Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இ ஸ்கூட்டர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்.

இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.

பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரிதாக நடக்கும் பேட்டரி வாகன தீ விபத்து சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கலாம்.

வழக்கமாக இ பைக்குகளின் ஃப்ரேமில் பெரிய லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதை கவனமாகக் கையாளாவிட்டால் தீ ஆபத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

லித்தியம் பேட்டரிகள் இ-பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.

அவற்றை நூற்றுக்கணக்கான முறை சார்ஜ் செய்து, டிஸ்சார்ஜ் செய்யலாம். ஒப்பீட்டளவிலும் இலகு ரகமாகவும் அவை உள்ளன. மேலும், பல வகை பேட்டரிகளை விட குறைந்த அளவிலான நச்சு உலோகத்தை லித்தியம் பேட்டரி கொண்டிருக்கிறது. ஆனாலும், அவை எளிதில் தீப்பிடிக்கும் தன்மை வாய்ந்தவை என்ற கூற்றையும் நாம் ஒதுக்கி விட முடியாது.

இ-பைக்குகள் தீப்பிடிப்பது ஏன்?

இ-பைக்குகளில் லித்தியம் பேட்டரிகள் இரண்டு எலக்ட்ரிக் டெர்மினல்களைக் கொண்டிருக்கின்றன. இடையில் ஒரு எலக்ட்ரோலைட் திரவம் உள்ளது.

பேட்டரி சார்ஜ் செய்யப்படும்போதும் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதும், சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள் ஒரு மின் முனையிலிருந்து மற்றொன்றுக்கு நகரும்.

இந்த எலக்ட்ரோலைட் திரவம் எரியக்கூடிய தன்மை வாய்ந்தது. இது பொதுவாக நடக்ககூடியது அல்ல. ஆனால் பேட்டரி சேதமடைந்தாலோ அதிக வெப்பமடைந்தாலோ, இந்த திரவம் எரிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும், பேட்டரி செல் கூடுதலாக வெப்பம் அடைந்தாலும் அருகில் உள்ள (தெர்மல் ரன் அவே எனப்படும் செயல்முறை) அதன் பாதைக்கும் அந்த வெப்பம் பின்தொடர்கிறது. அதன் அழுத்தம் விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகும்போது பேட்டரி வெடிப்பு ஏற்பட்டு தீ ஏற்படுகிறது.

இதுபோன்ற நிலைமையை கருத்தில் கொண்டு, அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் ஹோவர்போர்டுகளுக்கான பாதுகாப்பு தரத்தை துரிதமாக அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது.

ஆனால், இப்போதும் கூட விமானங்களில் இந்த வகை எலக்ட்ரோலைட் திரவம் அல்லது பேட்டரிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இ-பைக்குகள் நீண்ட காலமாகமே புழக்கத்தில் உள்ளன. இதுபோலவே, சமீப ஆண்டுகளாக இ-கார்களும் கார் சந்தையில் பிரபலமாகி வருகின்றன. டெஸ்லா போன்ற சில நிறுவனங்கள் இ-பஸ்களை கூட தயாரித்துள்ளன.

 

e bike

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் தீ ஏற்படும் பேட்டரி வாகனங்கள் பெரும்பாலும் மோசமாக கட்டமைக்கப்பட்ட தயாரிப்பாலேயே நடப்பதாக அமெரிக்க தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை விளக்குகிறது.

எப்படி தடுப்பது?

சரி இனி இ-பைக்குகளில் தீ ஏற்பட்டால் அதை எப்படி தடுக்கலாம் என பார்ப்போம்.

தகுந்த பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தே இ-பைக்கை வாங்க வேண்டும்.

அப்படி வாங்கிய இ-பைக்குகளை சரியாக பராமரிப்பதுடன், தீ விபத்துகளைத் தவிர்க்கவும் நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Gocycle என்ற இ-பைக் நிறுவனர் ரிச்சர்ட் தோர்ப் இந்த விஷயத்தில் சில யோசனைகளை தெரிவிக்கிறார்.

