Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்

By Rajeeban

12 Jan, 2023 | 11:59 AM
image

 சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.12) கொண்டு வந்தார். இதில் முதல்வர் பேசுகையில், "அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்.1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும்.

2004ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது அப்போதய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.1998ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இத்திட்டத்துக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கினார், பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.

சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடால் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
https://www.virakesari.lk/article/145597

  • கருத்துக்கள உறவுகள்

"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது" - சட்டப்பேரவையில் தீர்மானம்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

பட மூலாதாரம்,NASA

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து பேசினார்.

 

"150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதைக் கடமையெனக் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம். மு. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்க ஆடம்ஸ் பாலத்தில் கால்வாய் வெட்டும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம்.

 

1963ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த திட்டம் இது. அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென குறிப்பிட்டார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய தூரம் குறையும். மீனவர்கள் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட மாநிலமாக வளரும் என அண்ணா எழுதினார்.

 

இத்திட்டத்தை நிறைவேற்றித் தர எழுச்சி நாள் கொண்டாடுவதென்றும் அறிவித்தார். 1972ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி இதை வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் அதிகரிக்க சேது சமுத்திரத் திட்டம் மிக அவசியம் என வலியுறுத்தினார். 1998ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயி, இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்தத் திட்டத்திற்கான பாதை எதுவெனத் தீர்மானிக்கப்பட்டது.

2004இல் மத்திய ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.கவை உள்ளடக்கிய ஆட்சி வந்தபிறகு, 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் பாதி முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பாக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அம்மையார், திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்குப் போட்டார்கள்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை போடாமல் இருந்திருந்தால், 10 ஆண்டுகளில் ஏராளமான பலன் கிடைத்திருக்கும். மு. கருணாநிதி சுட்டிக்காட்டியதைப்போல, நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் பெருகும். கப்பல்களின் பயண நேரமும் தூரமும் குறையும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்.

சிறு சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். சேது கால்வாய் திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். மீனவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தின் காரியங்கள் நடைபெறுகின்றன.

மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்றுவர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதியளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படும். நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். இவையெல்லாம்தான் மு. கருணாநிதி சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

பட மூலாதாரம்,TWITTER/TN DIPR

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என பா.ஜ.க. அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், ராமேஸ்வரம் கடல் பகுதியில் எந்த மாதிரி கட்டுமானம் எனக் கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க. அமைச்சர் வந்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை போராடியும் வாதாடியும் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும்" என்று பேசினார்.

பிறகு அந்தத் தீர்மானத்தை வாசித்தார்.  "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகிறது. 1860ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன் பிறகு 1955ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ராமசாமி 'தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

 

1860ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன் பிறகு 1955இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964இல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு - ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுக்காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாம்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

பட மூலாதாரம்,SCREENGRAB

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் இந்தத் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங்கால் 2004ஆம் ஆண்டு  2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. மு. கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோர் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்.

திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/MKSTALIN

எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையில், தற்போது  “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்”  என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.

எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது," என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c1ewp2jg5deo

  • கருத்துக்கள உறவுகள்

மாவு புளிக்க ஆரம்பித்துவிட்டது. 

👏

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திர திட்டம்: பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை நீடிக்கும் 150 ஆண்டுக்கால கனவு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
சேது சமுத்திரத் திட்டம்: ஒரு நீண்ட வரலாறு

பட மூலாதாரம்,SETHUSAMUDRAM CORPORATION LIMITED

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமற்ற பாக் நீரிணை பகுதியைத் தோண்டி, பெரிய கப்பல்கள் செல்ல வழி செய்வதன் மூலம் இந்தியாவின் கிழக்கு - மேற்குக் கடற்கரைகளை இணைக்கும் சேது சமுத்திரத் திட்டம், தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று.

