Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன்

முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன்

அதிகாலை ஆரவாரங்களுக்கிடையே மனிதக் குரல் போல ஒரு சத்தம் தொனித்தது. அந்தரித்து வெளியேறும் ஈனக் குரல் போன்ற ஒலி. வாசலில் ஒரு சிறுமி பிளாஸ்டிக் வாளியுடன் நின்றிருந்தாள். அவளது ஒருபக்க கன்னம் தீயில் வெந்து சதைகள் உருக்கி வார்த்த ஈயக்குழம்பாட்டம் பொத்தென்று நின்றது. ஒரு கண் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக உற்றுப் பார்த்தால்தான் விளங்கும் போல் இருந்தது. அந்தப் பக்கப் புருவமும் சீரின்றி தழும்பு போல தெரிந்தது. இலேசாக தலை ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு சீரற்ற அசைவு போலிருந்தது. பேசும் போது எதையோ மென்று முழுங்குவது போல தொண்டை அசைந்தது. சில கணங்கள் திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பஷீர். வீட்டுக்கூரையில் காகங்கள் எழுப்பும் சன்னத ஒலியை புறக்கணித்து அவளது குரலை கவனமாகச் செவிமடுத்தான். தொக்கித் தொக்கி சொற்களை உதிரும் சிதிலமான குரல் அது. அவளை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தான். பேய்ப்படக் காட்சிகளில் வரும் சிறுமியின் தோற்றம் போலவே அவனுக்குப் புலனாகினாள். யாரோ அவனை பயம் காட்டுவதற்கு அதிகாலையிலேயே அவளை ஒப்பனை செய்து அனுப்பிவிட்டதைப் போல் அவனுக்குத் தோன்றியது.

“இவள் யார்?” சந்தேகமாக மனைவியைப் பார்த்தான். அவள் கண்களால் ஏதோ பேசினாள். அவளது பார்வையே ஏற்கனவே அந்த சிறுமியைத் தெரியும் என்பதைப்போல மிக அலட்சியமானதாக இருந்தது. பஷீருக்கும் அது புரிந்துவிட்டது. இடியப்பம் வேண்டாம் என்று மனைவி சைகையில் காட்டி அவளை அனுப்பி விட்டாள்.

“அவள்ர முகம் என்ன இப்புடி வெந்து போயிரிக்கி?” என்றான்.

“சும்மா நெருப்பா அது. சாபத்தீ” நீண்டதொரு பெருமூச்சை உயிர்த்துச் சொன்னாள்.  அப்படிச் சொல்லும் போது அவளையே நெருப்புத் தீண்டியது போல உடல் அதிர்ந்தாள். பஷீர் அவளை கவனமாக உற்று நோக்கினான். அந்தக் கதையை அவளது உம்மா அவளுக்குச் சொன்னதாகச் சொல்லி சில கணங்கள் மௌனமாக உறைந்தாள். அவளுக்குள்ளிருந்து சொற்கள் திணறித் திணறி வந்தன. கண்ணில் நீர் முட்டுவது போல, சொற்கள் அடைத்துக் கொண்டது போல அவள் உருகி உருகி அந்தரித்தாள். அவள் இப்படி அந்தரப்பட்டதை பஷீர் அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தான்.

மறுநாள் காலையிலும் இடியப்ப வாளியுடன் அந்தச் சிறுமி வீட்டின் முன்னே தோன்றினாள். நேற்றுப் பார்த்ததைப் போல அதே ஆடையிலேயே இருந்தாள். பஷீர் படிக்கட்டால் இறங்கி அவளைச் சற்று நெருங்கி நின்று பார்த்தான். நேற்று பனிக் காலைப் பொழுதில் சரியாகப் புலனாகாத அவள் உருவம் மேலும் அவனுக்குத் துலக்கமாயிற்று. குள்ளமான மெலிந்த உருவம். பார்ப்பதற்கு ஒரு எட்டு வயதுச் சிறுமி போன்று தெரிந்தாள். ஆனால் அவள் அவ்வளவு இளமையான சிறுமி அல்ல, குறைந்தது 14 வயதாவது இருக்கலாம் என்று மனைவி சொன்னாள். பஷீர் அவளிடம் சும்மா பேச்சுக் கொடுத்தான். பேச்சு குழறி வந்தது. தெளிவற்ற உச்சரிப்பு. பேசும் போது புஷ் புஷ் என்று சொற்களோடு காற்றும் சேர்ந்து வெளியாகியது. அவளது குரல் ஒரு மாபெரும் சாபத்தின் அசரீரி போன்று ஒலிப்பதாகவே பஷீருக்கும் தோன்றியது. அவளது கண்கள் சாபத்தின் மீளமுடியாக் கிடங்கு போல் பாரித்திருந்தது. சாபத்தின் எச்சில் துளிகள் போல அவள் முகமெங்கும் சதையுண்ணிகள் பரம்பிக் கிடந்தன. அதை நேற்று அவன் கவனிக்கவில்லை. நெருங்கிப் பார்க்கும் போதுதான் அவை புலனாகின. நேர்த்தியற்ற பல்வரிசை. குழம்பிய பார்வை. ஒரு கண்ணின் மேல் புருவமே இல்லாமல் வெறும் சுருண்டைக் கோடு மட்டும் இருந்தது. கன்னம் முழுதாகத் தீயில் எரிந்து வெந்தது போன்று சதை பாவியிருந்தது. வலப்பக்கத்தில் காதே இல்லாதது போல் அது மீச்சிறுத்து சுருண்டு ஒட்டியிருந்தது. துயர் அலைந்து கொண்டிருந்த அந்த உடலில் சாபத்தின் குருதி எங்கும் ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது. நேற்று அவளை முதன் முதலாகப் பார்த்த போது இருந்த குழப்பமும் திகிலும் இன்று தணிந்து போயிருந்தது. அவள் சபிக்கப்பட்டவள் என அவனது உள் மனம் குறுகுறுத்தது. இதயம் அடிப்பது போல் சீரான வேகத்தில் அந்த எண்ணம் அவனில் மோதி மோதிக் கலைந்தது. அவள் கன்னத்திலிருக்கும் தழும்பு முகத்திலிருக்கும் சிதைவு அவளது பரம்பரையின் தழும்பு. பரம்பரையின் சிதைவு. பரம்பரை நெருப்பு.

