Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை?

    — துலாஞ்சனன் விவேகானந்தராஜா 

spacer.png

இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. 

அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின் அடையாளப்படுத்தலின் படி இவை இரண்டும் சைவ இறைமூர்த்தமான மாதொருபாகன் (அர்த்தநாரீசுவரர்) வடிவங்கள். ஆனால், இவை இரண்டின் உடலமைப்பும் ஆண் பாதி பெண் பாதி என்று இனங்காண முடியாதவாறு  பெண்ணுடலின் அங்க இலக்கணங்களுடனேயே வடிக்கப்பட்டுள்ளன. 

இரு கைகளும் தொங்கும் நிலையிலுள்ள திருவுருவம் இவை இரண்டிலும் காலத்தால் முற்பட்டது. அதன் இரு செவிகளிலுமுள்ள காதணிகள் இரண்டும் வேறுபட்டவை என்பதால் இச்சிலையை மாதொருபாகன் வடிவம் என்று இனங்கண்டிருக்கக் கூடும். இலங்கையின் சிங்கள மற்றும் பௌத்தக் கலைப்பாணி இவ்வுருவத்தில் தென்படுகின்றது.  இச்சிலையை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பார் பேராசிரியர் சி.பத்மநாதன்.

மற்றச்சிலை அதன் கலை வேலைப்பாடுகளின் அடிப்படையில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாதி மூடிய கண்களுடன் இடது கை அஞ்சல் காட்ட வலது கையில் ஒரு உடைந்த பொருளுடன் நிற்கிறாள் இத்தேவி. வலது கையிலுள்ள பொருளை உடைந்த சிலம்பு என்று இனங்காண்கிறார் பேராசிரியர். வேறு சிலர் அது உடைந்துபோன  மலர் மொட்டு என்பர். ஆனால், அதிலுள்ள தவாளிப்புகளைக்   கொண்டு அது நிச்சயமாக மலர் மொட்டு அல்ல; ஒரு ஆபரணம் ஒன்றே, எனவே சிலம்பு என்பதே பொருத்தம் என்பார் பேராசிரியர்.

இவ்விரு சிற்பங்களும் கண்ணகியுடையவை என்று சொல்வதற்கு மிக உறுதியான சான்று,  இவ்விரு சிலைகளினதும் மார்பகங்களின் அமைப்பு. முதல் சிலையில் வலது மார்பகம் திரங்கிச் சிறுத்து உருக்குலைந்து காணப்படுகிறது. இரண்டாம் சிலையில் வலது மார்பகம் வெட்டி மூளியாக்கப்பட்ட தோற்றத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இத்தெய்வம் கண்ணகி தான். ஏனென்றால் அவள் தன் மார்பைத் திருகி எறிந்து மதுரையை எரித்தவள். கேரளத்தில் “ஒற்றைமுலைச்சி அம்மன்” என்ற பெயரில் அவளுக்குக் கோவில்கள் அமைந்திருந்தன.  

சரி. இந்தச் சிலைகள் பத்தினித் தெய்வத்தினுடையவை தான். ஒத்துக்கொள்ளலாம். ஆனால், விடயம் தெரிந்தவர்களை சற்று குழப்பத்துக்குள்ளாக்கும் ஓரம்சம் இச்சிலைகளில் உள்ளது. சிலப்பதிகாரத்தின் படி, கண்ணகி வழக்காடி தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபித்ததும் பாண்டியன் தன் தவறுணர்ந்து உயிர் துறக்கிறான். அப்போது,

“யான் அமர் காதலன் தன்னைத் தவறிழைத்த 

கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான் என்று

இடமுலை கையால் திருகி மதுரை

வலமுறை மும்முறை வாரா வலம் வந்து

மட்டார் மறுகின் மேனி முலையை வட்டித்து

விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்”

என் காதலனைத் தவறாகக் கொன்ற மன்னனின் நகர் மீது கோபமுற்றேன். என் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறிய கண்ணகி, தன் இடமார்பைக் கையால் திருகி மதுரை நகரை மூன்று முறை வலம் வந்து, தன் அழகிய மேனியில் விளங்கிய முலையைப் பிடுங்கி எறிந்தாள். மதுரை எரிந்தது.