சேது சமுத்திரத் திட்டம், கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் ஒரு திட்டம். கிழக்கிந்தியக் கம்பெனியின் காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எனப் பல்வேறு காலகட்டங்களில் இந்தத் திட்டம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற புவியியலாளரான மேஜர் ஜேம்ஸ் ரன்னெல் 1760களில் இலங்கையின் திருகோணமலையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் இலங்கைக்கும் இந்தியாவின் தென் பகுதிக்கும் இடையில் இருந்த மணல் திட்டுகளைக் கவனித்தவர். அந்த இடத்தில் கால்வாய் அமைப்பதன் மூலம் கப்பல்களைச் செலுத்த முடியுமெனக் குறிப்பிட்டார். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு வயது மிகவும் குறைவு என்பதால், அந்தத் திட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதற்குப் பிறகு, 1838இல் முதன் முறையாக இந்தப் பகுதியில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டதாகவும் ஆனால் அந்தக் கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் செல்ல முடிந்ததே தவிர, பெரிய கப்பல்கள் செல்ல முடியவில்லை என்பதால், இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை என்றும் கூறுகிறது பிரிட்டானியா கலைக்களஞ்சியக் குறிப்பு.

 

இதற்குப் பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியக் கடற்படையில் பணியாற்றி வந்த கமாண்டர் ஆல்ஃப்ரட் டன்டாஸ் டெய்லர், கடல் வழிகளில் தீவிர ஆர்வம் காட்டியவர். 1860இல் அவர் மீண்டும் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். இந்தத் திட்டத்திற்கு முதலில் 90,000 பவுண்ட் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், பருவமழைக் காலத்தில் அந்தக் கால்வாயைப் பராமரிக்க ஏற்படும் செலவைக் கருத்தில் கொண்டால் மொத்தமாக ஒன்றரை லட்சம் பவுண்ட் செலவாகும் எனத் தெரியவந்தது. இவ்வளவு பெரிய செலவின் காரணமாக, இந்தத் திட்டத்தை அப்போது பிரிட்டிஷ் அரசு பரிசீலிக்க முன்வரவில்லை.

1861இல் டவுன்ஷென்ட் என்பவர் பாம்பன் கால்வாயைத் தோண்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார். ஆனால், அவர் முன்வைத்த திட்டத்தில் கால்வாய் வளைவாக இருந்தது. மிகத் தீவிரமான நீரோட்டம் உள்ள பகுதியில் இம்மாதிரி ஒரு கால்வாயைப் பராமரிப்பது குறித்த கவலைகளால் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு 1862இல் ஒரு நாடாளுமன்றக் கமிட்டி அமைக்கப்பட்டு இந்தத் திட்டம் குறித்து ஆராயுமாறு உத்தரவிடப்பட்டது. இந்தக் குழு பாம்பனுக்குக் கிழக்கே 2 மைல் தொலைவில் கால்வாயை அமைக்கலாம் எனப் பரிந்துரைத்தது. ஆனாலும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், 1863இல் சென்னை மாகாணத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த சர் வில்லியம் டானிசன் பாம்பனுக்கு விஜயம் செய்தார். நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்த இடத்திலிருந்து மேலும் ஒரு மைல் தள்ளி இந்தக் கால்வாயை அமைக்கலாம் என்றார் அவர். ஆனால், அவர் சொன்னபடி கால்வாயை அமைத்தால், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கால்வாய் கடுமையாகப் பாதிப்பிற்குள்ளாகும் என்பது தெரியவந்தது.

சேது சமுத்திரத் திட்டம்: ஒரு நீண்ட வரலாறு

பட மூலாதாரம்,SETHUSAMUDRAM CORPORATION LIMITED

1871இல் ஸ்டோர்ட் என்பவர் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த திட்டத்தின்படி, நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்த இடத்திற்கு அருகிலேயே கால்வாய் வெட்டப்பட வேண்டும். ஆனால், அப்படி வெட்டினால், அது வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பாதிக்கப்படும் என்பது தெரியவந்தது.

இதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக சர் எல்ஃபின்ஸ்டைன் 1872 மார்ச் மாதத்தில் இந்திய அரசின் செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், இந்தியாவின் துறைமுகப் பொறியாளரான ராபர்ட்சன் உடனடியாக பாம்பன் பகுதிக்குச் சென்று, எந்த இடத்தில் கால்வாய் அமைக்கலாம் என்பது குறித்த அவரது கருத்தைத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டது.

இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் ஒவ்வொரு மாதமும் அதிகரிப்பதாக எல்ஃபின்ஸ்டைன் குறிப்பிட்டார். ராபர்ட்சனும் பாம்பனுக்கு வந்து ஆய்வு செய்துவிட்டு, ஒரு வழியைக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சொன்ன வழியில் தோண்டுவதென்றால், பெரிய அளவில் கடலில் தோண்ட வேண்டியிருந்தது.

