Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி: எதிர்த்துப் போராடும் பெண்ணுக்கு நேர்ந்த கதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி: எதிர்த்துப் போராடும் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • சாரா மெக்டெர்மோட் மற்றும் ஜெஸ் டாவிய்ஸ்
  • பிபிசி நியூஸ்
9 நிமிடங்களுக்கு முன்னர்
 

கேத் ஐசக்

 

படக்குறிப்பு,

கேத் ஐசக்

உங்கள் சம்மதம் இன்றி உங்கள் முகத்தை டிஜிட்டலில் எடிட் செய்து ஒரு ஆபாச வீடியோவுடன் அதை இணைத்து இணைய வெளியில் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசினார்.

கேத் ஐசக் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தை வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தபோது, இதையும் பாருங்கள் என்ற அவருக்கான பரிந்துரையில் வந்த வீடியோவை கிளிக் செய்தபோது அதில் வந்த காட்சிகளைப் பார்த்து மயங்கி விழாத குறையாக அதிர்ச்சியடைந்தார்.

"இது தந்த வலியால் உடனடியாக பாதிக்கப்பட்டேன்," என்றார் கேத். என்ன நடந்தது என்று முதன்முறையாக பொதுவெளியில் அவர் பேசுகிறார். " யாரோ ஒருவர் என்னுடைய புகைப்படத்தில் இருந்து முகத்தை வெட்டி எடுத்து அதனை ஒரு ஆபாச வீடியோவுடன் சேர்த்திருக்கிறார். பார்ப்பதற்கு என்னைப்போலவே இருக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது," என்றார் வேதனையுடன்.

கேத் புகைப்படம் ஆபாச வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்தி அவரது முகத்தை யாரோ ஒரு ஆபாச பட நடிகை ஒருவரின் வீடியோவுடன் டிஜிட்டலில் இணைத்துள்ளனர்.

 

முகம் மாற்றப்பட்ட ஆபாச வீடியோ கேத் முகத்துடன் ட்விட்டரில் உள்ளது. சுய விருப்பம் இன்றி ஒருவரை ஆபாசப்படத்தில் பயன்படுத்துவதற்கு எதிரான இயக்கத்தில் கேத் ஈடுபட்டு வருகிறார். தனது இயக்கம் குறித்து தொலைகாட்சிகளுக்கு அளித்த நேர்காணல்களில் உள்ள அவரது வீடியோவை எடுத்து இது போல ஆபாச வீடியோவில் இணைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு அவர் அந்த ஆபாச வீடியோவில் விருப்பப்பட்டு நடித்தது போல உள்ளது.

"எனக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. என்னால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை," என்றார் அவர். "இந்த வீடியோ தொடரந்து எல்லா இடங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று உணர்ந்தேன். அது குறித்து நினைத்துப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது," என்றார்.

கடந்த காலங்களில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள புகழ்வெளிச்சத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள்தான் பொதுவாக இது போன்று ஆபாசப் படங்களில் முகத்தை இணைக்கும் மோசடிகளில், இலக்காக இருந்தனர். இது போன்ற வீடியோக்கள் எப்போதுமே ஆபாசப் படங்களாக மட்டும் இருப்பதில்லை.

நகைச்சுவை அம்சத்துடனும் சில இது போல உருவாக்கப்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக இது மாறி வந்திருக்கிறது. டீப்டிரேஸ் எனும் இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் தகவலின்படி, இது போல முகத்தை மாற்றி வெளியாகி உள்ள ஆபாசப் படங்களில் 96 சதவிகிதம், தொடர்புடைய நபரின் சம்மதம் இன்றியே நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பழிவாங்கும் வகையில் தனக்குப் பிடிக்காத நபரின் ஆபாசப்படத்தை வெளியிடும் பாணியில், முகத்தை மாற்றி ஆபாச வீடியோவுடன் இணைப்பதும் புகைப்பட அடிப்படையிலான பாலியல் முறைகேடாகவே கருதப்படுகிறது. ஒருவருடைய சம்மதம் இன்றி ஆபாசப் படம் எடுத்தல், உருவாக்குதல் அல்லது பகிர்தல் ஆகியவையும் பாலியல் முறைகேடு என்ற பொதுவான பொருளிலேயே குறிப்பிடப்படுகின்றன.

