Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரியல் கோட்பாடுகளும் தந்திரோபாய நகர்வுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரியல் கோட்பாடுகளும் தந்திரோபாய நகர்வுகளும்

-புரட்சி (தாயகம்)-

'எதிரிகள் முன்னேறும் போது, நாங்கள் பின்வாங்குவோம்.

'எதிரிகள் ஓய்வெடுக்கும்போது நாம் தொல்லை கொடுப்போம்.

'எதிரிகள் களைப்படையும்போது, நாம் தாக்குவோம்.

'எதிரிகள் பின்வாங்கும்போது நாம் முன்னேறுவோம்.' - மாவோ சேதுங்

பெரிய மற்றும் வலுவான படையைக் கொண்டிருக்கும் ஒருதரப்பு பலம் குறைந்த சிறிய படையைக் கொண்டிருக்கும் தரப்பைப் பொதுவாக வெற்றி கொள்ளும் என்ற மரபுவழிச் சிந்தனை நவீன போரியல் கோட்பாட்டின்படி தவறு என்பதை அமெரிக்க இராணுவ ஆய்வாளரும் முன்னாள் விமானப்படை விமானியுமான கேணல் ஜோன் ஆர்.போயிட் அவர்கள் கடந்த காலப் போரியல் வரலாறுகளை விரிவாக ஆராய்ந்ததன் அடிப்படையில் நிறுவியிருக்கின்றார்.

அதாவது விரைவானதும் சுறுசுறுப்பு மிக்கதாகவும் விளங்குகின்ற படையானது எப்போதும் ஒப்பீட்டு ரீதியில் கவலையீனமும் மந்தமுமாக இருக்கின்ற எதிரிகளை வெற்றி;கொள்வார்கள் என்பதை மேற்படி ஆய்வின் முடிவாக தெரிவித்திருக்கின்றார்.

இற்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வாழ்ந்த போரியல் மேதையான சன் சூ விற்கு நிகராக ஜோன் போயிட் கணிக்கப்படுகின்றார். அமெரிக்கா, வியட்நாம் போரில் தோல்வியடைந்த பின் போயிட் தலைமையி;ல் ஒரு படைத்துறை வல்லுனர்கள் குழு இப்பாரிய அவமானத்தை ஏற்படுத்திய வியட்நாம் தோல்வி தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்டார்கள்.

பாரிய மரபுவழி இராணுவத்தினைக் கொண்டதும் வான், கடல் மற்றும் தரை ஆகியனவற்றில் எப்போதும் மேலாண்மையைக் கொண்டிருந்ததுமான அமெரிக்க வல்லரசு, வியட்நாமில் இடம்பெற்ற வியட்கொங் போராளிகளுக்கெதிரான அனைத்துச் சமர்களிலும் வெற்றிகொண்ட போதிலும் எவ்வாறு வியட்நாமியப் போரில் படுதோல்வி அடைந்தது என்பதைப் பல அமெரிக்க நட்சத்திர ஜெனரல்களாலும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

கி.மு 500 ஆண்டுகளில் இருந்து 1970-களின் நடுப்பகுதிவரை உலகில் இடம்பெற்ற பல்வேறு போர்களையும் விடுதலைப் போராட்டங்களையும் நுணுக்கமாகவும் விரிவாகவும் இக்குழுவினர் ஆராய்ந்ததன் அடிப்படையில் பின்வரும் முடிவு எட்டப்பட்டது.

அதாவது,

'ஒரு போரில் வெற்றியை ஈட்டுவதற்கு, இலக்கை நோக்கிய கவனம், வீரம், சுறுசுறுப்பு மற்றும் விரைவு என்பன படைகளின் எண்ணிக்கையை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.'

சன் சூவின் போரியற்கலை, கிரேக்க மாவீரன் மகா அலெக்சாண்டர், மொங்கோலியப் பேரரசன் ஹெங்கிஸ் கான், யப்பானிய சமுராய் தத்துவஞானிகள், ஜேர்மனியரின் மின்னல் வேகத் தாக்குதலை அறிமுகப்படுத்திய கெயின்ஸ் குடாரியன், இஸ்ரேலிய பாலைவன போரியல் தந்திரோபாயம் மற்றும் வியட்நாமிய இராணுவ தந்திரோபாயம் போன்ற எல்லாமே வீரம், சுறுசுறுப்பு மற்றும் விரைவு என்ற சூழ்ச்சிகர நகர்வுப் போரியல் தந்திரோபாயத்தினைப் (Maneuver Warfare) பயன்படுத்தி;யதன் மூலம், தம்மைவிடப் பெரிய படையணிகளைப் போர்களில் அல்லது சமர்களில் வெல்ல முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ரஸ்யப் படைகள் வெளியேற்றப்பட்டமை, வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டமை மற்றும் தமிழீழத்தில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்டமை போன்ற எல்லா நிகழ்வுகளுமே மேற்கூறிய கோட்பாட்டின் சிறப்பையும் செயற் திறனையும் எடுத்துக்காட்டுகின்றது.