யார் யாருக்குச் செய்த பாவம்? நீளும் சாபத்தின் நச்சு சழற்சியில் இவள் கடைசிக் கன்னியாக இருப்பாளா என பஷீர் உள்ளூர விரும்பினான். மௌனமாக சொற்களைக் கோர்த்து தனக்குள்ளேயே அவளுக்காகப் பிரார்த்தித்தான். அது அல்லாஹ்க்கு கேட்டிருக்கும் என தனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டான். அந்தப் பிரார்த்தனை அவன் நாவில் உமிழ்நீர் போல எப்போதும் ஊறிக்கொண்டிருந்தது.

அவளது பெயர்..? ஜெமீலா. ஜெமீலா என்றால் அழகி. இவளோ அழகுக்கு மறுதலையாக இருக்கிறாள். சாபம் அவளது அழகைப் பறித்துவிட்டது. நெருப்பு அவளது அழகை எரித்துவிட்டது. காலத்தின் விதி வட்டத்துள் சாபத்தின் தீக் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அதன் மர்ம முடிச்சுகள் மிகவும் ஆழமானவை. சாபத்தின் சுமையை, அதன் தலைமுறைப் பாரத்தைச் சுமக்கும் வயதல்ல அவளுக்கு. இந்தப் பாரத்தைச் சுமக்கும் ஒரு குடும்பத்தின் மூன்றாவது தலை அவளுடையது. இதற்கு முன்னர் அவளது தாயும் இப்படித்தான் பிறந்தாளாம். அவளது தாய் முப்பது வயதுக்குள்ளேயே தன்னைத்தான் எரித்துத் தற்கொலைசெய்துகொண்டதாக மனைவி சொன்னாள். அவள் குடும்பத்தில் எல்லாமாக நெருப்பில் எரிந்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து என்று தன் கைகளை அகலவிரித்து மனைவி சொன்னதை பஷீர் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தான். இவளது உம்மா, உம்மாவின் உம்மா, சகோதரர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு போனது. எல்லோருக்கும் ஏன் நெருப்பு எதிரியாக மாறியது என்ற திகைப்பில் பஷீர் இருந்தான்.

கருத்துச் சூம்பிய அந்தக் கைகளில் தொங்கிய இடியப்ப வாளி இன்னும் கைகளில் அசைந்து கொண்டிருந்தது. இவள் பரம்பரை சாபத்தாலேயே அழிந்து விடுமா? ஒரு பெண்ணின் சாபம் எத்தனை தலைமுறையைக் கேட்கும்? அந்த முதிர்ந்த பெண் ஓர் அரம்பை என்று மனைவி சொன்னது ஞாபகம் வந்தது. அப்படியெனில், அந்த சாபம் வெறும் பெண்ணுடையதல்ல. அது ஒரு அரம்பையின் சாபம். அரம்பையை எரித்த தீயின் சாபம். இவள் செய்யும் தொழில்கூட ஒரு சாபம்தானா? இத்தனை ஆண்டுகளாகவும் அந்தப் பரம்பரையின் கால்த் தடத்தின் மீது வெகு நுணுக்கமாகப் பின்தொடரும் அந்த சாபத்தின் குரல் பஷீரைப் பின்னிழுத்துக் கொண்டு சென்றது.

அவளிடம் இடியப்பம் வாங்கும் ஒவ்வொரு முறையும் பஷீர் தனக்குள் தீயின் வாசனையை உணர்ந்தான். மனைவியிடம் அவன் அந்தக் கதையை கேட்காதிருந்திருக்க வேண்டும். என்னவொரு துயரம்! வெம்மையாகச் சுடும் கதை. மனதைக் குத்திக் கிழிக்கும் கூர்மையான வலி. மானுட இழிவு அகோரமாகப் பல்லிழிக்கும் அவலம்.

0

கல்குடா வை.எம்.எம்.ஏ கட்டடத்தின் பச்சை நிற கொட்டை எழுத்துகள் பாசி படிந்தது போல் பொலிவிழந்து தெரிந்தன. மட்கிப்போன வெண் சுவர் ஏறுமாறாக சாம்பல் நிறத்துக்கு மாறியிருந்தது. கூரை முன்பக்கம் சற்றே உயர்ந்து பின்பக்கம் சரிவாக இறங்கிச் சென்றது. மிக நீண்ட மண்டபம். இருபக்க சுவர்களிலும் சிறிய யன்னல்கள் இரண்டடி இடைவெளியில் பொருத்தப்பட்டிருந்தன. உள்ளே இரண்டு சிறிய அறைகளும் ஒரு பெரிய ஹோலுமிருந்தது. பொதுக்கட்டடம் என்பதால் ஊரின் எல்லாப் பொது நிகழ்வுகளுக்குமான அரங்காக சில காலம் விளங்கிற்று. சில காலங்களில் ஒரு விளையாட்டுக் கழகத்தின் அலுவலகமாக இருந்தது. சில காலங்களில் கிராமிய அபிவிருத்திச் சங்கமாக இருந்தது. உள்ளூர் மத்தியஸ்த சபையாக சில நாட்கள். ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிராந்திய அலுவலகமாகவும் சில நாட்கள் என அது பலநோக்கமாகச் செயற்பட்டது. போர் தொடங்கியதும் அதன் வகிபாகம் மேலும் மேலும் மாறியது. சில நாட்கள் அது புலிகள் இயக்கத்தின் அலுவலகமாகவும் மாறிற்று. அப்போது புலிகள் இயக்கத்துக்குள் தூய்மை வாதம் உட்புகுந்திருக்கவில்லை. முஸ்லிம் புலிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளாகவே இருந்தனர்.