 

கேத் பெயரை குறிப்பிட்டு பகிரப்பட்ட ஒரு ட்வீட்

 

படக்குறிப்பு,

கேத் பெயரை குறிப்பிட்டு பகிரப்பட்ட ஒரு ட்வீட்

தனிமையான சூழலில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை தொடர்புடைய நபரின் சம்மதம் இன்றி பகிர்வது ஏற்கனவே ஸ்காட்லாந்தில் குற்றமாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் இதர பகுதிகளில் இது போன்ற செயல்கள் பாதிக்கப்பட்டவருக்கு கடும் மன அழுத்தத்தை கொடுப்பதாக இருக்கிறது என்பதை நிரூபித்தால் மட்டுமே குற்றமாக கருதப்படுகிறது. சட்டத்தில் உள்ள இந்த ஓட்டை காரணமாக வீடியோ தயாரிப்பவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

இங்கிலாந்து முழுமைக்கும் அமல்படுத்தக் கூடிய இணைய பாதுகாப்பு சட்டம் என்ற அரசின் சட்டம் முடிவற்ற பரிசீலனையில் இருப்பதால் தொடர்ந்து கிடப்பில் இருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி இங்கிலாந்தில் உள்ள ஆஃப்காம் (Ofcom) எனும் தகவல் தொடர்பு, இணையதளங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும். உலகத்தின் எந்த மூலையில் தொடங்கி இருந்தாலும், இங்கிலாந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்படும். எனினும் " எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில், இந்த சட்டத்தை நிறைவேற்ற நானும் எனது குழுவினரும் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்" என்று கலாசாரத்துறை அமைச்சர் மிச்சலிடோன்லான் கூறினார்.

இந்த ஆபாசப்படம் உங்களுடையது அல்ல (#NotYourPorn) என்ற இயக்கத்தை கேத் 2019ம் ஆண்டு உருவாக்கினார். அவரது இயக்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக வயது வந்தோருக்கான பொழுதுபோக்குக்கான போர்ன் ஹப் என்ற இணையதளம், தனது தளத்தில் உள்ள பெரும்பாலான சரிபார்க்கப்படாத உபயோகிப்பாளர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்கியது.

கேத் நடவடிக்கையால் ஆபாசப் படங்கள் அகற்றப்பட்டதால் கோபம் அடைந்த யாரேனும் ஒருவர்தான் அவரது படத்தை ஆபாசவீடியோவில் இணைத்திருக்கிறார் என்று கேத் கருதுகிறார்.

யார் அந்த நபர் அல்லது யார் அந்த வீடியோவில் காணப்படுகிறார் என்பது குறித்து கேத்துக்கு எதுவும் தெரியவில்லை. ஆபாசபட நடிகரின் படத்துடன் அவரது முகம் இணைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, பிறருக்கு அது முறைகேடாக தோன்றாது. வீடியோ உண்மையானதுதான் என்று பிறரை நம்ப வைக்க போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கவலைப்படுகிறார்.

 

ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி

"இது ஒரு விதிமீறல்-நான் சம்மதம் தெரிவிக்கவில்லை எனினும் கூட இந்த வழியில் எனது அடையாளம் பயன்படுத்தப்படுகிறது."

அந்த வீடியோ பதிவுக்கு கீழே மோசமான பின்னூட்டங்களை பதிவிட்டுள்ளனர். கேத்தை பின் தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று, அவரை பாலியல் கொடுமை செய்து, அந்த தாக்குதலை படம் பிடித்து, அந்த படத்தை இணையதளத்தில் பதிவேற்றுவோம் என்றும் பின்னூட்டங்களில் பதிவிட்டுள்ளனர்.

