Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லச்சித் பர்ஃபூக்கன்: ராட்ஷச வேடமிட்டு முகலாய விரிவாக்கத்தை எதிர்த்துப் போரிட்ட அசாமிய வீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லச்சித் பர்ஃபூக்கன்: ராட்ஷச வேடமிட்டு முகலாய விரிவாக்கத்தை எதிர்த்துப் போரிட்ட அசாமிய வீரன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷோக்குமார் பாண்டே
  • பதவி,வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர், பிபிசி இந்திக்காக
  • 1 ஜனவரி 2023
லச்சித் பர்ஃபூக்கன்

பட மூலாதாரம்,ANI

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாய விஸ்தரிப்பை வெற்றிகரமாக சவாலுக்கு உட்படுத்திய அசாமிய வீரன் லச்சித் பர்ஃபூக்கன் அசாமிய சமுதாயத்தில் நாயகனாக மதிக்கப்படுகிறார். மேலும் 1930 முதல் ஒவ்வொர் ஆண்டும், அசாம் முழுவதும் அவரது பிறந்தநாள் 'லச்சித் தினமாக' கொண்டாடப்படுகிறது.

லச்சித் பர்ஃபூக்கனின் 400வது பிறந்தநாளை அசாம் அரசு சமீபத்தில் கொண்டாடியது. நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பர்ஃபூக்கன் தொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கு அசாம் அரசு ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) சிறந்த கேடட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் லச்சித் பர்ஃபூக்கன் தங்கப் பதக்கம் வழங்க 1999 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் முடிவு செய்தது.

தேவதாய் பண்டிட்டிடமிருந்து கிடைக்கப்பெற்ற புரஞ்சியை (அதாவது - தெரியாத கதைகளின் களஞ்சியம், அசாமின் பண்டைய பண்டிட்களின் வரலாற்று புத்தகங்கள்) அஹோம் அறிஞர் கோலப் சந்திர பருவா 1930 ஆம் ஆண்டு செய்த ஆங்கில மொழிபெயர்ப்பில் லச்சித் பர்ஃபூக்கனின் கதை விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

 

சுதந்திரத்திற்குப் பிறகு 1947 இல் அசாம் அரசு, வரலாற்றாசிரியர் எஸ்.கே.புய்யான் எழுதிய 'லச்சித் பர்ஃபூக்கன் அண்ட் ஹிஸ் டைம்ஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அமர் சித்ர கதா தொடரின் கீழும் லச்சித் பற்றிய காமிக்ஸ்  வெளியிடப்பட்டது. ஆனால் இன்றும் அசாமுக்கு வெளியே ஒரு சிலருக்கு மட்டுமே அவரை பற்றித் தெரியும்.

அஹோம் வம்சம் மற்றும் முகலாய படையெடுப்பு

Celebrations at Assam

பட மூலாதாரம்,ANI

1970 இல் வெளியிடப்பட்ட 'அசாம் இன் அஹோம் ஏஜ்' என்ற புத்தகத்தில் நிர்மல் குமார் பாசு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் அசாமில் அஹோம் வம்சத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது என்று கூறுகிறார். மஹான் தாயி வம்சத்தின் ஷான் கிளையின் அஹோம் வீரர்கள், சுக்பாவின் தலைமையில் உள்ளூர் நாகாக்களை தோற்கடித்து தற்போதைய அசாமைக் கைப்பற்றி அடுத்த 600 ஆண்டுகளுக்கு அசாமில் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்த அஹோம் வம்சத்தின் பெயரால்தான் இன்றும் இந்தப்பகுதி அசாம் என்று அறியப்படுகிறது. அஹோம் வம்சத்தின் ஆரம்பகால மதம் பாங்க்ஃபி தாயி மதம். இது பௌத்தம் மற்றும் உள்ளூர் மதம் ஆகியவற்றின் கலவையாகும். மேலும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் தபன் குமார் கோகோய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படமான 'ஹிஸ் மெஜஸ்டி தி அஹோம்ஸ்', 18 ஆம் நூற்றாண்டில்தான் அங்கு இந்து மதம் முழுமையாக நிறுவப்பட்டது என்று கூறுகிறது.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே வைஷ்ணவப் பிரிவின் செல்வாக்கு அங்கு அதிகரிக்கத் தொடங்கியது என்று பாசு கூறுகிறார். பொதுவாக அஹோம் அரசர்கள் மற்ற மதங்களின்பால் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்தனர் என்று அவர் மேலும் கூறுகிறார்.