கட்டடம் விசாலமாக இருந்தளவுக்கு அங்கு இயக்கம் இருக்கவில்லை. ஒரு பத்துப் பேருக்குள்தான் கடமையிலிருந்தனர். அதன் முன்னே வாழைச்சேனை துறைமுகத்துக்குச் செல்லும் பிரதான தார் வீதி. ஆங்காங்கே குழிகள் விழுந்து கோலம் குறைந்திருந்தது. சரியாக வை.எம்.எம்.ஏக்கு முன்னால் அந்த வீதியின் குறுக்காக ஒரு பழுதடைந்த போக்கு. அதற்குள்ளால் தண்ணீர் ஓடி யாரும் கண்டதே இல்லை. ஆனால் போக்குக் கட்டில் இயக்கத்தினர் மாலை நேரங்களில் குந்திக் கொண்டிருந்தனர். சிவகுருதான் அந்த முகாமுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். சிவகுருவுக்கு மெல்லிய தாடி. மௌனம் பூத்த முகம். அபூர்வமாக வாய் திறந்து பேசினான். ஆனால் கண்டிப்பான முகம். வார்த்தைகளை வீணே செலவழிக்கத் தேவையில்லை என்பதைப் போல சிவந்த கண்களின் வெறித்த பார்வை. எப்போதும் வை.எம். எம். ஏ. கட்டடத்துக்குள் இருப்பான். அவன் கையில் ஒரு AK 47 துப்பாக்கி இருந்தது. வாஹிது எப்போதும் அவன் கூடவே இருப்பான். சிவகுருவுக்கும் சேர்த்து அவனே வாய் திறப்பான். ஓய்வின்றி அவன் வாய் பேசிக்கொண்டே இருக்கும். அவ்வப்போது பெருங்குரலில் சிரிப்பான். அதைப் பார்த்தால் மற்றவருக்கும் சிரிப்பு வரும். சாரத்தை தூக்கி முழங்காலுக்கு மேலால் மடித்து கட்டிக்கொள்வான். AK 47 முதுகுக்குக் குறுக்கே கிடக்கும். மற்றொரு போராளியான அனீபாவிடம் இரண்டு கைக்குண்டுகள் மட்டுமே இருந்தன. ஒன்று வடக்கைப் பிடிக்க. மற்றொன்று கிழக்கைப் பிடிக்க என்று இரு திசைகளுக்கும் கைகளை வீசி பெருமிதமாகச் சொல்வான். அதனால் மக்கள் அவனை வடக்கு-கிழக்கு என்றே அழைத்தனர். ஊருக்குள் நிகழும் அதிகமான பிரச்சினைகள் அங்குதான் விசாரணைக்கு வந்தன. சிவகுரு முன்னிலையில்தான் எல்லா விசாரணைகளும் நடந்தன. ஆனால் வாஹிதுதான் அங்கேயும் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பான்.

பாத்தும்மா ராத்தாதான் முகாமுக்கு இரவுச் சாப்பாடும், காலைச் சாப்பாடும் கொடுத்தார். சிலவேளைகளில் பகல் சாப்பாடும் செய்து கொடுப்பார். பாத்தும்மா ராத்தாவுக்குப் பிள்ளைகள் இல்லை. அவர் 50 வயதைக் கடந்த ஒரு விதவை. ஆனாலும் ஊர் அவவை ராத்தா என்றுதான் அழைத்தது. சற்றே இளமையான தோற்றம் அவவிடம் தெரிந்தது. வெள்ளைச் சாரிதான் எப்போதும் உடுத்துக்கொள்வார். அவரது குணமும், நடத்தையும் கூட வெண்மையாகவே எல்லோருக்கும் தெரிந்தன. பெண்களுக்கு அதிகமாக நெற்றியில் தொழுகைப் புண் போடுவதில்லை. ஆனால் அவருக்கு மட்டும் தொழுகைப் புண் போட்ட நெற்றி. எப்போதும் ஒருவகை அத்தர் வாசம் அவவின் உடலிலிருந்து வீசிக்கொண்டே இருந்தது. யாருடனும் நொந்து பேசாத சுபாவம். நல்ல அடக்கமான பெண் என ஊர் அவரை அறிந்து வைத்திருந்தது.

இரந்து வாழ்வதில் நம்பிக்கையற்று தன் கரங்களாலேயே உழைத்துச் சாப்பிடும் துணிச்சலும் வேட்கையும் கொண்டவர் ராத்தா. அவரளவில் சமைப்பது ஒரு தொழிலல்ல. அதுவே அவரது ஈடுபாடான விசயம். காசு கிடைக்காவிட்டாலும் ராத்தா சாப்பாடு கொடுப்பா. பசி தீர்த்தல் ஒரு தொழிலல்ல, ஒரு யாகம் என்பார். வை.எம்.எம்.ஏ கட்டடத்திலிருந்த இயக்கப் பொடியன்களுக்கு உணவு கொடுக்கும் போது அவர் காசி வாங்கிக் கொள்ளமாட்டார். சிவகுரு தெண்டித்துத்தான் காசு கொடுப்பான்.