"உங்கள் குடும்பத்தைப் பற்றி நீ்ங்கள் நினைக்கத் தொடங்கத் வேண்டும்," என்கிறார் அவர். "இதுபோன்ற உள்ளடக்கம் கொண்ட வீடியோவை குடும்பத்தினர் பார்த்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

ஆபாச வீடியோவுக்கு கீழே கேத்தின் வீடு மற்றும் அலுவலக முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அவருக்கான அச்சுறுத்தல் தொடர்கிறது. ஒருவரின் சம்மதம் இன்றி அவரைப் பற்றி இணையவெளியில் அடையாளப்படுத்துவது ஆங்கிலத்தில் doxing என்றழைக்கப்படுகிறது.

"நான் முழுவதுமாக மன அழுத்தத்தில் இருக்கின்றேன்-" யாருக்கு என்னுடைய முகவரிகள் தெரியும்? இதனை செய்தவர்கள் எனக்கு தெரிந்தவர்களில் ஒருவரா?" என்றும் கவலையுடன் கேள்வி எழுப்புகிறார்.

"உண்மையில் நான் பிரச்னையில் உள்ளேன் என்று நினைத்தேன். இந்த செயல் என்பது இணையதளத்தில் யாரோ ஒருவர் மோசமான செயல்படுகிறார் என்பது மட்டுமல்ல. இது உண்மையிலேயே அபாயமானதாகவும் இருக்கிறது," என்றார்.

யாரேனும் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்று கேத்துக்கு தெரியும். அவருடைய அனுபவத்தில் இது போன்ற சூழல்களில் பிறருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். ஆனால், இந்த தருணத்தில் அவர் மனதளவில் உறைந்து போயிருக்கிறார்.

"கேத் எனும் செயற்பாட்டாளர் மிகவும் வலுவானவர், எந்த பாதிப்பையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். என்ற என்னுடைய சொந்த அறிவுறுத்தல்களை கூட என்னால் பின்பற்ற முடியவில்லை," என்றார் வருத்தத்துடன். அதன் பின்னர், என்னை பொறுத்தவரை கேத் உண்மையில் அச்சமடைந்தவராக இருக்கிறார்.

மோசமான விமர்சனங்கள் மற்றும் கேத்தின் அடையாளத்தை குறிப்பிடும் வீடியோ ட்விட்டரில் பரவுவதை கண்ட கேத் உடன் பணியாற்றுவோர் அதனை அந்த இணைய வெளியில் இருந்து நீக்கிவிட்டனர். ஆனால். ஒருமுறை இது போல முகத்தை ஆபாசப்படத்துடன் இணைத்து வெளியிட்டு விட்டால், இணையதளங்களில் பகிரப்பட்டு விட்டால், முழுவதுமாக அதனை பகிர்வதில் இருந்து நீக்குவது சிக்கலானது.

"இணையத்தில் இருந்து இந்த வீடியோ நிறுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்," கேத் சொல்கிறார். "ஆனால், என்னால் இதன் மீது ஒன்றும் செய்ய முடியவில்லை," என்கிறார் வேதனையுடன்.

 

சிவப்புக் கோடு

உங்கள் படம் ஆபாச வீடியோவுடன் இணைத்து வெளியிடப்பட்டால் என்ன செய்வது?

  • ஆதாரங்களை திரட்டுங்கள்; இவையெல்லாம் தவறானவை என உணர வேண்டும். அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அந்த வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி வீடியோ பதிவேற்றப்பட்ட நேரம், தேதி ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட், பதிவர் பெயர் மற்றும் இணையதள முகவரி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனை பாதுகாப்பான கோப்பில் சேமிக்க வேண்டும். அந்த கோப்பின் பாஸ்வேர்ட் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • பதிவு குறித்து புகார் அளிக்க வேண்டும்; நீங்கள் ஆதாரங்களை திரட்டியவுடன், என்ன நடந்தது என்றும் எந்த தளத்தில் அது நடந்தது என்றும் புகாரளிக்க வேண்டும்.
  • காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்-என்ன நடந்தது என்று பதிவு செய்ய வேண்டியதும் முக்கியம். நீங்கள் சேகரித்த ஆதாரங்களையும் பகிர வேண்டும்.

ஆதாரம் - #NotYourPorn இயக்கம்.