இதற்குப் பிறகு 12 ஆண்டுகளுக்கு திட்டம் குறித்த பேச்சே இல்லாத நிலையில், 1884இல்  The South India Ship Canal Port and Coaling Station, Limited என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தங்களுடைய ஆலோசனை பொறியாளரான சர் ஜான் கோட் என்பவரை பாம்பனுக்கு அனுப்பி, ஆய்வு செய்யச் சொன்னது. ஆனால், இந்த நிறுவனம் முன்வைத்த திட்டத்தை அப்போதைய சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை.

இதற்குப் பிறகு 1902இல் சவுத் இந்தியன் ரயில்வே கம்பனி என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தைத் தனது பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்தது. ஆனாலும் திட்டம் மேற்கொண்டு நகரவில்லை. பிறகு, 1922இல் இந்திய அரசின் துறைமுகப் பொறியாளரான சர் ராபர்ட் பிரிஸ்டோ இந்தத் திட்டத்தை ஆய்வு செய்தார். சவுத் இந்தியன் ரயில்வே கம்பனி முன்வைத்த பாதையே சரியாக இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆனால், நிதிப் பிரச்னையின் காரணமாக, திட்டம் மேற்கொண்டு நகரவில்லை.

சேது சமுத்திரத் திட்டம்: ஒரு நீண்ட வரலாறு

பட மூலாதாரம்,TWITTER/TN DIPR

ஆனால், இந்தத் திட்டம் மீதான ஆர்வம் நீடித்தபடியே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு வருவதற்கான தூரம் 755 கடல் மைல்களில் இருந்து 402 கடல் மைல்களாகக் குறையும் என்பதுதான். பயண நேரத்தில் 36 மணிநேரம் குறையும் என்பதோடு, எரிபொருள் செலவும் வெகுவாகக் குறையும்.

இந்த நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1955இல் சர் ராமசாமி முதலியார் தலைமையில் சேது சமுத்திரத் திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் வெற்றித் தன்மை குறித்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் ஆராய்ந்தது.

 இந்தத் திட்டத்தை ஆராய்ந்த ராமசாமி முதலியார் குழு, 1.8 கோடி ரூபாய் செலவில் மண்டபம் பகுதியில் 26 அடிக்கு ஒரு கால்வாயை வெட்ட வேண்டும் எனக் கூறியது. பிறகு, 1959இல் மேலும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டு, 36 அடிக்கு கால்வாய் தொண்ட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கு 21 கோடி ரூபாய் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. இந்தத் திட்டத்தை தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தோடு இணைத்து, ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டுமென்றும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறியது. ஆனால், 1963இல் தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, 1964இல் கப்பல் போக்குவரத்துத் துறை செயலர் டாக்டர் நாகேந்திர சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 1967இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. 37.46 கோடி ரூபாய் செலவில் 30 அடிக்கு இந்தக் கால்வாயை அமைக்கலாம் என்றது இந்தக் குழுவின் அறிக்கை. மண்டபத்தில் கால்வாயை வெட்டுவதற்குப் பதிலாக தங்கச்சி மடம் பகுதியில் கால்வாயை அமைக்கலாம் என்றது இந்தக் குழு.

சேது சமுத்திரத் திட்டம்: ஒரு நீண்ட வரலாறு

பட மூலாதாரம்,SCREENGRAB

1967இல் சி.என். அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் இந்தத் திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு 1981இல் துறைமுகங்களின் வளர்ச்சி ஆலோசகராக இருந்த எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் ஒரு குழு இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது. இந்தக் குழு கோதண்டராமர் கோவிலுக்கு ஒரு கி.மீ மேற்கில் இரு கால்வாய்களை அமைக்க வேண்டுமென 1983இல் பரிந்துரைத்தது. இந்தத் திட்டத்திற்கு 282 கோடி ரூபாய் ஆகுமென மதிப்பிடப்பட்டது.