“இந்தாக்கா வெச்சிக்க..” என்று ராத்தாவின் கைகளில் காசைத் திணிப்பான். ராத்தா மறுத்துக் கொண்டே வாங்குவார். சில வேளைகளில் ராத்தா முகாமுக்குச் சென்று அங்கேயே சமைத்துக் கொடுப்பதுமுண்டு. ஒரு சதக் காசி வாங்கிக்க மாட்டார். தனக்கும் தன் செல்லங்களுக்கும் மட்டும் கொஞ்சம் சோறு எடுத்துக் கொள்வார்.

“தம்பிமார், எனக்கு இது போதும்” என்று அன்பாகக் கழன்று செல்வார்.

பாத்து ராத்தா வெளியேறிச் செல்லும்போது எப்போதும் அவர் கைகளில் ஒரு உணவுப் பொட்டலம் இருக்கும். சிலவேளைகளில் ராத்தா உணவுப் பொட்டலத்தை பாடசாலை ஓரங்களில் பரத்தி வைத்து விற்பார். கேற்றடியில் குந்தி இருக்கும் உணவு வியாபாரப் பெண்மணிகள் யாரும் பாத்தும்மா ராத்தாவைக் கோபிப்பதில்லை. விற்றது போக மிஞ்சியதை எல்லாம் வீதியோர வியாபாரப் பெண்களுக்கே கொடுத்துவிட்டுப் போய் விடுவா ராத்தா. கேட்டால் பசி தீர்த்தல் ஒரு யாகம் என்பா. சிறுசுகளுக்கும் தின்பண்டம் எதையாவது சும்மா கொடுப்பார். அதுகள் கொண்டு போய் வீடுகளில் சொல்லிச் சொல்லி பாத்தும்மா ராத்தாவைப் புகழும். வீதியில் பாத்தும்மா ராத்தா தந்தால் மட்டும்தான் வாங்கித் தின்ன வேண்டும் என்றொரு கட்டளையும் சிறுசுகளுக்கு வீடுகளில் இருந்தது.

பாத்தும்மா ராத்தா வீட்டில் தனியாகத்தான் வசித்தார். ஆனால் அவவைப் பொறுத்தவரை அது தனிமை இல்லை. அவருக்கு வீட்டில் துணைக்கு ஒரு சாம்பல் நிறப் பூனை. அதனை ராத்த பூனி என்றுதான் கூப்பிடுவா. கூடவே சில அணில்கள். கிளியும் மைனாவும். அதிக சுதந்திரமாக ராத்தாவுடன் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இறும்பூது எய்தின. அவவுக்கு எங்கே இருந்தது தனிமை!

சாப்பாடு விற்பனையில் கிடைக்கும் சின்ன வருமானம் அவ ஒருத்திக்குப் போதுமாக இருந்தது. ஒரு வேப்ப மரமும் சில தென்னை மரங்களும் நடுவே ஒரு சிறிய ஒற்றைக் கல்வீடு. சற்று இடம் போக்கான காணி. இந்த உலகம் அவரது மகிழ்ச்சிக்குப் போதுமானதாக இருந்தது.

பாத்து ராத்தாவுக்கும் காலத்தில் இரண்டு எதிரிகள் முளைத்திருந்தனர். ராத்தாவின் வீட்டோடு ஒட்டி இருந்த ராத்தாவின் ஒன்றுவிட்ட சகோதரி மர்ஸானியும் அவள் பருஷன் காசிமும் ராத்தா மீது சுய நல வஞ்சம் வளர்த்தனர். மர்ஸானி ஆளைப் போலவே கரிய மனம் கொண்டவள். பாத்து ராத்தாவை எப்போதும் கரித்துக்கொட்டிக் கொண்டே இருப்பாள். ராத்தா ஒரு நாளும் பதிலுக்கு அவளைத் திட்டுவதே இல்லை. ஒரு குறுநகையுடன் அவளைக் கடந்து செல்வாள். காசிம் ஓர் எத்தனாக ஊரில் அறியப்பட்டவன். தந்திரங்களால் தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் சுயநலமி. அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். 18 வயதிலும் 16 வயதிலுமிருந்தனர். மர்ஸானிக்கும் காசிமுக்கும் ராத்தாவின் காணியை அபகரிக்கும் கபட நோக்கம் இருந்தது. கரித்துக் கரித்து சண்டை போட்டால் ராத்தா ஒதுங்கி எங்காவது ஓடிவிடுவாள். பிறகு வாரிசில்லாச் சொத்து தனக்குத்தான் வரும் என்ற மனக்கணக்கில்தான் கபடத்தனங்களையும் தந்திரங்களையும் செய்து ராத்தாவைக் கரித்தார்கள். காசிமுக்கு மர வியாபாரம். காட்டிலேயே அதிக நாட்களைக் கழித்து காட்டுப் புத்தி அவனுக்கு. மரத்துப் போன மனம். அநியாயச் சொத்துச் சேர்ப்பதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் அவனுக்கிருந்ததில்லை. யுத்தமும் அவனைப் போன்றவர்களுக்கு அதிர்ஸ்டமாகத்தான் இறங்கியது. போரை வைத்தே அவன் தன்னை நிலைப்படுத்தவும் உயர்த்திக் கொள்ளவும் தொடங்கினான். அவன் எல்லாத் தரப்பாரையும் ஏமாற்றும் வித்தையை தன் விரலிடுக்கில் வைத்திருந்தான்.