Mughals

பட மூலாதாரம்,PENGUIN INDIA

 
படக்குறிப்பு,

கிழக்கு இந்தியாவில் முகலாய மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவ ஔரங்கசீப், மீர் ஜும்லாவை அனுப்பினார்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அசாம், அஹோம் ஆட்சியாளர்களின் கீழ் முற்றிலும் சுதந்திரமான பகுதியாக இருந்தது. அதன் எல்லைகள் மேற்கில் மன்ஹா நதியிலிருந்து கிழக்கில் சாடியா மலைகள் வரை சுமார் 600 மைல்கள் பரவியிருந்தது. அதன் அகலம் சராசரியாக ஐம்பது முதல் அறுபது மைல் வரை இருந்தது. சாடியா மலைகளிலிருந்து திபெத்துக்குச் செல்லும் பல வழிகள் இருந்தன. அதே சமயம் மன்ஹா ஆற்றின் கிழக்குக் கரை முகலாயப் பேரரசின் எல்லையாக இருந்தது.

அந்த நாட்களில் ராஜ்ஜியத்தின் தலைநகரம் கிழக்குப் பகுதியில் உள்ள கர்கானாவாகவும், பர்ஃபூக்கனின் தலைமையகமாக குவஹாத்தியாகவும் இருந்தது. 1639 இல், அஹோம் ஜெனரல் மோமாய்- தாமுலி பர்பருவா மற்றும் முகலாய தளபதி அல்லா யார் கான் ஆகியோருக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, குவஹாத்தி உட்பட மேற்கு அசாம் முகலாயர்களின் கைகளுக்கு சென்றது.

ஆனால் 1648 ஆம் ஆண்டில், அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைவரான மன்னர் ஜெய்த்வஜ் சிங், ஷாஜகானின் நோயை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முகலாயர்களை மன்ஹா (மானஸ்) ஆற்றின் மறுகரைக்கு தள்ளிவிட்டார். டாக்காவுக்கு அருகிலுள்ள முகலாயப் பகுதிகளை கைப்பற்றி பல முகலாய வீரர்களை கைது செய்தார். அந்த நேரத்தில், கூச் பிகாரும் தன்னை சுதந்திரப்பகுதியாக அறிவித்துக்கொண்டது.

மீர் ஜும்லாவின் படையெடுப்பு

டெல்லியின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஔரங்கசீப், கிழக்கு இந்தியாவின் மீது முகலாய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட மீர் ஜும்லாவை அனுப்பினார். கூச் பிகாரைக் கைப்பற்றிய பிறகு மீர் ஜும்லா 1662 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அசாமை அடைந்து, மன்ஹா நதி முதல் குவஹாத்தி வரையிலான பகுதியை எளிதாக வென்றார்.

தெற்கு அசாமின் ஆட்சியாளராக ஒரு காயஸ்தை( ஒரு சாதி) நியமிக்கும் அரசரின் முடிவால் நிலப்பிரபுத்துவ வர்க்கம் கோபமடைந்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் மீர் ஜும்லாவுக்கு எதிராக முழுமனதாக போரிடாத காரணத்தால்  அவர் கிட்டத்தட்ட எதிர்ப்பின்றி வென்றதாகவும் வரலாற்றாசிரியர் புய்யான் கூறுகிறார்.

ஔரங்கசீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஔரங்கசீப்

பின்னர் முகலாயப் படைகள் கலியாபாரை அடைந்தன. அஹோம் வீரர்கள் விழிப்புடன் இருந்த போதிலும், மீர் ஜும்லாவின் தளபதியான திலேர் கான் தவுத்ஜய், 1662  பிப்ரவரி 26 ஆம் தேதி சிம்லுகர் கோட்டையைக் கைப்பற்றினார். ராஜா ஜெய்த்வஜ் சிங் மலைகளுக்கு தப்பி ஓடிவிட்டார். 1662 மார்ச் 17 ஆம் தேதி மீர் ஜும்லா, தலைநகர் கர்கானை கைப்பற்றினார்.

