Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சாஹிதி
  • பதவி,பிபிசி தெலுங்கு
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கோல்டன் குளோப் விருது - ஆர்.ஆர்.ஆர்.

பட மூலாதாரம்,TWITTER/RRR

வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டு நாட்டு’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இந்த ‘நாட்டு நாட்டு’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன.

கோல்டன் க்ளோம் விருதை வென்ற இந்த பாடல் பிறந்த கதையைப் பார்ப்போம்.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரின் மனதில் இந்த பாடல் எப்படி உருவானது?

 

‘மூலப்பாடல்’ என்பது என்ன?

‘நாட்டு நாட்டு’ பாடல் பிறந்த கதைக்கு முன், ‘மூலப்பாடல்’ பிரிவு என்பது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ‘மூலம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப, உலகின் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும், அந்தத் திரைப்படத்திற்காகவே உருவாக்கப்பட்ட, வேறு எங்கிருந்தும் எடுக்கப்படாத பாடல் என்பதே மூலப்பாடல். ஏற்கெனவே இருக்கும் வேறு எந்தப் பாடலின், இசையின், பொருளின் தாக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்

தகுதி பெற்ற 81 பாடல்களில் 15 அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அவதார்: த வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ‘நத்திங் இஸ் லாஸ்ட்(யூ கிவ் மீ ஸ்ட்ரெங்க்த்)’ பாடல் உட்பட இன்னும் 14 பாடல்கள் இந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுடன் போட்டியில் இருந்தன.

கலையுலகில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக, பெருமைமிகு விருதாக கோல்டன் க்ளோப் விருது கருதப்படுகிறது.

golden globe

பட மூலாதாரம்,TWITTER/ RRR MOVIE

 
படக்குறிப்பு,

கோல்டன் குளோப் விருதுடன் இசையமைப்பாளர் கீரவாணி

பாடல் பிறந்த கதை

‘நாட்டு நாட்டு’ என்ற தெலுங்கு வார்த்தைகளின் படி, வெகுஜன மக்களுக்கான பாடலாக இது உருவாகியுள்ளது.

ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் நடனத் திறமைகளைப் பல முறை நிரூபித்துள்ளனர். அந்த இருவரும் கால் உடையும் அளவுக்கு ஆடினால் எப்படி இருக்கும்? அதைப் பார்க்கும் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று சிந்தித்தார் எஸ் எஸ் ராஜமௌலி.

இதை அவர் இசையமைப்பாளர் கீரவாணியிடம் கூறியுள்ளார்.

“அண்ணே, ரெண்டு பெஸ்ட் டான்ஸர்கள் தங்கள் திறமை முழுவதையும் காட்டக்கூடிய ஒரு பாடல் வேண்டும்” என்று ராஜமௌலி தன்னிடம் கூறியதாக பிபிசி-யிடம் தெரிவித்தார் கீரவாணி.

இந்தப் பாடலுக்கான வரிகளை எழுத, கீரவாணி தேர்ந்தெடுத்தது, தற்காலத் தெலுங்குப் பாடலாசிரியர்களில் தனக்குப் பிடித்த சந்திரபோஸை.

“இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனங்களின் மூலம் மக்களைப் பரவசப் படுத்த வேண்டும். என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள். ஆனால், இந்தக் கதை 1920-களில் நடப்பதாக இருப்பதால், அந்தக் கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாக இருக்கட்டும்.” என்று கீரவாணி, சந்திரபோஸிடம் கூறியுள்ளார்.

அப்போது பாடலுக்கான இசை தயாராகவில்லை. விவரமாகப் பின்னணிக் கதையும் சந்திரபோஸுக்குத் தெரியாது.

பாடல் இறுதி செய்யப்பட்டது எப்படி?

ராஜமௌலி, கீரவாணி மற்றும் சந்திரபோஸ் மூவரும் ஹைதராபாத்தில் உள்ள அல்லுமினியம் ஃபேக்டரியில் உள்ள ஆர்ஆர்ஆர் அலுவலகத்தில் 2020 ஜனவரி 17 அன்று இந்தப் பாடலுக்கான முதல் பணியைத் தொடங்கினர்.

ராஜமௌலியும் கீரவாணியும் கூறிய விஷயங்களை மனதில் கொண்டு தனது காரில் ஏறி அமர்ந்தார் சந்திரபோஸ். அலுமினியம் ஃபேக்டரியிலிருந்து ஜூப்லி ஹில்ஸ் நோக்கி ஊர்ந்தது அந்த கார். அவரது கைகள் ஸ்டியரிங் வீலில் இருந்தாலும் அவர் நினைவு முழுவதும் அந்தப் பாடலின் மீது தான் இருந்தது. அப்போது தான் ‘நாட்டு நாட்டு’ என்ற முக்கிய வரி அவரது மனதில் மின்னலாகத் தோன்றியது.

அது வரை எந்த இசையும் உருவாகாததால், ‘6-8 தகிட தகிட திஸ்ர கதியில் அதைப் பின்னத் தொடங்கினார். அதுதான் கீரவாணிக்கு மிகவும் பிடித்தது என்று காரணம் கூறுகிறார் சந்திரபோஸ்.

