Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: தனிமைச் சிறைவாசம் எப்படி இருந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: தனிமைச் சிறைவாசம் எப்படி இருந்தது?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்த காலத்தில் தான் நடத்திய சட்டப்போராட்டம், சிறையின் சூழல், தனக்காக தன் தாயார் நடத்திய போராட்டம், செங்கொடியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம், தன் வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை குறித்தெல்லாம் பிபிசியிடம் விரிவாகப் பேசினார் பேரறிவாளன் பேட்டியிலிருந்து:

31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்கு முன்பாகவே நீங்கள் சிறை விடுப்பில் வெளிவந்துவிட்டாலும், உங்களை விடுதலை செய்து நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

பெரிய நிம்மதிப் பெருமூச்சு வந்தது. "மகிழ்ச்சியாக இருந்ததா?" என எல்லோரும் கேட்கிறார்கள். அது பெரும் மகிழ்ச்சியா, பெரும் நிம்மதியா என்ற கேள்விதான் எனக்கு இருந்தது. சலிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகப் பெரிய சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முடிவுக்காக நான் 31 ஆண்டுகள் தவம் இருந்தேன். அது கிடைக்கும்போது, மிகப் பெரிய மன நிம்மதி ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

விசாரணைக் கைதியாக இருந்ததில் துவங்கி, இந்த சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். அதில் எந்தக் கட்டத்தில் நாம் விடுதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டது?

ஆரம்பத்தில் எனக்கு பெரிய சட்ட அறிவு ஏதும் கிடையாது. காவல்துறை குறித்தோ, நீதிமன்றங்கள் குறித்தோ எந்த அறிவுமே கிடையாது. விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, 'இந்த விசாரணை முடிவடைந்தவுடன் நாம் விடுதலை ஆகிவிடுவோம்' என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆகவே, இந்த வழக்கு தொடர்பாக மிகக் குறைவான பங்களிப்பே எனக்கு இருந்தது. வழக்குகளுக்காக குறிப்பெடுத்ததுத் தருவது, நகல் எடுத்துத் தருவது என்ற அளவில்தான் பங்களிப்பு இருந்தது. முழுமையாக உட்கார்ந்து எதையும் படித்ததில்லை. விசாரணையின் முடிவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது உறுதிசெய்யப்பட்டது. 'நாம் மிகப் பெரிய வலைப் பின்னலுக்குள் மாட்டிக்கொண்டோம்' என்ற ஆபத்து எனக்கு அப்போதுதான் புரியவந்தது. அது புரியவந்தபோது, சட்டக் கல்வியை பெற முயன்றேன்.

இந்தத் தருணத்தில், பல்நோக்கு விசாரணை முகமையின் முடிவை எதிர்நோக்க ஆரம்பித்தேன். காரணம், அந்த விசாரணையின் முடிவில் நான் நிரபராதி எனத் தெரியவரும் என்று நினைத்தேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த வழக்கில்தான், விசாரணை அதிகாரியான தியாகராஜன், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவுசெய்துவிட்டேன் என பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. ஏறத்தாழ நான்கைந்து ஆண்டுகளாக அந்த நம்பிக்கை இருந்தது. இப்போது அது நடந்திருக்கிறது.

நீங்கள் கைதாகும்போது 19 வயது. அந்த காலகட்டத்தில் கைது, விசாரணை என்று தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டபோது அதை எதிர்கொள்ளும் மன உறுதியை எப்படிப் பெற்றீர்கள்?

நான் சிறைக்குச் சென்றபோது எனக்கு 19 வயது. ஓடித் திரியக்கூடிய வயது. எல்லா மனிதர்களும் அந்த வயதில் என்ன ஆசாபாசங்களோடு இருப்பார்களோ, அதே ஆசாபாசங்களோடுதான் நானும் இருந்தேன். திடீரென இந்த வழக்கில் சேர்க்கப்பட்டபோது, ஒரு அறைக்குள் நான் முடக்கப்பட்டேன். இதனால், இயல்பாகவே மன அழுத்தம், வேதனை, விரக்தி என எல்லாமே இருந்தது. அதைக் கடக்க என்னுடைய குடும்பம் மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது. குறிப்பாக என் தாயாரின் பணியை இன்று உலகமே அறியும். சிறை அதிகாரிகளுக்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும்.

