Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க. ஸ்டாலின் சொன்ன 'தூங்க விடாமல் செய்த சம்பவங்கள்' என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மு.க. ஸ்டாலின் சொன்ன 'தூங்க விடாமல் செய்த சம்பவங்கள்' என்ன?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/MKSTALIN

 

படக்குறிப்பு,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமையன்று தி.மு.கவின் பொதுக் குழுவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறியிருக்கிறார். என்ன நடக்கிறது?

ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024ஆம் ஆண்டு தேர்தலில் முழுமையாக வெற்றிபெறுவது, பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது எனப் பல விஷயங்கள் குறித்துப் பேசினாலும், தம்முடைய சொந்தக் கட்சியினர் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் பேசிய பேச்சுக்களே தற்போது வெகுவாகக் கவனிக்கப்பட்டிருக்கின்றன.

"மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறைசொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்துவரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான். ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது.

 

பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறையின் காரணமாக தி.மு.க. பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளானது. இன்றைக்கும் நம் வீட்டின் குளியலறை, படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாக ஆகிவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்" என்று பேசினார்.

 

போட்டியிட மனு கொடுக்கும் ஸ்டாலின்

பட மூலாதாரம்,@UDHAYSTALIN/TWITTER

கட்சிக்குத் தர்மசங்கடம் உருவாக்கும் வகையில் கட்சியினரும் அமைச்சர்களும் பேசிய அல்லது நடந்துகொண்ட பல சம்பவங்கள் சமீபத்தில் நடந்திருப்பதன் தொடர்ச்சியாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

சம்பவங்களின் விவரங்கள்

 

சிவப்புக் கோடு

1. செப்டம்பர் 23ஆம் தேதி: தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த குருவிக்கார இன மக்களை நரிக்குறவர் என்ற பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதி தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை பார்க்க சென்றபோது அமர இருக்கை கூட கொடுக்காமல் அவமதித்துவிட்டதாக குறவர் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவியதால், எதிர்க்கட்சியினர் இது குறித்து கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டனர்.

2. ஜூலை 9ஆம் தேதி: விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரிடம் உதவி கேட்டு மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனுவைக்கப்பட்டிருந்த கவரால் தலையில் அடித்தார். அந்த பெண்ணை அமைச்சர் தலையில் அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்குப் பிறகு, அமைச்சர் தன் உறவினர் என்றும் அவர் தன்னைத் தலையில் அடிக்கவில்லை என்றும் அந்தப் பெண்ணே ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கும் காட்சிகளும் வெளிவந்தன.

3. செப்டம்பர் மாதம் ஒரு தி.மு.க. கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "உங்க குடும்ப கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா? இல்லையா? வாங்குனீங்களா? வாயை திறங்க... 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா... இப்ப பஸ்ஸுல எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போனும்னாலும், வேற எங்க போனும்னாலும் ஓசி, ஓசி. ஓசி பஸ்ஸுல போறீங்க" என்று கூறினார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. மாநிலத்தின் பல பகுதிகளில் பெண்கள் பேருந்துகளில் ஏறி, தங்களுக்கு கட்டணப் பயணச் சீட்டு அளிக்க வேண்டுமென கோரிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "விளையாட்டா சொன்னதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கலாமா?" என்று கேட்டார்.

 

M.K. STALIN

பட மூலாதாரம்,M.K. STALIN

4. செப்டம்பர் 21ஆம் தேதி: விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஒன்றின் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பேசினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரைப் பார்த்து, 'ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்' என்று கூறியதோடு, அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏம்மா…நீ எஸ்.சி தானே" என்று கேட்டார். அதற்கு அந்த பெண் தலைவர் ஆமாங்க என்று பதில் சொன்னார். அமைச்சரின் செயல்பாடு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

