Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுரேஷ் மேனன்
  • பதவி,விளையாட்டு செய்தியாளர்
  • 10 நவம்பர் 2022, 06:18 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி.

சேத்தன் சர்மா,  அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான்,  புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர்.  அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர், லார்ட்ஸில் சதம் அடித்தார், பின்னர் அடிலெய்டில் ஒரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லத் துனை செய்தார்.

ஆனால் அவர்கள் பந்துவீச்சிற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களில் யாரும் பேட்டிங்கில் மட்டும் தடம் பதிக்கத் தவறிவந்தனர்.

கபில் ஒரு இயல்பாகவே பந்து வீச்சைப் போல, பேட்டிங்கிலும் எதிரணியினருக்கு அச்சத்தை ஊட்டினார். அவர் தனக்கே உரித்தான தனி பாணியில் மிக நேர்த்தியாகத் தனது சாதனைகளைப் புரிந்து வந்தார். அதனால் அவர், தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். 16 ஆண்டுகால வாழ்க்கையில், காயம் காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூடத் தவறவிட்டதில்லை.

 

கபிலின் இடத்தை நிரப்ப, தேர்வான ஹார்திக் பாண்ட்யா - இலங்கையின் காலேயில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததுடன் அதே தொடரில் ஒரு சதமும் (ஏழு சிக்ஸர்களுடன்) அடித்தார்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த அடுத்த டெஸ்டில், அவர் 93 ரன்கள் எடுத்தார். நாட்டிங்ஹாம் டெஸ்டில் 28 ரன்கள் கொடுத்து, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தானும் ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்தபோது, உண்மையிலேயே அவர் கபிலின் இடத்தை நிரப்பினார்.

கடந்த ஓராண்டில், 29 வயதான பாண்டியா, டி20 கிரிக்கெட்டில், சுமார் 150 ரன்கள் என்ற சராசரியுடன்  இந்தியாவின் தேர்ந்த  ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். மேலும் இறுக்கமான சூழ்நிலைகளில் மகேந்திர சிங் தோனி போன்றே, அமைதியை வெளிப்படுத்தினார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், உலக டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும்  முக்கியமாக இருந்தது. இது டி-20 ஆட்டங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

 

பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நவம்பரின் பிற்பகுதியில் அவர் இந்திய அணி, டி-20 தொடரில் விளையாட நியூசிலாந்திற்கு ஹார்திக் பாண்ட்யா தலைமையில் செல்கிறது. அவரது திறமைகள் மற்றும் உடல் நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஆட்ட வகை இது. பாண்ட்யா, 140 கிலோ மீட்டர் (87 mph) என்ற வேகத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசுவது,  அது வரை இந்தியாவிற்கு இல்லாத ஒரு ஸ்திரத் தன்மையைக் கொடுத்துள்ளது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றே பலர் நினைத்தனர். இந்தியா இந்தக் குறுகிய கிரிக்கெட் வடிவத்திற்கு ஒரு ஃபினிஷரை வளர்த்தெடுத்துள்ளது.  இப்போது மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை உற்று நோக்கி வருகிறது.

 அதே போல பாண்ட்யாவும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவே இல்லை.

 

பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாண்ட்யா காயமடைந்தது குறித்து, முன்னாள் தேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இது தீவிரமானது என்று எங்களுக்குத் தெரியும். மருத்துவ அறையில் அவரால் நகரக் கூட முடியவில்லை, அவர் தனது தலையை மட்டுமே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்து வந்தார். அவர் மிகவும் அதிக வலியால் துன்பப்பட்டார். அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப மிகவும் உறுதி வேண்டும்" என்று  ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்டில், பாண்டியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பையில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஒரு சிக்சருடன் இந்தியாவிற்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார்.

