Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக: நரேந்திர மோதியுடன் நெருங்கும் இபிஎஸ் அணி - டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு முழு விவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக: நரேந்திர மோதியுடன் நெருங்கும் இபிஎஸ் அணி - டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு முழு விவரம்

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பிரதமர் மோதி - எடப்பாடி பழனிசாமி

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் எதிர்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் தலைமை போட்டி, இரு தரப்பும் இப்போது மேற்கொண்டுள்ள சட்ட போராட்டங்களால் விறுவிறுப்படைந்திருக்கிறது. இதற்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நெருக்கம் காட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர முயற்சி எடுத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு, தலைமை யார் என்ற விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒவ்வொரு முறை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போதும், அதை எதிர்த்து மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து தங்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி மற்றும் தங்கமணி சமீபத்தில் டெல்லிக்கு வந்து இந்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து விட்டு தமிழ்நாடு திரும்பியிருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசிகளாகவும் அவரது தலைமையிலான கட்சிக்கு முக்கிய நிதி ஆதார பின்புலமாகவும் இருப்பவர்கள்.

 

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது, அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதியும், பாஜக மேலிடமும் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆளும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோதும், துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்கே பிரதமர் மோதியும் பாஜக மேலிட தலைவர்களும் முன்னுரிமை கொடுத்தனர்.

கடந்த ஜூலை மாதம் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றபோது, அவரது பதவியேற்பு விழாவுக்கு முந்தைய நாள் அவரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

 

Presentational grey line

 

Presentational grey line

அப்போது பிரதமர் நரேந்திர மோதியை தனியாக சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகம் நேரம் கொடுக்கவில்லை. அன்றைய தினம் பிரதமர் மோதி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்வில் சில நொடிகள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிரதமர், 'சென்னையில் சந்திக்கலாம்' என்று கூறி விட்டுச் சென்றார்.

இந்தப் பின்னணியில் திரெளபதி முர்மூவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காமலேயே எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் சென்னைக்கு அரசு முறை பயணமாக நரேந்திர மோதி சென்றபோது அங்கும் எடப்பாடி பழனிசாமியை அவர் தனித்துப் பேசாமல் தவிர்த்திருக்கிறார்.

இது எடப்பாடி பழனிசாமிக்கு மன வருத்தத்தைக் கொடுத்த வேளையில்தான் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை போன்றவை நடந்தன.

 

சிவப்புக் கோடு

அதிமுக எதிர்காலம்: லட்சுமணன், மூத்த பத்திரிகையாளரின் பார்வை

 

நரேந்திர மோதி ஓபிஎஸ் இபிஎஸ்

பட மூலாதாரம்,PMO

ஒரு பத்திரிகையாளராக இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வியோடு மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனை அணுகினோம்.

"ஓபிஎஸ் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பொதுவெளியிலேயே அவர் எல்லோரும் இணைந்து செயல்படலாம் என்று அழைப்பு விடுத்திருப்பது அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது," என்று கூறினார்.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாஜகவின் மூத்த அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி வருகிறார். தமது தமிழ்நாட்டுப் பயணத்தின்போதும், தன்னை சந்திக்க வரும் அதிமுக எம்பிக்களிடமும் இதையே அவர் வலியுறத்தியும் வருகிறார்.

ஆனால், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி பல தருணங்களில் அமித் ஷாவிடம் தமது ஆதரவு எம்பிக்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து லட்சுமணனிடம் கேட்டபோது, "எடப்பாடி பழனிசாமியின் இந்த பிடிவாதம், அவருக்கு பலன் தரலாம். ஆனால், இதை தொண்டர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமித் ஷாவின் அழைப்பை கடந்த காலங்களில் ஏற்காமல் போனதால் ஆட்சியை பறிகொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதே பிடிவாத போக்கை இப்போதும் அவர் தொடர்ந்தால் அதை அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள் என கருதுகிறேன்," என்கிறார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் முக்கிய இடத்தைத் தருவது ஓபிஎஸ் கொண்டுள்ள நோக்கங்களில் பிரதானமாக உள்ளதே. இதை கட்சித் தொண்டர்கள் ஏற்பார்களா என்று அவரிடம் கேட்டோம்.

"அவர் நோக்கம் எல்லாம் இப்போதே நிறைவேற சாத்தியமில்லை," என்றவர், அதிமுகவில் இயல்புநிலை திரும்ப இன்னும் பல காலம் பிடிக்கும் என்று கூறினார்.

"இப்போது நடக்கும் சட்டப்போராட்டங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் இவர்கள் தீர்வைக் காண வேண்டும், அது முடிந்ததும் கட்சிக்கு யார் தலைமை என்பதில் ஒருமித்த முடிவை எட்டி, அதை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து அதன் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இது எல்லாம் முடிந்தால்தான் அரசியல் ரீதியாக பிரிந்து கிடக்கும் அணிகள் ஒன்றிணையும் கட்டமே வரும். களத்தில் அந்த கட்டம் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்தம்," என்கிறார் லட்சுமணன்.