ஆனால் அசாமிய மக்கள் இதை தொடர்ந்து எதிர்த்தனர், ஜெய்த்வஜ் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் போராட்டம் தொடர்ந்தபோது, அங்கு தங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்பதை மீர் ஜும்லா உணர்ந்தார். இறுதியாக 1663 ஜனவரியில் கிலாஜாரி காட் என்ற இடத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அஹோம் மன்னர் மேற்கு அசாமை முகலாயர்களுக்கு விட்டுக்கொடுத்தார். மேலும் மூன்று லட்சம் ரூபாய் மற்றும் தொண்ணூறு யானைகளுடன் கூடவே ஆண்டிற்கு இருபது யானைகள் போர் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

கூடவே தனது ஒரே மகள் மற்றும் சகோதரர் மகளையும், முகலாய அந்தப்புரத்திற்கு அனுப்பினார். இதற்குப் பிறகு 1663 பிப்ரவரியில் 12,000 அசாமிய பிணைக் கைதிகளுடன் தெற்கு அசாமின் ஆட்சிப்பொறுப்பை  ரஷீத் கானிடம் ஒப்படைத்துவிட்டு மீர் ஜூம்லா திரும்பிச்சென்றார்.

நிலைமையை மாற்றிய லச்சித் பர்ஃபூக்கன்

Assam Govt

பட மூலாதாரம்,ASSAM GOVT

உடன்படிக்கைக்குப் பிறகு மன்னர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மேலோட்டமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அவர் முகலாய ஆதிக்கத்திலிருந்து தனது ராஜ்ஜியத்தை விடுவிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். தனது படையை வலுப்படுத்துவது மட்டுமின்றி, சுற்றுப்புற ராஜ்ஜியங்களிடமும் ஒத்துழைப்பிற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மன்னர் ஜெயத்வஜ் சிங் 1663 நவம்பரில் காலமானார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சக்ரத்வஜ் சிங் புதிய ஆட்சியாளரானார்.

புதிய அரசர் பதவியேற்றவுடன் முகலாயப் படைகளுக்கு எதிராகப் போரிட தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அமைச்சர்கள் மற்றும் அரசவை அறிஞர்களின் ஆலோசனையின் பேரில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எல்லா வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதில் போர் காலத்திற்குப்போதுமான உணவு தானியங்களை சேகரித்தல், படைகளை மறுசீரமைத்தல் மற்றும் கடற்படையை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

இப்போது அஹோம் படைக்கு தளபதியைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பல வார கால ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பொறுப்பு லச்சித் பர்ஃபூக்கனுக்கு வழங்கப்பட்டது.

ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் முகலாய ராணுவத்துடன் போரிட்ட முன்னாள் ஜெனரல் மொமாய்- தாமுலி பர்பருவாவின் இளைய மகன்தான் லச்சித் பர்ஃபூக்கன்.

லச்சித்தின் சகோதரி பாக்ரி கபாரு, ராஜா ஜெய்த்வஜ் சிங்கை மணந்தார். அவர்களது மகள் ரமாணி கபாரு, கிலாஜாரி காட் ஒப்பந்தத்தின்படி ஔரங்கசீப்பின் மூன்றாவது மகன் சுல்தான் ஆசாமை மணம் செய்துகொண்டார்.

லச்சித் சிறந்த படை பயிற்சி மற்றும் கல்வியை பெற்றார். மேலும் அவர் கோடா-பருவா (குதிரைப்படைத் தலைவர்), துலியா பருவா சிமல்குரியா ஃபூகன் (வரி வசூலிக்கும் தலைவர்) மற்றும் டோலகாஷ்ரின் பருவா ( காவல்துறை தலைவர்) உள்ளிட்ட அஹோம் படையின் மிக உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

இந்த பதவிகளை வகித்து அவர் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக அவருக்கு அஹோம் தளபதி பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தக் காலத்தின் மிகவலிமையான முகலாய படையை எதிர்த்து போரிடுவது எளிதானது அல்ல. ஆனால் லச்சித் பர்ஃபூக்கன் தனது புத்திசாலித்தனத்தாலும், துணிச்சலாலும் சாதித்துக்காட்டியது வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் பதிவாகியுள்ளது.

போரின் ஆரம்பம் மற்றும் ராஜா ராம் சிங்குடன் மோதல்

ரங் கர், அஹோம் ராஜ்ஜியத்தின் முக்கியமான கட்டிடம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரங் கர், அஹோம் ராஜ்ஜியத்தின் முக்கியமான கட்டிடம்

1667 ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஹோம் படை, முகலாயர்களிடமிருந்து தங்கள் நிலத்தை மீட்கப் புறப்பட்டது. நீண்ட காலப் போருக்குப் பிறகு, 1667 நவம்பர் 2 ஆம் தேதி இட்டாகுலியின் முக்கியமான கோட்டை மற்றும் குவஹாத்தியின் கட்டுப்பாட்டையும் வென்றது. எதிரிகள் மன்ஹா ஆற்றின் மறுகரைக்கு துரத்தப்பட்டனர். மீர் ஜும்லாவால் சிறைபிடிக்கப்பட்ட அஹோம் வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கூடவே பல முகலாய பிரபுக்களும் கைது செய்யப்பட்டனர்.

புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகள் எதிர்கால தாக்குதலை எதிர்த்து சமாளிக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டன.

ஒளரங்கசீப்பும் அமைதியாக இருக்கவில்லை. அசாமை மீண்டும் கைப்பற்ற ராஜா ஜெய் சிங்கின் மகன் ராஜா ராம் சிங்கை அவர் அனுப்பினார்.

அவரது தகுதிக்கு அளிக்கப்பட்ட மரியாதை இது என்று வரலாற்றாசிரியர் புய்யான் இதை வர்ணிக்கிறார். ஆயினும் சிவாஜி மற்றும் குரு தேக் பகதூர் இருவரும், ராம் சிங்கின் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்த காரணத்தால்  முகலாயர்கள் ராம் சிங் மீது கோபத்துடன் இருந்தனர்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு ராம் சிங்கின் பட்டம் மற்றும் அரசவையில் அமரும் உரிமையும் பறிக்கப்பட்ட காரணத்தால் மிகவும் புண்பட்ட ஜெய் சிங், அந்த வருத்தத்தால் காலமானார் என்று கூறப்படுகிறது. ஜெய் சிங்கின் மரணத்திற்குப் பிறகு ராம் சிங் பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் பெற்றார்.

மீர் ஜும்லாவின் மரணத்திற்குப் பிறகு பேரரசரின் பார்வையில் மிகவும் திறமையான நபராக ராம் சிங் தெரிந்தார். 1668 ஜனவரி 6 ஆம் தேதி அசாம் படையெடுப்பின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அதேசமயம் கடற்படையின் தலைமை, இஸ்மாயில் சித்திக்கி கையில் இருந்தது.

ராஜா ராம் சிங்கின் படையில் 21 ராஜபுத்திரர்களும், 30 ஆயிரம் காலாட்படைகளும், 18 ஆயிரம் துருக்கிய குதிரை வீரர்கள் மற்றும் 15 ஆயிரம் வில்லாளர்களும் இருந்தனர். டாக்காவில் மேலும் இரண்டாயிரம் வீரர்கள் இணைந்தனர். காம்ரூப்பில் மந்திர தந்திரம் ஏதேனும் செய்யப்பட்டால் அதை  எதிர்த்து சமாளிக்க பாட்னாவிலிருந்து குரு தேக் பகதூர் சிங் மற்றும் ஐந்து முஸ்லீம் பீர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பயணத்தின் போது குரு தேக் பகதூர், பாட்னாவில் தனது மகன் கோவிந்த் பிறந்த செய்தியைப் பெற்றார். குரு தேக் பகதூர் அஸ்ஸாமின் துப்ரியில் ஒரு குருத்வாராவையும் கட்டினார்.

ராஜா ராம் சிங்குக்கு எதிரான போர் எளிதானது அல்ல என்பதை அஹோம் படை அறிந்திருந்தது. சிவாஜி கொரில்லா உத்திகளைக் கடைப்பிடித்து பல வெற்றிகளைப் பெற்ற காலகட்டம் இது. சக்ரத்வஜ் சிங் அதை நன்கு அறிந்தவர் மற்றும் அதன் ரசிகரும் கூட. லச்சித் பர்ஃபூக்கன் இந்த நுட்பத்தை நாட முடிவு செய்தார். மேலும் ஒரு கோட்டையை சரியான நேரத்தில் கட்ட முடியாதபோது அதன் பொறுப்பதிகாரியான தனது சொந்த தாய் மாமாவுக்கு அவர் மரண தண்டனை விதித்தார். "என் மாமா என் நாட்டைவிட உயர்ந்தவர் அல்ல" என்று அப்போது அவர் கூறினார்.

