 95ஆயிரம் பேர் வரையிலான பொதுமக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர். அவர்கள் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். 

போரின்போது கடல் வழியாக வருகை தந்த விடுதலைப்புலிகளின் கடற்படைத்தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளட்ட ஆயிரம்பேர் வரையிலானவர்களை பத்திரமாக மீட்டு அவர்களையும் சமுத்துடன் இணைத்திருக்கின்றோம். 

ஆகவே படையினர் மீது தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்று எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை. திட்டமிட்ட வகையில் யாரும் இலக்கு வைக்கப்படவில்லை. அவ்விதமாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானவை. 

கேள்வி:- குற்றங்களுடன் தொடர்புடைய படையினரின் பட்டியலை யஸ்மின் சூக்கா தாயாரித்து வெளியிட்டிருக்கின்றார். ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் மீது பயணத்தடைகளை விதிக்குமாறு கோரியுள்ளார். இதுபற்றி?

பதில்:- இவ்விதமான விடயங்களை ஐ.நா பாதுகாப்புச் சபையில் தான் மேற்கொள்ள முடியும். ஆனால் உண்மைக்கு புறம்பாக அவ்விதமான விடயங்கள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்பட்டால் ரஷ்யா மற்றும் சீனா எமக்கு ஆதரவளிக்கும். சில நாடுகள் தனிப்பட்ட வகையில் வேண்டுமானால் அவ்விதமான தீர்மானங்களை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லமலில்லை. 

கேள்வி:- கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தும் விடயங்களும் இந்திய உயர்ஸ்தானிகராயலம் வெளிப்படுத்தும் விடயங்களும் முரண்பாடாக உள்ளதே?

பதில்:- கிழக்கு முனைய விடயத்தில் மக்கள் ஆணைக்கு கட்டுப்பட்டே நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தமையால் அதனை இந்திய, ஜப்பான் கூட்டு அபிவிருத்தி முயற்சிக்கு கையளிக்க முடியவில்லை. எனினும் மேற்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இந்திய, ஜப்பான் மற்றும் எமது நாட்டின் நிறுவனங்களின் கூட்டில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அந்த தீர்மானம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதுவே பரஸ்பர மாறுபட்ட கருத்துக்கள் வெளிவரக் காரணமாகியுள்ளது. அதனைவிடவும் மேற்கு முனையத்தினை கூட்டாக அபிவிருத்தி செய்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. 

மேற்கு முனையமானது விசாலமானது என்பதோடு பாரிய கப்பல்கள் வருகை தருவதற்குமான வசதிகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே அதனை இந்தியா பெற்றுக்கொள்வது நன்மையானதே. மேலும் அயல் நாடான இந்தியாவை பகைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா? 

கேள்வி:- வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கதக்க சக்தி பிறப்பாக்கத் தி;ட்டம் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதா? 

பதில்:- அந்த விடயதானத்தின் பொறுப்பு என்னிடமில்லை. எனினும் நயினா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு ஆகியவற்றில் நான் கடமையாற்றியிருக்கின்றேன். அந்த வகையில் அப்பகுதி மக்களுக்கு மின்சாரத்தேவை அவசியமாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் தான் வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸின் முயற்சியில் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

அத்திட்டம் கேள்வி மனுக்கோரலின் மூலம் ஆசிய அபிவிருத்தியின் கருத்திட்டத்திற்கு அமைவாக கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா தனது தேசிய பாதுகாப்பு விடயம் சம்பந்தமாக கரிசணைகளை வெளிப்படுத்தி 12மில்லியன் டொலர்களை அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக வழங்குவதாக தற்போது கூறியுள்ளது. ஆனால் சர்வதேச கட்டமைப்புடன் செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாகிவிட்டது. 

இந்நிலையில் அதனை மீளவும் மாற்றியமைக்கும் பட்சத்தில் அது இலங்கைக்கு சர்வதேச ரீதியாக அகௌரவத்தினை ஏற்படுத்துதாகவே இருக்கும். ஆரம்பத்திலேயே இந்தியா தனது கரிசணையை வெளியிட்டு இந்தத் திட்டத்தினை தானே முன்னெடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே தற்போது இந்த விடயம் நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கின்றது. 

மேலும் நாட்டில் வரையறுக்கப்பட்ட பகுதிகளை மையப்படுத்தி கோடு வரைந்து செயற்பட முடியாது. அதாவது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா மட்டுமே அனைத்து திட்டங்களையும் செய்ய வேண்டும் ஏனைய பகுதிகளில் வேறெந்த நாடுகளும் திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற எம்மால் செயற்பட முடியாது.


படப்பிடிப்பு:- எஸ்.எம்.சுரேந்திரன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.