 

சிவப்புக் கோடு

 

எடப்பாடி பழனிசாமி

ஆனால், அரசுத்துறைகளின் வழக்கமான நடவடிக்கைக்கும் மத்தியில் ஆளும் பாஜக நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதிமுக அரசியல் விவகாரத்தில் தலையிட பாஜக மேலிடம் விரும்பவில்லை என்றும் அது அவர்களுடைய உள்விவகாரம், அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

ஒருபுறம் நீதிமன்றங்களில் அதிமுகவின் போட்டி தலைமைகள் தொடர்ந்த வழக்குகள், மறுபுறம் நெருங்கிய வட்டாரங்களில் நடக்கும் ஐடி சோதனைகள் என பல முனை தலைவலியை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து விட்டு தங்கமணி, வேலுமணி சென்னைக்கு திரும்பியிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இவர்களின் டெல்லி பயணம் குறித்து அதிமுகவில் பல முன்னணி தலைவர்களுக்கே தகவல் தெரியவில்லை. இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பலருடன் பேசியபோதும், "கட்சியின் மேலிடத்துக்கு மட்டுமே இதுபோன்ற உயர் சந்திப்புகள் பற்றி தெரியும். அந்த வலையமைப்பில் நாங்கள் இல்லை," என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, இபிஎஸ், ஓபிஎஸ் இடையிலான தலைமை போட்டி குறித்து பியூஷ் கோயலிடம் பிபிசி தமிழ் கேட்டது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இவர்தான் மத்திய அரசு, பாஜக மேலிடம் ஆகியவற்றுக்கும் ஆளும் அதிமுகவுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக செயல்பட்டவர்.

"அதிமுக எங்களுடைய நட்புக் கட்சி. அதன் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம். ஆனால், இரு தரப்பும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் விருப்பம். நட்புக் கட்சி என்ற முறையில் அவர்களுக்கு அந்த அறிவுரையை தருகிறோம்," என்று கூறினார்.

இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற இந்த அறிவுரையை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா என்று அவரது அணியில் உள்ள முன்னாள் எம்.பி டாக்டர் பி. வேணுகோபாலிடம் கேட்டோம். "இந்த விஷயத்தில் மாற்றி, மாற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. ஆரம்பம் முதலே ஒரே குரலில்தான் எல்லோரும் ஒலிக்கிறோம். ஓபிஎஸ் உடன் இணைய முடியாது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தி விட்டோம்," என்று கூறினார்.

 

Presentational grey line

வழக்கில் இதுவரை நடந்தவை

 

அதிமுக தலைமையகம்

 

படக்குறிப்பு,

அதிமுக தலைமை அலுவலகம், சென்னை

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூடி, அதில் இடைக்கால பொதுச்செயலாளராக அவரே தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், இந்த முடிவு தொடர்பாக தாம் முறைபாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதற்கிடையே, பொதுக்குழு நடந்த நாளில் தமது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகதத்தில் பூட்டப்பட்டிருந்த அதன் கதவுகளை ஆதரவாளர்கள் உதவியுடன் உடைத்துக் கொண்டு உள்ள சென்றார் ஓபிஎஸ். அங்கிருந்த பல ஆவணங்கள் சூறையாடப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டன.

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்

இதில் பொதுக்குழுவுக்கு இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்த விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு தரப்புகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. அதன் தீர்ப்பு ஜூலை 11ஆம் தேதி காலையில் வெளிவந்தது. அதில், பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையிலான அணிக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டது.

ஆனால், தீர்ப்புக்கு முன்பாகவே ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து உள்ளே இருந்த ஆவணங்களை திருடிச் சென்றதால் அது தனி விவகாரமாக உருவானது. இதில், அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து அந்த பகுதி வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்தது.

இப்போது கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் அணி சூறையாடியதாக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கட்சியின் சாவியை எடப்பாடி அணியிடமே வழங்க உத்தரவிடப்பட்டது.

 

Presentational grey line

 

Presentational grey line

தனி நீதிபதி உத்தரவு

இதற்கிடையே, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக இரு போட்டி தலைவர்கள் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆகஸ்ட் 17ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பொதுக்குழுவை கூட்டும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் பொதுச்செயலாளரால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று வாதிடப்பட்டது. 2001இல் அடிப்பை உறுப்பினர்களாக பதிவானவர்கள் மூலமே ஒருங்கிணைப்பாளர் தேர்வாக வேண்டும் கேவியட் மனு தாக்கல் செய்து வழக்கில் இணைந்து கொண்ட ஓபிஎஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

ஆனால், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டாக முடிவெடுத்து பொதுக்குழுவை கூட்டலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.

