Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன?

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மன்னர் சார்ல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார்.

இப்போது என்ன நடக்கிறது?

ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது.

லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட்டன் நேரப்படி காலை 10மணிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக அரசராக அறிவிக்கப்படுவார்.

அரசரின் அதிகாரங்கள் என்னென்ன?

அரசர் பிரிட்டன் அரசத் தலைவர். இருப்பினும், அவரது அதிகாரங்கள் குறியீடு மற்றும் சம்பிரதாயம் மட்டுமே. அரசியல் ரீதியாக அவர் நடுநிலை வகிப்பார்.

அரசிடமிருந்து முக்கியமான கையொப்பம் தேவைப்படும் ஆவணங்கள், கடிதங்கள், கூட்டங்களுக்கான விளக்கங்கள் உள்ளிட்டவை சிவப்பு தோல் பெட்டியில் அவருக்கு வரும்.

பொதுவாக புதன்கிழமையன்று அரசரை நாட்டின் பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திப்பார். அரசாங்க விவகாரங்களை அவருக்குத் தெரிவிப்பார்.

இந்த சந்திப்புகள் முற்றிலும் தனிப்பட்டவை. அதில் பேசப்படுவை பற்றி எந்தப் பதிவும் இருக்காது.

அரசருக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பணிகள் என்னென்ன?

அரசை நியமித்தல்- வழக்கமாக பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அங்கு அவரிடம் முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்ற முதல் கூட்டம், அரசரின் உரை - ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்களை அறிவிப்பார்.

அரச ஒப்புதல் - ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடைசியாக 1708- இல் அரச ஒப்புதல் மறுக்கப்பட்டது.

 

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொடக்க நிகழ்வில் இளவரசர் சார்ல்ஸுடன் ராணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொடக்க நிகழ்வில் இளவரசர் சார்ல்ஸுடன் ராணி

இவை தவிர நாட்டுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு அரசர் விருந்தளிப்பார். பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக உயர் ஆணையர்களைச் சந்திப்பார். நவம்பர் மாதம் லண்டனில் உள்ள அடையாளக் கல்லறையில் நடைபெறும் வருடாந்திர நினைவு நிகழ்வுக்கு அரசர் தலைமை தாங்குவார்.

56 சுதந்திர நாடுகள் மற்றும் 240 கோடி மக்களைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக புதிய மன்னர் இருப்பார். அவற்றில் 14 நாடுகளுக்கு அவர் அரசத் தலைவராகவும் இருப்பார்.

இருப்பினும் 2021-ஆம் ஆண்டில் பார்படாஸ் நாடு பிரிட்டன் அரசத் தலைமையை விட்டு குடியரசாக மாறியதில் இருந்து கரீபியனில் உள்ள பிற காமன்வெல்த் நாடுகளை இதையே பின்பற்றலாம் எனக் கருதப்படுகிறது.

தபால் வில்லைகள், பேங்க் ஆப் இங்கிலாந்தின் பணத் தாள்கள், புதிய பாஸ்போர்ட்கள் ஆகியவற்றில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக புதிய மன்னரின் படம் அல்லது பெயர் இடம்பெறும்.

தேசிய கீதம் இனிமேல் "God Save the King" என மாறிவிடும்.

முடி வரிசை எவ்வாறு செயல்படுகிறது?

முடி வரிசை அல்லது வாரிசுரிமை வரிசை என்பது அரசத் தலைவராக இருப்பவர் இறக்கும்போதோ அல்லது பதவியைத் துறக்கும்போதோ அரச குடும்பத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது.

அரசர் அல்லது ராணியின் முதல் குழந்தை இந்த வரிசையில் முதலாவதாக இருப்பார்.

ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததும் அவரது முதல் குழந்தையாக இருப்பதால் சார்ல்ஸ் மன்னரானார். அவரது மனைவியான கமீலா அரசத் துணைவரானார்.

2013-ஆம் ஆண்டில் அரச குடும்ப வாரிசுரிமை விதிகள் திருத்தப்பட்டன. அதன்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாரிசுரிமையில் சமவாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது மகன்களுக்கு அவர்களுடைய மூத்த சகோதரிகளைவிட முன்னுரிமை கிடைக்காது.

