Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி?

7 செப்டெம்பர் 2021, 06:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் இரண்டாவது கட்டுரை இது.)

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா நீண்ட போர்களை நடத்தியிருக்கிறது. வலுவான உளவாளிகள் உலகின் பல பகுதிகளிலும் பதுங்கியிருக்கிறார்கள். படை விமானங்கள், நவீன போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிகள் என சிறந்த ஆயுதங்கள் இருக்கின்றன.

இவ்வளவு வலிமை வாய்ந்த நாட்டை அதிரச் செய்த நாள் செப்டம்பர் 11. நூறு ஆண்டுகள் ஆனாலும் மறைந்தபோகாத வடுக்களை தந்துவிட்டுச் சென்ற நாள். விமானத்தை ஆயுதமாகவும் அதில் நிரப்பப்பட்ட எரிபொருளை வெடிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உலகம் புரிந்து கொண்ட நாள்.

மொத்தம் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க்கின் வர்த்தக மைய வளாகத்தில் இருந்த இரு கட்டடங்களில் மோதின. முதல் விமானம் வானில் கடத்தப்பட்டபோதே பல விமானங்கள் கடத்தப்பட்டன.

"எங்களிடம் சில விமானங்கள் இருக்கின்றன"

"எங்களிடம் சில விமானங்கள் இருக்கின்றன. யாரும் நகரும் நகர்ந்தால் ஆபத்தைச் சந்திக்க நேரிடும்". அமெரிக்க ஏர்லைன்ஸ் 11 விமானத்தைக் கடத்திய பயங்கரவாதியான அட்டா பயணிகளை எச்சரிக்கும்போது கூறிய சொற்கள் இவை. இதனை தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதன் பொருளை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு நேரமும் இல்லை.

செப்டம்பர் 11-ஆம் தேதியன்று மொத்தம் 4 விமானங்கள் கடத்தப்பட்டன. அதன் பொருள்தான் இது என்று புரிந்து கொள்வதற்குள்ளாக பெரும் சேதத்தை அமெரிக்கா சந்தித்து விட்டது. அட்டா தலைமையிலான 5 பேர் கடத்திச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானம் உலக வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கோபுரத்தில் விமானம் மோதியபோது.

அந்த விமானம் கிளம்பிய அதே விமான நிலையத்தின் மற்றொரு முனையத்தில் இருந்து புறப்பட்ட இன்னொரு விமானமும் நியூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தின் பெயர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175. பாஸ்டனில் அது புறப்பட்ட நேரம் காலை 8.14 மணி. அந்த நேரத்தில்தான் முதல் விமானம் வானில் கடத்தப்பட்டிருந்தது. மார்வன் அல் சேஹ்கி தலைமையில் ஃபயேஸ் பேனிஹம்மத், மொஹாந்த் அல்-சேஹ்ரி, அகமது அல்-காம்தி, ஹம்சா அல்-ஹாம்தி என மொத்தம் 5 பேர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானத்துக்குள் இருந்தனர். இந்த விமானமும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

 

கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானத்தைக் கடத்தியதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நபர்கள்

இவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே சில தடைகளை எதிர்கொண்டனர். இவர்களில் சிலருக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை. இதனால் டிக்கெட் வழங்கும் பணியாளரின் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல இயலவில்லை. பின்னர் மிக மெதுவாகக் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றிருக்கிறார்.

முதல் விமானத்தைக் கடத்திய அட்டா உள்ளிட்டோரைப் போல CAPPS கணினி பரிசோதனை அமைப்பில் இரண்டாவது விமானத்தைக் கடத்திய யாரும் சிக்கவில்லை. அதனால் மிக எளிதாக அவர்களால் விமானத்துக்குள் செல்ல முடிந்தது.

இவர்களில் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், மூவர் சௌதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள். கத்திகள், தடிகள் போன்றவைதான் இவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள். அதனால்தான் விமான நிலைய பாதுகாப்பு சோதனையை இவர்களால் எளிதாகக் கடந்துவர முடிந்தது.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானம் சரியாக 8 மணிக்கு புறப்பட வேண்டும். விமானத்தில் 7 பணியாளர்களுடன் 56 பயணிகள் இருந்தனர். சிறிது தாமதமாக 8.14 மணிக்கு லோகன் விமான நிலையத்தை விட்டு விண்ணில் பறக்கத் தொடங்கியது. 8.33 மணிக்கு திட்டமிட்டபடி 31 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றது. வழக்கம் போல விமானப் பணியாளர்கள் தங்களது சேவைகளைத் தொடங்கினர்.

8.42 மணிக்கு வேறொரு விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியான தகவல் பரிமாற்றத்தைக் கேட்டதாக தரைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானிகள் தெரிவித்தனர். அதுதான் ஏற்கெனவே கடத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

8.42 மணிக்குப் பிறகு யுனைட்டட் 175 விமானத்தின் விமானிகளிடம் இருந்து எந்தத் தகவலும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. அந்த நேரத்தில் கடத்தல்காரர்கள் தங்களிடம் இருந்த கத்திகளைக் கொண்டு பயணிகளைத் தாக்கத் தொடங்கியிருந்தனர்.

8.47 மணிக்கு விமானத்தில் சந்தேகப்படும்படியான நடவடிக்கை இருக்கலாம் என்பது தரைக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்குப் புரிந்தது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து விமானம் திரும்பியதுடன், அதிகாரிகளின் உத்தரவுகளையும் ஏற்கவில்லை.

விமானத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு

8.52 மணிக்கு, கனெக்டிகட்டில் இருந்த லீ ஹேன்சன் என்பவருக்கு அவரது மகன் பீட்டரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பீட்டர் கடத்தப்பட்டிருந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானத்தில் இருந்தார்.

"விமானி அறையை அவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பணியாளரைக் குத்தி விட்டார்கள். முன்னால் இருக்கும் வேறு சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். இன்னும் விசித்திரமான நடவடிக்கைகள் தென்படுகின்றன. உடனே யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அழையுங்கள். இது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானம் 175 என்று அவர்களிடம் கூறுங்கள்" என்று பீட்டர் அப்போது தனது தந்தையிடம் தெரிவித்தார்.

