Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா?

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
23 நவம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

துளசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

துளசி

(இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது. சர்வதேச ஓசோன் தினத்தை ஒட்டி இந்த செய்தி மறுபகிர்வு செய்யப்படுகிறது. )

துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன.

அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தாவரவியலாளர்கள் என்பவர்களை மேற்கோள் காட்டிக்கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

துளசி செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுவதாக ஒரு தகவலும் இந்த கட்டுரைகளிலும், வாட்சாப் ஃபார்வார்டுகளிலும் பரப்பப்படுகிறது.

 

உண்மையில் துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா? உண்மையாகவே ஒரு தாவரம் ஓசோன் வாயுவை வெளியிடுவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த வாயு புவியில் சுற்றுச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதா என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்வோம்.

அதற்கு முன்னதாக துளசி, ஓசோன் இரண்டின் பின்னணியையும் பார்ப்போம்.

துளசி - மருத்துவமும், நம்பிக்கையும்

துளசி பாரம்பரியமாக இந்தியாவில் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, அதற்கு ஒரு சமய முக்கியத்துவமும் இருக்கிறது. குறிப்பாக வைணவத்தில் துளசி மிகவும் பக்திக்குரிய ஒரு செடி.

 

சிவப்புக் கோடு

துளசியைப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சைகளையோ, அது தொடர்பான சமய நம்பிக்கையையோ நாம் இங்கே விவாதிக்கவில்லை.

ஓசோன் என்பது என்ன?

ஓசோன் என்பது ஒரு வாயு. நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்சிஜன் வாயுவின் இன்னொரு வடிவம், மாற்றுருதான் ஓசோன்.

ஓர் ஆக்சிஜன் மூலக்கூறில் இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். எனவே இது O2 என குறிக்கப்படும். ஆக்சிஜனின் மாற்றுருவான ஓசோன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். எனவேதான் ஓசோன் O3 என்று குறிக்கப்படுகிறது.

வளி மண்டலத்தின் மேலடுக்கில் பெருமளவு ஒரு படலம் போல படிந்திருக்கும் ஓசோன் வாயு, சூரியக் கதிர்களில் வெளிச்சத்தோடு சேர்ந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சை வடிகட்டி நிறுத்தி புவியில் உள்ள உயிர்களைப் பாதுகாக்கிறது.

 

ஓசோன் - 3 ஆக்சிஜன் அணுக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

3 ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஆக்சிஜனின் ஒரு மாற்றுருவே ஓசோன்.

புவியில் பல்வேறு மனித நடவடிக்கைகளால் உற்பத்தியாகும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற சில வாயுக்கள் மேலே சென்று இந்த ஓசோன் படலத்தை அரித்துவிடுவதால், ஆபத்தான கதிர்வீச்சு நேரடியாக புவியைத் தாக்கும் என்ற விழிப்புணர்வு கடந்த சுமார் 20 ஆண்டுகளாக பரவலாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓசோன் வாயு நல்லது என்ற எண்ணமும் பரவலாக ஊறிவிட்டது.

கேள்வி என்ன?

விளக்குத் திரியில் சுடராக இருந்து ஒளி தரும் நெருப்பு, கூரையில் பற்றினால், பேரழிவை உண்டாக்குகிறது. நெருப்பு எங்கே இருக்கிறது என்பதைப் பொருத்தே அதன் விளைவும் இருப்பதைப் போலவே, ஓசோன் எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் பலனும். எனவே கேள்வி ஓசோன் நல்லதா என்பதல்ல. அது எந்த இடத்தில் நல்லது என்பதுதான்.

எனவே துளசி ஓசோனை வெளியிடுகிறதா? அப்படி ஓசோன் வெளியிடப்பட்டால், புவியில் நாம் வாழும் தரைப்பகுதியில் அது நன்மையை ஏற்படுத்துமா என்பது மட்டுமே நம் முன்பு உள்ள கேள்வி.

வெவ்வேறு விதமான பின்னணிகள் உடைய மூன்று விஞ்ஞானிகளிடம் இந்தக் கேள்வியை தனித்தனியாக கேட்டோம்.

அதி உயர் ஆற்றல், கதிர்வீச்சு

உயிரித் தொழில்நுட்பவியல் வல்லுநரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின், யு.கே. டெமென்ஷியா ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநராக இருந்தவருமான லாரன்ஸ் ராஜேந்திரனிடம், துளசி செடி ஓசோனை வெளியிடும், அது சூழலுக்கு நல்லது போன்ற இந்த வாதங்களை சுட்டிக் காட்டியபோது, "இவை அபத்தமானவை" என்றார்.

