Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்

02 JAN, 2023 | 08:37 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மிகவும் முக்கியமான வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம், ஸிம்பாப்வே சகலதுறை வீரர் சிக்கந்தர் ராஸா, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ, இங்கிலாந்து டெஸ்ட அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருத உட்பட மொத்தமாக 13 விருதுகள் இந்த வருடம் வழங்கப்படவுள்ளது.

பிரதான விருது உட்பட மேலும் இரண்டு விருதுகளுக்கு பாபர் அஸாமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் விருதை வென்ற பாபர் அஸாமும், அதிசிறந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் மொஹமத் ரிஸ்வானும் அதே விருதுகளுக்கு இந்த வருடமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

2022 ஐசிசி விருதுகளுக்கான குறும்பட்டியலில் இடம்பெறுபவர்கள்

 

வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது: பாபர் அஸாம் (பாகிஸ்தான்), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), டிம் சௌதீ (நியூஸிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து).

வருடத்தின் அதிசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஜொனி பெயார்ஸ்டோவ் (இங்கிலாந்து), உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), கெகிசோ ரபாடா (தென் ஆபிரிக்கா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து).

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்: பாபர் அஸாம் (பாகிஸ்தான்), ஷாய் ஹோப் (மேற்கிந்தியத் தீவுகள்), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அடம் ஸம்ப்பா (அவுஸ்திரேலியா).

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீரர்: சாம் கரன் (இங்கிலாந்து), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), மொஹமத் ரிஸ்வான் (பாகிஸ்தான்), சூரியகுமார் யாதவ் (இந்தியா).

வருடத்தின் வளர்ந்துவரும் வீரர்: பின் அலன் (நியூஸிலாந்து), மார்க்கொ ஜன்சென் (தென் ஆபிரிக்கா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா), இப்ராஹிம் ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்).

வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ப்ளின்ட் விருது: அமேலியா கேர் (நியூஸிலாந்து), ஸ்ம்ரித்தி மந்தான (இந்தியா), பெத் மூனி (அவுஸ்திரேலியா), நெட் சிவர் (இங்கிலாந்து).

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருது: அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆபிரிக்கா), அமேலியா கேர் (நியூஸிலாந்து), நெட் சிவர் (இங்கலாந்து).

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீராங்கனை: நிதா தார் (பாகிஸ்தான்), சொபி டிவைன் (நியூஸிலாந்து), ஸ்ம்ரித்தி மந்தானா (இந்தியா), தஹிலா மெக்ரா (அவுஸ்திரேலியா).

வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனை: யஸ்டிக்கா பாட்டியா (இந்தியா), டார்சி ப்றவுண் (அவுஸ்திரேலியா), அலிஸ் கெப்சி (இங்கிலாந்து), ரேனுகா சிங் (இந்தியா).

இவற்றைவிட கிரிக்கெட் ஆர்வ விருது, வருடத்தின் அதிசிறந்த மத்தியஸ்தர் விருது ஆகியவற்றுடன் இணை உறுப்பு நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர், வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுகளும் வழங்கப்படும்.

அத்துடன் வருடத்தின் அதிசிறந்த ஐந்த ஐசிசி அணிகளும் தீர்மானிக்கப்படும்.

தனிப்பட்ட வீரர் அல்லது வீராங்கனைக்கான வாக்களிப்புகள் உலகளாவிய ரீதியில் இந்த வாரம் ஆரம்பமாகும். வாக்களிப்பு முடிவில் சிறப்பு குழுவினால் இந்த மாத இறுதியில் ஐசிசி விருதுகளுக்கு உரியவர்கள் அறிவிக்கப்படுவர்.

https://www.virakesari.lk/article/144791

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2023 க்கான ஐ.சி.சி. மகளிர் ரி20 அணியின் தலைவியாக சமரி அத்தபத்து

Published By: VISHNU   22 JAN, 2024 | 05:33 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20  கிரிக்கெட்  அணிக்கு இலங்கையின் சமரி அத்தப்பத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலதுறைகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள் ஐசிசி மகளிர் சர்வதேச ரி20  கிரிக்கெட்   அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு அணியை ஐசிசி இன்று திங்கட்கிழமை (22) அறிவித்தது.