இந்த வழக்கில் செப்டம்பர் 2ஆம் தேதி தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் கூறியுள்ளது.

இப்போது இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

 

சிவப்புக் கோடு

ஜெயலலிதா மரணம் முதல் சமீபத்திய தீர்ப்பு வரை: அட்டவணை

 

எடப்பாடி பழனிசாமி அதிமுக

டிசம்பர் 5, 2016: 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா காலமானார்

டிசம்பர் 29, 2016: அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நீண்டகால தோழியாக அறியப்பட்ட வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக

பிப்ரவரி 5, 2017: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக வி.கே.சசிகலாவை தலைவராக்க அதிமுக சட்டப்பேரவைக் குழு முடிவு செய்தது.

பிப்ரவரி 7, 2017: முதல்வராகும் முயற்சியில் முடங்கிய சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார்.

பிப்ரவரி 14, 2017: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தனது அண்ணன் மகன் டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா.

பிப்ரவரி 16, 2017: முதல்வராக இபிஎஸ் பதவியேற்றார்

பிப்ரவரி 18, 2017: சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் வெற்றி பெற்றார்.

 

எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல் 15, 2017: தினகரனுக்கு எதிராக இபிஎஸ் அரசில் உள்ள அமைச்சர்கள் கிளர்ச்சிக் கொடி; கட்சி விவகாரங்களில் இருந்து விலகியிருக்க குரல் எழுப்பினர்.

ஆகஸ்ட் 21, 2017: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் குழுவினர், பாஜகவின் விருப்பப்படி ஒன்று சேர்ந்தனர்; ஓபிஎஸ் துணை முதல்வராக இபிஎஸ் அமைச்சரவையில் இணைந்தார்; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் செயல்பட்டு கட்சியை கூட்டாக வழிநடத்துவதற்கு இருவரும் சமாதான உடன்பாட்டுக்கு வந்தனர். இந்த இருவரின் அணிக்கு எதிராக சசிகலா ஆதரவு டி.டி.வி. தினகரன் அணி பக்கம் 18 எம்எல்ஏக்கள் சேர்ந்தனர்.

செப்டம்பர் 18, 2017: சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார்

ஏப்ரல் 27, 2018: 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மே 23, 2019: இடைத்தேர்தல் நடந்த 21 இடங்களில் 9 இடங்களில் அதிமுக வெற்றி; சட்டசபையில் கட்சியின் பலம் கூடுகிறது

செப்டம்பர் 18, 2020: உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைப்பதற்கு ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்தார். அதற்கு இபிஎஸ் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, செப்டம்பர் 28ஆம் தேதி செயற்குழுவைக் கூட்ட பொதுக்குழு தீர்மானிக்கிறது.

செப்டம்பர் 28, 2020: இபிஎஸ், ஓபிஎஸ் இடையிலான தலைமை மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. அதே நேரத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் தேர்தலில் கட்சி சார்பில் முன்னிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வலியுறுத்தினர். கடைசியில், முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7, 2020 அன்று அறிவிக்கப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.

 

இபிஎஸ் ஓபிஎஸ்

அக்டோபர் 7, 2020: இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மே 2, 2021: சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது

மே 10, 2021: எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தேர்வு செய்தது.

டிசம்பர் 1, 2021: அதிமுக செயற்குழு, கட்சியின் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வகை செய்யப்பட்டது.

டிசம்பர் 6, 2021: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜூன் 14, 2022: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என குரல் கொடுத்தனர். அதிமுகவில் குழப்பம் தொடங்கியது. ஜூலை 23இல் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு முயற்சி எடுத்தது.

ஜூன் 16, 2022: ஒற்றை தலைமை திட்டத்தை எதிர்த்த ஓபிஎஸ், இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என கூறினார்.

ஜூன் 20, 2022: ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜூன் 22, 2022: தனி நீதிபதி அமர்வு பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தார். அந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் டிவிஷன் அமர்வில் முறையீடு செய்தார்.

 

அதிமுக வழக்கு

ஜூன் 23, 2022: பொதுக்குழுவை நடத்த இரு நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்தது. ஆனால் ஒற்றை தலைமை பிரச்னையைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. அதே நாள் கூடிய இபிஎஸ் தலைமையிலான பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட தீர்மானிக்கப்பட்டது.

ஜூலை 6, 2022: இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

ஜூலை 8, 2022: இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஜூலை 11, 2022: சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தது; அதே நாளில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

ஆகஸ்ட் 17, 2022: ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆகஸ்ட் 27, 2022: ஒரு நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது.

செப்டம்பர் 2, 2022: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது குறித்து இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. https://www.bbc.com/tamil/india-62777477

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.