Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா 

             — கருணாகரன் — 

spacer.png

 

(வண சிவஞானம் யோசுவா, நல்லதொரு நடைமுறைச் சிந்தனையாளர். “எந்தத் தீமைக்குள்ளும் பல நன்மையுண்டு” என்ற நம்பிக்கையோடு எத்தகைய நெருக்கடிச் சூழலிலும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது நாட்டுக்கும் மக்களுக்கும் மிக நல்லதொரு வாய்ப்பாகும். இந்தச் சூழலை நாம் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தினால் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். நெருக்கடிகளே மனித குலத்தை ஊக்குவித்து வளர்ச்சிப் பாதையில் முன்னகர்த்தியுள்ளன. இதுதான் உலக வரலாறு” என்று சொல்லும் யோசுவா நல்லதொரு விவசாயி. நாடக நடிகர், நெறியாளர். பத்துக்கு மேற்பட்ட நூல்களின் எழுத்தாளர். இதில் “சாமி” என்ற நூலுக்கு தேசிய விருது கிடைத்தது. நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுகின்ற, இயற்கை உணவுகளின் புதியவகைச் சமையற்காரர். “தான்தோன்றிகள்” என நம்முடைய சூழலில் இயற்கையாகவே கிடைக்கும் முசுட்டை, பனங்கீரை, மொசுமொசுக்கை, முல்லை, அகத்தி, கொவ்வை, குப்பைக் கீரை, வாதநாரணி, குறிஞ்சா போன்ற பச்சிலைகளைப் பதனமாக்கி வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றார். பனைசார் உற்பத்திகளைப் புதிய வகையில் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தொழுநோய் நீக்கப்பணிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் யோசுவா, “காவேரிக் கலாமன்றம்” செயற்பாட்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர். முயற்சியாளர்களையும் விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் யோசுவாவுடன் நடத்திய உரையாடல் இது. 

1.       இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பற்றிய உங்களுடைய பார்வை என்ன? 

அனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் உன்னதமான காலம் கனிந்து வந்திருக்கிறது. நாம் ஒன்றிணைந்த இலங்கையர்களாக நமக்கான தேசத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சூழல் இது. அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார, அரசியல் நிலைகளில் ஒருவரை ஒருவர் சுரண்டாமலும், தீண்டாமலும், சீண்டாமலும் கட்டியெழுப்பக்கூடிய ஓர் உயர்ந்த பண்பாட்டுக் காலத்தை இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஊடாகப் பெற்றிருக்கின்றோம். இது ஒரு சுயமதிப்பீட்டுக்கான அழைப்பு. தனி மனித மற்றும் சமூகமாக நாம் அடுத்தவர் மீது நீட்டும் குற்றச்சாட்டுக் கரங்களை மடக்கி நம்மை மதிப்பீடு செய்வதற்கான காலம் கணிந்து வந்திருக்கிறது. 

ஒரு அனர்த்தம் வருகின்றபோது அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்றவர்கள் அதற்கு காரணமாணவர்களை சாடுவதும், சபிப்பதும் வழக்கமாகும். அந்தச் சபிப்பினால் ஏற்படும் சாபங்கள் யாரை நோக்கிச் செல்லும் என்பதை எவரும் யோசிப்பதில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான எனது பார்வை என்பது என்னைப்பற்றிய சுய மதிப்பீட்டில் அதிகமான செல்வாக்கு செலுத்தியது என்றே கூறுவேன். பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட மக்கள் போராட்டமும் அந்தப் போராட்டத்தினால் ஏற்பட்ட பொருளாதார அழிவுகளும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தபோது என் சுய தேடலில் நானும் ஓர் இலங்கைப் பிரஜையாக என்னைப் பற்றிய பார்வையில் ஈடுபட்டேன். சில மாறுபட்ட புரிதல்களே எனக்கு ஏற்பட்டது. நான் எல்லாரையும் போல் சிந்தித்து ஒரு தரப்பையோ அல்லது மறுதரப்பையோ மட்டும் குற்றம் சொல்லிப் பழிபோட விரும்பவில்லை. பொதுவாக இலங்கையின் அரசியல் கருத்துருவாக்கம் என்பது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு மையத்திலிருந்து முளைத்து அதன் ஊடே மட்டுமே வளர்ந்து வந்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி பற்றிய கனவுகள் பற்றிய எந்த அரசியல்வாதியிடமிருந்தும் அல்லது எந்தச் சமூக அமைப்புகளிடமிருந்தும் பிறக்கவில்லை. அனைவருக்குள்ளும் இருக்கும் போலித் தேசியவாதமே அரசியல் இயங்குதலுக்கான உந்துசக்கரமாக இலங்கையின் கடந்த எழுபதைந்து வருட காலத்தை உருட்டிவந்துள்ளது. இன்னுமொருவகையில் கூறினால் இலங்கையின் பூகோள அரசியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் இலங்கையின் பொருளாதார சிதைவை நோக்கிய நகர்வுக்கான ஒரு எரிசக்தியான இன முரண்பாட்டை வளர்த்தே வந்துள்ளன. 

எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணிகளாக தவறான நிதி முகாமைத்துவ கொள்ளை, வரி விதிப்பு முறைகளில் ஏற்பட்ட முரண்நிலை, உலகம்தழுவிய கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானங்களில் ஏற்பட்ட தாழ்ச்சி என்று கூறிக்கொண்டே போக பல காரணங்கள் உண்டு. இருந்தாலும் இலங்கையின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி என்பது அது நேர்த்தியான முறைமையால் கட்டமைக்கப்படாத ஓர் தள்ளாடும் நிலையிலையே எப்போதும் இருந்தமையே ஆகும். இதை யாரும் மறுக்க முடியாது. அதற்கான காரணம் இலங்கையின் அரசியல் சட்டவாக்கப்  பொறிமுறைகளில் இனத்துவ குறிகாட்டிகளும் நெறிமுறைகளும் செல்வாக்கு செலுத்தியதேயன்றி பொருளாதார கோட்பாடுகளும் அது பற்றிய ஐந்தாண்டு அல்லது பத்தாண்டு திட்ட முன்வைப்புகள், மீளாய்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து யாரும் உரையாடவும் இல்லை. யாரையும் யாருடனும் உரையாட சொல்லி தூண்டவுமில்லை. அங்கேதான் என்னைப்பற்றிய மதிப்பீட்டை செய்யத்தூண்டியது எனக்கூறினேன். 

2.       நாம் சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எப்படி? 

‘பொருளாதார நெருக்கடி’ என்ற சொல்லாடலுக்கான வாழ்வியல் வெளிப்பாடு என்ன என்று கேட்பீர்களானால் நுகர்வு நெருக்கடி என்றே கூறலாம். மக்களின் வாங்கும் முறைமைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னுமொரு வகையில் சொன்னால் நாம் நுகர்வுமைய சமூகமாக கட்டமைக்கப்படுவதை இலக்காக கொண்டே இலங்கையின் திறந்த பொருளாதார பாதை அகலமாக விரிக்கப்பட்டிருக்கின்றது. ஏதோ ஒருவகையில் வயது, பால், இன வேறுபாடின்றி இந்த அகன்ற பாதையால் ஓய்வின்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றோம். இப்போது அந்த ஓட்டத்தின் பாதையில் ஏற்பட்டுள்ள குன்றும், குழிகளும் நமது கால்களை ரணப்படுத்தி இருக்கின்றது. ஆனால் ஓட்டம் நிற்கவில்லை. இன்னுமின்னும் வாங்கிக் கொண்டே இருப்பதற்காகத் தவிக்கிறோம். இங்கேதான் மீள்வது… இன்னுமொரு வகையில் கூறினால் நாம் மீள்வதற்கு ஆயத்தமா என்பதுதான். உதாரணமாக எரிபொருள் நுகர்வு என்பது நெருக்கடியானபோது மக்கள் மாற்றுவழியாக பழைய இரும்புக்கடையில் வரிசையில் நின்று பழைய சைக்கிள்களின் உதரிப்பாகங்களை வாங்கி சைக்கிள் ஓட்டத்திற்குத்  திரும்பினார்கள். இது ஒரு வகையில் மீள்தலின் ஒரு புதிய அவதாரம். ஆனால் எரிபொருள் சந்தைக்கு வந்த பின்பு அந்த சைக்கிள்கள் பேரிச்சம்பழத்திற்கு விலையாக கொடுக்கப்படுகின்றதை காணலாம். 

எனவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது என்பது நுகர்வு ஒழுக்கம் குறித்த உயர் அறத்தை மக்கள் தனி நபர்களாகவும் குடும்பங்களாகவும் பின்பற்ற முன் வரவேண்டும் என்பது என் கருத்து. வகை தொகையின்றி கொட்டப்படும் அத்தனை குப்பைகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்கும் ஒரு சமூகம், தானே தனக்கு வெட்டிக் கொண்ட பொறியே இந்த பொருளாதார நெருக்கடி. எனவே இந்த நுகர்வு மைய வாழவியல் முறைமைக்குள் சிக்காது வாழும் மக்களின் வாழ்வியல் அனுபவங்களை ஊடகங்கள் கொண்டாடவேண்டும். அவர்களது அழகான வாழ்வியல் முறைமைகளால் ஓர் தேசம் எப்படி அழகாக நிர்மாணிக்கப்படுகின்றது என்பதை குறித்த உரையாடல்கள் பேசப்பட வேண்டும். எனவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கென  IMF இடம் இருந்து கடன் வாங்குவதால் (நடைபெறப்போவதாகக் கூறப்படும்) மாற்றங்களால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஆனால் IMF தன் கடன் வழங்கலுக்கான நிபந்தனைகளாக விதிக்கும் விதிமுறைகளை அரசும் மக்களும் திறந்த மனதோடு வரவேற்று, அந்தப் புதிய முறைமைகளுக்குள் வாழ்வையும் தேசத்தையும் கட்டமைக்க முற்படுவதே மீள்வதற்கான ஒரே வழி என்பதே என் கருத்து. 

3.  IMF வும் ஒரு கடன்பொறி அமைப்புத்தானே. மட்டுமல்லஅது நாட்டின் இறைமைக்குள் செல்வாக்குச்செலுத்தி நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளைத் தீர்மானிக்கிறதே! இதனால் கல்வி,மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படையான சேவைகளில் கை வைக்கப்படுமல்லவா? 

IMF முன்வைக்கும் கோரிக்கைகள் நமது தேச நலனுக்கும் அதன் எதிர்கால சந்ததிகளுக்கும் உகந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் கலந்துரையாடல்களை அரசியல் லாப நட்டங்களுக்கு அப்பால் உரையாட மக்கள் தலைமைகள் முன்வரவேண்டும். அந்த உரையாடல்களின் தொடக்கம் என்பது நாம் ஏற்கனவே பின்பற்றி வரும் நமது சேவை கோட்பாடுகளில் இருந்து தொடங்க வேண்டும். இலவசம் என்பது மக்களுக்கு செய்யப்படும் சேவையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த சேவையின் அளவும்,காலமும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பி அவர்களை இலவசங்களில் இருந்து விடுதலை செய்து கௌரவத்துடனான சுய தன்னிறைவில் வாழ்வதற்கான பாதைகளைத் திறக்க வேண்டும். இப்படிப்பட்ட மீளாய்வுகளில் இருந்து நமது உரையாடல் ஆரம்பிக்கப்படுமானால் IMF எமக்கு நிபந்தனைகளை விதிப்பதற்கான தேவைகள் இல்லாத ஓர் உறுதிப்பாடன கொள்கைகள் எம் மத்தியில் இருக்கும். என்னை பொறுத்தவரை IMF விதிக்கும் நிபந்தனைகள் கசப்பாக இருந்தாலும் இந்தத் தேசத்தையும் எதிர்கால சந்ததிகளையும் நேசிக்கும் மனிதர்களோடு இணைந்து இந்தக் கடினமான சுமையை நாம் சுமந்து சென்றே ஆகவேண்டும். அப்போதுதான் பெறும் கடனை முறைப்படி நாம் மீள் செலுத்தக்கூடிய உற்பத்தி பொருளாதாரத்தில் முதலீடாக வைக்க முடியும். கடனைப் பெற்று இலவசங்களுக்கு பயன்படுத்திய பாதையே நம்மை இந்த படுகுழிக்குள் கொண்டு வந்து தள்ளியுள்ளது. தொடர்ந்தும் அதே பாதையில் பயணிக்க முடியாது. 

4.       துறைசார் அதிகாரிகள் நிறுவனங்களின் தலைவர்கள், மக்கள் அமைப்புக்கள் இந்தப் பொருளாதார நெருக்கடியை உணர்ந்துள்ளனவா? அப்படியானால் இதற்கான தீர்வாக எதை முன்னெடுத்திருக்கின்றன? அதற்கான திட்டங்கள் பொறிமுறைகள் என்ன? 

ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கான அடிப்படை விடயங்களில் ஒன்று அதன் மனித வளமும் அந்த மனிதவளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் சிந்தனை, செயல், மற்றும் புத்தாக்கம் என்று கூறப்படுகின்றது. இலங்கை போன்றதோர் வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாட்டில் அதன் மனித வளம் நாட்டின் பொருளாதார செழிப்புக்கான ஊற்றாக திருப்பப்படவில்லை. நாட்டின் வருமானத்திற்கான பங்களிப்பை விட நாட்டின் செலவீனத்திற்கான பங்களிப்புக்குதான் இந்த மனித வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துவரும் கிழக்காசிய நாடுகளில் அரசுசார் நிறுவனங்கள் அனைத்துமே நாட்டின் வருமானத்திற்கான முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. குறிப்பாக ஓர் விவசாயப் பல்கலைகக்கழகம் அதன் ஒட்டுமொத்த நிர்வாகச்  செலவினையும் தானே முகாமைத்துவம் செய்யக்கூடிய உற்பத்தி வியாபார நிலையமாக ஓர் ஏற்றுமதி நிறுவனமாககூட இயங்க முடியும். அங்கிருந்து வெளிவரும் ஓர் பல்கலைக்கழக மாணவன் அரச செலவீனத்திற்கான ஒரு சுமையாக வெளிவரப்போவதில்லை. இலங்கை போன்ற ஓர் சிறிய பொருளாதார வளத்தைக் கொண்டுள்ள நாட்டில் இவ்வளவு அதிகமான செலவீனத்தை கொண்டதாக அரச நிர்வாக மற்றும் சேவை துறை இருப்பது என்பதும் பொருளாதார நெருக்கடிக்கான ஓர் காரணியாக சொல்லப்படுகின்றது. இதற்கான காரணியாக அரசியல் நோக்கத்துடனான தொழில் வழங்கல்களே காரணம். 

எனவே இப்படிப்பட்டவை, தேவையை பூர்த்திசெய்யும் அடிப்படையிலான அல்லது அத்தகைய நோக்கம் கொண்ட அரச நிறுவனங்களாக தம்மை இந்நிறுவனங்கள் கட்டமைத்து கொள்வதற்கு சிறந்த முன்னுதாரணங்கள் கொண்டாடப்பட வேண்டும். இதுவரை எந்த ஊடகத்திலும் ஓர் அரச அதிகாரி தன் நிறுவனத்தின் வருடாந்த செலவினை சிக்கனமாக செய்ததற்காக கௌரவிக்கப்பட்டு கொண்டாடியதாகவில்லை. இலங்கை அரச நிர்வாக மற்றும் சேவைத்துறைகளில் காணப்படும் விரயங்கள் தவிர்க்கப்படுவதற்கான பொறிமுறை மிக இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும். குறிப்பாக ‘Task Based’ இலக்குகள் வெற்றிகளின் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.  இப்படிப்பட்ட நெறிமுறைகள் இல்லாத அல்லது பின்பற்றப்படாத எந்த அரச நிறுவனத்திலுமிருந்தும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

5.       மக்களுடைய பொறுப்புக்கள் என்ன? 

நான் முதலாவது கேள்வியின் பதிலிலேயே அது குறித்து கூறியிருக்கின்றேன், எனினும் மக்களின் பொறுப்பு அவர்களது ஜனநாயக கடமைகளிலிருந்து தொடங்கவேண்டும். ஒரு பிரதேசத்தில் வேட்பாளராக நிறுத்தப்படும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு வாக்களிக்க விரும்பும் ஒரு பிரஜை, அவரின் பொருளாதார கோட்பாடு என்ன? அவருடைய சமூகப் பார்வை என்ன? அவர் இந்தப் பிரதேசத்தை தனது ஐந்து வருடகால நிர்வாகிப்பில் எந்தவகையான மாற்றத்தை ஏற்படுத்துவார்? மக்கள் சுயசார்பு பொருளாதாரப் பண்பாட்டில் வளர்வதற்கான திட்டங்கள் அவரிடம் இருக்கின்றதா? அப்படி இருந்தால் அவர் அதை எப்படி நடைமுறைப்படுத்துவார்? இதற்கு முன்பு அவருடைய பங்களிப்புகள் என்னவாக இருந்தன? என்ற உரையாடல் – விவாதங்கள் நடத்தப்படவேண்டும். இப்படிப்பட்ட தெளிவோடு,திட்டத்தோடு தெரிவுசெய்யப்படும் ஒரு மக்கள் பிரதிநிதி தன் கடமையை சரிவர செய்யவில்லை அல்லது செய்தார் என்று மதிப்பீடு செய்யக்கூடிய சமூக நிறுவனங்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியும். 