விமானக் கடத்தலை சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம்,GERENME / GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விமானக் கடத்தலை சித்தரிக்கும் படம்

லீ ஹான்சன் உடனடியாக காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது மகன் கூறியதைத் தெரிவித்தார்.

அதேபோல் 8.52 மணிக்கு ஓர் ஆண் விமானப் பணியாளர் ஒருவர் சான் பிரான்ஸிசிஸ்கோவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விமானிகள் கொல்லப்பட்டதையும், விமானம் கடத்தப்பட்டிருப்பதையும் விளக்கினார். கடத்தல்காரர்கள்தான் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அப்போது தரையில் இருந்த அதிகாரிகளுக்குப் புரிந்தது.

8.59 மணிக்கு பிரியன் ஸ்வீனி என்றொரு மற்றொரு பயணி தனது மனைவிக்கு தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. பின்னர் தனது தாயை தொலைபேசியில் அழைத்து விமானம் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். விமானிகள் அறையை உடைத்து விமானத்தை பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவிக்க முடியுமா என்று பயணிகள் அனைவரும் சிந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

9 மணிக்கு பீட்டர் தனது தந்தை லீ ஹேன்சனுக்கு இரண்டாவது முறையாக போனில் பேசியபோது பதற்றம் அதிகமாகியிருந்தது. "அவர்கள் கத்திகளை வைத்திருக்கிறார்கள். வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். சிகோவிலோ வேறு எங்கோ கட்டடத்தின் மீது மோதுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் அப்பா, அப்படி ஏதாவது நடந்தால், மிக விரைவாக முடிந்துவிடும்" என்று கூறினார்.

அந்த அழைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னதாக ஒரு பெண் அலறும் சத்தத்தை லீ ஹேன்சன் தொலைபேசி வழியாகக் கேட்டார். அப்போது தொலைக்காட்சியில் உலக வர்த்தக மையத்தின் மற்றொரு கட்டடத்தில் இரண்டாவது விமானம் மோதிய காட்சிகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

விமானத்தின் பாகம்

பட மூலாதாரம்,NPYD

 
படக்குறிப்பு,

இடிபாடுகளில் கிடைத்த விமானத்தின் பாகம்

கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கத்திகளையும், கூரான முனைகளைக் கொண்ட ஆயுதங்களையும் வைத்திருந்தார்கள் என்பதை பல தொலைபேசி அழைப்புகளில் கேட்க முடிந்தது. வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர்கள் மிரட்டினாலும், அவர்களிடம் வெடிகுண்டுகள் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரியவந்தது. 9/11 விசாரணை அறிக்கையிலும் விமானம் மோதிய இடத்தில் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாகக் மிரட்டியதில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தைப் போல் அல்லாமல் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானம் முற்றிலும் வேறு பாதையில் நியூயார்க் நகருக்கு இயக்கப்பட்டது. டிரான்ஸ்பான்டர்கள் அணைக்கப்படவில்லை. இதனால் ரேடார்களின் இதனை மிக எளிதாகக் கண்காணிக்க முடிந்தது. நியூ ஜெர்சி, ஸ்டேடன் தீவு, நியூயார்க் விரிகுடாவை கடந்து எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை நோக்கிச் சென்ற விமானம் கடைசி நேரத்தில் மிக நேர்த்தியாக வளைந்து வர்த்தக மையத்தை நோக்கி விரைந்தது.

வடக்குக் கோபுரத்தில் விமானம் மோதிய பாதிப்பு அடங்காத நிலையில் தெற்குக் கோபுரத்தில் இந்த விமானம் பாய்ந்தது. அப்போது மணி 9.03. மொத்தம் 38 ஆயிரம் லிட்டர் எரிபொருள், 5 கடத்தல்காரர்கள், இரு விமானிகள், 7 பணியாளர்கள், 51 பயணிகள், 80 வயதுப் பாட்டி, இரண்டரை வயதுக் குழந்தை என உயிர்களோடு எரிபொருளையும் கலந்து வெடிபொருளானது விமானம்.

ஏற்கெனவே மரண ஓலங்களைக் கேட்டுக் கொண்டிருந்த வர்த்தக மைய வளாகத்தில், ஆயிரக் கணக்கானோர் குழுமியிருந்தார்கள். கேமராக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களது கண்முன்னே தெற்குக் கோபுரத்துக்குள் புகுந்த விமானத்தின் பாகங்கள், மறுபுறம் வெளியே வந்தன. தொலைக்காட்சிகள் அதை நேரலையாக ஒளிபரப்பின.

கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு கட்டடம் தரைமட்டமானது. இரு தாக்குதல்களிலும் சேர்த்து சுமார் 2,600 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மீட்புப் படை வீரர்கள்.

மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

ஏனென்றால், ராணுவமும் உளவுப் படைகளும் கண்டுபிடிக்க முடியாத சதித்திட்டத்தை பயங்கரவாதிகள் வகுத்திருந்தார்கள். எத்தனையோ நாடுகளுக்குச் சென்று போர் நடத்திய அமெரிக்காவை, அதன் சொந்த மண்ணில் ஏமாற்றும் அளவுக்கு அவர்களது திட்டம் இருந்தது.

அதனால் அமெரிக்காவின் அப்போதைய அச்சம் நியாயமானதுதான். அப்போது அடுத்த விமானம் தலைநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

https://www.bbc.com/tamil/global-58462290

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்

7 மணி நேரங்களுக்கு முன்னர்
பென்டகன்
 
படக்குறிப்பு,

பென்டகன்

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் மூன்றாவது கட்டுரை இது.)

