Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறக்கமில்லாக் குருதி - ப.தெய்வீகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உறக்கமில்லாக் குருதி - ப.தெய்வீகன்

[1]

திரவத்தகடுகள் போல மினுங்கியபடி புரளும் யாரா நதியின் அசைவுகளைப் பார்த்தவாறு கார்த்திகேசு புற்தரையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் ரயிலேறி மெல்பேர்ன் நகருக்கு வந்துவிடுகின்ற கார்த்திகேசுவுக்கு, இந்தப் புற்தரை சிநேகமாகி மூன்று மாதங்களாகின்றன. பூப்பையைத் தன் பக்கத்திலேயே பத்திரமாய் வைத்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே நீர் தெளித்து கவனமாக எடுத்துவந்த பூக்கள். வீட்டில் பூக்கள் கிடைப்பது கடினம் என்று, மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் சொல்லி எடுத்த பூக்கள் இவை. வெயில் ஏறிக்கொண்டுபோக, நீள் காற்சட்டையைக் கொஞ்சம் மேல்பக்கமாக உருவிப் பார்த்தார். பொருக்கு பரந்திருந்த கால்களுக்குக் கனகாலமாகக் களிம்பு பூசாதது வெடிப்புகளாக வெளித்தெரிந்தது. தனக்குப் பிடித்தமான சோளாப்புரியைக் கொழுவிக்கொண்டு சென் கில்டா தெருவில் ஏறுவதற்குத் தயாரானார்.

சென் கில்டா பெருவீதியின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த சைப்பிரஸ் பெரு மரங்கள் தெருவுக்கு மேலாக நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. கவிழ்ந்திருந்த கிளைகளின் வழியாக வெயில் வடிந்து, கருந்தரையில் பெய்துகொண்டிருந்தது. கார்த்திகேசு போல வயதானவர்கள் சிலர் வேகமாக நடைப்பயிற்சி செய்துகொண்டு போனார்கள். நகரில் வேலை செய்பவர்கள் சிலரும் அவர்களோடு போட்டிபோட்டு அந்த நாளுக்குரிய கனவுகளையும் பொறுப்புகளையும் தாங்கியபடி வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

அருங்காட்சியகத்துக்கு அருகில் வந்தவுடன் சிக்னல் கம்பத்தில் பாதசாரிக்கடவை வெளிச்சம் விழும்வரைக்கும் காத்திருந்த கார்த்திகேசு, பச்சை விழுந்தவுடன் பத்திரமாகப் பாதையைக் கடந்து அருங்காட்சியக வாசலுக்குச் சென்றார். கிழமை தவறாமல் வருகின்ற கார்த்திகேசுவிற்கு, இந்த ரயில் பயணமும் நடைப்பயணமும் நகர் காட்சிகளும் பழகிப்போய்விட்டன. ஆனால் அருங்காட்சியகத்தில் காவலுக்கு நிற்பவர்கள் எப்போதும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை.  

போனதடவை வந்திருந்தபோது, அங்கேயிருந்த உயரமான – கறுத்த – கொழுத்த காவலாளிக்கு கார்த்திகேசுவை நன்றாகவே தெரியும். வெள்ளிதோறும் அவர் அங்கு வருவதற்கான காரணத்தையும் அவன் அறிந்திருந்தான். சிம்பாப்வே நாட்டிலிருந்து அகதியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த அந்தக் காவலாளி, சொந்த நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரத்தில் மனைவியையும் தாயையும் இழந்தவன். தன்னையும் வாழ்க்கையையும் புரிந்துகொண்ட அவன், அருங்காட்சியக வாசலில் நிற்கின்ற வெள்ளிக்கிழமைகள் கார்த்திகேசுவிற்குச் சிக்கல்கள் இருப்பதில்லை. 

ஆனால் இன்று அவனைக் காணவில்லை. வாசலில் நின்றுகொண்டிருந்த பூனைக்கண்கள் கொண்ட அந்தப் புதிய காவலாளி, வரிசையில் நின்றுகொண்டிருந்த அனைவரையும் சோதனை செய்து, உள்ளே எந்தப் பொருட்களையும் எடுத்துச்செல்ல முடியாதென மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினான். கார்த்திகேசு தன்னுடைய சட்டைக்குள் பூப்பையை மறைத்து வைத்தார். வெடிகுண்டைச் சுமந்து போகிறவரைப் போல பூக்களை நெஞ்சில் தாங்கியிருந்தார். எந்த நடுக்கமும் பதற்றமுமின்றி வெற்றிகரமாக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தார். அந்த நீண்ட மண்டபத்தின் இடப்புறமாக இருந்த ஓடையின் வழியாக விரைந்து நடந்தார். 

சிட்னியில் வந்திறங்கிய ‘கப்டன் குக்’ படத்தை வரைந்த விசாலமான ஓவியம் வாசலில் அனைவரையும் வரவேற்றது. அதற்குப் பின்னாலிருந்த உயரமான கங்காருச்சிலை. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வேட்டைக் கருவிகளும் அவற்றின் வரலாறும் என்று ஒவ்வொரு பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது. ஆதிக்குடிகளின் வரலாற்றுக் காட்சிகளை மினுங்கும் கரிய பளிங்குகளில் செதுக்கி வைத்திருக்கும் இடமெங்கும் பூர்வக்குடிகளின் அபொறிஜினல் பெயர்கள் அச்சொட்டாகப் பொறிக்கப்பட்டிருந்தன. “இந்த நாட்டிற்கு உரிமையானவனும் அவன் மொழியும் அருங்காட்சியகத்தில்தான் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது” – என்று கார்த்திகேசுவின் மனம்  இதனைப் பார்க்கும் போதெல்லாம் கொந்தளிக்கும்.

