Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்

— கருணாகரன் — 

“போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். 

“இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. 

இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வது, எப்படி மீட்பது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறோம். துயரம் நெஞ்சை அடைக்கிறது. ஆனால் இவர்களைத் தமக்கு இசைவாகப் பயன்படுத்துகின்ற ஒரு பிரமுகர் கூட்டமும் உண்டு. குறிப்பாக அரசியலிலும் வணிகத்திலும் உள்ளவர்கள். இப்பொழுதும் இரண்டுமே லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டவையாகி விட்டன அல்லவா! 

ஆனால் இந்த ஆபத்தையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நம்முடைய சூழலில் பொறுப்பானவர்கள் யாரும் தயாரில்லை.  

இதைக் குறித்து போருக்குப் பிந்திய சூழலில் கவனமெடுத்து வேலை செய்ய வேண்டும் என்று தயா சோமசுந்தரம் போன்றவர்கள் முயற்சித்தனர். அவர்கள் இதற்கான முன்திட்ட வரைபுகளையும் நம்முடைய அரசியற் தலைவர்கள் தொடக்கம் சமூகத்தின் பொறுப்பு மிக்க தரப்புகள் வரையிலானோரிடம் கொடுத்திருந்தனர். 

துயரமென்னவென்றால் அவற்றை எவரும் பொருட்டெனக் கருதவேயில்லை. ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் ஆர்வம் குன்றிய அந்த முதிய பேராசிரியர் திரும்பவும் அவுஸ்திரேலியாவுக்கே துயரத்தைக் காவிக் கொண்டு சென்று விட்டார் என்கின்றனர் அவருடைய ஜூனியர்கள். 

சமூகத்தைப் பற்றிய அக்கறையிருந்தால் நிச்சயமாகப் பலரும் தயா சோமசுந்தரம் சொன்னதைக்குறித்துச் சிந்தித்திருப்பார்கள். அல்லது தலைக்குள் சிந்திக்கக் கூடிய பொருள் ஏதும் இருந்திருந்தாலும் பேராசிரியர் சொன்னதில் கொஞ்சமாவது புரிந்திருக்கும். அதுதான் பலரிடத்திலும் இல்லையே. பதிலாக இந்த “தலைமுறையை படைத்தரப்புப் பாழாக்குகிறது” என்ற பழியை ஒற்றை வசனத்தில் பொத்தாம் பொதுவாக அள்ளிச் சுமத்தி விட்டு எல்லோரும் தமது பொறுப்புகளிலிருந்து கடந்து சென்று விட்டனர். 

ஆனால் பிரச்சினையோ மிகத் தீவிரமாக கொழுந்து விட்டெரியத் தொடங்கியுள்ளது. இந்தக் கொழுந்து விட்டு எரியும் தீ எல்லோரையும்தான் சுடும். நெருப்புக்கு எதுவும் விலக்கல்ல அல்லவா? அல்லது அது இவர்களை ஆட்பார்த்து ஏற்ற இறக்கத்துடன் நடந்து கொள்வதில்லையே. 

இன்று தெருவுக்குத் தெரு கஞ்சா விற்பனையும் வீட்டுக்கு வீடு கஞ்சாப் பாவனையும் என்ற நிலை தோன்றியுள்ளது. அந்த அளவுக்கு பல இளைஞர்கள் மிகச் சாதாரணமாகவே போதைப் பொருட்களைப் பாவிக்கின்றனர். இது போரில் பாதிப்படைந்த இளைய தலைமுறையையும் விட மோசமானது. இதை மருத்துவர்களே எச்சரிக்கையாகக் கூறுகின்றனர். போதைப் பொருட்பாவனை உண்டாக்கிய  பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் தொகை கூடிக் கொண்டிருக்கிறது. போதைப் பொருளைப் பாவித்து விட்டு வன்முறையில் (வீட்டிலும் வெளியிலும்) ஈடுபட்டோர் நீதிமன்றத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிறைச்சாலையினுள்ளே உளச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடைய கதைகளைக் கேட்டால் தலை சுற்றும். நம்முடைய உள்ளம் உடைந்து கண்ணீர் பெருகும். அந்தளவுக்குப் பரிதாபமானது. குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் பலருடைய முகங்களிலும் காறி உமிழத் தோன்றும். அந்தளவுக்கு இந்த வலைப்பின்னலும் இதற்கான பின்னணியும் உள்ளது. இவர்களுடைய நிலைமையைக் குறித்து பெற்றோருக்குப் பெருங்கவலை. தீராக் கவலை. இதை விட முக்கியமானது, இவர்களைக் கண்டு சமூகம் இன்று அஞ்சுவதாகும். இதை நானே நேரில் பார்த்தேன். நமக்கே அனுபவங்கள் உண்டு.  