ஏமாற்றும் தந்திரோபாயம், அதிர்ச்சி, திகைப்பு போன்றனவற்றை எதிரி மீது ஏற்படுத்தி அதனால் ஏற்படும் வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தவல்ல ஒரு தரப்பே சமர்க்களங்களில் வெற்றிக்கனியினைத் தட்டிச்செல்லும்.

இவ்வாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி எதிரிக்கு எதிரான போரில் வெற்றியீட்டுவதற்கு போயிட் பின்வரும் நான்கு விடயங்கள் முக்கியமானவை என்று கூறுகின்றார். இது போயிட் வட்டம் அல்லது ஊடா வட்டம் (OODA- Observe-Orient-Decide and Act) என்று கூறப்படுகின்றது.

அவதானிப்பு: எதிரியின் நகர்வு பற்றியும் அவனது நடவடிக்கைகள் பற்றியும் தகவல்களை சேகரித்தல். அதாவது எதிரியின் சூழலை அறிவதற்கு வேவு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

சூழலுக்கு இயல்பாக்கமடைதல்: தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நிலவுகின்ற சூழலுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். புதிய புதிய சூழல்கள் உருவாகும்போது அதற்கேற்ற விதத்தில் தந்திரோபாயங்களை மாற்றியமைத்தல்.

தீர்மானித்தல்: சூழல்களின் தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப சரியான தீர்மானங்களை மேற்கொள்ளல்.

நடவடிக்கை: தந்திரோபாய ரீதியில் இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான படையணிகள் மற்றும் வழங்கல்களை படிமுறை ரீதியல் ஒழுங்குபடுத்தல்.

போயிட் இத்தந்திரோபாயத்தினைப் பற்றி மேலும் கூறுகையில் அவதானிப்பு- சூழலுக்கு இயல்பாக்கமடைதல்- தீர்மானித்தல்- நடவடிக்கை என்ற இந்த ஊடா வட்டத்தினை ஒருதரப்பு மிக வேகமாகவும் துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் செயற்படுத்துகின்றதன் மூலமாக எதிரியால் நோக்கங்களை கணிக்கமுடியாதபடி திகைக்க வைக்கமுடியும்.

அதாவது மிக விரைவாக ஊடா வட்டத்தினை செயற்படுத்துவதன் மூலம் எதிரிக்கு அதிர்;ச்சி, திகைப்பு மற்றும் ஏமாற்றம் என்பனவற்றை பரிசாக அளித்து இலகுவில் அவனை தோற்கடிக்கமுடியும். அதாவது இதன் மூலம் எதிரியின் உளவுரன், ஒருமைப்பாடு மற்றும் கூட்டுறவு என்பன சிதறடிக்கப்பட்டு போரில் எதிர்த்து நிற்பதற்கான ஆற்றலை எதிரி இழந்துவிடுவான்.

சன் சூ அவர்களும் இதே போன்ற கருத்தை தனது போரியல் கலை என்ற நூலில் விரிவாக எடுத்து விளக்கியிருக்கின்றார். (சன் சூவின் போர்கலைகளை விரிவாக அறிய விரும்புவர்கள் போர்கலை நூலினை படியுங்கள்)

அதாவது எதிரியினை போர்க்களங்களிலே பரவச்செய்வதன் மூலம் எதிரியினை பலவீனப்படுத்தவேண்டும். பின்னர் எமக்கு சாதகமான சூழலில், சாதகமான தருணத்தில், சாதகமான இடத்தில் எமது பெருமளவிலான படைபலத்தை இரகசியமான முறையில் ஒன்று குவித்து எதிரியின் பலவீனமான பகுதியைத் தாக்கியழிக்கலாம்.

