Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள்

  • ஃப்ராங்க் கார்டனர்
  • பிபிசி பாதுக்காப்புச் செய்தியாளர்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
ராணுவத்தினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ராணுவத்தினர்

20 ஆண்டு கால, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில் நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோமா? இன்று ஆப்கானிஸ்தான் மீண்டும் அல்-காய்தாவின் ஆதரவு அமைப்பு ஒன்றால் ஆட்சி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது. 2001 செப்டம்பர் 11 அன்று காலையை விட நாம் இப்போது எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளோம்? என்பது குறித்த அலசல் தான் இது.

மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளானதில் உலகமே விழித்துக் கொண்டது. அதிபர் ஜார்ஜ் புஷ், "ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிராந்தியமும் இப்போது ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். அமெரிக்காவின் பக்கமா அல்லது பயங்கரவாதிகளின் பக்கமா என்று முடிவு செய்ய வேண்டும்" என்று தாக்குதலுக்கு ஒன்பது நாட்களுக்குப் பிறகு முழங்கினார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அறிவிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆக்கிரமிப்பு எனத் தொடங்கி, ஐ எஸ் ஐ எஸ் வளர்ந்து, ஈரானிய ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பரவி, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், பெண்கள், பொதுமக்கள் என உயிரிழக்கக் காரணமானது.

ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. ஐரோப்பாவின் ஒவ்வொரு பெரிய நாடும் அண்மைக் காலங்களில் தாக்குதல்களைச் சந்தித்துள்ளன. சில வெற்றிகளும் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இன்று வரை 9/11 போன்றதொரு தாக்குதல் மீண்டும் நிகழவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்த அல் காய்தா முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிரியா மற்றும் ஈராக்கின் பெரும்பகுதிகளில் தலைவிரித்தாடிய இஸ்லாமிய காலிஃபேட் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் முடக்கப்பட்டது.

கீழேயுள்ள பட்டியல் சந்தேகத்திற்கு இடமின்றி சர்ச்சைக்குரியது. தவிர அது விரிவானதும் இல்லை. இது மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், வாஷிங்டன் மற்றும் குவாண்டனாமோ பே பகுதிகளில் இந்த விஷயம் குறித்த எனது சொந்த அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

1. முக்கிய உளவுத் தகவல் பரிமாற்றம்

2017-ல் மான்செஸ்டரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2017-ல் மான்செஸ்டரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

சில தகவல்கள் திரட்டப்பட்ட போதும் புள்ளிகளை இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டனர். 9/11-க்குச் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் இரண்டு முக்கிய உளவு அமைப்புகளான எஃப் பி ஐ மற்றும் சி ஐ ஏ ஆகியவற்றுக்கு சில தகவல்கள் கிடைக்கத்தான் செய்தன.

ஆனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச உளவு அமைப்புகளுக்கு இடையில் இருந்த போட்டியால், இத்தகவல்கள் பகிரப்படாமல் போயின. 9/11 கமிஷன் அறிக்கையால், அன்று தொடங்கி, குறைபாடுகளைப் பெருமளவில் சுட்டிக்காட்டி, மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

2006-ல் வர்ஜினியாவில் உள்ள, அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்குச் சென்ற போது, அமெரிக்காவின் 17 அமைப்புகளும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை அன்றாடம் எப்படி ஒன்று திரட்டுகிறார்கள் என்பதை நேரில் கண்டேன்.

பிரிட்டனும் தனக்கென்று ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பைத் தொடங்கியது. கூட்டு பயங்கரவாத ஆய்வு மையம் (JOINT TERRORISM ANALYSIS CENTRE, JTAC) என்ற இதில், எம் ஐ 5, எம் ஐ 6, பாதுகாப்புத் துறை, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் மற்றும் பல துறையினர் ஒரே கூரையின் கீழ் அமர்ந்து பணியாற்றினர்.

உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பிரிட்டன் குடிமக்களுக்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தொடர் ஆய்வை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்தக் கட்டமைப்பு திறம்படச் செயல்படவில்லை. ஜே டி ஏ சி அமைக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகும், பிரிட்டன் குடிமக்களைக் கொண்டே ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது மக்களைக் கொன்ற 7/7 தாக்குதல்கள் அல் காய்தாவால் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டில், பல விமானங்களை வானிலேயே தாக்கி அழிக்கும் திட்டம் பாகிஸ்தான் உதவியால் தடுக்கப்பட்டாலும், 2017-ல் மான்சென்ஸ்டர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல தாக்குதல்களை பிரிட்டன் சந்தித்தது.

உளவுத் தகவல்கள் சிறந்த முறையில் பரிமாறிக்கொள்ளப்பட்டாலும், முன்னுரிமைகளை முடிவு செய்வதில் தவறு ஏற்பட்டால், அது பயன் தராது.

இன்னும் விசாரணை தொடர்ந்து வரும், 130 உயிர்களை பலி வாங்கிய, 2015, பாரிஸ் பாட்டாக்ளான் தாக்குதலும் எல்லை தாண்டிய உளவுத் தகவல் பரிமாற்றத்தில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தவறிய காரணத்தால்தான் சாத்தியமானது

2. கவனச் சிதறல்

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி அமைய பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று பிரதானமானது. அது 2003-ல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு. இது ஆப்கானிஸ்தானில் நடப்பவை குறித்த கவனத்தைத் திசை திருப்பிய தவறான முடிவு.

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்குத் துணையாக அல் காய்தா, தாலிபான் நடமாட்டத்தை ஒழிக்க உதவி வந்த அமெரிக்க, பிரிட்டிஷ் படையினர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர். இது தாலிபன் மீண்டும் தலையெடுக்க வழிவகுத்தது. 2003 நவம்பரில் நான் ஆப்கானிஸ்தானின் பக்திகா முகாமில் உள்ள தரைப்படையினரைச் சந்தித்த போது, அவர்களின் இந்தத் திட்டம் 'மறக்கப்பட்ட திட்டம்' என்று அமெரிக்க வீரர்கள் சொல்லக் கேட்டேன்.

ஆப்கானிஸ்தானில் வகுக்கப்பட்ட திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது என்பதை மறப்பது எளிது. குற்றவாளிகளை ஒப்படைக்க தாலிபன் மறுத்ததையடுத்து, தாலிபன்களை எதிர்க்கும் ஆப்கானியர்களின் கூட்டமைப்பான வடக்குக் கூட்டணியுடன் இணைந்து தாலிபன் மற்றும் அல் காய்தாவை ஒழிக்க முடிவு செய்தது அமெரிக்கா.

ஆனால், சில ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் நோக்கம் நீர்த்து போனது. அந்தக் கால கட்டத்தில் பெரும்பாலான ஆப்கானியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்றாலும் தேசத்தைக் கட்டமைக்க ஒதுக்கப்பட்ட நிதி, பெருமளவில் ஊழலால் வீணானது.

3. கூட்டாளிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தல்

ராணுவத்தினர்

பட மூலாதாரம்,FRANK GARDNER

 
படக்குறிப்பு,

ராணுவத்தினர்

2003-ல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பின்போது, தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவுடன் பிரிட்டன் கை கோர்த்தது, அதன் பிறகு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும் முக்கிய பங்கு பிரிட்டனுக்கும் உண்டு என்பதைக் காட்டுகிறது.

ஈராக் ராணுவத்தை கலைக்கவோ அல்லது பாத் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் அரசாங்கப் பொறுப்புகளில் இருந்து தடை செய்யவோ கூடாது என்ற அவசர வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது. இதன் விளைவாக அதிருப்தி அடைந்த மற்றும் வேலையிழந்த ஈராக்கிய ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் அடிப்படைவாத ஜிஹாதிகளின் ஒரு பேரழிவுக் கூட்டணி உருவானது. இதுதான் ஐஎஸ்ஐஎஸ் ஆக உருவானது.

கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சில ஆட்சியாளர்களுடன் அமெரிக்க, பிரிட்டன் உளவு அமைப்புகள் கை கோர்த்ததால் 9/11-க்குப் பிறகு பெரிய பதற்றம் நிலவியது.