ஓசோன் உற்பத்தி நடக்கவேண்டுமானால், அதற்கு அதி உயர் ஆற்றல், கதிரியக்கம் தேவை. இந்த அளவிலான ஆற்றல் வளி மண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில்தான் கிடைக்கும். புவியில் கிடைக்காது என்று அவர் விளக்கினார்.

இதைத் தவிர, சில வகை மரங்களில் இருந்து வெளியாகும் நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்கள் (Volatile Organic Compounds) புவியில் உண்டாகும் மாசுபாடுகளுடன் வினைபுரிந்து சிறிதளவு ஓசோனை உற்பத்தி செய்யும். அந்த ஓசோனால் புவியில் நன்மை ஏதும் இல்லை. ஆனால், அப்படி ஓசோன் உற்பத்தி ஆவதற்கான நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்களை வெளியிடும் தாவரங்களின் பட்டியலில் துளசி இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினார் லாரன்ஸ் ராஜேந்திரன். இது தொடர்பாக சில அறிவியல் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டினார் அவர்.

 

துளசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

துளசி

அப்படி அவர் மேற்கோள் காட்டிய கட்டுரைகளில் ஒன்று ப்ளூம்பெர்க் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சில வகை மரங்கள் அதிக அளவில் நிலயற்ற கரிம கூட்டுப் பொருளை வெளியிட்டு ஓசோன் உற்பத்திக்கு காரணமாகின்றன என்றும் எனவே, அத்தகைய மரங்களை நகர்ப்புறங்களில் அதிகம் நடக்கூடாது என்றும் எச்சரித்திருந்தது அந்தக் கட்டுரை.

அதாவது, நேரடியாக தாவரங்கள் ஓசோன் உற்பத்தி செய்வதில்லை என்றாலும், அப்படி ஓசோன் உற்பத்திக்கு மறைமுகமாக காரணமாகும் மரங்களை நடக்கூடாது என்று பரிந்துரைக்கிறது அந்தக் கட்டுரை.

எந்த உயிரியாவது ஓசோனை உற்பத்தி செய்யுமா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரித் தகவலியல் துறையின் முதுநிலை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவரான எஸ்.கிருஷ்ணசாமியிடம் இதே கேள்விகளைக் கேட்டோம்.

துளசி என்று இல்லை எந்த உயிரிகளாலும் ஓசோனை உற்பத்தி செய்ய முடியாது என்றார் அவர்.

"ஓசோனை உற்பத்தி செய்வதற்கான எந்த பரிணாம பொறியமைப்பும் (evolutionary mechanism) தாவரங்களிடம் இல்லை. ஓசோனை உற்பத்தி செய்வதற்கான எந்தவிதமான உயிரி வேதியியல் வழிவகையும் (bio chemical pathway) தாவரங்களில் இல்லை" என்று அறுதியிட்டுக் கூறினார் அவர்.

அதைப் போலவே கிருமி நாசினியாக சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நாம் வாழும் புவியின் தரைப்பகுதியில் ஓசோனுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

லாரன்ஸ் ராஜேந்திரன் குறிப்பிட்டதைப் போலவே, பேராசிரியர் கிருஷ்ணசாமியும் இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்தினார். நேரடியாக எந்த தாவரத்தாலும் ஓசோனை உற்பத்தி செய்ய முடியாது என்றாலும், சில வகை மரங்கள் வெளியிடும் நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்கள் (VOC) வாகனப்புகை போன்ற மாசுபாடுகளில் உள்ள சில பொருள்களோடு வினைபுரிந்து சிறிதளவு ஓசோனை உற்பத்தி செய்யும்.

 

புவியை வந்தடையும் சூரியக் கதிர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த ஓசோன்கூட தரைப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதே என்று குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்ட நிலையற்ற கரிம கூட்டுப் பொருள்களை வெளியிடும் தாவரங்களின் பட்டியலில் துளசி இல்லை என்பது மட்டுமல்ல, துளசி இடம் பெற்றுள்ள உயிரியல் குடும்பமான லேமியேசியே குடும்பத்தில் இருந்து ஒரு சிற்றினம்கூட அந்தப் பட்டியலில் இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

ஓசோன் -சுவாசித்தால் உயிரைப் பறிக்கும்

இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் இது பற்றிக் கேட்டோம்.