பத்தினியைப் புகழும் “முப்பத்தைந்து கொள்முறைகள்” (பந்திஸ் கொல்முற) முதலிய சிங்கள இலக்கியங்களிலும் பத்தினி இடமார்பை அரிந்த கோலமே பிரதானமாகப் பதிவாகியுள்ளது. கண்ணகி இழந்தது தன் இடமார்பை என்று சிலப்பதிகாரமும் சிங்கள நூல்களும் சொல்ல, இந்தச் சிலைகளில் ஏன் வலது மார்பு சிதைந்தவாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது?

தென்னக மரபில், சிற்பங்களும் திருவுருவங்களும் மரபு மீறி அமைக்கப்படுவது வழமை தான் என்பதைச் சுட்டிக்காட்டி அமைதி காண்பார் பேராசிரியர் பத்மநாதன். சிவாகமங்களும் சிற்பவிதி நூல்களும் வரையறுக்கப்பட்ட பின்னர் தான் இறைதிருவுருவங்களை வார்ப்பதில் விதிமுறைகள் இறுக்கமாகப் பேணப்படலாயின. உதாரணமாக, மாதொருபாகன் வடிவத்தில் கூட, ஆண் வலப்பாதி, பெண் இடப்பாதி என்று காட்டப்படுவது தான் மரபு. ஆனால், ஆண் இடப்புறமும் பெண் வலப்புறமும் காட்டப்பட்டுள்ள மாதொருபாகன் சிற்பங்களும் உண்டு. மரபை மீறி இடது காலுக்குப் பதில் வலதுகாலைத் தூக்கி ஆடும் நடராசர் சிற்பங்களும் உண்டு. அவ்வாறே இந்தப் பத்தினிப் படிமங்களை வார்த்த சிற்பியும் தன் கற்பனை வளத்தைப் பாவித்து வலமார்பு இழந்தவளாகக் கண்ணகியைச் சித்தரித்திருக்கலாம் என்று முடிக்க முடியும். 

விந்தையாக இச்சிற்பங்களுடன் இன்னொரு பண்பாட்டு முடிச்சை போட்டுப்பார்க்க முடிகிறது. சிலம்புக்கும் சிங்கள நம்பிக்கைக்கும் மாறாக, கண்ணகியை வலமார்பு அரிந்த தோற்றத்தில் பாடிப் பரவுகின்றன கிழக்கிலங்கைக் கண்ணகி இலக்கியங்கள். அங்கு கண்ணகிக்காக நிகழும் குளிர்த்திச்சடங்கில்

“மாறான பாண்டியன் மாளவென்று வலமான கொங்கை அரிந்தாள் வந்தாள்” 

என்று பாடுகிறது அம்மன் குளிர்த்திக்காவியம். அதே காவியம் வேறோரிடத்தில்

“வாளையெடுத்து வலமுலையைத் தான் அரிந்து 

தோளாடையாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்.”

என்றும் கண்ணகியைப் போற்றுகிறது.

சிலப்பதிகாரம் சித்தரிப்பது போல், கண்ணகி தன் மார்பைத் தானே திருகிப் பிய்த்து எறியவில்லை. வாளால் அறுத்தெறிந்தாள் என்கிறது இக்காவியம். தன் உறுப்பை வாளால் வெட்டுவது கையால் அகற்றுவதை விட இயல்வது தான். முலைவரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வரி வசூலிப்பாளரிடம் தன் மார்பகங்களை வாழையிலையில் வெட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் கேரளத்து நங்கேலியின் கதையை இங்கு ஒப்பிடலாம்.