“இஞ்சாலயும் இனி ஆமி வருவான் போல இரிக்கி. இந்தப் பொடியமாரெல்லாம் இனிக்காட்டுக்கதான் ஓடனும்” என்று வை.எம்.எம்.ஏ பக்கமாகத் திரும்பிச் சொன்னான். மர்ஸானிக்கு அவன் சொல்வது எதுவும் புரியவில்லை என்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இனி வை.எம்.எம்.ஏயில இரிக்கிறவனலெல்லாம் ஓடிருவானுகள். இனி இந்தக் கிழவியையும் ஓட்டங் காட்டனும்” அவன் கிழவி என்று சொன்னது பாத்து ராத்தாவைத்தான் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“கிழவி எப்புடி ஓடுவாள்?”  மர்ஸானி புரியாமல் திரும்பக் கேட்டாள்.

“ஓர்ராளோ..சாகிறாளோ. இவள் புலிக்குச் சாப்பாடு ஆக்கிக் குடுத்திருக்காள். ராணுவம் இவளச் சும்மா விடாது” காசிம் வன்மத்துடன் சொன்னான். மர்ஸானியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பொன்றை அநாயாசமாக உதிர்த்தான். அந்த சிரிப்புக்குள் ஒரு வன்மம் இழையோடி இருந்தது. ராத்தாவின் வீட்டுப் பக்கமாகத் திரும்பி காறித் துப்பிக்கொண்டு எழுந்து சென்றான். மர்ஸானி எதுவும் புரியாமலே அவன் பின்னால் எழுந்து சென்றாள். ஆனால் அவன் மீது அவளுக்கு நம்பிக்கை மட்டும் இருந்தது.

காசிம் தன் மனைவியிடம் ஆரூடம் சொன்னதைப் போலவே ஊரின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டு வந்தன. போர் முழக்கத்தோடு இராணுவம் எந்த நேரத்திலும் ஊருக்குள் வரக்கூடும் என்ற பதட்டமான சூழல் கனமாகச் சூழ்ந்து கொண்டிருந்தது.

அன்றிரவுக்கான இடியப்பங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்காக ராத்தா மாலையே அப்பங்களைச் அவித்து சீராக ஓலைத்தட்டுகளில் அடுக்கினார். மாலை 7 மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். இடியப்பம் அவிப்பதற்கும், அடுக்குப் பண்ணுவதற்கும் ராத்தாவுக்கு அதிக நேரம் தேவையில்லை. கண்களை மூடிக்கொண்டே நேரத்துக்குள் செய்து முடிக்குமளவுக்கு அவருக்கு அது கைப் பழக்கமாகிவிட்டிருந்தது. இடியப்பம் வாங்குவதற்காக நேரத்தோடேயே சில சிறுசுகள் வந்து படிக்கட்டில் உட்கார்ந்து கொள்ளும்.

“ராத்தாக்குத் தனிய இருக்கப் பயமில்லையா?” சிறுமி ஒருத்தி கேட்டாள்.

”ம்ம்..யாரு சொன்ன தனிய இரிக்கனென்டு..பூனி என்னோட இருக்கான்” பூனையை ராத்தா அப்படித்தான் அழைப்பா.

“என்ட குஞ்சுகள் இருக்கு.. யாரு சொன்ன நான் தனியா இரிக்கனென்டு” கூண்டுக்குள் இருந்த கிளிகள் தலையை நீட்டி ராத்தாவை உற்றுப் பார்த்தன.

ராத்தா இடியப்பங்களைச் சுட்டு அடுக்கிக் கொண்டே பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தார்.

”அது மட்டுமா, அந்தா வேப்பயில வைரவன் இருக்கான்”

“வைரவனா? எப்புடி இரிப்பான்?” மிரட்சியான விழிகள் விளக்கொளியில் பளபளத்தன.

“மண் பானய கவுத்த மாதிரி அவன்ட தல. ரெண்டு சிவத்தச் சூரியனப் போல கண். சில நேரம் அவன்ட தல கூட சூரியனப் போல எரியும். வாயில எப்பயுமே சுருட்டு வெச்சுக்குவான். கண்ணுலருந்துதான் அதுக்குத் தீமூட்டுவான்”

சிறுமிகள் அச்சத்தில் உறைந்து மௌனமாக இருந்தனர். ஒரு சிறுமி வேப்பமரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அது குழந்தப் புள்ளகளுக்கும் பொம்புளகளுக்கும் ஒன்னுஞ் செய்யாது” என்று ஆசுவாசமாகச் சொன்னா ராத்தா.

“அது நம்ம எலாம் காவல் காக்கும்” மீண்டும் மீண்டும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்க சொல்லிக்கொண்டிருந்தார்.

அநேகமாக சிறுவர்களும் வயதான பெண்களும்தான் அவவின் வாடிக்கையாளர்கள். அவர்கள் வரும் ஒழுங்கிக்கேற்ப ராத்தா கொடுத்து அனுப்பிக் கொண்டே இருந்தா. கிளிகளுடனும், பூனையுடனும் மட்டுமே அவ்வப்போது பேச்சுகள். நையாண்டிகள் வந்து விழும். சிறுவர்கள் ராத்தா யாருடன் பேசுறா என்ற குழப்பத்தில் திண்ணைக் கட்டில் குந்தி இருந்தனர்.

”டேய் பூனி. ராவெய்க்கு உனக்கு என்னடா வேணும்? சோறா, இடியப்பமா?”

ஆனால் பூனி அன்று வழமைக்கு மாறாக கலகம் செய்து கொண்டிருந்தது. பயங்கரமான குரலில் இடைவிடாது அழுது கொண்டு ராத்தாவைச் சுற்றிச் சுற்றி வந்தது. ராத்தாவின் கிளிகள் தாழ்ந்த குரலில் கத்துவதும் பேசுவதுமாக கூண்டுக்குள் ஒடுங்கிக் கொண்டு ராத்தாவை சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ராத்தா செல்லமாகக் கதைத்தா.

