Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஸ்புல்லா, ஜஸீமை உடன் விடுதலை செய்யுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நமது நிருபர்) 

அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண  செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன்  எமது பிரஜைளின் ஒரு பகுதியினர்  இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை  மௌனம் காக்க வைத்துள்ளன என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள்   தெரிவித்துள்ளனர்.  

ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் பல்கலைக்கழகங்களின் 96 விரிவுரையாளர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன்  இன்றைய தினம் இணைய வழியில் ஊடக மாநாடு ஒன்றையும் நடத்தினர்.  

இந்நிலையில்  குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண  செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன்  எமது பிரஜைளின் ஒரு பகுதியினர்  இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை  மௌனம் காக்க வைத்துள்ளன. 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாகுற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் ஏப்ரல் 14, 2020 அன்று கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 9 இற்கு அமைய 10 மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 

கைது செய்யப்படும்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாவன உயிர்த்த ஞாயிறு தாக்குதாரர்களுக்கு“உதவி புரிந்து உடந்தையாக செயற்பட்டார்” என்பதாகும். தற்போது இவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 2(1)(h) இற்கு அமையவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் பிரிவு 3(1) இற்கு அமையவும் பேச்சு தொடர்புடைய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் வயதுக்கு வராதவர்களால் குற்றவியல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த சிறுவர்கள் தங்களை அச்சுறுத்தலுக்கும் கட்டாயத்திற்கும் உட்படுத்தி தகவல்கள் பெறப்பட்டதாக கூறுகிறார்கள்.

மே 16 2020 அன்று பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினால்  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜஸீம் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜஸீமினுடைய கைதிற்கான குற்றச்சாட்டு இவருடைய நூலான நவரசம் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை உள்ளடக்கியது என்பதுடன் மாணவர்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை போதித்தார் என்பதாகும்.

பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையசில மனோதத்துவ வைத்தியர்களை  உள்ளடக்கிய“வல்லுனர்கள் குழு” ஒன்றினால் இக்கவிதைகள் தொடர்பாக பல தெளிவற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்விமர்சனத்தின் படி, இந்நூலின் உள்ளடக்கமானது வன்முறை,வெறுப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் கருத்துக்களை கொண்டிருப்பதாகும்,இவர்களுடைய அறிக்கையானது மேற்கூறப்பட்ட முடிவுகள் தொடர்பான நியாயப்படுத்தலை வழங்க தவறியதுடன் மேலும் இவ் ஏற்பாட்டில் இரண்டு வெவ்வேறு விதமான முரண்பட்ட மொழிபெயர்ப்புகளும் (சிங்கள மற்றும் ஆங்கிலம்) உள்ளடங்கியுள்ளன என்றும் கூறப்பட்டது. இவ்முரண்பட்ட தன்மையானது இவர்களுடைய இந்த செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். 

பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினால் கூறப்பட்ட விடயங்களிற்கு முரண்பட்ட வகையில், இந்த கவிதைகள்  வன்முறை சம்பந்தமான விடயங்களை ஆழமாக விமர்சிக்கின்றன என்பதை அண்மைய மொழிபெயர்ப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஹிஸ்புல்லாவின் கைதும் தொடர்ச்சியான தடுப்புக்காவலும் சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கும் சட்ட ஆட்சிக்கும் எதிரான தாக்குதலாகும். அவ்வாறே, ஜஸீமினுடைய   கைதானது ஒருவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மீதான ஒரு தாக்குதல் என்பதுடன் எண்ணங்களின் மீதான ஒரு பரந்த போர் என்பதனை தெளிவாகப் புலப்படுத்துகிறது.இரண்டு வழக்குகளினதும் போக்கினை பார்க்கும்போது தெளிவாக புலப்படுவது யாதெனில்  ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஆகியோரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதாகும்.  

இழிவான மற்றும் கேள்விக்குரிய உத்திகள் பல அவர்களுக்கு எதிரான வழக்குகளை உருவாக்க தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் தடுப்புக்காவலில் அவர்களுடைய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமை படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது.இச் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அரசினால்“தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் வலுப்படுத்தவும்படுகிறது.

மார்ச் 2021இல் 1000 மத்ரசா பாடசாலைகள்; மூடுதல் மற்றும் புர்காவை தடை செய்தல் போன்ற திட்டங்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்மொழியப்பட்டது. ஒரு மாத காலத்திற்குப் பின் அமைச்சரவையினால் பொதுவெளியில் அனைத்துவிதமான முகக்கவசங்களைஅணிவதற்கான தடைக்குஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் மே மாதத்தில் சுங்கத் திணைக்கள உப பணிப்பாளரினால்  நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து விதமான இஸ்லாமிய சமய  தொடர்புடைய நூல்களும்  பாதுகாப்பு அமைச்சினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற அறிவித்தலும் வழங்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லீம், என்ற காரணத்திற்காக ஒருவர் குற்றவாளியாக்கப்படுவதைபுலப்படுத்துவதுடன் மேலும் எமது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான ஒரு தாக்குதல் என்பதையும் காட்டி நிற்கிறது.

முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகள் கொவிட்நிலைமைகளிலும் பிரதிபலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொவிட் தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் சுகாதார அமைச்சினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு முரண்பட்ட விதத்தில்கொவிட் தொற்றினால் இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பான ஒரு கட்டாய சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய சிலர் உள்ளடங்கலாகபல நிபுணர்களால் ஆதாரமற்ற பொது சுகாதார விதிகள் குறிப்பிடப்பட்டு இவ் கட்டாய சட்டமானது ஆதரிக்கப்பட்டது. மேலும் இது முஸ்லீம்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அவர்களது இறப்பு தொடர்பான சடங்குகளைஅலட்சியம் செய்யும் அல்லது அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். இன்று தகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியான ஓட்டமாவடிஇ மட்டக்களப்பு பிரதேசத்தில் மட்டுமே இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பான சிக்கல்கள் புலப்படுத்துவது யாதெனில் கொவிட் தொற்றினை முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு ஆயதமாக பயன்படுத்தும் ஒரு வெளிப்படையான முயற்சி என்பதாகும.;வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர்,அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஊடகத்தின் அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் முஸ்லீம்களே இவ் வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது.

இப்போக்கு ஒன்றும் புதியதல்ல. ஒரு தசாப்தத்திற்கு மேலாக முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெறும் உச்சக்கட்ட வன்முறையின் ஒரு தொடர்ச்சியே இதுவாகும். 2012 இல் ஆரம்பித்த ஹலாலிற்கு எதிரான பிரச்சாரம்;, அளுத்கம மற்றும் திகனவில் இடம்பெற்ற கலவரம்,பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் உள்ளடங்கலாக பல செயற்பாடுகள் இதற்கு ஆதாரமாகும். மேலும், அரசியல் மயமாக்கப்பட்ட பிரச்சாரங்கள் பல முஸ்லீம் தனிமனிதர்களை குறிவைத்து இடம்பெற்றுள்ளன. 

உதாரணமாக வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கட்டாய கருத்தடையில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டின் மூலம் கைது செய்யப்பட்டார். மற்றும் செயற்பாட்டாளர்றம்ஷி றஷீக்உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப்பின்முஸ்லீம்;களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது கண்டனம் தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புடைய அரச துறைகள் இவ்வாறான வழக்குகளை வேகமாக முன்னெடுக்கும் நிலமையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுமுஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெறும் பல வன்முறைகளை தடுக்க தவறியதுடன் ஒருவரையும் பொறுப்புக்கூற வைக்கவில்லை.

எதேச்சையதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கல் வேகப்படுத்தும் மத்தியில்தான் முஸ்லீம் மக்கள் குறிவைக்கப்படுவதுடன் ஐனநாயக அமைப்புக்களும் பலவீனமாக்கப்படுகின்றன. பல உயர் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் விசாரணைக்குட்படுத்திய குற்றவிசாரணைப்பிரின் அதிகாரியான சானி அபயசேகர மற்றும் பௌத்தமதத்தை விமர்சித்து எழுதியது என்று குற்றஞ்சாட்டப்பட்ட சக்திகா சத்குமார போன்ற பலர் கைது செய்யப்பட்டார்கள். 

பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால ஒழுங்குகள்  அரசியல்மயமாக்கப்பட்ட கருவிகளாக அதிகாரத்தால் பயன்படுத்தப்படுகின்றன. அரச நிறுவனங்களையும் நீதித்துறையையும் கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் இந்தச் சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை அணிதிரட்டல்கள், ஆட்சியாளர்களை எதிர்போரை தாக்குவதற்கும் மற்றும் மாற்றுக்கருத்தை நொருக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

கல்வித்துறையில் உள்ள அனைவரும் தமது பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கேள்வி எழுப்புவது அவசியமாகும். அத்துடன் பொது உயர் கல்வி நிறுவனங்களின் அங்கத்தவர்கள் என்ற முறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவேண்டும். நியாயமின்மை, பெரும்பான்மை அரசியல், இனவாதம் போன்றவை ஏற்படுத்திய அழிவுகள் மூலம் கற்றுக்கொண்டவையை அடிப்படையாக வைத்தும் நாளாந்தம் எமது சமூகத்தின் ஒரு பகுதியினர் அச்சத்துடனும் பாதுகாப்பின்மையுடனும் வாழ்வதை வைத்தும் நாம் அனைவரும் இவ் தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்.தீங்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவது அனைவர் மீதும் நிச்சயமாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்எனநாங்கள் நம்புகிறோம்.

ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீம்; ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  அத்துடன்; இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரட்டும் பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதையும் புலப்படுத்துகிறது.மேலும் குற்றவியல் நீதி முறைமையின் சீரழிவு மற்றும் அரச துறையின் வீழ்ச்சி சமூகத்;தின் அடிப்படையான ஐனநாயகத் தளங்களை சீர்குலைக்கிறது என்ற ஆழ்ந்த கவலை எங்களுக்குண்டு. 

ஆகவே நாங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளை நிறுத்தவும் ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அதுபோன்றஏனைய சட்டங்களை இரத்து செய்யுமாறு கோருகிறோம். இறுதியாகஎமது கல்விச் சுதந்திரத்தை பயன்படுத்தி இப்போராட்டத்தை விரிவு படுத்துவதன் மூலம்அனைவர் சார்பிலும் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு அனைத்து கல்வி சார் சமூகத்திற்கும் அழைப்பு விடுக்கிறோம்.

ஹிஸ்புல்லா, ஜஸீமை உடன் விடுதலை செய்யுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.