Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நடையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் நடையும்

அவசரம் நம் காலத்தின் குணங்களுள் ஒன்று. துரித உணவு தொடங்கி துரிதச் செய்திகள், துரிதப் புத்தகங்கள் என எங்கும் அவசரம். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக வேகமாகச் செய்துவிடும் எண்ணம் வளர்ந்திருப்பதால், தவறுகள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. அதனாலேயே, அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வளர்ந்திருக்கிறது. ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இடம்பெறும் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் – தலைப்புச் செய்திகள் உட்பட, செய்தித்தாள்கள், ஆளுமைகளின் ட்வீட்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் போன்ற முக்கியமான இடங்களில்கூட பிழைகள் மலிந்திருக்கின்றன; பொருள் மயக்க வாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன. சினிமா, தொலைக்காட்சி, ஓடிடி என வெகுஜனத் தளத்தில் மட்டுமல்லாது எழுத்துத் துறைகளிலும் இது இன்றைய யதார்த்தம். இதைக் குறையாக அல்லாது, ‘பொருள் உணர்ந்து’ வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும், வாக்கியத்தில் ஒரு வார்த்தையை எங்கே இடம்பெறவைக்க வேண்டும் என்பதிலும் பிரக்ஞையற்று இருப்பதைக் காரணமாகச் சொல்லலாம்.

உதாரணமாக, ‘நூரானி அவர்களின் ஆர்எஸ்எஸ் குறித்த நூல் ஒரு நல்வரவு’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பே நூரானியுடையது என்ற மயக்கம் இந்த வாக்கியத்தில் இருக்கிறது. உள்ளடக்கத்தின் பின்னணி தெரிந்திருக்கும்போது பிரச்சினை இல்லை. உள்ளடக்கம் பரிச்சயமில்லாதபோது தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. இந்த வாக்கியத்தை, ‘ஆர்எஸ்எஸ் குறித்த நூரானியின் நூல் ஒரு நல்வரவு’ என்று எழுதுவது சரியாக இருக்கும்.

இன்னொருபுறம், நம்மிடையே சீரான வார்த்தைப் பயன்பாடானது சாத்தியமற்றதாகிருக்கிறது. தமிழ் மொழியின் இயல்பும் இதற்குக் காரணம்; ஒட்டுநிலை கொண்ட மொழி தமிழ். உதாரணமாக, ‘எழுதுதல்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் இது write, wrote, written, writing என்று ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ப துல்லிய வடிவத்தைப் பெற்றுவிடும். இன்ன பிறவற்றுக்கு வேறு துணை வார்த்தைகளைத் தன்னுடன் தனியாகச் சேர்த்துக்கொள்ளும்; தன்னோடு ஒட்டிக்கொள்ள அனுமதிக்காது.

ஆனால், தமிழில் அப்படியல்ல. எழுது, எழுதுவேன், எழுதுவான், எழுதுகிறேன், எழுதுகின்றேன், எழுதுகிறாள், எழுதுகிறார், எழுதுவது, எழுதுவதும்கூட என்று நீளும். எல்லா வார்த்தைகளிலும் ‘எழுது’ என்பது முழுமையாக இருக்கிறதே என்றால் எழுதினான், எழுதாமல் என்று இப்படியும் வடிவம் எடுக்கும். அடுத்த கட்டமாக, ‘எழு’ என்பதையும் எடுத்துக்கொள்ள முடியாது; அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருக்கிறது. எழுதேம்ல, எழுதுடே, எழுதணும்ங்க — இப்படியான வட்டார வழக்குகளையும் இணைத்துக்கொண்டால் இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுபோகும்.

நவீன வாசிப்புக் கருவிகளில் தமிழ் அகராதியை எளிதாகப் பயன்படுத்திவிட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, தமிழ் மொழியின் அமைப்பும் ஒரு முக்கியமான காரணம். இதில் தட்டச்சுப் பிழைகளையும் ஒற்றுப் பிழைகளையும், ஒரே வார்த்தையை விதவிதமாக (ஏற்கனவே, ஏற்கெனவே, ஏற்கெனெவே, ஏற்கனவே) எழுதும் நம் பழக்கத்தையும் சேர்த்துக்கொண்டால் இது இன்னும் சிக்கலுக்குரியதாகிறது. இன்னொரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், வார்த்தைகளைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதில் நாம் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில்லை என்பது.

இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் வேறுசில சிக்கல்களையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழில் சில வார்த்தைகள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் பிரிந்தும்தான் வரும். உயிர்வரின் உக்குரள் மெய்விட்டோடும் என்ற இலக்கண அர்த்தத்திலோ அல்லது கவித்துவத்துக்காக வார்த்தைகளைச் சேர்த்து எழுதும் அழகுணர்வு சார்ந்தோ இதைச் சொல்லவில்லை. சில வார்த்தைகளைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்போது, அர்த்தப்பாடே மாறிப்போகும் அபாயம் உண்டு. அதுதான் விஷயம். இது ஏனென்றால், சுந்தர் சருக்கை நம் கவனத்துக்குக் கொண்டுவருவதுபோல வாக்கியத்துக்கும் அர்த்தம் உண்டு.

‘தமிழில் சில வார்த்தைகள் சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் பிரிந்தும் வரும்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

இந்த வாக்கியத்தின் அர்த்தம் நமக்குத் தெரியும். இந்த வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் நமக்குத் தெரியும் என்பதால்தான் வாக்கியத்தின் அர்த்தமும் தெரிந்திருக்கிறதா?

எனில், இந்த வாக்கியத்தைப் பாருங்கள்: ‘வரும் பிரிந்தும் சில தமிழில் வார்த்தைகள் இடங்களில் சில சேர்ந்தும் இடங்களில் சில.’

முந்தைய வாக்கியத்திலுள்ள அதே வார்த்தைகள்தான் இந்த வாக்கியத்திலும் இருக்கின்றன. ஆனால், இந்த வாக்கியம் அர்த்தமற்றிருக்கிறது. சில சமயங்களில், வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டிருப்பது மட்டும் போதுமானதல்ல. வாக்கியமும் அர்த்தத்தைத் தருகிறது. ஆக, வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதுபோலவே வாக்கியத்துக்கும் அர்த்தம் உண்டு என்பதை நினைவில்கொள்வோம்.

‘க்ரியா’ ராமகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்ட ஆரம்ப நாட்களில், அவர் குறித்துவைத்திருந்த சில வாக்கியங்களைக் காட்டினார். முப்பது வாக்கியங்கள் இருக்கும். தமிழில் பெரும்பாலானவர்கள், அடிக்கடி செய்யும் பிழைகள் அவை என்பதாகச் சொன்னார். ஆனால், அதிலுள்ள பிழைகளைச் சொல்வது எனக்குக் கடினமாக இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதாகவே பட்டது. அப்படித் தோன்றியதற்குக் காரணம், வார்த்தைப் பயன்பாடு தொடர்பான பிரக்ஞை இல்லாமல் இருந்ததுதான்; நானும் அதே போன்ற பிழைகளைச் செய்துவந்திருக்கிறேன் என்பதால் அவையெல்லாம் பிழைகளாக எனக்குத் தோன்றவில்லை. அதாவது, ‘பொருள் உணர்ந்து’ வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இப்போதும்கூட, வாக்கிய அமைப்பிலும் மொழிப் பயன்பாட்டிலும் கவனமுடன் செயல்படுவதாகச் சொல்லும் எழுத்தாளர்களும் பதிவர்களும் பொருள் மயக்கங்களோடும் பிழைகளோடும் எழுதுவதைப் பார்க்க முடிகிறது.

இவற்றைக் கற்றுக்கொள்ள அதிகப் பிரயத்தனம் வேண்டியதில்லை. மிக எளிமையானது. எனவே, வார்த்தைப் பயன்பாடு சார்ந்து பிரக்ஞையை உருவாக்கும் பொருட்டு, நான் கற்றுணர்ந்தவற்றை இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன். இலக்கணரீதியாக அல்லாமல் பயன்பாட்டுத் தளத்தில் சில எளிமையான உதாரணங்களோடு எழுதிப்பார்க்கிறேன்.

