Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆள் இல்லா ஊருக்குப் பாதை போடும் ஜப்பான் ஏ-9 பாதையை வழிமறிக்கும் மஹிந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் இல்லா ஊருக்குப் பாதை போடும் ஜப்பான்

ஏ-9 பாதையை வழிமறிக்கும் மஹிந்தர்

-சி.இதயச்சந்திரன்-

சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை அழுத்தம் கொடுக்காதவாறு இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில், மிக நேர்த்தியான காய் நகர்த்தலை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார உதவி வழங்கும் நிரந்தரமான நட்பு நாடென்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. நிதி உதவிகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டால் வேகமாக வளர்ந்து வரும் இந்திய முதலீடு இலங்கையில் அதிகரித்து, தனது இல்மனைட் வியாபாரத்தில் மண் விழுந்து விடுமோ என்கிற கரிசனையோடு கூடிய பதற்றம்தான்.

ஆயுத உதவிகளோடு உளவுத்தகவல் பரிமாற்றம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்தியாவும், காலியில் துறைமுகம் நிர்மாணிப்பதோடு ஆயுத தளபாடங்களை கடனடிப்படையில் வழங்கும் சீனாவும், வலிந்து தாக்கும் போர்க்கருவிகளை உடனுக்குடன் அனுப்பும் சீனப் பினாமியான பாகிஸ்தானும் களத்தில் நிற்கும் போது, நிதி உதவியைக்கூட வழங்காவிட்டால் இலங்கை விடயத்தில் தனிமைப்படுவேனென ஜப்பான் எண்ணுவதில் தவறில்லை. இரண்டாம் உலக யுத்தத்தில் எடுத்த பிழையான நிலைப்பாட்டினால் , ஆயுதங்களை வழங்கக் கூடத் தன்னால் இயலவில்லையே என்கிற ஆதங்கம் ஜப்பானுக்கு இப்போது உண்டு.

ஆதலால் 300 மில்லியன் ஜப்பான் நாணயத்தை கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கி, இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு முண்டுகொடுக்க முற்படுகிறது அது. இனப்பிரச்சினைத் தீர்விற்கான பேச்சு முயற்சிகளில் அக்கறை காட்டுவதாக வெளிப்படுத்தி வன்னி விஜயங்களை மேற்கொண்ட ஜப்பான், பூர்வீக பிரதேசங்களை விட்டு அகற்றப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் அரசின் சிங்கள மயமாக்கலுக்கு துணை போவது, எல்லோரும் போன்று அந்நாட்டிற்கும் இரட்டை வேடக் கொள்கை உண்டென்பதை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கா, இந்தியாவிற்கு திருகோணமலை மீதுள்ள அக்கறையை விட ஜப்பானிற்கு அப்பிரதேசத்திலுள்ள ஈடுபாடு ஏதுவாகவிருக்குமென்பதே பல ஆய்வாளர்கள் மத்தியில் புதிதாக உருவாகியுள்ள சந்தேகம். திருமலைத் துறைமுக நுழைவாசலில் கடற்படைத்தளம் ஒருமுனையிலும், சம்பூர் மறுமுனையிலும் அமைந்துள்ளன. வர்த்தக தன்மையை உள்ளடக்கிய இப்போர்த்துறைமுகம் கிழக்கு ஆசிய நாடுகளைத் தனது பார்வைக்குள் அடக்கி வைத்துள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 'றோயல் நேவி" என்று அழைக்கப்பட்ட டொக்யார்ட் கடற்படைத்தளமும் சீனக்குடாவில் உருவாக்கப்பட்ட விமானப் படைத்தளமும் (அது முகாமல்ல) கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இன்றும் கணிப்பிடப்படுகின்றன. அத்துடன் 100 பாரிய நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகளையும் ஆங்கிலேயர் அங்கு உருவாக்கினர்.