“பெத்தா பழந்திண்டியா? என்னையே பார்த்திட்டிருக்காய்” ராத்தா பார்க்காமலே தன் குழந்தைகளைப் புரிந்து விடுவார். அவர்கள் முகங்களில் என்ன இழையோடுகிறது என்பதைக் குறிப்பறிந்து விடுவா. இன்றைக்கு எல்லோரும் சோகமாக இருப்பதை அவ தெரிந்துகொண்டா. எல்லோரையும் குசுப்படுத்துமாறு பாடல்களை ராகமிழுத்துப் பாடிச் சிரித்தார். பூனி ராத்தாவில் சாய்ந்து உரசிக்கொண்டு புதுமையாக அழுதது. திடீரென்று கிளிகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு சடசடத்தன. ராத்தா ஹூய் என்று கைகளை ஓங்கி அச்சுறுத்தினார். கூண்டுக் கதவைத் திறந்து சிறிய கோப்பையில் தண்ணீர் வைத்தா. சிறகால் அடித்து அடித்து கோப்பையைத் தட்டிவிட்டன. தண்ணீர் கவிழ்ந்து சிந்தியது.

“ஹேய்!” ராத்தா என்றுமில்லாதவாறு தன் குழந்தைகளுடன் கோபப்பட்டா. இடியப்பத்தை சரியாக அடுக்குப் பண்ணிக் கொடுக்க முடியாமல் ராத்தா திணறுவது போலிருந்தது. திடீரென்று மின்சாரம் போனது போல் ஊர் இருண்டு போனது. அசம்பாவிதம் ஒன்று சம்பவிப்பதற்கான சமிக்ஞை போல் அந்த இருள் எங்கும் கனத்துச் செறிந்தது. பூனி தன் மருட்சியான கண்களால் இருளை வெறித்துக் கொண்டு ராத்தாவையே சுற்றி வந்தது. ராத்தா ‘கனவா’ விளக்கை பற்றவைத்தார். விளக்கை காற்று அணைத்து விடாதிருக்க மட்டையால் மறைத்துப் பிடிக்குமாறு ஒரு சிறுமியைக் கேட்டுக்கொண்டார். சிறுமி பூனையை அச்சமாகப் பார்த்துக் கொண்டு காற்றை மறித்து மட்டையை பிடித்துக் கொண்டிருந்தாள். பூனை தன்னைப் பிறாண்டிவிடும் என அவள் அஞ்சுவதைப் போலிருந்தது.

ராத்தா தன் செல்லப் பிராணிகளுடன் செல்லமாகக் கதைத்தார். புதிதாகப் பேசப்பழகிய குழந்தைகளின் மழலைத்தனம் அவவின் குரலில் தொனித்தது. அது அவருக்கே விசித்திரமாகத் தோன்றியது. தன் பாட்டில் அவை மெளனமாகி அவவையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. கிளிகள் இரண்டும் அரைத்தூக்கத்தில் மிதப்பதைப் போல தலைகளைக் கவிழ்த்து வைத்திருந்தன. பூனி அப்படியே எந்தக் குறும்புமற்று கூனிப் போய்ப் படுத்துக் கொண்டது.

சொட்டும் காற்று இல்லாமல் மெல்லிய இருளில் மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. மரங்களைப் போலவே மனிதர்களும் உறைந்து போயினர். இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவர்கள் வந்திருப்பதாக, கண்ட இடத்திலேயே தலையை வெட்டி எறிபவர்கள் வந்துவிட்டதாக, தீப்பிழம்பு போல கண்கள் எரிந்து கொண்டிருக்கும் சீருடை மனிதர்கள் வந்திருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. மக்கள் மேலும் திடுக்கத்தில் ஒடுங்கினர். அச்சம் விஷ அரவம் போன்று அவர்களை வளைத்துப் பிடித்துக் கொண்டது. ஒரு சடுதியான அழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இறுதி நாளின் இறுதிக் கணம் போன்று நிலமைகள் உக்கிரமாகிக் கொண்டு வந்தன.

வெளியே வெறிச்சோடிய தெருக்கள் இருளில் மூழ்கி இருந்தன. அச்சத்தை விழுங்கிக் கொண்டு வீடுகள் விளக்கொளியை சுவர்களிலும் செத்தைகளிலும் பூசிக் கொண்டன. மதிலுக்கும் செத்தை வேலிகளுக்கும் மேலால் சில மனிதத் தலைகள் மட்டும் ஆமைகள் போன்று எட்டிப் பார்த்துக் கொண்டன. அவற்றின் கண்களில் பயங்கரத் திகில் கனமாக உறைந்திருந்தன. காட்டுமிராண்டித்தனமான காலமொன்று வந்திருப்பதாக அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

மெல்லிய நிலவொளி பூத்து வந்து இருளின் செறிவை சற்று ஐதாக்கியது. வரண்ட பொலிவிழந்திருந்த மதில்களில் கரிய மனித நிழல்கள் தடித்த சப்பாத்து ஒலிகளுடன் திடீரென்று ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டது. திமு திமுவென்று துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் நிலத்தை உதைத்து உதைத்து நடந்தபடி வீதியில் நிறைந்தனர். ஒவ்வொரு அடியையும் அவர்கள் மிகுந்த விசையுடன் நிலத்தில் பதிதத்தனர். ஊர் அச்சத்தில் உறைந்து அடங்கி நின்றது.