“மக்களின் உற்சாகத்தைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்படும் பாடல் இந்த வகையில் தான் இருக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே, தனக்குக் கீரவாணி அறிவுறுத்தியிருப்பதாக பிபிசியிடம் பேசிய சந்திரபோஸ் குறிப்பிடுகிறார்.

கதைப்படியும் இந்த இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் காட்சியில் இந்தப் பாடல் வருகிறது. எனவே அவர் இதை அமைத்திருந்தார். இரண்டு நாட்களில் மூன்று பாடல் அறிமுகங்களை உருவாக்கிக் கொண்டு கீரவாணியைச் சந்தித்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த பத்தியை இறுதியில் படித்துக் காட்டினார். அதற்கு முன்னால், மற்ற இரண்டு பத்திகளைப் படித்துக்காட்டினார்.

சந்திரபோஸ் பரிந்துரைத்த பாடல் அறிமுகம் கீரவாணிக்கும் பிடித்துப்போய் விட்டது. அது இறுதி செய்யப்பட்டது.

காளைகள் வயலில் துள்ளிக் குதிப்பதுபோல்

போலேரம்மா பண்டிகையில் பொத்தராஜு ஆடுகிறார்

ஒலியெழுப்பும் காலணிகளை அணிந்து சிலம்பம் சுற்றுகிறார்

ஆலமர நிழலில் இளவட்டங்கள் கூடி நிற்கின்றனர்  

சிவப்புச் சோள ரொட்டியில் மிளகாய் தொக்கு சேர்ந்ததுபோல 

 

90% பாடல் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிட்டது.

ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில மாற்றங்கள் செய்வதில் 19 மாதங்கள் பிடித்தது.

படப்பிடிப்பு முழுவதும் சந்திரபோஸும் கீரவாணியும் இந்தப் பாடல் குறித்த விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

சமூக-பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு

கதையின் படி பீம்(ஜூனியர் என்டிஆர்) தெலுங்கானாவையும் ராம்(ராம் சரண்) ஆந்திராவையும் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த இரு பிராந்தியங்களில் வட்டார வழக்கும் இந்தப் பாடலில் விரவிக் கிடக்கின்றன.

இந்தப் பாடலை உன்னிப்பாகப் பொருள் உணர்ந்து கேட்டால், அப்போதைய, அந்தப் பிராந்தியங்களின் சமூக- பொருளாதார நிலையையும் பிரதிபலிப்பதை உணரலாம்

கோல்டன் குளோப் விருது - ஆர்.ஆர்.ஆர்.

பட மூலாதாரம்,TWITTER/ RRR

‘மிரப்ப தொக்கு’ (மிளகாய்த் தொக்கு), துமுகுலாடட்டம்(மேலும் கீழும் குதிப்பது) போன்றவை தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான வழக்கு மொழிகள்.

அந்தக் காலகட்டத்தில் தெலுங்கானாவின் முக்கிய உணவாக சோளம் இருந்தது. அது மிளகாய்த் தொக்குடன் உண்ணப்பட்டது.

பாடல் என்பது, வரிகள் மறைந்து காட்சிகள் மேலோங்கி இருப்பது என்பது சந்திரபோஸின் விளக்கம். அது இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

தெலுங்கு மக்களிடையே புழங்கிய பல வார்த்தைகள், முக்கியக் குறியீடுகள் இந்தப் பாடலில் இடம்பெறுகின்றன. பொத்தராஜு(கிராமத் திருவிழாக்களில் முக்கிய பாத்திரம்), ரச்சபந்தா(கிராம சதுக்கம்) போன்றவை உதாரணங்கள்

இந்தப் பாடலைப் பாடியவர்கள் காலபைரவா மற்றும் ராஹுல் சிப்லிகுஞ்ச்.

யுக்ரேனில் பாடல் படப்பிடிப்பு

‘நாட்டு நாட்டு’ பாடல் என் டி ஆர், ராம்சரண் இருவரின் நடனத் திறமைக்கும் சவாலாக இருந்தது. நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்காக சுமார் 95 அசைவுகளை உருவாக்கினார்.

என்டிஆரும் ராம் சரணும் கை கோர்த்து ஆடும் காட்சிக்கு 30 வகையாக அசைவுகள் அமைத்தார். இந்தக் குறிப்பிட்ட அசைவுக்கு மட்டும் 18 டேக்குகள் ஆனதாகத் திரைப்படக் குழுவினர் கூறுகின்றனர்.

ஆனால், படத்தொகுப்பின் போது, இரண்டாவது டேக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘ஒரு காட்சியை ஓகே சொல்லி ஒப்புக்கொண்ட பின்னரும் ராஜமௌலி ‘ஒன் மோர்’ என்று கேட்பார் என்று ப்ரேம் ரக்ஷித் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

தானே கண்டுபிடிக்க முடியாத வேறுபாடுகளை, ஒரு திரைக்கு முன்னால் அமர்ந்து ராஜமௌலி அடையாளம் கண்டுவிடுவார் என்றும் அவர் கூறுகிறார்.

கோல்டன் குளோப் விருது - ஆர்.ஆர்.ஆர்.