இராணுவ கேந்திர முக்கியத்துவம் இல்லாமல், இவ்வகையான பாரிய முதலீடுகளை விழுங்கக்கூடிய திட்டங்களை பிரித்தானியா செயற்படுத்தியிருக்க முடியுமா? ஜப்பானைப் பொறுத்தவரை இதன் இராணுவ முக்கியத்துவத்தை விட இயற்கைத் துறைமுகம் அமைந்த இப்பிரதேசத்தின் பொருளாதார முதலீட்டுப் பரிமாணமே அதற்குப் தேவையான விடயமாகிறது.

அதாவது மஹிந்தவின் நோக்கத்தினை ஈடு செய்யும் வகையில் சம்பூர் மாவிலாறு ஹபரணை வீதியை இணைத்து நால்வழி நெடுஞ்சாலையை அமைக்கும் பணிக்கு நிதி உதவி வழங்குவதே ஜப்பானிய அரசு தற்போது செய்யக்கூடிய முதலுதவியாகும்.

இலக்கந்தை, சம்பூர், புல்மோட்டையை இணைத்து நெடுஞ்சாலை அமைப்பது என்பது சாத்தியமான விடயமல்ல. அத்திட்டமும் வரையப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் சம்பூரிலிருந்து புல்மோட்டை வரை பாதை அமைத்திட கடல்பகுதி தடையாக அமையும். ஏனெனில் புல்மோட்டை இல்மனைட் மண்ணே இப்பாதை அமைக்கும் தேவையை ஜப்பானுக்கு உணர்த்துவதாக ஊகிக்கப்படுகிறது.

எண்பதுகளில் பரவலாய் பேசப்பட்ட விடயம் ஒன்றும் நினைவுக்கு வருகின்றது.

இல்மனைட் மண்ணிலிருந்து டைட்டேனியம் (வுவையnரைஅ) தாதுப் பொருளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (ளுஅநடவiபெ Pடயவெ) ஒன்றை இலங்கையில் நிறுவும்படி அன்றைய விஞ்ஞானக் கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ வேண்டுகோள் ஒன்றினை ஜப்பானிடம் விடுத்திருந்தார்.

பாரிய முதலீட்டினை உள்வாங்கும் மாபெரும் திட்டமெனப் போக்குக்காட்டி, அதனை நிராகரித்தது ஜப்பானிய தேசம். மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வல்லரசுகள் தமது அதியுயர் தொழில் நுட்ப விஞ்ஞானத்தை, பல நாடுகளின் கழுகுப் பார்வை விழுந்துள்ள தேசத்தில், காட்சிப் பொருளாக்க விரும்பமாட்டா. அண்டை நாடாக விளங்கும் இந்தியா இல்மனைட் மண் விவகாரத்தில் அக்கறையற்று இருப்பதையும், இதனடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.

மண்ணின் மகிமை புரிந்த ஜப்பானிற்கு, டைட்டேனிய ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானமும், அதைவிட அந்தக் கனிப் பொருளுக்குரிய போரியல் சார்ந்த முக்கியத்துவமும் நன்றாகவே தெரியும். அரிதட்டுப் பொறி முறை (குசினிப் பானையில் குறுணலை இடித்த மாவிலிருந்து பிரிக்கும் தட்டு) கனிப்பொருளை பிரித்தெடுக்கும் முறையல்ல இது.

மண்ணை உருக்கி, பிரித்தெடுக்கும் உயர்தொழில் நுட்ப வகைக்குள் அடங்கும் விஞ்ஞான முறைமை அது. அதற்குரிய தொழிற்சாலையை, விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக ஒப்பந்தம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சம்பூரில் ஜப்பானிய தேசம் அமைக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.

அனல்மின் நிலையம் அமைப்பதற்கே, பிராந்திய வல்லரசு பல தடவை மூளையைக் கசக்கும்போது பலகோடி டொலர் மூதலீட்டு திட்டத்தை சம்பூரில் அத்தகைய தொழிற்சாலையை நிறுவ ஆயிரம் தடவைகள் ஜப்பான் சிந்திக்கும்.