கேப் டவுனில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 50 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் சமரி அத்தப்பத்து 2023க்கான தனது கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார். அவரது துடுப்பாட்ட உதவியுடன் தென் ஆபிரிக்காவை முற்றிலும் எதிர்பாராத விதமாக 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

அவர் கடந்த வருடம் 130.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 470 ஓட்டங்களை ரி20 கிரிக்கெட் போட்டிகளில் குவித்திருந்தார். இதில் 15 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன.

நியூஸிலாந்துக்கு எதிராக கொழும்பில் வருடத்தின் மத்திய பகுதியில் நடைபெற்ற ரி20 போட்டி ஒன்றில் சமரி அத்தப்பத்து 47 பந்துகளில் 80 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை 10 விக்கெட்களும் மீதமிருக்க இலங்கை கடந்து அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றி பெறுவதற்கு சமரி அத்தப்பத்து பெரும் பங்காற்றி இருந்தார்.

ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி விபரம்

(துடுப்பாட்ட வரிசையில்)

சமரி அத்தபத்து (தலைவர் - இலங்கை), பெத் மூனி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா), ஹேய்லி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), நெட் சிவர் ப்ரன்ட் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூஸிலாந்து), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), ஏஷ;லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), தீப்தி ஷர்மா (இந்தியா), சொஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மெகான் ஷ_ட் (அவுஸ்திரேலியா)

https://www.virakesari.lk/article/174551

2023க்கான ஐசிசி ஆடவர் ரி20  கிரிக்கெட் அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ்

Published By: VISHNU   22 JAN, 2024 | 07:14 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு இந்திய அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு அமைய ஐசிசி மகளிர் மற்றும் ஆடவர் ரி20 தெரிவு அணிகளுக்கு உப கண்டத்தைச் சேர்ந்த இருவர்  முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சமரி அத்தபத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 733 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 2 சதங்களும் 5 அரைச் சதங்களும் அடங்குவதுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 155.95 ஆகும்.

கடந்த வருடம் அதிசிறந்த ஐசிசி ரி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடமும் அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகிறார்.

வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வெடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

2023ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணி விபரம்

துடுப்பாட்ட வரிசையில் : யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), ஃபில் சோல்ட் (இங்கிலாந்து), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பாளர் - மேற்கிந்தியத் தீவுகள்), சூரியகுமார் யாதவ் (தலைவர் - இந்தியா), மார்க் சப்மன் (நியூஸிலாந்து), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகண்டா), மார்க் அடயா (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ங்கராவா (ஸிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

https://www.virakesari.lk/article/174558

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமின்ஸ் தலைமையிலான 2023இன் ஐசிசி உலக டெஸ்ட் அணியில் திமுத் கருணாரட்ன

23 JAN, 2024 | 04:26 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவின் தைரியம் மிக்க அணித் தலைவர் பெட் கமின்ஸ் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.

ஐந்து அவுஸ்திரேலிய வீரர்களை உள்ளடக்கிய ஐசிசி உலக டெஸ்ட் அணியில் ஆரம்ப வீரர்களில் ஒருவராக திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் அதீத திறமையை வெளிப்படுத்தியவர்களில் அதிசிறந்தவர்கள் இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 2 சதங்கள், 3 அரைச் சதங்கள் உட்பட 60.8 என்ற சராசரியுடன் 608 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார்.

நியூஸிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 அரைச் சதங்கள் குவித்ததன் மூலம் திமுத் கருணாரட்னவின் அபார ஆற்றல் வெளிப்பட்டது.

இந்த அடிப்படையிலேயே ஐசிசி உலக டெஸ்ட் அணியில் அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐசிசி உலக டெஸ்ட் அணித் தலைவராக பெட் கமின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவை சம்பியனாக வழிநடத்தியவர் பெட் கமின்ஸ் ஆவார். அத்துடன் இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக்கொள்ள அவுஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

இவற்றைவிட கடந்த வருடம் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்கல் சாதனையையும் பெட் கமின்ஸ் தனதாக்கிக்கொண்டார். அவர் 11 போட்டிகளில் 42 விக்டெக்களை மொத்தமாக கைப்பற்றியிருந்தார்.

