Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

மேன்டோஸ் புயல்

பட மூலாதாரம்,IMD

8 டிசம்பர் 2022, 05:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் தண்டையார் பேட்டை, திருவெற்றியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான சாரலுடன் கூடிய மழை பெய்துவருகிறது.

 

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல, வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பேரிடர் மீட்புப் படை குழு அனுப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேன்டோஸ் புயலின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மேன்டோஸ் புயலின் விளைவாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தெரிவித்தார்.

''வரும் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் இன்று 40கிமீ முதல் 50 கி மீவரை இருக்கும். ஒரு சில சமயம் காற்றின் வேகம் 60கிமீ வரை இருக்கும். சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் பாலச்சந்திரன்.

சென்னையில் மழை சாரலுடன் தொடங்கியிருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார். வடக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், சென்னை நகரத்தில் குளிர் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுவரை பதிவாகியுள்ள வானிலை தரவுகளை கொண்டு பார்க்கையில், மேன்டோஸ் புயல், புயலாக மட்டுமே கரையைக் கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு நேரத்தில், புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் இன்று இரவு 11 மணிக்கு புயல் கரையை கடப்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது?

பட மூலாதாரம்,IMD

புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது?

ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் இந்த முறை உருவாகியிருக்கும் புயலுக்கு மேன்டோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூட்டியுள்ளது. இதற்கு அரபு மொழியில் புதையல் பெட்டி என்று பொருள்.

புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக புயலுக்கும் பெயரிடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா மற்றும் 12 நாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அவை வங்கதேசம், இரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

 

மேன்டோஸ்’ புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்படி, ஏப்ரல் 2020ல் இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு பயன்படுத்தக்கூடிய 169 பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்குகின்றன. மொத்தம் 169 பெயர்கள் கொண்ட அந்தப் பட்டியலின்படி இயற்கை சீற்றங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

பெயர் பட்டியல் தரும் நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் வகைப்படுத்தப்படும். அந்த பட்டியலில் உள்ளபடி அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிஃபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகின்றன.

கடைசியாக கடந்த அக்டோபரில் உருவான புயலுக்கு சிட்ராங் எனப் பெயரிடப்பட்ட நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக உள்ள மேன்டோஸ் என்ற பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmjy1dg2x40o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேண்டோஸ் புயல்: 85கிமீ வேகத்தில் பலத்த காற்றோடு கரையைக் கடக்கும் - முக்கியத் தகவல்கள்

மேண்டோஸ் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை (டிச. 07) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று (டிச. 09) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேண்டோஸ் புயல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் இங்கே.

  • தென் - மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான மாண்டோஸ் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து தெற்கு - தென் கிழக்கு திசையில் 270 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது.
  • இது அடுத்த மூன்று மணி நேரத்தில் சாதாரண புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு - புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்திற்கு அருகில் கரையைக் கடக்கும்.
  • புயல் கரையைக் கடக்கும்போது, அதாவது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
  • இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.
  • இந்தப் புயலின் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்குத் தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேண்டோஸ் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசம், மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த மீனவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
  • கடல் சீற்றத்தின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில், மணல் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு எனப் புதிதாக அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்துள்ளது.
  • சென்னை நகரில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என சென்னை நகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.  
  • இந்தப் புயலின் காரணமாக, தமிழ்நாட்டிலேயே சென்னையில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை காவல் துறை

By RAJEEBAN

09 DEC, 2022 | 04:48 PM
image

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

912421.jpg

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. இதன்படி பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலையில் உள்ளன.

 

மேலும், படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. 

https://www.virakesari.lk/article/142673

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன?

மேண்டோஸ் புயல்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

மேன்டோஸ் புயல் மகாபலிபுரத்தில் கரையை கடந்த பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றால் மின்சார கம்பங்களும் மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. கட்டடங்கள், கடைகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை நகரில் மரங்கள் விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. இரவு நேரத்தில் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேன்டோஸ் புயல்

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழகக் கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது. இரவு முழுவதும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக பேருந்துகள் இயக்குவதும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து, சாலைகளில் விழுந்துள்ளன. நள்ளிரவில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் விழுந்துள்ளன என்பதால், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது.

மேன்டோஸ் புயலின் தாக்கத்தால் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதமடைந்துவிட்டதாகவும் தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த எம். இளங்கோ தெரிவித்துள்ளார்.

''கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல படகுகள் சேதமாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை என்பதால், பலரும் வருமானமின்றி தவிக்கின்றனர். அரசின் கவனம் எங்கள் மீது படவேண்டும்,'' என இளங்கோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c97q4gg642qo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேன்டோஸ் புயல் படங்கள்: சென்னையில் முறிந்த மரங்கள், சேதமான படகுகள்

மேன்டோஸ்
30 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மேன்டோஸ்' புயல் நேற்று இரவு மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக  60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

படகுகள் சேதம்

காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 150 படகுகள் புயலின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளன.