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன், ஐங்கோண வடிவத்திலான கட்டடம். பாதுகாப்புத் துறையையும், பாதுகாப்பு அமைச்சரையும் குறிப்பிடுவதற்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

தலைநகரான வாஷிங்டன் டி.சி.யை ஒட்டி வர்ஜீனிய மாநில எல்லைக்குள் அமைந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகங்களில் இதுவும் ஒன்று. இதன் கட்டுமானப் பரப்பு சுமார் 150 ஏக்கர். அதாவது 65 லட்சம் சதுர அடி.

5 பக்கங்கள், தரைக்கு மேலே 5 மாடிகள் என 'பென்டகன்' என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தன்னுள்ளே கொண்ட கட்டடம் இது. இதன் மையத்தில் ஐங்கோண வடிவத்திலான 5 ஏக்கர் பரப்பு "கிரவுண்ட் ஜீரோ" என்று அழைக்கிறார்கள்.

உலகின் பல முக்கியப் போர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதும் இங்குதான் என்று கருதப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி சில பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து கடுமையாகச் சேதப்படுத்தினார்கள்.

விமானத்தில் இருந்தவர்களும், பென்டகன் கட்டடத்தில் இருந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 189 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 1800களில் பிரிட்டிஷ் படைகள் வாஷிங்டன் நகரை எரித்த சம்பவத்துக்குப் பிறகு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.

செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையக் கட்டடங்களில் விமானங்கள் மோதிய செய்திகள் வெளியாகி உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடந்தப்பட்டது. கடத்தப்பட்ட நான்கு விமானங்களில், தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தின் அடிப்படையில் மூன்றாவது விமானம் இது.

காலை 8.46 மணிக்கு, முதல் விமானமான 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11', உலக வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கோபுரக் கட்டடத்தையும், காலை 9.03 மணிக்கு இரண்டாவது விமானமான 'யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175' தெற்கு கோபுரக் கட்டடத்தையும் தாக்கின.

இந்த இரு விமானங்களும் கடத்தப்பட்ட அதே நேரத்தில்தான் மூன்றாவது விமானமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் கடத்தப்பட்டது. கடத்தல் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

புஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தாக்குதல் நடந்த மறுநாள் பென்டகன் பகுதிக்குச் சென்ற அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்

அது வாஷிங்டன் டி.சி.யின் டல்லஸ் விமான நிலையம். இரு விமானங்கள் கடத்தப்பட்ட பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தெற்கே அமைந்திருக்கிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77, காலை 8.10 மணிக்கு லாஸ் ஏஞ்சலஸ் நோக்கிப் புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அது போயிங் 757 ரகத்தைச் சேர்ந்தது.

கலீத் மிஹ்தார், மஜேத் மொகேத் ஆகியோர் காலை 7.15 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கவுன்டரில் செக்-இன் செய்தனர். அடுத்த இருபது நிமிடங்களில் ஹனி ஹன்ஜோர், சகோதரர்களான நவாப் அல் ஹஸ்மி, மற்றும் சலேம் அல் ஹஸ்மி ஆகியோர் வந்து சேர்ந்தனர். இவர்கள் ஐந்து பேரும்தான் 'கடத்தல்காரர்கள்' என்கிறது அமெரிக்காவின் 9/11 விசாரணை ஆணையத்தின் அறிக்கை.

மிஹ்தாரும், மொகேத்தும் தங்களது கைப்பைகளை எக்ஸ்-ரே பரிசோதனைக்காக வைத்துவிட்டு, மெட்டல் டிடெக்டர் கருவியைக் கடந்தபோது, பெரும் சத்தத்தில் அலாரம் அடித்தது. இரண்டாவது மெட்டல் டிடெக்டர் வழியாகச் செல்லுமாறு காவலர்கள் கூறினார்கள். ஆனால் அதில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் கண்டறியப்படவில்லை. அதன் பிறகு 5 பேரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

இரு விமானிகள், நான்கு பணியாளர்கள் கடத்தல்காரர்களையும் சேர்த்து மொத்தம் 58 பயணிகள் ஆகியோர் விமானத்தில் இருந்தனர். சரியாக 8.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. 8.46 மணிக்கு 35 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. 8.50 மணிவரை விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் வந்து கொண்டிருந்தன. அதன் பிறகு தகவல் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறது 9/11 விசாரணை அறிக்கை.

கடத்தல்கார்ரகள்
கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடத்தல்காரர்கள் என 9/11 விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நபர்கள்

8.54 மணிக்கு தனது வழக்கமான பாதையில் இருந்து விமானம் தெற்கு நோக்கித் திரும்பியது. டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்பட்டன. விமானத்தின் ரேடார் சிக்னல்களும் துண்டிக்கப்பட்டன. அதற்குச் சற்று முன்னர்தான் நியூயார்க் வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்குக் கோபுரத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11 மோதியிருந்தது. அமெரிக்காவின் வடமேற்கு விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் புறப்படக் கூடாது என உடனடியாக உத்தரவிடப்பட்டது.

9.12 மணிக்கு விமானப் பணிப்பெண் ரீனி மே, லாஸ் வெகாஸில் இருக்கும் தனது தாய்க்கு போன் செய்தார். ஆறு பேரால் விமானம் கடத்தப்பட்டு விட்டது என்று கூறினார். அந்தத் தகவல் அப்படியே விமான நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

9.12 மணிக்கு பார்பரா ஓல்சன் என்ற பயணி தனது கணவர் டெட் ஓல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். டெட் ஓல்சன் அமெரிக்காவின் சொலிசிட்டர் ஜெனரல். பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் பகுதியில் நிற்க வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தல்காரர்களிடம் கத்திகள் இருப்பதாகவும் பார்பரா தெரிவித்தார். அந்த நேரத்தில் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பார்பராவிடம் டெட் கூறினார்.

அந்த நேரத்தில் வாஷிங்டனை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்ததால், அமெரிக்க அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவை உஷார்படுத்தப்பட்டன. ஆனால் பயங்கரவாதிகளின் இலக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன். கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த விமானம் சுமார் 850 கிலோ மீட்டர் வேகத்தில் பென்டகன் கட்டத்தின் மேற்குப் பகுதியில் சீறிப் பாய்ந்தது. விமானத்தில் இருந்த 5 சதிகாரர்கள் உள்பட 64 பேரும் உயிரிழந்தனர்.

