Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான மேலதிகாரியை எதிர்கொள்வது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான மேலதிகாரியை எதிர்கொள்வது எப்படி?

ஸ்ரீதர் சுப்ரமணியம்

spacer.png
 

ஒரே நிறுவனத்தில் என்னுடன் முன்பு வேலை செய்துவந்த கதிர்* என்பவருக்கு தொடர் பிரச்சினை ஒன்று இருந்துவந்தது. அவருக்கு அமைந்த மேனேஜர் அடாவடிப் பேர்வழியாக இருந்தார். “என்ன சொன்னாலும் அந்தாள்கிட்டே பிரச்சினையா இருக்குங்க” என்பார் வேதனையுடன். தினம் தினம் அலுவலகத்துக்குக் கிளம்பி வருவதே அவருக்குப் பெரும்பாடாக ஆகிப்போனது. பல நாள் பயத்திலும், தயக்கத்திலும் வேண்டும் என்றே விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கலானார். அது அவர் நிலையை இன்னமும் மோசமாக்கியது. அடிக்கடி ஜுரம், தலைவலி போன்ற உபாதைகளும் வரலாயின.

வேலைக்குப் போகும் நமக்கெல்லாம் நிம்மதியான வாழ்வு அமைய, மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நல்ல மேலாளர் கிடைப்பது என்று நம்புகிறோம்.  இது உலகளாவிய பிரச்சினையும்கூட. தங்களுக்கு வாய்த்த மோசமான மேலாளர்களை, ஊழியர்கள் மூவர் கொலை செய்ய முயல்வதாக ஒரு கதையை மையமாக வைத்து ஹாலிவுட்டில் திரைப்படமே வந்தது. அது வெறும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும் லட்சக்கணக்கான ஊழியர்களின் மனக்குமுறல் அதில் வெளிப்பட்டிருக்கிறது.

பல நேரங்களில் ஊழியர்கள் வேறு வேலை தேடிப் போவதே நல்ல மேலாளர் அமையாத காரணத்தால்தான் என்றாகிறது.  ‘வேலை மாறும் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு விலகுவதில்லை; அவர்கள் தங்கள் மேலாளரை விட்டு விலகவே முயற்சிக்கிறார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கிறது.

மேலாளர் என்பவர் ஒரு நிறுவனத்தில் குழுவை அல்லது ஒரு ப்ராஜக்ட்டை மேலாண்மை செய்பவர். இதர வேலைகளுக்கு இருப்பதுபோல இதற்கும் குறிப்பிட்ட திறமை, அறிவு, விழிப்புணர்வு தேவைப்படும். இவற்றை உள்ளடக்கிய மேலாண்மைப் பயிற்சியைப் பல பெரிய நிறுவனங்கள் மேலாளராகப் பொறுப்பு ஏற்பவர்களுக்கு வழங்குகின்றன. கொடுக்கப்பட்ட பொறுப்பில் அவர்கள் சரிவர பணிபுரிகிறார்களா என்று கண்காணிக்கவும் செய்கின்றன.

இந்தியா போன்ற நாடுகளில் பல மத்திய அல்லது சிறு நிறுவனங்களில் அப்படிப்பட்ட பயிற்சிகள் இருப்பதில்லை. கண்காணிப்புகளும் பெரிய அளவில் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் மேலாளர் என்பவர் ஏதோ சர்வாதிகாரிபோல தன்னை நினைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்துவிடுவதில், அவருக்குக் கீழ் பணிபுரிவோர் அவரிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகின்றனர். ஆனால், எல்லா நேரங்களிலும் இது மேலாளரின் தவறாக மட்டுமே இருப்பதில்லை.