ஒரு அனுபவம்… 

ஒரு நாள் இரவு நானும் இரண்டு நண்பர்களும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வழியில் மின்கம்பத்தின் அடியில் திரண்டிருக்கும் இருளில் மூன்று இளைஞர்கள் நிலத்தில் படுத்திருந்தனர். என்னவோ ஏதோ என்று நானும் இன்னொரு நண்பரும் அவர்களருகில் சென்று பார்க்க முயன்றோம். “நிலைமை பிழை. பிழையான ஆட்களுக்குக் கிட்டப் போக வேண்டாம்” என்று மற்ற நண்பர் தடுத்தார். “இருந்தாலும் என்ன ஏது என்று பார்க்காமல் போக முடியாதல்லவா?” என்று கேட்டேன். “எதற்காக நாம் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும்” என்றார் நண்பர். இதைக் கேட்டபோது எனக்கும் மற்ற நண்பருக்கும் குழப்பமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களை அப்படியே விட்டுச் செல்வது பொருத்தமாகப் படவில்லை. இந்த நிலையில் என்ன செய்வது என்று சற்றுத் தள்ளி நின்று யோசித்தோம். 

அப்பொழுது அந்த வீதியால் மேலும் இரண்டு பேர்  வந்தனர். அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்தனர். பிறகு ஏதோ சந்தேகப்பட்டதைப்போல எங்களைப் பற்றி விசாரித்தனர். அவர்கள் அந்தத் தெருவாசிகள்.  

“அந்த மின் கம்பத்துக்குக் கீழே படுத்திருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. ஏன் படுத்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்” அங்கே படுத்திருந்த இளைஞர்களைக் காட்டிச் சொன்னோம். 

“ஓ.. அதுவா! அதை ஏன் கேட்கிறீங்கள். அவங்கள் கஞ்சாக் கேஸ். பொலிஸ் கூட அவங்களை ஒண்டுமே செய்ய முடியாது. நாங்கள் எதைப் பற்றியும் கதைக்கேலாது. ஏதாவது கதைக்கப்போனால் போதையில இருக்கிறவன்கள் எதையும் செய்யக் கூடும். தேவையில்லாமல் நமக்கேன் இந்த வீண் வேலை? பேசாமல் கண்டு கொள்ளாத மாதிரிப் போய் விட வேண்டியதுதான்” என்று தணிந்த குரலில் சொல்லிக்கொண்டு போனார்கள். 

“பார்த்தாயா, நான் சொன்னதில் என்ன தப்பு?” என்று தன்னுடைய தீர்க்கதரிசனத்தைப் பற்றிப் பெருமையடித்தார் நண்பர். 

என்னதான் சொன்னாலும் எங்களால் அவர்களை அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை. மெல்ல அவர்களருகில் சென்று “ஏன் இந்த இருளில் படுத்திருக்கிறீங்கள். இந்தப் பக்கம் செடிகளும் பற்றைகளும் இருக்கல்லவா. ஏதாவது பாம்போ பூச்சியோ தீண்டினாலும்…” என்று மெல்லக் கதையை விட்டோம். 

