Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?

ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?

ஸ்பார்ட்டகஸ் —

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இவ்வாரம் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ஏற்கெனவே பல தடவைகள் அறிவித்துவிட்ட போதிலும், அந்த தேர்தல்கள் குறித்து நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது.

சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20க்கு முன்னதாக அமைக்கப்படக்கூடியதாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்துவரும் எதிரணி கட்சிகள் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சந்தேகத்தை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றன.

மார்ச் 20க்கு முன்னதாக தேர்தல்களை நடத்துவது  தொடர்பில் பிரகடனத்தை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி எதிரணி கட்சிகள் இரு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றன. இந்த மனுக்கள் ஜனவரி 18 பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கின்றன. உயர்நீதிமன்றம் வழங்கக்கூடிய உத்தரவு தேர்தல்களுக்கான சாத்தியத்தின் மீது தாக்கத்தை செலுத்தும்.

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதில் ஆணைக்குழுவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றுகூறிய அதன் தலைவர் உயர்நீதிமன்றத்தினாலும் பாராளுமன்றத்தினாலும் மாத்திரமே தேர்தல்களை ஒத்திவைக்கமுடியும் என்றும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தேர்தல்களை நடத்துவதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாடுகளில் அரசாங்கம் தலையிடப்போவதில்லை என்று கூறினாலும், உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அஙனகீகாரத்தைப் பெறுவதற்கான செயன்முறைகளில் அரசாங்கம் தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் குறித்து எதிரணி கட்சிகள் கடுமையான சந்தேகத்தை கிளப்பவே செய்கின்றன.

நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டு குறிப்பிட்ட திகதிகளில் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட உயர்நீதிமன்றம் வழங்கக்கூடிய உத்தரவு அல்லது பாராளுமன்றத்தின் ஒரு தீர்மானம் தேர்தல்களை தாமதிக்கச் செய்யலாம். அத்தகையதொரு நிலைஏற்படாது என்பதற்கு உத்தரவாதத்தை ஆணைக்குழுவின் தலைவரினாலும் கூட தரமுடியாது.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவதை விரும்பவில்லை. அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டவண்ணம் இருக்கின்றனர். 

நாடு எதிர்நோக்கியிருக்கும் படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல்களைநடத்துவது கட்டுப்படியாகாத ஒன்று. எதிரணி கட்சிகள் கோருவதன் பிரகாரம் உள்ளூராட்சிதேர்தல்களை நடத்துவதானால், ஏற்படக்கூடிய செலவுகளுக்கு பிறகு அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் அரசாங்கத்தை குறைகூறக்கூடாது என்று அகில விராஜ் காரியவாசம் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளூராட்சி தேர்தல்களுக்கு அவசரமில்லை. அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற தோரணையில் அண்மையில் கருத்து வெளியிட்டார்.

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் குறிப்பாக பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் போன்றவர்கள் எந்த தேர்தலயைும் எந்த நேரத்திலும்சந்திக்க தங்கள் கட்சி தயாராகவே இருக்கிறது என்று கூறினாலும், உண்மையில் அவர்கள் உள்ளூராட்சி தேர்தல்களை விரும்பவில்லை. பொதுஜன பெரமுனவையும் ஐக்கிய தேசியகட்சியையும் பொறுத்தவரை, தற்போது மக்கள் முன் செல்வது என்பது கஷ்டமான காரியமேயாகும். அண்மையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்த பொதுஜன பெரமுனவின் நிருவாகத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தேர்தல்களை ஒத்திவைக்குமாறுதான் கேட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது.

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து எதிரணி கட்சிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இதுவரையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இருந்து உறுதிமொழியும் வரவில்லை. அண்மையில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது அடிக்கடி சபைக்கு வந்து பதிலளித்த ஜனாதிபதியிடம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றிய நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும் என்றுகேட்டார். ஆனால் அதற்கு பிறகு பல தடவைகள் சபைக்கு வந்த ஜனாதிபதி அது குறித்து ஒருபோதும் பேசவில்லை. ஜனாதிபதியின் இந்த மௌனம் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என்ற எதிரணியின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

எந்தவொரு தேர்தலுக்கு முன்னதாகவும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இருக்கிறார். தற்போதையசூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தினால் ஆளும் கட்சிக்குள் ஆழமான பிளவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தீவிரமான பொருளாதார மீட்சிச் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துவிட்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் ஆணையைக் கேட்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்று பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறியதாககடந்த வாரம் ‘சண்டே ரைம்ஸ்’ அரசியல் ஆசிரியர் எழுதியிருந்தார்.

அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் உள்ளூராட்சி தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியபோது “தேர்தல் பற்றி பேசுவதானால் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுங்கள். அதை அடுத்த வருட இறுதியில் நடத்தலாம்” என்று கூறியதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எண்ணத்தின் அடிப்படையில்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையே அரசியல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவது குறித்து அவற்றின் தலைவர்கள் அண்மைய நாட்களாக பேசுகிறார்கள் போலும்.