ஒரு முரட்டு மனிதன் போன்று தெரிந்த கட்டளைத்தளபதி மதம் பிடித்த யானை போல பிளிறிக் கொண்டு திரிந்தான். கொச்சைத் தமிழில் சில வார்த்தைகளையும் அவ்வப்போது உதிர்த்தான். பூட்ஸ் கால்களால் பூமியை உதைத்தபடி அங்குமிங்கும் நடந்தான். அவனது பருத்த நெடிய உடலிலிருந்து ஒருவிதத் துர்வாடை வீசிக்கொண்டிருந்தது.

வை.எம்.எம்.ஏ. கட்டடத்துக்குள்ளிருந்த பொடியன்மார் எல்லோரும் எங்கே ஓடி மறைந்தனர் என யாருக்கும் தெரியவில்லை. கனத்த இருளை தன் வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு கட்டடம் மட்டும் தனித்து நின்றது. ஆனாலும் ஊருக்குள் இராணுவம் ஒரு சுற்றி வளைப்புபப் போல அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தது. யாரோ ஒரு முக்கிய புலித் தளபதியைத் தேடுவது போலவும் முற்றுகையிடுவது போலவும் காட்சிகள் கடுமையாகிக் கொண்டிருந்தன.

ராத்தாவின் வீட்டுக்குள் ஒரு படையணி புகுந்ததை மக்கள் திகைப்புடன் எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றனர். வீட்டுக்குள்ளிருந்த ராத்தாவை அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு சிப்பாய் மூர்க்கமாக தூசனங்களை உதிர்த்தான். “எல்.டி.டிக்கு சாப்பாடு குடுத்தது..?” என அரைகுறைத் தமிழில் வன்மத்துடன் ஓங்கரித்தான். காலில் அகப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளிக் கொண்டு ராத்தாவைத் தற தறவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். இடியப்பம் வாங்க வந்திருந்தவர்கள் அலறிக் கொண்டு சிதறி ஓடினர். ராத்தாவின் வௌ்ளைச் சேலை விலகி மார்பு தெரிய சரிந்தது. இன்னுமொரு சிப்பாயின் முரட்டுக் கைகள் அவளை மேலும் பலமாகப் பற்றி இழுத்தன. புடவை உடலிலிருந்து முக்கால்வாசி விலகியது. அடக்க முடியாமல் ஊர் பயங்கரமாகக் திணறியது.  இது போன்ற விசயங்களை ராத்தா கனவில்கூட கண்டிருக்காதவர். அவரது சுத்தமான உடல் மீது அசுத்தக்கறை ஏகதேசமாகப் பரவியது. ஊர் அதிர்ந்தது.

இது சகிக்க முடியாத யுத்தம். ஓர் அபலைக்கு எதிராகவா இந்தப் படையெடுப்பு. விடாய் வந்த கன்றுக்குட்டி போல ஊர் முக்கியது.

கதறிக்கொண்டே சிலர் ஒதுங்கினர். அவளுக்காக யாரும் பேச முடியவில்லை. பேசுபவர்களும் குற்றவாளியாகலாம் என்ற அச்சம் எல்லா மனங்களையும் பேதலிக்க விட்டது. ராத்தாவின் வீட்டின் முன்னால் கண நேரத்தில் டயர்கள் குமிக்கப்பட்டன.

ராத்தாவின் முன்வளவில் நின்ற வேப்ப மரத்தின் கீழ் எரியூட்டப்பட்ட டயர்களின் கனத்த நெடி காற்றில் கரைந்து ஒழுகி வந்தது. தகிக்கும் தீயின் சுழற் புகையில் கட்டளைத் தளபதி மங்கலாகத் தெரிந்தான். பாறை போன்று அவன் முகமும் இதயமும் இறுகி இருந்தன. விரிந்த அவன் புஜத்தில் சூட்டப்பட்டிருந்த பதவிப்பட்டிகளும் ஸ்டார்களும் அவனுக்குக் கொஞ்சமும் கௌரவம் செய்யாதவை போல் விலகித் தெரிந்தன. அவன் நடக்கும் போது நிலம் அதிர்வதைப் போன்று மக்கள் உணர்ந்தனர். ஊர் அல்லோல கல்லோப்பட்டது. அந்தகாரம் எங்கும் சூழ்ந்தது.

“என்னை விடுங்கோ எனக்கு எதுவும் தெரியாது” என்ற ராத்தாவின் கதறல் மெல்லிய குரலில் ஓங்கி ஓங்கி அடங்கியது. அது கட்டளைத் தளபதியின் மனச்சாட்சியை உசுப்பவில்லை. பஞ்சுப் பொதியில் பற்றிப் பிடித்தது போல் நெருப்பு நொடியில் பத்தி எரிந்தது. புகை இருளில் கரைந்தது. புலிகளுக்கு உணவு கொடுத்தாள் என அவள் தீயில் எறியப்பட்ட போது தளபதி முழங்கினான். டயர் வாசம் காற்றில் கரைந்து எங்கும் அலைந்தது. குப்பென்று எரியும் தீக் கிடங்கிலிருந்து ராத்தாவின் கடைசிக் கதறலை காற்று எட்டுத் திசைக்கும் சிதறடித்தது. கனல் கந்துகளிலிருந்து இறக்கை விரிப்பது போல் தீப்பற்றிய கைகளை ராத்தா ஓங்கி ஓங்கி சடசடத்து அடித்தார். ராத்தாவின் பூனி தீச் சுவாலையின் குறுக்கும் மறுக்குமாக பாய்ந்து பாய்ந்து அலறியது. அதன் வாலில் கூஞ்சம் கட்டியதைப் போல தீப்பொறி ஜ்வாலித்தது. வேப்ப மரம் பேய் பிடித்ததைப் போல ஊ..ஊ..என்று அகோரமாக இரைந்து இரைந்து தீயை அணைப்பது போல கிளைகளை தாறுமாறாக அசைத்தது. வேம்பிலிருந்த பறவைகள் சடுதியாகக் கலைந்து நெருப்பின் குறுக்கே சடசடத்துப் பறந்தன. வாள்களில் தீப்பொறி பட்டு நெருப்புக் கூஞ்சமாக மாறின. இயல்பற்று அலறிப் படபடத்து ஒதுங்கின. ராத்தாவின் பைரவன் மண்சட்டித் தலையுடனும், தன் நெருப்புக் கண்களுடனும் சற்றைக்கெல்லாம் இறங்கி வந்து ராத்தாவைப் புது மேனியாக மீட்டெடுப்பான் என அங்கிருந்த சிறுமிகள் நம்பினர். மனித ஓலங்களும் வானத்தை அறைந்து கொண்டே இருந்தன. எத்தனை கண்ணீர்த் துளிகள் நிலத்தை நனைத்தன. எத்தனை விம்மல்கள். தண்ணீர் தண்ணீர் என்ற ஓங்காரக் குரல் மெல்ல அடங்கி ராத்தாவின் கட்டை மண்ணில் சாய்ந்தது. உடல் எரிந்த வாடையை காற்று அள்ளிச் சென்று அருகிலிருந்த ஆற்றில் கரைத்தது.