பட மூலாதாரம்,TWITTER/ RRR

இந்தப் பாடல் யுக்ரேன் அதிபர் மாளிகைக்கு எதிரில் படமாக்கப்பட்டது.

யுக்ரேனில் படப்பிடிப்பின் போது, ராஜமௌலியும் கீரவாணியும் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.

அப்போது சந்திரபோஸ் புஷ்பா திரைப்படத்தில் படு பரபரப்பாக இருந்தார்.

காணொளி அழைப்பில் சந்திரபோஸுடன் பேசிய ராஜமௌலியும் கீரவாணியும் அந்தக் கடைசி பத்தியை மாற்றித் தரக் கோரினர்.

19 மாதங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றுவது 15 நிமிடத்தில் முடிந்தது.

மாற்றப்பட்ட அந்தப் பாடல் பிறகு பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தப் பாடல், ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரணின் நடனத் திறமையை வெளிப்படுத்தியதுடன், பீம், ராம் இருவரிடையே இருந்த நட்பு, பீமுக்காக ராம் செய்த தியாகம், தெலுங்கு மக்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு எதிர்த்தனர், பீம் எப்படி ஆங்கிலப் பெண்ணின் மனதைக் கவர்ந்தார் என்று அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.

https://www.bbc.com/tamil/articles/c3gdn5q6k4lo

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஆர்ஆர்ஆர்' படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

பட மூலாதாரம்,RRR

23 ஜனவரி 2023

ஆர்ஆர்ஆர் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், அப்படத்தை பற்றிய பேச்சுகள் இன்னும் அடங்கியபாடு இல்லை. ஹாலிவுட்டின் விருதுகள் சீசனில் ஆர்ஆர்ஆர் திரைபப்டம் அதன் புகழ் அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், , பிபிசியின் மெரில் செபாஸ்டியன்,  ஏன் இப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பதைப் குறிப்பிடுகிறார். 

முக்கியமாக இந்தியர்களுக்காகவே (இந்தியாவில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்) இப்படத்தை எடுத்ததாக படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கூறுகிறார். 

 

ஆனால், இப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு எல்லைகளை கடந்துள்ளது. தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், பிரிட்டன் அரசுக்கு எதிராக போராடும் இரு இந்திய புரட்சியாளர்கள் பற்றிய கற்பனை கதையை அடிப்படையாக கொண்டது. 

சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ள இந்த படம், பல வாரங்களாக அமெரிக்க நெட்பிளிக்ஸ்சின் டாப் 10 படங்களின் பட்டியலில் இருந்ததோடு அல்லாமல் தற்போது ஜப்பானிலும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பல மதிப்புமிக்க பட்டியல்களில் இது சேர்க்கப்பட்டுள்ளது, இதில் பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மற்றும் அமெரிக்காவில் உள்ள தேசிய மதிப்பாய்வு வாரியம் ஆகியவை அடங்கும்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், கடந்த ஜனவரி 11ஆம் தேதி சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த வாரம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற `கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்` நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படமும், நாட்டு நாட்டு பாடலும் உயரிய விருதுகளை வென்றுள்ளன. பிபிசி கலாச்சார திரைப்பட விமர்சகர்கள் நிக்கோலஸ் பார்பர் மற்றும் கேரின் ஜேம்ஸ் ஆகியோர் 2022ஆம் ஆண்டிற்கான தங்களின் சிறந்த 20 படங்கள் பட்டியலில் இப்படத்தையும் சேர்த்துள்ளனர். 

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

பட மூலாதாரம்,RRR

இப்படத்திற்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு தொடர்பாக ராஜ்மௌலியின் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் அவரது பல்வேறு பேட்டிகளில் தெரிகிறது. 

 “ ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மேற்கு நாடுகளில் இருந்து ஆதரவுகள் கிடைக்க தொடங்கியபோது, இவர்களெல்லாம் திரைப்படத்தை பார்க்க சென்ற இந்தியர்களின் நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைத்தோம்” என லேட் நைட் வித் சத் மயர்ஸ் என்னும் அமெரிக்க நிகழ்ச்சியில் நகைச்சுவையாக ராஜமௌலி கூறியிருந்தார். 

ஆர்ஆர்ஆர் திரைப்படம்  முதன்முதலில் அமெரிக்காவில் வெளியானபோது, பிற இந்திய படங்களுக்கும் அதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று கூறுகிறார் நியூயார்க்கை சேர்ந்த திரைப்பட விமர்சகரான சித்தாந்த் அட்லாகா. டிசம்பரில் ராஜமௌலியை சிறந்த இயக்குனராகத் தேர்வுசெய்த தி நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டத்தின் உறுப்பினராக இவர் உள்ளார். 

“முதல் வாரத்தில் பெரும்பாலான ரசிகர்கள் இந்தியர்களாக இருந்தனர் ” என்று கூறிய சித்தாந்த் அட்லாகா, “அடுத்த சில வாரங்களில் இது முற்றிலும் மாறியது ” என்கிறார். 