அதைத் தாண்டி என்னை மீட்டது என்னுடைய வாசிப்புப் பழக்கம்தான். எனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிப்பதன் மூலம், என் கவனத்தை நான் திசை திருப்பிக்கொண்டேன். துன்பத்திலிருந்து மீள்வதற்கு அப்படித்தான் தகுதிப்படுத்திக் கொண்டேன்.

நீங்கள் கைதுசெய்யப்பட்டது, அதற்குப் பிறகு உங்கள் குடும்பத்தினர் நடத்திய போராட்டம் எல்லாமே மிகக் கடினமானது. அது எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது, துன்பத்தை ஏற்படுத்தியது என்பதை உங்கள் குடும்பத்தினர் எப்போதாவது பகிர்ந்துகொண்டிருக்கிறார்களா?

கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன். சிறைக்குள் இருக்கும்போது எத்தனையோ முறை காய்ச்சல் வந்திருக்கிறது. தலைவலி வந்திருக்கிறது. எத்தனையோ துன்பங்கள் நேர்ந்திருக்கின்றன. சட்டப் போராட்டங்களில் சறுக்கி விழுந்திருக்கிறேன். அந்தத் துன்பத்தையெல்லாம் நான் காட்டிக்கொள்ள மாட்டேன். வீட்டில் ஏதாவது பிரச்சனை வந்தாலும் அவர்கள் அதை என்னிடம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். என்னுடைய சக சிறைவாசிகள் மூலமாகத்தான் சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை அம்மா தெரிந்துகொள்வார். அடுத்த முறை என்னைப் பார்க்க வரும்போது, அதைப் பற்றிக் கேட்பார்கள். 'அதெல்லாம் விடு' என்று சொல்வேன். இரண்டு தரப்புமே அப்படித்தான் இருந்தோம். 'எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுத்துவிடக் கூடாது, எனக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்' என்று மட்டும்தான் அம்மா கருதினார்கள்.

 

பேரறிவாளன்

உங்களுக்கான சட்டப் போராட்டத்தை உங்கள் அம்மா தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். அவர்தான் அதை நடத்த வேண்டுமென உங்கள் குடும்பத்தில் எப்படி முடிவுசெய்தீர்கள்?

நான் இந்த பிரச்சனையில் சிக்கியவுடன் எனக்காக யாரவது ஒருவர் செயல்பட வேண்டுமென்ற நிலை வந்தது. என் தங்கை அப்போது படித்துக்கொண்டிருந்தார். அக்காவுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. என் தந்தை அரசுப் பணியில் இருந்தார். தவிர, அவர் மிக உயரமாகவும் இருந்தார். ஆறு அடி, மூன்று அங்குலம். ஆகவே பயணங்களை மேற்கொள்வது மிகக் கடினம். எங்களுக்கு இருந்த ஒரே நிதி ஆதாரம் என் தந்தைதான். ஆகவே, என் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து, என் அம்மா எனக்காக இந்த வழக்கைப் பார்த்துக்கொள்வது என முடிவெடுத்தார்கள். அவர் அப்படித்தான் இந்த முயற்சியைத் துவங்கினார்.

அவர் இதனைத் துவங்கியபோது நிறைய புறக்கணிப்புகள், அவமானங்களைச் சந்தித்தார். அதையெல்லாம் கடந்தார். 'என்னுடைய மகன் நிரபராதி' என்ற ஒரே நம்பிக்கைதான் என்னுடைய தாயை இயக்கிய ஒரே விஷயம். அதுதான் எல்லோருடைய ஆதரவையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இது போன்ற புறக்கணிப்புகள், அவமானங்களை உங்களைச் சிறையில் பார்க்க வரும்போது பகிர்ந்துகொள்வார்களா?

