Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது? - ஆர். அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

2560.jpg.webp
 

 

ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியைஎன்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒருஅடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவுபண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும்எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம்நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமெனநம்புகிறேன்

 

  1. ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில்கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்குநெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்பாத்திரத்தின் மொழியில் ஒரு தெறிப்பு, ஒரு ஜீவன் இருக்கவேண்டும். அப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பற்றி சொல்லஒரு தனி கதை இருக்க வேண்டும். நான் சொல்வதை நீகேட்டுத்தான் ஆக வேண்டும் என கழுத்தைப் பிடித்துக் கோரும்அளவுக்கு அப்பாத்திரத்துக்கு ஒரு கதை சொல்லும் கட்டாயம்இருக்க வேண்டும். என்னுடைய கால்கள்” நாவலின் மது அப்படிஒரு பாத்திரம். The Catcher in the Rhyeஇல் ஹோல்டன்கால்பீல்ட், Color Purpleஇல் சீலி, ஷோபா சக்தியின் சலாம்அலைக்கின் ஜெபானந்தன் இவ்வகைக்கு சிறந்தஉதாரணங்கள். ஒரு நாவலில் இப்படி ஒரு பாத்திரம்கிடைத்தால் நாவலை எங்கிருந்து ஆரம்பித்து எப்படி முடிப்பதுஎனும் குழப்பம் உங்களுக்குத் தீர்ந்து விடும்
  2. ஒரு நாவலுக்கு நீங்கள் சேகரித்து வைத்துள்ள கதைகள், தரவுகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே நாவலுக்குத் தேவை. எவ்வளவு வேண்டும் என எப்படித் தெரிந்து கொள்வது? ஒருநாவல் என்பது ஒரு உன்னதமான இலக்கிய வடிவம், அகத்தேடல், உன்னதமான பயணம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் அதை ஒரு நீண்ட கதை என்றே புரிந்து கொள்ளவேண்டும். அக்கதைக்கு ஒரு பாத்திரமும், அப்பாத்திரத்துக்குஒரு சவாலும் அவசியம். அப்பாத்திரம் இச்சவாலைஎதிர்கொள்ளும் போது கதை ஆரம்பிக்கிறது. நீங்கள் கூகிள்மேப்பில் ஒரு இடத்தை முடிவு செய்து கொடுத்ததும் அதுபாதையை காட்டும். அப்போது சில குழப்படிகள் நடந்து நீங்கள்தப்புத்தப்பான பாதைகளில் பயணித்து ஒரு தவறான / இன்னதெனத் தெரியாத / ஆபத்தான இடத்துக்கு போய்சேர்ந்தீர்கள் என்றால் அது ஒரு கதை ஆகி விடும். மேப் சரியாகஉங்களை வழிநடத்தினால் அது கதையாகாது. இவ்வளவு தான்நாவலின் கதை. என்னென்ன சொதப்பல்கள் என கூகிள்மேப்பான நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இந்தசொதப்பல்களே சவால்கள், இச்சவால்களுக்கு ஏற்ற தரவுகளும், சம்பவங்களும் மட்டும் போதும்.
  3. அடுத்து புனைவெழுத்து வகைமை - genre of fiction. உங்கள்கதை துன்பியலா, இன்பியலா, தனிநபரின் சுயமுன்னேற்றகதையா, தன்னையறிதல் கதையா (coming-of-age), காதல்கதையா, குடும்ப நாடக கதையா, பகடியா, தனிநபர் பகடியா, இயக்கங்கள், சமூக அமைப்புகள் மீதான பகடியா என முடிவுசெய்து கொண்டால் நாவலுக்குத் தேவையான மொழியை, தொனியை, ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும். இது மிகமுக்கியம்
  4. அடுத்து, ஒவ்வொரு நாவலுக்கான கிளைமேக்ஸும் அதனதன்வகைமையைப் பொறுத்தது. அசோகமித்திரனின் தண்ணீர்” coming-of-age வகையை சேர்ந்த நாவல். அதன் முடிவில் நாயகிதூக்கில் தொங்க முடியாது. .மி சரியாக அவள்முதிர்ச்சியடைவதாக முடித்திருப்பார். அப்போதே வாசகனுக்குநிறைவாக இருக்கும். என்னுடைய கால்கள் நாவலும்இவ்வகைமையே. அதை நான் எழுத ஆரம்பித்த நூறுபக்கங்களுக்குள் கண்டுகொண்டு அதற்கு ஏற்ற முடிவைஅளித்தேன். சரவணன் சந்திரனின் நாவல்கள், கட்டுரைகள்அனைத்தும் சுயமுன்னேற்ற வகைமையில் வரும். அவற்றின்முடிவில் மைய பாத்திரம் ஒரு சுயபரிசோதனையின் வாதைகளைஅனுபவித்து பாடம் கற்றிருப்பான், வாசகனுக்கு ஒருவிதஊக்கமும் இந்நாவல்களின் ஊடே கிடைக்கும். இமையத்தின்சமீபத்தைய நாவல் இப்போதும் உயிரோடு இருக்கிறேன் ஒருசமூகப் பகடி + தனிமனித தன்னறிதல் கதை. நகுலனின்அனேகமாக எல்லா நாவல்களும் இந்த வகைமையில் வரும். இதுவே சாருவின் ஸிரோ டிகிரி ஆரம்பித்து அவுரங்கசீப் வரை சமூகப் பகடி + இன்பியல் வகைமையில் வரும். அதனாலேசாருவின் நாவல்கள் தனிமனித மரணத்தில், முழுமையானஅழிவில் முடிவதில்லை. வா.மு கோமுவின் படைப்புகளும்இவ்வகைமையே. சு.ராவின் புளிய மரத்தின் கதையும்”, ஜெயமோகனின் அனேகமான நாவல்களும் வரலாற்றினூடேதனிமனிதர்களின் / சமூகத் திரளொன்றின் அழிவைப் பேசும்துன்பியல் கதைகள் - இவற்றில் வரலாறும் ஒரு பாத்திரமாகஇருக்கும். ஆனால் ஜெ.ஜெ சில குறிப்புகள்”  தனிமனிததுன்பியல் கதை மட்டுமே - அதனாலே அது ஜெ.ஜெயின்வீழ்ச்சியில் முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாவலுக்கும்சொல்லலாம்.