அண்மைய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வும்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை கொண்டவையாக இருக்கின்றன என்பதை வெளிக்காட்டியிருக்கி்ன்றன. பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் பின்னடைவான நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இவ்விரு கட்சிகளும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய கூட்டணி எந்தளவுக்கு ஒப்பேறக்கூடியது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

 தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ராஜபக்சக்களை விட்டால் வேறு எந்த கட்சியும் கூட்டுச்சேர முன்வரப்போவதில்லை. ஜனாதிபதியே கூறுவதைப் போன்று அடுத்த வருடம்பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் பட்சத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்துடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திவரும் அரசாங்கம் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கை இழக்கக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

ஜனாதிபதிகளின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக மீண்டும் மக்கள் ஆணை கேட்டு தேர்தல்களை நடத்துவது இலங்கையில் ஒன்றும் புதியதல்ல. ஆனால், மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதையடுத்து பாராளுமன்றத்தினால் தெரிவான ஜனாதிபதி முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசிப்பதே இங்கு புதிய விடயம்.

இலங்கையில் இதுவரை பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் டி.பி.விஜேதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவுமேயாவர். 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதையடுத்து அன்றைய தினமே பதவியேற்ற விஜேதுங்கவை ஏழு நாட்களுக்குள் பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித்தது. அவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை.

ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். அதனால் 1994 நவம்பர் வரையான அவரது எஞ்சிய பதவிக்காலத்துக்கே விஜேதுங்க ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தார். மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை. பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனது ஆறு வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருக்கக்கூடும்.

முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன 1972 முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து 1978 சுதந்திரதினத்தன்று தனது முதலாவது பதவிக்காலத்தை தொடங்கினார். அந்த பதவிக்காலம் 1983 ஆம் ஆண்டில் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்காக அவர் 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெற்றார். அதுவே இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலாகும்.

ஜனாதிபதி ஜெயவர்தன தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருந்துவிட்டு 1988 இறுதியில் ஒய்வுபெற்றார். அடுத்து முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்டு தேர்தலை நடத்தியவர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

1994 நவம்பரில் தொடங்கிய அவரது முதலாவது பதவிக்காலம் 2000 நவம்பரில்தான் முடிவடையவிருந்தது. ஆனால் அவர் ஒரு வருடம் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தி மீண்டும் வெற்றிபெற்றார். கொழும்பில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்துகொண்ட திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த 2000 நவம்பரிலும் மீண்டும் ஒரு தடவை பகிரங்கத்தில் இல்லாமல் பதவிப்பிரமாணம் செய்தார்.

முதலாவது பதவிக்காலத்தின் ஆறு வருடங்களையும் பூர்த்தி செய்துகொண்டு இரண்டாவது பதவிக்காலத்தின் ஆறு வருடங்களுக்கும் பதவியில் இருக்கும் நோக்குடனேயே அவர் அவ்வாறு செய்துகொண்டார். ஆனால் இரண்டாவது தடவை தேர்தலில் வெற்றிபெற்ற உடனடியாகவே பதவிப்பிரமாணம் செய்த காரணத்தால் 2005 நவம்பருக்கு பிறகு அவர் பதவியில் இருக்கமுடியாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக மொத்தமாக 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபின்னர் அவர் ஓய்வுபெற வேண்டியதாயிற்று.

திருமதி குமாரதுங்கவுக்கு பிறகு 2005 நவம்பரில் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 2010 ஜனவரியில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார். 

அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து  ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையை இல்லாமல் செய்த மகிந்த இரண்டாவது பதவிக்காலம் ஒரு வருடம் முன்னதாக மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்க 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தி அதில் தோல்வி கண்டார்.

அவரை தோற்கடித்து ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது பதவிக்காலத்துக்கு பிறகு இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. அவ்வாறு மக்களிடம் மீண்டும் ஆணையைக் கேட்கக்கூடியதாக அவரின் ஆட்சியின் இலட்சணம் அமையவுமில்லை.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பெரு வெற்றி பெற்ற கோட்டாபயவின் முதலாவது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் நடந்தவற்றை அண்மைய மாதங்களில் கண்டோம்.

இப்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க, கோட்டாபயவின் ஐந்து வருட பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடையும் வரை பதவியால் இருக்கமுடியும். ஆனால் அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக 2023 இறுதியளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் நாட்டம் கொண்டிருப்பதாக தெரிகிறது.

தங்களது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு தேர்தல்களை நடத்திய ஜனாதிபதிகள் எல்லோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியான விக்கிரமசிங்க அவ்வாறு செய்யமுடியுமா என்பதில் ஒரு சட்டப்பிரச்சினை இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அரசிலமைப்புக்கான மூன்றாவது திருத்தமே உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியொருவர் பதவிவிலகியதால் அல்லது மரணமடைந்ததால் ஏற்படுகின்ற வெற்றிடத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதியாக வருபவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான உரித்தைக் கொண்டவர் அல்ல. அவர் வெற்றிடத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கவேண்டும் என்று அந்த ஏற்பாடு கூறுகிறது. அதனால் ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தமுடியாது — இவ்வாறு கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விமானும் அரசியலமைப்பு அறிஞருமான ரொஹான் எதிரிசிங்க.
 

https://arangamnews.com/?p=8445

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.