ஒருபோதும் பகிர்ந்துகொண்டதில்லை. இதையெல்லாம் பின்புதான் நான் அறிந்துகொண்டேன். சிறை விடுப்பில் வரும்போதும் உறவினர்கள் வந்து சந்திக்கும்போதுதான் அதையெல்லாம் நான் தெரிந்துகொண்டேன். என்னுடைய அம்மாவைப் பற்றி முதன் முதலாக நெடுமாறனின் மகள் பூங்குழலி 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை நான் இன்றுவரை படித்ததில்லை. என்னுடைய தாயின் துயரத்தை நான் படிக்க விரும்பவில்லை. அனுஸ்ரீ என்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் 'அடைபட்ட கதவுகளின் முன்னால்' என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அதையும் நான் இதுவரை படித்ததில்லை. அம்மாவின் துயரங்கள் என்னைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஒடிந்துவிடுவேனோ என்று இருந்தது. அப்படி நான் ஒடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவற்றை நான் படிக்கவில்லை.

அப்படியானால், உங்களை அவர் சிறையில் வந்து பார்க்கும்போது நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வாக்கியங்களை மட்டும்தான் சொல்வாரா?

நாங்க ரெண்டு பேருமே அப்படித்தான் வாழ்ந்திருக்கிறோம். அம்மா தன் தரப்பிலிருந்து நம்பிக்கையூட்டும் வாக்கியங்களைச் சொல்வார். "அவரைப் பார்த்தேன், ஆதரவாக இருந்தார், இதைச் சொன்னார்" என்றுதான் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டுவார். அதுபோலத்தான் நானும் பேசுவேன். "பார்த்துக்கொள்ளலாம், சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். பழைய தீர்ப்புகள் இருக்கின்றன" என்று பேசுவேன். இப்படித்தான் எங்களுக்கு இடையிலான உரையாடல் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்தோம். உற்சாகத்தைக் குறைப்பதுபோல பேசவே மாட்டோம்.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

சட்டப் போராட்டங்களின்போது ஏற்பட்ட பின்னடைவுகளை எப்படி எதிர்கொண்டீர்கள்.. திடீரன தண்டனை உறுதியாகும், தண்டனையை நிறைவேற்றப் போவதாகச் சொல்வார்கள். அந்தத் தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

இந்த சமூகத்தில் இருந்தவர்கள்தான் சிறையிலும் இருக்கிறார்கள். அப்படிப் பலரின் கதைகள் எனக்குத் தெரியும். சாமானியர்களைப் பொறுத்தவரை, நீதியைப் பெறுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. சாதாரண வழக்குகளில்கூட நீதியைப் பெறுவது கடினமான விஷயம். எதிர்த் தரப்பில் இருந்தவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால், போராட்டம் கடினமாகிவிடும். வழக்குத் தொடர்பவர்களின் பலம் அதிகமாக இருந்தால், அவ்வளவுதான்.

என்னுடைய வழக்கு என்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு. எதிர் தரப்பில் அரசாங்கம் இருந்தது. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பெரிய பின்புலம் ஏதும் கிடையாது. ஆகவே, இதிலிருந்து மீண்டுவர கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை தேவைப்பட்டது. அதெல்லாம் எனக்கு இருந்தது. அதனால்தான் போராட முடிந்தது. இல்லாவிட்டால், இது நடந்திருக்காது.

இருந்தும் பின்னடைவு வரும்போது, கலங்கிப் போய்விடுவேன். ஆனால், காட்டிக்கொள்ள மாட்டேன். 2018ல் தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல்செய்தபோது, அதைப் பார்த்த நீதிபதி தண்டனையையே சீராய்வு செய்ய தகுதியிருக்கிறது என்று சொன்னபோது, வழக்கு சரியாகச் செல்வதாக நினைத்தேன். ஆனால், ஏதோ சில காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டது. அதில் கலங்கிப் போனேன். அந்த மாதிரி நேரங்களில், இழப்பதற்கு ஏதுமில்லை என்று ஆரம்பத்திலிருந்து துவங்குவேன். மறுபடியும் படிக்கத் துவங்குவேன். வேறு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்ப்பேன்.

அதற்கேற்றபடி நல்ல வழக்கறிஞர் அணி எனக்கு அமைந்தது. பிரபுராம், பாரி வேந்தர் சுப்பிரமணியம் என்று சிறப்பான வழக்கறிஞர்கள் எனக்கு அமைந்தார்கள். அவர்கள் ஆழமான சட்ட அறிவைக் கொண்டிருந்தார்கள். உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எங்களுக்குள் விவாதம் இருந்திருக்கிறது. அப்படித்தான் என் சட்ட அறிவை நான் வளர்த்துக்கொண்டேன்.