தனக்கு நேர்ந்த இந்தக் கதி யாரால் நேர்ந்ததென அவள் அறிவாள். மன்னிக்கப் போன தளபதிக்கு கொலைக்கூலி கொடுத்து இந்த மாபாதகத்தைச் சாதித்தவர் யார் என்பதை அவள் ஆன்மா அறிந்து கொண்டது. ஊர் அறிந்துகொண்டது. நெருப்பு அறிந்துகொண்டது. வேம்பு அறிந்துகொண்டது. காற்றும் தெரிந்து கொண்டது. அந்த அபலையின் ஆன்மா அந்தரித்து அந்தரித்து தீப் புண்ணின் சீழ்க்கை உலரும் முன் சாபத்தீயை அந்தத் தலைமுறை மீதே கொட்டியது. கண்ணீர்த் துளிகளை வாரி இறைத்தது. காலத்தின் சாபச் சொற்களை அவர்களின் தலைமீது உமிழ்ந்தது. நில அபகரிப்புக்காகப் புரியப்பட்ட மாபெருங்கொலையாக காலம் அதைப் பதிவுசெய்தது. நெருப்பும் அதை மன்னிக்க விரும்பவில்லை. காற்றும் ராத்தாவின் மரணத்துக்கு நீதி கேட்பதாக சபதமெடுத்தது. தீ விளையாடித் தீர்த்த தரைத் தடத்தின் மீது காற்று சத்தியமிட்டு சாபத்தின் கன்னியில் அதுவும் ஒரு கன்னியாக மாறியது.

0

ராத்தாவின் முடிவற்ற கண்கள் அவர்களை வெகுநேர்த்தியாக உற்றுப் பார்த்தன. அவளது கண்களில் அந்தப் பரம்பரையின் அத்தனை தலைகளும் முகங்களும் ஒவ்வொன்றாகப் பதிவாகின. அவளது கண் காலத்தின் கண் என ஆகியது. அது முடிவற்ற கண். மனைவி கதைசொல்லி முடித்த போது அவளது முடிவற்ற கண்களால் ராத்தா இந்த மண்ணை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதாக பஷீர் உறுதியாக நம்பினான்.

இந்த இடியப்பச் சிறுமி காசிமின் பேத்தி என்று மனைவி சொன்னாள். ராத்தாவின் முடிவற்ற கண்களால் அவள் கவனமாக உற்று நோக்கப்படுவதாக பஷீர் சொன்னான். காசிமின் இரண்டு பெண் பிள்ளைகளும் தீயில் வெந்து இறந்து போனதாக மனைவி சொன்னாள். மனைவி ஒரு வேடிக்கையும் சொன்னாள். காசிமின் பிள்ளைகள் அடக்கப்பட்ட மயானத்தில் அன்றிரவு தீயை ஆடையாக அணிந்த இரண்டு மனித உருவங்கள் மாறி மாறி நடனமாடிக் கொண்டிருந்ததை அயலவர்கள் பார்த்ததாகச் சொன்னாள். மையவாடியிலிருந்த வேப்ப மரமொன்று தன் கிளைகளை காற்றில் அளைந்து அளைந்து வீசி காற்றைக் கூட்டி தீயை மூட்டியதாகச் சொன்னாள். வேப்ப மரத்திலிருந்த பறவைகள் சிறகடித்து அடம்பிடித்து கூச்சலிட்டு தீயின் குறுக்கும் மறுக்குமாகப் பறந்தலைந்ததை, அவற்றின் வால்கள் தீப்பொறி தெறித்து நெருப்புக் கூஞ்சம் போன்று மாறியதைச் சொன்னாள். மயானத்தில் நின்ற வேம்புகளிலிருந்து சட்டித் தலையுடனும் நெருப்புக் கண்களுடனும் மனிதர்கள் நிலத்தை ஓங்கி உதைத்தபடி அணிவகுத்துச் சென்றதை அயலவர்கள் பார்த்தாக மனைவி உறுதியாகச் சொன்னாள்.

அதை ராத்தாவும் தன் முடிவற்ற கண்களால் பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் என பஷீர் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

***

ஜிஃப்ரி ஹாசன்

 

https://vanemmagazine.com/முடிவற்ற-கண்-ஜிஃப்ரி-ஹாச/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.