அன்றைக்கு அதிகம் ஆட்கள் வரத்தொடங்கியிராத பெருவெளியில் நடந்துசென்ற கார்த்திகேசு, மண்டபத்தின் இரண்டாவது மூலையில் ஆளுயுரமான கரிய மேசையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு முன்பாக வந்துநின்றார். 

அப்போது உரும்பிராய் வயற்கரைக் கோவிலடி நறுமணம் அவர் முகத்திலறைந்தது. இரு கரங்களும் அவரையறியாமலேயே நெஞ்சருகில் கூப்பியபடியிருந்தன. அழுத்தித் துடைக்கப்பட்ட கரிய பிள்ளையார் கண்ணாடிப் பெட்டிக்குள் போனகிழமை பார்த்ததற்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் மினுங்கியபடி வீற்றிருந்தார். கார்த்திகேசு கண்கள் வழக்கம்போல கண்ணீரில் துடிக்க ஆரம்பித்தன. கண்ணாடிப் பெட்டியின் இடப்பக்கமாகத் தெரிந்த அலுமினியப் பூட்டு எப்போதும் போல இறுக்கி அழுத்திப் பூட்டப்பட்டிருந்தது. கண்ணாடிப் பெட்டிக்கும் அவருக்கும் இடையில் போடப்பட்டிருந்த வளைந்த தடித்த கயிறு, பிள்ளையாரை நெருங்குவதற்குத் தடை வடமாகத் தொங்கியபடி இருந்தது. 

[2]

உரும்பிராய் சாவித்திரி வீதியிலிருந்து வயலுக்குப் போகும் கிறவல் ஒழுங்கையில் இந்திய இராணுவத்தின் வாகனங்கள் விரைந்தன. நித்திரையிலிருந்த கார்த்திகேசு படுக்கையிலிருந்து பாய்ந்து எழுந்தார். இராணுவ வாகனங்கள் கோயில் பக்கமாகப் போயிறங்கிய சில நொடிகளில் துவக்கின் பொழிச்சல் வயலெங்கும் மழையென அதிர்ந்தது. அன்று காலை கோயிலுக்குள்ளிருந்த இயக்கப் பெடியன்களுக்கும் வாகனங்களில் போயிறங்கிய இந்திய இராணுவத்துக்கும் மோதல் நடந்து முடிந்த பிறகுதான் சூரியனே வெளிச்சத்துடன் எழுந்தது.

கார்த்திகேசு கிணற்றடிப் பின் வேலியடியில் நின்று கோவில் பக்கம் நோட்டம் விட்டார். இராணுவத்தினர் வயலுக்குள் குவிந்திருந்தனர். சிறிது நேரத்தில் உழவு இயந்திரமொன்று வயலுக்குள்ளிருந்து வெளியே வந்தது. அதன் பின்பெட்டியில் வெட்டிப்போட்ட தென்னை ஓலையின் மேல் நீலச்சாரத்தோடு ஏழுபேரின் சடலங்கள் கிடந்தன. உழவு இயந்திரம் கிறவல் பாதையில் குலுங்கியபடி வெளியில் போனது. அதைப் பார்த்ததிலிருந்து கார்த்திகேசுவை அக்காட்சியின் கோர வாடை பீடித்திருந்தது.

வயல்கரைப் பிள்ளையார் கோவிலடியில் இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் பெரிய வீதி சதாசிவம் வயல் கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டான். அன்றிலிருந்து இரவு முழுவதும் சுற்றுவட்டாரத்தில் நாய்கள் குரைத்துக்கொண்டேயிருந்தன. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் வீதிகள் வெறிச்சோடின. கார்த்திகேசு சைக்கிளின் முன்னால் வெள்ளைக் கொடியொன்றைப் பறக்கவிட்டபடி மருதனார் மடச் சந்தை வரைக்கும் போய் வந்தார். 

சதாசிவத்தின் செத்த வீட்டிற்கு இரண்டு ஜீப்களில் இந்திய இராணுவத்தினர் வந்திருந்தார்கள். தலைப்பாகை கட்டிய இரண்டு உயரமான மீசைக்காரர்கள் வாசலிலேயே நின்ற காரணத்தினால், அடிக்கடி சதாசிவத்தின் கடைக்கு வருபவர்கள்கூட துக்க வீட்டுக்கு வரவில்லை. கார்த்திகேசுவுக்கு பிள்ளையார் கோவிலடியில் இப்படியொரு சண்டை நடந்தது பெரிய துயரத்தைத் தந்தது. 

யாருமே போக முடியாத கோயிலுக்கு, இனி தான் எப்படி போவது என்ற கவலையோடு, வேலியில் நின்று கிளுவைக்குப் பூப்போட்டு கும்பிட்டுவிட்டு வந்தார். தூரத்தில் நின்று பார்த்தபோது, முன்பக்கக் கோவில் சிதைந்து கிடப்பது தெரிந்தது. உடைந்து சரியாமல் கிடந்த பட்டைப் பட்டையான சிவப்பு வெள்ளைச் சுவரொன்றில் சாணி எறிந்த மாதிரி வெடிபட்ட ஓட்டைகள் கிடந்தன. எவ்வளவுதான் கண்களைச் சுருக்கிப் பார்த்தாலும் அதற்கு அப்பால் கார்த்திகேசுவுக்கு எதுவும் தெரியவில்லை. 

