Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

75 ஆவது சுதந்திர தினம்: இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? போராட்டங்கள் வாயிலாக மாநிலத்தின் வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆவது சுதந்திர தினம்: இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? போராட்டங்கள் வாயிலாக மாநிலத்தின் வரலாறு

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 ஆகஸ்ட் 2022, 08:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜல்லிக்கட்டு போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல போராட்டங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பாகவே துவங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், விடுதலைக்குப் பின் நடந்த குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், 1965ல் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்றவை தமிழ்நாட்டு வரலாற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவை.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சில போராட்டங்களையும் அவற்றின் பின்னணிகளையும் இங்கே பார்க்கலாம்.

1.இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு தருணங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் 1938லும் 1965லும் நடந்த போராட்டங்கள் தமிழக அரசியல் போக்குகளையே மாற்றியமைத்தன.

 

1937ல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. 1937 ஜூலை 14ஆம் தேதி சி. ராஜகோபாலாச்சாரி மாகாணப் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, இந்தி குறித்த தனது கருத்தை வெளியிட்டார் ராஜாஜி. சென்னையில் உள்ள தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபையில் பேசிய அவர், வட இந்தியர்களை தென்னிந்தியர்கள் தற்போதைவிட நன்றாகப் புரிந்துகொள்ள அரசியலிலும் தொழிலிலும் இந்தியின் இடம் மிக முக்கியமானது என்றும் பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப்பாடமாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் அவர்.

 

ராஜகோபாலாச்சாரியார்

பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN

 

படக்குறிப்பு,

ராஜகோபாலாச்சாரியார்

அவரது பேச்சுக்கு பல தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், 1938-39ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் என்ற முறையில் அவையில் தாக்கல் செய்து பேசிய ராஜாஜி, 125 பள்ளிக்கூடங்களில் ஹிந்துஸ்தானியைக் கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக ஹிந்துஸ்தானி படிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியான நீதிக் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ. முத்தைய்யா செட்டியார், இந்தியைக் கண்டிப்பாக படிக்கச் செய்யக்கூடாது, விரும்பினால் படிக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டுமெனக் கூறினார். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும், அரசு தனது நிலையில் உறுதியாக இருந்தது. இந்தி ஆசிரியர்களுக்கென 20,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் அரசாணை 1938 ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 125 பள்ளிகளில் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டும் 60 பள்ளிகள் அமைந்திருந்தன. இதையடுத்து இந்திக்கான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. மதுரையில் மே மாதம் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில், இந்தி கற்பிக்கப்படும் 125 பள்ளிக்கூடங்களையும் புறக்கணிக்கும்படி கோரப்பட்டது. மே 1ஆம் தேதியன்று ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் ராஜாஜியின் வீடு முன்பாக உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தி எதிர்ப்புக்காக நடந்த முதல் உண்ணாவிரதப் போராட்டமாக இது அமைந்தது. ஜூன் ஒன்றாம் தேதி ஈழத்து சிவானந்த அடிகள் தலைமையில் ஒரு ஊர்வலம் பிரதமர் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த, "திருத்தப்பட்ட குற்றச்சட்டத்தின் ஏழாம் பிரிவு", இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் கைதுசெய்யப்படுவோருக்கு ஜாமீன் கிடைக்காது. இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதை மகாத்மா காந்தியே கண்டித்தார். இதற்குப் பிறகு, ராஜாஜி கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. செருப்புகள் வீசப்பட்டன.

1938 நவம்பரில் நடந்த தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசிய பேச்சுக்காக பெரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆளுநர் தலையீட்டில் அது சாதாரண தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்ட நடராஜன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 1939 ஜனவரி 15ஆம் தேதி உயிரிழந்தார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் பலி இவருடையதுதான். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மார்ச் 12ஆம் தேதி சிறையிலேயே உயிரிழந்தார் தாளமுத்து.

