Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் - இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் - இந்திய பெருங்கடலில் உலக அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்திய கடற்படை

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் காட்டும் சீன செயற்கைக்கோள் கப்பலும், சென்னையில் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் வந்திருப்பதும் தற்செயல் நிகழ்வா அல்லது இரு பெரும் வல்லரசுகள் இந்திய பெருங்கடலை வைத்து தங்களுடைய கேந்திர அரசியலை வெளிப்படுத்துகின்றனவா என்ற சந்தேகம் இந்த விவகாரத்தில் எழுகிறது. என்ன நடக்கிறது?

காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல்

இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும் இந்திய அமெரிக்க கேந்திர கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும் அமெரிக்க கடற்படை கப்பலான 'சார்லஸ் ட்ரூ' (Charles Drew) சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆகஸ்டு 7ஆம் தேதி பழுதுபார்ப்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக வந்துள்ளது.

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வருவது இதுவே முதல்முறை. இந்த கப்பல் சென்னை எண்ணூரில் உள்ள காட்டுப்பள்ளி கப்பல் தளத்தில் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.சர்வதேச கப்பல் கட்டுமானம் மற்றும் சீரமைப்பு சந்தையில் இந்தியாவின் கப்பல் தளத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது என்று இந்தியா பெருமிதம் தெரிவித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. மேலும் நவீன கடல்சார் தொழில்நுட்பங்களை கொண்டு இந்திய கப்பல் கட்டும் தளம் கப்பல்களை சீரமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணியை குறைந்த செலவில் திறம்பட வழங்குகிறது என்றும் இந்தியா அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

அசாதாரணமாக வந்துள்ள உலகின் மிகப்பெரிய வல்லரசின் போர்க்கப்பல் என்பதால் அதன் சென்னை வருகையை இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார், கடற்படை துணைத் தளபதி, கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து பேசிய இந்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார், "அமெரிக்காவின் கடற்படை கப்பலான சார்லஸ் ட்ரூவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் இந்த முன்னெடுப்பை இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கிறோம். இரு நாடுகளும் இணைந்து மேலும் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தொடக்கமாக இது உள்ளது" என தெரிவித்தார்.

இலங்கை வரும் சீன கப்பல்

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நங்கூரமிட்டிருக்க, இந்திய பெருங்கடல் பகுதி நோக்கி தென் சீன கடல் வழியாக சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலின் இலங்கை துறைமுக வருகை இந்திய பெருங்கடல் பகுதியில் அச்சுறுத்தலாகலாம் என்ற கவலையை இந்தியா கடந்த இரண்டு வாரங்களாக வெளிப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனங்களே நிர்வகிக்க குத்தகை எடுத்துள்ளன. அந்த வகையில், சீன செயற்கைக்கோள் கப்பல், இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம், இந்தியாவின் தென்கோடி கேந்திர கடலோர பாதுகாப்பு அமைப்புகள், தாக்குதல் வியூகங்கள் போன்ற தகவல்களை துல்லியமாக சீன செயற்கைக்கோள் கப்பலால் பதிவு செய்ய முடியும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

சீனா எதிர்வினை

இந்த நிலையில் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பானது இரு நாடுகளாலும் சுயாதீனமாகத் தெரிவுசெய்யப்பட்டு பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கிறது. அது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது" என்று வாங் கூறினார்."சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்றும் வாங் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று வாங் கூறினார், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளுக்கு காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஆனால், அந்த கப்பல், செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் என்ற பெயரில் வரும் உளவுக்கப்பல் என்பது இந்தியாவின் வாதம்.

 
YUVAN WANG 5

பட மூலாதாரம்,YUVAN WANG 5

அதுவும், யுவான் வாங் - 5, ஆகஸ்டு 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏற்கெனவே சீனாவிடம் இலங்கை பெரும் கடன் பெற்றிருந்தாலும், நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் உதவியும் தேவையாக இருக்கும் பட்சத்தில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கினால், இந்தியாவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம் என்ற நிலைக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தள்ளப்பட்டுள்ளார். அதேபோல, சீன கப்பலுக்கு அனுமதி வழங்காவிட்டால் அது சீன, இலங்கை உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் ரணிலுக்கு உள்ளது.

பதில் நடவடிக்கையா?