பேட்டரி வாகனங்களை வாங்கும் முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் கையேட்டை படித்து, முன்னெச்சரிக்கை அறிவுரைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

பேட்டரியுடன் பொருந்தக்கூடிய பிராண்டின் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பவர் பேட்ச் வயர்களை (Power patch lead) பயன்படுத்தக் கூடாது. சார்ஜரை நேரடியாக சுவர் வழி மின்சார மெயின்ஸ் விநியோகத்தில் மட்டும் சொருக வேண்டும்.

பேட்டரி பைக்கை சார்ஜ் செய்யும் பகுதியில் ஸ்மோக் டிடெக்டர் இருப்பதையும், அதன் எச்சரிக்கை ஒலி நீங்கள் கேட்கக்கூடிய இடத்தில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, கேரேஜ் அல்லது கொட்டகையில் உங்கள் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்தால், ஸ்மோக் டிடெக்டர் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். அந்த எச்சரிக்கை கருவிகள் உங்கள் வீட்டிலிருந்து கூட கேட்கும் வகையில் இருந்தால் நல்லது.

உங்கள் பேட்டரி அல்லது இ-பைக் வெள்ளத்தில் சிக்கியிருந்தால், அது நிரந்தரமாக சேதமடைந்ததாகக் கருதுங்கள். அதை சார்ஜ் செய்ய வேண்டாம். அதை பொறுப்புடன் மறுசுழற்சி செய்யுங்கள்.

இ-பைக்கின் பேட்டரியை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுசுழற்சி போல, கட்டாயமாக மாற்ற பரிசீலிக்கவும்.

இ-பைக் தொழில்நுட்பம் ஒவ்வோர் ஆண்டும் மாறுகிறது. அதற்கு உகந்தவாறு உங்களுடைய பேட்டரி தயாரிப்பு உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

இறுதியாக, பழைய லித்தியம்-அயன் பேட்டரிகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். அவை இ-பைக் பேட்டரிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அந்த பேட்டரிகளை மறுசுழற்சி செய்து மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது அகற்றி விடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரை.

 

இ ஸ்கூட்டர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்.

லித்தியம்-அயனில் தீ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை சில பேட்டரி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அது இ-பைக் உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.

வெளிச்சந்தையில் விற்கப்படும் மலிவு விலை பேட்டரி அல்லது இரண்டாம் பயன்பாட்டு பேட்டரிகளை முறையான உத்தரவாதமின்றி பயன்படுத்த வேண்டாம்.

ஒரே இரவில் மின் பைக்குகளை அதன் பேட்டரி சார்ஜ் அளவை விட கூடுதல் நேரத்துக்கு சார்ஜ் செய்யாதீர்கள்.

ஒரு பேட்டரி அதிகம் சூடாக இருந்தாலோ குளுமையாக இருந்தாலோ கூட அதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளிக்கு கீழ் பேட்டரிகளையோ பேட்டரி வாகனங்களை நிறுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை.

குழந்தைகள் நடமாடும் அறையில் மின்-பைக்கை (அல்லது அதுபோன்ற சாதனத்தை) நிறுத்தாதீர்கள்.

தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?

உங்கள் இ-பைக்கின் பேட்டரியில் கவனம் செலுத்துங்கள். அதுதான் தீ ஏற்படுவதற்கான மூலமாகும்.

தீ விபத்து ஏற்படும் முன் நீங்கள் ஆபத்தின் அறிகுறிகளைக் கண்டறியலாம். ஒரு விசித்திரமான வாசனை, வடிவத்தில் மாற்றம், கசிவு, ஒற்றைப்படை சத்தம் அல்லது அது மிகவும் சூடாக உணர்தல் போன்றவை பேட்டரியின் பலவீனமான நிலையை உணர்த்தும் சமிக்ஞைகள்.

தீ ஏற்பட்டால், அதை நீங்களே சமாளிக்க முயற்சிக்காதீர்கள்; லித்தியம் பேட்டரி தீ குறிப்பாக ஆபத்தானது. ஏனெனில் பேட்டரி உறை அதிக வெப்பநிலையில் வெடித்து, குப்பைகள் பறக்கும் அபாயத்தில் இருக்கும். அதற்கு பதிலாக, உடனடியாக அந்த பகுதியை காலி செய்து விட்டு அவசர சேவையை அழைக்கவும்.

https://www.bbc.com/tamil/india-60886262

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இ-ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடிக்க காரணம் என்ன? எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிர்காலம் உள்ளதா?