 

சிவப்புக் கோடு

ஆபாச வீடியோவில் முகங்களை ஒட்டி உருவாக்கப்படும் வீடியோக்ளை சந்தைப்படுத்த இணையதள குழுக்கள் செயல்படுகின்றன. தங்களுடைய மனைவிகள், அண்டைவீட்டார் மற்றும் உடன்பணியாற்றுவோர் மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்டு மோசமான வகையில் தங்களது சொந்தத் தாய்கள், மகள்கள் மற்றும் உறவினர்களை கொண்ட வீடியோக்களை எல்லாம் பதிவேற்றும்படி கோரிக்கை விடுக்கப்படுகின்றனர்.

வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குவோர், எப்படி ஒரு வீடியோவை உருவாக்குவது என்று படிப்படியான நிலைகளையும் கற்றுத்தருகின்றனர். என்னவிதமான ஆதாரம் அவர்களுக்குத் தேவை, எந்த வித கோணத்தில் வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும், வீடியோவுக்கான விலை ஆகியவை குறித்த சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர்.

ஜோர்கெம் எனும் தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பிறரின் படம் ஒட்டப்பட்ட ஆபாச வீடியோ தயாரிக்கும் நபர் பிபிசியிடம் பேசினார். தன்னுடைய சொந்த ஆசைக்காக பிரபலங்களின் படங்களை ஆபாச வீடியோவில் ஒட்டி வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியதாக கூறினார். "உண்மையில் இதற்கு முன்பு அப்படி நடைபெற சாத்தியமற்ற வழிகளில் தங்களது கற்பனையைத் திருப்திப்படுத்தும் வேலையை இந்த வீடியோக்கள் செய்கின்றன," என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய முழு நேரப் பணியில் சிறிது காலம் மட்டுமே அறிமுகமான, தன்னுடன் பணியாற்றியவர்கள் உட்பட தன்னை ஈர்த்த பெண்களின் படங்களை உபயோகித்து ஆபாச வீடியோக்களை அவர் தயாரிக்கத் தொடங்கினார்.

"ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னொருவர் ஓர் உறவில் இருக்கிறார்," என்றார். இந்த பெண்களின் படத்தை வைத்து ஆபாச வீடியோ பதிவேற்றிய பின்னர் பணிக்கு செல்வேன். ஒரு அச்ச உணர்வோடு இருந்தேன். ஆனால், எனக்குள் இருந்த உதறலை கட்டுப்படுத்திக் கொண்டேன். யார் ஒருவரும் சந்தேகப்படும்படி மோசமான ஒன்றை நான் செய்யவில்லை என்பதை போல நடந்து கொள்ள முடிந்தது," என்றார் இயல்பாக.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்து இதில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும் என்று உணர்ந்த ஜோர்கெம், வணிக ரீதியில் முகங்களை மாற்றி தயாரிக்கப்படும் வீடியோக்களுக்கு கமிஷன் பெற ஆரம்பித்தார். பெண்களின் சமூக வலைதளங்கள் மூலம் அளவு கடந்த படங்கள் அவருக்கு கிடைத்தன. ஜூம் மீட்டிங்கின் பதிவின் போது கிடைத்த ஒரு பெண்ணின் படத்தை ஆபாச வீடியோவில் ஒட்டி உபயோகித்ததாக அவர் சொல்கிறார்.

கேமராவை நேருக்கு நேர் பார்க்கும் நபரின், நல்ல தெளிவான வீடியோ, எனக்கு ஒரு நல்ல தரவாக இருக்கிறது. அதன் பின்னர் தெரியாத ஒன்றில் இருந்து தெரிந்த ஒன்று என்ற செயல்முறையில் , எந்த வீடியோவில் அதை இணைக்கிறோமோ அந்த வீடியோவில் அந்த முகத்தை நல்ல முறையில் கட்டமைப்பேன்," என்றார்.

முகத்தை ஒட்டி வெளியிடப்படும் போலி ஆபாச வீடியோக்கள் காரணமாக சில பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதை அவர் ஒப்புக்கொள்கிறார். அவர்களை ஒரு பொருளாக பயன்படுத்துவதால் நேரிட சாத்தியமான விளைவைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்பது போலவே தெரிகிறது.

