Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசித்திர சக்தி கொண்ட'தீய கண்' - உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசித்திர சக்தி கொண்ட'தீய கண்' - உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி?

  • குவின் ஹர்கிடாய்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தீய கண்

பட மூலாதாரம்,DANM / GETTY IMAGES

பண்டைய எகிப்து நாகரிகத்தில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கும் சின்னமான 'ஐ ஆஃப் ஹோரஸ்' காலம் தொடங்கி தற்போதுவரை மனித கற்பனையில் கண்கள் நிலையான இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் க்வின் ஹர்கிடாய்.

உலகின் மர்மமான தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பதற்கான குறியீடாக நம்பப்படும் 'தீய கண்' போல வேறு எந்த அடையாளமும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. 'வசீகரமான நீல நிறக்கண்கள்' இஸ்தான்புல் நகரின் சந்தைகள், விமானத்தின் இரு பக்கங்கள், காமிக் புத்தகங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ளன.

கடந்த தசாப்தத்தில், ஃபேஷன் உலகிலும் 'தீய கண்' படங்கள் அடிக்கடி தோன்றின. அமெரிக்க ஊடக பிரபலமான கிம் கர்தாஷியன், பல சந்தர்ப்பங்களில் எடுத்த புகைப்படங்களில் 'தீய கண்' குறியீடு பொறிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அதேபோல, 'தீய கண்'குறியீடு பிரபலமடையைத் தொடங்கியதும் பேஷன் மாடல் ஜிகி ஹடிட், EyeLove shoe line எனப்படும் கண் படம் பொறிக்கப்பட்ட ஷுக்களை கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பல பிரபலங்கள் 'தீய கண்' குறியீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியதும், அதை எப்படி உருவாக்குவது என்பது தொடர்பான விளக்கப் பயிற்சி காணொளிகள் இணையதளங்களில் அதிகமாக வலம்வருகின்றன. 'தீய கண்' குறியீடு திடீரென பிரபலமடைவது போலத் தெரிந்தாலும், உண்மையில் மனிதக் கற்பனையில் பல்லாயிரம் ஆண்டுகளாக அவை நிலையான இடத்தைக் கொண்டிருக்கின்றன.

 

தீய கண்

பட மூலாதாரம்,METROPOLITAN MUSEUM OF ART

'தீய கண்' குறியீடு எங்கிருந்து தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் தாயத்துக்கும், தீய கண்ணுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறாமையோடு ஒருவர் நம்மைப் பார்க்கும்போது, அவர் கண்களில் இருந்து வெளிப்படும் தீய சாபத்தில் இருந்து தாயத்துகள் நம்மைக் காப்பதாக நம்பப்படுகிறது. தாயத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் 'நாசர்' என அழைக்கப்படுகின்றன.

'தீய கண்ணின் சாபம்' என்பது புரிந்து கொள்ள சிக்கலான விஷயமல்ல. பெரிய வெற்றி அல்லது அங்கீகாரம் பெற்ற ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொறாமையையும் சம்பாதிக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்து இது உருவாகிறது. அந்தப் பொறாமை ஒரு சாபமாக வெளிப்படுகிறது. அது அவர்களின் நல்ல அதிர்ஷ்டத்தை கெடுத்துவிடும்.

பண்டைய கிரேக்க காதல் கதையான 'எதியோபிகா'வில் எமேசாவின் ஹீலியோடோரஸ் இந்தக் கருத்தை தெளிவாகக் கூறியுள்ளார். அதில் அவர், "பொறாமை கொண்ட கண்களால் சிறந்த ஒன்றைப் பார்க்கும்போது அவர் தன்னைச் சுற்றியுள்ள சூழலை எதிர்மறை எண்ணங்களால் நிரப்புகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாபத்தின் மீதான நம்பிக்கை பல கலாசாரங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி பரவியுள்ளது. இன்றுவரை தீய கண் தொடர்பான புராணக்கதைகளில் ஃபிரடெரிக் தாமஸ் எல்வொர்த்தியின் 'தி ஈவில் ஐ: தி கிளாசிக் அக்கவுண்ட் ஆஃப் ஆன்சியன்ட் சூப்பர்ஸ்டிஷன்' புத்தகம் முழுமையான தொகுப்பாகப் பார்க்கப்படுகிறது. கிரேக்க கோர்கன்களின் பயமுறுத்தும் பார்வை முதல் ஒரே பார்வையில் குதிரைகளை மயக்கக் கூடிய ஐரிஷ் நாட்டுப்புறக் கதைகள் வரை பல கலாசாரங்களை எல்வொர்த்தி ஆய்வு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாசாரத்திலும் தீய கண் தொடர்பான புராணக்கதை உள்ளது. கண் சின்னம் அனைத்து கலாசாரத்திலும் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. பைபிள் மற்றும் குர்ஆன் உள்ளிட்ட மத நூல்களிலும் அது தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறது.