 

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

பட மூலாதாரம்,RRR

திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க மக்கள் படையெடுத்ததையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படம் தொடர்பான பேச்சுகள் பரவத் தொடங்கின.  சினிமா விமர்சகர்கள் படத்தை பாராட்டி விமர்சனம் எழுதினர். ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ, எட்கர் ரைட், ஸ்காட் டெரிக்சன் மற்றும் ஜேம்ஸ் கன் உட்பட ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் படத்தை பாராட்டினர். 

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து படத்தை திரையிட்டதாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 “இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்பது மற்ற இந்திய படங்களில் இருந்து வேறுபட்டது ” என்கிறார் அட்லாகா. 

இப்படத்தை ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டு திரையரங்குகளில் கொண்டாட்டமாக பார்க்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தியாவில் திரை நட்சத்திரங்களை இவ்வாறு கொண்டாடுவது வழக்கமானது. ஆனால், அமெரிக்காவில் இது அரிய நிகழ்வு. 

 

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ்பெற்ற சைனீஸ் திரையரங்களில் இயக்குநர் ஜே.ஜே. ஆப்ரஹாம் மூலம் இப்படம் திரையிடப்பட்டபோது, ஏராளமானோர் திரையின் மேடைக்கே சென்று நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். 

“இங்குள்ள ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா இயக்குநர்களுக்கும் புது விதமான சினிமா பார்க்கும் முறையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் அறிமுகம் செய்தது. இது அவர்களுக்கு பழக்கமில்லாதது, அதனால்தான் சினிமா சார்ந்தவர்கள் கூட ஈர்க்கப்பட்டனர்” என்று அட்லாகா குறிப்பிடுகிறார். 

படத்தின் கதைசொல்லல் மற்றும் நம்பிக்கையான செயலாக்கம் பார்வையாளர்களை ஈர்த்திருந்தாலும், நேரமும் உதவியது.

“ஆர்ஆர்ஆர் திரைப்படம் உச்சத்தில் உள்ளது. மக்கள் திரையரங்குகளிலும் வீட்டில் இருந்தபடி நெட்பிலிக்ஸிலும் பார்க்க காத்திருந்த திரைப்படம் இதுதான்  ” என்கிறார் லைனி காசிப்  பொழுதுபோக்குச் செய்தி தளத்தின் நிறுவனரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான எலைன் லூய். 

இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான பட்டியலில் குஜராத்தி படமான  `செல்லோ ஷோ`விடம்  ஆர்ஆர்ஆர் தோல்வி அடைந்திருந்தாலும், இப்படத்தை சுற்றியுள்ள பரபரப்பானது பரிந்துரைகளுக்கான ஓட்டத்தில் உறுதியாக இடம்பெற செய்துள்ளது.  பல ஹாலிவுட் இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆதரவும் இப்படத்துக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த அசல் பாடல் உள்ளிட்ட பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்படலாம் என்று வர்த்தக பத்திரிகை வெரைட்டி கணித்துள்ளது.

சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆர்ஆர்ஆர்-ஐச் சமர்ப்பிக்க வேண்டாம் என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எதிரான போட்டியாகவே இருக்கும் என்கிறார் லூய்.

“சினிமா துறையில் சலசலப்பு என்பது பெரிய விஷயம். தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் உரையாடல்களின் ஒருபகுதியாகவே மாறிவிட்டது. வார இறுதிகளிலோ அல்லது விருந்துகளிலோ `ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டாயா?` என்று அனைவரும் கூறுகின்றனர்” என்றும் அவர் கூறுகிறார். 

 

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

பட மூலாதாரம்,RRR

மார்வெல் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன நிலையில், இத்திரைப்படம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலருக்கும் புதுமையான மற்றும் வியப்பான உணர்வை ஏற்படுத்தியது. 

இங்குள்ள பிளாஸ்பஸ்டர் திரைப்படங்கள் மிகவும் சிடுமூஞ்சித்தனமாகவும் நேர்மையற்ற தன்மையிலும், இமேஜ் தொடர்பாக எவ்வித அக்கறையும் இல்லாமல் வெறும் தொழிற்சாலை தயாரிப்பு போன்று வெளிவரும்போது, நேர்மையான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களால் அவை முறியடிக்கப்படும் என்றும் அட்லாகா தெரிவித்தார். 

ராஜமௌலி பாணியில் கூறவேண்டும் என்றால், ஆர்ஆர்ஆர்  திரைப்படம் அற்புதமான படங்கள், பல ஆடம்பரமான தொகுப்புகள் மற்றும் கற்பனையான கதைசொல்லல் ஆகியவற்றை ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது.

படத்தில் உள்ள தனித்துவமான காட்சிகளில் ஒன்று- தீயில் சிக்கிய குழந்தையை மீட்பதற்காக பாலத்தில் இருந்து குதிப்பதற்கு முன், ஹீரோக்கள் முதன்முதலில் சந்திக்கும் காட்சி- அவர்கள் குதிரை மற்றும் மோட்டார் பைக்கில் சவாரி செய்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

“அமெரிக்க பார்வையாளர்கள் பொதுவாக இந்த வகையான அதிகபட்ச காட்சிகளுக்குப் பழக்கப்பட்டவர்கள் இல்லை,” என்று அட்லாகா கூறுகிறார், "எந்தவொரு கலாச்சார பின்னணியிலிருந்தும்" இந்த படம் மிகவும் "நன்றாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவிக்கிறார். 

பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் இருந்து இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் இப்படம் பிரதிபலிக்கிறது - பார்வைக்கு தூண்டுதல், நிறைய பேர், நிறைய ஆக்‌ஷன் காட்சிகள், லட்சியம் - ஆனால் "மிகை இல்லாமல்" என்கிறார் லூய்.

 

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?

பட மூலாதாரம்,RRR

இந்தியாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பெற்ற வெற்றி என்பது ஆச்சரியம் அளிக்கக்கூடியது அல்ல. பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களின் வெற்றி ராஜமௌலியை அனைவருக்கும் தெரியக்கூடிய நபராக மாற்றியதோடு அல்லாமல், ஆர்ஆர்ஆர் படத்திற்கான எதிர்பார்ப்பையும் உச்சத்தில் வைத்திருந்தது. 

ஆனால் இத்திரைப்படம் பல விமர்சகர்களிடமிருந்து நடுநிலையான விமர்சனங்களைப் பெற்றது, இப்படத்தின் பிரச்சனைக்குரிய அரசியல், இந்து மத குறியீடுகளை பயன்படுத்தியிருந்தது மற்றும் பழங்குடி கலாச்சாரத்தை கையகப்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தியாவில் சினிமா என்னும் ஊடகம் மிகவும் அரசியல்மயமாகிவிட்டது என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான சௌமியா ராஜேந்திரன். எனவே பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராடிய இரண்டு நிஜ வாழ்க்கை ஆர்வலர்களை ஆர்ஆர்ஆர்  கையகப்படுத்தியது மற்றும் அவர்களை இந்து புராணக் கதாநாயகர்களாக மறுவடிவமைத்தது ஆகியவை ஆய்வுக்கு வழிவகுத்தது என்று அவர் கூறுகிறார். 

ஆனால், மேற்கத்திய ரசிகர்கள், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை காலனித்துவத்துக்கு எதிரான கதையாகவே பார்த்தனர். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு உடனடியாக தோன்றும் அரசியல்` என்றும் அவர் தெரிவித்தார். 

அமெரிக்காவில், ஒரு சில வெளியீடுகள் இதை நிவர்த்தி செய்ய முயற்சித்தன.

“விமர்சனத்தைவிட காலனியாதிக்க எதிர்ப்புக் குறியீடுகள் முக்கியத்துவம் பெறுவதாக சிலர் கூறினாலும், இந்தப் படம் குறித்த உரையாடலின் ஒரு பகுதியாக விமர்சனமும் இடம் பெறுகிறது” என்று அட்லாகா கூறுகிறார்.

"அது அப்படியே இருந்தாலும், மக்கள் அவர்கள் பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் படங்களை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்," என்று அவர் கூறுகிறார்.

"இத்தகைய  உரையாடல்கள் ஒருபக்கம் இருந்தாலும், ராஜமௌலி மற்றும் குழுவினர் இந்தியத் திரையுலகிலும் வெளியிலும் திரைப்படங்களுக்கு தடைகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள்  என்பது நிச்சயமான ஒன்று.

இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்கலாம். ராஜமௌலி அடுத்த கட்டமாக ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கலாம். இது “உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளரின் கனவு” என்றும் ராஜமௌலி கூறுகிறார்.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஆர்ஆர்: மேலும் 4 சர்வதேச விருதுகளை பெற்ற ராஜமௌலியின் திரைப்படம்

ஆர்ஆர்ஆர் படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்

பட மூலாதாரம்,RRR

7 நிமிடங்களுக்கு முன்னர்

இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்துவரும் நிலையில், மேலும் 4 சர்வதேச விருதுகளை அப்படம் வென்றுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஹோலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதை பெற மேடையேறிய ராஜமௌலி ஆற்றிய உரையில், இவ்விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். படத்தை உருவாக்க 320 நாட்கள் கடுமையாக உழைத்ததாகவும் அதில் பெரும்பாலான நாட்களை படத்தின் சண்டை காட்சிகளுக்கு செலவிட்டதாவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த அங்கீகாரம் எனக்கும் எனது படத்துக்கும் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்துக்கும் மிகப்பெரிய கௌரவம். நாங்கள் மேலும் மேல்நோக்கி செல்ல இந்த விருது உதவும" என்றார்.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை நடிகர் ராம் சரணுடன் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய ராஜமௌலி, "எங்களாலும் சிறந்த சர்வதேச திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை நான் மட்டுமல்ல எனது சக இயக்குநர்களும் நம்புவதற்கு இந்த விருது உதவும்" என்றார்.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

