Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம்

[28 - August - 2007]

வ. திருநாவுக்கரசு

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை நிபுணர் கலாநிதி ஜோன் கின்செட் என்பவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவைச் சந்தித்து கருத்து பரிமாறியதாக கின்செட் தெரிவித்ததையடுத்து, அக்குழுவினால் வெளிக்கொணரக்கூடிய இறுதிப் பெறுபேறு தொடர்பாக நாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கவில்லையென நான் எடுத்துக் கூறியதாக முன்னைய வாராந்தக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரப்போவதாக சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதனைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர் வித்தாரணவிடம் முன்னர் வலியுறுத்தியிருந்தார். எனினும், 23.08.2007 ஆம் திகதி தனது தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டில் அதற்கு அவசரப்படத் தேவையில்லை. அதற்கு காலக்கெடு என்றொன்று தேவையில்லை என ஜனாதிபதியே அறிவித்திருந்தார். அதாவது, சர்ச்சைக்குரிய சில விடயங்கள் இருப்பதால், எதிர்வரும் நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு ஜே.வி.பி.யின் ஆதரவு இன்றியமையாததென்பதால், அதன் பின்னர் மேற்படி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் (APRC) அறிக்கை மீது கவனம் செலுத்தலாமென்பதே ஜனாதிபதியின் தீர்மானமாகும்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) ஒரு கவசம்

அமைச்சர் வித்தாரண தயாரித்திருந்த இறுதி அறிக்கையில் ஒற்றையாட்சி முறைமை உள்ளடக்கப்படாமையால் அவர் விடுதலைப்புலிகள் சார்பில் சூழ்ச்சிகரமாக சமஷ்டித் தீர்வை நுழைத்துவிட்டார் என எதிர்ப்புத் தெரிவித்து 21.08.2007 ஆம் திகதி இடம்பெற்ற APRC கூட்டத்திலிருந்து "ஜாதிக ஹெல உறுமய" (ஜே.எச்.யூ.) மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி (எம்.ஈ.பி.) பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்ததுடன், அவர் மீது ஜே.வி.பி. மற்றும் ஜே.எச்.யூ. வினர் காரசாரமாக குற்றஞ்சுமத்தினர். அதன் பின்னர் அமைச்சர் வித்தாரண APRC தலைவர் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். அதனை இ.தொ.கா., ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான சில கட்சித் தலைவர்கள் எதிர்த்தனர். ஏன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட அமைச்சர் வித்தாரண சார்பில் குரல் கொடுத்தார்.

சர்வதேச சமூகத்தினைத் திருப்திப்படுத்துவதற்கு அமைச்சர் வித்தாரண பல அறிக்கைகளை கிரமமாக வழங்கி பெரிதும் உதவி புரிந்துள்ளபடியால் அவரின் பணி தொடர வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக ஒலித்தது. எனவே, APRC யானது ஒரு கவசமாகவே அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது என்பதை ஜனாதிபதியே புலப்படுத்திவிட்டார். அடுத்த வேடிக்கை என்னவென்றால், பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில் பிறிதொரு APRC அமைக்கப்பட்டுள்ளது. அதில் பங்குபற்றிச் செயற்படுவதற்கு ஜே.எச்.யூ. மற்றும் எம்.ஈ.பி. அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரதமர் விக்கிரமநாயக்க ஒரு கடும்போக்காளர் மற்றும் நாவினால் சுடுபவர் என்பதும் தெரிந்ததே. அவர் சென்றவாரம் தெற்காசிய ஊடகவியலாளர் மாநாட்டில் ஒழுக்கம் பற்றி மிக சுவாரஸ்யமாகப் பேசியிருந்தார். "அபிவிருத்திக்கு ஒழுக்கம் பிரதானம். ஒழுக்கமின்றேல் அழிவுதான். ஆனால், ஒழுக்கத்தைக் கொண்டு வருவது தான் பிரச்சினைக்குரிய விடயமாயிருக்கிறது. ஏனென்றால், நாம் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்தித்துச் செயற்படுவதுதான் அதற்கான காரணமாகும். நாம் எல்லோரும் மனிதர்கள் தானே" என்று கூறினார். விக்கிரமநாயக்க இவ்வாறான அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் அதிகாரமோகம் காரணமாகவே இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிறிய பேரினவாதக் கட்சிகளால் ஆட்டிப்படைக்கப்படும் நிலையில் காணப்படுகின்றது.

