Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

கேள்வி: இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அவற்றை சமாளிக்கும்படி சிறுவயதில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையாக வளர்ப்பது நல்லதல்லவா?

 

பதில்: தன்னம்பிக்கை, சுதந்திரம், துணிச்சல் ஆகியன பயனுள்ள இயல்புகளே. ஆனால் இவை ஒரு குழந்தையின் தன்னுணர்வு, தன்னிலையில் இருந்து தோன்றும் அசலான இயல்புகளாக இருக்க வேண்டும். தன்னுணர்வு ஒருவருக்கு உள்ள வாழ்க்கைப் பார்வையில் இருந்து, அனுபவத்தில், அறிவில், நம்பிக்கைகளில் இருந்து தோன்ற வேண்டும். நான் இப்படியானவன், இப்படியானவள் என ஒரு குழந்தையால் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. வளர்ந்தவர்களால் ஓரளவுக்கு இது முடியும். “நான் ஒரு நடைமுறைவாதி”, “நான் ஒரு லட்சியவாதி”, “நான் ஒரு பக்தன்”, “நான் ஒரு அவநம்பிக்கையாளன்”, “நான் ஒரு போராளி”, “நான் ஒரு தனிமை விரும்பி” இப்படி. இது ஒரு சாராம்சமான அடையாளம் அல்ல. இது ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள தலைப்படுகிறார் என்பது மட்டுமே. ஆனால் குழந்தைகளுக்கு இந்த சமூகம், கலாச்சாரம், அதன் குறியீடுகள், கனவுகள், மாறுபட்ட அனுபவங்கள் வழி தம்மைக் குறித்து ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்ள கால அவகாசம், சந்தர்பங்கள், அறிவு இருப்பதில்லை. ஆகையால் ஒரு குழந்தை பத்து, பன்னிரெண்டு வயது வரை தாம் பார்க்கிறவர்களை வைத்தே தம்மை அது அடையாளப்படுத்துகிறது. நாம் ஒரு கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது “என்னுடைய பிம்பம் அங்கு தெரிகிறது” என நினைக்கிறோம். ஆனால் ஒரு குழந்தையோ “அந்த பிம்பம் மற்றொரு நபர், அந்த பிம்பம் அழகாக இருக்கிறது, அதைப் போல நான் இருக்க விரும்புகிறேன் என யோசிக்கிறது. (தன் பிம்பத்தை கண்ணாடியில் காணும் ஒரு சிறிய நாய் வீட்டுக்குள் யாரோ வந்து விட்டார்கள் என குறைப்பதை போல.) இந்த கண்ணாடி தான் ஒரு குழந்தையைப் பொறுத்தமட்டில் அதன் அம்மா, அப்பா, ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், கார்டூன் பாத்திரங்கள், சாகச சினிமா கதாபாத்திரங்கள். இவர்கள் ஏற்படுத்திய மனப்பிம்பமே அந்த பிரதிபிம்பம். அதனாலே பதின் வயதில் கூட குழந்தையின் தன்னுணர்வு மாறிக்கொண்டே வருகிறது. பதின் வயது கடந்து ஹார்மோன்கள் நிலைப்பெற்று, நரம்பணு மண்டலம் உறுதியான பின்னர் இருபதுகளில் ஒரு குழந்தை இவ்வுலகை வளர்ந்தவர்களைப் போல அறிய ஆரம்பிக்கிறது. அதன் தன்னுணர்வு அப்போது தான் ஓரளவுக்கு ஸ்திரப்படுகிறது. 

 

நாம் மேலே பேசிய தன்னம்பிக்கை, சவாலை சமாளிக்கும் துணிச்சல், தைரியம் ஆகியவை ஒரு குழந்தையை பொறுத்து இயல்பாக தனது தன்னிலையில் இருந்து தோன்றுவன அல்ல, மாறாக அவை போலியாக பெற்றோராலும் சகவயதினராலும் ஊடகங்களாலும் தோற்றுவிக்கப்படுபவை. கொஞ்சம் பிடித்து உலுக்கினால் உதிந்து பொலபொலவென விழுந்து விடக் கூடியவை.