விருதுகளை குவிக்கும் ஆர்ஆர்ஆர்

மகதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

ராம் சரண், ஜுனியர் என்டிஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்த இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததுடன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது வெளிநாட்டு ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது. அமெரிக்காவின் சைனிஸ் திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படம் திரையிட்ட போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் திரைக்கு அருகே வந்து நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஆர்ஆர்ஆர் படம் குறித்து, 'உங்கள் படம் மிக பிரமாதமாக இருந்தது. என்னோட கண்களை என்னால் நம்ப முடியவில்லை.‌ என்னை பொறுத்தவரை ஆர்ஆர்ஆர் திரைப்படம் கண்களுக்கு விருந்தாக இருந்தது. படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. உங்கள் படத்தில் கதையை நான் கவனிக்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நீங்கள் ஒவ்வொரு காட்சியையும் காட்சியமைத்தது அழகாக இருந்தது. ஆகச்சிறந்த அனுபவத்தை அந்த படம் எனக்கு கொடுத்தது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்" என ஒரு உரையாடலின்போது ராஜமௌலியிடம் தெரிவித்தார். இதேபோல், பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் அதனை இயக்கிய ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர்.

வசூலையும், பாராட்டுகளையும் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதுகளை பெறவும் தவறவில்லை. சிறந்த இசைக்காக வழங்கப்படும் சர்வதேச விருதான 'கோல்டன் குளோப்' விருதை 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கடந்த ஜனவரி மாதம் பெற்றார். அட்லாண்டா ஃபிலிம் கிரிட்டிக் சர்கில் விருது, அஸ்டீன் ஃபிலிம் கிரிட்டிக் அசோசியேஷன் விருது, பாஸ்டன் சொசைட்டி ஆஃப் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகள், கிரிட்டிக் அசோசியேஷன் ஆஃப் செண்ட்ரல் ஃப்ளோரிடா விருதுகள், தாதா சாகிப் பால்கே திரைப்பட விழா விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் ஃபிலீம் கிரிட்டிக் அசோசியேஷன் விருதுகள், நார்த் கரோலினா ஃபிலிம் கிரிட்டிக் அசோசியேஷன் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது.

திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cedjgj4y9g2o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல்: 'நாட்டு நாட்டு' பாடல் விருதை வென்று சாதிக்குமா?

ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல்

பட மூலாதாரம்,RRR

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

140 கோடி இந்தியர்களின் பார்வையும் இப்போது ஆஸ்கர் விழா மேடை நோக்கி திரும்பியிருக்கிறது. பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருதை வென்று அசத்துமா? என்பதே அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.

படத்தில் இந்தப் பாடலை பாடிய பின்னணிப் பாடகர்கள் ஆஸ்கர் விழா மேடையிலும் பாடி அசத்த இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி இந்தியாவில் நாளை காலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த ஆண்டு வெளியான பிறகு நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. பாடலுக்கு நடனமாடி ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். துள்ளலான இசையும், ஒருங்கிணைந்த சிறப்பான நடனமும் பார்வையாளர்கள் மத்தியில் இந்த பாடலை சூப்பர் ஹிட்டாக்கின.

 

கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல் கடந்த ஜனவரியில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்று வரலாறு படைத்தது. உலகப் புகழ் பெற்ற ரிஹானா, டெய்லர் ஸ்விப்ட், லேடி ககா போன்ற ஜாம்பவான்களை இந்த பாடல் பின்னுக்குத் தள்ளியது. அடுத்த சில நாட்களிலேயே, சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை அந்தப் பாடல் வென்றது.

இந்த வெற்றி ஆஸ்கர் விழா மேடையிலும் தொடரும் என்று பாடலை உருவாக்கிய படைப்பாளிகள் நம்புகின்றனர்.

"இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்" என்று வேனிட்டி ஃபேர் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய 2 புரட்சியாளர்கள் குறித்த கற்பனைக் கதையை ஆர்.ஆர்.ஆர். படம் சொல்கிறது. இந்த வரலாற்று புனைவுக் கதையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகளை 2 சுதந்திரப் போராட்ட வீரர்கள் நடனத்தின் மூலம் மண்டியிடச் செய்யும் வகையில் ஒரு சண்டைக் காட்சியாகவே நாட்டு நாட்டு பாடலை கற்பனை செய்திருந்ததாக ராஜமௌலி கூறுகிறார்.

"படத்தின் கதைக்குள் இருந்த ஒரு கதைதான் இந்த பாடல்" என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோல்டன் குளோப் விருதுடன் இசையமைப்பாளர் கீரவாணி

2020-ம் ஆண்டில், ஆர்.ஆர்.ஆர். படம் தயாரிப்பில் இருந்த போது, படத்தின் கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வேண்டும் என்று இசையமைப்பாளர் கீரவாணியிடம் ராஜமௌலி கூறியுள்ளார்.

உடனே கீரவாணி தமது நேசத்திற்குரிய பாடலாசிரியர் சந்திரபோஸிடம், "நீ விரும்பியதை எழுது. ஆனால், கதை 1920-களில் நடக்கிறது. அந்த நேரத்திற்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மெட்டு ஏதும் இல்லாமலேயே பாட்டெழுத அமர்ந்த சந்திரபோஸ், நடனத்தை குறிக்கும் தெலுங்கு வார்த்தையான நாட்டு நாட்டுவை பாடலின் தொடக்க வரிகளாக அமைத்துள்ளார்.