ஐசிசி உலக டெஸ்ட் அணி விபரம்

உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), திமுத் கருணாரட்ன (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), பெட் கமின்ஸ் (தலைவர் - அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), ஸ்டுவட் ப்றோட் (இங்கிலாந்து).

https://www.virakesari.lk/article/174632

ஐசிசி ஆடவர் ஒருநாள் அணியில் இந்தியர்கள் ஆதிக்கம்

Published By: VISHNU   23 JAN, 2024 | 08:44 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மா தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அந்த அணியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி ஆகிய இந்திய வீரர்கள் அறுவர் இந்த அணியில் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, கடந்த வருட 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டியது. அரை இறுதியிலும் இந்தியா வெற்றியீட்டியிருந்தது.

ஆனால், இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2023ஆம் ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஷுப்மான் கில் (1584), விராத் கோஹ்லி 1377), ரோஹித் ஷர்மா (1255) ஆகிய மூவரும் துடுப்பாட்ட வரிசையில் முதல் நால்வரில் இடம்பெறுகின்றனர்.

கடைநிலையில்

சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (49 விக்கெட்கள்), வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமத் சிராஜ் (44), மொஹமத் ஷமி (43) ஆகிய இந்திய பந்துவீச்சாளர்கள் மூவர் இடம்பெறுகின்றனர்.

இந்த அணியில் இடம்பெறும் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியவர்களாவர்.

ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி

ரோஹித் ஷர்மா (தலைவர் - இந்தியா), ஷுப்மான் கில் (இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), விராத் கோஹ்லி (இந்தியா), டெரில் மிச்செல் (நியூஸிலாந்து), ஹென்றிச் க்ளாசென் (தென் ஆபிரிக்கா), மார்கோ ஜென்சென் (தென் ஆபிரிக்கா), அடம் ஸம்ப்பா (அவுஸ்திரேலியா), மொஹமத் சிராஜ் (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா), மொஹமத் ஷமி (இந்தியா)

Icc_odi_team_of_the_year.jpg

https://www.virakesari.lk/article/174649

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ்

24 JAN, 2024 | 05:09 PM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் ரீ20 கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் வென்றெடுத்துள்ளார்.

இந்த விருதை அவர் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2023ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் சூரியகுமார் யாதவ்வுக்கான விருது இரண்டாவதாக அறிவிக்கப்பட்டது. 

முதலாவதாக ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னை விருது அறிவிக்கப்பட்டது.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி இணை  அங்கத்துவ  நாடுகளுக்கான வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் வென்றெடுத்தார்.  

அதிரடி மன்னன் சூரியகுமார் யாதவ்

அதிரடியாக ஓட்டங்கள் குவிப்பதில் வல்லவரும் மன்னருமான சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் மொத்தமாக 733 ஓட்டங்களைப் பெற்றார். அவரது சராசரி 48.86 ஆக அமைந்திருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் நினைத்துப் பார்க்க முடியாத 155.95ஆக இருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத் தூண் என வருணிக்கப்படும் சூரியகுமார் யாதவ், பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இலகுவாக ஓட்டங்களைக் குவித்தார்.

அவரது அதிரடி துடுப்பாட்டம் இந்தியாவின் பல வெற்றிகளில் பிரதான பங்களிப்பு செய்திருந்தது.

வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வு எடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

இந்த விருதுக்கு சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஸ் ராம்ஜனி (உகண்டா), மார்க் செப்மன் (நியூஸிலாந்து) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/174702

வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீராங்கனை விருதை ஹெய்லி மெத்யூஸ் வென்றார்

Published By: VISHNU   24 JAN, 2024 | 04:51 PM

image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரீ20 கிரிக்கெட் வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் வென்றெடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இந்த விருதை வென்றெடுத்த இரண்டாவது வீராங்கனை ஹெய்லி மெத்யூஸ் ஆவார். முன்னாள் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லர் இந்த விருதை 2015இல் வென்றிருந்தார்.

சகலதுறைகளிலும் பிரகாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகளின் சமகால தலைவியான ஹெய்லி மெத்யூஸ் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்களின் அடிப்படையிலேயே வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ரி20 வீராங்கனை விருதுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

கடந்த வருடம் 14 போட்டிகளில் விளையாடிய ஹெய்லி மெத்யூஸ் ஒரு சதம், 4 பவுண்டறிகள் உட்பட 700 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். இதில் 99 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன.