ஒரு முறை கதிரும் நானும் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது பேச்சுவாக்கில், “இந்த மேனேஜர்களே மோசமான ஆளுங்க!” என்றார் கதிர். அந்த நண்பரே ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் என்பது கதிருக்குத் தெரியாது. “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று நண்பர் கேட்டார். அதற்கு கதிர் தனது மேலாளர் பற்றி புலம்ப ஆரம்பித்துவிட்டார். அதை அமைதியாக கேட்டுக கொண்டிருந்த நண்பர், “இதுக்கு முந்தைய கம்பெனில உங்க மேனேஜர் ஒழுங்கா இருந்தாங்களா?” என்று கேட்டார். “அதை ஏன் சார் கேக்கறீங்க; அவர் சரியில்லைனுதான் இங்கே வந்தேன். ஆனா வாணலிக்கு தப்பி அடுப்பில மாட்டுன கதையா ஆகிப் போச்சு!” என்றார். உடனே, “ஹ்ம்ம்... உங்களுக்கு ஒரே ஒரு மேனேஜர்கிட்ட பிரச்சினை வந்தா அது மேனேஜர் மேலே தப்பு. ரெண்டு, மூணு மேனேஜர் கிட்டே பிரச்சினை வந்தா உங்க மேலதான் தப்பு!” என்றார் நண்பர்.

பல மேலாளர்களுக்கு தம் ஊழியர்களை எப்படி நடத்துவது என்பது தெரியாமல் இருப்பதுபோல, ஊழியர்களுக்கும் எப்படி ஒரு குழுவில் அங்கமாக இயங்குவது என்பது தெரியாமல் இருக்கிறது. ஒரு மேலாளரின் கீழ் எப்படி பணிபுரிவது, எப்படி இருவரும் இயைந்து ஒரு ஒழுங்குமுறையுடன் வேலைகளை செய்து முடிப்பது என்பதில் குழப்பங்கள் வருகின்றன.

யாருக்காவது மேலாளரிடம் இயங்குவது பிரச்சினையாக இருந்தால் அதனை எப்படி அணுகுவது? வேலையை விட்டு விலகுவது சுலபமான விஷயம். ஆனால், பல நேரம் வேலையை விட்டுப் போவது தீர்வாக அமைவது இல்லை. காரணம், பிரச்சினை உங்களிடம்தான் என்றால் அதையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டுதானே அடுத்த வேலையில் சேருவீர்கள்? தவிர, கேரியர் உயரும் வாய்ப்பு, அதிக சம்பளம், பெரிய நிறுவனம், மதிப்புக்குரிய ப்ராஜக்ட் போன்ற விஷயங்களை வைத்துதான் வேலை மாற வேண்டும். சும்மா மேனேஜர் சரியில்லை என்றெல்லாம் வேறு வேலை தேடுவது பலனற்ற அணுகுமுறை.

அப்படியும் தாண்டி இடம் மாறுவது என்று முடிவெடுக்கும் முன்பு பல்வேறு விஷயங்களை முயற்சி செய்யலாம்.

யாரிடம் பிரச்சினை?

முதலில் தவறு யாரிடம் இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். மேலாளரிடமா அல்லது உங்களிடமா? இதற்கு விடை காணுவதற்கு இந்தக் கேள்வியை நீங்கள் திறந்த மனத்துடன் அணுக வேண்டி இருக்கும். தேவைப்பட்டால் உங்கள் கணவர், மனைவி அல்லது நண்பர் யாரையாவது வைத்துக்கொண்டு இந்தக் கேள்வியை விவாதியுங்கள். நீங்கள் பேசும் நபர் உங்களுக்கு ஆமாம் சாமியாக இல்லாமல் நேர்மையாக பதில் சொல்பவராக இருக்க வேண்டும். அப்படி நடக்கும் விவாதங்களில் பிரச்சினை உங்களிடம்தான் இருக்கிறது என்று தெரியவந்தால், விஷயம் முடிந்தது. நீங்கள் எடுக்க வேண்டிய மாற்றங்களை முன்னெடுக்க முயலுங்கள்.

வேலை தாண்டிய காரணங்களா?  