போராட்டங்கள் தொடர்ந்து நடந்தபோதும் அரசு அசரவில்லை. 1939 ஏப்ரலில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மேலும் 100 பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கவே, மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் ராஜினாமா செய்தன. கட்டாய இந்திப் பாடத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வந்தாலும், ஆங்கிலேய அரசு அதற்குச் செவிமெடுக்கவில்லை. ஆனால், மேலும் 100 பள்ளிக்கூடங்களில் இந்தியை அறிமுகம் செய்யும் திட்டம் ரத்துசெய்யப்பட்டது.

1939 டிசம்பர் 31ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கூடிய இந்தி எதிர்ப்புக் குழுவினர், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு என புதிய முன்னணியை உருவாக்கினர். தலைவராகப் பெரியாரும் செயலராக சி.என். அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டனர். இந்திப் பாடத்தை நீக்கவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் மீண்டும் துவங்குமென 1949 பிப்ரவரி 19ஆம் தேதி பெரியார் அறிவித்தார். இந்த நிலையில், இந்தி கட்டாயப்பாடம் என்பது நீக்கப்படுவதாக பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கில அரசு அறிவித்தது. இப்படியாக இரண்டாடு காலம் நடந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த ஒட்டுமொத்தப் போராட்டத்திலும் சேர்த்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 1271 பேர் கைதுசெய்யப்பட்டனர். நடராஜன், தாளமுத்து என இரண்டு பேர் உயிரிழந்தனர்.

2. 1948 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

 

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம்,DMK

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் அரசு, மறுபடியும் இந்தியை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்த முயன்றது. 1948 ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியானது. இந்த முறையும் இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. ஆனால், மெட்ராஸ் மாகாணத்தின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளில் கட்டாயப்பாடமாகவும் தமிழ் பேசும் பகுதிகளில் விருப்பப்பாடமாகவும் வைக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தமிழ் பேசும் பகுதிகளிலும் இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்குமென அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் சர்வாதிகாரியாக சி.என். அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இதையடுத்து 1948 ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று போராட்டம் துவங்கியது. சென்னை முத்தியால்பேட்டை மேல் நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார் அண்ணா. ஆகஸ்ட் 23ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஜெனரலான ராஜாஜி சென்னைக்கு வரவிருந்த நிலையில், அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது குறித்து விவாதிக்க அதற்கு முந்தைய நாள் கூடியிருந்த பெரியார், அண்ணா, கே.கே. நீலமேகம் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தபோதும் ராஜாஜி சென்னை வந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் இந்தி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடந்தன. பல இடங்களில் காங்கிரஸ்காரர்கள், இந்தி எதிர்ப்பாளர்கள் மீது தாக்குல் நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடைய பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். 1949 மார்ச்சில் முதல்வர் பதவியிலிருந்து ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ராஜினாமா செய்தார். இதற்குப் பின் வந்த அமைச்சரவை, இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியைக் கைவிட்டது.

இதற்குப் பிறகு, 1950ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், மீண்டும் பெரும் போராட்டம் நடக்குமென்ற அறிவிப்பு வெளியானதையடுத்து கட்டாய இந்தி அறிவிப்பை ஜூலை 27ஆம்தேதி திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு.

3. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம்

 

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டக் காட்சி

பட மூலாதாரம்,TWITTER

 

படக்குறிப்பு,

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டக் காட்சி

இந்திய அரசியல்அமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவில் தேசிய மொழி என்பது கிடையாது. 1965ஆம் ஆண்டுவரை இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக இருக்கும். 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாக ஆங்கிலம் விலக்கிக்கொள்ளப்பட்டு, இந்தியே மத்திய அரசின் ஒரே அலுவல் மொழியாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிர்ப்புத் தொடர்ந்த நிலையில், 1959ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்குமென வாக்குறுதியளித்தார். இந்திய அரசின் மொழிக் கொள்கையில் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த அலுவல் மொழிச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதில் "ஆங்கிலமும் தொடரலாம்" என்று இருப்பதை "ஆங்கிலமும் தொடரும்" என்று மாற்ற வேண்டுமென அண்ணா கோரினார். அந்த மாற்றம் ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தி அலுவல் மொழியாக மாறும் 1965 ஜனவரி 26 நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் பதற்றம் அதிகரித்தது. தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் இந்தி ஆதரவாளராக இருந்த ராஜாஜி, இந்த முறை இந்தியின் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டார்.