  • ஆ.விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
18 ஏப்ரல் 2022, 05:47 GMT
 

இ-ஸ்கூட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இ-ஸ்கூட்டர்களில் ஏற்படும் தொடர் தீ விபத்துகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை ஆய்வு செய்வதற்கே பல மாதங்களை செலவிடுகின்றன. இறுதியாகத்தான் அவை சாலைப் பயன்பாட்டுக்கு வரும். இ-ஸ்கூட்டர்களில் இதுபோன்ற பரிசோதனைகள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை' என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள்.

இரண்டு சம்பவங்கள்

சென்னை போரூர், குன்றத்தூர் பிரதான சாலையில் நடந்த சம்பவம் இது.

இ-பைக் விற்பனைக் கடை ஒன்று இப்பகுதியில் இயங்கி வருகிறது. விருகம்பாக்கம், போரூர் உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள், இந்தக் கடையில் இ-பைக்குகளை வாங்குவது வழக்கம். சித்திரை திருநாளையொட்டி பல்வேறு சலுகைகளையும் கடையின் நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், இ-வாகனங்களை சர்வீஸ் செய்வதற்காக சிலர் கொடுத்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதியன்று மாலை ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-பைக் ஒன்றின் பேட்டரி வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீயைப் பார்த்து கடையின் ஊழியர்கள் வெளியே ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தால் புதிய இ-பைக்குகள் ஐந்தும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 இ-பைக்குகள் என 17 வாகனங்கள் எரிந்தன. இதனையறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விருகம்பாக்கம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மார்ச் மாத இறுதியில் வேலூர் மாவட்டத்தில் இ-ஸ்கூட்டரால் நேர்ந்த துயரச் சம்பவம் ஒன்று, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூரில் உள்ள சின்ன அல்லாபுரம் என்ற பகுதியில் கேபிள் டி.வி ஆபரேட்டராக உள்ள துரை வர்மா என்பவர், தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் இ-பைக்கில் இருந்த பேட்டரி வெடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் துரை வர்மாவும் அவரது 13 வயது மகளும் சிக்கித் தவித்துள்ளனர். இந்தப் புகையில் இருந்து தப்பிக்க அவர்கள் கழிவறைக்குள் தஞ்சமடைந்தும் அவர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை. இதையடுத்து கழிவறையில் இறந்து கிடந்த தந்தை, மகளை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

வேலூரில் நடந்த சம்பவத்தில் எறிந்த எலக்ட்ரிக் பைக்

 

படக்குறிப்பு,

வேலூரில் நடந்த சம்பவத்தில் எறிந்த எலக்ட்ரிக் பைக்

- மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இ-வாகனங்கள் எரிந்து சாம்பலாகும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மக்கள் இ-வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கினர். சைக்கிளைப் போலவே இயங்குவது, குறுகிய பயணங்களுக்கு இலகுவாக இருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை பிரதான காரணங்களாக அமைந்தன. தவிர ஆட்டோமொபைல் சந்தையிலும் இ-ஸ்கூட்டர் விற்பனை அதிகரிக்கவே முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டின. ஆனால், அடுத்தடுத்து நடந்த தீ விபத்து சம்பவங்களால் இ-பைக்குகளை வாங்குவதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

இ-ஸ்கூட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இ ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் ஒகினாவா

அதிலும், இ-பைக் வாகனத்தில் உள்ள பேட்டரிகளால் மட்டுமே பெருமளவு சிக்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து `ஒகினாவா' என்ற ஆட்டோ டெக் நிறுவனம் கடந்த 16 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்களது தயாரிப்புகளான சுமார் 3,215 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது தயாரிப்பான ப்ரைஸ் புரோ ஸ்கூட்டரை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் ஒகினாவா முடிவு செய்துள்ளது.