எதிரி எங்கு தனது தளத்தை பாதுகாக்க முடியாது திணறுவானவோ அங்குதான் தாக்குதல் இடம்பெறவேண்டும். அத்துடன்; தாக்குதல் இடம்பெறும் பிரதேசமானது எதிரி பெரிதும் எதிர்பார்க்காத இடமாகவும் இருக்கவேண்டும்.

இப்போது பவியஸ் மூலோபாயத்தினைப் பற்றி சிறிது பார்ப்போம். ரோம பேரரசின் ஜெனரலாக இருந்த குவின்ரஸ் பவியஸ் மக்கிமஸ் விரகோஸ்சஸ் என்பவர் இரண்டாவது பியுனிக் போரின் போது பயன்படுத்திய மூலோபாயமே இதுவாகும்.

திறந்த வெளிகளிலே எதிரியின் நேரடியான வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அதாவது எதிரிக்கு சாதகமான சூழலில் அதிக படைபலத்துடன் முன்னேறும் எதிரியை தடுத்து நிறுத்த முயலக்கூடாது. எதிரி களைப்படையும் வரை அவனை தொடர்ச்சியாக முன்னேறுவதற்கு அனுமதிப்பதன் மூலமும் அவன் மீது தொடர்ச்சியாக சிறிய தாக்குதல்களை எமக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் போதெல்லாம் மேற்கொள்வதன் மூலமும் எதிரியினைப் படிப்படியாக பலவீனப்படுத்தி இறுதியில் வெற்றி கொள்வதே பவியன் மூலோபாயம் என்றழைக்கப்படுகின்றது.

பி;ரெஞ்சு மாவீரன் நெப்போலியனின் ரஸ்யா மீதான படையெடுப்பு, இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களின் ரஸ்யா மீதான பார்பரோசா நடவடிக்கை ஆகிய இரண்டு ஆக்கிரமிப்பு போர்களையும் ரஸ்யர்கள் பவியன் மூலோபாயத்தினைப் பயன்படுத்தியே முறியடித்தார்கள்.

அதாவது சமர்களிலே தற்காலிகமாக பின்வாங்கும் தரப்பினர் தமக்கு சாதகமான சூழல் உருவாகும் போது வலிந்த தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் எதிரியைப் படிப்படியாக பலவீனப்படுத்தி இறுதியில் போரினை வெற்றிகொள்வதே இந்த தந்திரோபாயத்தின் சிறப்பம்சம் ஆகும்.

இப்போது ஒரு போரை நடத்தும்போது அதனது பிரதானமான மூலோபாயம் (இலக்கு) மற்றும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான சிறந்த தந்திரோபாயங்கள் (வழிமுறைகள்) போன்றனவற்றைப் பற்றி கவலைப்படாது சில சமர்களிலே வெற்றிகளைப் பெற முயற்சிப்பதும் பிரதேசங்களைக் கைப்பற்றுவதை வெற்றியாக நினைத்து மகிழும் குளிர் அறைகளின் சாய்வு நாற்காலிகளி;ல் குந்தியிருக்கும் இராணுவ தளபதிகள் மற்றும் படைத்துறை அதிகாரிகள் தமது படையினரை எவ்வாறான அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்றார்கள் என்பதற்கு வரலாற்றின் இந்த இரண்டு உதாரணங்களும் போதுமானது என நினைக்கின்றேன்.

பிரெஞ்சு தேசத்து மாவீரனான நெப்போலியன் (1769-1821) மரபுவழி படைத்துறை தொடர்பான தனது நுண்ணிய அறிவு காரணமாகவும் ஆற்றல் காரணமாகவும் தொடர் வெற்றிகளை பிரெஞ்சு தேசத்திற்கு பெற்றுக்கொடுத்தான். நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படைகள், வேகம் மற்றும் சிறிய படையணிகளாப் பிரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் போன்றனவே நெப்போலியனின் ஆரம்பப் போர் வெற்றிகளுக்கு காரணமாகும். போர்த்துக்கலில் இருந்து இத்தாலி, மத்திய கிழக்கு வரைக்கும் மற்றும் ஜேர்மனி, போலந்து வரைக்கும் தனது அரசை விஸ்தரித்தான்.