19 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த சம்பூர் பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்து உள் நுழைபவர்களுக்கு 5 வருட சிறையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் அரசின் சர்வதேச வலைப்பின்னலுக்குள் அகப்பட, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன் வருவார்களா என்பதை சிறிது காலம் கழித்தே கணிப்பிடலாம். நெடுஞ்சாலைகள் அமைப்பதன் பின்னணியில் முதலீட்டு நோக்கங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

அதே வேளை தற்காலிகமாக, அரசுடன் உறவினைப் பேணுவதற்கும் அகதிகள் மீள் குடியேற்றம் என்றே பொதுநலன் அடிப்படைக் கொள்கை ரீதியாகவும் இவ்வுதவிகளை ஜப்பான் செய்ய முன் வருவதாகவே கருதலாம்.

தாயகத் தமிழர்கள் அவ்வாறு கருதவேண்டுமென்பதே ஜப்பானின் எதிர்பார்ப்பாகும். இருப்பினும் இணைத்தலைமை நாடுகளையும் இந்தியாவையும் கிழக்குப் பிரதேசத்துள் முதலீடு என்கிற போர்வையில் இழுத்துவிட முயலும் மஹிந்தவின் நவீன சர்வதேச வலைப்பின்னலை விடுதலைப் புலிகளும் புரிந்துகொள்வார்கள்.

இவ்வலைகளை கிழித்தெறியக் கூடிய வல்லமை வான் புலிகளுக்கு உண்டென்பதையும் மேற்குலகத்தார் உணர்வார்கள்.

கிழக்கில், இராணுவம் ஆக்கிரமித்த இடங்களில் நெடுஞ்சாலைகள் அமைத்து ஏனைய மாவட்டங்களோடு இணைப்பினை ஏற்படுத்தும் அரசின் திட்டத்திற்கு வெளிநாடுகள் வழங்கும் ஆதரவு சமாதானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கேலிக்குரியதொன்றாக மாற்றியுள்ளது.

சமாதானப் போர்வைக்குள் மறைந்திருக்கும் சதிகளையும் அது வெளிப்படுத்துகிறது.

விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்கும் தகைமை, இன்னும் அரசிற்கு இருப்பதாக மேற்குலகம் கணிப்பதையே, அவர்களின் அசமந்த போக்கு புலப்படுகிறது.

ஆதிக்க சக்தியாகத் திகழ வேண்டுமெனத் தமக்குள் வெட்டி ஓடும் சர்வதேச நாடுகளுக்கு, தமிழ் மக்களின் இயல்பு வாழ்வு குறித்து அக்கறை இருப்பதாகக் கற்பிதம் கொள்வது மடைமைத்தனமாகும். சீனாவை ஓரங்கட்ட இந்தியா ஆயுதங்களை வழங்க வேண்டுமென இந்தியப் பத்திரிகைகளும், கருணா குழுவை அடக்கினால் அரைவாசிப் பிரச்சினை தீருமென அமெரிக்காவும் கருதும் நிலையில், பேசித்தீருங்களென்று கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.

ஏ-9 பாதையைத் திறந்துவிடும்படி மஹிந்தவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலையிலுள்ள ஜப்பான், மக்கள் இல்லாத சம்பூருக்கு நெடுஞ்சாலை அமைப்பது விநோதமானது.

தமிழர்கள் நண்டு சுட்டு உயிர் வாழ்ந்த வாகரையில் சிங்க இறால் பண்ணை அமைத்திட ஜப்பான் விரும்பலாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க ஜனநாயகம் தன் நாட்டின் மீது அணுகுண்டுகளை வீசியதாக நியாயம் கற்பிக்கும் ஜப்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் 'தமிழ் மக்களின் அவல வாழ்வு குறித்து அக்கறை கொள்" எனக் கேட்பது அபத்தமானது. லட்சக்கணக்கான தமது மக்களின் அழிவிற்கே ஓருலகக் கோட்பாட்டினுள் விடை தேடும் ஜப்பானிய அரசு நியாயவாதியாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை.

மேற்குலகானது எப்பொழுதுமே தமது அழிவு ஆயுத விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை ஆசியாவிலோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலோதான் பரீட்சித்துப் பார்க்க விரும்புகின்றன. தமது வெள்ளை இனம் வாழும் ஹிட்லரின் ஜேர்மனியில் போட்டிருக்க வேண்டிய அணுகுண்டை ஜப்பானின் தலையில் விழுத்தியது. நேபாம் (Nயியடஅ), கிளஸ்டர் (ஊடரளவநச) குண்டுகளை வியட்நாமில் விதைத்துப் பார்த்தது அது.