இந்தியா போன்ற நாடுகளில் கூடுதல் பிரச்சினையும் வரலாம். ஒரு சராசரி இந்திய ஆணுக்கு, பெண் மேலாளரின் கீழ் அவரது ஆணைகளைக் கேட்டு இயங்குவது பிரச்சினையாக இருக்கலாம். ‘கேவலம், ஒரு பொம்பளைக்கு கீழ வேலை பாக்கணுமா?’ என்று தோன்றலாம். அல்லது தன்னை விட அந்தஸ்து குறைவான சாதி என்று இவர் நினைக்கும் சாதியை சேர்ந்த ஒருவர் மேலாளராக வருவது அவமரியாதையாக இருக்கலாம். ‘இந்தாள் சொல்றதைக் கேட்டு நாம வேலை செய்யணுமா?’ என்று யோசிக்கலாம். இவையெல்லாம் நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.

மேலே குறிப்பிட்டதுபோல உங்களுக்கு இருக்கும் பாரபட்சம் ஏதேனும் காரணமாக உங்கள் மேலாளரை வெறுக்கிறீர்களா? அவர் ஒரு பெண் அல்லது உங்களுக்குப் பிடிக்காத மதம், சாதி, அல்லது உங்களைவிட வயதில் சிறியவர் போன்ற விஷயங்கள் அவரது பிம்பத்தை பாதிக்கிறதா? எனில் பிரச்சினை உங்களிடம்தான்.

மேலாளர் திறமையாளரா, பதவிக்குத் தகுதியானவரா என்பதே விஷயம். பல்வேறு முன்னேறிய நாடுகளில் வேலைத் திறன் தாண்டிய எந்தக் காரணத்தை வைத்தும் ஒருவரை பணியிடங்களில் எடை போடுவதை சட்ட விரோதமாக அந்தந்த அரசுகள் ஆக்கி இருக்கின்றன. அவற்றை மீறும் நிறுவனங்கள் மேல் கோடிகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவிலும் ஐடி, பிபிஓ போன்ற நவீன நிறுவனங்கள் மேற்கத்திய ஆளுகையில் பாதிப்புற்று இப்படிப்பட்ட விதிமுறைகளை தங்கள் நிறுவனங்களிலும் அமலாக்க முயல்கின்றன. ஆக, சாதி, மதம், பாலினம் போன்ற விஷயங்கள் உங்களுக்கு பிரச்சினை என்றால், நீங்கள் இந்த நூற்றாண்டில் வேலை செய்யவே கொஞ்சமும் தகுதியற்றவர்.

உங்கள் வேலைத்திறன் எப்படி? 

உங்களிடம் இருக்கும் வேலைத்திறன்கூட பிரச்சினையைக் கொண்டுவரலாம். நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களிடம் வேண்டிய தகுதி, திறமை இருக்கிறதா? மேலாளர் கொடுக்கும் வேலைகளைத் திறம்படவும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து முடிக்கிறீர்களா? உங்களிடம் இருக்கும் திறன் போதாமை காரணமாக உங்கள் மேலாளர் உங்களை கொஞ்சம் மட்டமாக நடத்துகிறாரா?

இதில் சந்தேகம் இருந்தால் அடுத்த மாதத்துக்கு ஒரு சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் மேலாளருடன் உறவை மேம்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்ய முயலுங்கள். குறித்த நேரத்துக்குள் முடிக்க எத்தனியுங்கள். அதில் குறை ஏதாவது வந்தால் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி ஒரு மாதம் செய்துவந்து, அதில் மேலாளர் இளகி உறவு மேம்பட்டுவிட்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

மூன்று தீர்வுகள்

மேலே குறிப்பிட்ட மூன்று பிரச்சினைகளும் உங்களிடம் இல்லை. நிஜமாகவே மேலாளரிடம்தான் தவறு இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால் அடுத்த திட்டத்தை யோசிக்கலாம்.  பல நேரங்களில் மனரீதியான கருத்து வேறுபாடுகளால்தான் மனிதர்களுக்குள் பிரச்சினை வருகிறது. நீங்களும் அவரும் வெவ்வேறு அலைவரிசைகளில் பயணித்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது. அவரிடம் நேரடியாக மனம்விட்டுப் பேசுவதுதான் அது. இருவரும் பரஸ்பரம் பேசுவதில், இடையில் இருந்த பனிக்கட்டி உருகி உறவு மேம்படக் கூடும்.