 

 இன்றைய ஒரு எட்டு வயது குழந்தைக்கு ஒரு சிறிய வேலையை கொடுத்துப் பாருங்கள், வளர்ந்தவர்களைப் போல அதை சீரியஸாக செய்ய முயலும். முடிவில் தான் பாராட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கும். ஆனால் அந்த வேலையை ஏன், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த ஆழமான புரிதல் அதற்கு இருக்காது. தனக்கு புரிதல் இல்லை என்பதும் தெரியாது. மாறாக அது தனக்கு இந்த உலகம் முழுக்க புரிந்து விட்டது என தீவிரமாக நம்புகிறது. சாலையில் போகும் ஒவ்வொருவரும் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கிறது. வீட்டில் பெற்றோர் தன்னை சமமாக மட்டுமல்ல, அதற்கு மேலே நடத்த வேண்டும் என நினைக்கிறது. பெற்றோர் தமது மிதமிஞ்சிய பாசத்தாலும் குற்றவுணர்வாலும் தேவைக்கதிகமாக தம் குழந்தைகளை பாராட்டி சீராட்டி ஒரு போலியான ஈகோவை உருவாக்கி விடுகிறார்கள். இப்போது இக்குழந்தை ஒரு வகுப்புக்கு செல்கிறது. அங்கு ஆச்சரியம், இவனைப் போன்றே 50 வேறு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களும் தாமே உலகில் தலைசிறந்தவர்கள் என நம்புகிறார்கள். ஒரு தேர்வை எழுதுகிறார்கள். அதில் 50 பேரும் தமக்கு 100 மதிப்பெண் கிடைக்க வேண்டும் என நம்புகிறார்கள். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரியாது. 100க்கு குறைவான மதிப்பெண்ணை தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள், அவர்கள் சதா தன்னை இந்த உலகின் உன்னதமான குழந்தை என சொல்லுகிறார்கள் என அதற்குத் தெரியும். இந்த எதிர்பார்ப்பு எனும் பிரதிபிம்பத்தை ஒட்டியே அது தன்னை வடிவமைக்கிறது. அது நொறுங்கிப் போவதை அது ஒரு போதும் ஏற்காது. துரதிஷ்டவசமாக இன்றைய தனியார் துவக்க பள்ளி ஆசிரியர்களும் இந்த மனநிலையை ஊக்கப்படுத்துகிறார்கள். 

இது ஒரு போலியான, பொத்தலான தன்னிலை. இது நிஜமான தன்னிலை அல்ல என அக்குழந்தைக்கு புரிய இருபதாண்டுகள் ஆகலாம். அல்லது வாழ்நாள் முழுக்க இந்த போலியான தன்னிலையையே தான் என அது நம்பியபடி போராடலாம்.

நீங்கள் இன்றைய பதின்வயதினரைப் பாருங்கள். எப்போதும் தாம் ஏதோ உலகையே வென்று விட்ட பாவனையில் உட்கார்ந்திருப்பார்கள். எப்போதும் எனக்குத் தெரியுமே எனும் பெருமிதம், கசப்பு, அலுப்பு அவர்களுடைய முகத்தில். ஒரு கணினியில் விளையாட்டை ஆடும் போது ஏதோ நெப்போலியன் குதிரையில் ஏறி போர்களில் வென்றதைப் போல நடந்து கொள்ளுகிறார்கள். 

 

என்னுடைய வகுப்பில் நான் இன்று ஒரு சிரமமான கேள்வியை கேட்கிறேன் என்றால் அங்குள்ள 70 மாணவர்களில் 70 பேருமே தமக்கு அதற்கு விடை தெரியும் எனக் கூறுவார்கள். மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஒரு தவறான பதிலைக் கூறுவார்கள். அல்லது புத்திசாலித்தனமான பதில் என தொனிக்கிற ஒரு மேலோட்டமான கருத்தை கூறுவார்கள். அதற்குப் பின்னால் ஒரு அசலான தேடலோ, வாசிப்போ, அனுபவமோ இருக்காது. பெண்ணியம் குறித்த எந்த வாசிப்பும் இல்லாமலே இளம்பெண்கள் பெண்ணிய மொழியில் பேசுவார்கள். அரிஸ்டாட்டிலின் எந்த எழுத்தையும் தீண்டாமலே அரைமணிநேரம் அவருடைய தத்துவம் பற்றி தன்னம்பிக்கையுடன் பேசுவார்கள். கவனித்துக் கேட்டால் அது முழுக்க போலித்தனம் எனப் புரிந்து போகும். இவர்களுக்கும் முந்தைய தலைமுறையினருக்குமான ஒரே வித்தியாசம் இவர்களுடைய விரல் நுனியில் கூகிள் இருக்கிறது என்பது மட்டுமே. 