இந்தப் பொருளாதார நெருக்கடியில் மக்களின் எழுச்சி என்பது அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல் சுய பொருளாதார கட்டமைப்புக்கான எழுச்சியாகவும் மிளிர வேண்டும். இதுவரை அப்படியான மக்கள் எழுச்சி இங்கு உருவாகவில்லை. இதுவரை எந்தப் பிரதேசத்தை சார்ந்தவர்களும் இலங்கைக்கு டொலரை கொண்டுவருவதற்கு நாங்கள்தான் காரணம், எங்களுடைய பங்களிப்பு உண்டு என்று எழுச்சியாகச் சொல்லிக்கொள்ள முன்வரவில்லை. எல்லோரும் நமது இலயாமையின் வலிகளுக்கான மருந்துகளை தேடிக்கொண்டிருக்கின்றோமே தவிர நமது இயலுமைகள் மற்றும் வெற்றிகளை நாம் கொண்டாடியதில்லை. இலங்கைக்கு இப்போது டொலர்களைக் கணிசமாக கொண்டுவரும் ஆடை ஏற்றுமதித் துறையில் பணியாற்றும் நமது கிராமத்து இளைஞர் யுவதிகளை நமது கிராமங்களில் இதுவரை கொண்டாட யாரும் முன்வரவில்லை. அவர்கள் நாட்டின் வருமானத்திற்கான உழைப்பாளிகள். அவர்கள் நாட்டின் செலவீனத்திற்கான உழைப்பாளிகள் அல்லர் என்ற புரிதல் சமூகத்தில் பேசப்பட வேண்டும் என்பது என்கருத்து. அவர்களைப்போல் நாட்டின் வருமானத்திற்காக உழைக்கும் தோட்டத்தொழிலாளர்கள், சுயதொழில் நிறுவனங்கள் குறித்தும் அவர்களது சாதனைகள் குறித்தும் புள்ளிவிபர அடிப்படையில் பேசப்பட வேண்டும். 

6.       விவசாய உற்பத்தியில் ஓரளவுக்கு மக்களும்,நாடும் ஈடுபடலாம். அது எங்களுடைய உணவுத் தேவையை ஓரளவுக்கு நிரப்பும். ஆனால் மக்களுக்கு முழுமையான பொருளாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற விரிவான எல்லையை எட்டுவதற்கு வேறுவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் அவசியமல்லவா? 

நாட்டின் விவசாயத்துறை ஏற்றுமதித் துறையின் ஓர் அங்கமாக இருக்கவேண்டும். பிரித்தானியர் இலங்கையை காலனித்துவம் செய்யாதிருந்திருந்தால் தேயிலை, இறப்பர், கொக்கோ ஏற்றுமதி கூட நமக்கு இல்லாமல் போயிருக்கக் கூடும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கிய பங்குவகிக்க  வேண்டிய விவசாயத்துறை, மீன்பிடித்துறை போன்றவை  படிக்காதவர்கள் செய்யும் தொழிலாகப்பார்க்கப்படுவதும் இயலுமானவரை படித்து அப்படிப்பட்ட தொழில்களில் இருந்து தமது பிள்ளைகளை விடுவித்துவிட வேண்டும் என்பதும் நாம் எல்லோரும் நமது பிள்ளைகளுக்காக காணும் கனவாக இருக்கிறது. இதற்கான காரணம் விவசாயத்துறை நவீனப்படுத்தப்படாது இருப்பதும் அது உச்ச வருமானம் தரும் ஒரு பொக்கிசம் என்ற மதிப்பை தொடாது இருப்பதும் இதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று. இந்த விவசாயத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தமது புத்தாக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய கனவுகளைக் காணாதிருப்பதும், குறிப்பாக அவர்களும் ஓர் விவசாயியாக மாறமுடியாமல் இருப்பதும் இத்துறை குறித்தான முன்னேற்றத்திற்கான தடைகள். இங்கிலாந்தில் இருக்கும் ஹாபர் அடம் விவசாய பல்கலைகழகத்தில் சில மாதங்கள் கல்வி கற்றேன். அந்தப் பல்கலைக்கழகம் தன் வருமானத்தில் இயங்கும் ஓர் அரச பல்கலைக்கழகம். அங்கிருக்கும் அனைத்து பண்ணைகளும் வருமானம் தரும் மற்றும் ஏற்றுமதிசார் கட்டமைப்பை கொண்டுள்ளன. உலகின் தலைசிறந்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பேராசிரியர்கள் இங்கிருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களில் ஒருவராகவோ ஏற்றுமதித்துறையின் ஒரு பணியாளராகவோ நாம் காணலாம். இங்கு கற்கும் மாணவர்களும் அப்படித்தான். இந்தப்  பண்பாட்டை நாம் நமது நாட்டிலும் உருவாக்கும் போதுதான் விவசாயத்துறையின் மதிப்பு சமூகத்தில் உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் ‘வேறு விதமான’ என்ற (Altenative Aproach) என்று கேட்டதற்கான பதில்தான் நான் கூறிய விடயங்கள். 