 

நீங்கள் உங்கள் நாவலை எந்த நாவலின் பாணியில் எழுதவிரும்புகிறீர்கள்? அதை அறிந்து கொண்ட பின் அந்நாவலின்வகைமையையும், அவ்வகைமையின் இலக்கணத்தையும் அறிந்துகொள்ளுங்கள். இது உங்கள் நாவலை வெற்றிகரமாக வடிவமைக்கஉதவும்; வாசகனுக்கு உங்கள் நாவலின் தலைப்பு, முகப்பட்டையைபார்த்ததும் இந்நாவல் இவ்வகைமை தான் ஒரு உள்ளுணர்வுஏற்படும். அதன்படியே அவன் தேர்வு பண்ணுவான். நீங்கள் எழுதுவதுவணிக நாவலோ இலக்கிய நாவலோ அவனை ஏமாற்றாமல்இருப்பது அவசியம். நீங்கள் என்னதான் சுதந்திரமானபடைப்பாளியாக உங்களைக் கண்டாலும் மேற்சொன்னவகைமைகளுக்கு வெளியே ஒரு நாவலை எழுத முடியாது

 

5. நாவலில் கதையை முதல் பக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்என அவசியம் இல்லை. ஆனால் ஆரம்பித்தால் நல்லது. (காப்காமுதல் வரியிலே ஆரம்பித்து விடுவார்; தஸ்தாவஸ்கியும் முதல்அத்தியாயத்திலே துவங்கி விடுவார்.) ஒருவேளை உங்கள் கதைகாலத்தின், வரலாற்றின், ஒரு சமூக இயக்கத்தின் கதை என்றால்அதற்குத் தேவையான பக்கங்களை எடுத்துக்கொண்டுபொறுமையாக ஆரம்பியுங்கள். ஆனால் உங்கள் கதைக்கு, வகைமைக்குத் தேவைப்படாவிடில் ஒவ்வொரு பாத்திரமாக, அவர்களுடைய பின்கதையாக அறிமுகம் பண்ணிக்கொண்டுபோகாதீர்கள். அது ஒரு மோசமான உத்தி