வயற்கரை பிள்ளையார் கார்த்திகேசுவுக்கு மூன்று தலைமுறைக் கோயில். இரண்டாம் நாள் திருவிழாவையும் மஞ்சத்தையும் பரம்பரை பரம்பரையாக செய்துவருகின்ற பெயர்போன குடும்பம் கார்த்திகேசுவுடையது. பெயர் சொல்வதற்கும் பெருமிதத்துக்கும் கார்த்திகேசு பரம்பரைக்குப் பிள்ளையார் உதவிசெய்து வந்தாலும் கார்த்திகேசுவுக்குப் பிள்ளையாருடன் ஒரு நெருக்கமான பிணைப்பு. மூலஸ்தானத்திலிருக்கும் பிள்ளையாரைவிட வெளிப்பிரகாரத்திலிருந்த வலப்பக்கக் காது உடைந்த பிள்ளையார்தான் கார்த்திகேசுவின் பிரியத்துக்குரியவர். 

ஒருகிழமை கழித்து, விதானை தவராஜாவையும் அழைத்துக்கொண்டு கார்த்திகேசு உரும்பிராய் சந்தியடியில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தின் முகாமுக்குப் போனார். கார்த்திகேசுவுடன் முன்பு கொழும்பில் பணிபுரிந்த தவராஜாவுக்கு, கார்த்திகேசுவின் வருகையும் வார்த்தைகளும் எப்போதும் நிழல் போன்றவை. கார்த்திகேசு கேட்டவுடனேயே அவரைத் தன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு இராணுவ முகாமுக்குப் போனார்.

சதாசிவத்தின் துக்க வீட்டு வாசலில் நின்றவர்களில் ஒருவன் போல, முகம் முழுவதையும் முடியில் புதைத்திருந்த கப்டன் ரண்வீர் சிங்குடன் தவராஜா கதைக்கத் தொடங்கினார். “கோவிலுக்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையே” – என்று தன் அடர்ந்த முடியில் புதைந்திருந்த வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு அருள்கொடுத்தான். தவராஜாவுடன் மிகுந்த கரிசனையோடு பல விஷயங்களைப் பேசினான். தனது மகனின் படத்தைக் காட்டி, அவனைப் பிரிந்திருப்பது தனக்கு மிகவும் கடினமாக உள்ளதாக அன்னியோன்யமாகப் பேசி அனுப்பிவைத்தான்.

[3]

ஒற்றை எண்ணில் போவது நல்லதில்லை என்று கார்த்திகேசு சொன்ன ஆலோசனையின்படி, எட்டு பேர் அன்று வெள்ளிக்கிழமை வயலுக்குள் இறங்கினார்கள். தவராஜாவும் கார்த்திகேசுவும் முன்னால் நடந்துபோக, பிள்ளையாரைப் பார்க்கவென்று அயலில் இருந்து வந்த மற்றவர்கள் அவர்களைத் தொடர்ந்தார்கள். சதாசிவத்தின் சடலம் கிடந்த கிணற்றடிப் பக்கமாகப் போகாமல், கோயிலின் பிரதான வீதிக்கு இன்னொரு பக்கமாகக் கொண்டுபோகும் அகன்ற வரம்பின் வழியாக நடந்தார்கள். 

ஏழு  நாட்களாக மனித வாடை தீண்டாத வயற்காற்றும் வரம்புப் புற்களும் அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தன. அனைவரும் கீழும் மேலுமாக பார்த்துப் பார்த்து நடந்தனர். மீண்டும் பிள்ளையாரிடம் போகிறோம் என்ற நிறைவுக்கு மேல், கோவிலடிக் கொலைகளால் வடியாத பதற்றம் தொண்டை வரைக்கும் கொதித்தபடியிருந்தது. 

கோவில் வாசலடிக்குப் போனதும் எல்லோருமே விறைத்து நின்றார்கள். ஒருபோதும் பார்த்திராத நடுக்கத்தைத் தந்தது கோயில். வாசல் மணிக்கதவின் ஒருபாதி பிளந்து உட்புறமாகப் பாறிக்கிடக்க, அர்த்த மண்டபமும் தரிசன மண்டபமும் முற்றுமுழுதாகவே ஆகாயம் பார்த்தபடியிருந்தது. “பிள்ளையார் அருளால கொடிமரத்துக்கு ஒண்டும் நடக்கயில்லை” – என்று நடுங்கிய உதடுகளால் உச்சரித்துக்கொண்டு கார்த்திகேசு கோவிலுக்குள் கால்வைத்தார். 

தன்னை அறியாமலேயே இடப்பக்க உட்பிரகாரத்தில் நடக்கத் தொடங்கிய கார்த்திகேசு, தெற்கு வீதிப் பிள்ளையார் மூலஸ்தானத்தை எட்டிப் பார்த்தபடி ஓடினார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அவர் நாவில் சுவை பிடிபடாத திரவமொன்று சுரப்பது போலிருந்தது. உடைந்த ஓடுகளை அவரது பாதம், வேகமாக மிதித்துக் கடந்தது. பிள்ளையார் மூலஸ்தானத்துக்கு முன்பாகப் போய் படியில் ஏறிநின்று பார்த்த கார்த்திகேசுவுக்கு கொடிமரமே பாறி தலையில் விழுந்தது போலிருந்தது. கண்கள் இருண்டன. பிள்ளையார் சிலையை அங்கு காணவில்லை. விக்கிரகம் இருந்த இடத்தின் அடியில், சிலையை அடித்துப் பெயர்த்த உடைவின் சிதிலங்கள் சிதறிக்கிடந்தன. 