இதற்குப் பிறகு 1996இல் பல்லவன் போக்குவரத்துக் கழக ஆலோசனை சேவை நிறுவனத்தை வைத்து இந்தத் திட்டத்தை தமிழ்நாடு மீண்டும் பரிசீலித்தது. இதற்குப் பிறகு ஒரு வழியாக 1997இல் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் இந்தத் திட்டத்திற்கான முதன்மை ஏஜென்சியாக நியமிக்கப்பட்டது. 1998இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியமைத்தபோது, இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் துவங்கப்பட்டன. இந்தத் திட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் அறிவித்தார்.

2000-2001ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் குறித்து புதிதாக ஆய்வு நடத்த 4.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆராய 'நீரி' அமைப்பு பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும் என்று நீரி கூறியது. இதற்குப் பிறகு 2002இல் இந்தத் திட்டத்தின் தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வுகள் நடத்தப்பட்டன.

2004இல் தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வந்த பிறகு, இந்தத் திட்டம் குறித்த ஆய்வுகள் துரிதப்படுத்தப்பட்டு, 2005ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் பணிகளைத் துவக்கி வைத்தார். ஆனால், இந்தத் திட்டப் பணிகள் துவங்கி நடந்துவந்த நிலையில், இந்தத் திட்டம் ராமர் பாலத்தைச் சேதப்படுத்துவதாகவும் அதனால் திட்டத்தை நிறுத்த வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. அல்லது திட்டத்தின் பாதையை மாற்ற வேண்டுமென குரல்கள் எழுந்தன. விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன.

சேது சமுத்திரத் திட்டம்: ஒரு நீண்ட வரலாறு

பட மூலாதாரம்,NASA

இதையடுத்து, திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதனால், 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியோடு ஆடம் பாலம் பகுதியில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதற்குப் பிறகு 2009ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி எல்லா இடங்களிலுமே தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி கூறி, டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட்டின் இயக்குநர் ஜெனரலாக இருந்த ராஜேந்திர கே. பசௌரியின் தலைமையில் ஒரு குழுவை 2008இல் மத்திய அரசு அமைத்தது. இந்தத் திட்டம் சூழலியல் ரீதியிலோ, நிதி ரீதியிலோ சரியான திட்டமல்ல எனத் தனது ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தது பசௌரி குழு. ஆனால், பசௌரி குழுவின் அறிக்கையைப் புறக்கணித்துவிட்டு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக 2013இல் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால், இந்தத் திட்டம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வராததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்தத் திட்டத்தில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம், பாரதீப் துறைமுகம், விசாகப்பட்டின துறைமுகம் ஆகியவை முதலீடு செய்திருந்தன. இந்த முதலீடுகளைப் பெற்று, திட்டத்தைச் செயல்படுத்த சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிட்டட் என்ற சிறுப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டம் கிடப்பிலேயே இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிட்டட் கலைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

சமீபத்தில், பாக் நீரிணை பகுதியில் உள்ள நிலப்பகுதி மனிதர்களால் கட்டப்பட்டதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லையென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்தே, மீண்டும் சேது சமுத்திர திட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

https://www.bbc.com/tamil/articles/cj72re4vddro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘சூது கவ்வும்’ சேது சமுத்திர திட்டம்!

 

-சாவித்திரி கண்ணன்

 

928912.jpg

கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமாம்! இத் திட்டத்தை முன்பு அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து எதிர்த்துள்ளன! இந்த திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதனால் கைவிடப்பட்டது? என்ன நடந்தது? மீண்டும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளதா? 

பத்தாண்டுகளுக்கு முன்பு “சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும்” என தி.மு.க எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பாராளுமன்றமே ஸ்தம்பித்து, அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று என்பதை நாம் மறக்க முடியாது! ஆனால், தற்போது தமிழ் நாடு சட்டமன்றத்தில் சேது சமுத்திர திட்ட நிறைவேற்றலுக்கு ஸ்டாலின் கொண்டு வந்த, தனி நபர் தீர்மானத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஆதரித்துள்ளன!

‘தமிழர்களின் லட்சியக் கனவு திட்டம்’ என்ற உணர்வுடன் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த திட்டம்  அணுகப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தின் பல பெரும் தலைவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கனவு இருந்தது என்பதை மறுக்க முடியாது.