இந்த சூழலில்தான் சீரமைப்பு பணிகளுக்காக முதன்முறையாக இந்தியா வந்துள்ளது அமெரிக்க கப்பற்படை கப்பல். இந்த கப்பல் குறைந்தது 11 நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதால், சீனாவுக்கு போட்டியாக இது இருக்குமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.

ஆனால், பாதுகாப்புத்துறை தகவல்களை வழங்கி வரும் டிஃபன்ஸ் கேப்பிடல் இதழின் ஆசிரியர் என்.சி. பிபிந்திரா, இந்த இரு விஷயங்களையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம் என்கிறார்.

சீன கப்பல் இலங்கை வர திட்டமிடுவதற்கும் அமெரிக்க கப்பல் இந்தியா வந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புவதாக அவர் கூறுகிறார்.

 
இந்திய போர்க்கப்பல் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம்

"காட்டுப்பள்ளியில் கப்பல் சீரமைக்கும் வசதிகள் உள்ளன. அதற்காக மட்டுமே அமெரிக்க கப்பல் வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவும் அமெரிக்காவும் இதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே அமெரிக்க கடற்படை கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது," என்கிறார் பிபிந்திரா.

தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் ஒரு பின்னணியையும் அவர் குறிப்பிடுகிறார்.

"பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் இந்த விஷயத்தை அணுகினால், இந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான ஒத்துழைப்பு இந்த போர்க்கப்பலின் வருகை மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில், பிற ஜனநாயக நாடுகளுக்கு சீனாவிடமிருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது. அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் அமெரிக்க கப்பல் சீரமைப்புப் பணி இந்தியாவில் நடப்பது ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். அதே சமயம் சீன கப்பல் வருகையுடன் அமெரிக்க போர்க்கப்பல் வருகையை நேரடியாக தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் இது நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கும் தற்செயலான நிகழ்வு," என்கிறார் அவர்.

'இந்திய கப்பல் கட்டுமான திறன் அதிகரித்துள்ளது'

 
இந்திய கடற்படை கப்பல் கட்டும் தளம்
 
படக்குறிப்பு,

சென்னை காட்டுப்பள்ளிக்கு அமெரிக்க கப்பல் வந்துள்ள நாளை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும் என்கிறார் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார்.

"இந்தியாவின் கப்பல் கட்டுமான திறனும், சீரமைக்கும் திறனும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இந்திய கடற்படைக்கு தேவையான 42 போர்க்கப்பல்களில் 40 கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. இது இந்திய கப்பல் கட்டுமானத் திறன்கள் வளர்ந்து வருவதை காட்டுகிறது. அதேபோல அமெரிக்க கப்பல் இங்கு சீரமைப்பு பணிகளுக்கு வருவது இந்தியா கப்பல் கட்டுமானத்திலும் கப்பல்கள் பராமரிப்பிலும் வளர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது."

நட்பு நாடுகளுக்கு கப்பல் கட்டும் பணிகள் இந்தியாவில் பரவலாக நடைபெற்று வருகின்றன. எனவே வர்த்தக ரீதியாக பார்க்கப் போனால் கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியாவிற்கு இது முக்கிய இடத்தை வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி வகிக்கின்றன. இனி இந்தியாவும் நவீன கப்பல்களை கட்டமைக்கும் நாடுகளின் பட்டியலில் விரைவில் சேரும்." என்கிறார் பிபிந்திரா.

இந்தியாவில் இருக்கும் ஆறு முக்கிய கப்பல் கட்டுமான தளங்களின் மூலம் நாடு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டி வருகிறது. இந்த தகவலை சென்னை நிகழ்வின்போது பதிவு செய்தார் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார்.

இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம்

"இந்த மாதிரியான வெளிநாட்டு கப்பல்களின் வருகைகள், ஓரிரு நாட்களுக்கு முன்னதாக திட்டமிடப்படும் ஒரு நடவடிக்கை அல்ல. எனவே இந்தியாவில் அமெரிக்க கப்பலும், இலங்கையில் சீன கப்பல் உத்தேச வருகையும் தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது," என்கிறார் இந்திய விமான படையின் முன்னாள் உயரதிகாரியான ஏர் வைஸ் மார்ஷெல் (ஓய்வு) கபில் கக்.