சார் அலெக்சாண்டர் 1 ஆம் அரசனுடனான சமாதான உடன்படிக்கைகள் முறிவடைந்ததால் நெப்போலியன் வரலாறு காணாத பெரும் படைத்திரட்டல் ஒன்றை மேற்கொண்டு 5 இலட்சம் படைகளுடன் 1812 ஆம் ஆண்டு ரஸ்யா மீது படையெடுத்தான். ரஸ்யத் துருப்புக்கள் மிகையில் பொக்டனோவிச் பார்கிலே தலைமையில் புத்திசாதுரியத்துடன் நேரடி மோதலில் எவற்றிலும் பிரெஞ்சு துருப்புக்களுடன், ஈடுபடுவதைத் தவிர்த்தன.

ஆனால் நெப்போலியனோ அவ்வாறான ஒரு நேரடி மோதல் இடம்பெறவேண்டும் என விரும்பிய போதிலும் மோதலை தவிர்த்தபடி ரஸ்யாவின் மிகவும் ஆழமான உட்பிரதேசத்திற்கு ரஸ்யப் படைகள் தொடர்ச்சியாகத் தந்திரோபாயப் பின்வாங்கலை மேற்கொண்டன. இப்பின்வாங்கலின் போது ~பூமியை எரித்தல்| என்ற தந்திரோபாயத்தை பயன்படுத்திய ரஸ்யர்கள் தானியக்களஞ்சியங்கள், கோதுமை வயல்கள் போன்றனவற்றை எரித்து அழித்ததோடு கால்நடைகளையும் கொன்று நெப்போலியனின் படைகளுக்கு உணவு கிடைக்காதவாறு செய்துவிட்டனர். ஒருபுறமும்; பட்டினியும் மறுபுறம் ரஸ்யாவின் மோசமான பனிக்குளிரும் சேர்ந்து பிரெஞ்சுப் படையினரை வாட்டி வதைத்தன. அத்துடன் போதிய விநியோகங்கள் இல்லாமை மற்றும் நோய்கள் காரணமாகப்; பிரெஞ்சுப் படைகள் சீரழியத்தொடங்கின. இறுதியில் நெப்போலியன், 4 இலட்சம் வரையிலான படையினரை ரஸ்யாவில் இழந்துவிட்டு தோல்வியுடன் நாடு திரும்ப வேண்டியேற்பட்டது.

இதே போன்று 1941 ஆம் ஆண்டு ஜேர்மனிய நாசிப்படைகள் சோவியத் யூனியனை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் பார்பரோசா நடவடிக்கையினை ஆரம்பித்தார்கள். ஜேர்மனியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னல் வேகத் தாக்குதல் முறை மூலம்; ரஸ்ய முன்னணி நிலைகள் உடைக்கப்பட்டு ஜேர்மனிய பான்சர் டாங்கிகளும் விசேட படையினரும் ரஸ்ய படையினரை சுற்றிவளைத்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் மூலம் ரஸ்யப் படையினர் ரஸ்யாவின் பரந்த தேசத்திற்குள் தப்பிஓடி மறைவதை தடுக்கவேண்டும் என்பதே ஜேர்மானியர்களின் நோக்கமாக இருந்தது. எவ்வாறெனினும் ஆரம்பக் கட்டங்களில் இந்நடவடிக்கை வெற்றியை நோக்கி செல்வதாக தோற்றமளித்த போதிலும் போரானது நீண்ட காலத்திற்கு நீடித்துச் செல்லத்தொடங்கியதும் அதன் பலன்களை ஜேர்மானியர்கள் அனுபவிக்கத் தொடங்கினார்கள். போதிய விநியோகங்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாது ஜேர்மானியர்கள் திண்டாடத் தொடங்கிய வேளை ரஸ்யாவின் கொடுமையான பனிக்குளிர்; காலம் மேலும் பல நெருக்கடிகளை ஜேர்மானியர்களுக்கு ஏற்படுத்தியது.

இவ்வாறு நிலமைகள் ஜேர்மனியர்களுக்கு எதிராக சிக்கலடையத் தொடங்கிய வேளை, ரஸ்யர்களோ முன்னணி நிலைகளில் இருந்து நீண்ட தூரம் பின்னால் தமது படையணிகளை மீள ஒழுங்குபடுத்தி சண்டை செய்வதற்கு தம்மை தயார்படுத்திவிட்டார்கள். இதன் பின் மொஸ்கோ நகரை கைப்பற்றுவதற்கான சமரிலே ரஸ்யர்கள் ஜேர்மனியர்களை முதல் தடவையாக தோற்கடிக்கச் செய்தார்கள்.