குறிப்பாக விவசாய உற்பத்தியின் மூலாதார நிலம் மற்றும் நீர் இந்த இரண்டுமே இன்று நம் கட்டுப்பாட்டில் இல்லை, நிலம் இரசாயன உரம் விற்கின்றவர் கையிலும் நீர், மருந்து உற்பத்தியாளர் கையிலும் சென்றுவிட்டது. யூரியா போட்டு நூறு மூடை நெல் வெட்டுவதை விட யூரியா போடமல் இருபது மூடை நெல் அறுவடை செய்வது லாபம் அறம், நிலம் வாழும் ஆரோக்கியம் என்ற பண்பாட்டை நாம் கட்டியெழுப்பவில்லை. அத்தோடு அந்த நூறு மூட்டை நெல்லின் பண மதிப்பை விட இருபது மூட்டை நெல்லின் பண மதிப்பு அதிகம் என்ற விற்பனை பொறிமுறைகளும் இங்கு இல்லை. யாரும் வேறுவிதமாக சிந்திக்கத் தயாரில்லை. 

மேலும் எமது மண்ணுக்கே உரித்தான வீரியமிக்க நாட்டு விதைகளை நாம் இழந்துவிட்டோம். முழுக்கமுழுக்க அனைத்து உணவு உற்பத்திக்குமான விதைகளை பல்தேசிய நிறுவனங்கள் தமது கரங்களில் வைத்துக்கொண்டு அவைகளை நமக்கு தருகின்றன. அந்த விதைகள் இரசாயன உரங்களால் மட்டுமே விளைச்சலைத் தரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் விதை உற்பத்தியாளனும், இரசாயன உர உற்பத்தியாளனும் ஒரே ஆள் என்பது நமக்கு தெரிவதில்லை. இங்கே இந்த விடயங்களில் மக்கள் புரட்சி வெடிக்காத வரை நாடு செழிப்படையபோவதில்லை என்பதே என் கருத்து. 

7.       நீங்கள் புதியதோர் உணவு பண்பாட்டைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றவர். உங்களுடைய சுவை அவை” என்ற உணவு புத்தாக்க சிந்தனை பற்றியும் அதற்கான தேவை பற்றியும் சொல்லுங்கள்? 

புதிய உணவு முறைமை என்று சொல்வதைவிட இயல்பான உணவுமுறைமை என்றே எப்போதும் நான் கூறுவேன். மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சியில் உணவுப் பண்பாட்டின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உணவுப் பண்பாடே மனித ஆரோக்கியத்திற்கும் பொருளியல் மற்றும் நாகரிக பரம்பலுக்குமான ஊடாட்டத்தை கொண்டு வந்தது எனக்கூறலாம், இந்த நாகரிக வளர்ச்சியில் உணவின் இயல்புத்  தன்மையும் அதன் உண்மையான சுவையும் ஏதோ ஒரு வகையில் மனித சமூகங்களிடமிருந்து திருடிச் செல்லப்பட்டது. தற்போது மீண்டும் உணவின் இயல்புத்தன்மைக்கும் அதன் இயற்கை சுவைக்குமான தேடல் ஆரம்பித்திருக்கிறது. அந்த தேடலின் ஓர் அங்கமே எனது சுவை அவை பற்றிய பயணமாகும். கடந்த மூன்று வருடங்களில் எழுபது சுவை அவைகளை கிராமங்கள்தோறும் நடத்தி இருக்கின்றேன். சாதாரணமான மக்கள் வாழ்வோடு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவின் தூய்மை, சுவை, இயல்த்புதன்மை ஆகியவைகளை கொண்டாடுவதற்கான ஓர் அவையே இந்த சுவை அவை. 

          சுவை அவையில் உணவின் வடிவங்கள் குறித்தே அதிகமாக சுவைக்கவும் உரையாடவும் படுகின்றது. ஏதோ ஒரு வகையில் இரண்டு நிலைகளில் உணவின் வடிவங்கள் குறித்த நமது பார்வை இருந்துவருகின்றது. ஒன்றை பண்பாட்டு உணவு என்று சொல்கின்றோம் மற்றையது நவீன நாகரிக உணவு என்கின்றோம். இந்த இரண்டிலும் இருக்கும் நன்மை தீமைகளை திறந்த மனதோடு ஆராயும் களம் ஊடாக இன்று சுவை அவையில் செய்து வருகின்றேன். சாதாரணமாக ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் காலை உணவுக்கான செலவை ஐநூறு ரூபாயிலிருந்து நூற்றி ஐம்பது ரூபாவுக்குள் கொண்டுவரும் சுவை வடிவமும் எனது சுவை அவையில் கொண்டாடப்படும். பல கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று. இது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான வடிவமாகும். இப்படிப் பல நூறு உணவு வடிவங்கள் சமகால உணவு பற்றிய ஏக்கங்களுக்கு விடையாக சுவை அவையில் அமைந்திருக்கின்றது. 