` ஒகினாவா தயாரிப்பில் பேட்டரி தொடர்பான சிக்கல்கள் இருந்தால் அதனைக் கண்டறிந்து உடனடியாக சீர்செய்யப்படும். வாகனத்தின் ஹெல்த் செக்அப் சார்ந்த முகாம்களில் இதுவும் ஒன்று' எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ` இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா டீலர்ஷிப்புகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் சிக்கல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தப் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர்களும் தனித்தனியே தொடர்பு கொள்ளப்படுவார்கள்' எனவும் ஒகினாவா தெரிவித்துள்ளது.

தவிர, ஒகினாவோ தயாரிப்புகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் (Batch) மட்டும் இந்தப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக வாகனங்கள் எரிவதால் இப்படியொரு முடிவை ஒகினாவா எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், `மின்சார வாகனத் தயாரிப்பில் உள்ள ஒரு நிறுவனம், தங்களது வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக கூறுவதும் இது முதல்முறை' என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள்.

பிரச்னைக்குக் காரணம் என்ன?

``எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரச்னை ஏற்பட என்ன காரணம்?'' என ஆட்டோமொபைல் துறை வல்லுநர் முரளியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

`` எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பொருத்தவரையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாரம்பரியமாக இரு சக்கர வாகனங்களைத் தயாரிப்பவர்கள், அடுத்து எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். பாரம்பரியமாக வாகனங்களைத் தயாரிப்பவர்கள், 350 சி.சி, 500 சி.சி, 650 சி.சி எனப் பல வடிவங்களில் தயாரிக்கின்றனர். அதேநேரம், அவர்கள் 100 சி.சி வாகனத்தைத் தயாரிப்பதாக இருந்தால் 48 முதல் 60 மாதங்கள் வரையில் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தக் கால அவகாசமானது 36 முதல் 40 மாதங்களாக குறைந்துவிட்டது. வாகனம் தயாரிப்பதற்கான ஸ்கெட்ச் போடப்பட்ட பிறகு சந்தை நிலவரத்துக்கேற்ப என்னென்ன தேவைப்படும் என ஆய்வு செய்கின்றனர். இதன்பின்னர் 12 முதல் 15 மாதத்தில் வாகனம் தயாராகிவிடும். அதன்பிறகுள்ள மாதங்கள் அனைத்தும் பரிசோதனைக்கே செலவிடப்படும். இறுதியாகத்தான் சாலையில் ட்ரையலுக்கு வரும். இ-ஸ்கூட்டர்களில் இதுபோன்ற பரிசோதனைகள் பெரிய அளவில் இல்லை'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள், இந்திய சாலைகளின் குண்டும் குழியுமான தன்மைக்கு எந்தளவு தாங்குகிறது, பத்து ஆண்டுகளில் எந்தளவுக்கு தாங்கும் என்பதையெல்லாம் ஆய்வு செய்வார்கள். அதாவது பொருள் உடையும் அளவுக்கு பரிசோதனை செய்வார்கள். அடுத்ததாக, பாலைவனம், கடலோரம் என சோதனை நடக்கும். மைனஸ் 56 டிகிரி முதல் 58 டிகிரி பிளஸ் வரையில் ஆய்வு நடக்கும். இவற்றை பாரம்பரியமான நிறுவனங்கள் நடத்துகின்றன.

ஆய்வக பரிசோதனையில் தேர்ச்சி.. ஆனால்?

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏத்தர் (ather) போன்ற இ-வண்டிகளை 4 வருடங்களாக ஆய்வு நடத்திவிட்டு வந்தனர். தற்போது புதிதாக வரக் கூடிய நிறுவனங்கள் பலவும் ஆய்வகங்களில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். இந்திய சாலைகளுக்கு ஏற்ப வண்டி உள்ளதா என புனேயில் உள்ள ARA (automobile research association of india) நிறுவனம்தான் சான்று கொடுக்கிறது. சில நிறுவனங்கள் ஆய்வகப் பரிசோதனையில் தேறிவிடுகின்றன. ஆனால், சாலைகளில் ஓடும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன'' என்கிறார்.