ஜனவரி 25ஆம் நாள் துக்க தினமாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த ஊர்வலத்தில் துவங்கிய கலவரம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அடுத்த இரண்டு வாரங்கள் மாநிலம் முழுவதும் கலவரங்கள் தொடர்ந்து நடந்தன. ரயில் பெட்டிகள், இந்தி பெயர்ப் பலகைகள் கொழுத்தப்பட்டன. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஐந்து பேர் தீக்குளித்தும் மூன்று பேர் விஷமருந்தியும் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டு வார கால கலவரங்களில் சுமார் 70 பேர் இறந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் கூறின. ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகம் என்றே கருதப்பட்டது.

மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியன், அழகேசன் ஆகியோர் பதவிவிலகினர். பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரை நிகழ்த்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் உறுதிமொழி பின்பற்றப்படுமென வாக்குறுதியளித்தார். எல்லா இடங்களிலும் இந்தியுடன் ஆங்கிலமும் தொடருமென வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதியை அடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றித் தள்ளி வைப்பதாக பிப்ரவரி 12ல் அறிவித்தனர்.

முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைப் போல அல்லாமல், இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இல்லாமல் காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டமாக மாறியது. காங்கிரஸ்காரர்கள் அனைவருமே இந்தியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்டனர். 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவரான பெ. சீனிவாசன், முன்னாள் முதல்வர் காமராஜரையே தோற்கடித்தார். தமிழ்நாட்டில் காங்கிரசை வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கும் இந்தப் போராட்டம் காரணமாக அமைந்தது.

புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, பள்ளிக்கூடங்களில் இருந்த மும்மொழிக் கொள்கையை மாற்றி இரு மொழிக் கொள்கையை அறிவித்தது. அதற்குப் பிறகு, இந்தி திணிப்பு தொடர்பாக எந்த ஒரு சிறிய அறிவிப்பும் பெரிய எதிர்விளைவுகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. இந்தி என்ற சொல், தமிழக அரசியல் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சொல்லாக மாறியது.

4. குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம்

 

ராஜகோபாலாச்சாரியார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராஜகோபாலாச்சாரியார்

தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றிலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான போராட்டமாக அமைந்தது குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம். சி. ராஜகோபாலாச்சாரியார் தலைமையிலான சென்னை மாநில அரசு அறிமுகப்படுத்திய 'சீர்திருத்திய தொடக்கக்கல்வித் திட்டத்திற்கு' எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

1952 ஏப்ரலில் சென்னை மாநில முதல்வராக பதவியேற்றார் ராஜாஜி. பதவியேற்று ஓராண்டில், 1953ல் "சீர்திருத்திய தொடக்கக் கல்வித் திட்டம்" என்ற பெயரில் ஒரு கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கல் அரை நாளை பள்ளிப் படிப்பிலும் அரை நாளை தம் தந்தையின் பாரம்பரிய தொழிலைப் பயில்வதிலும் ஈடுபடுவார்கள் என்றது அந்தத் திட்டம். 1953 ஜூன் மாதம் துவங்கும் கல்வியாண்டிலிருந்து இந்தத் திட்டம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் எம்.வி. கிருஷ்ணாராவ், கல்வித் துறைச் செயலர் கே.எம். உன்னிதன் ஆகியோரிடம்கூட கலந்தாலோசிக்காமல் இந்தத் திட்டம் குறித்த அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. கட்சிக்குள்ளும் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை.