தமிழ் வாக்கியங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இருந்து, கொண்டு, கொள், வைத்து, கூட, தான், போல, செய், பார், எல்லாம், வரும், விடு, உடன், போது, மீது, மேல், முன்/பின், கூடிய/கூடாது, வேண்டும்/வேண்டாம், முடியும்/முடியாது போன்ற வார்த்தைகளிலிருந்து தொடங்கலாம். வாய்ப்பிருக்கும் பட்சத்தில், வாக்கியத்தில் ஒரு வார்த்தையை அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகளை இடம் மாற்றித் தருவதன் வழியாக எப்படிப் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கலாம் என்றும் பேசிப்பார்ப்போம். அதேபோல, காற்புள்ளிப் பயன்பாட்டில் அல்லது ஒரு வாக்கியத்தில் நிறுத்தி வாசிக்க வேண்டிய இடங்களில் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்தும் பேசிப்பார்க்கலாம். சட்டக் கோப்புகளில் இடம்பெறும் வாக்கியங்களில் நாம் காற்புள்ளியை சரியாகப் பயன்படுத்தவில்லை அல்லது காற்புள்ளியே இல்லாமல் வாக்கியம் அமைத்திருக்கிறோம் என்றால், நம்முடைய வாக்கியங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி வாசித்துப் பொருள்படுத்திக்கொள்ளலாமாம். இந்தப் பிரச்சினை ஒருவர் அர்த்தப்படுத்திக்கொள்ளும் முறை சார்ந்தது அல்ல; வாக்கிய அமைப்பிலேயே அதற்கான தன்மை உண்டு. ஒரே ஒரு வார்த்தையை நாம் இடம் மாற்றினோம் என்றால் பொருளே மாறிவிடும்.

மிக எளிதாகக் களைய சாத்தியமுள்ள சில விஷயங்களை ‘தமிழும் நடையும்’ என்ற தலைப்பின்கீழ் இங்கே தொகுத்துக்கொள்கிறேன். இவற்றையெல்லாம் அறிந்துகொள்வதன் வழியாகப் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கலாம். பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்போது வாக்கிய ஓட்டம் சீராக இருக்கும். வாசிப்பில் பிசிறு தட்டாது.

பிழைகளைப் பற்றி எழுத நினைக்கும்போது நானும் பிழைகளுடன் எழுதிவிடுவேனோ என்ற பதற்றமும் கூடவே வந்துவிடுகிறது. எனவே, என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் சுட்டிக்காட்டுங்கள். இணைந்து கற்றுக்கொள்வோம். மொழியை அறிந்துகொள்ள முயல்வதும் ஒரு முடிவற்ற செயல்பாடுதான்.

 

https://saabakkaadu.wordpress.com/2022/01/20/tamizhum-nadaiyum/

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[தமிழும் நடையும்] இரண்டு பெயர்கள்

ஒரே வாக்கியத்தில் இரண்டு பெயர்ச்சொல் வரும்போது இரண்டையும் அடுத்தடுத்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி:

மோகன் ப்ரியங்காவிடம் பேச விரும்பினார்.

இதில் பிழை ஏதும் இல்லை. ஒன்று ஆண்பால் பெயராகவும், இன்னொன்று பெண்பால் பெயராகவும் இருப்பதால் நாமே நிறுத்தி வாசித்துக்கொள்கிறோம். ஆனால், இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:

ப்ரியங்கா மோகனிடம் பேச விரும்பினார்.
பாலாஜி மோகனிடம் பேச விரும்பினார்.
டோடோ அசுவாகாவிடம் பேச விரும்பினார்.

இப்படி வந்தால் என்னவாகும்? ப்ரியங்கா மோகன், பாலாஜி மோகன், டோடோ அசுவாகா — ஒரே பெயரா அல்லது இரண்டு வெவ்வேறு நபர்களா என்ற குழப்பம் வந்துவிடும். இதைத் தவிர்க்க, இரண்டு பெயர்களையும் முன்பின்னே மாற்றித் தந்தால் போதுமானது. இப்படி:

மோகனிடம் ப்ரியங்கா பேச விரும்பினார்.

பொதுவாக, ஒரே வாக்கியத்தில் இரண்டு பெயர்கள் வரும்போது ஒரு பெயரின் விகுதி திரிந்திருக்கும். மோகனிடம், மோகனுக்கு, மோகனை, மோகனால்… இப்படியான விகுதிகளுடன் வரும் பெயரை அடுத்து இன்னொரு பெயரை இட்டுக்கொள்ளலாம். ஒருவேளை, இரண்டும் முழுமையாக வந்ததென்றால் வாக்கியத்தின் கடைசிக்கோ, வேறு இடத்துக்கோ ஒரு பெயரை நகர்த்திவிடலாம்.