 

ஓராண்டுக்கு முன்னர் நான் ஒரு விபத்தைப் பார்த்தேன். ஒரு பத்து வயது பையன் ஒரு ஸ்கூட்டரை வேகமாய் ஓட்டி வந்து ஒரு பைக் மீது மோதி விட்டான். அவனுக்கு சிராய்ப்பு. பைக்கை ஓட்டியவருக்கு பலத்த அடி. கூட்டம் கூடி விட்டது. அவனுடைய அப்பா வந்தார். எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு அடிபட்டவருக்கு சிறிது பணம் கொடுத்து செட்டில் பண்ணி விட்டு வந்தார். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் அந்த பையனிடம் கொஞ்சம் கூட பயம் இல்லை. எகத்தாளமாக நடைபோட்டு வந்தான். நான் அவனுடைய அப்பாவிடம் “ஏன் சின்ன குழந்தையிடம் பைக்கை கொடுக்கிறீர்கள்? இது சட்டவிரோதம் எனத் தெரியாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர் ரொம்ப களைப்பாக “சார் இவன் கிட்ட சொன்னா கேட்க மாட்டான். அவனாவே பைக் சாவியை எடுத்திட்டு வெளியே போயிடுவான். நான் எப்படி இவனைக் கட்டுப்படுத்துறதுன்னே தெரியவில்லை.” எனக்குப் புரிந்து விட்டது - இவர் அந்த பையனை அவன் பிறந்ததில் இருந்தே ஏதோ வளர்ந்த மனிதனைப் போல நடத்துகிறார். அவனும் தன்னை வளர்ந்தவனாக நினைத்தே இதையெல்லாம் செய்கிறான். ‘இரண்டு வளர்ந்தவர்கள்’ இடையே எதற்கு அனுமதி, மரியாதை என்று நினைக்கிறான். இனி இந்த நம்பிக்கையை மாற்ற முடியாது.

 

இன்று காலை இன்னொரு காட்சி. ஒரு நாற்பது வயதுக்காரர் டவுசர் டீஷர்ட்டுடன் ஒரு கையில் பால் பாக்கெட்டுடன் இன்னொரு கையில் தன் மூன்று வயது பையன் அமர்ந்து வரும் சைக்கி தள்ளிக் கொண்டு போகிறார். கடுமையான வாகன நெரிசல் கொண்ட சாலை. நடப்பதற்கே இடமில்லை. யாராவது வேகமாய் வந்து அவனை பின்னிருந்து அந்த சிறிய சைக்கிளில் மோதினால் ஆபத்தாகி விடாதா? நியாயமாக ஆளில்லாத இடத்தில் அந்த குழந்தை சைக்கிளை விட்டுப் பழக வேண்டும். ஆனால் காலையில் அவர் கிளம்பும் போது அது “நானும் வருகிறேன்” என்று பிடிவாதமாக சொல்லும் போது அந்த அப்பாவுக்கு அதை மறுக்கத் தெரியாது. அதை எப்படியாவது நிறைவேற்றித் தர வேண்டும் என ஆசை ஏற்படுகிறது. நாளை இதே குழந்தை பன்னிரெண்டு வயதில் கார் வாங்கிக் கேட்கும், அப்போது என்னவாகும் என உங்களுக்கே தெரியும். “சதி லீலாவதியில்” கமல், கோவை சரளாவின் பையன் ஒரு கேம்கார்டரை வைத்து படமெடுத்துக் கொண்டு வருவான். உடனே சரளா “வளரும் போது பெரிய டைரக்டரா வருவான்” என்று பெருமைப்படுவார். அது பின்னர் எப்படியான சிக்கலை விளைவிக்கும் என நமக்குத் தெரியவரும். அதே போலத்தான் “ஸ்பேனர் எங்கே?” என்று அவன் அவசரமாக கேட்கும் போது சரளா இடத்தை சொல்லி விட்டு “வளர்நதும் பெரிய எஞ்சினியரா வருவான்” என்று சொல்லுவார். அவனோ வீட்டு காரின் பிரேக் கேபிளை கழற்றி விட்டு பின்னர் அதில் சரளாவே மாட்டிக்கொள்வார். இது அச்சு அசலாக இன்றைய கணிசமான வீடுகளில் நடக்கும் கதையே.

 

நான் சொந்தமாக நூறு ரூபாயை வீட்டில் இருந்து பெற்று பயன்படுத்தியது என் 18வது வயதில். இன்று பத்து வயது பிள்ளைகளின் கைகளில் ஆயிரக்கணக்கில் பணம், கிரெடிட் கார்ட், ஐபோன். 