5. இதே செப்டம்பர் மாதத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன், "அதே மாதிரி எங்களுக்குக் கொடுக்குறேன்னீங்களே ஆயிரம், அது எங்கன்னு கேக்குறீங்களா? அதுவும் சில்லரை மாத்திக்கிட்டிருக்கோம். சீக்கிரம் கொடுத்துடுவோம். கவலைப்படாதீங்க.. உங்கம்மாளுக்கும் ஆயிரம், பொண்ணுக்கும் ஆயிரம். இரண்டாயிரம் கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்" என்றார். இதுவும் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

6. திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளுக்கான டெண்டர் விடுவதில் பிரச்சனை இருந்தபோது, அதைப் பற்றிப் பேசவந்த ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "உங்களுக்குப் பிரச்சனை வந்தால், நான்தான் வந்து உக்காருவேன். திருப்பத்தூர் எம்.எல்.ஏ. வந்து உக்காருவானா? அந்தாளு என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது. 40 சதவீதம் உங்களுக்கு, 60 சதவீதம் எங்களுக்கு என முடிச்சுக்கிருவோம்" என்றார். இதை வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பட்டதாகச் சமாளித்தார் வில்வநாதன்.

காணொளிக் குறிப்பு,

"இதைவிட கட்சி துரோகம் எதுவும் இருக்க முடியாது" - திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின்

7. மனோரா கோட்டையைப் புதுப்பிக்கும் பணியில் சுற்றுலாத் துறை ஈடுபட்டிருக்கிறது. அந்தப் பணியில் தனக்கு கமிஷன் வரவில்லையென அந்த பணியை காண்ட்ராக்ட் எடுத்தவரிடம் அந்த ஊராட்சியின் மன்றத் தலைவரின் கணவர் முகமது அலி ஜின்னா பேசும் வீடியோ வெளியில் வந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

8. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்திற்கும் நில உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், நில உரிமையாளருக்கு ஆதரவாகத் தலையிட்ட தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா, நிறுவனத்தின் உரிமையாளரை "கையைக் காலை உடைச்சுடுவேன்" என்று மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 

சிவப்புக் கோடு

இந்தப் பின்னணியில்தான் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன பிரச்சனையோடு விடியுமோ என்ற பயத்தில் தனக்குத் தூக்கமே வருவதில்லை என்று பேசியிருக்கிறார்.

"பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இவர்கள் சமயங்களில் மறந்துவிடுகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் படித்தவர்கள். கலைஞரிடம் அரசியல் பழகியவர்கள். இந்தப் பின்னணியெல்லாம் மீறி சமூகவலைதளங்களின் காலத்தில் இப்படிப் பேசுவது அவர்களது அலட்சியத்தைத்தான் காட்டுகிறது. தமிழ்நாட்டில் எவ்விதமான அரசியல் சூழல் இருக்கிறது, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் மறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய செயல்பாடு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் முதல்வர் இப்படிப் பேசியிருப்பார்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன் ராஜசேகரன்.

 

பிரதமருக்கு பரிசளிக்கும் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர்களின் பேச்சினால், பெண்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் விலக்களிக்கும் திட்டமே அபாயத்திற்குள்ளாகும் அளவுக்குப் போய்விட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "பேருந்துக் கட்டண விலக்கால் பயன்பெறும் பெண்களை வைத்தே எதிர்க்கட்சிகள் அந்தத் திட்டத்தை குறைசொல்ல வைக்கப்படுகிறது. சூழல் இம்மாதிரி இருக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?" என்கிறார் அவர்.

அ.தி.மு.கவின் தலைவராக ஜெயலலிதா இருந்தபோது, இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசுபவர்கள், நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்தனர்.

2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அ.தி.மு.கவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அந்தப் பதவிலியிருந்து நீக்கப்பட்டார். இரண்டு தனியார் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகளுக்காகவே அவர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகப் பேட்டியளித்த அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பியான மலைச்சாமி, அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். இதையடுத்து அவர் உடனடியாக கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/global-63200526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.