மோகன் பேசியதை நினைத்து வருந்தினார் ப்ரியங்கா.
மோகன் பேசியதை நினைத்து ப்ரியங்கா வருந்தினார்.

இப்படி எழுதும்போது எந்தக் குழப்பமும் வராது. இதுபோல் தனித்தனியாக எழுதுவதற்குப் பதில் சிலர் காற்புள்ளி தர விரும்புவார்கள். இப்படி:

ப்ரியங்கா, மோகன் பேசியதை நினைத்து வருந்தினார்.

இவ்வாறு எழுதுவதிலும் லேசான பொருள் மயக்கம் உண்டு. ப்ரியங்கா, மோகன் இருவரும் பேசியதை நினைத்து வேறொரு நபர் வருந்தினார் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள இதில் இடம் உண்டு. எனவே, காற்புள்ளியைத் தவிர்த்துவிட்டு, வெவ்வேறு இடங்களில் பெயர்களை எழுதுவதே துல்லியமாக இருக்கும்.

இங்கே தரப்பட்டிருப்பவை எளிய உதாரணங்கள் என்பதால் இது ஒரு சிறிய பிரச்சினையாகத் தோன்றக்கூடும். ஒரு சிக்கலான வாக்கிய அமைப்பில் இரண்டு பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது அங்கே நிச்சயம் குழப்பம் உண்டாகிவிடும். வாசிப்புக்குத் தடையாகவும் இருக்கும்.

இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

கொரியந்த்தெஸுக்குச் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்கு சற்று முன்பு, டோடோ அசுவாகா ஓக்லஹோமாவில் தனது இலையுதிர்காலப் பருவத்தின் கடைசி வகுப்பை நடத்தினான்.

ஒரு நாவலின் முதல் வரி இது. கதாபாத்திரம், பின்னணி என எதுவும் அறிமுகமாகியிராமல் தொடங்கும்போது இந்த வாக்கியமானது குழப்பத்தை உண்டாக்கிவிடுகிறது. டோடோ அசுவாகா என்பது அவனுடைய பெயரா, டோடோ மட்டும்தான் அவனுடைய பெயரா என்ற குழப்பம் வந்துவிடுகிறது. டோடோ அசுவாகா அவனுடைய பெயராக இருக்கும் பட்சத்தில்,

கொரியந்த்தெஸுக்குச் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்கு சற்று முன்பு, ஓக்லஹோமாவில் டோடோ அசுவாகா தனது இலையுதிர்காலப் பருவத்தின் கடைசி வகுப்பை நடத்தினான்.

(அ)

கொரியந்த்தெஸுக்குச் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்கு சற்று முன்பு, ஓக்லஹோமாவில் தனது இலையுதிர்காலப் பருவத்தின் கடைசி வகுப்பை நடத்தினான் டோடோ அசுவாகா.

என்று எழுதலாம்.

பொருட்பெயர், இடப்பெயருக்கும் இது பொருந்தும்.

அண்ணா நூலகம் செல்வதைப் பழக்கமாக வைத்திருந்தார்.

‘அண்ணா நூலகம்’ செல்வதை ஒரு நபர் பழக்கமாக வைத்திருந்தார் என்றும், நூலகம் செல்வதை அண்ணா ஒரு பழக்கமாக வைத்திருந்தார் என்றும் இரண்டு விதமாக இந்த வாக்கியத்தை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

ஆக, இரண்டு பெயர்ச்சொல் ஒரே வாக்கியத்தில் வந்தால் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை நினைவில்கொள்வோம். இப்படியான வாக்கியங்களை நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இது முக்கியமானதாகிறது.

பொருள் மயக்கம்:

1

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அவர்களுடன் போன வருடம் இதே நாள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இந்த வாக்கியத்தில், சிவாவுடன் வருடம் போனது என்ற அர்த்தம் வருகிறது. இப்படி எழுதினால் இந்தக் குழப்பம் வராது:

போன வருடம் இதே நாளன்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

2

எங்கள் ப்ரைவஸியை அனுமதியுங்கள் என்று விவாகரத்து செய்யும் பிரபலங்கள் பொதுமக்களிடம் கேட்கிறார்கள்.