இந்தத் திட்டத்திற்கு உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தால் ஆசிரியர்களின் வேலைச் சுமை அதிகரித்ததால், அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமும் அண்ணா தலைமயிலான திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தத் திட்டத்தை குலக் கல்வித் திட்டம் என்று குறிப்பிட்டு, கடுமையாக எதிர்த்தன. ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இருந்தபோதும் ராஜாஜி ஓய்ந்துவிடவில்லை. இந்தத் திட்டம் குறித்து அவரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

இந்தத் திட்டத்திற்கு எதிராக 1953 ஜூலையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒரு ஓட்டில் தோல்வியடைந்தது.

தி.கவும் தி.மு.கவும் மாநிலம் முழுவதும் நடத்திய மறியல்கள், பேரணிகள், எதிர்ப்புக்கூட்டங்கள் தொடர்பாக ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கைதாயினர். சில இடங்களில் இந்தப் போராட்டங்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்தபோது அதில் பலர் காயமடைந்ததோடு, சிலர் உயிரிழந்ததாகவும் தே. வீரராகவன் எழுதிய சாதிக்குப் பாதி நாளா புத்தகத்தில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் வலுத்த நிலையிலும்கூட திட்டத்தை மாற்றிக்கொள்ளவோ, பின்வாங்கவோ ராஜாஜி தயாராக இருக்கவில்லை. முடிவில், அவர் பதவிவிலகியதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அவருக்கு அடுத்து முதலமைச்சராகப் பதவியேற்ற காமராஜர், இந்தத் திட்டத்தை கிடப்பில்போட்டார். அத்தோடு இந்த விவகாரம் தொடர்பான போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

ஆனால், இதற்குப் பிறகு எப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் தொழிற்கல்வி குறித்த பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் அதனைக் குலக் கல்வியோடு ஒப்பிடுவது தமிழ்நாட்டில் வழக்கமாகியிருக்கிறது. அதற்கான எதிர்ப்புகளும் கடுமையாக இருக்கின்றன.

5. சட்ட எரிப்புப் போராட்டம்

ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பது என்ற பெரியாரின் போராட்டம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய ஒரு போராட்டமாக அமைந்தது.

 

பெரியார் ஈ.வெ.ராமசாமி

பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN

 

படக்குறிப்பு,

பெரியார் ஈ.வெ.ராமசாமி

1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டில், நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதிலிருந்து போராட்டம் நடந்த 26ஆம் தேதிவரையிலான 23 நாட்களும் தமிழ்நாட்டில் மிகவும் கொந்தளிப்பான நாட்களாக அமைந்தன. அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்துவது என்ற பெரியாரின் இந்த அறிவிப்பு அரசுக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது.

அந்தத் தருணத்தில் சென்னை மாகாண பொதுத் தேர்தல் முடிவடைந்து, காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதல்வராக காமராஜர் பதவியேற்றிருந்தார். அந்தத் தேர்தலில் காமராஜருக்கு பெரியார் ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் செய்திருந்தார். ஆனால், அவர் பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் இந்தப் போராட்டத்தை அறிவித்தது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. ஆனால், தனி மனிதர்களைவிட ஜாதி ஒழிப்பே முக்கியம் என்றார் பெரியார்.

ஆனால், இந்தப் போராட்டத்திற்கு முன்பாக பல்வேறு இடங்களில் பெரியார் பேசிய பேச்சுகள் மிகக் கடுமையானவையாக இருந்தன. வன்முறையின் தொனியும் அதில் இருந்தது. இதனால், தஞ்சாவூர் மாநாட்டிற்குப் பிறகு, பெரியார் மீது இ.பி.கோ. 302வது பிரிவு உட்பல பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதையடுத்து, தேசிய கௌரவ அவமதிப்புத் தடைச் சட்டம் 1957 என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. சட்ட எரிப்பை தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை ஏற்கவில்லையென்றாலும், ஆதரிக்கவும் இல்லை. அது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அண்ணா, "சட்டத்தை எரிக்கும் போராட்டத்திற்காக தனிச் சட்டம் கொண்டுவரும் அரசு, ஜாதி வெறியை அடக்க என்ன சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று கேள்வியெழுப்பினார். தேசியச் சின்னங்களை அவமானப்படுத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும்வகையில் உருவாக்கப்பட்டிருந்த அந்தச் சட்டம் நிறைவேறியது.

