Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர்: இக்பால் அத்தாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர்: இக்பால் அத்தாஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 2 செப்ரெம்பர் 2007, 17:14 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர் என்று பிரபல ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் "த நேசன்" வார ஏட்டிற்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம்:

எனது பாதுகாப்பை அகற்றியதற்காக என்னால் அவர்களுடன் வாதாட முடியாது. எனக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நான் அவர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. ஆனால் மறுபுறம் அரச சார்பான குழுவினர் எனது வீட்டிற்கு வெளியில் நடமாடுவதனால் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.

தனக்கு நெருக்கடியான விடயங்களை தெரிவிக்கும் போது அவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவது அரசின் பொதுவான வழக்கம். அரசு எதிர்த்தரப்பில் உள்ள போது நான் அவர்களின் அன்புக்குரியவனாக தெரிவேன், ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நான் சில விடயங்களை எழுதும் போது அது அவர்களுக்கு சங்கடமாக இருக்கும். எனது எழுத்துக்கள் தவறானவையாக அல்லது அவற்றில் பிழைகள் இருப்பின் அவர்கள் என்னை அணுகி அதனை சுட்டிக்காட்டலாம்.

மேலும் நான் தெரிவிக்கும் மேலதிக விடயங்கள் அவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துமாக இருந்தால், என்னுடன் தனிப்பட்ட முறையில் அதனை பேசுவதுடன், அப்படி எழுத வேண்டாம் எனவும் கூறலாம். நான் அவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தயாராகவே உள்ளேன். ஆனால் இப்படியான அணுகுமுறைகள் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.

மிக் விவகாரத்தை பொறுத்த வரைக்கும் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் மிக்-27 கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளை எமது வார ஏட்டின் முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தோம்.

அப்போது எனக்கு பாதுகாப்பு இருந்த போதும் அது எனக்கு பல நெருக்கடிகளை கொடுத்திருந்தது. நான் இதனை தொடர்ந்தால் அதற்கான விளைவுகள் துன்பகரமாக இருக்கும் என்றும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் வரை அது தொடர்பாக நாம் எதனையும் பிரசுரிக்கவில்லை.

ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிக் விவகாரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு 14 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. அது எமக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

சில பத்திரிகைகள் அதனை முழுமையாக தாங்கி வெளிவந்திருந்தன. ஆனால் நாம் அதில் சிலவற்றை நீக்கி விட்டு எமது முன்னைய செய்தியில் இருந்து சிலவற்றை சேர்த்திருந்தோம். ஏனெனில் அது தரமானதாக இல்லை, அது சிலரை குற்றம் சுமத்துவதையே முதன்மையாக கொண்டிருந்தது.

அது நாம் முன்னர் கூறிய பலவற்றை கொண்டிருந்ததாக நாம் நம்பவில்லை.

அது வெளிவந்த போது இந்த ஊழல் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் மக்களின் முன்வைக்கப்பட்டு விட்டதாகவே நான் உணர்ந்தேன்.

எனினும் சிறிலங்கா அரசு மேற்கொண்ட உத்தியோகபூர்வமான செயல் திட்டங்களில் பல ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு ஓகஸ்ட் 12 ஆம் நாள் வெளியிடப்பட்ட எமது அறிக்கையில் ஒரு வேறுபாடே இருந்தது.

அதாவது உக்ரேன் அரசு விசாரணைகளை தொடங்கியுள்ளதாக நான் தெரிவித்திருந்தேன்.

இரண்டாவதாக கொள்வனவுகள் உக்ரேன் அரசினூடாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தேன்.

இதற்கு இடைத்தரகராக செயற்பட்டவர் பிரித்தானியாவில் வசிக்கும் எம்.ஐ.குல்டிகேவ்.

உக்கிரேன் அரசு விசாரணைகளை தொடங்கியதும் அவர் காணாமல் போய்விட்டார். எனது பத்தியில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கத் தயாராக உள்ளேன். இன்று வரை நான் கூறியவற்றிற்கு எதிராக உக்ரேன் அரசு எதனையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். குல்டிகேவ் காணாமல் போய்விட்டதாக நான் தெரிவித்திருந்தேன், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அவர் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்த இரு தகவல்களுக்கு அப்பால் என்னால் எழுதப்பட்ட எல்லாத் தகவல்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் வெளியிடப்பட்ட எமது செய்தியை ஆதாரமாக கொண்டவை. எனது பத்தி ஓகஸ்ட் 12 ஆம் நாள் வெளியிடப்பட்டது, ஓகஸ்ட் 14 ஆம் நாள் அதன் மொழிபெயர்ப்பை "லங்காதீப" வெளியிட்டிருந்தது. ஓகஸ்ட் 15 ஆம் நாள் எனது பாதுகாப்பு விலக்கப்பட்டது, 18 ஆம் நாள் எனது வீட்டிற்கு வெளியில் போடப்பட்டிருந்த நிலையான காவலும் நீக்கப்பட்டது.