அஹோம் படையின் வரலாற்று வெற்றி

அஹோம் படை

பட மூலாதாரம்,ANI

1669 பிப்ரவரியில் ராஜா ராம் சிங் தனது பெரும் படையுடன் எல்லைச்சாவடியான ராங்காமாட்டியை அடைந்தார். நேரடி மோதலுக்கு பதிலாக, லச்சித் பர்ஃபூக்கன் கொரில்லா போர் கொள்கையை கடைப்பிடித்தார். தேஜ்பூருக்கு அருகில் நடந்த இரண்டு போர்களில் ராஜா ராம் சிங்கின் படை வெற்றி பெற்றது. ஆனால் கடற் போரில் அஹோம்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

சுவல்குச்சிக்கு அருகில் நடந்த போரில் அஹோம் படை, நிலத்திலும் நீரிலும் வெற்றி பெற்றது. பர்ஃபூக்கனின் வீரர்கள் நள்ளிரவில் கோட்டைகளை விட்டு வெளியே வந்து எதிரிப் படையை மறைந்திருந்து தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர்.

ராஜா ராம் சிங், பர்ஃபூக்கனுக்கு எழுதிய கடிதத்தில் இதை எதிர்த்தார். இது திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் செயல் என்றும், இதுபோன்ற போரில் பங்கேற்பது தனது பெருமைக்கு எதிரானது என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த பர்ஃபூக்கனின் பிராமண தூதர்கள், அஹோம் படை இரவில் மட்டுமே போரிட முடியும், ஏனெனில் அதன் படையில் ஒரு லட்சம் ராட்ஷசர்கள் உள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதை நிரூபிக்க அடுத்த நாள் இரவு வீரர்கள் ராட்ஷசர்களின் உடையில் அனுப்பப்பட்டனர். இறுதியில் ராம் சிங், ராட்ஷசர்களுக்கு எதிராக தான் சண்டையிடுவதாக ஒப்புக்கொண்டார்.

ராம் சிங் அஹோம் படைக்கு நேரடி போருக்கு சவால் விடுத்தார். ஆனால் லச்சித் பர்ஃபூக்கன் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. அஹோம் படை சேசா அருகே திடீர் தாக்குதலால் முகலாயர்களை சேதப்படுத்தியபோது, ராம் சிங் பதிலடி கொடுத்து பயங்கர அழிவை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, இரு தரப்பிலும் சமாதானப் பேச்சு வார்த்தை துவங்கி, சில நாட்களுக்கு போர் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் சக்ரத்வஜ் சிங் காலமானார். அவரது சகோதரர் மாஜு கோஹைன்,  உதயாதித்யா என்ற பெயரில் அரியணையில் அமர்ந்து தனது மறைந்த சகோதரரின் மனைவியை மணந்தார். சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு மீண்டும் போரைத் தொடங்க உதயாதித்யா முடிவு செய்தார். பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் அலபோய் களப் போரில் பத்தாயிரம் வீரர்களை இழந்த பிறகு, அஹோம் படை, சராய்காட்டின் இறுதிப்போரில் வெற்றி பெற்றது. ராம் சிங் 1671 மார்ச் மாதம் ராங்காமாட்டிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இந்தப் போரில் ஆரம்ப வெற்றியை முகலாய படை பெற்றது. அஹோம் ராணுவம் பின்வாங்கத் தொடங்கியதும், உடல்நலம் இல்லாமல் இருந்த லச்சித் பர்ஃபூக்கன் ஒரு சிறிய படகில் வந்து போரில் நுழைந்தார். அவருடைய அறைகூவலைக்கேட்ட அஹோம் வீரர்கள் முழு தைரியத்துடன் போராடி ராஜா ராம் சிங்கை பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினர். அஹோம் படையையும், லச்சித் பர்ஃபூக்கனையும் பாராட்டி ராஜா ராம் சிங், 'ஒரே தளபதி முழு படையையும் கட்டுப்படுத்துகிறார். ஒவ்வொரு அசாமிய வீரரும் படகு ஓட்டுதல், வில்வித்தை, அகழி தோண்டுதல், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்துவதில் வல்லவராக உள்ளனர். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட அனைத்தையும் அறிந்த படையை நான் பார்த்ததில்லை. நான் போர்க்களத்தில் இருந்தபோது அவருடைய ஒரு பலவீனத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,”என்று கூறினார். முகலாய படை முயற்சிகளை கைவிடவில்லை. ஆயினும் அஹோம் படை 1681 இல் தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் போது பலவீனமான ஆட்சியாளர்கள் அசாமை ஆக்கிரமிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலவீனமடைந்துவிட்ட அஹோம் சாம்ராஜ்யம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிபணிந்தது.

https://www.bbc.com/tamil/articles/cd18d7r9l8no

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.