"இதில் இருப்பது நான் இல்லை. இது போலியானது என்று அவர்கள் வெறுமனே கூற முடியும். அவர்கள் இதனை எதிர்கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்."

"இது சரியா அல்லது தவறா என்ற கோணத்தில் பார்த்தால், எந்த ஒன்றும் என்னை நிறுத்த முடியாது என்று நான் கருதவில்லை,"ஒரு கமிஷன் அடிப்படையில் நான் பணம் சம்பாதிக்கும்போது, இதனை நான் செய்வேன். இது எளிமையானது," என்றார்.

"போலியான ஆபாச வீடியோக்களின் தரம் பல வகைகளில் உள்ளது. வீடியோ தயாரிக்கும் நபரின் நிபுணத்துவம் மற்றும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பத்தின் தரம் ஆகியவற்றை பொறுத்தே உள்ளது.

சில படங்களை பார்க்கும்போது அவை மோசடியாக மாற்றி உருவாக்கப்பட்டவையா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என இத்தகைய போலி ஆபாச வீடியோக்களைக் கொண்ட இணையதளத்தின் பின்னால் இருந்து செயல்படும் நபர் கூறுகிறார். அவருடைய இணையதளம் மாதத்துக்கு 1.30 கோடி பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. தோரயமாக ஒரே நேரத்தில் 20,000 வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள அந்த நபர் ஊடகங்களிடம் அரிதாகவே பேசுவதுண்டு. அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் பிபிசியுடன் பேசுவதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

 

கோப்புப் படம்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

சாதாரண பெண்களின் படத்தை ஒட்டி வீடியோ தயாரிப்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது என்கிறார். ஆனால் தன்னுடைய கண்ணோட்டத்தில் புகழ்பெற்றவர்கள், சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவோர், அரசியல்வாதிகள் ஆகியோரின் படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியிடுவது நியாயமானதே என்கிறார்.

"பாதகமான ஊடகத்தை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களுடைய உள்ளடக்கங்கள் முக்கிய ஊடங்களில் கிடைக்கின்றன. சாதாரண குடிமக்களை விட அவர்கள் வித்தியாசமானவர்கள்," என்றார் அவர்.

"இந்த வழியில்தான் இதனை நான் பார்க்கின்றேன். வித்தியாசமான வழியில் இதனை கையாள்வதற்கு அவர்கள் திறன் வாய்ந்தவர்கள். அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் வெறுமனே புறந்தள்ளிவிட்டு கடந்து சென்று விடுவார்கள். உண்மையில் இதற்கு அவர்களுடைய சம்மதம் தேவை என்று நான் கருதவில்லை. இது உண்மை அல்ல. இது கற்பனையான ஒன்று," என்றார்.

தான் தவறாக செய்வது குறித்து அவர் சிந்திக்கிறாரா? பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி உண்மையை அறிந்து கொள்ள மறுக்கிறரா என்பது .உறுதியாகத் தெரியவில்லை. வாழ்வாதரத்துக்காக தான் செய்வது குறித்து தன்னுடைய துணைவிக்குத் தெரியாது என்று குறிப்பிட்டு சொல்வதன் மூலம் தனது செயல் தவறு என்று ஒத்துக்கொள்கிறார்.

"என்னுடைய மனைவியிடம் சொல்லவில்லை. அவரை எந்த அளவுக்கு இது பாதிக்கும் என்று நான் அச்சப்படுகின்றேன்," என்றார்.

அண்மைக் காலம் வரை, போலியாக படத்தை ஒட்டி வீடியோ தயாரிக்கப்பயன்படும் மென்பொருள் எளிதாக கிடைப்பதில்லை. ஒரு சாராசரியான மனிதர் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்க முடியாது. ஆனால், இப்போது, 12 வயதுக்கு மேற்பட்ட யாரும் சட்டப்பூர்வமாக செயலிகளை பதிவிறக்கம் செய்து, சில கிளிக்குகள் மூலம் புகைப்படங்களை ஒட்டி உண்மைபோல நம்ப வைக்கும் ஆபாச வீடியோக்களை உருவாக்க முடியும்.