உதாரணமாக, 2011-ல் லிபியாவில் கர்னல் கடாஃபியின் தலைமறைவு ஆட்சி அகற்றப்பட்ட பின், எம்ஐ 6 அதிகாரி ஒருவர் லிபியாவின் அதிகாரிக்கு எழுதிய கடிதம் ஒன்று ஊடகவியலாளர்களிடம் சிக்கியது. அதில், ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளரைக் கைது செய்ய அவரை நாடுகடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டிருந்தது.

இன்று ஆப்ரிக்காவில் முறையான நிர்வாகமில்லாத நாடுகளில்தான் வன்முறை ஜிஹாதியம் பெருமளவில் நிலவுகிறது. மேற்கத்திய நாடுகளுடன் கை கோர்க்கக்கூடியவர்களுக்கு இது சிக்கலாகிறது

4. தார்மீக நிலைப்பாட்டுக்கு எதிரான மனித உரிமை மீறல்

ஆப்கனில் தாலிபன்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆப்கனில் தாலிபன்கள்

மத்திய கிழக்குப் பகுதி மக்கள், "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், குவாண்டனாமோ பே தடுப்பு முகாம் நிகழ்வு வரை, அவர்களின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளை நாங்கள் மதித்துள்ளோம்" என்று பலமுறை என்னிடம் கூறக் கேட்டுள்ளேன்.

சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பெயரில் பொது மக்களையும் கொடுமைப்படுத்தி, அவர்களைப் புளி மூட்டைகளைப் போல் அடைத்து, கியூபாவில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் தடுப்பு மையத்தில் அடைத்தது, அமெரிக்கா மற்றும் மேற்குலகிற்கு அவப்பெயரைத் தேடித் தந்தது.

சர்வாதிகார நாடுகளில்தான் விசாரணையின்றி அடைத்துவைத்தல் என்பது நிலவிய நிலையில், அமெரிக்காவிடமிருந்து இருந்து அரேபியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

தீவிர விசாரணை என்ற பெயரில், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துன்புறுத்தி, அவர்களைக் காணாமல் போனவர்களாக்கிய கொடுமை, நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. ஒபாமா ஆட்சியில் இவை நிறுத்தப்பட்டாலும், ஏற்பட்டுவிட்ட பாதிப்பை மறக்க முடியவில்லை.

5. வெளியேறும் திட்டம் அவசியம்

ஆயுதமேந்திய போராளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆயுதமேந்திய போராளி

9/11 க்கு முந்தைய மேற்கத்திய ஆக்கிரமிப்புகள் குறுகிய காலத்தில் முடிந்த எளிமையானவையாகவே இருந்தன. சியரா லியோன், கொசோவோ, 1991 பாலைவன புயல் திட்டம் - எல்லாமே வரையறுக்கப்பட்ட முடிவைக் கொண்டிருந்தன.

ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான படையெடுப்புகள் "முடிவில்லாப் போர்கள்" என்று அழைக்கப்படுகின்றன. 2001 அல்லது 2003 இல் சம்பந்தப்பட்ட எவரும் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எளிமையாகச் சொன்னால், மேற்கு நாடுகளுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்றும் புரியவில்லை, வெளியேறும் திட்டமும் இல்லை.

2001-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபன் மற்றும் அல் காய்தாவை மேற்கத்திய நாடுகள் ஒழித்திராவிட்டால், மேலும் பல தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்திருக்கும். பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் அங்கு தோல்வியடையவில்லை என்றாலும் தேசக் கட்டமைப்பு என்பது நிறைவடையாத ஒன்றாகவே இருக்கிறது.

இன்று அங்கு எஞ்சியிருப்பது, மேற்கத்திய நாடுகளால் கைவிடப்பட்ட நிலையில் விமானத்தில் தொற்றிக்கொண்டாவது அங்கிருந்து உயிர் பிழைத்து வெளியேறத் துடிக்கும் ஆப்கன் மக்களின் கவலைக்கிடமான நிலைதான் என்பது வேதனையான விஷயம்.

https://www.bbc.com/tamil/global-58527827

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.