சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம் அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. "யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான். அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள். ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது. 'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான். 'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான். முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை. யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள். அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள். சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும் சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ? தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க? அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது. ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான். அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள். மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும் நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள். ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான். "நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி. “வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்: "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!] இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும். யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று. ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்! ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?
By
kandiah Thillaivinayagalingam · 16 minutes ago 16 min
Archived
This topic is now archived and is closed to further replies.