அப்போது மணி 9.37. சுமார் 18 ஆயிரம் பேர் பென்டகனில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். அவர்களில் 125 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 75 ராணுவ அதிகாரிகளும் அடங்குவார்கள். கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. நவீன கருவிகளைக் கொண்டிருக்கும் இடம் என்பதால் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்தன. 10 நிமிடங்களில் மீட்புக் குழுவினர் தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.

பென்டகன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சேதமடைந்த பென்டகன்

வாஷிங்டனை நோக்கி கடத்தப்பட்ட விமானம் வருகிறது, அது ராணுவ தலைமையகத்தில் மோதப்போகிறது என்பதை அறிந்த ராணுவத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஓரிரு நிமிடங்களே இருந்தன என்று 9/11 விசாரணை அறிக்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

பென்டகனில் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்புவரை அந்த விமானம்தான் நியூயார்க்கில் இரண்டாவது கோபுரத்தைத் தாக்கியது என்று அதிகாரிகள் தவறாகக் கருதியிருந்ததாகவும் விசாரணை அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

சேதமடைந்த பென்டகன் கட்டடத்தை சரி செய்ய சுமார் 3,500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அருகிலேயே ஒரு நினைவிடமும் அமைக்கப்பட்டது.

அந்த நாளில் மூன்று விமானங்கள் கடத்தப்பட்டு முக்கிய இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், அமெரிக்கா முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. முதல் விமானம் பாஸ்டனின் இருந்து புறப்பட்டு வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்குக் கோபுரத்தில் மோதியது. இரண்டாவது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வர்த்தக மையக் கட்டத்தின் தெற்குக் கோபுரத்தில் மோதியது. மூன்றாவது விமானம் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி, பென்டகன் கட்டத்தில் மோதியது. மூன்று கட்டடங்களுமே அமெரிக்காவின் அடையாளங்கள்.

முதல் விமானத்தை இயக்கிய அட்டாவின் பேச்சு உண்மையானால் பயங்கரவாதிகளின் பிடியில் சில விமானங்கள் இருக்கக்கூடும். அந்த எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி தெரியாததால்தான் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பயணிகள் அனைவரும் சேர்ந்தால் நான்கைந்து கடத்தல்காரர்களை தடுத்து விட முடியாதா என்ற கேள்வி எழுந்திருந்தது. இன்னொரு விமானம் அப்படிப்பட்ட வீரத்துக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக மாறியது.

https://www.bbc.com/tamil/global-58472054

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் நாடாளுமன்றமும் தப்பியது எப்படி?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
இரட்டைக் கோபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் நான்காவது கட்டுரை இது.)

செப்டம்பர் 11-ஆம் தேதியன்று உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் பென்டகனையும் தாக்குவதற்கு வெறும் கத்திகளும், வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட பொய்யான மிரட்டலும் மட்டுமே போதுமானவையாக இருந்தன. ஆனால் மற்றொரு தாக்குதலை நடத்துவதற்கான விமானத்தைக் கடத்துவதற்கும், இலக்கை நோக்கிச் செல்வதற்கும் இவை போதுமானதாக இல்லை. அந்த விமானம் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93.

பல்லாயிரக்கணக்கான லிட்டர் எரிபொருள் இருந்த விமானங்களைக் கடத்தி அவற்றை திறன்மிக்க, கட்டுப்படுத்தப்பட்ட ஏவுகணைகளைப் போல மாற்றி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வேண்டும் என்பதே கடத்தல்காரர்களின் நோக்கமாக இருந்தது என செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அத்தனை பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் ஏமாற்றி கடத்தல்காரர்களால் 4 விமானங்களைக் கடத்தவும் முடிந்தது. ஆனால் மூன்று விமானங்கள் மட்டுமே அவர்கள் திட்டமிட்டபடி இலக்குகளைத் தாக்கின. யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93 விமானத்தைக் கடத்தியவர்களால், அவர்களின் இலக்கை நோக்கிச் செல்ல முடியவில்லை. காரணம் விமானத்துக்குள் இருந்த பயணிகள் நடத்திய துணிச்சலான யுத்தம்.

யுனைட்டட் 93 விமானத்துக்குள் நடந்தது என்ன?

செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு நியூஜெர்சி மாநிலத்தின் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகரை நோக்கி இந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தைக் கடத்துவதற்காக லெபனானைச் சேர்ந்த ஜியாத் ஜர்ரா, சயீத் அல் காம்தி, அகமத் நமி, அகமத் அல் ஹஸ்னாவி ஆகிய நான்கு பேர் பாதுகாப்புப் பரிசோதனைகளைக் கடந்து விமானத்துக்குள் சென்றனர்.

பாஸ்டன் ரோகன் விமானத்தில் இருந்ததைப் போன்ற சிசிடிவி கேமராக்கள் நெவார்க் விமான நிலையத்தில் இல்லை என்று செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானிகள் அறைக்கு அருகேயுள்ள முதல் வகுப்பின் 1பி இருக்கையில் ஜர்ராவும் அதே வகுப்பின் வெவ்வேறு இருக்கைகளில் மற்ற மூவரும் அமர்ந்தனர்.

செப்டம்பர் 11 அன்று கடத்தப்பட்ட மற்ற மூன்று விமானங்களையும்போல, இந்த விமானத்திலும் 5 கடத்தல்காரர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், துபாயில் இருந்து வந்த மற்றொருவர் மீது சந்தேகம் இருந்ததால் சில நாள்களுக்கு முன்பே குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் இருந்தே திருப்பியனுப்பி விட்டனர்.

கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடத்தல்காரர்கள் என அமெரிக்க விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நபர்கள்

182 பேர் பயணிக்கக்கூடிய யுனைட்டட் 93 விமானத்தில் அன்றைக்கு 4 கடத்தல்காரர்களுடன் சேர்த்து வெறும் 37 பேர் மட்டுமே பயணித்தனர். அவர்களோடு விமானிகள் ஜேசன் தஹல், லேராய் ஹோமர் மற்றும் 5 பணியாளர்களும் இருந்தனர்.

நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள், பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் ஆகியவற்றைத் தாக்கிய விமானங்கள் பெரிய அளவில் தாமதம் இல்லாமல் புறப்பட்டுச் சென்றன. ஆனால் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் மட்டுமே 8.42 மணிக்குப் 25 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமாகப் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு நடுவானில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட விவரம் பரவத் தொடங்கியிருந்தது. பறந்து கொண்டிருக்கும் எல்லா விமானங்களுக்கும் இந்தச் செய்தி அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் யுனைட்டட் 93 விமானத்துக்கு சில நிமிடங்கள் தாமதமாகவே இந்தச் செய்தி கிடைத்தது. வர்த்தக மையத்தில் இரு விமானங்கள் மோதிய விவரத்தைத் தெரிவித்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரி, விமானியின் அறைக்குள் யாரையும் நுழைய விட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். அப்போது மணி காலை 9.26.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கடத்தல்காரர்கள் தங்களது வேலையைத் தொடங்கிவிட்டதாக அமெரிக்காவின் விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானியின் அறையை அடித்துத் திறக்கும் சத்தத்தையும், விமானியின் அலறலையும் தரையில் இருந்த அதிகாரிகளால் கேட்க முடிந்தது. விமானத்தை கடத்தல்காரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

பயணிகளின் துணிச்சலான போராட்டம்

மற்ற மூன்று விமானங்களும் தரையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களுக்குள்ளாக கடத்தப்பட்டன. ஆனால் யுனைட்டட் 93 விமானம் கடத்தப்படுவதற்கு சுமார் 46 நிமிடங்கள் ஆகியிருந்தன.

விமானி பயிற்சி பெற்றிருந்த கடத்தல்காரர்களில் ஒருவரான ஜர்ரா விமானத்தை இயக்கியதாகவும் வழக்கமான பாதையில் இருந்து விமானத்தை திருப்பியதாகவும், அதே நேரத்தில் மற்ற கடத்தல்காரர்கள் பயணிகளை விமானத்தின் பின்பகுதிக்கு போகும்படி கட்டளையிட்டதாகவும் செப்டம்பர் 11 விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானி அறையில் ஒரு விமானப் பணிப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்தது குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது.

விமானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யுனைட்டட் 93 விமானத்தின் விமானிகளில் ஒருவரான லேராய் ஹோமருக்கு நினைவஞ்சலி

அந்த நேரத்தில் பயணிகளில் பலரும். விமானப் பணியாளர்களும் தரையில் இருந்த தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்தார்கள். விமானம் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். அப்போதுதான் இரட்டைக் கோபுரங்கள் விமானங்களை மோதவைத்துத் தகர்க்கப்பட்ட விவரம் யுனைட்டட் 93 விமானத்தில் இருந்தவர்களுக்குத் தெரியவந்தது.

அதன் பிறகு கடத்தல்காரர்களின் வேலை எளிதாக இருக்கவில்லை. மற்ற விமானங்களுக்கு ஏற்பட்ட கதியை பயணிகள் உணர்ந்திருந்ததால், எப்படியும் சாகப்போகிறோம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்கள். அதனால், கடத்தல்காரர்களை எதிர்த்துச் சண்டையிடுவது என முடிவு செய்தனர். இவையெல்லாம் அவர்களில் சிலர் தொலைபேசி மூலமாகத் தெரிவித்த தகவல்கள். விசாரணை அறிக்கையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வெளியில் இருந்த கடத்தல்காரர்களை பயணிகள் சிலர் தாக்கியிருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதை அறிந்து கொண்ட ஜர்ரா, விமானத்தை செங்குத்தாகவும், தலை கீழாகவும் இயக்கத் தொடங்கியதால், பயணிகள் விமானத்துக்குள்ளேயே உருண்டனர் அவர்களது அலறல் குரல் கறுப்புப் பெட்டி எனப்படும் குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது.

ஆனாலும் பயணிகளும் விமான ஊழியர்களும் சேர்ந்து 4 கடத்தல்காரர்களையும் எளிதாக முறியடித்துவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இன்னும் ஒரு சில வினாடிகள்கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், கடத்தல்காரர்கள் விமானத்தை தரையை நோக்கித் திருப்பினார்கள். அப்போது விமானத்தின் வேகம் மணிக்கு சுமார் 930 கிலோ மீட்டர்.

கடைசி நொடி வரை கடத்தல்காரர்களுடன் பயணிகள் போராடிய சத்தம் குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது. இறுதயில் பென்சில்வேனியாவில் உள்ள இன்டியன் ஏரி அருகே வெட்ட வெளியில் மோதி விமானம் நொறுங்கியது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஆனால், கடத்தப்பட்ட பிற விமானங்களைப் போல இந்த விமானமும் முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒரு பகுதியில் மோதுவது தவிர்க்கப்பட்டது.

விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93 விமானம் விழுந்த இடம்

கடத்தல்காரர்களின் இலக்கு அமெரிக்க அதிபர் மாளிகையாகவோ, நாடாளுமன்றக் கட்டடமாகவோ இருந்திருக்கலாம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி நடந்திருந்தால், இன்னும் ஏராளமான உயிர்கள் பறிபோயிருக்கக்கூடும். பயணிகளின் துணிச்சலால் அது தவிர்க்கப்பட்டது. பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் போரிட்ட பயணிகளின் துணிச்சலுக்காகவே யுனைட்டட் 93 விமானம் தீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-58488329

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 11 தாக்குதலில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் நொடியில் தகர்ந்த இரு காரணங்கள்

  • கார்லோஸ் செரானோ
  • பிபிசி முண்டோ
9 மணி நேரங்களுக்கு முன்னர்
இரட்டை கோபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செப்டம்பர் 11, 2001 அன்று, இரண்டு போயிங் 767 விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது மோதியது.