கோவிலுக்குள் ஆங்காங்கே திசைக்கொன்றாகப் போனவர்கள் சிறிது நேரத்தில் கார்த்திகேசுவைக் காணவில்லை என்று தேடி வந்தார்கள். பிள்ளையார் மூலஸ்தானப் படியில் கார்த்திகேசு சாய்ந்து கிடப்பதைக் கண்டு, “கார்த்திகேசு…” என்று உரக்கக் கூவியவாறு தவராஜா ஓட்டுச் சத்தங்களுக்குள் பாய்ந்து வந்தார். சத்தம் கேட்ட திசைநோக்கி எல்லோரும் ஓடிவர, கார்த்திகேசு வியர்த்துப் போயிருந்த காரணத்தைக் கேட்டு அவர்களும் அதிர்ந்தார்கள். 

மெல்லிருளில் தீபாராதனைகளும் மணியொலிகளும் நிறைந்திருக்க, பொன்னொளியில் அலையாடும் அந்தச் சன்னிதானம், சில நொடிகளில் ஒப்பாரிகளால் அலறியது. ஊரின் ஆன்மாவைக் கீறிக்கிழித்ததால் பாய்ந்தோடிய இரத்த நதியின் நெடி கோவிலின் ஒவ்வொரு மூலையிலும் மணந்தது. 

மற்ற மூலஸ்தானங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பார்த்து வந்தவர்கள் சொன்னார்கள். எல்லோரும் சேர்ந்து பிள்ளையார் சிலையை இடிபாடுகளுக்குள் தேடத் தொடங்கினார்கள். பாகசாலை, அதற்கு வடக்குப் பக்கத்திலிருந்த நீர்க்கிணறு, களஞ்சிய அறை, வாகன சாலை முதற்கொண்டு, தவராஜா உள்கிணற்றுத் தண்ணீரைப் பிடித்து, கால்களைக் கழுவிக்கொண்டு, மூலஸ்தானம் வரைக்கும் போய் தேடி வந்தார். எல்லாச் சிலைகளும் அப்படியே இருந்தன. தெற்கு வீதிப் பிள்ளையார் சிலையை மாத்திரம் காணவில்லை. 

எல்லோரும் வெளிவீதிக்கு வந்து தேடினார்கள். ‘விதானையாரும் கொஞ்சச் சனமும் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்’ – என்ற தகவலைக் கேட்டு, மேலும் சிலர் வயல் வரம்புகளின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தது தெரிந்தது. வருவதற்குப் பயந்த கொஞ்சப் பேர் தூரத்திலேயே நின்று புதினம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தவராஜாவும் கார்த்திகேசுவும் ஒன்றாகவே சேர்ந்து தேடினார்கள். வயற்கிணற்றுப் பக்கமாகப் போய் மோட்டார் அறையையும் திறந்து பார்த்தார்கள். அங்கே காயாத இரத்தம் நிலத்திலும் மரக்கதவிலும் ஒட்டியிருந்தது.

[4]

கோயிலுக்குள் போன சனம், பிள்ளையார் சிலையைக் காணவில்லை என்று தேடித் திரிவதாகக் கேள்வியுற்ற ரண்வீர் சிங், விதானையை அழைத்து விசாரித்தான். இந்தத் தடவை கார்த்திகேசு போக வாய்ப்பிருக்கவில்லை. தவராஜா தனியாகப்போய் பிள்ளையார் கோவில் பெருமைகளையும் உரும்பிராய் சனத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் விரிவாக எடுத்துச்சொன்னார். ரண்வீர் தனது தடித்த மீசையை வருடியபடி தவராஜாவின் கண்களையே உற்று நோக்கிக்கொண்டு முழுக்கதையையும் கேட்டுமுடித்தான். 

ஆயுதங்கள் மோதிக்கொள்வது ஒருபுறமிருக்க, ஊர் கோவிலில் சாமி சிலை காணமல் போனது நல்லதுக்கு இல்லை என்று தவராஜா உள்ளே பயந்தார். இன்னும் இன்னும் ஊருக்குள் ஏதோவெல்லாம் நடைபெறப் போவதாகவே அவர் கணித்தார். ரண்வீரிடம் பேசியபோது அவன் கண்களில் தெரிந்த வெறியும், முன்புபோல் அல்லாத அவனது குரலில் தெறித்த திமிரும் ஊருக்கான சாபம் போலவே தவராஜாவுக்குக் கேட்டது.

கார்த்திகேசு தனது முயற்சியைக் கைவிடவில்லை. கோவிலுக்குப் பக்கத்திலுள்ள தோட்டக் கிணறுகளில் விக்கிரகத்தை எறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆள் பிடித்து, மோட்டார் போட்டு, இறைத்துப் பார்த்தார். ஒரு சில கிணறுகளுக்குள் தோட்ட வேலை செய்யும் சிலர் இறங்கியும் தேடிப் பார்த்து வெளியே வந்து கையை விரித்தார்கள். ஆனால், தன்னைவிட்டு ஒருபோதும் பிள்ளையார் போக மாட்டார் என்ற நம்பிக்கை கார்த்திகேசுவுக்கு இருந்தது. 