குறுகிய தூர துல்லியமான எறிகணை வீச்சுக்களை ஈராக்கில் பிரயோகித்தது.

தமது நவீனங்களைப் பரீட்சிக்கும் இடமாக சிறிலங்கா அமையாதபடியால் வேறு இடங்களைத் தேடி அலைகிறது மேற்குலகம். ஆகவே இன்றைய நிலையில் கைப்பற்றப்பட்ட கிழக்கின் பிரதேசங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு ஜப்பானின் ஆதரவையும் அதை இராணுவ ரீதியாக பலமாக்க இந்தியா, சீனாவின் உதவியையும் பெற்றவாறு, யாழ். குடாவை அசைக்க முடியாத வலிமை பொருந்திய தளமாக மாற்ற மேற்குலகிடம் கால அவகாசம் கேட்கிறது மஹிந்த அரசு.

கிழக்கையும் குடா நாட்டையும் அரச இராணுவ வல்லாண்மை பொருந்திய பிரதேசமாக்கி, வன்னியை நீண்ட கால முற்றுகைக்குள்ளாக்கும் மூலோபாயமே அரசினால் முன்னெடுக்கப்படுகிறது. நைஜீரியா நாட்டில் இவ்வகையான முற்றுகைக்குள்ளானதொரு தேசிய இனம் பயாஃப்ரா (டீயைகசய) வாகும்.

விடுதலைக்காகப் போராடிய இம்மக்கள் சமூகத்தை, பொருளாதார முற்றுகைக்குள்ளாக்கி பட்டினிச் சாவுக்கும் பாரிய தாக்குதலுக்கும் இலக்காக்கி, அடிபணிய வைத்த கறைபடிந்த தேசியவிடுதலை வரலாறு 1970 ஜனவரி 15 ஆம் திகதி நைஜீரியாவில் நடந்தது.

ஆயினும் தோல்லியுற்ற வரலாறு ஒன்றுதான், வெற்றிபெற்ற வரலாறுகள் ஏராளம்.

வியட்நாமிய போரியல் வரலாற்றை ஆய்வு செய்தால் கிழக்கை விட குடாநாட்டின் முக்கியத்துவம் தெளிவாகப் புரியப்படும். அனுசரணைகளும், இணைத்தலைமைகளும், பிராந்திய வல்லரசுகளும் மஹிந்தவின் இறுதி மூலோபாயத்தை எப்போதோ புரிந்து விட்டன.

வன்னி நோக்கிய இறுதி முற்றுகையை மஹிந்த மேற்கொள்ளும் வரை இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.

ஏ-9 பாதை மூடப்பட்டாலும், படுவான்கரை மறிக்கப்பட்டாலும், மனித உரிமை மீறல் எல்லை மீறிப்போனாலும், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்தாலும் இந்தச் சர்வதேசம் கண்மூடியபடியே இருக்கும். வன்னி இன்னுமொரு பயாஃப்ரா நிலையை எட்டும்வரை கண்டனங்களும், கவலை தெரிவிப்புகளுமே இணைத்தலைமை நாடுகளின் மந்திர உச்சாடனமாக அமையும். இவர்கள் அடிக்கடி வந்துபோவது அரசின் இராணுவ வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதற்கே.

இவர்கள் மொத்தமாக தமது நாடுகளில் தடைவிதித்ததும் இதனடிப்படையிலேயே.

இன உரிமைக்காகப் போராடும் மக்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதும் இவர்களின் ஜனநாயக தபால் கந்தோரில்தான் இடம்பெறும். இறுதிவரை உறுதியாக இருந்து, இந்தச் சர்வதேசப் பிதாமகர்களுக்கு, புதிய ஒளியினைப் பாய்ச்சத்தான் போகிறது தமிழரின் விடுதலைப் போராட்டம்.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.