கண்ணுக்கு கண்

தீய கண் மீதான நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கை அல்ல. பல புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிரேக்க தத்துவஞானி புளூடார்ச் தனது சிம்போசியாக்ஸ் புத்தகத்தில், தீய கண் குறித்து ஒரு விஞ்ஞான விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில் அவர், "மனிதக் கண்களுக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆற்றல் கதிர்களை வெளியிடும் சக்தி உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அது குழந்தைகளையோ அல்லது சிறிய விலங்குகளையோ கொல்ல போதுமானது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெற்கு கருங்கடல் பகுதியில் வாழும் மக்களிடம் அதிக சாபமிடும் திறன் இருப்பதாகவும், அவர்கள் பெரும்பாலும் நீல நிறக் கண்கள் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் அரிதான மரபணு இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

 

தீய கண்

பட மூலாதாரம்,METROPOLITAN MUSEUM OF ART

தீய கண் கதைகளில் சிலர் மிகவும் சக்திவாய்ந்த கண்களைக் கொண்டுள்ளனர் என்ற கோட்பாடு மிகவும் பொதுவானதாக இருந்தாலும், அனைவரும் அதை தவறான நோக்கத்துடன் தொடர்புபடுத்துவதில்லை. சில கலாசாரங்கள் சாபம் வழங்கும் திறனை, துரதிர்ஷ்டவசமான ஒன்றாகக் கருதுகின்றன. உதாரணமாக, எல்வொர்த்தி ஒரு பழங்கால போலந்து நாட்டுப்புறக் கதையைக் குறிப்பிடுகிறார்.

சாபமிடும் திறன் கொண்ட ஒரு மனிதன், தான் நேசிக்கும் நபர்கள் மத்தியில் தொடர்ந்து துரதிருஷ்டவசங்களைப் பரப்புவதைத் தவிர்ப்பதற்காக தன் கண்களை தோண்டியெடுத்துவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.

 

தீய கண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவரது பார்வைக்கு துரதிருஷ்டவசங்களைப் பரப்பும் வல்லமை உண்டு என்ற நம்பிக்கை பரவலாக இருக்கும்போது, அதைத் தடுப்பதற்கான வழியை பண்டைய நாகரிக மக்கள் தேடியிருப்பதில் ஆச்சர்யமில்லை. இதுதான் நாசர் தாயத்தின் தொடக்கமாக இருக்கலாம். இது எவ்வளவு காலத்திற்கு முந்தையது?

கண் தாயத்துகளின் ஆரம்பக்காலம் கிமு 3,300க்கு முந்தையது என்கிறார் இஸ்தான்புல்லின் பஹெசெஹிர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் நெஸ் யில்டிரன். தற்போது நவீன சிரியாவாக அறியப்படும் மெசபடோமியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான டெல் பிராக்கில் தோண்டியெடுக்கப்பட்ட தாயத்துகள், கீறப்பட்ட கண்களுடன் கூடிய பளிங்கு சிலைகளின் வடிவத்தில் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

டெல் ப்ராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கு சிலைகள் பழமையான கண் தாயத்துகளில் ஒன்றாக இருந்தாலும், அவை இன்று நமக்குத் தெரிந்த வழக்கமான நீல நிறக் கண்ணில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. இதன் ஆரம்பக்கால மறு ஆக்கம் கிமு.1500வரை மத்தியதரைக் கடலில் காணப்படவில்லை. டெல் ப்ராக்கின் இந்த ஆரம்பகால தாயத்துகள் எப்படி நவீன பதிப்புகளில் மாறுபட்டன?

"ஏஜியன் தீவுகள் மற்றும் ஆசியா மைனர் தீபகற்பத்தின் கண்ணாடி மணிகள் நேரடியாக கண்ணாடி உற்பத்தி மேம்பாடுகளைச் சார்ந்தது" என்கிறார் யில்டிரன். "நீல நிறத்தைப் பொறுத்தவரை, இது முதலில் எகிப்திய மெருகூட்டப்பட்ட சேற்றில் இருந்து வருகிறது. இதில் அதிக சதவீத ஆக்சைடுகள் உள்ளன. செம்பு மற்றும் கோபால்ட் ஆகியவை நெருப்பில் சுடப்படும் போது நீல நிறத்தை கொடுக்கின்றன" என்கிறார் அவர்.