 

6. 300-400 பக்க நாவல் எனில் அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து(80-100 பக்கங்கள்), அந்த இடங்களில் திரும்பிப் போக முடியாதஅழுத்தமான சிக்கலான நான்கு சந்தர்பங்களை (points of no return) உருவாக்குங்கள். “சலாம் அலைக்கும் நாவலை எடுத்துக்கொண்டால் இளம் வயது ஜெபானந்தனின் ஊரில் போர் மூண்டுமோசமாகும் போதும் அவன் எப்படியாவது அங்கு தங்கிவிடவேண்டும் என்றே ஆசைப்படுகிறான். அப்போது போர் மிக மோசமாகிஅவனையும் அவனுடைய குடும்பத்தையும் சீர்குலைத்து தூக்கிவீசுகிறது, அவன் பயங்கரவாத இயக்கங்களிடம் சிக்குகிறான், ராணுவத்திடம் சிக்குகிறான், ஒரு கட்டத்தில் நாட்டில் தன்னால் இனிவாழவே முடியாது எனும் நிலை வருகிறது. இதுவே திரும்பிப் போகமுடியாத நிலைமை. அந்நாவலில் இது போன்ற சந்தர்பங்கள்சரியான இடங்களில் வருகின்றன. இவையே நாவலில் வரும் பலபிரச்சினைகளை மீள மீள நிகழ்வதான அலுப்பை ஏற்படுத்தாமல்தடுக்கின்றன; இவையே நம்மை ஆழ்ந்து நாவலை வாசிக்கவைக்கின்றன. நாவல் என்பது ஒரு நெடுந்தொலைவு பயணம். கதையில் அங்கங்கே ஒரு தூக்கி வீசப்படும் உணர்வு, நிலையழிதல், இனிமேல் இக்கதை எங்கு போகவும் வழியில்லையே எனும் திகைப்புஅவசியம். நாவலின் முடிவில் இந்த சிக்கலான திருப்பங்களின்உச்சம் வர வேண்டும்

அதாவது ஒவொரு நூறாவது பக்கத்திலும் ஒரு திகைப்பான point of no return வந்தே ஆக வேண்டுமென நான் கூறவில்லை. நாவலில் அது80-100-120-145-150 என ஏதாவது ஒரு பக்கத்தில் வரலாம். ஒவ்வொரு திரும்பப் போக முடியாத தடை வரும் போதும் நாவலின்சிக்கல்கள் மேலும் மேலும் முறுக்கிக் கொண்டு நிலைமை இன்னும்இன்னும் மோசமாக வேண்டும். நளன் - தமயந்தி தொன்மத்தைஎடுத்துக் கொண்டால் இந்திரன் உட்பட்ட மேலுலக சக்திகள்தமயந்தியை விரும்பி ஏமாற்றமடைவது, நளனை அழிக்கமுடிவெடுப்பது தான் முதல் திரும்பிப் போக முடியாத தடை. அடுத்ததடை அவன் வாழ்வில் சனிபகவான் புகுவது. அடுத்து அவன் சூதாடிஒவ்வொன்றையாக இழப்பது. அடுத்து மனைவியுடன் வனம் புகுவது. அடுத்து மனைவியைத் துறந்து போவது. ஒவ்வொரு தடையாகப்பாருங்கள் ஒவ்வொன்றும் முன்னதை விட அவன் வாழ்வைமோசமானதாக, சிக்கலானதாக மாற்றுவதை. இனி அவன் முழுதாகதிரும்பி வர வாய்ப்பே இல்லை என நம்மை யோசிக்க வைக்கும்படிஇந்த சந்தர்பங்கள் உள்ளன. அதனாலே இக்கதை இன்றும் நம்மக்களின் நினைவில் உள்ளது. மகாபாரதத்திலும் இது போலஏகப்பட்ட சந்தர்பங்கள் உள்ள - மகாபாரதப் போர் முழுக்க இப்படிதிரும்பிச் செல்ல முடியாது அடைக்கப்படும் கதவுகளால் ஆனதுதானே!