முன்பு, ”ராமர்பாலம் பாதிக்கப்படும்” என்ற காரணம் சொன்ன பாஜகவினர், தற்போது அந்த நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளனர். ”சேது சமுத்திரப் பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை” என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இப்போது சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே, சுப்பிரமணிய சுவாமி, ‘ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரி’ வருகிறார். அதற்கு ஒன்றிய பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அதனால், அவர் ராமர் பாலத்தை புராதானச் சின்னமாக அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டார்! அதற்கு பாஜக அரசு உரிய பதிலை சொல்லாமல் எட்டாண்டுகளாக இழுத்தடித்து வருகிறது!. இந்த நிலையில், ‘சேது சமுத்திரப் பகுதியில் பாலம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை’ என நாடாளுமன்றத்திலேயே பாஜக அமைச்சர் தெரிவித்ததன் பின்னணியில் தான், ஸ்டாலின் இந்த திட்டத்தை மீண்டும் வலியுறுத்த தொடங்கி உள்ளார்!

assembly1.jpg சட்ட மன்றத்தில் ஸ்டாலின்

நம்மைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சி நிலைகளைக் கடந்து அறிவுபூர்வமாக நாட்டு மக்கள் நலன்சார்ந்து இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்பதே  நோக்கம். சற்றே வரலாற்றை பின் நோக்கிப் பார்ப்போம்.

1860ல் ஆங்கில கடற்படை தளபதி ஏ.டி டெய்லர் என்பவரால் விதைக்கப்பட்ட ‘சேது சமுத்திர திட்டம்’ என்ற விதை நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் விரும்பப்படும் ஒரு விவாதப்  பொருளாகி, சுதந்திரம் பெற்ற பிறகு அது விஸ்வரூபமெடுத்து நேரு, இந்திராகாந்தி கால அரசுகளால் கமிட்டிகள் அமைத்து ஆராயப்பட்டு கைவிடப்பட்டன!

1999 முதல் 2004 வரை பாஜகவுடன் மத்திய அரசில் அங்கம் வகித்திருந்தது திமுக! அப்போது சேது சமுத்திர திட்டத்தின் தொடக்க ஆய்வுப் பணிக்காக ஐந்து கோடி ரூபாயை அன்றைய பா.ஜ.க. அரசின் நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்கா  1999 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார். அந்த ஆய்வு அறிக்கை இரண்டு ஆண்டுகளில் தரப்பட்ட நிலையில், 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாயின் பாஜக அரசு, ‘சேது சமுத்திர திட்டம் நடைமுறை சாத்தியமற்றது’ என்ற நிலையில், பின் வாங்கி விட்டது

1200px-thumbnail.jpg 2005 ல் சேது சமுத்திர திட்ட அடிக்கல் நாட்டு விழா

பிறகு தி.மு.க வின் தயவில் மத்திய அரசு காங்கிரஸ் அரசு இயங்க வேண்டிய சூழலில்  2005 ஜுலை 2ந்தேதி பிரதமர் மன்மோகன் சிங்கால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது ”இத்திட்டத்தால் தென் தமிழகம் வளம் பெறும், இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல்கள் இனி, சேது கால்வாய் வழியாக பயணிக்கும் இதனால் பயணநேரம், எரிபொருள் மிச்சம் போன்ற நன்மைகளோடு  தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச முக்கியத்துவம் பெறும்” என்று இத்திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது.  சுமார் 2,500 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்குள்ளாக இத்திட்டம் முடிக்கப்படும்  என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வேலை தொடங்கப்பட்ட பிறகு தான் தெரிந்தது. தோண்டப்பட்ட இடத்திலேயே வெகு விரைவில் மீண்டும் மண் வந்து விழுவதானது இந்த திட்டம் இயற்கைக்கு எதிராக உள்ளது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தாற் போல் உணர்த்தியது. அதே சமயம் இந்த மண் தோண்டுவதற்கான காண்டிராக்டில் பணத்தை எவ்வளவு அள்ள முடியுமோ, அவ்வளவையும் அள்ளிக் கொண்டு இருந்தார் அன்றைய மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு!

49478.jpg

மற்றொரு புறம் பக்கம் இத்திட்டத்தை மிக கடுமையாக எதிர்த்து ,தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் பல போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தனர்.  சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்த திட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களைக் எடுத்துக் கூறி,  எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.