8.       நம்முடைய சூழலுடன் இணைந்த வாழ்கை, அதனோடிணைந்த பொருளாதாரம் பற்றிய அக்கறை போன்றவற்றை எப்படி சமூக மட்டத்தில் வளர்க்க முடியும்? 

எதையும் நாம் இங்கு புதிதாக விதைக்க வேண்டியதில்லை, அனைத்தும் ஏதோ ஒருவகையில் நமக்குள் இருக்கின்றது. ஆனால் அவைகளை மறைப்பதற்கும் மறப்பதற்கும் கண்கள் கட்டப்பட்டுள்ளோம். நுகர்வு மையச் சமூகத்தில் மனிதர்களை எப்போதும் நுகர்வுப் போதையில் வைத்திருப்பதற்கான அத்தனை வலயங்களும் நமக்கு முன்பாக விரிக்கப்பட்டுள்ளன. யாரும் இதில் இருந்து தப்பிவிட முடியாதபடி குறிவைக்கப்பட்டிருக்கின்றோம். தேசப்பற்று இலங்கையில் இருக்கும் அனைத்து இனத்தவர்களுக்கும் உண்டு. ஆனால் அது இன்னுமொரு இனத்தின் மீதான வெறுப்புக்கான தூண்டுதலை முன் நிறுத்துகின்றதே தவிர நமது தேசத்தின் விழுமியங்கள், மரபுகள், இயற்கை வளங்கள் மீது கொள்ளும் பற்றாக வெளிப்படுவது மிக அரிதாகவே காணப்படுகின்றது. இலங்கை போன்ற ஓர் சிறிய நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்திகளுக்கான முன்னெடுப்புக்களில் சூழலியல் பற்றிய கரிசனை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. சூழலியலை கருத்தில் கொள்ளாத எந்த அபிவிருத்தித் திட்டங்களும் முன்னேற்றத்திற்கான பாதைகளை நமக்கு உருவாக்க போவதில்லை என்பதை நாம் மறக்க கூடாது. 

நமது பாடப்புத்தகத்தில் நமது பொருளியல் முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாய் விளங்கும் வளங்கள் குறித்த தகவல்களை நாம் படிக்கின்றோமே தவிர அவைகளின் அளவு, அவைகளின் பயன்பாட்டின் உச்சம் குறித்து சூழல் நேய அபிவிருத்தி குறித்தும் நாம் அதிகமாக அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தப்படவில்லை. 

சமூக அமைப்புக்கள் நிறுவனங்கள் யாவும் மக்கள் முன்னேற்றத்தைக் குறித்து தீவிர பணிகளில் ஈடுபடுகின்றபோதும் மக்களுடைய வாழ்வின் அடித்தளமாய் இருக்கும் வளங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதை நாம் செய்யவேண்டும் என்றே கருதுகின்றேன். 

9.       உங்களுடைய எழுத்துக்களும், செயற்பாடுகளும் புதிய சமூதாயமொன்றின் இயங்கு முறையைப் பற்றியவையாகவே இருக்கின்றன. எழுத்தாளர், ஒரு விவசாயி, உணவு ஆக்குநர், பொருளாதாரச் செயற்பாட்டாளர், சமூகவியலாளர் எனப் பலபரிமாணங்களோடு செயற்படுகின்ற நீங்கள் இளைய தலைமுறையினரிடம் எதிர்பார்ப்பது எதை? 