இப்போது மன்னர் சார்ல்ஸின் வாரிசு அவருடைய மூத்த மகனான இளவரசல் வில்லியம். அவருக்கு தந்தையின் கான்வால் கோமகன் பட்டம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

 

1px transparent line

 

அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்

 

1px transparent line

கிங் சார்ல்ஸின் வாரிசு அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார், அவர் தனது தந்தையின் டியூக் ஆஃப் கார்ன்வால் பட்டத்தை பெற்றார். இருப்பினும், அவருக்கு தானாகவே வேல்ஸ் இளவரசர் பட்டம் கிடைத்துவிடாது. அது அவருக்கு அரசரால் வழங்கப்பட வேண்டும்.

இளவரசர் வில்லியமின் மூத்த குழந்தையான இளவரசர் ஜார்ஜ் அரியணைக்கான வாரிசு உரிமை வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூத்த மகள் இளவரசி சார்லோட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்?

முடிசூட்டு விழா என்பது அரசருக்கு முறைப்படி முடிசூட்டப்படும் விழா. இது முந்தைய அரசத் தலைவருக்கான துக்க காலம் முடிந்த பிறகு நடைபெறும்.

தந்தை ஆறாம் ஜார்ஜ் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி மறைந்ததும் இரண்டாம் எலிசபெத் ராணியானார். ஆனால் 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை அவரை அவர் முடிசூட்டிக் கொள்ளவில்லை.

 

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டப்பட்ட 39-ஆவது அரசத் தலைவர் ராணி இரண்டாம் எலிசபெத்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டப்பட்ட 39-ஆவது அரசத் தலைவர் ராணி இரண்டாம் எலிசபெத்

புதிய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டுவிழா எப்போது நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டுவிழாதான் முதன் முதலில் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. அதை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தனர்.

கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டு விழா நடைபெற்று வருகிறது. வில்லியம் தி கான்குவரர் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் அரசர். சார்லஸ் அந்த வரிசையில் 40-ஆவது அரசர்.

இது ஒரு ஆங்கிலிகன் மத சேவை. கேன்டர்பரி பேராயர் இதை நடத்துவார்.

அரசுக்கு "புனித எண்ணெய்யால்" அபிஷேகம் செய்யப்படும். அரசின் சின்னங்களான உருண்டையும் செங்கோலும் வழங்கப்படும். இறுதியாக சார்ல்ஸின் தலையில் செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை பேராயர் வைப்பார். இது 1661 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு திடமான தங்க கிரீடம்.

இது லண்டன் கோபுரத்தில் உள்ள அரச நகைகளில் மையமானது. முடிசூட்டும் தருணத்தில் மட்டுமே மன்னர் அணிவார்.

அரச திருமணங்களைப் போலல்லாமல், முடிசூட்டு விழா என்பது ஓர் அரசு விழா. இதற்கான செலவை அரசே ஏற்கிறது. விருந்தினர் பட்டியலையும் அரசே தீர்மானிக்கிறது.

அரச குடும்பத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?

கார்ன்வால் மற்றும் கேம்பிரிட்ஜ் கோமகன் (இளவரசர் வில்லியம்): மன்னர் சார்ல்ஸ் மற்றும் அவரது முதல் மனைவி டயானா ஆகியோரின் மூத்த மகன். அவர் கான்வால் மற்றும் கேம்பிரிட்ஜ் கோமகளை (கேத்தரின்) மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ்.

இளவரசி ராயல் (இளவரசி ஆன்னி) ராணியின் இரண்டாவது குழந்தை, ஒரே மகள். துணை அட்மிரல் திமோதி லாரன்ஸை அவர் மணந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அவரது முதல் கணவர் கேப்டன் மார்க் பிலிப்ஸுடன் பீட்டர் ஃபிலிப்ஸ், மற்றும் ஜாரா டிண்டால்.

 

2019-இல் நடந்த ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் அரச குடும்பத்தினர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

2019-இல் நடந்த ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் அரச குடும்பத்தினர்.

வெசெக்ஸ் கோமகன் (இளவரசர் எட்வர்ட்) ராணியின் இளைய குழந்தை. அவர் வெசெக்ஸ் கோமகளை (சோஃபி ரைஸ்-ஜோன்ஸ்) மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: லூயிஸ் மற்றும் ஜேம்ஸ் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்

யார்க் கோமகன் (இளவரசர் ஆண்ட்ரூ) ராணியின் இரண்டாவது மகன். அவரது முன்னாள் மனைவி, யார்க் கோமகள் (சாரா பெர்குசன்) உடன் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்: இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜெனி. வர்ஜீனியா கியூஃப்ரேவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2019-இல் அரச குடும்ப பதவியில் இருந்து விலகினார். 2022 பிப்ரவரியில் கியூஃப்ரே கொண்டு வந்த வன்கொடுமை வழக்கை முடிப்பதற்காக வெளியிடப்படாத தொகை ஒன்றை தொகையை ஆண்ட்ரூ கொடுத்தார்.