 

தீய கண்

பட மூலாதாரம்,KINO

எகிப்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஹோரஸின் நீல நிறக் கண்கள் பலவற்றை உதாரணமாகக் கூறும் யில்டிரன், இவை ஒரு வகையில் நவீன நாசருக்கு முன்னோடியாக இருக்கலாம் என்கிறார். "ஆரம்பகால துருக்கிய பழங்குடியினர் நீல நிறத்தின் மீது வலுவான ஈர்ப்பைக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களின் வான தெய்வமான டெங்ரியுடன் அதற்குத் தொடர்புகள் இருந்தன. இதன் விளைவாகவே கோபால்ட் மற்றும் தாமிரத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் விரும்பியிருக்கலாம்" என்கிறார் யில்டிரன்.

ஃபீனீசியர்கள், அசீரியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் ஒட்டோமான்களின் பகுதிகளில் நீல 'தீய கண் மணிகள்' பரவலாக பழக்கத்தில் இருந்தன. அவற்றின் பயன்பாடு மத்தியதரைக் கடல் மற்றும் லெவன்ட் பகுதிகளில் அதிக அளவில் இருந்தாலும், வர்த்தகம் மற்றும் பேரரசுகளின் விரிவாக்கம் மூலமாக நீலக் கண் மணிகள் உலகின் பல்வேறு பகுதிகளைச் சென்றடைந்தன.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

தீய கண்ணிற்கான பொருள் என்ன?

தீய கண்ணைப் பற்றிய மிகவும் சுவாரசியமான விஷயம், அதன் நீண்ட ஆயுட்காலம் மட்டுமல்ல. அதன் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிறிய அளவில் மாறிவிட்டது. பாதுகாப்பான பயணத்திற்காக எகிப்தியர்களும் எட்ருஸ்கான்களும் தங்கள் கப்பல்களின் முன்னோக்கியின் மீது கண் குறியீடு வரைந்ததைப் போலவே, விமானங்களின் பக்கங்களில் நாம் இன்னும் 'தீய கண்' குறியீடை ஒட்டிக்கொண்டிருக்கிறோம். புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் 'தீய கண்' குறியீடைக் கொண்டு வருவது துருக்கியில் இன்றும் பாரம்பரியமாக உள்ளது. சாபங்களுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த நடைமுறை உள்ளது.

நவீன உலகிற்கேற்ப கண்ணின் வடிவங்கள் மாறும்போது, அதன் அர்த்தமும் வரலாறும் வீழ்ந்துவிட வாய்ப்புள்ளது. அதன் தற்போதைய பயன்பாடு, குறிப்பாக யூத மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் புனிதமாகக் கருதும் ஹம்சாவில், தீய கண் குறியீடை ஃபேஷனுக்காக பயன்படுத்துவது கலாசாரங்கள் குறித்த அச்சத்தை ஏற்கெனவே ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

கண்ணின் வரலாறு தொலைநோக்குடையது மற்றும் பல மக்களுடன் அது பின்னிப் பிணைந்துள்ளது. நவீன பயனர்களில் பலர் பாரம்பரியத்தின் அடிப்படையில் அதனுடன் தொடர்பைக் கொண்டுள்ளனர். மேற்கூறிய கிம் கர்தாஷியன் மற்றும் ஜிகி ஹடிட், தீய கண்கள் பிரதானமாக இருக்கும் கலாசாரங்களிலிருந்து வந்தவர்களே.

இதை யில்டிரன் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. "தீய கண் உலகம் முழுவதும் ஒரு பகுதியாகவும், அனைத்து வகையான நடைமுறைகளுக்கானதாகவும் உள்ளது. தீய கண் குறியீட்டின் உருவப்படத்தை நாம் தொடர்ந்து பார்ப்போம்" என்கிறார் அவர்.

'தீய கண்' குறியீடு எல்லைகளைக் கடக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும் வெறுமனே ஆபரணமாகவும் ஃபேஷனுக்காவும் பயன்படுத்துவதைத் தாண்டி அதன் அர்த்தத்தை தெரிந்துகொள்ளவது பயனுள்ளதாக இருக்கலாம்.

'தீய கண்' என்பது நாகரிக விடியலின் ஓர் எச்சமாகும். இது மனிதகுலத்தின் மிகவும் நீடித்த மற்றும் ஆழமான நம்பிக்கைகளுக்கு நம்மைத் திரும்புகிறது. அத்தகைய அறிவு இல்லாமல் ஒரு தாயத்தை அணிவது அதன் பாதுகாப்பு திறன்களை பயனற்றதாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், இன்னும் சக்திவாய்ந்த சாபத்திற்கு உங்களை ஆளாக்கக்கூடும், ஒருவேளை அதை நம்புபவராக நீங்கள் இருந்தால்.

https://www.bbc.com/tamil/global-63206677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.