இதையடுத்து, ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கத் தயாராக இருக்கும்படி தொண்டர்களிடம் கூறிய பெரியார், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் என்ன கூற வேண்டும் என்பதையும் வெளியிட்டார். குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்கான தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது. சிறை செல்லத் தயாராக இருப்பவர் மட்டும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றார் பெரியார்.

இந்த நிலையில், போராட்டத்திற்கு முதல் நாள் பெரியார் கைதுசெய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் சட்டத்தைக் கொளுத்தியதாக நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு வெவ்வேறு கால அளவிலான தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சிறையில் உணவு உள்ளிட்டவை மோசமாக இருந்த நிலையில், சுமார் 15 பேர் சிறையிலேயே இறந்துபோயினர்.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதான பெரியார் மூன்றாவது நாளே விடுதலையானார். ஆனால், வன்முறை தொடர்பான பேச்சுக்காக அவருக்கு 3 ஆறு மாத தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. ஆறு மாத தண்டனை முடிந்து ஜூன் மாதம் விடுதலையானார் பெரியார். அவர் வெளியில் வந்த காலகட்டத்திலும் சுமார் 1,500 பேர் சிறையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் நடந்த மற்ற போராட்டங்களைப் போல இந்தப் போராட்டத்திற்கு நேரடி பலனோ, மாற்றமோ இல்லை. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த தீவிரமான விமர்சனப் பார்வையை தமிழ்நாட்டில் உருவாக்குவதில் இந்தப் போராட்டம் முக்கியமானதாக அமைந்தது.

6. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான போராட்டம்

 

சங்கரலிங்கனார்

பட மூலாதாரம்,GETTY IMAGES/TWITTER

 

படக்குறிப்பு,

சங்கரலிங்கனார்

மெட்ராஸ் ஸ்டேட் என்ற மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்ற போராட்டம், ஒரு நீண்ட போராட்டமாக அமைந்தது. இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணம் கீழே கன்னியாகுமரியிலிருந்து ஒரிசா வரை பரவியிருந்தது.

ஆனால், மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து 1953ல் ஆந்திரப் பிரதேசம் பிரிந்த பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுமென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆகவே, அந்தத் தருணத்திலேயே சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது.

பெரியார், சி.பா. ஆதித்தனார், ம.பொ.சி. ஆகியோர் இது குறித்து பேசிவந்த நிலையில், தமிழ்நாடு பெயர் தீர்மானம் ஒன்று 1955 நவம்பர் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டது. ஆனால், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரிலேயே மாநிலம் சர்வதேச அளவில் அறியப்படுவதால், இப்போது பெயர் மாற்றத் தேவையில்லை என அப்போதைய காங்கிஸ் அரசு கூறியது. தீர்மானம் விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடிசெய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் 1956 ஜூலை 27ஆம் தேதியன்று காங்கிரசைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான சங்கரலிங்கனார் விருதுநகரில் இருந்த மாரியம்மன் திடலில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் போராட்டத்தைத் தொடங்கினாலும் முதன்மைக் கோரிக்கை மாநிலப் பெயர் மாற்றக் கோரிக்கையே இருந்தது. அவரது உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அரசும் பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையிலும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து அக்டோபர் 13ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதற்குப் பிறகு ம.பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றது. இந்த நிலையில், 1960 ஆகஸ்ட் 19ஆம் தேதி மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானம் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.எஸ். சின்னசாமியால் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், தமிழகத்திற்குள் வேண்டுமானால், தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தலாம். அதற்கு மேல் ஏதும் செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

இந்திய நாடாளுமன்றத்திலும் இதற்கான கொண்டுவரப்பட்டது. அதனைக் கொண்டுவந்தவர் பூபேஷ் குப்தா. அதில் கலந்துகொண்டு தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை பேசிய பேச்சு மிகுந்த கவனத்தைப் பெற்றது.