 

இ-ஸ்கூட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``என்னென்ன இடையூறுகள் என்பதைப் பட்டியலிட முடியுமா?'' என்றோம். `` உற்பத்தியில் ஏற்படும் கோளாறுகளைப் பொறுத்தவரையில், எலக்ட்ரிக் வாகனங்களில் நான்கு விஷயங்கள் முக்கியமானவை. பேட்டரி, மோட்டார், மேனேஜ்மென்ட் சிஸ்டம், கேபிளிங் ஆகியவை. இவற்றையெல்லாம் இரண்டு சக்கரங்களோடு பொருத்தினால் எலக்ட்ரிக் வண்டியாக மாறிவிடுகிறது. இன்ஜின் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் என இரண்டு உள்ளது. லித்தியம் பேட்டரியை பொறுத்தவரையில் மின்சாரத்தை சார்ஜ் செய்தாலும் அது வெப்பமாகும். இது ஒரு அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி.

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் பேட்டரியில் ஆனோட், கேதோட் (Anode and cathode)ஆகியவற்றுக்கு நடுவில் செராமிக் துகள்களால் செய்யப்பட்ட மெலிதான தாள் ஒன்று இருக்கும். ஆனோட், கேதோட் ஆகியவற்றைப் பிரிப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனோட், கேதோட் ஆகியவை நெருக்கமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் தனித்தும் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் சார்ஜ் ஏற வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் செயல்திறன் குறைந்துவிடும். இப்படிப்பட்ட நுணுக்கமான பேட்டரில் சிறிய அழுத்தம் ஏற்பட்டாலும் சிக்கல்தான்'' என்கிறார்.

பொதுமக்கள் செய்யும் தவறுகள் என்ன?

`` பொதுவாக, இரு சக்கர வாகனங்களின் இருக்கைக்குக் கீழே ஹெல்மெட் வைப்பதற்கு இடம் இருக்கும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் அந்த இடத்தின்கீழ் பேட்டரி இருக்கும். அங்கே ஹெல்மெட்டை மட்டும் வைக்கலாம். ஆனால், குடும்பத் தலைவர்கள் பலரும் அந்த இடத்தில் அரிசி உள்பட பல்வேறு உணவுப் பொருள்களை வைக்கின்றனர். இ-ஸ்கூட்டர் பேட்டரியை பொறுத்தவரையில் காற்று செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் காற்று புகாத வகையில் அடைக்கக் கூடாது என யாரும் சொல்வதில்லை.

பள்ளம், மேடு ஆகியவற்றில் ஏறும்போது அரிசி மூட்டையானது பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். அது தானியமாக இருப்பதால் குஷனிங் போன்ற விளைவைத்தான் கொடுக்கும். ஆனால், பேட்டரியில் உள்ள பொருள்கள் அனைத்தும் மிக லேசானவை. எலக்ட்ரிக் வாகனங்களில் எடைக் குறைப்பு என்பது முக்கியமானது. வேஃபர் பிஸ்கெட்டை அழுத்தினால் என்ன ஆகுமோ அதேநிலைதான் பேட்டரிக்கும். இதனால் செராமிக் தாள் சேதமடைகிறது'' எனக் குறிப்பிடுகிறார் முரளி,

`` ஒருவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 30 கி.மீட்டர் சென்றுவிட்டு திரும்பிய பிறகு சார்ஜ் போடுகிறார். இவ்வாறு செய்வது மிகவும் தவறு. பேட்டரியின் உள்ளே 260 டிகிரி அளவுக்கு வெப்பநிலையில் இருக்கும். அதில் மீண்டும் மின்சாரம் கொடுக்கும்போது மீண்டும் அது கொதிக்கத் தொடங்கும். காற்றே கிடைக்காதபோது அதிக வெப்பத்தால் எரியத் தொடங்கும். பேட்டரி வெடிப்பதற்கு காற்று புகாமல் இருப்பது என பல காரணங்கள் உள்ளன'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` நுகர்வோர்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்ப சரியான சார்ஜரை பயன்படுத்த வேண்டும். ஒரு வாகனம் வாங்கும்போது மேனுவல் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை. வாகனச் சந்தையில் புதிய வரவாக எலக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதால் மேனுவலை கட்டாயம் படிக்க வேண்டும். எரிபொருளுக்கு மாற்றாக இதனைக் கொண்டு வந்தனர். அதில் ஏற்படும் தவறுகளை அறிந்து எலக்ட்ரிக் வாகனங்களைத் திரும்பப் பெறுமாறு சில நிறுவனங்களிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது உலகளவில் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