2011ல் உங்களுக்கான தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுதான் மிகப் பெரிய பின்னடைவாக வெளியிலிருந்தவர்களால் பார்க்கப்பட்டது. அந்தத் தருணத்தில் அதைக் கடக்க முடியுமென நினைத்தீர்களா?

அப்போது எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை இருந்தது. தண்டனை உறுதிசெய்யப்பட்ட தருணத்தில், கீழ் நிலை சிறை அலுவலர் ஒருவர் என்னிடம் கண் கலங்கி அழுதார். 5 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த தருணம் அது. அவருடைய மனைவி கலங்கி அழுததாகச் சொன்னார். "நிச்சயமாக தூக்கில் போடமாட்டார்கள்" என்று அவருக்கு நான் ஆறுதல் சொன்னேன். அதற்கு உதாரணமாக பழைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினேன்.

 

பேரறிவாளன்

இந்தத் தருணத்தில் நிகழ்ந்த செங்கொடியின் தியாகம் இப்போதும் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைத் தவிர்த்திருக்க முடியுமென நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அப்போது மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் எங்களைச் சந்திக்க வந்தார்கள். அப்படிப் பார்க்க வருவதற்காக செங்கொடியும் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்போது என்னைச் சந்தித்திருந்தால், அவருக்கு நான் நம்பிக்கையைக் கொடுத்திருப்பேன். ஆனால், வெளியில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்ற முடியாது என்ற மனநிலையில் இருந்தார்கள். அந்த நிலையில் ஏதாவது செய்ய வேண்டுமென செங்கொடி உயிர்த் தியாகம் செய்துவிட்டார். அது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

நம்பிக்கை தளர்ந்த தருணங்களும் இருந்தன. நீண்ட காலம் தண்டனையை அனுபவித்திருந்தால் தண்டனையைக் குறைக்கலாம் என ஒரு சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் ஜி.எஸ். சிங்க்வி, நீதியரசர் முகோபாத்யாயா அடங்கிய அமர்வு அசாமைச் சேர்ந்த ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட நபர் ஒரு இரட்டைக் கொலையைச் செய்திருந்தார். அவருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டார்.

அவருக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவருடைய மேல் முறையீடு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. அவர் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்துவிட்டார் என்பதால், அவருடைய தூக்கு தண்டனை ரத்துசெய்யப்பட்டது. ஆனால், இதே அமர்வு தேவேந்திர புல்லர் என்பவருடைய வழக்கை விசாரித்தது. அது ஒரு வெடிகுண்டு வழக்கு. "இது போன்ற வழக்குகளில், தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வளவு கால தாமதம் இருந்தாலும், மீண்டும் பரிசிலீக்கத் தேவையில்லை. தண்டனையை நிறைவேற்றிவிடலாம்" என்று தீர்ப்பளித்தது. 2013 ஏப்ரலில் அந்தத் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பு வந்தபோதுதான் எனக்குள் ஒரு அச்சம் ஏற்பட்டது. இனி நிச்சயம் தூக்குதான் என அப்போதுதான் கருதினேன்.

அந்த நேரத்தில்தான் தியாகராஜன் எனக்குக் கடிதம் எழுதினார். அவரும் அந்த வழக்கைக் கவனித்திருந்தார். தீர்ப்பு வந்த பத்தாவது நாளில் எனக்குக் கடிதம் எழுதினார். "அன்புள்ள பேரறிவாளனுக்கு, வாழிய நலம். உங்கள் வழக்கு குறித்து எனது உதவியோ, கருத்தோ தேவைப்பட்டால் கீழ்க்கண்ட முகவரி அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை என் வழக்கறிஞர்களிடம் கொடுத்தேன். பாரிவேந்தர் புவனேஸ்வருக்குச் சென்று தியாகராஜனைச் சந்தித்தார். ஒதிஷாவின் டிஜிபியாக இருந்து தியாகராஜன் அப்போது ஓய்வுபெற்றிருந்தார். அங்கு நடந்ததை வழக்கறிஞர்கள் என்னிடம் பிறகு சொன்னார்கள். "தம்பி நான் தூங்கனும்னு நினைக்கிறேன் தம்பி" என்றாராம். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு, 'உயிர் வலி' ஆவணப் படத்திற்காக செல்வராஜும் டேவிட்டும் அவரைச் சந்தித்தனர். அப்போதும் "அறிவு இந்த 22 ஆண்டுகளில் நன்றாகத் தூங்கியிருப்பார். நான் 22 ஆண்டுகளில் சரியாகத் தூங்கவில்லை" என்றார். அப்போதுதான் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது. அதற்குப் பிறகு நீதியரசர் சதாசிவம், சத்ருகன் சௌகான் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார். அதற்கடுத்த மாதத்தில் எங்கள் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