பாதுகாப்பு கொடுக்கும் படி என்னால் அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எனது வீட்டுக்கு வெளியில் போடப்பட்டிருந்த காவல் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு இருந்தது. அப்போது எனது படுக்கை அறை வரை வந்த இரு ஆயுததாரிகள் தமது கைத்துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டியிருந்தனர்.

இதனை எனது மனைவியும், 7 வயதான மகளும் மிகுந்த அச்சத்துடன் பார்த்து நின்றனர்.

அதன் பின்னரே வீட்டுக்கு வெளியிலான அந்த காவல் போடப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் இரு வான் படையினர் தொடர்புபட்டிந்ததாக பின்னர் அறியப்பட்டது.

இந்த வழக்கில் நாம் நான்கு வருடங்கள் போராடினோம், அவர்களுக்கு 11 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களில் அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர்.

பின்னர் மேன்முறையீடு செய்யப்பட்டது. தற்போதும் வழக்கு மேன்முறையீட்டில் தான் உள்ளது.

எனது தனிப்பட்ட பாதுகாப்பை பொறுத்த வரையில், அது தொடர்பாக நான் கோரவில்லை. நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருந்த போது என்னைத் தொடர்பு கொண்ட காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ எனது உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளதாகவும் தான் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சாந்த கொட்டகொட இது குறித்து தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும், அன்றைய அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்காவுடனும் ஆலோசித்ததாகவும் எனக்கு கொமோண்டோப் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் கொமோண்டோக்கள் இங்கு வாழ்கின்றனர். எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பாகும். இவை புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. தற்போது அது விலக்கப்பட்டுள்ளதுடன், எனக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்றும் அரசு வாதாடி வருகின்றது. என்னால் அரசுடன் வாதாட முடியாது நான் ஒரு தனிப்பட்ட நபர், நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களில் ஒருவன்.

எனக்குள்ள அச்சுறுத்தல்களின் அடிப்படையில் பாதுகாப்பை வழங்குவது அரசைப் பெறுத்தது. எனக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்று அவர்கள் கருதினால் என்னால் அவர்களிடம் முறையிட முடியாது. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் கூற முடியும், அதாவது எனது பாதுகாப்பை நீக்கியதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எனது வீட்டிற்கு வெளியில் இடம்பெற்ற சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்களை இதற்கான சிறந்த உதாரணம்.

நான் பயங்கரவாதிகளின் அனுதாபியாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளதால் பின்னர் நான் பணம் சம்பாதிப்பதாகவும் அவர்களால் கூறமுடியும். நான் பணம் சம்பாதிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது ஊடகத்துறையில் பணம் சம்பாதிப்பதற்காக எனக்குள்ள சட்டபூர்வமான வழியாகும். இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள சூழல் எனக்கு புதிய ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இது எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போது இருந்த நிலையை விட மோசமானது.

ஏனெனில் என்னால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை, எனது குடும்பத்தினரும் வெளியேற முடியவில்லை. அதற்கு அயலவர்களே காரணம். எனக்கு எதிராக அதிகளவு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்டப்டுள்ளதால், அது அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படுவதாகவே நோக்கப்படுகின்றது. இது எனக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான தீர்வு என்ன என்பது எனக்கு தெரியாது. நான் வெளியிட்ட முதலாவது விவகாரம் இதுவும் அல்ல. முன்னய அரசின் காலப் பகுதியிலும் ஊழல்களை நான் வெளியிட்டிருந்தேன். மகிந்த பதவிக்கு வந்த பின்னர் 25 வருட பழமையான பீரங்கிகளை புதிய பீரங்கிகள் என்று கூறி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி கொள்வனவு செய்தது எப்படி என்று நான் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் இந்த விடயத்தை ஆராய்வதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் படி மகிந்த தலைமை நீதிபதியை பணித்திருந்தார். இது என்னால் வெளியிடப்பட்ட தகவலுக்கான நேரடியான பலன்.