அன்று காலை, கார்த்திகேசுவை ஆர்மிக்காரன் ஜீப்பில் வந்து முகாமுக்கு ஏற்றிப்போயிருக்கிறான் என்ற தகவலோடு எழுந்த தவராஜா, சேர்ட்டைக் கொழுவிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஓடினார். பூட்டிக்கிடந்த சதாசிவம் கடையடியில் என்றைக்கும் இல்லாதவாறு இரண்டு மூன்று இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தனர். 

முதலில் “ரண்வீரைப் பார்க்க முடியாது” – என்று முகாம் வாசலில் நின்ற ஆர்மிக்காரன் தகவல் சொல்லிப் படலையை முடினான். “ஜீ.எஸ். வந்திருக்கிறன் என்று அவரிடம் சொல்லவும்” – என்று பணிவு பாராட்டி இரண்டு இன்சொல் உதிர்த்த பிறகு, அவன் தவராஜாவை உள்ளே அனுமதித்தான். கார்த்திகேசு வீட்டு மதிலில், ஏழு பேருக்கு ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி நோட்டீஸைக் கிழித்து எடுத்துவந்து தனது மேசையில் வைத்திருந்த ரண்வீர், தவராஜாவைப் பார்த்து – “இதற்கு வேறு யார் யாரெல்லாம் உடந்தை?” – என்று, தயாராக வைத்திருந்த கேள்வியால் தவராஜாவைச் செருகினான். தவராஜாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவன் நம்புவது ரண்வீரின் கண்களில் தெரிந்தது. 

முதல்நாள், கோயில் பெருமைகளைச் சொன்னது போல, இப்போது கார்த்திகேசுவின் பெருமைகளை அடுக்கத் தொடங்கினார் தவராஜா. மேசையை உதைத்துத் தள்ளிய ரண்வீர், ஹிந்தியில் பொரிந்து தள்ளினான். அவனை இவ்வளவு கோபத்தோடு தவராஜா ஒருபோதும் எதிர்கொண்டதில்லை. தனது பதவிக்குரிய மரியாதையை இழந்து, அவன் முன்னால் தானும் குற்றவாளியாக நிற்பதை உணர்ந்துகொண்ட தவராஜா, எந்நேரமும் அவனிடமிருந்து விழப்போகும் ஒன்றோ இரண்டோ அடியை அல்லது உதையை எவ்வாறு சமாளிப்பது என்று பதற்றத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். 

வேகமாக பக்கத்து அறைக்கதவை உதைத்துத் திறந்து உள்ளே சென்று, கார்த்திகேசுவை வெளியே இழுத்துவந்தான். உரும்பிராயின் ஆன்மா சிதையத் தொடங்கியிருப்பதை ஒரு கணத்தில் தவராஜா உணர்ந்துகொண்டார். கார்த்திகேசுவை பயங்கரமாக அடித்திருக்கிறார்கள். வலக்கண்ணுக்குக் கீழ் தடித்துப்போயிருந்தது. தலைமுடி கண்டபடி குலைந்து, ஒருபோதும் காணாத கோலத்தில் கார்த்திகேசு விறைத்துப்போயிருந்தார். 

வீடு வரும்வரைக்கும் இருவரும் கதைக்கவில்லை. எல்லாவற்றையும் ஊமையாக்கிவிடும் துயரம் அந்த நிலமெங்கும் மழையெனப் பெய்து ததும்பியது. 

[5]

மெல்பேர்னுக்கு புலம்பெயர்ந்த நாள்முதலே இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கென்று கார்த்திகேசுவை அவரது மகன் நிருபன் அழைத்துப்போவான்.  

“அப்பு…. அவங்கட நாட்டப் பிடிச்சு வச்சுக்கொண்டு, கட்டடங்களை உயர உயரமாகக்கட்டி, பெயிண்ட் அடிச்சுவிட்டா சரியே? இந்த வாண வேடிக்கைகள் எந்த வானத்தில் விட்டாலும் வடிவாத்தானிருக்கும்.”

புதுவருட இரவன்று, மெல்பேர்ன் நகரின் ஒளிக்காட்சிகளையும் வாண வேடிக்கைகளையும் காண்பிக்க அழைத்துச்சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, கார்த்திகேசு கீழ்க்குரலில் தனது மனம் திறந்து இப்படித்தான் கதைத்தார்.  

ஆனால், ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் குடியிருப்புகளைப் பார்ப்பது, அவர்களது வாழ்வியல் சித்திரங்கள் பத்திரப்படுத்தியிருக்கின்ற கூடங்களைப் பார்ப்பது, விக்டோரியாவின் தென்கிழக்குக் கரையில் மோதி விளையாடும் அலைகளின் நடுவில் எழுந்து நிற்கும் உலகப் பிரசித்தமான ஏழு குன்றுகள், ஜீலோங் தங்க வயல், அதற்கு அருகே செழித்துப் பயிராகும் கடுகு வெளி போன்ற எழில்கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதென்றால், கார்த்திகேசுவுக்கு அகமும் முகமும் ஒளியில் ததும்பும்.

மூன்று மாதங்களுக்கு முன்னர், மெல்பேர்னுக்கு வந்திருந்த நிருபனின் சிநேகிதனும் அவன் குடும்பமும் மெல்பேர்ன் நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, ‘மகன் தன்னையும் இழுக்கப் போகிறானே’ – என்று கார்த்திகேசு நெளிந்தார். பிறகு, நிருபன் கேட்டவுடன் தனது பிடிவாதத்தை அப்படியே மடித்துவைத்தார். வேறு நாடொன்றுக்குப் போவதுபோல மெல்பேர்ன் நகரை நோக்கிப் புறப்பட்ட காரில் எல்லோருடனும் ஏறிக்கொண்டார். அந்தப் பயணம் கார்த்திகேசுவுக்கும் புதிதாகத்தானிருந்தது. 