இவற்றோடு இத் திட்டத்தால் இராமர் பாலம்  இடிபடுகிறது என்ற  இந்துத்துவ  இயக்கங்களின்  எதிர்ப்பும் சேர்ந்து  வலுப்பெற்று,  இத்திட்டம்  உச்சநீதி  மன்றத்தால்  செப்டம்பர் 2007 ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பிறகு தி.மு.க  மற்றும் இடது சாரிகளால் இத் திட்டத்திற்கு  மேன்மேலும்  அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தாலும் கூட,  ‘இது மீண்டும் தொடங்கும்’ என்பதற்கான அறிகுறிகள் தென்படாமல் தான் இருந்தது!

கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஏன் விரும்பவில்லை;

இதற்கான காரணங்கள் என்ன? என்று பார்க்கும் போது இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமற்றது மாத்திரமல்ல, இதை இயற்கைக்கு மாறாக கடும் தொழில் நுட்ப உதவியுடன் நிறைவேற்றினாலுமே கூட, இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ள, கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்தது. கப்பல்  போக்குவரத்தில் பலன் பெறும் இந்திய நிறுவனங்கள் எதுவுமே இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்ற நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக இதை செயல்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது!

“குறுகலானபாதை, குறைந்த ஆழம் என்பதால் பெரிய சரக்கு கப்பல்கள் ஒரு போதும் இந்தப் பாதை வழியே பயணிக்க வாய்ப்பில்லை. சிறிய உள்ளூர்  கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும், மிகக் குறைந்த வேகத்திலேயே பயணிக்கமுடியும், இதற்கு எரிபொருள் செலவும் கூடும், இதனால்  இலங்கையைச்சுற்றி பயணிப்பதற்கும் இப்பகுதி வழியே செல்வதற்கும் நேரம், செலவு போன்றவற்றில் பெரிய வித்தியாசமில்லை.  இந்த கால்வாய் பகுதியில் மீண்டும் மீண்டும் மணல் சேர்ந்து கொண்டேயிருப்பதால் பராமரிப்பு செலவு அதிகமாகும்” என்று  தொழில் சார்ந்த நிபுணர்கள் கூறினர்.

மன்மோகன் சிங் அரசு மறுத்தது ஏன்?

சேது சமுத்திர திட்ட கால்வாயின் மொத்த நீளம் 167கி.மீ. இதில் ராமர்பாலம் எனப்படும் ஆதாம்பாலம் பகுதியில் 11 சதவிகிதமும், பாக்ஜலசந்தி பகுதியில் 30 சதவிகிதமும் பணிகள் முடிவடைந்த  நிலையில் தான்  இத்திட்டம் கைவிடப்பட்டது. இதற்கே ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகிவிட்டது. இத்திட்டத்தை மேலும் தொடரமுடியாததற்கு தோண்டப்படும் பகுதியில் மீண்டும், மீண்டும் மணல் சேருவது ஒரு பிரச்சினையாகவும், தோண்டிய மணலை எங்கே கொட்டுவது என்ற நடைமுறைசிக்கலும் பிரதான காரணமாக சொல்லப்பட்டது.

மேலும், மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் மதிப்பீடு அதிகரித்து, 4000 கோடி  என்ற நிலையை எட்டியதும் ஒரு முக்கிய காரணமாகும்!  ‘இவ்வளவு செலவழிந்தாலும் இத்திட்டத்திற்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது’ என நிபுணர்கள் கூறிய விபரங்கள் தான் அன்றைய மன்மோகன்சிங் அரசின் பின்வாங்கலுக்கு பிரதான காரணமாகும்.

சுழலியல் பாதிப்புகள் என்ன?

872230-noqmlitmup-1490468066.jpeg சேது சமுத்திர பாதையில் இயற்கையாக உள்ள மணல் திட்டும், அபரிமிதமாக உள்ள கடல் வளமும்!