பல நேரம் மேலாளர் குறித்து சக ஊழியர்களுடன் புலம்புவதை பலர் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உள்ளக்கிடக்கையை கொட்டுவது ஒரு வித நிம்மதியை வழங்குவதாக கருதுகிறார்கள். ஆனால் உங்களுக்கு நிஜமாகவே நிலைமை சரியாக வேண்டுமெனில் உங்கள் மேலாளருடனான பிரச்சினை தீரும் வரை அவரைக் குறித்து அலுவலகத்தில் வம்பு பேசாதீர்கள். அப்படித் தொடர்ந்து பேசுவது மோசமான பாதிப்புகளையே கொண்டுவரக்கூடும்.

உங்கள் மேலாளருக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் இருக்கும். அதை கவனிக்க முயலுங்கள். அவர் முக்கியமானவை என்று கருதுபவற்றை நாம் முன்னுரிமை தந்து முடிக்கலாம், அவருக்கு கோபம் தரும் விஷயங்களைத் தவிர்க்கலாம். இப்படி நாம் அவருக்கு ஏற்றபடி நடந்துகொண்டால் பிரச்சினை குறையலாம்.

உங்கள் நிறுவனமே ஒருவித நிதிச்சிக்கலில் இருக்கலாம். அல்லது முக்கியமான வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கலாம். அப்போது அப்படிப்பட்ட அழுத்தம் உங்கள் மேலாளர் மீதும் விழுந்து அது இருவரிடமான உறவில் எதிரொலிக்கலாம். அப்படி ஏதாவது அழுத்தத்தில் நிறுவனம் இயங்குகிறதா என்று தெரிந்து கொள்ள முயலுங்கள். அப்போது உங்கள் மேலாளரின் பிரச்சினையை நீங்களும் உள்வாங்கிக் கொண்டு அவருக்கு உதவிகரமாக இயங்கலாம்.  

வேலை மாறுங்கள்

இதையெல்லாம் முயற்சி செய்து பலனின்றிப் போனால், உங்கள் மேலாளர் நிஜமாகவே அவர் பொறுப்புக்கு தகுதியற்றவராக இருக்கிறார். அப்போது வேலை மாற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.  

சிலருக்கு இயல்பிலேயே அடுத்தவர்  உத்தரவுகளைப் பின்பற்றி நடப்பதில் மனத்தடை இருக்கலாம். அப்போது அவர்கள் சுயமாக தொழில் புரிவது மட்டுமே அவர்களுக்கு நிம்மதியை வழங்கும். அதேதான் நம்ம கதிர்கூட செய்தார். இரண்டு மூன்று நிறுவனங்களில் முயற்சி செய்து அயர்ந்து போய் வேலைக்குப் போனால்தானே மேனேஜர் தொல்லை என்று தானே சொந்தமாக தொழில் துவங்கி இப்போது வெற்றிகரமாக தொழில் முனைவோராக மாறி இருக்கிறார். அவரே ராஜா, அவரே மந்திரி.

கடைசியாக இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: பிரச்சினைக்குரிய மேலாளர் என்பது வாழ்வின் மிகச் சிறிய விஷயம்தான். அது உங்கள் நிம்மதியை குலைக்க அனுமதிக்காதீர்கள். உடனடியாக தீர்வு கண்டு முன்னேறுங்கள்!

* - பெயர் மாற்றப்பட்டிருக்கிறது

 

https://www.arunchol.com/sridar-subramaniam-article-on-deal-with-bad-boss-arunchol-11122021

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.