Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்தில் தமிழ்ப்பெண்கள்

Featured Replies

புலத்தில் தமிழ்ப்பெண்கள்

தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.

இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.

ஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்...! இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில், ஆங்காங்கு பலபெண்கள் தம்பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி.... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும் போராட்டக் களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை, சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற்பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப் படும்.

இந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

பிரச்சனை என்று வரும் போது தாய்நிலத்தில் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது. ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.

எதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட, "நீ பெண்! அதனால்..." என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.

தம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாகத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.

இதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -

19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப்

பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.

இவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.

ஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.

அவளை, அவள் வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.

இந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்...?

முழுமையான இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.

இவள் இறப்புக்கு யார் காரணம்? கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும், அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாரா முகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான்.

அந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்ய வில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இவைகள் மட்டு மல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும் கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.

அவற்றில் ஒன்று, மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால் உதையால் வார்த்தையால் அடக்கி விடுவது.

இதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி உதை நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்காரி போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.

வெளியில் சொன்னால் மானம் போய்விடும்...! என்ன நினைப்பார்கள்...? என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.

இப்படியாக, எமது பெண்கள் இதை யாருடனும் பேசாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது. பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.

தற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.

இதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகிவிடுகிறது.

இந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும். பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.

ஊரென்ன சொல்லும்? உலகமென்ன சொலலும்? சமூகமென்ன சொல்லும்? என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத்தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்கிறோம்? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை , நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

இப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.

எமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும் பிரச்சனையும் என்ன வென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.

இந்த வெளியுலகமும், பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.

மனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.

கணவனும் அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருத்துக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.

ஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் "இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன். " என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்கள். `என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே! அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே!` என்று. அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.

உழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும், இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற்பட எத்தனையோ ஆயிரம் புலம்பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.

அடுத்து, நாம் இங்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்... இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்..., ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்..., என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது. இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும் இளம் பெண்களும் காப்பாற்றுப் பட விழிப்புணர்வு குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.

இது பற்றியதான ஒரு விளக்கத்தையும் இன்றைய எனது கட்டுரைக்குள் அடக்க நினைத்தால் கட்டுரை அளவுக்கதிகமாக நீண்டு விடும். அதனால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இவைகள் பற்றியதான விரிவான ஒரு பார்வையுடன் வருகிறேன்.

- சந்திரவதனா -

www.pennkal.blogspot.com

Edited by Jamuna

இக் கட்டுரை திருமணத்திற்காக தாயகத்திலிருந்து வெளிநாடு செல்லும் சில பெண்களின் நிலையைச் சித்தரிப்பதாக இருக்கலாம்.

ஆனால் சிறு வயதில் வெளிநாடு வந்தவர்களும் வெளிநாடுகளில் பிறந்த தமிழ்ப் பெண்களும் இவ்வாறு அடக்குமுறைக்கு ஆளாவதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் விருப்பப்பட்டி எல்லாத் துறைகளிலும் முன்னேற முழுச் சுதந்திரம் உண்டு. திருமணத்திலும் பெண்கள் பெரும்பாலும் தாங்கள் விருப்பத்துடனேயே தங்கள் துணையைத் தெரிவு செய்கின்றனர்.

விகிதாசாரத்தில் பெண்கள் ஆண்களைப் போன்று ஏன் எல்லாத் துறைகளிலும் முன்னேறவில்லையென்பதற்கு ஆண்களின் அடக்குமுறையைக் காரணமாகக் கூற முடியாது.

சில விடயங்களில் மட்டும் (இரவுக் களியாட்டங்கள் போன்ற) ஆண்கள் தமக்கு பெண்களைவிட அதிகமான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அட போங்கப்பா ...... :lol:

இணையவன் தம்பி யமுனா படிகி விடுறார் எண்டா நீருமா

:o :P :lol:

  • தொடங்கியவர்

சில விடயங்களில் மட்டும் (இரவுக் களியாட்டங்கள் போன்ற) ஆண்கள் தமக்கு பெண்களைவிட அதிகமான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அண்ணா இந்த கூற்றி என்னால் ஏற்று கொள்ள முடியாது உங்கள் நாட்டை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இங்கு ஆண்களை போல் பெண்களும் இரவு விடுதிகளிள்....................நிரம்பி வழிவதை காணலாம் நான் கூறுவது எங்கள் சமூக பெண்களை தான்...........ஆகவே இந்த விசயத்திலும் அவர்கள் ஆண்களிற்கு சரிசமமாக இருகிறார்கள்.......... :lol:

தாயகத்தில் இருந்து வரும் பெண்கள் இங்கே இருகிறவைய விட ஒரு படி மேலே செல்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து உங்கள் கருத்து என்ன............. :o

  • தொடங்கியவர்

அட போங்கப்பா ...... :lol:

இணையவன் தம்பி யமுனா படிகி விடுறார் எண்டா நீருமா

:o :P :lol:

சின்னா தாத்தா நக்கலா.................கஷ்டபட்டு சுட்டு போட்டனான்............எழுதுறதையும் விட சுடுறது தான் கஷ்டம் தெரியுமா உங்களிற்கு................அது சரி இந்த டொபிக்கை பற்றி உங்க கருத்து என்ன சின்னா தாத்தா........... :P ;) :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.