காலை 8.45 மணிக்கு முதல் விமானம் வடக்கு கோபுரத்தைத் தாக்கியது. அந்தத் தீ 102 நிமிடங்கள் வரை எரிந்து கொண்டே இருந்தது, பின்னர் 10.28 நிமிடங்களில் இந்த கோபுரம் வெறும் 11 வினாடிகளில் சரிந்து வீழ்ந்தது.

காலை 09.03 மணிக்கு, விமானம் முதல் கோபுரத்தைத் தாக்கிய 18 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு விமானம் இரண்டாவது கோபுரத்துடன் மோதியது. 56 நிமிடங்கள், இந்த கோபுரம் தீ மற்றும் புகையுடன் போராடியது, அடுத்த 9 வினாடிகளில் சரிந்தது.

வடக்கு கோபுரத்தின் 47 வது மாடியில் வேலை செய்யும் புருனோ டெலிங்கர் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "கட்டடம் விழும் சத்தத்திற்கு பிறகு, சில வினாடிகளுக்குள் இருள் சூழ்ந்தது. இரவை விட அடர்ந்த இருள், ஒரு கணம் அனைத்து சத்தங்களும் அடங்கின. என்னால் மூச்சு கூட விட முடியவில்லை."

"மூளை எதையும் சிந்திக்க முடியாததால், நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன்." செப்டம்பர் 11 ம் தேதி நினைவு மற்றும் அருங்காட்சியகத்தில் இருந்து அவர் தனது கோரமான தருணங்களை விவரித்தார்.

புருனோ டெலிங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோபுரங்கள் இடிந்தது எதனால்?

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்ஐடி) சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எட்வர்டோ காஸெல் பிபிசி முண்டோவிடம், "இரண்டு கோபுரங்களும் இடிந்து விழுந்தது பயங்கரவாதத் தாக்குதலால் தான் என்பதை அனைத்து வல்லுநர்களும் ஏற்றுக்கொண்டனர்." என்று கூறினார்.

தாக்குதலில் கோபுரம் இடிந்த பிறகு, கட்டடத்தின் கட்டமைப்பு, பொறியியல் மற்றும் கட்டடக்கலை கண்ணோட்டத்தில் இரட்டை கோபுரங்களின் சரிவை ஆய்வு செய்த எம்ஐடியின் நிபுணர் குழுவின் தலைவராக காஸெல் இருந்தார்.

அபாயகரமான நிகழ்வு

2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எம்ஐடியின் ஆய்வு முடிவுகள், அமெரிக்க அரசின் தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐஎஸ்டி) கண்டுபிடிப்புகளுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது. இந்த அமைப்பு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து அறியும் பொறுப்பை ஏற்றிருந்தது. இதன் அறிக்கை 2008-ல் வெளியானது.

எம்ஐடி மற்றும் என்ஐஎஸ்டி இரண்டும் கோபுரம் இடிந்து விழ இரண்டு பெரிய காரணங்கள் ஒரே நேரத்தில் சம்பவித்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தன.

முதலில், விமானங்கள் மோதியதில் இரண்டு கட்டடங்களும் கடுமையான கட்டமைப்புச் சேதத்தைச் சந்தித்தன.

இரண்டாவதாக, மோதலுக்குப் பிறகு, கட்டடங்களில் தீ பல தளங்களுக்குப் பரவியது.

"தீ இல்லை என்றால், இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்காது" என்கிறார் காஸெல். மேலும் அவர், "தீ மட்டுமே ஏற்பட்டிருந்து கட்டடத்திற்கு வேறு எந்த விதமான கட்டமைப்புச் சேதமும் ஏற்படாமல் இருந்திருந்தாலும், இந்த இரட்டைக் கோபுரங்கள் சரிந்திருக்காது." என்று கூறுகிறார்.

"அந்தக் கட்டடம் எதையும் தாங்கும் உறுதியுடன் அமைக்கப்பட்டிருந்தது." என்கிறார் பொறியாளர் காஸெல்.

என்ஐஎஸ்டி அறிக்கையின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பின் போது இருந்த மிகப்பெரிய வணிக விமானமான போயிங் 707 விமானத்தின் மோதல்களைத் தாங்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது என்று என்ஐஎஸ்டி-யின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், என்ஐஎஸ்டி ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வர, தாங்கள் பயன்படுத்திய அளவுகோல்கள் மற்றும் முறைகள் பற்றி எந்தத் தகவலையும் வழங்கவில்லை.

இரட்டை கோபுரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரட்டை கோபுரங்கள் எப்படி உருவாக்கப்பட்டன?

1960 இல் இந்த இரட்டை கோபுரங்களின் கட்டுமானம் தொடங்கியபோது, அந்தக் காலத்தின் தரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வடிவமைப்பு அவர்களிடம் இருந்தது.

இரண்டும் லிஃப்ட் மற்றும் மாடிப்படி கொண்ட எஃகு மற்றும் கான்கிரீட் கட்டடங்கள்.

எஃகுக் கம்பிகள், ஒவ்வொரு தளத்திலும் கிடைமட்டமாக நிறுவப்பட்டன, அவை மையத்தில் தொடங்கி, கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களை உருவாக்க அமைக்கப்பட்ட எஃகு கம்பிகளுடன் இணைக்கப்பட்டன.

எஃகுக் கம்பிகளின் குழுக்கள் ஒவ்வொரு தளத்தின் எடையையும் தூணை (மையம்) நோக்கி விநியோகிக்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு தளமும் அதற்கு (தூண்) தனித்தனியாக ஆதாரமாக இருக்கிறது. அதனால் அது வளைந்து போகாது. சிவில் இன்ஜினியரிங்கில் இது பக்லிங் என்று அழைக்கப்படுகிறது.

இரட்டை கோபுரங்களில் நிறுவப்பட்ட எஃகு அமைப்பு கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது, இது தீ ஏற்பட்டால் கம்பிகளைப் பாதுகாக்கப் போதுமானது.