 

இ-ஸ்கூட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் தவறை உணர்ந்து, உதிரி பாகங்களை மாற்றித் தருவதாகக் கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குக் கூடுதல் செலவுதான். வரும் காலங்களில் ஆய்வக சோதனைகளை மத்திய அரசு கடுமையாக்க உள்ளது. விரைவில் `ரியல் டிரைவிங் எமிஷன்ஸ் சைக்கிள்' என்றொரு திட்டத்தை எரிபொருள் வாகனங்களுக்கு கொண்டு வரவுள்ளனர். அதாவது, `இரண்டு வருடங்களுக்குப் பிறகு வாகனங்கள் எப்படியுள்ளன?' எனப் பரிசோதனை செய்ய உள்ளனர். இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வந்தால் சிறப்பாக இருக்கும்'' என்கிறார்.

இ-ஸ்கூட்டரால் லாபமா.. நட்டமா?

அதேநேரம், இ-ஸ்கூட்டர் தொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜன் பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் பயன்படுத்தி வருகிறார். `` எனது வாகனத்தில் லெட் (LEAD)ஆசிட் பேட்டரியை பயன்படுத்தி வருகிறேன். தற்போது பயன்படுத்தும் வாகனத்தை 38 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். இது பேசிக் (Basic) மாடல் வாகனம். ஓராண்டுக்குப் பிறகு புதிய பேட்டரியை மாற்றினேன். இதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவானது. ஆனால், அதற்கேற்ற லாபம் கிடைத்ததா என்பது சந்தேகம்தான். தினமும் 5 மணிநேரம் சார்ஜ் போடுகிறேன். வாகனம் ஓடுவதில் எந்தவித சிரமமும் இல்லை. மிக எளிதாக இருக்கிறது. கடைகளுக்குச் சென்று வரவும் அலுவலகம் செல்லவும் பயன்படுத்துகிறேன். அதேநேரம், மேட்டுப் பகுதிகளில் வாகனம் ஏறுவதில் சற்று சிரமம் உள்ளது. லித்தியம் பேட்டரியை போட்டால் ஓரளவு சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்கிறார்.

பிரச்னைக்குக் காரணம் வரிகளா?

பேட்டரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் வரி காரணமாக சில நிறுவனங்கள் தவறு செய்வதாகக் குறிப்பிடும் சென்னை அண்ணா பல்கலைக்கழக எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் துறை பேராசிரியர் மணிகண்டன், ``சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இ-ஸ்கூட்டர் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றனர். ஆனால் அவை முழுமையாக பேக்கிங் செய்யப்பட்ட நிலையில் வருகின்றன. அந்த நாடுகளின் வெப்பநிலை என்பது வேறு, இந்தியாவின் தட்பவெப்ப நிலை என்பது வேறு. டார்ச் லைட்டுகளில் உள்ளதைப் போல ஒரு பேட்டரி போனால்கூட இன்னொரு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகளில் அவ்வாறு செய்ய முடியாது. காற்றோட்டம் ஓரளவுக்கு இருந்தால் எந்தவிதச் சிக்கலும் இல்லை. அவ்வாறு இல்லாமல் போவதால்தான் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` ஒரு சில எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால், `இனி இ-பைக் பக்கமே போகக் கூடாது' எனச் சிலர் பேசுகின்றனர். இது ஏற்புடையதல்ல. சென்னையில் உள்ள தனியார் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள், பேட்டரிகளை சரியான முறையில் இறக்குமதி செய்கின்றனர். அவர்கள் பேக்கிங் முறையில் பேட்டரிகளை வாங்காமல் தனித்தனியாக வாங்கி நமது சூழலுக்கு ஏற்ப பேக்கிங் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து பேக் செய்யப்பட்டு வாங்கினால் வரி குறைவு என்பதால் சில நிறுவனங்கள் அப்படியே வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்த வகையான பேட்டரிகளில்தான் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. அடுத்தகட்டமாக, நேனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேட்டரிகளில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும் வேலைகளும் நடக்கின்றன. இதற்கு சற்று காலம் தேவைப்படலாம்'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61135994

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.