தென் சீன கடல் பகுதியில் தனது நட்பு நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் பிராந்தியம், தைவான் போன்றவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் கால்பதிக்க வேண்டும் என்ற தமது நெடுநாள் நோக்கத்தை சீனா நிறைவேற்ற பல வழிகளில் முயன்று வருகிறது.

அமெரிக்கா, இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்திய குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது கையெழுத்தானது. அதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி இரு நாடுகளும் பரஸ்பரம் அவற்றில் உள்ள விமான தளங்கள் மற்றும் துறைமுகங்களில் உள்ள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம், எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். இது இந்திய - அமெரிக்க கடற்படை கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும் ஒரு ஒப்பந்தமாகும் என்கிறார் கபில் கக்.

"அமெரிக்க கப்பலின் வருகை வெறும் ஒரு சீரமைப்பு பணி இதற்கும் உளவுப் பார்த்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இலங்கை வரும் சீன கப்பல் உளவு தகவலை சேகரிக்கும் ஒரு கப்பல். இலங்கை துறைமுகத்தை ஒட்டியுள்ள துறைமுகங்கள் குறித்த பல்வேறு தகவல்களை அதனால் சேகரிக்க முடியும்." என்கிறார் அவர்.

"சீன கப்பல் சீரமைக்கும் பணிகளுக்காக இலங்கை வருவது என்றால் அதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது. சீனா இதற்கு முந்தைய காலங்களில் நீர் மூழ்கி கப்பல்களை அனுப்பியது. தற்போது உளவு கப்பலை இலங்கை துறைமுக பகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இலங்கையின் நெருக்கடி காலத்தில் இந்தியா அத்தனை உதவிகளை செய்ததற்கு மத்தியிலும் தனது துறைமுகத்தில் ஒரு சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா அதனை நிச்சயம் அனுமதிக்காது." என்றார் கபில் கக்.

யுவான் வாங் - 5 கப்பலை இலங்கையில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி சீனாவிடம் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்து பேச வேண்டும் என சீனா தற்போது தெரிவித்துள்ளது.

சந்தேகம் என்ன?

 
அமெரிக்க கடற்படை

பட மூலாதாரம்,US NAVY

உலகின் பெரும் வல்லரசுகளாக கருதப்படும் முதல் மூன்று நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளன. இதில், இந்த மூன்று நாடுகளுடன் இணக்கமான வர்த்தக உறவை இந்தியா பேணி வருகிறது. மறுபுறம், சீனாவும், ரஷ்யாவும் நெருங்கிய கூட்டாளிகளாகவும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நெருக்கமான உறவையும் கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யா, யுக்ரேன் இடையே ஏற்பட்ட போர் தீவிரம் அடைந்த பிறகு ரஷ்ய சார்பு செயல்பாடுகளை இந்தியா குறைத்துள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் பாதுகாப்புப்படைகளுக்கான ஆயுதங்களின் எண்ணிக்கையும் குறைந்தன. தற்போது பிரான்ஸிடம் இருந்து ரஃபால் விமானம், இஸ்ரேலிடம் இருந்து நவீன இயந்திர துப்பாக்கிகள், அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் போன்ற செயல்பாடுகளில் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது.

"இந்தப் பின்னணியில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் சீனா, இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள இலங்கையில் செல்வாக்கை செலுத்தும் போக்கை அமெரிக்கா விரும்பாமல் இருக்கலாம் என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. அந்த வகையில், இலங்கைக்கு நட்பு நாடாக விளங்கும் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்க முயலலாம். அதன் மூலம் சீனாவுக்கு சவாலாக இந்திய பெருங்கடல் களத்தில் அமெரிக்கா இருப்பதை காட்டிக் கொள்ள அந்த நாடு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருக்கலாம்," என்று பாதுகாப்புத்துறை உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

காரணம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு முன்பே திட்டமிட்டபடிதான் அமெரிக்க கடற்படை கப்பல் வந்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த கப்பல், இத்தனை நாட்களாக எங்கு இருந்தது, எந்த கடல் வழியைப் பயன்படுத்தி அது இந்திய பெருங்கடலுக்குள்ளும் பிறகு வங்காள விரிகுடாவுக்கும் வந்தது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தகவல்களை இந்திய பாதுகாப்புத்துறையிடம் இருந்து கேட்டுப்பெற பிபிசி தமிழ் முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.