“ஓ.. அப்படியா? உங்கட அக்கறைக்கு ரொம்பத் தாங்ஸ்” என்று ஒருவன் எழுந்தான். அவனால் சீராகத் தலையைத் தூக்க முடியவில்லை. “பாம்பெல்லாம் எங்களுக்குப் படம்தான் எடுக்கும். அதைப் பொல நாங்களும் பாம்புக்குப் படமெடுத்துக் காட்டுவம். நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். தேவையெண்டால் பாம்புப் படமொண்டை உங்களுக்கும் தரலாம். இப்ப நீங்க கிளம்புங்க” என்றான் மற்றவன். 

அவர்கள் சரியாகப் பேசவே முடியாமல் திக்கித் திணறினார்கள். சரியாகச் சொன்னால் தங்களையும் அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. எங்களையும் சரியாகத் தெரியவில்லை. இன்னும் ஏதோவெல்லாம் புலம்பினார்கள். ஆனால் சண்டை சச்சரவுக்கெல்லாம் வரவில்லை. அதற்கான சுயநிலை அவர்களிடமிருக்கவில்லை. பலமும் கரைந்து விட்டது. 

அதற்கு மேல் எதையும் செய்வதற்கில்லை. நாங்கள் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். 

ஆனாலும் பொலிசுக்கோ அவசர அம்புலன் சேவைக்கோ தொடர்பு கொண்டு இடத்தைச் சொல்லி அழைக்கலாமா என்று யோசித்தோம். அது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்று தெரியவில்லை. பெரும்பாலும் பொலிஸ் தரப்புக்குச் சொல்வதால் பயனென்ன என்ற கேள்வியும் நமக்கிருந்தது. 

இது நடந்து சரியாக இரண்டு வாரமிருக்கும். அந்த இளைஞர்களில் ஒருவர் தூக்க மாத்திரையை உட்கொண்டு இறந்து விட்டதாக அறிந்தோம். இதையிட்டுக் கவலைப்படவே முடிந்தது. 

இதைப்போல பல சம்பவங்களைப் பற்றி பல நண்பர்களும் துயரத்தோடு சொல்கிறார்கள். பொலிஸ் தரப்பின் அறிக்கைகளில் இளைய தலைமுறையின் இந்தச் சீரழிவுப் புள்ளி விவரங்களைப் பார்த்தீர்கள் என்றால் தூக்கமே வராது. நீதி மன்றத்தில் நடக்கும் விசாரணைகளின்போது இவர்கள் விசாரணைக் கூண்டில் நிற்க முடியாமல் வளைந்து சவண்டு கொண்டிருப்பதைப் பார்க்க உங்களுக்கே அழுகை வரும். சிலருக்குக் கடுமையான கோபமும் ஏற்படக் கூடும். ஆஸ்பத்திரியில் இவர்களுடைய கோலம் எல்லாவற்றையும் விட மோசமானது. இது கூடப் பரவாயில்லை. சிறைச்சாலைகளில் சொல்லவே வேண்டியதில்லை. அந்த நிலையிலும் உங்கள் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள், “எப்படியாவதுச ஒரு கொஞ்சச் சரக்கை (போதைப் பொருளை) வாங்கித் தருமாறு. அந்தளவுக்கு அதற்கு இவர்களுடைய உடலும் மனமும் அடிமையாகி விட்டது. 

இந்த நிலையில் இவர்களை என்ன செய்வது? 

நம்முடைய பலியாடுகளாக இவர்களைக் கை விடப்போகிறோமா? 

இதில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விசயங்கள் உண்டு. ஒன்று, ஏற்கனவே போதைப் பொருள் பழக்கத்துக்குட்பட்டவர்களின் நிலை. அதனால் சமூகத்துக்கு உண்டாகும் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல். வாள் வெட்டு, அடி தடி வன்முறை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கள்ள மண் ஏற்றுதல், கள்ள மரம் வெட்டுதல், குழுச்சண்டைகள் என சட்டவிரோத, சமூக விரோதச் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவது. இதோடு இவர்களுடைய உடல், உள நிலையின் பாதிப்பு. மட்டுமல்ல தொடர்ந்தும் போதைப் பொருட்களை வாங்குவதற்காக கொள்ளை, களவு போன்றவற்றில் ஈடுபடுவதோடு, வீட்டிலும் இவர்கள் பெற்றோரையோ குடும்பத்தினரையோ பாடாய்ப்படுத்துகிறார்கள். ஆகவே இவர்களைச் சுற்றியிருப்போர் தொடக்கம் இவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வரையில் இவர்களால் பெரிய துன்பத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், நீதிமன்றம், மருத்துத்துறை, சிறைச்சாலைப் பிரிவு போன்ற தரப்புகளுக்கும் இவர்கள் பெரும் சவாலே. மொத்தத்தில் இவர்களால் எல்லோருக்குமே பெரிய நெருக்கடியே. 