இந்த வாக்கியத்தில் இரண்டு சிக்கல்கள். பிரபலங்கள், பொதுமக்கள் இரண்டும் அடுத்தடுத்து வருவது ஒன்று. இன்னொன்று, ‘எங்கள் ப்ரைவஸியை அனுமதியுங்கள்’ என்றபடி விவாகரத்து செய்கிறார்கள் என்ற அர்த்தமும் தொனிக்கிறது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் இப்படி எழுதலாம்:

விவாகரத்து செய்யும் பிரபலங்கள், ‘எங்கள் ப்ரைவஸியை அனுமதியுங்கள்’ என்று பொதுமக்களிடம் கேட்கிறார்கள்.

பின்குறிப்பு: ஃபேஸ்புக், புத்தகம், செய்தி சேனல்களிலிருந்து சில வாக்கியங்களை இந்தத் தொடருக்காக எடுத்துக்கொண்டிருக்கிறேன். குறை சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நம்முடைய அனுபவமாகவே அவற்றைப் பார்க்கிறேன்.
 

 

https://saabakkaadu.wordpress.com/2022/01/21/tamizhum-nadaiyum-2/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[தமிழும் நடையும்] எங்கும் ‘செய்’மயம்

நம்முடைய செயல்பாடுகளோடு தொடர்புடையது வினைச்சொல். ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நுட்பமாக வேறுபடுத்துகிறோம் என்பதும், அப்படி வேறுபடுத்துவதற்கு ஏற்ப ஒரு மொழியில் விதவிதமான சொற்கள் இருப்பதும் முக்கியமான விஷயம்.  அப்படிப் பார்க்கும்போது, ஒரு மொழியின் பலம்மிக்க அம்சமாக வினைச்சொல்லுக்கு முக்கிய இடமுண்டு. விவசாயம் தொடர்பான ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நம் மொழியில் வெவ்வேறு சொற்கள் உள்ளதை இங்கே நினைவுகூரலாம். அப்படியான முக்கியத்துவம் கொண்ட வினைச்சொல் பயன்பாட்டில், நவீனத் தமிழ் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. அதுகுறித்துப் பார்க்கலாம்.

தமிழ் வினைச்சொல்லுக்கு இயல்பாகத் திரியும் குணம் உண்டு. காலம், பால் போன்ற விஷயங்களை வினைச்சொல்லே சுட்டி நிற்கும் பண்பும் உண்டு.

ஒரு உதாரணம்:

அவன் நன்றாக எழுதுகிறான்.

‘எழுது’ என்ற வினைச்சொல் இங்கே ‘எழுதுகிறான்’ என்றாகிறது. ‘எழுதுகிறான்’ என்பது வினையைக் குறிப்பதோடு காலம், பால் இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது. இது தமிழின் சிறப்புகளுள் ஒன்று.

ஆனால், ஒரு ஆங்கில வினைச்சொல்லை நாம் தமிழ் வாக்கியத்தில் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஆங்கில வினைச்சொல்லுடன் ‘செய்’ அல்லது ‘பண்ணு’ என்பதைச் சேர்த்தால் மட்டும்தான் அது முழுமையான வினைச்சொல்லாக ஒரு தமிழ் வாக்கியத்தில் வெளிப்படும்.

‘குக்’ எனும் ஆங்கில வினைச்சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை ஒரு தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்படித்தான் எழுத முடியும்:

அவன் நன்றாக குக் செய்தான்.
அவன் நல்லா குக் பண்ணினான்.

சுஜாதா பாணியில், ‘குக்கினான்’ என்று சிலர் சொல்ல விரும்பலாம்; அதைப் பொதுவழக்காகக் கொள்ள முடியாது.

ஆனால், தமிழ் வினைச்சொல்லை இப்படி அமைக்கலாம்:

அவன் நன்றாக சமைத்தான்.

தமிழ் வாக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றம் என்னவென்றால், தமிழ் வினைச்சொல்லைப் பயன்படுத்தும்போதும் ஆங்கில வினைச்சொல்லைப் பயன்படுத்துவதைப் போல ‘செய்’ சேர்த்து எழுதுகிறோம் என்பதுதான்.

அவன் நன்றாக சமையல் செய்தான்.