விட்டங்களும் தூண்களும் மெல்லிய தீயெதிர்ப்பு அடுக்கால் மூடப்பட்டிருந்தன.

தீ பரவ உதவிய காற்று

இரண்டு கோபுரங்களும் ஒரு பெரிய போயிங் விமானத்தால் மோதப்பட்டன. போயிங் 707 மோதியதைத் தாங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டன, ஆனால் அதைவிடப் பெரிய போயிங் 767 மோதியது.

மின்கம்பங்கள் மற்றும் தூண் கட்டமைப்பை உள்ளடக்கிய தீயணைப்பு இன்சுலேட்டரைத் தகர்த்த இந்த மோதலின் காரணமாக கட்டடத்தின் தூண்கள் கடுமையாகச் சேதமடைந்தன என்று என்ஐஎஸ்டி அறிக்கை கூறுகிறது.

தீ பரவியது

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மோதலால் உருவாகும் அதிர்வுகள் எஃகு மீது இருந்த தீயெதிர்ப்புப் பூச்சை உடைத்ததால், அந்தக் கம்பி, எளிதில் நெருப்புக்கு இரையானது." என்று காஸெல் விளக்குகிறார்.

இதனால் முழுக் கட்டடமும் தீப்பிழம்புகளுக்கு இரையானது. கட்டமைப்புச் சேதமும் உண்டானது.

தீ பரவியபோது, கட்டிடத்தின் வெப்பநிலை 1000 டிகிரி சென்டிகிரேட்டை எட்டியது, இதன் காரணமாக ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஜன்னல்கள் உடைந்ததால், வெளிக்காற்று உள்ளே நுழைந்து தீ பரவுவதற்குக் காரணமானது." என்கிறார் காஸெல்.

"பறக்கும் வெடிகுண்டு"

ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 10,000 கேலன் எரிபொருள் (37,850 லிட்டருக்கு மேல்) இருந்ததாக அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

"அவையே பறக்கும் வெடிகுண்டுகளாகத் தான் இருந்தன" என்கிறார் காஸெல்.

அந்த எரிபொருளின் பெரும்பகுதி விமானம் மோதியதன் காரணமாக உருவான தீயில் எரிந்தது. மேலும் அதிக அளவில், கோபுரத்தின் கீழ் தளங்களில் விழுந்தது.

இது தீ பரவுவதற்கு உதவியது, மேலும் தீப்பிடிக்கக்கூடிய பல பொருட்களும் சேர்ந்து தீ பரவுவதை வேகப்படுத்தின.

எரியும் நெருப்பின் காரணமாக இரண்டு விஷயங்கள் நடந்ததாக எம்ஐடியின் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

முதலில், மிக அதிக வெப்பம் ஒவ்வொரு தளத்திலும் கம்பிகள் மற்றும் ஸ்லாபுகள் வரை பரவியது. இதன் காரணமாக, கம்பிகள், ஸ்லாப்பில் இருந்து பிரிக்கப்பட்டன.

அதே நேரத்தில், பீம் விரிந்து, தூணை வெளியே தள்ளியது.

பின்னர் மற்றொரு விளைவு நடந்தது.

கட்டடம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீப்பிழம்புகள் கம்பிகளின் இரும்பை மென்மையாக்கத் தொடங்கின, இதனால் அவை நெகிழ்ந்தன.

இதன் காரணமாக, இரட்டை கோபுரத்தின் வலுவான அமைப்பு ஒரு கயிறு போல் தோன்ற ஆரம்பித்து முழுக் கட்டடமும் தூணை உள்நோக்கி தள்ளத் தொடங்கியது.

"இது கோபுரத்திற்கு ஆபத்தானது," என்கிறார் காஸெல்.

கட்டடம் முற்றிலும் எரிந்தது

தூண்கள் இப்போது நேராக இல்லை. காரணம், பீம்கள் அவற்றை முன்னும் பின்னுமாக வளைக்க, அவை வளையத் தொடங்கின.

இவ்வாறு, என்ஐஎஸ்டி அறிக்கையின்படி, தூண்கள் வளைந்து இடிந்து விழத் தொடங்கின. அவை இணைக்கப்பட்ட கம்பிகள், அவற்றை உள்நோக்கி இழுத்தன.

மறுபுறம், காஸெலின் பகுப்பாய்வின் படி, விட்டங்கள் தூண்களை வலுவாக இழுக்கின்றன, அவை தூண்களுடன் இணைக்கப்பட்டிருந்த அவற்றின் நட்டு போல்ட்களை உடைத்தன. இதன் காரணமாக இந்தத் தளங்கள் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளே அவற்றின் அடிப்பகுதியில் அதிக எடையை உருவாக்கத் தொடங்கின.

இது ஏற்கனவே பலவீனமான தூணில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, முழு கட்டடமும் இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்து விழுந்தவுடன், அதன் தளங்களுக்கு இடையில் இருந்து காற்று வெளியேறி வேகமாக எல்லா இடங்களிலும் பரவியது என்று காஸெல் விளக்குகிறார். இதன் காரணமாக அங்கு பலத்த காற்று வீசியது. அங்கே தூசி மேகம் உருவாவதற்கு இதுதான் காரணம்.

சில வினாடிகளில் இரு கட்டடங்களும் மறைந்துவிட்டன, ஆனால் அடுத்த பல நாட்களுக்கு இந்தத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த தாக்குதலின் திகில் மற்றும் வலி குறையவில்லை.

https://www.bbc.com/tamil/global-58509097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் நாடகமா? யூதர்களின் சதியா? விடுபடாத புதிர்கள்

10 செப்டெம்பர் 2021, 07:09 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இரட்டைக் கோபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 பயங்கரவாதிகள் நான்கு விமானங்களைக் கடத்தி அமெரிக்காவின் முக்கிய அடையாளச் சின்னங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பயணிகள், விமானிகள், பணியாளர்கள், தாக்கப்பட்ட கட்டடத்தில் இருந்தவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இவையெல்லாம் அமெரிக்காவின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலும் பல்வேறு புலனாய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் எல்லோரும் இவற்றை நம்புவதில்லை. நடந்து முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்கூட இது அமெரிக்காவே திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் இருந்தே அதன் மீதான சந்தேகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் அந்த சந்தேகம் வளர்ந்திருக்கிறது.