 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காயமடைந்து வெளியேறிய அதே மைதானத்தில், அதே அணிக்கு எதிராக, அதே போட்டியில் பாண்ட்யா இதைச் சாதித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

 இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியுள்ள, இடது கைச் சுழற்பந்து வீச்சாளரான இவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்ட்யாவுடன் இணைத்துப் பாண்ட்யா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த இணை, சிறந்த கிரிக்கெட் வசதிகள் வேண்டி,  இளம் வயதிலேயே சூரத்தில் இருந்து குஜராத் மாநிலத்தின் பரோடாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

இது அவர்களின் தந்தை எடுத்த முன்னெடுப்பு. இது குறித்து இந்த வறிய குடும்பத்தின் புதல்வர்கள் எப்போதும் நன்றியுடன் உள்ளனர். 

 

பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரேவின் அகாடமியில் இச்சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜான் ரைட், ஹார்திக் பாண்ட்யாவைத் தேர்வு செய்தார்.

அவரது ஆரம்ப விலை $16,000 (£13,841). மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் $1.7 மில்லியனுக்குத் தக்கவைக்கப்பட்டார்.

 இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஐபிஎல் அறிமுக ஆட்டக்காரர்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமை வகித்த அனுபவம்  இவரது திறமையைப் பறைசாற்றியதால், இப்போது தேசிய அணிக்குத் தலைமை வகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

 சூழ்நிலைகள் பாண்ட்யாவை இந்த நவீனகால கிரிக்கெட் வீரராக - T20 ஸ்பெஷலிஸ்ட் ஆக நிர்ப்பந்திக்கலாம். சிவப்பு பந்து கிரிக்கெட்டின் போக்கும் அதற்குத் தேவையான உடல் வலிமையும் இதிலிருந்து மாறுபட்டது. அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா ஆடிய  டெஸ்ட் போட்டிகளில் ஆறில் ஒரு பங்கு ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார். ஆனால் டி20 சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 60% ஆடியுள்ளார். 

 

ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெலிந்த உடல் வாகு கொண்ட இவர், பந்தை அடிக்கும் வேகம் வியப்புக்குரியது. அதே போல், பந்து வீசும் வேகமும் பேட்ஸ்மேனை வியக்கச் செய்யும். ஒரு ஃபீல்டராகவும் அவர் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியா அவரை ஒரு வகை கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருத்திப் பார்ப்பது பரிதாபகரமானது. அவர் ஆட்டத்திற்கு ஒரு தனி விறுவிறுப்பைக் கொண்டு வந்து,  அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்கிறார்.

 தன்னை இரண்டாவது கபில்தேவாக மட்டுமல்ல,  முதல் ஹார்திக் பாண்ட்யாவாகவும் உருவாக்கிக்கொண்டுள்ளார். அது மிகச் சிறந்த விஷயம்.

https://www.bbc.com/tamil/articles/cml4dl7jjnpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்திக் பாண்ட்யா மகுடம் சூடும் நேரம் வந்துவிட்டதா?

 

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓர் உலகக் கோப்பை போட்டியில் தோற்றுப்போன இந்திய அணி இதோ நியூஸிலாந்துடன் இன்னொரு டி20 தொடருக்கு தயாராகிவிட்டது. ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியைத் தலைமையேற்று நடத்துகிறார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் இல்லாத அணி இது.

ரோஹித் சர்மா ஓய்வில் இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அனுப்பப்பட்டிருக்கிறார் என்று தோன்றினாலும், இது புதிய தொடக்கத்துக்கான அறிகுறியாகவே பலராலும் கவனிக்கப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு தருணத்தில்தான் இந்தியக் கிரிக்கெட் கலைத்துப் போடப்பட்டு, புத்தெழுச்சி பெற்றது. அப்போது அது ஓர் அதிரடியான முடிவாகப் பட்டாலும் அடுத்த ஐந்தாறு ஆண்டுகள் உலக அரங்கில் இந்திய அணி ஆட்சி செய்வதற்கு அப்படியொரு முடிவே காரணமாக அமைந்தது.

அது 2007-ஆம் ஆண்டு. மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி மிக மோசமாகத் தோற்று வெளியேறிய பிறகு சில மாதங்களில் தொடங்கிய முதலாவது டி20 உலகக் கோப்பை தொடருக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். நீண்ட காலத்துக்குப் பிறகு ஓர் உலகக் கோப்பையை இந்தியாவுக்காகப் பெற்றுத் தந்தார். அது இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகிவிட்டது.