இப்படி எழுதத் தொடங்கியிருக்கிறோம். இப்படி எழுதும் பழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? ‘அழகா ஸ்மைல் பண்றான்ல’, ‘ஹெல்ப் பண்றேன்னு சொன்னியே’, ‘ட்ரை பண்ணித்தான் பாரேன்’, ‘வொர்க் பண்ணிட்ருக்கேன்’… பேசும்போது இப்படியாக ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்துவதால், தமிழ் வினைச்சொற்களையும் அப்படியே தமிழில் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. அதனால், தேவைப்படாத இடங்களில்கூட ‘செய்’ ஒட்டிக்கொண்டுவிடுகிறது. ‘அவன் நன்றாக சமையல் செய்தான்’, ‘அவள் அழகாகப் புன்னகை செய்கிறாள்’, ‘அவனுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும்’, ‘முயற்சி செய்தால் எல்லாமே நடக்கும்’ என்று எழுதுகிறோம். இதனால், இயல்பாகத் திரியும் வினைச்சொற்களின் பண்பை மறந்து, இப்படி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சில உதாரணங்கள்:

புன்னகை செய்தான் – புன்னகைத்தான்

உதவி செய்தான் – உதவினான்

முயற்சி செய்தான் – முயன்றான்/முயன்றுபார்த்தான்

கொலை செய்தான் – கொன்றான்

சோதனை செய்தான் – சோதித்தான்

சிந்தனை செய்தான் – சிந்தித்தான்

விசாரணை செய்தான் – விசாரித்தான்

பரிசோதனை செய்தான் – பரிசோதித்தான்

வரையறை செய்தான் – வரையறுத்தான்

நிர்ணயம் செய்தான் – நிர்ணயித்தான்

செலவு செய்தான் – செலவழித்தான்

ஆலோசனை செய்தான் – ஆலோசித்தான்

ஒருங்கிணைப்பு செய்தான் – ஒருங்கிணைத்தான்

முடிவு செய்தான் – முடிவெடுத்தான்

தேர்வு செய்தான் – தேர்ந்தெடுத்தான்

செம்மை செய்தான் – செம்மையாக்கினான்

ஆய்வு செய்தான் – ஆராய்ந்தான்

தயார் செய்தான் – தயாரித்தான்

பரிந்துரை செய்தான் – பரிந்துரைத்தான்

விவாதம் செய்தான் – விவாதித்தான்

இவற்றில் சில வார்த்தைகள் தமிழல்லாத பிற மொழிச் சொற்கள். ஆனால், அவற்றுக்கும் தமிழ் வினைச்சொல்போல திரியும் பண்பு இருக்கிறது.

மேலே குறிப்பிட்டிருப்பதுபோல அல்லாமல் ‘செய்’ சேர்த்து எழுதும்போது என்ன நடக்கிறது? காலம், பால் போன்றவற்றைத் தாங்கிநிற்கும் குணத்தை வினைச்சொல் இழக்கிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் உதாரணங்களைப் பாருங்கள்: ‘புன்னகை’, ‘முயற்சி’, ‘உதவி’ என வினைச்சொற்கள் அப்படியே இருக்கின்றன; வினைச்சொல்லோடு உதிரியாக இணைந்திருக்கும் ‘செய்’ என்ற துணை வினையானது அந்தப் பண்பை எடுத்துக்கொள்கிறது. ஒரு வினைச்சொல் இப்பண்பை இழப்பதென்பது தமிழ் மொழிக்குரிய சிக்கனப் பண்பை இழப்பதைப் போல்தான்.

இந்த ‘செய்’ விஷயத்தில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய இன்னொன்றும் உண்டு. ‘தொந்தரவு செய்தான்’ என்பதை ‘தொந்தரவுக்குள்ளாக்கினான்’ என்று எழுதலாம். ‘பணி செய்தான்’ என்பதை ‘பணியாற்றினான்’ என்றோ, ‘பணிபுரிந்தான்’ என்றோ எழுதலாம்.

வேலை செய்தான் – வேலைபார்த்தான்

உறுதி செய்தான் – உறுதிப்படுத்தினான்

தவறு செய்தான் – தவறிழைத்தான்

சரி செய்தான் – சரியாக்கினான்

ஆட்சி செய்தான் – ஆட்சிபுரிந்தான்

ஆலோசனை செய்தான் – ஆலோசனை நடத்தினான்

தடங்கல் செய்தான் – தடங்கல் விளைவித்தான்

இப்படியான இடங்களிலும் ‘செய்’ ஆக்கிரமித்திருப்பதால், வாக்கிய அமைப்பானது ஒருவிதத் தட்டைத்தன்மையைப் பெற்றுவிடுகிறது. குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, காகம் கரைகிறது, நாய் குரைக்கிறது, சிங்கம் கர்ஜிக்கிறது என்பதற்குப் பதிலாக குயில் கத்துகிறது, மயில் கத்துகிறது, காகம் கத்துகிறது, நாய் கத்துகிறது, சிங்கம் கத்துகிறது என்றானால் எப்படி ஒலிக்குமோ அப்படி. ஆக, ஒரு வினைச்சொல் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் துணை வார்த்தைகள் மீதும் கவனமாக இருக்க வேண்டும்.