வரும் வழியில், சென் கில்டா வீதியின் அடுத்தப் பக்கத்திலிருந்த அருங்காட்சியகத்துக்குப் போவதாக ஏகமனதாக எல்லோரும் விருப்பம் தெரிவிக்க, கார்த்திகேசுவும் இழுபட்டுக்கொண்டு போனார். 

[6]

நீலமும் சிவப்பும் மாறி மாறி தலையில் சுழல, அருங்காட்சியகத்துக்கு முன்னால் வேகமாக வந்துநின்ற ஆம்புலன்ஸ், கார்த்திகேசுவைப் பத்திரமாக ஏற்றியது. நிருபனும் தகப்பனுக்குத் துணையாக ஆம்புலன்ஸில் வரலாம் என்று தாதிகள் அனுமதித்தபோதும், வழி தெரியாத விருந்தினர்களை நகரின் நடுவே விட்டுச்செல்ல முடியாது என்றவன், வீட்டுக்குச் சென்றுவிட்டு, அல்பேர்ட் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். 

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தகப்பன் முற்றுமுழுதாக நினைவு இழந்துவிடவில்லை என்பது நிருபனுக்கு ஓரளவுக்குத் தெம்பினைத் தந்தது. அத்துடன், அவருக்கு அவ்வளவு வயதொன்றுமில்லை. கீழே விழுந்ததில் தலையில் சிறிய அடி, அதில் பயந்திருக்கலாம், வேறொன்றுமிருக்காது – என்று வரிசையாக ஆறுதல்களை மனதில் அடுக்கியபடி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது, அங்கு கார்த்திகேசு அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்படாமலேயே ஆம்புலன்ஸ்கள் அழைத்துவரும் நோயாளர்களைத் தங்கவைக்குமிடத்தில், கட்டிலில் உட்கார்ந்தபடியிருந்தார். தகப்பனை அந்த நிலையில் பார்த்தது, உள்ளேயிருந்த அத்தனை அச்சத்தையும் நிருபனுக்கு ஊதித்தள்ளியது.

“என்ன சொன்னவயள் அப்பா…” – என்றபடி அருகில் போக – 

வாய் நிறைய புன்னகையோடு “பிள்ளையார் கிடைச்சிட்டார் அப்பன், நீ பார்த்தனியா” – என்றார் கார்த்திகேசு.

“அது கிடக்கட்டுமப்பா, டொக்டர் வந்து பாத்தவரா…. என்ன சொல்லினம்? செக்கப் ஏதாவது செய்தவயளா?” 

கார்த்திகேவின் வலப்பக்க நெற்றியில் சாதுவான வீக்கம் தெரிந்தது. ஆனால், மிகுந்த மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இப்போதைக்கு கட்டிலில் எழுந்துவிட்டவர், இன்னும் சிறிது நேரத்தில், யார் மறித்தாலும் வெளியில் ஓடிவிடுவார் போலிருந்தது. 

அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து, மெதுவாக ஒவ்வொரு படங்களுக்கும் சிலைகளுக்கும் முன்னால் ஊர்ந்தபடி, அதில் எழுதப்பட்ட வசனங்களை உச்சரித்தபடி நடந்து போய்க்கொண்டிருந்த கார்த்திகேசு, இரண்டாவது மூலையில் திரும்பிய மாத்திரத்தில், ஒரு கணம் உறைந்துபோய் நின்றார். சலனமின்றி உடலின் எந்தப் பாகத்தையும் ஊன்றாமல் விழுந்தார். தூரத்தில் தனது நண்பனின் குடும்பத்திற்கு காங்காருச் சிலை பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிருபனுக்கு இந்தக் காட்சி இன்னமும் கண்ணுக்குள்ளேயே வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது. 

நிருபனுக்கு, பின் வயலடிப் பிள்ளையார் கோவில் பிரச்சினை சிறுவயதிலிருந்தே தெரிந்ததுதான். தகப்பனுக்கு ஆர்மி அடித்து, வீட்டுக்குத் திரும்பிவந்த போது தாய் முன் படலையடியில் நின்று கூவியழுத சத்தத்தையும்கூட அவன் மறந்துவிடவில்லை. ஆனால், தாயின் மரணம் அவனுக்குப் பழைய இழப்புகளையும் காயங்களையும் மறக்கச் செய்திருந்தது. சொல்லப்போனால், ஊரின் மீதும் சிறு வெறுப்பைக் கொண்டுவந்திருந்தது. அதன் பிறகான இடப்பெயர்வுகள் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இயன்றளவு கரைத்துவிட்டது. அவன் வாழ்வில் தகப்பன் என்ற மனிதன்தான் மிக முக்கியமானவராக ஒளிர்ந்தபடியிருந்தார். அவரது காயங்களின் மூலமான வலி எது என்று இப்போது புரிந்தது. 

நிருபன் தகப்பனைப் பார்த்தான். கார்த்திகேசு கட்டிலில் ஊன்றிய கை விரல்களால் தாளமிட்டபடியிருந்தார். ஆஸ்பத்திரித் தரையை மலர்ந்த முகத்தோடு பார்த்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். தன் வாழ்வில் எல்லாமும் கிடைத்துவிட்ட திருப்தியின் பேரொளி அந்த முகத்தில் பூரித்திருந்தது.