 

7. நாவல் எழுதும் கலை குறித்த பல நல்ல புத்தகங்கள்ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் ரா.ஜி ரங்கராஜனும் ஜெயமோகனும்எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் உள்ளதைப் போன்றஒரு முழுமையான நூல் தமிழில் இல்லை என்பதால் ஆங்கிலத்தில்வாசிப்பதையே பரிந்துரைக்கிறேன். யுடியூபிலும் shaelinwrites போன்ற பயனுள்ள அலைவரிசைகள் உள்ளன. இப்படி எழுதும்கலையை கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஒரு நாவலைவடிவமைப்பதில், திருத்துவதில் வெகுவாக உதவும்

 

8. இல்லாவிடில் உங்களுக்குப் பிடித்த ஒரு எழுத்தாளரின் பாணியைஒட்டி அப்படியே எழுதுவது தான் ஒரே வழி. ஆனால் அப்போதுதவறாமல் ஒரு உத்தியைப் பின்பற்ற வேண்டும்: உங்களுடையஆசானாகக் கருதும் அப்படைப்பாளி தன் நாவல்களில் சொல்லாமல்விடுகிற ஒரு விசயம் இருக்கும், அவர் தவறாகப் பண்ணுவதாகஉங்களுக்குத் தோன்றுகிற ஒரு பிரச்சினை இருக்கும். இதைஉங்கள் நாவலில் சரியாக எடுத்தாண்டு உங்கள் நாவலுக்கு ஒருபுதுமையை அளியுங்கள். ஈழப்போரின் கதையை எழுதுகையில்ஷோபா சக்தி சொல்லத் தவறுவதை அகரமுதல்வனும், தீபச்செல்வனும் சொல்ல முயல்வதை கவனியுங்கள். அப்படியேஅவர்கள் தமது தனித்துவத்தை நிறுவுகிறார்கள். எங்கு முரண்பட்டுவிலகுகிறீர்களோ அங்கு தான் நீங்கள் தோன்றுகிறீர்கள்.  

 

9. எழுத்துக் கலையின் கோட்பாடு சார்ந்து வாசிப்பவர்கள் பெரியபெரிய நூல்களை எல்லாம் படிக்கத் தேவையில்லை. ஒரே ஒரு 40 பக்க நூலைப் படித்தால் போதும். அது அரிஸ்டாட்டிலின் Poetics. புனைவுகளின் இலக்கணத்தை அரிஸ்டாட்டில் அளவுக்குதுல்லியமாக சுருக்கமாக வரையறுத்த மற்றொரு சிந்தனையாளர்இல்லை

 

10. அரிஸ்டாட்டில் கதைகளில் ஒரு முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்டுகிறார் - ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு மையமான குற்றம், குறைபாடு உள்ளது. இதை அவர்கள் அறிவதில்லை என்பதே ஒருசம்பவங்களின் கோவையை கதையாக்குகிறது. தெரிந்து விட்டால்பின் கதையென ஒன்றில்லை. இந்த குறையே அவர்களை ஒரு சுய-அழிவுப் பாதையில் இட்டுச்செல்கிறது. அவர்கள் தம் முழுமையானஅழிவை நெருங்குமுன் இதைத் தெரிந்து கொண்டால்தப்பிப்பார்கள். அப்போது அது இன்பியல் ஆகும். இறுதியானதிரும்பிப் போக முடியாத திருப்பத்திற்குப் பின்னால் இதை அவர்கள் அறிந்து கொண்டால் அது துன்பியல் ஆகும். அரிஸ்டாட்டில்இதை துன்பியல் வழு (tragic flaw) என்கிறார்.