கேத்தைப் பொறுத்தவரை இது கவலையளிப்பதாகவும், உண்மையில் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

இது ஒரு இருண்ட வலை அல்ல. நமது கண் முன்னே இது செயலி தளங்களில் இருக்கிறது," என்றார்

இணைய பாதுகாப்பு சட்டம் இந்த தொழில்நுட்பத்துக்கு இணையானதாக இல்லை என அச்சத்துடன் தெரிவிக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த மசோதா முதலில் வரைவு செய்யப்பட்டபோது, படத்தை ஆபாச வீடியோவில் ஒட்டி உருவாக்குவது என்பது தொழில்முறையிலான திறன் கொண்டதாக இருந்தது. வெறுமனே ஒரு செயலியை பதிவிறக்குவது போல இல்லாமல் இதில் யாரேனும் ஒருவர் பயிற்சி பெற வேண்டிய தேவை இருந்தது.

"நாம் நீண்ட தூரம் கடந்து வந்து விட்டோம். இந்த சட்டத்தின் உள்ளடக்கம் தற்காலத்துக்கு ஏற்றதாக இல்லை. இதில் பல விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன," என்றார்.

வேறு ஒருவரின் படத்தை வெட்டி ஆபாச வீடியோவில் இணைப்பது குற்றமாக்கப்பட்டால், இந்த விஷயங்கள் மாறும் என்கிறார் வீடியோக்களை உருவாக்கும் ஜோர்கெம்.

"நான் இணையவெளியில் கண்டுபிடிக்கப்பட்டால், இதனை நான் நிறுத்தி விடுவேன். பொதுவாக இன்னொரு பொழுதுபோக்கை கண்டுபிடிப்பேன்," என்றார் அவர்.

முகம் ஆபாச வீடியோவில் இணைக்கப்பட்டிருப்பதாலும், அடையாளம் வெளியே தெரிந்து விட்டதாலும் கேத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பகுத்தறிய முடியாத நிலையிலும் அவர் உள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் நபர்கள் தன்னை ஆபாசமாக சித்தரித்தது மற்றும் அவமானப்படுத்தியது மட்டுமின்றி தவிர தன்னை வாய்மூடி மெளனியாக்க முயற்சி செய்கின்றனர் என்றும் கேத் நம்புகிறார். பெண்களுக்கு எதிரான அநீதி பற்றி பேசலாமா என்ற கேள்வியோடு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, இந்த இயக்கத்தில் இருந்து விலகினார் அவர்.

ஆனால், இப்போது அவர் மேலும் தீவிரமாக ஆவேசத்துடன் உள்ளார். அதிகம் அது குறித்து கவலைப்பட்டிருந்ததாக அவர் உணர்கிறார்.

"அவர்கள் வெற்றி பெற நான் அனுமதிக்க மாட்டேன்," என்கிறார் உறுதியுடன்.

முகங்களை ஒட்டித் தயாரிக்கப்படும் ஆபாச வீடியோக்கள் பெண்களை கட்டுப்படுத்த பயன்படலாம். முகங்களை வேடிக்கையாக மாற்றும் செயலிகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை, தங்களுடைய செயலியில் பாதுகாப்பு அம்சம் இடம் பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

"பாலியல் உள்ளடக்கத்தை கண்டறியும் வகையில் செயலிகள் இருக்க வேண்டும்," என்றும் கூறினார்.

"தொழில் நுட்ப நிறுவனங்கள் பணம், தேவையான வளங்கள், நேரம் ஆகியவற்றை செலவிட்டு, தங்களது செயலி பாலியல் முறைகேடுகளைக் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதில் தவறினால், அவர்கள் வேண்டுமென்றே பொறுப்பற்ற வகையில் செயல்படுகின்றனர் என்று பொருள். அவர்கள் குற்றவாளிகள்தான்," என்றார் ஆவேசமாக.

ஜோர்கெம் என்பவரோ அல்லது பெரிய ஆபாச இணையதளத்தின் பின்னால் உள்ள நபரோ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபரான கேத் ஐசக் குறித்து அறிந்திருக்கவில்லை.

https://www.bbc.com/tamil/global-63347128

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.