 

இப்போது ஹர்த்திக் பாண்ட்யாவுக்கான நேரம். உலகக் கோப்பை தொடரில் தோற்றுப் போனதால் ரோஹித் சர்மா மீது தனிப்பட்ட முறையிலும் கேப்டன் என்கிற வகையிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய கேப்டன் தேவை என்ற விவாதங்களையும் காண முடிகிறது. அந்த விவாதத்தில் இயற்கையாகவே முன்நிற்கும் பெயர் ஹர்திக் பாண்ட்யா.

“ஹர்திக் பாண்ட்யா ஒரு அற்புதமான கேப்டன்” என்கிறார் நியூஸிலாந்து தொடருக்காக இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விவிஎஸ் லக்ஷ்மண். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையைப் பெற்றுத் தந்தது பற்றி விவிஎஸ் லக்ஷ்மண் புகழ்ந்திருக்கிறார்.

உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்துடன் தோற்று வெளியேறியபோதே அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார். அவரும் ஐபிஎல் தொடரில் பாண்ட்யாவின் சாதனையை மெச்சினார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் ஹர்திக் பாண்ட்யாவின் பெயரை அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

“‘டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பதில் எந்த பாதகமும் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட்டின் அளவு அப்படி. ஒரே வீரரால் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் ஆடுவது எளிதல்ல. ரோஹித் சர்மா ஏற்கெனவே ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாக இருப்பதால் டி20 அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பதில் தவறில்லை. அந்தப் பெயர் பாண்ட்யா” என்று பேட்டி ஒன்றில் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

பாண்ட்யா என்ன செய்திருக்கிறார்?

ஹர்திக் பாண்ட்யாவை சிறந்த ஆல் ரவுண்டர்களுள் ஒருவராக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். சிலர் இன்னொருபடி மேலே போய் அவர்தான் ‘அடுத்த கபில்தேவ்’ என்கிறார்கள். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைச் சதமும், முதல் டெஸ்ட் தொடரில் சதமும் அடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் ஹர்திக்.

 

லட்சுமண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது திறமைக்கு சமீபத்திய உதாரணம், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி. ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும்  முக்கியமாக இருந்தது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், பாண்ட்யா வெளியேறினார். அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த முடிந்த ஆசியக் கோப்பையில் அதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். 

ஐபிஎல் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமையேற்று கோப்பையை வென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்.

டி20 உலகக் கோப்பையில் தோல்வியைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்திருந்த ஹர்திக், "யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் நிரூபிக்க வேண்டிய சூழல் இருப்பதாகவே தெரிகிறது.

இந்திய அணியின் என்ன மாற்றம் தேவை?

இந்திய அணி டி20 கிரிக்கெட்டை அணுகும் முறையிலேயே மாற்ரம் தேவை என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ‘பழைய’ உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே அப்போதே சாடினார். 

 

ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

“கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா.

"திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது.” என்று அவர் குறிப்பிட்டார். 

இந்திய அணிக்கு புத்துணர்வு ஊட்டுவது என்பது போதுமானதல்ல, கலைத்துப் போட்டு முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று கருத்தை பலரும் முன்வைக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் அதற்கு களமாக இருக்கக்கூடும்.

இந்தியா - நியூஸிலாந்து போட்டி எப்படி இருக்கும்?

இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதும் முதலாவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது. இது ஓர் இரவு நேர ஆட்டம்

 

ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். 

காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்த்திருக்கிறது. எனினும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமமான பலம் கொண்ட 11 பேரைக் களமிறக்குவது சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

நியூஸிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் தவிர உலகக் கோப்பையில் பங்கேற்ற மற்ற வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

டி20 உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய அணிகள் என்பதால் இரு அணிகளும் புத்துணர்வு பெறுவதற்கு இந்தத் தொடரில் வெற்றியை பெற முயற்சிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c51kmp47vv3o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.