மீண்டும் அனுராதபுரச் சிற்பங்களுக்கு வருவோம். அதில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாவது சிலை, முதலாவது சிலை போலன்றி, வெட்டி அகற்றப்பட்ட வலது மார்பகத்தின் தெளிவான அடையாளத்துடனேயே செதுக்கப்பட்டிருக்கிறது. அது குளிர்த்திக் காவியம் கூறும் “வாளையெடுத்து வலமுலையைத் தானரிந்த” கதையை அறிந்திருந்த சிற்பியால் தான் வடிக்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது அந்தச் சிலையை வடித்த சிற்பி அறிந்திருந்த பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியிலேயே குளிர்த்திக் காவியம் பாடப்பட்டிருக்கவேண்டும்.  .

அந்த மரபின் தொன்மையான சான்றுகளில் ஒன்று இன்று அருங்காட்சியகக் காட்சிப்பொருளாக முடங்கிக் கிடக்கிறது. ஆனால் அதே பண்பாட்டுத்தொடர்ச்சியில் தோன்றிய இலக்கியங்கள் மன்றாட, எண்ணூறு ஆண்டுகள் கடந்தும் இங்கே வலமார்பைத் துணித்துத் துணித்துக் குளிர்ந்து கொண்டிருக்கிறாள் கண்ணகி. தன் தாய்மையைத் திருகி எரிந்தபடி, தன் மடியில் பிறந்த கோடி கோடி உயிர்களை ஊழிகள் தோறும் எரித்தபடி இந்த இயற்கை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் குளிர்ந்து கனிந்து நிற்கின்றது? அதனால் தானே கூர்ப்பென்ற ஒன்று சாத்தியமாகிறது?

அன்னையால் அடிக்கப்படாத குழந்தை இருக்கிறதா இந்த உலகில்? மீதிக் குட்டிகளுக்குப் பாலூட்டுவதற்காகவே தான் ஈன்ற குட்டியொன்றை அன்னை நாய் உண்கிறது. அன்னையும் அழல் பொங்கும் வலமார்பையே மதுரைக்கு ஈந்தாள்.

வலப்புறம் அத்தனை கொதிக்கும் போதும் இன்னும் கொஞ்சம் கனிவு தன் குழந்தைகளுக்காய்  எஞ்சியிருப்பதைச் சொல்லிப் பால் சுரக்கிறது திருகி எறியப்படாத இடநெஞ்சு. ஆம், இடப்புறம் அன்னைக்குரிய பாகமல்லவா!

கொடூரமும் கனிவும் நிறைந்த தாய்மையின் இந்த இருமையைச் சொல்லும் இத்தகைய மகத்தான சிற்பம் நானறிந்து உலகில் வேறெந்தப் பண்பாட்டிலும் தோன்றவில்லை. இந்தச் சிற்பம் தோன்றிய ஒரு மரபை, அந்த மரபு வாழ்த்திய தன்னிகரில்லாக் குலமகளை மறந்து வெகுதூரம் வந்து நிற்கிறோம்.

இதோ! அரைசியல் பிழைத்த இன்னொரு நாடு இன்று  எரிந்து கொண்டிருக்கின்றது. “அறம் கூற்றானது, அறம் கூற்றானது” என்று சிலம்பு கிலுகிலுக்கும் ஓசை கேட்கிறது. எங்கோ அருகில் தான் முலையரிந்து நின்றுகொண்டிருக்கிறாள். அவள் அரிந்தமுலை விரைவில் குளிரட்டும். மறுமுலையில் பிறக்கட்டும் புதியதோர் உலகுக்கான அறம்.

இலங்கையில் கண்ணகி அரிந்தது எந்த முலை?

தாயே குளிர்ந்தருள்வாய்!

படம்: இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடான “சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்” நூலின் (2003) அட்டைப்படம்.

https://arangamnews.com/?p=7779

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.