அவரது துடுப்பாட்ட சராசரி 63.63 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 132.32 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் விரட்டிக் கடப்பதில் பெரும் பங்காற்றியவர் மெத்யூஸ். அவர் அப் போட்டியில் 132 ஓட்டங்களைக் குவித்தார். அதே தொடரின் முதலாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 99 ஓட்ட்ஙகளையும் கடைசிப் போட்டியில் 79 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்துவீச்சிலும் கடந்த வருடம் அவர் அபாரமாக செயற்பட்டு மொத்தமாக14 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

அவரது இந்த சகலதுறை ஆட்டத் திறனே அவருக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரி20 வீராங்கனை விருதை வென்றுகொடுத்தது.

இந்த விருதுக்கு இலங்கையின் சமரி அத்தபத்து, அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இங்கிலாந்தின் சொஃபி எக்லஸ்டோன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/174715

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐ.சி.சி. விருது ரச்சின் ரவிந்த்ரவுக்கு சொந்தமானது

25 JAN, 2024 | 10:49 AM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை நியூஸிலாந்தின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ர தட்டிச்சென்றார்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியமைக்காக வளர்ந்துவரும் வீரராக ஐசிசியினால் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்  ரச்சின் ரவிந்த்ர  துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடியாக 3 சதங்களையும் 2 அரைச் சதங்களையும் விளாசிய ரச்சின் ரவிந்த்ர 64.22 என்ற சராசரியுடன் 578 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 106.44 ஆக இருந்தது.

இடது கை சுழல்பந்துவீச்சாளரான அவர் 6 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரச்சின் ரவிந்த்ர அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிவரை முன்னேறியிருந்தது.

கடந்த வருடம் மொத்தமாக 25 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்  போட்டிகளில் விளையாடிய அவர், 41 என்ற சராசரியுடனும் 108.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 820 ஓட்டங்களைப் பெற்றதுடன் 18 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

சர்வதேச ரி20 அரங்கில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 91 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

இத்தகைய சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ரச்சின் ரவிந்த்ர, வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை தனதாக்கிக்கொண்டார்.

இந்த விருதுக்கு இலங்கையின் டில்ஷான் மதுஷன்க, தென் ஆபிரிக்காவின் ஜெரால்ட் கொயெட்ஸீ ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/174757

வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார்

25 JAN, 2024 | 11:52 AM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை அவுஸ்திரேலியாவின் 20 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரர் ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது 15ஆவது வயதில் மகளிர் பிக் பாஷ் லீக்கில் அறிமுகமான லிச்ஃபீல்ட், என்றாவது ஒருநாள் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பை இந்த விருதின் மூலம் உறுதி செய்துள்ளார்.

pl.gif

பிக் பாஷ் லீக்கில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல்களைவிட சிறந்த ஆற்றல்களை சர்வதேச அரங்கில் கடந்த வருடம் வெளிப்படுத்தினார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது அறிமுக ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய    லிச்ஃபீல்ட்,  ஆட்டம் இழக்காத ஒரு சதம், 4 அரைச் சதங்கள் உட்பட 485 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். (சராசரி 53.88 ஸ்ட்ரைக் ரேட் 81.92)

அவரது இந்த ஆற்றல்கள் அவரை வருடத்தின் ஐசிசி மகளிர் ஒருநாள் அணியிலும் இடம்பெறச் செய்தது.

இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த வீரர்கள்

இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை நெதர்லாந்தின் பாஸ் டி லீட் வென்றெடுத்ததுடன் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் தனதாக்கிக்கொண்டார்.

bdl.gif

24 வயதான பாஸ் டி லீட், கடந்த வருடம் 16 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 424 ஓட்டங்ளைப் பெற்றதுடன் 31 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் 123 ஓட்டங்களைக் குவித்ததுடன் 5 விக்கெட் குவியலையும் பதிவுசெய்திருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 16  விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் தனது அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

முதலாவது ஆபிரிக்க பெண்

இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனையாக கென்யாவின் குவின்டோர் ஆபெல் தெரிவானார்.

qa.gif

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதலாவது ஆபிரிக்க பெண் என்ற கௌரவத்தையும் பெருமையையும் குவின்டோர் ஆபெல் பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் 17 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய குவின்டோர் ஆபெல், ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 476 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் தனது சுழல்பந்துவீச்சின் மூலம் 30 வீராங்கனைகளை ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

https://www.virakesari.lk/article/174761

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஐசிசியின் உயரிய விருது

25 JAN, 2024 | 03:14 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றெடுத்துள்ளார்.

ஐசிசி மகளிர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி, ஐசிசி மகளிர் ரி20  கிரிக்கெட் அணி ஆகியவற்றின் தலைவியாக ஐசிசியினால் பெயரிடப்பட்டிருந்த அத்தபத்து, அதிசிறந்த  ஐசிசி மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு சற்று நேரத்திற்கு முன்னர் உரித்தானார்.