பிபிசி தெலுங்கிடம் பேசிய அவர், கீரவாணிக்கு மிகவும் விருப்பமான துள்ளல் இசைக்கு ஏற்றபடியே பாடல் எழுதியதாக கூறினார். ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் துள்ளல் இசையே அதிகம் பயன்படுத்தப்படும்.

தெலங்கானாவில் குழந்தைப் பருவத்தைக் கழித்த சந்திரபோஸ், ஜோவர் ரொட்டியுடன் மிளகாய் என்பது போன்ற பல நாட்டுப்புறக் குறிப்புகளை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

பாடலின் பெரும்பகுதி இரண்டே நாட்களில் முடிந்துவிட்டதாக சந்திரபோஸ் கூறினார். ஆனால், பாடலின் எஞ்சிய பகுதிகள் கூடி வர 19 மாதங்களாகிவிட்டன என்கிறார் அவர்.

பாடலுக்கு 95 நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்தையே நாட்டு நாட்டுப் பாடலின் வெற்றிக்கான பெருமை சேரும் என்று ராஜமௌலியும், கீரவாணியும் கூறுகின்றனர்.

"ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்குமே தனித்தனி ஸ்டைல்கள் உள்ளன. ஆகவே, இருவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றை அவர் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது" என்று ராஜமௌலி கூறினார். இந்த ஆடையில் அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா? என்று ராஜமௌலியிடம் ராம்சரண் கேட்ட பிறகு, இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.

ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு

பட மூலாதாரம்,RRR

போட்டிபோட்டு நடனமாடும் நடனக் கலைஞர்கள் சோர்வடைந்து ஒருவர் பின் ஒருவராக கீழே சரிய, கடைசியில் கதாநாயகர்கள் மட்டுமே எஞ்சி நிற்பதாக உச்சம் பெறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

அதன் பின்னர், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவரை ஒருவர் நோக்க, இருவருக்கும் இடையே நடனத்தில் போட்டி நடக்கிறது. இந்த பாடல் மூலம் படத்தின் கருவான நட்பு, போட்டி மற்றும் ஒற்றுமை ஆகிய அனைத்தையும் சொல்லிவிட முயன்றதாக ராஜமௌலி கூறினார்.

பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.

கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானதில்இருந்து இன்று வரையிலும் இந்த பாடலின் நடன அசைவுகளை அப்படியே செய்ய ரசிகர்கள் தொடர்ந்து முயன்ற வண்ணம் உள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் படம் திரையிடப்பட்ட போது, இந்த பாடல் வருகையில் பார்வையாளர்கள் பலரும் மேடைக்கு சென்று நடனமாடியதைப் பார்க்க முடிந்தது.

உக்ரைனில் உள்ள மாரின்ஸ்கிய் அரண்மனையில் இந்த பாடல் படமாக்கப்பட்ட போலும், இந்திய கிராமச் சூழலை பிரதிபலிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது என்கிறார் ராஜமௌலி. போரின் விளிம்பில் உள்ள நாட்டில் படப்பிடிப்பு நடத்தியதால் தன்னை பைத்தியக்காரன் என்று சிலர் விமர்சித்ததாக முந்தைய பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

150 நடன கலைஞர்கள், 200 படப்பிடிப்புக் குழுவினர் நாளொன்றுக்கு 12 மணி நேரம் உழைத்து 15 நாட்களில் இந்த பாடலை படம்பிடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது தாம் ஒவ்வொரு முறை ஓகே சொல்லும் போதும் ராஜமௌலி மேலும் ஒரு முறை அந்த காட்சியை படம்பிடிக்கக் கேட்டதாக நடன இயக்குநர் ரக்ஷித் கூறினார்.

"பாடலின் ஒவ்வொரு ஃபிரேமும் மிகச் சரியாக ஒருங்கிணைந்திருக்க வேண்டும் என்பதில் ராஜமௌலி உறுதியாக இருந்தார்" என்று நேர்காணல் ஒன்றில் ராம்சரண் கூறியிருந்தார்.

நாட்டு நாட்டு பாடல் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்ட போதிலும், பார்வையாளர்களிடையே இன்றும் கூட வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றதும், விருது நிகழ்ச்சியில் பாடப்படுவதும் எப்போதும் இல்லாத உச்சபட்ச உற்சாகத்தை தந்துள்ளது.

"இந்த பாடல் எங்களுடையது அல்ல. இது பொதுமக்களுடையது. பலதரப்பட்ட வயதினரும், பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்களும் கூட இந்த பாடலை கொண்டாடுகிறார்கள்" என்று ராம்சரண் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c1dx0l182kjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் விருது வென்றது ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் - ஆஸ்கர் மேடையில் கீரவாணி

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,RRR

13 மார்ச் 2023, 03:28 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

இந்திய நேரப்படி திங்கள் கிழமையன்று காலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95வது அகாடெமி விருதுகளில் அசல் பாடல் பிரிவில் இது ஆஸ்கர் விருதை வென்றது.

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டுக்கூத்து' பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் தங்கள் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு வேகம் சேர்த்துள்ளனர்.

நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பில் தேஜாவின் மெட்டுகளால் பாடலை வேறு லெவலுக்கு கொண்டு சென்றனர்.

 

ஏற்கெனவே பல விருதுகளை குவித்த பாடல்

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் அசல் பாடல் பிரிவில் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அகாடெமி ஜனவரி 24 அன்று அறிவித்தது.

மற்ற மூன்று பாடல்களுடன் இருந்த கடும் போட்டியில் ஆர்ஆர்ஆர் பாடலான 'நாட்டுக்கூத்து' அகாடமி விருதைப் பெற்றது.

'நாட்டுக்கூத்து' பாடல் ஏற்கெனவே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று சிறந்த அசல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் படைத்தது.

இது ஜனவரி 15 அன்று 'சிறந்த பாடல்' பிரிவில் விமர்சகர்களின் சாய்ஸ் விருதை வென்றது. ஜனவரியில் ஆன்லைன் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது, பிப்ரவரியில் ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த அசல் பாடல் மற்றும் ஹூஸ்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது ஏ.ஆர்.ரஹ்மான்.. இப்போது கீரவாணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2008ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் ஜெய் ஹோ பாடலுக்காக 'சிறந்த ஒரிஜினல் பாடல்' பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றார். இப்படத்தை பிரிட்டனை சேர்ந்த டேனி பாயில் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்போது இந்திய மொழி திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்திற்காக கீரவாணி அந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, தெலுங்கு மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பிரபலமான இசை அமைப்பாளராக அங்கீகாரம் பெற்றுள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார்.

பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். 1997இல் வெளியான அன்னமய்யா தேசிய விருது பெற்றது. இதுவரை 11 நந்தி விருதுகளையும் 13 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெளியான போதே பரபரப்பு

'நாட்டுக்கூத்து' பாடல் முதலில் 10 நவம்பர் 2021 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியானதில் இருந்து, பாடலின் மெட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதுபற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல் தெரியுமா?

இந்த நாட்டு நாட்டு பாடலின் காணொளி யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் காலபைரவா பாடியுள்ளனர். அவர்களில் காலபைரவா கீரவாணியின் மகன். முன்னதாக பாகுபலி படத்திலும் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை காலபைரவா தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

மாஸ் பாடல்களை பாடுவதில் ராகுல் சிப்லிகஞ்ச் புகழ் பெற்றவர். அந்த ட்ராக்கை தான் முதலில் பாடியதாகவும், அது பிடித்ததாகவும், அதனால் அசல் பாடலை பாடியதாகவும் ராகுல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். பின்னர், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகளிலும் ராகுல் பாடலைப் பாடினார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டுக்கூத்து பாடல் இடம்பெற முக்கிய காரணம் ராம் சரண், ஜூனியர் என்டிஆர். இதை இயக்குநர் ராஜமௌலியே பலமுறை கூறியிருக்கிறார்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே நல்ல நடனக் கலைஞர்கள் என்பதால், இருவரும் சேர்ந்து ஆட வேண்டும் என்று ராஜமௌலி நினைத்தார்.

இதை ராஜமௌலி கீரவாணியிடம் கூறினார். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸை அழைத்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,RRR

முதலில் 'நாட்டு... நாட்டு...' என்ற கொக்கி வரியில் தொடங்கும் பாடலை எழுதினார்கள்.

சந்திரபோஸ் 90 சதவீத பாடலை இரண்டு நாட்களில் எழுதியிருந்தாலும், அதை முழுமையாகத் தயாரிக்க 19 மாதங்கள் ஆனது.

பிரேம் ரக்ஷித்தின் நடனம்

பிரேம் ரக்ஷித் ஒரு நடன இயக்குனராக திரையுலகில் நன்கு அறியப்பட்டவர். ஆனால், இந்தப் பாடலுக்கு சுமார் 95 மெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராம்சரண், என்டிஆர் இருவரும் கைகோர்க்கும் சிக்னேச்சர் நடன அசைவுகள் 30 பதிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட வெளியீட்டின்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிரேம் ரக்ஷித் இவ்வாறு கூறியுள்ளார்.

ராம்சரண் மற்றும் என்டிஆரின் சினேச்சர் நடன அசைவுக்காக 18 டேக்குகளை எடுத்தனர். ஒருமுறை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஜூனியர் என்டிஆர் “எத்தனை முறை எடுத்தாலும் சரி, இருவரின் கால்களும் ஒத்துப்போகவில்லை என்று கூறினார்கள்.

இரண்டு முகங்களையும் ஒரே நேரத்தில் திருப்ப முடியாது என்றார்கள். அதனால் நடன அசைவுகளை ஒரே நேரத்தில் 18 டேக்குகள் எடுத்தோம். ஆனால் எல்லாவற்றையும் செய்த பிறகும், கடைசியில், இரண்டாவது டேக்கே படத்தில் இறுதியானது," என்றார்.

என்டிஆர், சரண், நடன இயக்குனர், ராஜமௌலி ஆகியோர் பாடலுக்காக கடுமையாக உழைத்தார்கள் என்று சொல்லலாம்.

https://www.bbc.com/tamil/articles/c16zl75yw91o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.