சில இடங்களில், ‘செய்’ தவிர்க்க முடியாததாக இருக்கும்:

கைது செய்

ஏற்பாடு செய்

கற்பனை செய்

முன்பதிவு செய்

தாக்கல் செய்

முதலீடு செய்

கையாடல் செய்

ஏற்றுமதி செய்

மனு செய்

பகுப்பாய்வு செய்

சமரசம் செய்

இடையீடு செய்

(செய் என்ற வார்த்தையின் உதவியுடன்தான் ஒரு வினைச்சொல் முழுமைபெறும் என்றால், அந்தக் குறிப்பிட்ட செயலைக் குறிப்பதற்கு, தமிழில் வினைச்சொல் இல்லை எனலாமா? மேலும், புதிதாக ஒரு வினைச்சொல்லை உருவாக்கும்போது, தமிழ் வினைச்சொல்லுக்குரிய இந்தத் திரியும் பண்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உருவாக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.)

சிலர் மொழி லயத்துக்காக, வேண்டுமென்றே ‘செய்’ அல்லது ‘பண்ணு’ என்று பயன்படுத்த விரும்புவார்கள்.

சில இடங்களில், துணை வினையாக இல்லாமல் வினைச்சொல்லாகவே ‘செய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உதாரணம்:

அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு என்ன செய்கிறாய்?

சில வார்த்தைகள் காலப்போக்கில் வேறு விதமாகத் திரிந்திருக்கின்றன. ‘அவள் கருவைக் கலைத்தாள்’ என்று எழுதுவதற்குப் பதிலாக, ‘கருக்கலைப்பு செய்தாள்’ என்று எழுதுவது இன்றைய வழக்கம். ‘கருக்கலைப்பு’ என்ற வார்த்தையானது வேறு விதங்களில் (கருக்கலைப்புக்கு எதிரான போராட்டம், கருக்கலைப்பு ஒரு குற்றமல்ல, இத்யாதி…) பயன்படுத்தப்படுவதால், பிறகு அதே வார்த்தையை வினைச்சொல்லாகப் பயன்படுத்த முயலும்போது அங்கே ‘செய்’ வருவது தவிர்க்க முடியாததாகிறது.

பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களாகப் பயன்படுத்துவதுண்டு. அப்படியான சமயங்களில், சில வார்த்தைகள் திரியும், சில வார்த்தைகள் திரியாது.

இதுபோன்ற சந்தர்ப்பங்கள் தவிர, ‘செய்’ என்ற வார்த்தையைத் தவிர்த்து எழுதுவதற்கு நாம் கொஞ்சம் மெனக்கெடலாம். ஒருவேளை, எழுதும்போது ‘செய்’யைத் தவிர்ப்பது கடினமாகத் தோன்றினால், எழுதி முடித்த பிறகு அதைச் செய்யலாம். Ctrl+F கொடுத்து ‘செய்’ என்ற வார்த்தையைத் தேடி, அவசியமற்ற இடங்களில் ‘செய்’ இல்லாதபடி பார்த்துக்கொள்ளலாம்.

பொருள் மயக்கம்:

1

போலிஸாரின் உதவியுடன் திருடுபோன நகைகள் மீட்கப்பட்டன.

வார்த்தைகளை மாற்றித்தருவதால் வரும் ஆபத்துக்கு இதுவொரு நல்ல உதாரணம். நகைகள் திருடுபோக போலிஸார் உதவியதாக இங்கே அர்த்தம் தொனிக்கிறது. இந்த வாக்கியத்தை இப்படி அமைப்பதுதான் சரியாக இருக்கும்:

திருடுபோன நகைகள் போலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டன.

 

 

https://saabakkaadu.wordpress.com/2022/01/24/tamizhum-nadaiyum-3/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான விளக்கங்கள்.......நன்றி கிருபன்.......!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.