சிறை வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்காது. எல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும். திடீரென எதுவுமே கிடைக்காது. யாராவது ஒரு சிறைவாசி எதையாவது செய்வார். அதுவரை உங்களுக்குக் கிடைத்த சலுகைகூட இல்லாமல் போய்விடும். அப்படித்தான் சிறை இருக்கும்.

சிறைக்குச் சென்ற முதல் பத்தாண்டுகளில் நான் மண்ணை மிதிக்கவே வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த பத்தாண்டுகளில் பூந்தமல்லியில் இருந்த சிறை மிகச் சிறியது. ஆறடி அகலமும் 25 அடி நீளமும் கொண்ட வளாகம்தான் சிறை. இரவு நேரங்களில் செல்லில் அடைத்துவிடுவார்கள். ஒன்றேகால் வருடம் செங்கல்பட்டு சிறையில் இருந்தோம். அதில் முழுக்க முழுக்க நான்கு சுவருக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேச முடியாது. ஆனால், தத்தம் அறைக்குள் இருந்தபடி சத்தமாகக் கத்திப் பேசிக்கொள்ளலாம். நாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டுமென அதிகாரிகள் நினைத்தார்கள். இத்தனைக்கும் அங்கிருந்த கைதிகள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள்.

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு சேலம், வேலூர் என வெவ்வேறு மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டோம். 2001ல் நன்னடத்தையின் காரணமாக, அறைக்கு வெளியில் செல்ல, சுற்ற, விளையாட, நடைபயிற்சி போன்றவற்றுக்கு மெல்லமெல்ல அனுமதித்தனர்.

சிறையில் நீங்கள் நீண்ட காலமாக இருந்தவர். அங்கு எம்மாதிரி சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன?

அடிப்படையையே மாற்ற வேண்டியிருக்கிறது. 1894ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட சிறைத் துறைச் சட்டம்தான் இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது. ஏறத்தாழ 128 வருடங்களில் விதிகள் மாறவேயில்லை. அன்றைக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்க போடப்பட்ட சட்டங்கள்தான் சிறுசிறு மாற்றங்களோடுதான் இப்போதும் அமலில் உள்ளன.

 

பேரறிவாளன்

இந்தியாவில் சிறை என்பது மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 31 ஆண்டுகள் சிறைவாசி என்ற சமூகத்திற்குள் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். புதிதாக சிறைச் சட்டங்களும் விதிகளும் வர வேண்டும். இதற்குப் பிறகு அது தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்குத் தர வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்.

"என்னை இப்படி போராட வைத்துவிட்டாயே" என்று என்றாவது உங்களுடைய அம்மா வருந்தியிருக்கிறாரா?

ஒரு நாளும் அப்படிச் சொல்லியதில்லை. எதாவது ஒரு இடத்தில் "ஐயோ, என் பையன் என்னை ஒரு சங்கடத்தில் நிறுத்திட்டானேன்னு" நினைச்சிருந்தா, நான் தோற்றிருப்பேன். "எங்க அம்மாவை இப்படி ஒரு நிலையில் நிறுத்திவிட்டோமே" என்று நான் நினைத்திருந்தால் என் அம்மாவும் தோற்றிருப்பார். சிறையில் யாரையாவது அம்மாக்கள் பார்க்க வந்தால் பத்து நிமிடம் பேசுவார்கள். ஆனால், நானும் எனது அம்மாவும் மணிக் கணக்காக உட்கார்ந்து பேசுவோம். "நீயும் உங்கம்மாவும் உட்கார்ந்து என்னதாண்டா பேசுறீங்க"ன்னு அதிகாரிகள் கேட்பார்கள்.