 தி.ஜாவின் மோகமுள் பாபு தன்னை அலைகழிப்பது வெறும் உடல்விழைவின் பிரம்மாண்டமான அகப்புனைவு தான், தான் கலையெனநாடுவதும், தன்னை அறிய முடியாது தள்ளிப் போடுவதும் இந்தஉண்மையில் இருந்து தப்பிக்கும் பொருட்டே என ஜமுனா அவனைத்தேடி கடைசியில் வரும் போது கிட்டத்தட்ட புரிந்து கொள்கிறான். “இவ்வளவு தானா? இதற்குத் தானா?” என அவளுடன் உடலுறவுகொண்ட பிறகு யோசிக்கிறான். ஆனால் அவனால் முழுமையாகஇதில் இருந்து விடுதலை அடைய முடியாது. அதனால் அவன்இசையில் தன்னைத் தொலைக்கிறான். இசையைக் கற்க வடஇந்தியாவுக்கு அவன் ஜமுனாவை விட்டுப் போவதாக நாவல்முடிகிறது. அவன் ஜமுனாவை விட்டல்ல இவ்வளவு தானா?” எனும்கேள்வியை விட்டே ஓடுகிறான். அவனுடைய பாத்திரத்தின் வழு தன்உடல் வாதை குறித்த தெளிவுக்கு வர இயலாமையே. அதைகலையாக மாற்றுவதே அவனுடைய வெற்றி. அதுவே இந்நாவலைதுன்பியலாகாமல் இன்பியலாக்குகிறது. நாடகவியலில் இப்படிதுன்பியலில் ஆரம்பித்து இன்பியலாக முடியும் படைப்புகளைtragicomedy என்கிறார்கள். “மோகமுள் அவ்வகையில் வரும்.

 “சலாம் அலைக்கில் ஜெபானந்தனின் பாத்திர வழு / துன்பியல்பிழை அவனால் எந்த சூழலுடனும் முழுக்கப் பொருந்திப் போகமுடிவதில்லை, ஒருவித அந்நியமாதலை உணர்கிறான் என்பது. அவனை எல்லா சூழல்களும் வெளியே தள்ளிக் கொண்டேஇருக்கின்றன. ஆதவனின் நாவல் நாயகர்கள், ஆல்பர்ட் காமு, காப்கா ஆகியோரின் நாவலின் நாயகர்களின்துன்பியல் வழுவும் இந்த அந்நியமாதல் தான். அதுவேஜெபானந்தனிடமும் வெளிப்படுகிறது. அதனாலே ஊரில்இருந்தாலும், போர் நடந்தாலும், போர் முடிந்தாலும், காதலித்தாலும், குடும்பம் அமைந்தாலும், வேலை கிடைத்தாலும் அவனால் நிலைக்கமுடிவதில்லை. நாவல் முடியும் போதும் அவன் முழுக்க அந்நியப்பட்டுஅடையாளமற்றவனாகவே இருக்கிறான். சாருவின் நாயகர்களுக்கும்இதுவே நடக்கிறது - ஒரே வித்தியாசம் அவர்கள் (மிலன் குந்தரேவின்படைப்புகளில் வருவதைப் போல) இந்த அந்நியமாதலையும் ஒருவிளையாட்டாகக் காண்கிறார்கள். அவர்கள் தம்மையே புனைந்துகொள்கிறார்கள். தம்மையே பகடி பண்ணுகிறார்கள். அதனால்அவர்களுடைய துன்பியல் வழுவானது ஒரு அழிவில் போய் முடியாமல்இன்பியலாக முடிகிறது.

 

இப்படி நீங்கள் எந்த நாவலை எடுத்துக் கொண்டாலும் மையபாத்திரங்களின் வளர்ச்சிப் பாதையானது அரிஸ்டாட்டில் வகுத்ததைஒட்டியே இருப்பதைப் பார்க்கலாம்.