 

ஒரு பத்து வயது குழந்தை இன்று கணினியில் விளையாடிக் கொண்டே, போனில் சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் படிக்கவும் செய்கிறது. அதுவாகவே ஸ்விக்கில் உணவை வரவழைத்து சாப்பிடுகிறது. விளைவாக அதன் உடல்நலன் சீரழிகிறது. எனக்கு நாற்பது வயதாகிறது. இப்போதும் நான் இரவு முழுக்க விழித்திருந்து எழுதினால் அம்மா வந்து திட்டுகிறார். அடுத்த நாள் முழுக்க கண்டிக்கிறார். இத்தனைக்கும் அவர் சொல்வதை நான் பொருட்படுத்த மாட்டேன். ஆனாலும் யாரோ கவனிக்கிறார்கள் எனும் உணர்வை அளிக்கிறார். மனிதனுக்கு அது அவசியம். குழந்தைக்கு முழுசுதந்திரத்தை அளிக்கிறோம் என்று சொல்லி நாம் நமது குழந்தைகள் அழிவதற்கான சுதந்திரத்தையே அளிக்கிறோம். சுதந்திரத்தை பயன்படுத்தும் முதிர்ச்சி அதற்கு வருவதற்கு இருபது வயது தாண்ட வேண்டும் என்கிறது அறிவியல்.

 

என்னுடைய நண்பன் ஒருவன் பெங்களூரில் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்தான். அப்போது நான் அவன் என்னிடம் தன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் கணிசமானோருக்கு போதைப்பழக்கம் இருந்ததை குறிப்பிட்டான். அது ஏதோ விதிவிலக்கு என நான் அப்போது நினைத்தேன். ஆனால் பெங்களூருக்கு வந்து நான்காண்டுகள் இருந்த நிலையில் அவன் சொன்னதே பெரும்பான்மையான போக்கு என கண்டுகொண்டேன். பெங்களூரில் உள்ள போதைமருந்துகளின் புழக்கத்தை நம்மால் கற்பனை பண்ணவே முடியாது. குழந்தைகள் பத்து வயதிலேயே சிகரெட், மதுப்பழக்கம் என ஆரம்பித்து மிக விரைவில் போதை மருந்துக்கு அடிமையாகிறார்கள். இது ஊரில் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், அக்குழந்தைகளின் பெற்றோரைத் தவிர. அவர்கள் பாட்டுக்கு கேட்கிற பணத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்பிள்ளைகள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கணக்கு வைத்துக் கொள்வதில்லை பெற்றோர்கள், எதற்கு இவ்வளவு பணம் என யோசிப்பதும் இல்லை. அண்மையில் என் வீட்டின் அருகில் உள்ள ஒரு  மருத்துவக் கல்லூரியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள போதைமருந்து மீட்பு மையத்துக்கு ஒரு நண்பரின் மகனைப் பார்க்க சென்றிருந்தேன். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. 99% 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்கள். என் உறவினர் இருந்த அறைக்குப் பின்னால் ஒரு அறையில் ஒரு 22 வயது பையன். அவனுடன் அவனுடைய அப்பா தங்கி இருந்து பார்த்துக் கொண்டார். இரவு எட்டு மணிக்கு அந்த பையனுக்கு போதை மருந்துக்கான இச்சை கட்டுக்கடங்காமல் போக தன் அப்பாவையே போட்டு அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரிக்கிறான். செவிலியவர் வந்து அவனைப் பிடித்து கட்டிப் போட்டார்கள். எனக்கு அதைப் பார்க்க இந்த மொத்த பிரச்சனைக்கும் அவனுடைய பெற்றோரே காரணம் எனத் தோன்றியது. 

 

பிள்ளையை ஒன்று சொந்த வீட்டில் வசிக்கும் ஒரு அகதியைப் போலவே சிறுவயது முதலே நடத்துவார்கள். அதற்கு அந்தரங்கம் என்று பெயரும் கொடுப்பார்கள். அவன் ஒழுங்காக சாப்பிடுகிறானா, அவனுடைய பழக்கங்கள், தேவைகள், பிரச்சனைகள் என்ன ஒரு எழவும் அவர்களுக்குத் தெரியது. அப்பா, அம்மாவுக்கு தனித்தனி அறைகள் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது உலகில் உட்கார்ந்து தத்தமது பிரச்சனைகளுடன் மல்லாடுவார்கள். இதற்குப் பெயர் குடும்பம்! அல்லது தன் குழந்தையை சிறுவயது முதலே பல உயர்தர கான்வெண்ட் விடுதிகளில் தங்க வைத்து படிக்க செய்யும் பெற்றோர். இவர்கள் வளர்ந்த பின் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை தனிமை. நான் என்னுடன் இணக்கமாக இருக்கும் மாணவர்களுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 2-4 மணிநேரங்கள் பேசுவேன். என் வாசிப்பை, அனுபவங்களை அவர்களுடன் பகிர்வேன். அவர்கள் சொல்வதில் இருந்து கற்றுக் கொள்வேன். அவர்கள் தமது பெற்றோருடன் தினமும் பத்து நிமிடம் கூடப் பேசுவதில்லை என அறிந்து அதிர்ந்து போனேன். 