ஆனால் தற்போது ஏன் அப்படியான பலன் ஏற்படவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாவில்லை. ஏனெனில் எனது அறிக்கையில் தனிப்பட்டவர்கள் கொள்ளை அடித்தாக எங்குமே நான் குறிப்பிடவில்லை. என்னால் சேகரிக்கப்பட்ட தகவல்களையே நான் வெளியிட்டிருந்தேன். இதில் இரு விடயங்கள் நடந்தள்ளன. ஒன்று எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது, மற்றையது அதனை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியானது.

எனக்கு அரச சொத்துக்களை அன்பளிப்பாக தரப்பட்டுள்ளது என்பது தவறானது. என்னிடம் அரச சொத்துக்கள் இல்லை. 22 வருடங்களுக்கு முன்னர் வாடகைக்கு பெறப்பட்ட வீடே என்னிடம் உள்ளது. அது தவிர கண்டியில் சிறிதளவு நிலமும் உண்டு. அதனை வாடகைக்கு கொடுத்துள்ளேன். அப்படி நான் அரசின் சுகபோகத்தில் வாழ்ந்தால் இவற்றை வெளிக்கொண்டுவர வேண்டிய தேவை இருக்காது. நம்பிக்கை தான் என்னிடம் உள்ள ஒரே சொத்து.

வான் படையினரால் மட்டும் தான் எனக்கு பிரச்சினை என்று கூறுவது தவறானது. முதலில் நான் ஆயுதப்படைகளில் நடைபெறும் ஊழல்களையே வெளிக்கொண்டு வருகின்றேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழல்கள் தொடர்பான தகவல்கள் வானில் இருந்து தானாக வீழ்வதில்லை. உண்மை வெளிவர வேண்டும் என்று விரும்பும் ஆயுதப்படைகளில் உள்ள சிலரிடம் இருந்தே அவற்றை நான் பெறுகின்றேன். ஆயுதப்படைகளில் உள்ள பெரும்பாலானோர் அதனை விரும்புகின்றனர் ஏனெனில் முன்னணி களமுனைகளில் உயிரைப் பணயம் வைத்துள்ள அவர்கள் ஊழல்கள் அகற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

முன்னர் நான் ஊழல்களை வெளியிட்ட போது அது வான் படையினர் மீதாக இருந்தது. எனவே நான் அவர்களின் இலக்கானேன். இந்த முறை சில முறைகேடுகள் தொடர்பாகவே நான் தெரிவித்திருந்தேன். எனது தகவல்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதற்கு விசாரணைகள் தெளிவான ஆதாரம். எனக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று அரசு கருதினால் அதற்கான முழுப் பொறுப்பும் அரசை சார்ந்தது.

நான் அவர்களின் முடிவை மதித்த போதும் ஏன் அவர்கள் என்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக முத்திரை குத்துவதுடன், பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து எனக்கு புதிய ஆபத்துக்களை உருவாக்கி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டது யார்? அங்கு வைக்கப்பட்ட சுலோகங்களில் ஒன்றும் உத்தியோகபூர்வமானவை அல்ல. இவை ஏன்? என்னை அச்சுறுத்துவதும், எனது மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதும், ஊழல்கள் தொடர்பாக எழுதுவதை தடுக்கும் பொருட்டு எனக்கு அழுத்தங்களை கொடுப்பதுமே அதற்கான காரணம். முன்னைய முறைகேடுகள் விசாரிக்கப்பட்டிருப்பின், தற்போது இந்த நடவடிக்கை ஏன்?

இதுவே எனது வாழ்வில் நான் சந்தித்த மிக மோசமான நிலமையாகும். அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னர் இடம்பெற்றதில்லை. எனது அறிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிறு குழுவினரே முன்னர் எனக்கு எதிராக திரும்பியிருந்தனர். எனது வீட்டுக்கு வெளியில் விஜயராம சந்தியில் இடம்பெற்ற நடமாட்டங்களில் அரசின் ஆதரவு உள்ளதாக என்னை உணரச் செய்துள்ளது. ஏன் அரசு அதனை செய்கின்றது என்பது என்னை வெகுவாக பாதித்துள்ளது.