நாம் இன்றைய தலைமுறையினரை நம்மை பின்பற்றும்படி அல்லது நமது முன்னோர்களை பின்பற்றும்படி அழைப்பதை ஓர் பண்பாட்டு கலாசார நியதியாக வைத்திருக்கின்றோம். ஆனால் காலம் நம்மை கடந்து செல்கின்றது என்பதையும் அவர்கள் அந்த காலத்தின் மீதே பயணிக்கின்றனர் என்பதையும் உற்றுணர வேண்டியுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரம் குறித்த உரையாடல் சமூகத்தின் கல்வியல் பார்வை உரையாடலாகவே அமைந்திருக்கின்றது. எனது அன்மைக்கால நூல்களில் ஆடு மேய்ப்பவனும் விவசாயியும் குளத்துமீன் விற்பவரும் பொருளாதார உரையாடல்களின் கதாநாயகர்களாக படைக்கப்பட்டுள்ளனர். அவர்களே நாட்டின் பொருளாதாரம் குறித்தும் அறம், ஒழுக்கம், பண்பாடு குறித்தும் பேசுகிறார்கள். இந்தப் பார்வை சமூக மட்டத்தில் ஏற்படவேண்டும். பல்கலைக் கழகங்களில் சமூகத்தில் உயர்ந்த தொழில்கள் குறித்த மனிதர்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், விவசாயி போன்றவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் பொருளாதார சிந்தனைகள் இளைய சமூகத்தின் மத்தியில் உரையாடப்படவேண்டும். இப்படிப்பட்ட உரையாடல்கள் நாட்டின் வளங்களை கொண்டாடுவதற்கான முதல் படியாகவும் முதல் பணியாகவும் இருக்கும் என நினைக்கின்றேன். 

10.     அரசும் அரசியற் தரப்பினரும் எத்தகைய பங்களிப்புக்களை வழங்குவது அவசியம்? 

முதலாவது, அரசியல்வாதிகள் தமது அரசியல் தத்துவத்தின் மையத்தை மாற்றிக்கொண்டு இலங்கையர் என்ற பொது அடையாளத்தினுள் இலங்கையில் வாழும் அனைவருக்கும் இலங்கையின் அனைத்து வளங்களும் உரிமையும் சொந்தமானது என்ற தத்துவ மையத்தை நோக்கி நகர வேண்டும். அனைத்து இலங்கையர்களுக்குமான ஓர் இலங்கையை படைப்பதற்கான பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களை தமது அரசியல் கட்சிகளின் கோட்பாடுகளில் ஒன்றாக கொண்டிருக்கவேண்டும். இதுவே பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசியல்வாதிகளின் பங்களிப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். 

11. இனவாதமும் இன ஒடுக்குமுறையும் முற்றிப் போயிருக்கும் இலங்கையில் எப்படி நாம் இலங்கையர் என்ற பொது அடையாளத்தைக் கொண்டு இயங்க முடியும்? ஒன்றிணைந்த பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைக்கு இனவாதம் தடையாக உள்ளதல்லவா? 

இனவாதம் என்பது மிகக் கொடூரமானது. அது உலக அளவிலும் நம் தேச அளவிலும் நமக்கு பல கசப்பான அனுபவங்களை தந்துகொண்டிருக்கிறது. ஆனால் இனவாதத்தின் பிறப்பிடம் தேசியவாதமே என்பதை நாம் சில நேரங்களில் உணர மறுக்கின்றோம். ஏதோ ஒரு வகையில் எல்லோரும் தேசிய உணர்வுடன் வாழ்கின்றோம், நமது மண்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று போன்றவை நமது தேசிய உணர்வின் வேர்களாக இருக்கின்றன. அந்த வேர்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதிலும், அதை நமது அடுத்த தலைமுறைக்கு கவனமாக நாம் கையளிக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு ஆபத்தை ஏற்படுத்த எவரும் துணிந்தால் அல்லது ஏற்படுத்தினால் நமது தேசிய உணர்வு நிச்சியமாக நமது வேர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். அந்த முயற்சி நம்மைப் பொறுத்த வரை நமது உரிமைகளுக்கான போராட்டம். ஆனால் நம்மை எதிர்பவர்களுக்கு அது இனவாதம் அல்லது பயங்கரவாதமாக மாறிவிடுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை  இன முரண்பாட்டின் அடிப்படை இனவாதமே. இந்த இனவாதத்தின் வேர்கள் தேசிய உணர்ச்சி அல்லது தேசியவாதம். இந்த உணர்ச்சித் தூண்டுதல்களை அனைவரும் தமது அரசியல் நலன்களுக்காக செய்ததன் மூலமே இலங்கை அனைத்து சவால்களையும் எதிர்கொண்டது. ஆனால் இனவாதத்தை எதிர்த்து போரிடுவது ஒருபோதும் பயங்கரவாதமாகாது என்பதை இலங்கையில் இருக்கும் சமகால சந்ததிகள் தற்போது புரிந்திருக்கின்ற படியால் இனவாதமற்ற அரசியலை செய்ய புதிய அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். அது எங்கிருந்தும் தோன்றலாம் அப்படிப்பட்ட தலைமைகளால் மட்டுமே இலங்கையை சர்வதேசங்களிடமிருந்து பாதுகாத்து தன்னிறைவுமிக்க நாடாக கட்டியெழுப்ப முடியும்.. 

https://arangamnews.com/?p=8173

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.