எல்லா விஷயத்தையும் அம்மா பேசுவார்கள். திடீரென பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தைப் பற்றிச் சொல்வார். 'அங்கே ஒரு மரம் இருந்ததல்லவா, அந்த மரத்தை வெட்டிவிட்டார்கள்' என்பார். ஒரு பேருந்தில் வரும்போது இதைப் பார்த்தேன் என்று சொல்வார். தேநீர் விலை ஏறிவிட்டது என்பார். அப்படிச் சொல்வதன் மூலம், வெளி உலகத்தை அப்படியே சித்திரமாக வரைந்து காண்பிக்க விரும்புவார். அப்படி ஒரு ஆசையும் ஆதங்கமும் அவருக்கு இருந்தது. தன் மகன் பார்க்காத வெளி உலகத்தை அவனுக்கு அப்படியே காட்ட வேண்டுமென விரும்பினார்.

நீங்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு முதல்வர்கள் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, உங்கள் மீதான அணுகுமுறை எப்படி இருந்தது?

முதலில் எங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. 2011ல் செங்கொடியின் தியாகம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. அதற்கு முன்பே மக்களின் போராட்டங்கள் இருந்தன. மனித உரிமை அமைப்புகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள், கல்விமான்கள் போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால், செங்கொடியின் மரணமே அரசின் நிலைப்பாட்டை மாற்றியது.

2013ல் தியாகராஜன் அளித்த பேட்டிதான் வெகுமக்கள் நிலைப்பாட்டை மாற்றியது. அதற்குப் பிறகு எல்லோருமே வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளுமே என் விடுதலையை எந்த மாறுபாடும் இல்லாமல் ஆதரிக்க ஆரம்பித்தார்கள்.

உங்களுடைய வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரங்களையும் மாநில அரசின் அதிகாரத்தையும் வரையறுத்துள்ளது. இம்மாதிரி ஒரு முக்கியமான தீர்ப்பு நம் வழக்கில் வெளியாகுமென எதிர்பார்த்தீர்களா?

அதை எதிர்பார்த்து நான் வழக்கைத் தொடுக்கவில்லை. பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் வழங்கப்படும் தீர்ப்பு என்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்று நினைத்துத்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். என்னுடைய வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் 2005ல் The Human Bomb என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார். அதை வெளியிட்டபோது 'ஜூனியர் விகடன்' இதழுக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், ராஜீவ் வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயமிருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதற்கு, 'ஆம் இருக்கிறது. இதற்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை செய்தது யார், எங்கு செய்தார்கள் என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை,' என்றார் ரகோத்தமன்.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

31 ஆண்டுகள் ஆகியும்கூட, இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை யார் செய்தார்கள் என்பது தெரியாது. எங்கு செய்யப்பட்டதென்றும் தெரியாது. அந்தத் தேடலுக்கான அமைப்பாகத்தான், இந்த பல்நோக்கு விசாரணை ஆணையம் இருந்தது. அப்போதுதான் நீதியரசர்கள், "பல்நோக்கு விசாரணை ஆணையம், இந்தக் கேள்விக்கு எந்தக் காலத்திலும் பதிலளிக்கப் போவதில்லை" என்றார்கள். ஆகவே 'உங்களுக்கு வேறென்ன நிவாரணம் வேண்டுமெனக்' கேட்டபோது, ஆளுநர் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்பது தாமதமாகிறது என்று சொன்னேன். ஆகவே அது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்படித்தான் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

மத்திய அரசே ஆளுநர் தரப்பில் நேரம் கேட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்க்காதது என்னவென்றால், 161ன் கீழ் அனுப்பப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியதுதான். ஆகவேதான் நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தது.

உங்களுடைய விடுதலையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். அதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

சாதாரண வெகுமக்கள் என்னோடு அன்பாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் எந்தக் கட்சிச் சார்பும் இல்லை. ஒவ்வொருவருமே என்னை தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக நினைக்கிறார்கள். இது என் அம்மாவுடைய 31 ஆண்டுகால உழைப்பு என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு தாயிடமும் என்னுடைய நியாயத்தைச் சேர்த்திருக்கிறார் அவர். அதனால்தான் அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை நினைக்கிறார்கள்.