இதற்குப் பிறகு 1967ல் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு, ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு 1968 நவம்பர் 23ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.

இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை, மிகப் பெரிய அளவிலான வெகுமக்கள் போராட்டமாக உருவெடுக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், இது தொடர்பான கூட்டங்கள், எழுத்துகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்தன.

7. ஜல்லிக்கட்டுப் போராட்டம்

 

ஜல்லிக்கட்டு போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் சமீபகால வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்திய போராட்டமாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். அரசியல் தலைமைகள் ஏதுமின்றி, நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் கடைசி கட்டம்வரை வன்முறையின்றி தன் இலக்கை எட்டியது. ஆனால், போராட்டத்தின் கடைசி நாளில் நிகழ்ந்த கலவரம், மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்தது.

காட்சிப்படுத்தக்கூடாத மிருகங்களின் பட்டியலில் காளை மாடும் இணைக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் நடந்துவந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் ஏற்பட்டுவந்தது. சில ஆண்டுகள் போட்டிகளே நடைபெறாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக ஒரு சிறிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டம் அன்று மாலையோடு முடிவுக்குவருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த நாளும் போராட்டம் தொடர்ந்தது.

அடுத்த நாள் ஜனவரி 17ஆம் தேதி காலையில் அலங்காநல்லூரில் கூடியிருந்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் தடியடி நடத்தப்பட்டது. 200 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி மேலும் பலர் அலங்காநல்லூருக்கு வந்தனர்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கவனிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் சிறிய எண்ணிக்கையில் இளைஞர்கள் கூட ஆரம்பித்தனர். அந்தக் கூட்டம் சிறிது சிறிதாக அதிகரித்தபடி இருந்தது. காலையில் சிறிய எண்ணிக்கையில் இருந்த கூட்டம், மாலையில் வெகுவாக அதிகரித்தது. மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டது.

இந்திய அரசுக்கு எதிராகவும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அங்கிருந்த போராட்டக் குழுவினருடன் காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை. இரவிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகலவில்லை. இதற்கு அடுத்த நாளும் போராட்டம் தொடர்ந்த நிலையில் இரவில் சிறிய அளவில் தடியடி நடத்தப்பட்டது. இருந்தபோதும் போராட்டக்காரர்கள் மீண்டும் அங்கே குழுமினர்.

ஜனவரி 19ஆம் தேதி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, மதுரையில் பெரிய அளவில் போராட்டம் பரவியது. வைகை ஆற்றின் குறுக்கே இருந்த ரயில் பாலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர். ரயில் ஒன்றையும் போராட்டக்காரர்கள் பிடித்துவைத்தனர். மதுரைக்கான ரயில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதற்கடுத்து திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களுக்கும் போராட்டம் பரவியது. இந்தியாவிற்கு வெளியில் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, பிரிட்டன், சவூதியிலும் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்தன.

ஜல்லிக்கட்டிற்கான தடை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது என ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோதி அறிவித்தது, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. ஜனவரி 20ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவிலான முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆனால், போராட்டம் உச்சகட்டத்தை எட்டும்வரை மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்ககைள் போதுமானதாக இருக்கவில்லை. ஜனவரி 17ஆம் தேதி போராட்டக்காரர்களை வந்து சந்தித்த சில அமைச்சர்கள், போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிவிட்டுச் சென்றுவிட்டனர். இதற்கு அடுத்த நாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் போராட்டக்காரர்கள் சமாதானமடையவில்லை. அன்றிரவே பிரதமரைச் சந்திக்கப் புறப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். ஜனவரி 19ஆம் தேதி மத்திய அரசால் இப்போது ஏதும் செய்ய முடியாது என பிரதமர் குறிப்பிட்டது நிலைமைத் தீவிரமாக்கியது. ஓ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பாமல் தில்லியிலேயே தங்கினார்.