எனவே ஆரம்பத்தில்; ரஸ்யா மீதான ஆக்கிரமிப்பு போரில் பெருமளவிலான ரஸ்ய பிரதேசங்களை கைப்பற்றுவதில் ஜேர்மனியர்கள் வெற்றி பெற்றாலும் இறுதியில் ரஸ்யாவின் தந்திரோபாய பின்வாங்கல் மற்றும் ரஸ்யர்கள் விரைவாக தமது படையணிகளை மீள ஒழுங்குபடுத்தி சண்டைக்கு தயாராகினமை ஆகிய செயற்பாடுகளினால் ஜேர்மனியர்கள் இந்தப் போரிலே படுதோல்வியடைந்தார்கள்.

இந்த வரலாற்றுப்பாடங்கள் தெளிவாக சொல்லும் செய்திகளை சிங்கள தேசமும் அதன் பேரினவாதத் தலைவர்களும் புரிந்து கொள்ள முயற்சிப்பார்களா? பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சியில் இருந்து ராஜபக்ச குடும்ப ஆட்சிக்குள் சிங்கள மக்கள் சட்டியில் இருந்து தப்பி அடுப்பிற்குள் விழுந்த கதையாக அகப்பட்டுகொண்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

இறுதியாக,

எப்பொழுது சண்டை செய்யவேண்டும், எப்பொழுது சண்டை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களே வெற்றி பெறுவார்கள்.

எப்பொழுது அதிக எண்ணிக்கையிலான படையினரை அல்லது சிறிய எண்ணிக்கையிலான படையினரைப் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்களே வெற்றி பெறுவார்கள்.

எப்பொழுதும் உயர் அதிகாரிகளும் சாதாரண படைவீரர்களும் ஒரே விதமான அர்ப்பணிப்பும் உணர்வோடும் இருப்பவர்களே வெற்றி; பெறுவார்கள்.

எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெறும் என எதிர்பார்த்து முற்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களே வெற்றி பெறுவார்கள்.

சிறந்த தலைவனின் வழிகாட்டலில் படைத் தளபதிகளும் படைவீரர்களும் சொல்வதை முடிக்கும் உத்வேகத்துடன் செயற்படும் தரப்பு எதுவோ அதுவே போரில் வெற்றிபெற்றதாகும்.

நன்றி - தமிழ்நாதம்

நல்லதொரு ஆய்வுக் கட்டுரை.

தொப்பிக்கலவை எந்தவித போரியல் நோக்கங்களுமன்றி அவசரமாகப் பிடித்துவிட்ட சிங்கள அரசு இன்று புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காட்டைப் பாதுகாக்க படைகளைப் பரவிவிட்டு, வடக்கில் போர்களம் திறக்கவோ தாக்குதலை முறியடிக்கவோ திராணியற்று நிற்கிறது.

அருமையான ஆய்வு இந்த ஆய்வை வாசித்து களைத்தவரிகள் இதனை பாருங்கள்

Edited by இணையவன்

புலிகள் ஏன்கிழக்கை விட்டுபின்வாங்கினார்ககள் தாக்குதல் செய்யாமல் இன்னும் ஏன்மௌனமாக இருக்கிறார்கள் என மண்டையைபோட்டு உடைத்துக்கொள்ளும் அன்பர்களே நண்பர்களே இந்தக்கட்டுரையை முழுமையாக வாசித்து தெளிவடையுங்கள்

இதை வாசித்தும் உங்களால் தெளிவடையமுடியவில்லையா?

எங்காவதுபோய் உங்கள் தலையை முட்டிக்கொள்ளுங்கள்

தோல்வியின் தொடக்கமே அவசரப்படுதல் என்ற உண்மையைத்தான் இந்தக் கட்டுரை எனக்குத் தெரிவிக்கின்றது. ஆய்வும் அதன் முடிவும் சரித்திரங்களில் இருந்து பெறப்பட்டவை. ஜேர்மனியரின் வேகத் தாக்குதலும் வியட்நாமியரின் தந்திரத் தாக்குதலும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு புதிய தாக்குதல் உத்தியை இந்த போரியல் உலகம் பார்க்கப் போகின்றது. எப்படித் தோற்கடிக்கப்பட்டது என்ற ஆய்வினை விடுத்து என்ன நடந்தது, என்ற ஆய்வை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படப் போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.