துளசி ஓசோனை வெளியிடும் என்ற கூற்றையும், புவியின் தரைப்பகுதியில் ஓசோன் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் என்ற கூற்றையும் அவர் கடுமையாக மறுத்தார். "இப்படி சில பத்திரிகைகளில் வெளியான தகவல்களை மறுத்து ஏற்கெனவே கட்டுரையே எழுதியிருக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், இது தாவரவியலின் அடிப்படைகளுக்கே முரணான தகவல் என்றார்.

மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே முக்கியமாக இயற்கையில் ஓசோன் உற்பத்தியாகும் என்று குறிப்பிட்ட அவர் அந்த மூன்று சூழ்நிலைகளைப் பட்டியலிட்டார். வளி மண்டல மேலடுக்கான ஸ்ட்ரேடோஸ்பியரில் ஆக்சிஜன் மூலக்கூறுகளோடு, சூரியனின் ஆற்றல் வினைபுரிந்து ஓசோன் உருவாகிறது. சூரியனின் இன்னொரு கதிர்வீச்சால் அது சிதையவும் செய்கிறது.

மின்னல் அடிக்கும்போது உண்டாகும் அதீத ஆற்றல் காரணமாக கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

எரிமலை வெடிப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது. இவை மூன்றும்தான் இயற்கையில் ஓசோன் உற்பத்தியாகும் சூழ்நிலைகள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓசோனை வெளியிடும் உயிரினங்கள் இருக்கவே முடியாது என்பதற்கு அவர் வேறொரு வாதத்தையும் வைத்தார். ஓசோனை வெளியிடவேண்டுமானால், அதற்கு அதீதமான ஆற்றலை செலவிடவேண்டும். அப்படி ஓர் உயிரினம் கற்பனையாக அதீதமான ஆற்றலை செலவிடுவதாக வைத்துக்கொண்டால், அது பலவீனமாக மாறி அப்படி ஓசோனை வெளியிடாத உயிரினங்களின் முன்பு பிழைத்திருக்க முடியாமல் அழிந்துவிடும். ஆனால், இது கற்பனையான வாதம்தான். உண்மையில் ஓசோனை வெளியிடும் உயிரினம் எதுவும் இல்லை என்றார் வெங்கடேஸ்வரன்.

 

புவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வேளை துளசி செடி ஓசோனை வெளியிடுவதாக வைத்துக் கொண்டால் அதை சுவாசிப்பவர்களுக்கு அதனால் தீங்குதான் ஏற்படும். ஏனெனில் ஓசோன் வாயு அதை சுவாசிப்பவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும். ஓசோன் புவியின் தரைப்பகுதியில் இருந்து 15 கி.மீ. உயரத்துக்கு மேல் இருக்கும்போது அது கதிர்வீச்சை வடிகட்டி நன்மை செய்யும். ஆனால், தரைப்பகுதியில் நேரடியாக உயிரினங்கள் அதை சுவாசித்தால் அது உயிருக்கு ஆபத்துதான் என்றார் அவர்.

எனவே, அவர்கள் சொல்வது போல துளசி செடி உண்மையில் ஓசோன் உற்பத்தி செய்யுமானால், அதையும் பிடுங்கி அழிக்கவேண்டியிருக்கும். ஆனால், உண்மை என்னவெனில், துளசி ஓசோன் உற்பத்தி செய்யவில்லை என்பதுதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

மூன்று விஞ்ஞானிகளின் கருத்து - சாரம்

இந்த மூன்று விஞ்ஞானிகளுமே கூறுகிற விஷயத்தின் சாரம் இதுதான்.

துளசி செடி மட்டுமல்ல, எந்த தாவரமும், உயிரினமும் ஓசோனை வெளியிட முடியாது. அதற்கான கட்டமைப்பே எந்த உயிரினத்திடமும் இல்லை. வளி மேலடுக்கில் கவசமாக இருந்து காப்பாற்றுகிற ஓசோன் புவியின் தரைப் பகுதியில் ஒருவேளை உற்பத்தியாகுமானால், அது சுற்றுச்சூழலுக்கும் தீங்குதான். உடல் நலத்துக்கும் தீங்குதான். ஆனால், அப்படி ஒரு தீங்கை துளசி செடி செய்யவில்லை. https://www.bbc.com/tamil/science-55026742

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.