ஜனவரி 20ஆம் தேதி தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், மத்திய அரசின் மிருகவதைத் தடைச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்படவிருப்பதாகச் சொன்னார். நேற்று இரவே அதற்கான அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டது என்றும் விரைவில் ஜல்லிக்கட்டு நடக்குமென்றும் தெரிவித்தார்.

சனவரி 20 - காலையில் முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்: சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முந்தைய நாள் இரவே ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டுவிட்டது என்றும் விரைவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமென்றும் கூறினார் ஓ.பி.எஸ். அடுத்த நாள் ஜனவரி 21ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமென்றும் கூறினார். இருந்தும் போராட்டக்காரர்கள் இதனை ஏற்கவில்லை. நிரந்தரச் சட்டம் வேண்டுமெனக் கூறி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நிகழ்வுகள் மெரீனாவில் நடக்கவிருந்த நிலையில், ஜனவரி 23ஆம் தேதி காலையில், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவேண்டுமென காவல்துறை கூறியது. ஆனால், ஒரு பகுதியினர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். இதற்குப் பிறகு கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் மூண்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. கலவரத்தின் முடிவில் போராட்டக்காரர்கள் அனைவரும் போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட்டனர்.

இறுதியில் கலவரத்தில் முடிந்தாலும்கூட எந்தக் காரணத்திற்காக இந்தப் போராட்டம் துவங்கப்பட்டதோ, அந்த இலக்கு எட்டப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிடுவதில் தேசிய அளவிலான ஊடகங்கள் காட்டிய பாராமுகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. போராட்டம் திங்கட்கிழமை துவங்கியிருந்தாலும், வியாழக்கிழமை மாலை வரை தேசிய ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமையன்று முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையிலேயே இந்தப் போராட்டம் குறித்த செய்திகள் தேசிய அளவில் ஒளிபரப்பாக ஆரம்பித்தன.

 

ஜல்லிக்கட்டு போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலைமையே இல்லாமல் நடந்த போராட்டம், அரசியல்வாதிகள் இல்லாமல் நடந்த போராட்டம் என இந்தப் போராட்டம் வர்ணிக்கப்பட்டது. முதல் ஆறு நாட்கள்வரை இந்தப் போராட்டத்தில் இருந்த ஒழுங்கும் கவனிக்கப்பட்டது.

சமீப ஆண்டுகளில் மிக வெற்றிகரமாக நடந்த போராட்டம் என்பதால், தற்போதைய தலைமுறையினரின் நினைவில் நீண்ட நாட்களுக்கு இருக்கக்கூடிய போராட்ட உதாரணமாகவும் இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் உருவெடுத்திருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட போராட்டங்கள் தவிர, இட ஒதுக்கீட்டிற்காக நடந்த போராட்டங்கள், 70களின் துவக்க ஆண்டுகளில் நடந்த விவசாயிகளின் போராட்டங்கள், பல்வேறு ஆண்டுகளில் நடந்த ஈழ ஆதரப் போராட்டங்கள் ஆகியவையும் தமிழ் அரசியல் உணர்வின் ஒரு அங்கமாக அமைந்தவை.

இந்தியாவின் பிற மாநிலங்களின் அரசியலில் இருந்து தமிழ்நாடு எந்த வகையிலாவது வேறுபட்டு நிற்கிறதென ஒருவர் கருதினால், அதற்குக் காரணமாக அமைந்தவை இந்தப் போராட்டங்களே.

https://www.bbc.com/tamil/india-62399867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.