எனது வீட்டிற்கு வெளியில் 25 பேர் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அங்கு இருக்கவில்லை. நான் வெளியில் இருந்தேன். விடுதலைப் புலிகளின் அச்சம் காரணமாக நான் அதிக நாட்களை வெளியில் தான் செலவிடுவதுண்டு. அதன் விளைவுகளை எனது குடும்பமே சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

எனது வீட்டிற்கு வெளியில் இருந்த காவல் நிலை கடந்த சனிக்கிழமை இரவு (18.08.07) அகற்றப்பட்டது. அது எனது வீட்டை சோதனையிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்று எனது பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் என்னை எச்சரித்தனர். இதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னர் நுகேகொடவில் இந்த சம்பவம் தொடர்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனது வீட்டை சோதனையிடுவதற்கான காரணம் தேடும் முயற்சியே அது, எனவே அவர்கள் எனது வீட்டை அதன் முடிவில் அடையலாம் என எனக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

என்னை கவனமான இருக்கும் படி அவர்கள் தெரிவித்தனர். சில சமயங்களில் நான் கடத்தப்படலாம் எனவும் தெரிவித்தனர். எனது தொழிலின் தனித் தன்மையே பாதுகாப்புத்துறை சார்ந்தது தான். இது எனக்கு பாதுகாப்பு வட்டாரங்களில் உள்ள நெருக்கமான தொடர்புகளை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. எனினும் என்னை கடத்த போவதாக படையினர் தெரிவிக்கும் போது எனக்கு தகவல்களை தரும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்படலாம். எனவே தான் என்னை வீட்டை விட்டு வெளியேறும் படி அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் பின்னர் நான் விடுதியில் தங்க சென்ற போது அவர்கள் என்னை இரகசியமாக உள்ளே அனுமதித்தனர். கொழும்பில் உள்ள எல்லா விடுதிகளும் முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே நகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள விடுதிக்கு நான் சென்றேன். இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அதிகாலை 1.00 மணிக்கு நான் எனது மனைவி மற்றும் மகளுடன் விடுதிக்கு சென்றேன். மறுநாள் மாலை வீட்டுக்கு திரும்புவதற்காக நான் தனிப்பட்ட பாதுகாப்பை எதிர்பார்த்திருந்தேன்.

எனவே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நான் உணர்ந்ததால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நாள் உட்பட கடந்த சில இரவுகளாக நான் வீட்டில் தங்கவில்லை. எனக்கு எதிரான நடவடிக்கைகள் எனது அயலவர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அயலவர்களில் சிலர் ஆயுதங்களையும் கொண்டுள்ளனர். எனது பாதுகாப்பை நீக்கிய அரசின் முடிவுடன் என்னால் வாதிட முடியாது. ஆனால் ஒவ்வொரு சிறிலங்கா குடிமகனுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை நான் சிறிலங்கா குடிமகன்.

எனது வீட்டிற்கு வெளியிலான காவல் நிலைக்கு அண்மையில் ஒரு பச்சை நிற டபிள் கப் வாகனம் தரித்து நின்றது. எவ்வளவு நேரம் அது அங்கு நின்றது என்பது தொடர்பாக எனக்கு தெரியாது. அதன் எல்லா யன்னல்களும் குளிரூட்டப்டப்ட கறுப்பு நிற கண்ணாடிகளை கொண்டிருந்தன. நாம் அதனை அணுகிய போது இயந்திரத்தை இயக்கிய அவர்கள் பின்னர் சென்று விட்டனர்.

அதன் பின்னர் நான் மேற்கொண்ட விசாரணைகளில் என்னை துன்புறுத்த மேற்கொள்ள மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பான பல இரகசிய தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் எனக்கு தகவல்கள் தரும் வட்டாரங்களை பாதுகாப்பதற்காக என்னால் அதனை வெளியிட முடியாது.

எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுவதை விடுத்து, என்னை எனது தொழிலை மேற்கொள்வதற்கும், ஏனைய குடிமக்களை போல வாழவும் அனுமதிப்பதுமே அரசினால் செய்யப்பட வேண்டியது. நான் மிக் விவகாரம் தொடர்பாக நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். ஏனெனில் அது எனது தொழில். நிச்சயமாக நான் அதை விடப்போவதில்லை. சில சக்திகள் நான் எழுதுவதை நிறுத்த முயற்சிக்கின்றன ஆனால் நான் எழுத முயற்சிக்கின்றேன் என்றார் அவர்.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.