ஐ.தே.க. சு. தேசிய காங்கிரஸ்

இதனிடையில் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டித் தீர்வுக்கு ஆதரவளிக்க இன்னும் தயாராயிருப்பதாக அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய லக்ஷ்மன் கிரியெல்ல மேற்குறிப்பிட்ட தெற்காசிய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம். சமஷ்டித் தீர்வுக்கு அறவே தயாராயில்லை என்பதால் ஐ.தே.க. இவ்வாறு பகிரங்க அறிக்கைகள் விடுப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. ஐ.தே.க. - சு.க. (மக்கள் பிரிவு) இணைந்து தேசிய காங்கிரஸ் எனும் புதிய அமைப்பினை உருவாக்கி சென்ற ஜூலையில் விடுத்த உடன்படிக்கை அல்லது விஞ்ஞாபனத்தில் சமஷ்டித் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதில் கூறியிருப்பதாவது;

இனப்பிரச்சினைக்கு தீர்வாக, பிளவுபடாத இலங்கைக்குள் பரந்தளவு அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதாகும். இவையெல்லாம் புளிச்சுப்போன பழங்கதைகள்.

"பெரும்பான்மையான மக்களின் அனுமதியுடன் வைக்கப்படும் தீர்வுத்திட்டத்தை ஏதாவதொரு கட்சி அல்லது குழு நிராகரித்து தொடர்ச்சியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் சர்வதேச சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் சகலரினதும் ஒத்தாசையுடன் பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் நாட்டிலிருந்து நீக்குவதற்கு ஆவன செய்யப்படும். இதன் பொருட்டு விசேடமாக முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி சர்வதேச யுத்தகால சட்டதிட்டங்களுக்கேற்ப வெறுமனே அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கப்பால் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது" என மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று கூட, யுத்தம் திறமையாக நடத்தப்படவில்லை என்பதே ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரதூரமான விமர்சனமாகும். தொப்பிகலவிலிருந்து நூற்றுக் கணக்கான புலிகளை தப்பிச் செல்வதற்கு அரசாங்கம் இடமளித்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியிருந்தார். மற்றும் சு.க. (மக்கள் பிரிவு) முக்கியஸ்தர் ஷ்ரீபதி சூரியாராச்சி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மீது யுத்தம் தொடுக்காமலிருக்கிறதென அடிக்கடி குற்றஞ்சுமத்தி வந்துள்ளார்.

மேலும், ஒற்றையாட்சி முறைமையில் மாற்றமென்ற பேச்சுக்கே இடமில்லையென அடம்பிடித்துவரும் ஜே.வி.பி. யையும், தேசிய காங்கிரஸில் சேர்த்துக்கொள்வதற்கு மங்கள சமரவீர பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். ஜே.வி.பி. அதற்கு இணங்குமா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, மங்கள கொண்டுள்ள உள்நோக்க சிந்தனை தெளிவாகத் தெரிகிறது.

விடுதலைப்புலிகளுக்கு ஏற்கெனவே பாடம் புகட்டிவிட்டோம். அவர்களுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம். அதாவது, கிழக்கை மீட்டது போல் வடக்கையும் மீட்போம். முழு வன்னிப் பிராந்தியத்தையும் மீட்கும் நாள் தொலைவில் இல்லை என்றெல்லாம் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பறை சாற்றியுள்ளார். எனவே, இதன்பொருட்டு நாடு அதிகளவு விலை கொடுக்க நேரிடுமே என சிந்திக்காமல், அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி மாநாடு முதலிய போர்வையின் கீழ் இராணுவத்தீர்விலேயே அரசாங்கம் முனைப்பாயிருக்கிறது என்பது தெளிவு. 1995 இல் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் பின்னர் A9 பாதையைப் பிடிப்பதற்கு "ஜயசிக்குறு" (வெற்றி நிச்சயம்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 14 மாதங்கள் சண்டை நடந்த பின் அரசாங்கம் கண்டது படுதோல்விதான். அதற்கு நாடு கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் வெற்றி நிச்சயம் என எண்ணங்கொண்டு வடக்கை கைப்பற்றுவதற்கு முழு அளவிலான யுத்தத்தை முடுக்கி விடுமாயின், பாதிக்கப்படும் சாதாரண பொது மக்களின் அழிவுகளும், அவலங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் யுத்தமென்பது தொடரும்போது பணவீக்கமும் வாழ்க்கைச் செலவும் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு உயர்ந்துவிடும். ஏற்கெனவே, வாழ்க்கைச் செலவு சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பாரிய மேலதிக சுமைகளையோ, நாடு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பது பற்றியோ அரசாங்கம் சிந்திக்க தவறி நிற்பது மிக மிக சாபக்கேடானதாகும்.

கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் வலியுறுத்தப்போவதாக அறியப்படுகிறது. 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு தற்காலிகமாகத் தான் இணைக்கப்பட்டதாயினும், 18 வருடங்கள் கழிந்த பின் பேரினவாதிகள் கங்கணம் கட்டி நின்றதன் விளைவாக, சட்டப் பிரச்சினை அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்வினைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு கிழக்கை துண்டாடும் கைங்கரியத்தினை நிறைவேற்றியது. பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து இணைப்புக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு திட்டவட்டமாக வாய்ப்பு இருந்தும் கூட அரசாங்கம் அதனைப் புறந்தள்ளிவிட்டது.

இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றினை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மீறியுள்ளது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத இந்திய அரசாங்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு முன்வருமா? இன்னொரு விடயம். அதாவது, விடுதலைப்புலிகளின் விமானப் படையினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லையென முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும், அண்மைய அறிக்கைகளின்படி, விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்கள், இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாயுள்ளதாகக் கருதி இந்திய விமானப்படை ஆலோசனை நடத்தவுள்ளது. இந்தியா பூராவுமுள்ள விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக முதல் முறையாக திருவனந்தபுரத்தில் விரைவில் கூடவுள்ளனர். மேலும், இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது. எனவே, இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் சார்பில் உண்மையான அக்கறை கொண்டு செயற்படும் என எண்ணுவது தவறு. அது இலவுகாத்த கிளியின் கதை.

மற்றது, கிழக்கில் தமிழ்/முஸ்லிம் மக்களின் நிலங்கள் பாரிய அளவில் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் - முஸ்லிம் தலைமைகள் வாளாவிருப்பது கவலைக்குரியதாகும். கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கூடி ஆராய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு எண்ணி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. பேரினவாதிகள் முழு மூச்சாக அநியாயங்கள் செய்யும்போது, தமிழ், முஸ்லிம் தலைமைகள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது போன்றதொரு காட்சியே மக்கள் முன் தெரிகிறது.

தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு மாநாடு

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான யுத்த நிகழ்ச்சி நிரல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஆளாக்கப்படும் அழிவுகள், அவலங்கள், கிழக்கில் பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எந்தவிதமான நம்பிக்கைகளும் இன்றி நடக்கப்போவது என்னென்று தெரியாமல் அச்சத்தோடு வாழ்கின்ற நிலை, தாம் வாழும் பிரதேசத்தை இழக்க நேரிடுமோ என்ற மக்களின் ஏக்கம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக, தொழிற்சங்கத் தலைவர்கள் சமன் இரத்னப்பிரிய, பாலா தம்பு, லீனஸ் ஜயத்திலக்க, ஜோசப் ஸ்ரலின் தலைமையில், தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் பதாகையின் கீழ் 25.08.2007 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்று நடைபெற்றது. நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்துவந்த நூற்றுக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் பங்குபற்றினர். சென்ற மேதினக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே இந்த மாநாடு நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் பரந்தளவிலான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

எனவே, தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு அரசியல்/ தொழிற்சங்க சக்திகளோடு தமிழ்/ முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்து போராடுவதற்குத் தலைப்பட வேண்டும். வாழ்க்கைச் செலவைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் பரந்துபட்ட மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் நிலை உருவாகி வருவதும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.