சசெக்ஸ் கோமகன் (இளவரசர் ஹாரி) வில்லியமின் இளைய சகோதரர். அவர் சசெக்ஸ் கோமகளை (மேகன் மார்க்ல்) மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: ஆர்ச்சி மற்றும் லிலிபெட். 2020-ஆம் ஆண்டில், அவர்கள் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அமெரிக்காவுக்குச் சென்றனர்

அரச குடும்ப உறுப்பினர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

அரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் முன்பு லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸிலும், க்ளவ்செஸ்டர்ஷையரில் உள்ள ஹைக்ரோவிலும் வசித்து வந்தனர்.

இளவரசர் வில்லியம், கேத்தரின் ஆகியோர் மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையிலிருந்து குயின்ஸ் வின்ட்சர் தோட்டத்தில் உள்ள அடிலெய்ட் காட்டேஜுக்கு சமீபத்தில் குடிபெயர்ந்தனர்.

 

அரச குடும்பம்

பட மூலாதாரம்,PA MEDIA

இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ் ஆகியோர் பெர்க்ஷயரில் அஸ்காட் அருகே உள்ள லாம்ப்ரூக் பள்ளிக்குச் செல்கின்றனர்.

இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் ஆகியோர் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர்.

மன்னராட்சிக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது?

ராணியின் பிளாட்டின விழா நடந்த நேரத்தில் YouGov நடத்திய கருத்துக் கணிப்பில், 62% பேர் நாடு முடியாட்சியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். 22% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினர்.

2021-இல் இரண்டு Ipsos Mori கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தன. ஐந்தில் ஒருவர் முடியாட்சியை ஒழிப்பது நாட்டுக்கு நல்லது என்று நம்புவதாக அந்த முடிவுகள் தெரிவித்தன.

இருப்பினும், YouGov ஆய்வின் முடிவுகள் கடந்த தசாப்தத்தில் முடியாட்சிக்கான மக்கள் ஆதரவு சரிந்திருப்பதைக் காட்டியது. 2012 இல் 75% ஆக இருந்தது 2022 இல் 62% ஆக சரிந்துள்ளது.

வயதானவர்களிடையே முடியாட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும், இளையவர்களிடம் பெரும்பான்மை ஆதரவில்லை என்று கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியது.

2011 இல், YouGov முதன்முதலில் இந்த அம்சத்தை பதிவு செய்யத் தொடங்கியபோது 18 முதல் 24 வயதுடையவர்களில் 59% பேர் முடியாட்சி தொடர வேண்டும் என்று கூறினர். இது 2022 இல் 33% ஆகக் குறைந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/global-62855488

அரசர் சார்ல்ஸ், தேசத்திற்கான தனது முதல் உரையில் என்ன பேசினார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் உரையாற்றினார்

 

படக்குறிப்பு,

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் உரையாற்றினார்

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

செப்டம்பர் 8, வியாழக்கிழமை அன்று அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அவர் உரையாற்றினார்.

லண்டனில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் ராணியின் நினைவாக நடைபெற்ற சேவையின் ஒரு பகுதியாக இது நடந்தது. இதில் பிரதமர் லிஸ் டிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் சர் கீர் ஸ்டார்மர், லண்டன் மேயர் சாதிக் கான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் மக்களும் அதில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே ஏராளமானோர் கூடி 96 வயதில் உயிரிழந்த ராணிக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அரசர் சார்ல்ஸ் தனது உரையில் கூறிய சில முக்கிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

1. மறைந்த தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்

அரசர் சார்ல்ஸ், தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு அஞ்சலி செலுத்தி தனது உரையைத் தொடங்கினார்.

அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் "ஓர் உத்வேகம்" மற்றும் "எடுத்துக்காட்டு" என்று ராணியை விவரித்தார்.

"தாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல், புரிதல், முன்மாதிரியாகத் திகழுதல் ஆகியவற்றுக்காக எந்தவொரு குடும்பத்தையும் போலவே நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்."

அவருடையது "நன்கு வாழ்ந்த வாழ்க்கை" என்று அவர் அரசர் சார்ல்ஸ் கூறுகிறார். மேலும், "அவர் மறைந்த நிலையில் அவருக்கு மிக ஆழமாக இரங்கல் வெளிப்படுகிறது" என்றும் கூறினார்.