ஒருவர் தன்னை நிரபராதி என்று கருதினால், அதற்காக போராடுவார்கள். அல்லது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினால் விடுபடலாம் என்று கருதி போராடுவார்கள். உங்களுடைய போராட்டம் எந்த வகையிலானது?

நான் நிரபராதி என்று மனப்பூர்வமாக நம்பியதால்தான் 31 ஆண்டுகாலம் என்னால் போராட முடிந்தது. நான் தோற்றுவிடக் கூடாது என்ற வைராக்கியத்தை அதுதான் தந்தது. நான் நிரபராதி என்று கூறப்பட்டு வெளியில் வந்திருக்கிறேனா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அதுதான் உண்மை. கீழ் நீதிமன்றத்தில் அப்படித்தான் வாதாடினேன். உச்ச நீதிமன்றத்திலும் அப்படித்தான் வாதாடினேன். ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் எழுதிய கருணை மனுக்களிலும் அப்படித்தான் குறிப்பிட்டேன்.

'தூக்குக் கொட்டடியிலிருந்து முறையீட்டு மடல்' என்று என்னுடைய ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் என்னுடைய கருணை மனுக்களைத்தான் நூலாக்கியிருக்கிறேன். ஒருவர் கருணை மனு அனுப்பினாலே, செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு கருணை கேட்கிறார் என்பதல்ல. இந்திரா காந்தி கொலை வழக்கில் 1989ல் இது தொடர்பாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 'இங்கு மன்னர்களின் ஆட்சி நடக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆகவே நீதிமன்றங்களில் பிழைகள் ஏற்படக்கூடும். அதை சரி செய்வதற்கான வாய்ப்பாகத்தான் இந்த கருணை மனுக்கள் இருக்கின்றன' என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, சம்பந்தப்பட்டவர்களின் குற்றத் தன்மையையும் ஆராய்ந்து பார்க்கலாம் என்று தீர்ப்பளித்தார்கள்.

அப்படி ஆராயும்போது, மாறுபட்ட முடிவையும் அறிவிக்கலாம். ஆனால், பலர் இதைப் புரிந்துகொள்வதில்லை. கருணை மனு அனுப்பினாலே குற்றத்தை ஏற்றதாக கருதுகிறார்கள். ஆனால், நான் நிரபராதி என்று கூறித்தான் கருணை மனுக்களை அனுப்பியிருக்கிறேன். அதை அவர்கள் ஏற்கிறார்களோ, ஏற்கவில்லையோ, முதல் நாளில் இருந்து இப்போதுவரை அதுதான் என் நிலைப்பாடு. அதுதான் அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான வலுவைக் கொடுத்தது.

உங்கள் வழக்கில் கிடைத்த தீர்ப்பு உங்களுடன் சேர்ந்து தண்டிக்கப்பட்ட மற்ற ஆறு பேருக்கும் உதவியாக இருக்குமா?

நிச்சயமாக. விரைவில் அவர்களும் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையோடு நானும் இருக்கிறேன். தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்குமென நம்புகிறேன்.

அடுத்ததாக என்ன செய்யவிருக்கிறீர்கள்?

இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறேன். 31 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வந்திருப்பதால் எல்லாம் திரைபோட்டு மறைத்திருப்பதைப் போல இருக்கிறது. முதலில் இந்த உலகத்தை நான் பார்க்க வேண்டும். எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. 31 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகத்தை விட்டுச் சென்றேன். அப்படியேதான் இந்த உலகம் எனக்குள் நிற்கிறது. ஒவ்வொரு காட்சியுமே எனக்குப் புதிதாகத் தெரிகிறது. இந்தக் காட்சிகளை உள்வாங்கி நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு ஆறு மாதமாவது தேவைப்படும். அதற்குப் பிறகுதான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக அக்கா, தங்கை என்னைப் பார்த்துக்கொண்டார்கள். இனிமேல் எனக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-61564091

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அம்மா நிறைய அவமானங்கள சந்திச்சாங்க” Perarivalan Exclusive Interview | BBC Tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.