"இந்தியா அன்றும் இன்றும்"

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெர்ஷிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுகளின் மேற்குப் பகுதிக்கு 'கடல் போக்குவரத்து நடவடிக்கை' என்ற பெயரில் அமெரிக்க போர்க்கப்பலான ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 54) வருவதாக அறிவித்தபோது, தற்போது காட்டும் இணக்கமான அணுகுமுறையை அன்றைக்கு இந்தியா காட்டவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த அறிவிப்பை அமெரிக்க போர்க்கப்பல் வெளியிட்டபோது, லட்சத்தீவுகளுக்கு 130 கடல் மைல் தூரத்தில் அது இருந்தது.

ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை இந்தியா அப்போது எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டிலும் அந்த போர்க்கப்பல் நுழைவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, "இரு தரப்பிலும் ராணுவ ஒத்துழைப்பு வலுப்பெற்று வந்தாலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பல் முன்னனுமதியின்றி வர உத்தேசித்திருப்பது சர்வதேச கடல் சட்டம் தொடர்பான ஐ.நா சாசனத்துக்கு உகந்ததாக இல்லை," என்ற கவலையை இந்திய வெளியுறவுத்துறை அமெரிக்காவிடம் ராஜீய முறையில் தெரிவித்தது.

அமெரிக்கா கோரிய சர்வதேச கடல் பயண நடவடிக்கை உரிமை

 
அமெரிக்க கடற்படை

பட மூலாதாரம்,US NAVY

கடைசியில், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் பின்வாங்கிச் சென்றது. புறப்படும் முன்பாக அந்த போர்க்கப்பல் தளபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 53) இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள், லட்சத்தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில், இந்தியாவின் முன் அனுமதியைக் கோராமல், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, தனது வழிசெலுத்தல் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பயன்படுத்தியது."

 
இந்திய கடற்படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஆனால், இந்தியா தனது பிரத்யேக பொருளாதார மண்டலம் அல்லது கடல் பகுதியில் ராணுவ ஒத்திகைகள் அல்லது நடமாட்டத்துக்கு முன் அனுமதி தேவை என்று கூறியுள்ளது. இந்த கூற்று சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இந்த சுதந்திரமான வழிசெலுத்தல் செயல்பாடு ("FONOP") என்பது, சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடல் வழி உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டபூர்வ பயன்பாடுகளைக் கொண்டது. அதை மீறும் வகையில் இந்தியாவின் கடல்சார் உரிமை கோரல்கள் உள்ளன" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

 
இந்திய கடற்படை கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்திய - பசிஃபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் அன்றாடம் செயல்படுகின்றன. அவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடத்தில் அமெரிக்கா பறக்கும், பயணம் செய்யும் மற்றும் செயல்படும் என்பதை இது உணர்த்துகிறது. நாங்கள் கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, வழக்கமான வழிசெலுத்தல் செயல்பாடுகளை (FONOPs) மேற்கொள்கிறோம். FONOP என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதோ அதை வைத்து அரசியல் செய்வதோ அல்ல," என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய கடல் சட்டம் என்ன சொல்கிறது?

"இந்திய சட்டத்தின் கீழ் - பிராந்திய கடல் பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் பிற கடல்சார் மண்டலங்கள் சட்டம், 1976-இன்படி அனைத்து வெளிநாட்டு கப்பல்களும் (நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் உட்பட) இந்தியாவின் அமைதி, நல்ஒழுங்கு அல்லது பாதுகாப்புக்கு பாதகமாக இல்லாத வரையில் பிராந்திய கடல் வழியாக செல்லும் உரிமையை அனுபவிக்கலாம். ஆனால், அவ்வாறு வரும் கப்பல்கள் இந்திய அரசின் முன்னனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்," என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்க போர்க்கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் வந்தபோது காட்டிய ஆட்சேபம், இம்முறை அதேபோன்ற வேறொரு கப்பல் 'பழுதுபார்ப்பு' என்ற பெயரில் சென்னைக்கு வந்தபோது, அது மேக் இன் இந்தியா திட்டப்படி உருவான கப்பல் கட்டுமான தளத்தின் திறனுக்கு கிடைத்த வாய்ப்பு என்று இந்தியா கூறியிருக்கிறது.

இந்த ஒப்பீடுகளைத்தான் விவரம் அறிந்த பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி தங்களுடைய சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் - இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் - இந்திய பெருங்கடலில் உலக அரசியல் - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.