2. தேசத்தையும் காமன்வெல்த்தையும் குறிப்பிட்டார்

 

செயின்ட் பால் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டிற்காக பொதுமக்கள் திரண்டனர்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

செயின்ட் பால் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டிற்காக பொதுமக்கள் திரண்டனர்

அரசர் சார்ல்ஸ் ராணியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் அடைந்த துயரம் குறித்து மட்டும் பேசவில்லை. ஆனால், அந்த இழப்பு தேசத்திலும் அதற்கு அப்பாலும் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசினார்.

"எனது குடும்பத்தினர் அனைவரும் அனுபவிக்கும் தனிப்பட்ட வருத்தத்துடன், பிரிட்டன், ராணி அரசுத் தலைவராக இருந்த நாடுகள், காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் உள்ள உங்களில் பலருடன், 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த நன்றியுணர்வைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தக் காலத்தில் என் அம்மா, ராணியாக, பல நாடுகளின் மக்களுக்குச் சேவை செய்தார்," என்று அவர் கூறினார்.

"என் தாயின் நினைவாக நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது சேவை வாழ்வை நான் மதிக்கிறேன். அவரது மரணம் உங்களில் பலருக்கும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது என்பதை நான் அறிவேன். அந்த இழப்பின் உணர்வை அளவிட முடியாத அளவுக்கு உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்."

3. அவர் மன்னராகத் தனது பங்கு குறித்துப் பேசினார்

 

அரசர் சார்ல்ஸின் உரையை ஏராளமானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

அரசர் சார்ல்ஸின் உரையை ஏராளமானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர்

தனது உரையின்போது, அரசர் சார்ல்ஸ் புதிய அரசுத் தலைவராக அவர் எடுத்துக்கொள்ளும் கடமைகள் குறித்தும் பேசினார்.

"இங்கிலாந்து திருச்சபையுடன் (சர்ச் ஆஃப் இங்கிலாந்து) அரியணைக்கு உள்ள குறிப்பான உறவுகள், பொறுப்புகளைப் போலவே, அரியணைக்கு ஒரு வகிபாகமும், கடமைகளும் உள்ளன. இந்த திருச்சபையில்தான் எனது நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது," என்று அவர் கூறினார்.

"அந்த நம்பிக்கையிலும் அது புகட்டும் நெறிகளிலும், மற்றவர்களுக்கான நம் கடமை உணர்வைப் போற்றுவது, நமது தனித்துவமான வரலாற்றின் மதிப்புமிக்க மரபுகள், சுதந்திரங்கள், பொறுப்புகள் மற்றும் நமது நாடாளுமன்ற ஆட்சி முறை ஆகியவற்றின் மீது மிகுந்த மரியாதையுடன் நான் வளர்க்கப்பட்டேன்."

"ராணி இத்தகைய அசைக்க முடியாத ஈடுபாட்டுடன் செய்ததைப் போல், நானும் இப்போது உறுதியளிக்கிறேன். கடவுள் எனக்களிக்கும் மீதமுள்ள நேரம் அனைத்தையும் நம் தேசத்தின் இதயத்திலுள்ள அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த வழங்கியுள்ளார்."

"நீங்கள் பிரிட்டனிலோ அல்லது உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களில் எங்கு வாழ்ந்தாலும், உங்கள் பின்னணி அல்லது நம்பிக்கை எதுவாக இருந்தாலும், என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயல்வேன்."

 

சேவையின்போது பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்றினார்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

இந்த நிகழ்வின்போது பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்றினார்.

4. அவர் தனது குடும்பத்தைப் பற்றிப் பேசினார்

அரசர் தனது உரையில் தனது குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்கள் ஏற்கவுள்ள சில முக்கியப் பொறுப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

அவரது மனைவி கமில்லா இப்போது அரசரின் துணைவியாக ராணியாக இருக்கிறார். அதேநேரத்தில் அவரது மகன் வில்லியம் வேல்ஸ் இளவரசராகிறார்.

"எனது வாரிசாக, வில்லியம் இப்போது ஸ்காட்டிஷ் பட்டங்களை எடுத்துக் கொள்கிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அவர் எனக்குப் பிறகு கார்ன்வால் கோமகன் ஆனார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மேற்கொண்டுள்ள கார்ன்வால் கோமகனுக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.

இன்று, நான் அவரை வேல்ஸ் இளவரசர் ஆக்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த பட்டத்தை என் வாழ்க்கை மற்றும் கடமைகளின்போது ஏந்தியிருந்ததற்கு நான் மிகவும் பாக்கியம் பெற்றுள்ளேன்," என்றார்.