அல்-கொய்தா இயக்கத்துடன் அமெரிக்காவின் தலைமை கூட்டுச் சேர்ந்து இப்படியொரு சதியை அரங்கேற்றியதாகவும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். செப்டம்பர் 11 உண்மை இயக்கம் என்பது உள்ளிட்ட பெயர்களில் இவர்கள் சில குழுக்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

அறிவியலாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் என பல தரப்பினர் இதுபோன்ற குழுக்களில் இயங்குகிறார்கள். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும் போரை நடத்துவதற்காக இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்று கூறுவோரும் உள்ளனர்.

பொதுவாக மூன்று வகைகளில் இந்தச் சந்தேகம் வைக்கப்படுகிறது. தாக்குதல் நடக்கப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்காமல் விட்டதாக ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். சிலர் இதை முழுமையாக அமெரிக்காவின் உள்வேலை என்றும் மேலும் சிலர் ஏதோ தவறு மட்டும் நடந்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

மூன்றாவது கோபுரம் இடிந்தது ஏன்?

அதிகமாக அறியப்படாத வர்த்தக மையத்தின் 7-ஆம் எண் கோபுரம் இடிந்ததை பலர் சந்தேகித்தனர். இரண்டு கோபுரங்கள் மீது விமானங்கள் மோதிய நிலையில், அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு கோபுரம் ஏழு மணி நேரத்துக்குப் பிறகு ஏன் இடிந்தது என்று இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வெடிகுண்டுகள் மூலம் இந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

ஏழாம் எண் கட்டடம் இடிவதற்கு முன்பே பிபிசி செய்தியாளர் ஜேன் ஸ்டேன்லி, அந்தக் கட்டடம் இடிந்து விட்டதாக நேரலையில் கூறியதை பலர் ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள்.

பிபிசி

ஆனால் இது தொடர்பாக ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய தர மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (NIST) விஞ்ஞானிகள் வேறு மாதிரியான விளக்கத்தை அளித்தார்கள். அருகேயுள்ள வடக்குக் கோபுரக் கட்டடம் இடிந்து விழுந்து தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் அந்த வெப்பம் பரவி, ஏழாம் எண் கோபுரத்தைத் தாங்கும் இரும்புக் கம்பிகள் உருகி கட்டடம் இடிந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இரட்டைக் கோபுரங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததற்கும்கூட இதேபோன்ற விளக்கமே அளிக்கப்பட்டது.

விமானங்கள் இடைமறிக்கப்படாதது ஏன்?

உலகின் மிகவும் வலிமையான விமானப் படையை வைத்திருக்கும் அமெரிக்கா, உடனடியாக விமானங்களை இடை மறித்துத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகிறார்கள். அப்போது துணை அதிபராக இருந்து டிக் சீனி, விமானங்களை இடை மறிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதாகவும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஆனால் அமெரிக்க நிர்வாகம் இதை மறுத்திருக்கிறது. விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான டிரான்ஸ்பான்டர்கள் அணைக்கப்பட்ட நிலையில் இடைமறிப்பது சாத்தியமில்லை என்று நிர்வாகம் கூறியிருக்கிறது.

சந்தேகிப்பவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சந்தேகிப்பவர்கள் நடத்திய போராட்டம்.

எப்போதும் உஷார் நிலையில் இருக்கும் பென்டகன் கட்டடம் கடத்தப்பட்ட விமானத்தால் அல்ல, ஏவுகணை கொண்டே தாக்கப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் அந்த இடத்தில் மீட்கப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 77 விமானத்தின் கறுப்புப் பெட்டியையும், உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்களையும் ஆதாரமாகக் காட்டுகிறது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பு.

இவற்றைப் போலவே, கடத்தப்பட்ட நான்காவது விமானம் விழுந்த இடம் ஏன் மிகவும் சிறியதாக இருக்கிறது, அந்த இடத்தில் ஏன் விமானத்தின் பாகங்கள் தென்படவில்லை என்றெல்லாம்கூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த விமானம் வேறொரு இடத்தில் பத்திரமாகத் தரையிறங்கியதாக நம்புவோரும் இருக்கிறார்கள்.

யூதர்கள் கொல்லப்படவில்லையா?

அமெரிக்கா முழுவதும் நிறைந்திருக்கும் யூதர்கள் ஒருவர்கூட இந்தத் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று செப்டம்பர் 11 தாக்குதல் குறித்த சந்தேகம் எழுப்பும் சிலர் கூறுகிறார்கள். உலக வர்த்தக மையத்தில் பணியாற்றிய சுமார் 4 ஆயிரம் யூதர்கள் அன்றைய தினம் பணிக்கு வர வேண்டாம் என முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது பிராந்திய ஆதாயத்துக்காக உலக அரசியலை மறைமுகமாக இயக்கும் இஸ்ரேலியர்கள் சிலர் சதி செய்து இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

புஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

செப்டம்பர் 11 நினைவஞ்சலியில் ஜார்ஜ் புஷ்

ஆனால் அதில் உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 119 பேர் யூதர்கள் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவற்றைப் போன்றே இன்னும் பல செப்டம்பர் 11 தாக்குதலின் மீதான பல சந்தேகக் கூற்றுகள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலானவற்றுக்கு உரிய ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அதிபர் புஷ் இன்னொரு தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார். பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா போரை நடத்தியிருக்கிறது. பின் லேடன் கொல்லப்பட்டுவிட்டார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களிலெல்லாம் அமெரிக்காவின் மன உறுதியையும் ஒற்றுமையையும் காட்டும் வகையில் புதிய கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டு விட்டன. ஆனால், அவற்றுக்கு அடியில் சில ரகசியங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் இன்னமும் நம்புகிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-58511165

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.