அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!
26 Dec 2025, 8:11 AM
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம்,
மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.
எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது.
மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது
இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.
போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது.
உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது.
இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.
தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல.
முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.
இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/
By
கிருபன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.