கடந்த வருடம் 8 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 415 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

f3a1c2d3-6383-4abd-a731-8a7e70b46bec.JPG

https://www.virakesari.lk/article/174780

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனையாக நெட் சிவர் ப்ரன்ட்

25 JAN, 2024 | 06:12 PM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்லின்ட் விருதை இங்கிலாந்து சகலதுறை வீராங்கனை நெட் சிவர் ப்றன்ட் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார்.

வருடம் முழுவதும் மிகத் திறமையாக விளையாடிய நெட் சிவர் ப்றன்ட், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரில் (மூவகை கிரிக்கெட்) அபாரமாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.

இந்த விருதுக்கு சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய வீராங்கனைகளான ஏஷ்லி கார்ட்னர், பெத் மூனி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களது ஆற்றல்களைவிட நெட் சிவர் ப்றன்டின் ஆற்றல்கள் அற்புதமாக இருந்தது.

ஆறு மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களுடன் 393 ஓட்டங்களைக் குவித்த நெட் சிவர் ப்றன்ட், 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பத்து மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 3 அரைச் சதங்களுடன் 364 ஓட்டங்களைப் பெற்ற அவர், விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இரண்டு மகளிர் டெஸ்ட் போட்டிகளில் 137 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதற்கு அமைய மூவகை மகளிர் கிரிக்கெட் அரங்கில் 18 போட்டிகளில் மொத்தமாக 894 ஓட்டங்களைப் பெற்ற நெட் சிவர் ப்றன்ட் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா வென்றெடுத்துள்ளார்.

அவர் கடந்த வருடம் 13 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 1210 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.

சிட்னியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைக் குவித்து 2023 கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார்.

இந்த எண்ணிக்கையே டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

icc_test_cricketer_of_the_year_usman_kaw

https://www.virakesari.lk/article/174802

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை பெட் கமின்ஸ் வென்றெடுத்தார்

25 JAN, 2024 | 06:45 PM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் வென்றெடுத்தார்.

உற்சாகம் மற்றும் உத்வேகம் ஆகியவற்றுடன் கடந்த வருடம் முழுவதும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பெட் கமின்ஸ், தனது அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

பெட் கமின்ஸின் தலைமையின் கீழ் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரைத் தக்கவைத்துக்கொண்டது.

அத்துடன் நின்றுவிடாமல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.

2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெட் கமின்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா அணி உச்சத்தை எட்டியது. அவரது மிகத் திறமையான ஆளுமை, பொறுமை, கட்டுப்பாடு, சிறந்த பண்பு என்பன ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தனது சக வீரர் ட்ரவிஸ் ஹெட், இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரும் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் பெட் கமின்ஸின் ஆட்டத் திறன், ஆளுமை, தலமைத்துவம் அனைத்தும் உயர்ந்திருந்தது.

கடந்த வருடம் 24 போட்டிகளில் 422 ஓட்டங்ளைப் பெற்ற அவர் 59 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

அதிசிறந்த கிரிக்கெட் பருவ காலத்தைக் கொண்டிருந்த பெட் கமின்ஸ் அனைவரினதும் பாராட்டுதல்களை வென்றெடுத்தார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பெட் கமனின்ஸின் அவுஸ்திரேலியாவுக்கு சிறப்பாக அமையவில்லை.

ஆனால், அதன் பின்னர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனான அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொண்டது.

வருட பிற்பகுதியில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடிய அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றிகொண்டு உலக சம்பியனானது. அந்த இறுதிப் போட்டியில் பெட் கமின்ஸ் அணியை வழிநடத்திய விதம், பிரயோகித்த வியூகங்கள், பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் என்பன சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தன.

ஆஷஸ் தொடரிலும் உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் இக்கட்டான வேளைகளில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை வெற்றபெறச் செய்தவர் பெட் கமின்ஸ்.

வருட இறுதியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த பெட் கமின்ஸ் அந்தத் தொடரைக் கைப்பற்றி வருடத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்திருந்தார்.

https://www.virakesari.lk/article/174804

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.