 

உங்கள் நாவலின் மையப் பாத்திரத்திற்கு என்று ஒரு பிரதானமானசவால் இருக்க வேண்டும் என்றேன். இந்த சவால் ஒரு ஆழமானஉள்பயணத்திற்கு அப்பாத்திரத்தை இட்டுச் செல்ல வேண்டுமெனில்அச்சவால் மேற்சொன்ன துன்பியல் பிழையுடன் இயைந்து பயணிக்கவேண்டும். அதை அடையாளம் காண்பது சுலபம் அல்ல. ஆனால்எழுதிச் செல்லும் போது உங்கள் பாத்திரத்தின் பிரதானமானஉளவியல் குறைபாடு, வாழ்க்கைப் பார்வையில் பிழை இது தான்எனக் கண்டுகொண்டால் உங்களுக்கு புதையல் கிடைத்து விட்டதுஎனப் பொருள். பின்னர் உங்கள் நாவல் மிகவும் சுவாரஸ்யமாகஆழமாக வளரும். உங்களுக்கே அப்பாத்திரத்தைப் பற்றி எழுதுவதில்பெரும் உவகை இருக்கும். ஏனென்றால் அப்பாத்திரத்தின் போக்கைநீங்களே விலகி நின்று பார்த்து ரசிக்கத் தொடங்குவீர்கள். “என்னென்ன சொல்றான் பாரு, பண்றான் பாரு? பைத்தியம்!” எனசெல்லமாக உள்ளுக்குள் அவனை / அவளைக் கொஞ்சிக்கொண்டேஎழுதுவீர்கள். அந்த ரசனை நாவலின் நடையிலும் மிளிரத்தொடங்கும். நீங்கள் எழுதும் போது ரசிக்கும் ஒன்றை வாசகனும்ரசிப்பது உறுதி

 

11. கடைசியாக, ஒரு கதையில் உங்கள் பாத்திரமும், வாசகனும்கற்கப் போகும் விழுமியம் என்ன? இதை ஒரு பிரதியின் தத்துவம்என்பார்கள். இது நேரடியாக ஒரு ஆசிரியன் திணிக்கிறவாழ்க்கைப்பாடமாகத் தோன்றக் கூடாது. இது மைய பாத்திரத்தின்வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக எதார்த்தமாக - அவனது துன்பியல்குறையில் இருந்து - அவன் கற்றுக் கொள்ளுகிற விழுமியமாகஇருக்க வேண்டும்

புரட்சி அல்ல, சமூகத்தைத் திருத்துவதல்ல, தன்னைத்திருத்துவதும், மற்றமையிடம் அன்பு காட்டுவதுமே முக்கியம் என்பதுகுற்றமும் தண்டனையும் நாவலில் இருந்து வாசகனும் மையப்பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவும் பெறும் படிப்பினை, விழுமியம். ஆல்பர்ட் காமுவின் அந்நியன் நாவலின் ஹீரோவான மெர்சால்ட்ரஸ்கால்நிக்காவ் பண்ணுகிற அதே தவறுகளைத் தாம் செய்கிறான், ஆனால் ரஸ்கால்நிக்காவ் போலன்றி அவன் சமூக அறத்தைகற்றுக்கொள்ளாமல் சமூகத்தில் இருந்தும், காலத்தில் இருந்தும்அந்நியப்பட்டு நிற்பதே அசலான இருப்பு எனும் முடிவுக்குவருகிறான். இரண்டும் ஒரே கதைகள், இருவருக்கும் ஒரே துன்பியல்பிழைகளே, ஆனால் படிப்பினைகள் மட்டும் வேறு, அதனாலேமுடிவுகளும், தொனியும் வேறுவேறு. இரண்டையும் படித்தால் ஒரேநாவலென உங்களுக்குத் தோன்றாது. இரண்டு நாயகர்களும்வெவ்வேறு வாழ்க்கைப் பார்வையை இறுதியில் பெறுவதே அதற்குக்காரணம்

ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் பிரதிநிதியாக ஒருவன் தன்துன்பியல் பிழையை அறிய நேரும் போதெல்லாம் அதிலிருந்துவிலகி ஒரு புது புனைவுக்குள் தன்னை ஒளித்துக்கொண்டுதொடர்ந்து பல துன்பங்களுக்குள் அகப்பட்டு தன்னழிவில் சிக்கிக்கொண்டால், அவன் கடைசியில் கூட தன் பிரச்சினையின்காரணத்தைப் புரிந்து கொள்ளாவிடில் அது ரஸ்கோல்நிக்கோவுக்கும்மெர்ஸால்டிக்கும் மாற்றாக அமைகிற ஆனால் அவர்களுடைய அதேவழுவைக் கொண்ட பாத்திரம் ஆகும். அவனே டான் குவிக்ஸாட். முக்கியமாக நவீன சமூகத்திற்கும் மரபானசமூகத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஒரு வரலாற்றுக்கட்டத்து மனிதர்களை ஒட்டுமொத்தமாக பகடி பண்ணும் ஒருபாத்திரமாக டான் குவிக்சாட் இருப்பதால் அவன் தன்னையறிதலேஅவன் மரணம் வரை அவனுக்கு சாத்தியமில்லாமல் ஆகிறது. விமர்சகர்கள் இந்நாவலை அதனாலே துன்பியல் என்றோ இன்பியல்என்றோ வகைப்படுத்த முடியாது என்கிறார்கள். ஏனென்றால்அவனுக்கு தன்னை, தன் பிழையை உணரும் ஒரு வாய்ப்புகிடைப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு தனிமனிதன் பற்றினகதையல்ல. ஐரோப்பிய கற்பனாவாத லட்சியவாத சமூகத்தின்பிரதிநிதியே குவிக்ஸாட். இதே குவிக்ஸாட்டை நவீன மனிதனாக்கிரஷ்யாவில் விட்டால் அவன் ரஸ்கால்நிக்காவ் ஆகிறான், அல்ஜீரியாவில் விட்டால் அவன் காமுவின் நாயகன் ஆகிறான், தமிழகத்தில் சம்பத்தின் நாவலில் விட்டால் அவன்இடைவெளியின் நாயகன் ஆகிறான், நகுலனின்புனைவுவெளிக்குள் விட்டால் அவன் நவீனன் ஆகிறான். ஒரே ஆள்அவன் எங்கிருக்கிறான், அவனுடைய துன்பியல் வழுவை அவன்அறிகிறானா இல்லையா என்பதைப் பொறுத்து அவன் வெவ்வேறுபாத்திரங்களாக நமக்குத் தோற்றமளிக்கிறான், இதைப் பொறுத்துஅந்நாவலின் விழுமியம் வெளிப்படுகிறது.

 

உங்கள் நாவலின் மையப் பாத்திரமும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு மனிதனாகவே இருப்பான். அவனை நீங்கள் புத்தம் புதிதாக உருவாக்க முடியாது. ஆனால் அவன் தன் மையப் பிழையை அறியும் போது பெறும் படிப்பினை, வாழ்க்கைப் பார்வை என்ன என்பதை வைத்து அவனை தனித்துவமாக மாற்ற முடியும். உங்கள் நாவலின் தரிசனத்தையும் புதிதாக, ஆழமாக, தனித்துவமாக மாற்ற முடியும். இந்த படிப்பினை அல்லது விழுமியம் அல்லது வாழ்க்கைப் பார்வை அல்லது தரிசனம் இல்லாது உங்கள் நாவல் தட்டையாகி விட வாய்ப்புண்டு. ஆக இது மிக முக்கியமானது! 