உள்ளே வந்த செவிலிப் பெண் கார்த்திகேசுவின் இரத்த அழுத்தம், பரம்பரை வியாதிகள் குறித்த தரவுகளைக் கேட்டும் பழைய கோப்புகளிலிருந்தும் எடுத்து ஒப்பிட்டு, சோதனை செய்தாள். மதியம் மருத்துவர் வந்து பார்த்துவிட்டால், வீட்டுக்குப் போகலாம் என்றாள். 

[7]

விரிவான மின்னஞ்சல் ஒன்றினை ஆஸ்திரேலியத் தொல்லியல் திணைக்களத்துக்கும் விக்டோரியத் தொல்லியல் திணைக்களத்திற்கும் நிருபன் அனுப்பினான். மெல்பேர்ன் அருங்காட்சியகத்திலிருக்கும் வலப்பக்கச் செவியுடைந்த பிள்ளையார் சிலை எவ்வாறு வந்தது, அதன் பூர்வீகம் என்ன என்பவை குறித்து அறிந்து, தகப்பனுக்குத் தெரியப்படுத்துவது தனக்குரிய கடமை என்று எண்ணினான்.

கூடவே, ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்த தகப்பனின் சுகநிலை குறித்த மின்னஞ்சல்களுக்கும் பதில்களை அனுப்பி, “ஒரு சிக்கலும் இல்லை, அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” – என்று அறிவித்துவிட்டான். 

அவன் எதிர்பார்த்ததைப் போல, அடுத்தநாள் மெல்பேர்ன் நகருக்குத் தனியாகச் சென்றுவரப் போவதாகக் கிளம்பினார் கார்த்திகேசு. தான் ஆஸ்திரேலியத் தொல்லியல் திணைக்களத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய தகவலைத் தகப்பனிடம் சொன்னான் நிருபன். 

“அப்பன்… அது எங்கட பிள்ளையாரேதான். எனக்குத் தெரியாதா? இவங்கள் கள்ளக்கூட்டம். இவங்கட பூர்வீகத் தொழிலே களவுதானே? எங்கையாவது, வேற கள்ளப் பேர்வழிகளிட்ட சுருட்டியிருப்பாங்கள்” – என்று சொல்லிக்கொண்டு குளிசையை எடுத்துக் கவனமாகப் பிரித்து வாயில் போட்டுவிட்டு தண்ணீர் குடித்தார்.

“பகிடி என்னெண்டால், வேற நாடுகளில உயிருக்கு ஆபத்தெண்டு இந்த நாட்டுக்கு ஓடிவருகிற அகதிகளுக்கு வருஷக்கணக்கில தடுப்பு முகாமாம். ஆனால், வேற நாடுகளில் தாங்கள் களவெடுத்து வச்சிருக்கிற சாமான்களுக்கு நகரத்திண்ட நடுவில காட்சியகமாம். படகில வாற அப்பாவிச் சனங்கள் ஊரில எங்கையும் கோவிலுக்குள் சிலையா இருந்திருந்தா தப்பியிருக்கும்” – சொல்லி முடித்துவிட்டு, இரண்டாம் தடவையும் அண்ணாந்து மீதித் தண்ணீரை நிறைவாகக் குடித்தார். தொண்டையில் இறங்கிய தண்ணீரின் வேகமும் சத்தமும் அவரது கோபத்தின் காரத்தைக் காண்பித்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளியும் மெல்பேர்ன் நகரத்துக்குப் பயணம் போகத் தொடங்கிய கார்த்திகேசுவுக்கு, தனது பிள்ளையாருடன் பழைய நெருக்கம் வந்துவிட்டதாக உணர்ந்தார். தனக்குள் எல்லாமுமாக வியாபித்திருந்த ஏதோவொரு சக்தி மீளக் கிடைத்துவிட்டது போலவும் தனது இளமையை மீட்டுவிட்டதாகவும் திளைத்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, வேலையிலிருந்து கார்த்திகேசுவின் மகனுக்கு ஆஸ்திரேலியத் தொல்லியல் திணைக்களத்திடமிருந்து பதில் வந்திருந்தது. அதில், 1995ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட பிள்ளையார் சிலையை வாங்கிய லண்டன் வர்த்தகர் ஒருவரிடம் ஆஸ்திரேலியத் தொல்லியல் திணைக்களம் ஏலத்தில் கொள்முதல் செய்ததாகவும், ஆஸ்திரேலியாவில் முதலில் அடிலெய்ட் நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது என்றும் பின்னர், மெல்பேர்னுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆஸ்திரேலியத் தரப்பு ஆவணங்கள் அனைத்தையும், உத்தியோகப்பூர்வமாக விண்ணபித்து காரணத்தை விளக்கிக் கூறினால், தங்களால் முன்வைக்க முடியும் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கார்த்திகேசுவின் மகனுக்கு ஓரளவுக்கு உண்மை வெளித்தது. தகப்பன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்பதும் புரிந்தது. ஆறுதலும் அமைதியும் இதயத்தைச் சூழ்ந்தது.

தகப்பனின் கைப்பேசிக்கு அழைப்பை எடுக்கப்போன போது, அவனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது விக்டோரிய பொலீஸ் என்று அடுத்த முனையில் தன்னை அறிமுகம் செய்துகொண்டது. 