இரண்டாவது, இந்தப் பழக்கத்துக்குட்படாத இளையவர்களாக இருக்கும் தங்களுடைய பிள்ளைகளும் இவர்களைக் கண்டு அல்லது இவர்களுடன் எப்படியோ தொடர்புகள் ஏற்பட்டு பாழாகி விடுவார்களோ என்ற பெற்றோரின் அச்சம். இந்தக் கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இன்று உருவாகியுள்ளது. 

மூன்றாவது, இவர்களால் உருவாகிய இன்னொரு அச்சமே இன்று பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்ணும் கருத்துமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உருவாகியுள்ள பொல்லாத சூழல். மின் வெளிச்சமோ ஆள் நடமாட்டங்களோ குறைந்திருந்த காலத்திற் கூட ஓரளவு பாதுகாப்பாகத் தனி வழியே பெண்கள் சென்ற காலம் இன்றில்லை. வீட்டில் கூட பெண் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாது என்ற அளவுக்கு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இதையிட்ட கவலை பெற்றோரிடம் கூடியிருப்பதைக் காண்கிறோம். 

ஒரு பக்கத்தில் பெண்களுடைய சுதந்திரத்தைப் பற்றிய உரையாடல்களும் அதற்கான நல்முனைப்பும் வளர்ச்சியடைந்து வருகிறது. மறுபுறத்தில் அதற்கெதிரான போக்கும் வளர்ச்சியடைந்துள்ளது. 

நான்காவது, இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள வன்முறைச் சூழலாகும். அத்துடன் சட்டவிரோதச் செயற்பாடுகள் பெருகிச் செல்வது. 

ஐந்தாவது ஒரு தலைமுறையே கெட்டு விடும் அபாயத்தில் இருப்பது. 

இப்படிப் பல அபாய நிலைகள் இன்று உருவாகியுள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் யுத்தத்திற்குப் பிந்திய சூழலைக் கருத்திற் கொண்டு ஆற்றியிருக்க வேண்டிய பணிகளைச் செய்யாமல் விட்டதேயாகும்.  

ஒன்று உளஆற்றுப்படுத்துகை. இரண்டாவது இளைய தலைமுறைக்குப் பொருத்தமான புதிய தொழில் முயற்சிகள் மற்றும் அதற்கான கற்கைச் சூழல். மூன்றாவது குடும்பத்தின் நிலையை உயர்த்துவதில் கொண்டிருக்க வேண்டிய அக்கறைகள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வந்த பணம் உண்டாக்கிய பொறுப்பின்மைகளைப் பற்றிய எச்சரிக்கையூட்டல்களின் போதாமை. சமூகச் செயற்பாடுகளை அரசியற் தரப்பினர் மேற்கொள்ளாமல் விட்டது. சமூக நிலை பற்றிய ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறியமை என பல காரணங்கள் உண்டு. 

இப்பொழுது கூட இதொன்றும் கெட்டு விடவில்லை. இன்றிலிருந்தே இந்த அபாய நிலையை மாற்றுவதற்குப் பல தளங்களிலும் வேலை செய்ய முடியும். அப்படி வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் உள்ளிருந்து கொல்லும் இந்தப் பொல்லாத போதை என்ற பகை. அதில் இல்லாது போகும் பொன் நகையும் மென் நகையும்.  

 

https://arangamnews.com/?p=6078

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.