என்னுடைய "கால்கள்" நாவலில் ஒரே ஒரு முக்கியமான சம்பவம் தான் - மது எனும் மாற்றுத்திறனாளியான பதின் வயதுப் பெண் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொள்கிறாள். இதில் என்ன புதுமை உள்ளது? இதில் என்ன ஆழம் இருக்க முடியும்? ஆனால் அவள் இதன் வழியாக தன்னை அறிகிறாள். இந்த சுய அறிதலும் கதைக்கு வெளியே இல்லை. அவளுடைய பிரதானமான நெருக்கடி அவளுடைய ஊனத்தின் நியாயம், அது அவளுக்கு ஏன் நிகழ்ந்திருக்க வேண்டும் எனும் கேள்வி. அதற்கான விடை காண முடியாது அவள் தத்தளித்துக் கொண்டே இருக்கிறாள். ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு உரிமமும் பெறும் போது அவள் தன்னுடைய ஊனம் தனக்கு நன்மையே செய்திருக்கிறது, தனது குறைபட்ட உடலில்லாமல் தன் இருத்தல் இல்லை, தன் வாழ்வின் அர்த்தம் இல்லை எனப் புரிந்து கொள்கிறாள். அவளுக்கு ஒரு நிறைவு வருகிறது. அவளுக்கு உலகம் மீது, தன் குடும்பம் மீது, தன் பாலியல் உடல் மீதுள்ள கோபம் மறைகிறது. இந்த வாழ்க்கைப் பார்வையே இந்நாவலுக்கு ஒரு ஆழத்தை அளிக்கிறது. இதை நீக்கி விட்டால் இந்நாவல் எடையற்றுப் போய் விடும், ஒன்றுமில்லாத கதை எனும் உணர்வை வாசகனுக்கு அளிக்கும். ஒரு கதையை நாவலாக்குவது இறுதியில் அது அளிக்கும் வாழ்க்கைப் பார்வை, விழுமியம், தரிசனம் தான்.

 

இன்னொரு விசயம் - உங்கள் நாவலின் மையப்பாத்திரம் மிகச்சிக்கலான தத்துவ, வரலாற்று நெருக்கடிக்குள்செல்ல வேண்டியதும் அவசியம் அல்ல. ஒரு எளிய நெருக்கடி, நடைமுறை சார்ந்த சிக்கல், அதனுள் உங்கள் மையப்பாத்திரம் போய் வெளிவரும் போது எப்படி மாறுகிறான், என்னகற்கிறான் என நீங்கள் உணர்த்தினாலே அது உங்கள் நாவலுக்குஒரு ஆழத்தைக் கொடுக்கும். ஒரு வெகுஜன நாவலுக்கும் இலக்கியநாவலுக்குமான வித்தியாசம் இந்த விழுமியம் எந்தளவுக்கு மையப்பாத்திரத்தின் அடிப்படையான பிழையில் இருந்து தோன்றிவெளிப்பட்டு, தன்னறிதலால் அவனால் பெறப்படுகிறது என்பதே. வணிக நாவலில் பெரும்பாலும் ஆசிரியரே வெளியில் இருந்து கருத்துரைத்து போதனை செய்வார். இலக்கிய நாவலில்அப்பாத்திரம் எதார்த்தமாக தன் வாழ்க்கையை தானே கற்றுணரும். அந்த பாடமும் அவனுடைய சிக்கலில் இருந்து முழுக்க வெளியேஎடுக்க முடியாது பின்னிப் பிணைந்து இருக்கும். அதில் ஒருபூடகத்தன்மை, புதிர்மை கடைசி வரை இருக்கும். ஏனென்றால்அவன் என்னதான் தன்னையறிந்தாலும் அவனுடைய அடிப்படையானகோணல் முழுக்க போயிருக்காது என்பதால் அவன் பெறும்படிப்பினையும் சற்று கோணலாகவே கடைசி வரை இருக்க முடியும். இதுவே நாவலை ரசிக்கத்தக்கதாகவும், தனித்துவமானதாகவும் வைத்திருக்கும். "ஆத்திச்சூடி" சொல்லும் பாடங்களையே உங்கள் மையப் பாத்திரமும் சொன்னால் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்க முடியாது தானே. அதனாலே உங்கள் நாவலின் படிப்பினைகளிலும் ஒரு சிறு பிழை இருக்கட்டும்! 
 

 

http://thiruttusavi.blogspot.com/2022/12/blog-post_27.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.