[8]

பொலித்தீன் பையிலிருந்த பூக்களைக் கவனமாக வெளியில் எடுக்கச்சென்ற கார்த்திகேசு திடீரென்று குலுங்கி அழத்தொடங்கினார். ஓரிரு பூக்கள் அவர் கையிலிருந்து தவறி கீழே விழுந்தன. அவர் உடல் எடையிழந்து போனது போலத் தள்ளாடத் தொடங்கியது. அவருக்குள் பெருந்தீயாய் மேலெழுந்த துயரை அவரது முதிய உடலால் மறைக்க முடியவில்லை. 

இதே நாள்தான் அன்று அந்த இரத்தக்களறி நடந்தேறியது. அன்றுதான், கார்த்திகேசு தன்னுள் இயங்கிய ஒரு பாகத்தை இழந்தார். அதன் பிறகு ஒவ்வொன்றாய் வாழ்வில் இழந்துகொண்டேயிருந்தார். வாழ்வில் விட்டுப்போன பெரும் நம்பிக்கையொன்றினால், வழி தவறிப்போனவர் போல திக்கற்றுக் கிடந்தார். எல்லாருக்கும் எதற்கும் ஆறுதல் சொல்லத் தெரிந்தவர் மனமும் உதடுகளும் உள்ளுக்குள் பேரதிர்ச்சியொன்றைச் சுமந்தபடியே இன்றளவும் இயங்கின. 

முழந்தாளில் விழுந்து விம்மியழத் தொடங்கிய கார்த்திகேசு, கணநேரத்தில் எழுந்து, முன்னே தொங்கிக்கொண்டிருந்த கயிறை விலத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார். பிள்ளையார் உட்கார்ந்திருந்த கண்ணாடிப் பெட்டியை முழுதாக இரு கைகளாலும் அரவணைத்தபடி அவர் அழுத சத்தம் அங்கு யாருக்கும் கேட்ட மாதிரித் தெரியவில்லை. அதுபற்றி எதுவும் உணராதவராக கார்த்திகேசு பல காலங்களுக்குப் பிறகு திருப்தியாக அழுதார். தனது ஏக தத்துவமான – இயங்குசக்தியான – பாதி ஆன்மாவான – பிள்ளையாரை, சம்மந்தமே இல்லாத கூட்டமொன்று ஒரு சிறைக்கைதி போல கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது கண்ணீரும், மீண்டும் மீண்டும் உள்ளே நுரைத்தபடியிருந்த ஆற்றாமையும், துயரமும் ஆத்திரத்தை மூட்டின. 

அவர் காலடியிலும் கைளிலுமாக சிதறிக்கிடந்த பூக்களைப் பார்த்தார். உறைந்துபோன உதடுகளால் எதையோ வேகமாக உச்சரித்தார். அதன்பிறகு, கண்ணாடிப் பெட்டியை அப்படியே தூக்கிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி வேகமாக நடந்தார்.

அருங்காட்சியகமே அதிரும் வண்ணம் அலாரம் ஒலித்தது. உள்ளே நின்றுகொண்டிருந்த பார்வையாளர்கள் ஆளையாள் பார்த்து மிரண்டார்கள். எங்கெங்கோ இருந்த பெரும் எண்ணிக்கையில் ஓடிவந்த காவலாளிகளின் காலடிச் சத்தத்தினால், அருங்காட்சியகமே துப்பாக்கி ரவைகளால் அதிர்வதுபோல் குலுங்கியது. எல்லோரும் சேர்ந்து அந்த முதியவரை மடக்கிப்பிடிக்க, அவர் அந்தக் கண்ணாடிப் பெட்டியை விடாமல் திமிறினார். உரத்த குரலில் புரியாத மொழியில் குழறினார். 

தடித்த காவலாளி ஒருவன், மூர்க்கமாக அவரது கையை மடக்கி, இலாவகமாக அந்தக் கண்ணாடிப் பெட்டியைப் பிடுங்கினான். அப்போது அந்த முதியவர் தனது சமநிலை குலைந்து தரையில் விழுந்தார். அவரை கைத்தாங்கலாக இரண்டுபேர் வெளியில் அழைத்துப் போகும்போது, அந்தத் தடித்த காவலாளி கண்ணாடிப் பெட்டியை அது கிடந்த இடத்தை நோக்கிக் கொண்டுபோனான். பொருக்கு விழுந்த கால்கள் தரையில் தேய, தன்னை இழுத்துச்செல்லும் காவலாளிகளின் கரங்களின் மேல் தாவிய அந்த முதியவர், கண்ணாடிப் பெட்டியயைக் கூர்ந்து பார்த்தபடி, எதையோ உரத்துக் குழற எத்தனித்தார். கண்ணாடிப் பெட்டிக்குள் கிடந்த உரும்பிராய் வயற்கரைப் பிள்ளையாரோடு சேர்ந்து எல்லோரும் வேடிக்கைப் பார்த்தபடியிருந்தனர்.

தனது முழுப்பலத்தையும் திரட்டி “ஐயோ எங்கட பிள்ளையார்……” – என்ற கார்த்திகேசுவின் தீனக்குரல், அருங்காட்சியகத்தில் தாகத்தோடு அடர்ந்து ஒலித்தது. அது அங்கிருந்த எல்லா ஆதிக்குடிகளினதும் ஒற்றைக் கூவலாக காற்றை உடைத்தபடி ஓங்காரமாக எதிரொலித்தது.

https://tamizhini.in/2021/04/25/உறக்கமில்லாக்-குருதி/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.