 

அந்த ஆஸ்பத்திரியில் பக்கத்து அறையில் இன்னொரு இளைஞனைப் பார்த்தேன். அவன் கேரளாவை சேர்ந்தவன். இங்கே முனைவர் பட்ட ஆய்வுக்காக வந்தவன். போதைப்பழக்கத்தில் மாட்டி தடம் புரண்டு விட்டான். அவன் தன்னுடைய காதலியுடன் இணைந்து வாழ்கிறேன். அவள் தான் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாள். ஊரில் பெற்றோருக்கு மகனின் இந்த நிலை சுத்தமாக தெரியாது.

 

இது எந்தளவுக்கு ஒரு கலாச்சார பிரச்சனையோ அந்தளவுக்கு ஒரு ஆளுமைக் கோளாறும் தான். குழந்தைகளுடைய ஆளுமைக் கோளாறு என்பதை விட பெற்றோரின் ஆளுமைப்பிரச்சனை. எப்படி பெற்றோராக இருப்பது என்பதைப் பற்றி தலைகீழாக புரிந்து வைத்திருக்கும் பெற்றோரின் காலகட்டத்தில் நாம் இன்று வாழ்கிறோம். சுதந்திரம், தன்னம்பிக்கை, துணிச்சல், சுயசார்பு என பலவிசயங்களை குழந்தைகளின் வாழ்வில் போட்டுக் குழப்புகிறோம். நிஜத்தில் வளரும் வரை அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தில் குழந்தைகளை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்காக இந்த போலியான கருத்துக்களை அங்கு கார்ப்பரேட்டுகள் விதைத்து அறுவடை செய்கிறார்கள் என்றால் நாமும் அவர்களை காப்பி அடிக்க வேண்டியதில்லை.

 

 மாறாக ஒரு குழந்தையிடம் “நீ எனக்குக் கீழே தான்” என சிறுவயதில் இருந்து பெற்றோர் புரிய வைக்க வேண்டும். இந்த படிநிலை இயல்பானது, இதுவே அதன் வளர்ச்சிக்கும் ஏதுவானது. பெற்றோர்கள் தம் குழந்தைகள் நடுவே ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு நட்புணர்வும் சினேகமும் இருந்தாலும் போதுமான படிக்கு விலக்கியும் வைக்க வேண்டும். கண்டிப்பும் கரார்தன்மையும் காட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தம் மீது மரியாதை கலந்த அன்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  அப்போது தான் படிக்க வைக்க, ஒழுங்குபடுத்த முடியும். பெற்றோர் கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் திராவிட் போல இருக்க வேண்டும், ரவி சாஸ்திரி போல வீரர்களிடம் “வாடா மச்சான் பியர் அடிப்போம்” என குழந்தைகளிடம் சொல்கிறவர்களாக இருத்தலாகாது. உங்கள் மகன் “ஹேய் டூட்” என உங்களை அழைத்துப் பேசுவது, “உனக்கு ஒன்னும் தெரியாது” என்றெல்லாம் அவர்கள் நம்மிடம் பேசுவது ஆரம்பத்தில் கூலாக இருக்கலாம், ஆனால் அவனுடைய வாழ்க்கையில் ஒரு ஆசானாக, வழிகாட்டியாக இருக்க வேண்டிய பாத்திரத்தை நீங்கள் அத்துடன் இழப்பீர்கள். எனக்கு நானே வழிகாட்டி என அவன் நினைக்கத் தொடங்குவான். அதன் பின்னர் பெற்றோருக்கும், இந்த உலகுக்கும் தானே ஆசான் என நினைப்பான். தன்னை யாருமே கேள்வி கேட்கக் கூடது என நம்புவான். அதற்கு மேல் யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.

 

http://thiruttusavi.blogspot.com/2021/11/blog-post_95.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.