படகுகள் சேதம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தியிருந்த போதிலும், பலத்த காற்று காரணமாக பல படகுகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன. புயலின் தாக்கம் குறைந்த பிறகே, படகுகள், வலைகள் மற்றும் மோட்டார்கள் எவ்வளவு சேதமடைந்தன என்ற முழுவிவரம் தெரியவரும் என கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவிக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார்.

மேன்டோஸ் புயல்

பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 
மேன்டோஸ் புயல்

அதே நேரத்தில், சாலைகளில் முறிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் காலை முதலே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேன்டோஸ் புயல்

புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேன்டோஸ் புயல்

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c1endp8gj34o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய சேதம் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மேன்டோஸ் புயல்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய மேன்டோஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கடந்துசென்றிருக்கிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேன்டோஸ் புயல் சனிக்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்து, வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புயல் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், புயல் கரையைக் கடந்தபோது சென்னை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் 70 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசியது.

இந்த மேன்டோஸ் புயலின் காரணமாக சென்னை நகரத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. 150க்கும் மேற்பட்ட மரங்கள் தெரு விளக்குகளின் மீது சாய்ந்திருப்பதால், அந்தக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

 

உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, மின்சாரம் தாக்கியதிலும் சுவர் இடிந்து விழுந்ததிலும் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர். 98 கால்நடைகளும் 181 வீடுகளும் இந்த மழையால் சேதமடைந்திருக்கின்றன.

மேன்டோஸ் புயல்

இந்தப் புயல் வரப்போவதை ஒட்டி, மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான படகுகள் சேதத்திலிருந்து தப்பின. ஆனால், சென்னை காசிமேடு பகுதியில் நாட்டுப் படகுகள் வெகுவாகச் சேதமடைந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் இந்தப் புயலில் சேதமடைந்திருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவரும் நாட்டுப்படகு மற்றும் ஃபைபர் படகு சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான கேசவராமன் பிபிசியிடம் தெரிவித்தார். "எங்களில் நிறைய பேர் எங்கள் படகுகளை இழந்துவிட்டோம். அவற்றைச் சரிசெய்ய முடியாது. சில படகுகளை தண்ணீர் இழுத்துச் சென்றுவிட்டது. அவற்றின் சில பாகங்கள்தான் கிடைத்திருக்கின்றன" என்கிறார் கேசவராமன்.

காசிமேட்டைச் சேர்ந்த பக்தவத்சலம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி இரண்டு படகுகளை வாங்கியிருக்கிறார். அவற்றுக்கு வட்டியைக் கட்டிவருகிறார். இப்போது அவை சேதமடைந்துவிட்ட நிலையில், வட்டியையும் முதலையும் எப்படிச் செலுத்துவது என்ற கவலையோடு, வேறு வேலை கிடைக்குமா என்ற கவலையும் அவரை ஆட்கொண்டிருக்கிறது.

"வேறு படகுகளில் வேலை கிடைக்க இன்னும் ஒரு மாதமாவது ஆகும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார் பக்தவத்சலம்.

தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டுமெனக் கோரியிருக்கிறார்கள் மீனவர்கள். சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள கடைகளில் பெரும் பகுதி சேதமடைந்திருக்கிறது. பல கடைகளின் மேற்கூரைகள் புயல் காற்றில் பறந்துவிட்டன. சென்னை தியாகராய நகரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் முழுமையாக நொறுங்கிவிட்டன.

மேன்டோஸ் புயல்

நிவாரண ஏற்பாடுகள்

இந்த மேன்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த வெள்ளிக்கிழமையன்று ஐயாயிரம் பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பணியாளர்களும் புயல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் பிற இடங்களில் தேங்கும் தண்ணீரை அகற்றவும் 900 மோட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை. பிற இடங்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற சுமார் 300 மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மதியத்திற்குள் பாதி இடங்களுக்கு மேல் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. மீதி இடங்களிலும் விரைவில் மின்சாரம் தரப்படுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 355 துணை மின் நிலையங்களில், புயலால் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையிலும் பல இடங்களிலும் மின்வாரியமே மின்சாரத்தை நிறுத்தி வைத்தது. புயல் கரையைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மின் வாரியத்தைச் சேர்ந்த 1,100 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 11,000 பணியாளர்களும் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் படிப்படியாக மின்சாரம் தரப்பட்டுவருகிறது.

மழையின் காரணமாகவும் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும் சென்னையின் மின்தேவை வெகுவாகக் குறைந்தது. இரவு 9 மணியளவில் 2,200 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நள்ளிரவு ஒரு மணியளவில் வெறும் 750 மெகாவாட்டாக குறைந்தது. சனிக்கிழமை மாலையில் மீண்டும் 2,178 மெகாவாட் என்ற அளவுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது.

கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் 12 புயல்கள் கடந்து சென்றுள்ளன. தற்போது கடந்து சென்ற மேன்டோஸ் புயல், 13வது புயலாகும்.

https://www.bbc.com/tamil/articles/cw4nd884kydo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.