தனது உரையில் அவர் இரண்டாவது மகன் ஹேரியையும் குறிப்பிட்டுள்ளார்.

"ஹேரியும் மேகனும் தங்கள் வாழ்க்கையை வெளிநாட்டில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான என் அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்."

 

ஜஸ்டின வெல்பி

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

கேன்டெர்பரி ஜஸ்டின் வெல்பி வசனங்கள் வாசிப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் சேவையை நிறைவு செய்தார்

5. சில இதயபூர்வமான வார்த்தைகளுடன் முடித்தார்

அரசர் தன் வாழ்நாள் முழுவதும் தனது தாயார் செய்த அனைத்துக்கும் நன்றி கூறி மாளிகையிலிருந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

"என் அன்பான அம்மா, என் அன்பான மறைந்த தந்தையுடன் சேர்வதற்கான உங்கள் கடைசி பெரிய பயணத்தைத் தொடங்கும்போது உங்களுக்கு இதைச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய நம் குடும்பம் மற்றும் தேசங்களின் குடும்பத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி.

"தேவதைகள் உங்கள் ஓய்வுக்காகப் பாடட்டும்."

 

2px presentational grey line

அரச குடும்பசெய்தியாளர் சான் காக்லனின் பகுப்பாய்வு

துக்கத்தின்போது அவரது குடும்பத்தைப் பற்றிய மறைக்கப்படாத உணர்ச்சிகள் நிறைந்த, அரசர் சார்ல்ஸின் மிகவும் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திய பேச்சு இது.

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகியோர் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மாறுவார்கள், அடுத்த தலைமுறைக்கு இது கைமாற்றப்படுகிறது என்ற தலைப்பு அறிவிப்பும் இதில் அடங்கும்.

அவர் தனது வாழ்வின் மையத்தில் இருந்த இரண்டு பெண்களை கௌரவப்படுத்தினார். அவரது தாயான ராணி மற்றும் அவரது "அன்பான மனைவி" கமில்லா.

அவர் தனது தாயின் இழப்பில் அடைந்த "ஆழ்ந்த வருத்தம்" அவரது "நன்கு வாழ்ந்த வாழ்க்கை" மற்றும் அவரது "கடமைக்கான தியாகங்கள்" பற்றிப் பேசினார். பல தசாப்தங்களாக மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு இடையே, அவர் தனது சேவை உணர்வுடன் உறுதியாக இருந்தது குறித்துப் பேசினார்.

புதிய அரசர் புதிய ராணியாகும் அவருடைய மனைவி கமில்லா "உறுதியான அர்ப்பணிப்புடன்" இருப்பதாகப் பாராட்டினார். அவரது வாழ்வில் கமில்லா வகிக்கும் முக்கியமான மற்றும் வேறு யாராலும் நிரப்ப முடியாத பங்கை தெளிவுபடுத்தினார்.

"ஹேரி, மேகன் வெளிநாட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டியெழுப்புகிறார்கள்" என்பது குறித்த அன்பின் வெளிப்பாடும் இருந்தது.

மற்றுமொரு தெளிவான செய்தியாக, சார்ல்ஸ் நீண்டகாலத்திற்கு அரசராக இருப்பார், அரியணை அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடவுள் தனக்களிக்கும் நேரத்தில் அர்ப்பணிப்போடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எந்த ஆடம்பரமும் இல்லாமல், ஆட்சி செய்வதைவிட சேவை செய்வதாக உறுதியளிக்கும் வகையில், அதுவொரு முக்கியமான தொனியை அமைக்கும் பேச்சாக இருந்தது. மேலும் இந்த உரை அவருடைய இரண்டு விருப்பங்களான ஷேக்ஸ்பியரையும் மதத்தையும் தொட்டுச் சென்றது.

அரச உலகில் எதுவும் தற்செயலானதாக இல்லை என்றாலும், பக்கிங்ஹாம் மாளிகையிலிருந்து ஆற்றிய இந்த உரை வலிய அதற்கான சுய அடையாளத்தைக் கொண்டிருந்தது.

அவருடைய தாய் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை வழங்கப் பயன்படுத்திய அறையில் அவர் பேசும்போது, இனிப்பு பட்டாணி மற்றும் ரோஸ்மேரி ஆகியவை இருந்தது அவரது நினைவைப் போற்றும் வகையில் இருந்தது.

https://www.bbc.com/tamil/global-62860208

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.