”3,600 வகையான கடற்செடி கொடிகள், கடற் பாசிகள், கடல் வாழ் உயிரினங்கள், 450 வகை அரிய மீன் இனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பவளப் பாறைகள்.. இந்த திட்டத்தால் சர்வ நாசமாகும். இதனால், தென் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, கடலின் இயற்கை சூழலே கடும் பாதிப்புக்கு ஆளாகும்” எனக் கூறப்பட்டது.   இந்த பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் தென் இந்திய கடற்பகுதியில்  சுனாமியின்  சீற்றத்தை குறைக்கும் அரணாகத் திகழ்கின்றன” என்ற சூழலியல் விஞ்ஞானிகளின் கூற்று மேலும் வலுப் பெற்று வந்தது! இதைத் தொடர்ந்து இந்த திட்டம் அதிகாரபூர்வமாக கைவிடப்படுவதாக மார்ச்- 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது! இந்த அறிவிப்பை மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி,  மகிழ்ச்சி வெளிப்படுத்தினர் என்பதும் நினைவுகூறத்தக்கது.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

”காசு பணம் துட்டு மணி மணி — சேது சமுத்திரத் திட்டம் எனும்  சூது கவ்வும்.  திமுகவின், குறிப்பாக,  டி ஆர் பாலுவின் தீராத பேராசை. தி.மு.க-பாஜக மறைமுக கூட்டுச்சதி.  குஜராத்தி தொழிலதிபர்களுக்கும்,  இடைத்தரகர்களுக்கும், திராவிட மாடல் கட்சித்தலைவர்களுக்கும் கப்பல் கப்பலாக கப்பல் கப்பலாக  கரன்சி , வடமாநிலப் பொறியாளர்களுக்கும், வடமாநில காண்டிராக்டர்களுக்கும்,  வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் நல்ல வேலை, வருமானம். தமிழக இளைஞர்களுக்கு பட்டை நாமம்.  இதுவா விடியல்?”’ எனக் கேட்டுள்ளார் பாடம் நாராயணன்.

மக்கள் நலன்சார்ந்தும், நடைமுறை சாத்தியப்பாடுகள் சார்ந்தும் இந்த திட்டத்தை நாம் ஆய்வு செய்யும் போது, இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியப்படாது. ஒரு வேளை சாத்தியப்பட்டாலும், பயன்கள் மிகக் குறைவு. தீமைகளோ அதிகம். செலவும் மிக அதிகம்! இவ்வளவும் தெரிந்த நிலையில், இந்த திட்டத்தை அமல் படுத்த போகிறோம் என்பது, ‘ஆன வரை கூட்டுக் கொள்ளை அடித்து கொள்ளலாம்’ என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? மேலும் பாஜகவுடன் திமுக அரசியல் ரீதியாக வெளிப்படையாக கைகோர்க்கும் சூழல் உருவாக, இந்த திட்டம் துவக்க புள்ளியாக அமையலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்
 

 

https://aramonline.in/12017/sethu-canal-peoject-is-possible/

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரோட்டங்களும் இருக்கிறது. வலையை விரித்து படுத்தால் விடிய நிறைய தூரம் போய்விடுமாம் படகு.

  • கருத்துக்கள உறவுகள்

"2,500 கோடியை கடலில் போடுவதா?" - சேது சமுத்திர திட்டம் பற்றி உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
பாக் நீரிணையில் படகுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாக் நீரிணையில் படகுகள்

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனை ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இதைத் தொடங்க வைத்தது திமுக.

ரூ.2,427 கோடி செலவில் இதைச் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. 03.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

 

மணல் திட்டுகளுக்குப் பாதிப்பு

சேதுக்கால்வாய் - உத்தேசப் பாதை

பட மூலாதாரம்,SETHUSAMUDHRAM CORPORATION

 
படக்குறிப்பு,

சேதுக்கால்வாய் - உத்தேசப் பாதை

ராமேஸ்வரம் அருகில் உள்ள இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடல் பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன.

தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 திட்டுகள் இந்தியாவிற்கும், அடுத்த 7 திட்டுகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் திட்டுகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கைகளோடு தொடர்புள்ளவை. இவை ஆதம் பாலம் என்றும் ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறவை. சேது என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் பாலம் என்பதே பொருள். இந்த மணல் திட்டுகள் ராமர் அமைத்த பாலம் என்று ராம பக்தர்கள் நம்புகிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்தால் இந்த மணல் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அது இது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் பிள்ளை ராமர் பாலம் என்று குறிப்பிடப்படும் பகுதிக்கு சேதம் வராமல் சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுப்பதற்கான கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துஅறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்காக அமைக்கப்பட்டதுதான் பச்சோரி கமிட்டி.

கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கப்பட்டது.

மேலும் இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்குகளில் ஒன்று.

திட்டத்தால் உள்ளூர மக்களின் வாழ்வாதாரம் உயருமா?

1964ஆம் ஆண்டு பேரழிவைக் கொண்டு வந்த புயலுக்கு முன் தனுஷ்கோடி குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்டது. இப்போது சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராமேஸ்வரம் தீவு அந்தக் காலத்து தனுஷ்கோடி போல் அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டித் தரும் ஒரு பகுதியாக மாறும்; இதனால் ராமேஸ்வரம் மக்களுக்குத் தொழில், வேலைவாய்ப்பு கிடைத்து வாழ்வாதாரம் உயரும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த திட்டத்தால் சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழில் தேடிச் செல்லும் நிலை ஏற்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு எந்த ஒரு தொழில் முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

2,500 கோடியை கடலில் போடுவதா?

ஜெரோம்

பட மூலாதாரம்,JEROME

 
படக்குறிப்பு,

ஜெரோம்

சேது கால்வாய் திட்டம் என்பது பயன் இல்லாத திட்டம் என்கின்றனர் பாரம்பரிய மீனவர்கள். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாரம்பரிய மீனவர் ஜெரோம், "வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அந்நிய செலாவணி பெருகும் என ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுப்பதாக மீனவர்கள் பார்க்கிறோம்.

தனுஷ்கோடி முதல் வேதாரண்யம் வரை உள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைந்த பகுதி. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த கடல் பகுதியில் 10 முதல் 12 மீட்டர் மட்டுமே ஆழப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால், அந்த கால்வாய் வழியாக 36 டன் எடை கொண்ட கப்பல்கள், அதுவும் குறைந்த வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

அதிக எடை கொண்ட கப்பல் இந்த வழியில் பயணிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

இத்திட்டத்தால் தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். தனுஷ்கோடி முதல் வேதாரண்யம் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடல் நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்ப மீன்பிடித் தொழில் செய்கிறோம்.

மீன் பிடிக்கும்போது கடல் நீரோட்டத்தில் வலைகள் சேது கால்வாய் பகுதிக்குச் சென்றால் மீனவர்களால் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்," என்றார்.

பாக் நீரிணை - மன்னார் வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாக் நீரிணை - மன்னார் வளைகுடா

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது, 2500 கோடி ரூபாயை வீணாகக் கடலில் கொட்டுவது போல என மேலும் கூறுகிறார் ஜெரோம்.

அரசு சொல்வதைப் போல் இத்திட்டத்தால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று கூறும் அவர், "ஆங்கிலேயர் காலத்தில் சேது சமுத்திர திட்டத்தை ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி கடல் பகுதியில் துவங்க திட்டமிட்டு அது முடியாமல் போனதால் வேதாளையில் இருந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து அது தோல்வியில் முடிந்ததால் ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தைக் கைவிடப்பட்டனர். ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்ட திட்டம் என்றால் அது சேது சமுத்திர திட்டம் மட்டுமே.

தனுஷ்கோடி பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து கடலில் மண் தோண்டும் பணி நடைபெற்றது. ஆனால் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை இருக்கக்கூடிய மணல் திட்டுகளை பொறுத்த அளவு கடல் நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்பவே திட்டுகளில் மணல் இருக்கும். வருடத்தில் பல மாதங்கள் கடல் நீரோட்டத்தில் மணல் திட்டுகள் காணாமல் போய்விடும். அப்படிப்பட்ட புவியியல் அமைப்பை கொண்ட இடத்தில் எப்படி கால்வாய் அமைக்க முடியும்” என்று கேட்கிறார் ஜெரோம்.

'ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட திட்டம்'

ராமமூர்த்தி

பட மூலாதாரம்,RAMAMURTHI

 
படக்குறிப்பு,

ராமமூர்த்தி

ஆங்கிலேயரால் 1960ஆம் ஆண்டு கைவிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை அதே வழித்தடத்தில் மீண்டும் செயல்படுத்த தமிழ்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது; ஆனால், கடலுக்கு நடுவே உள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராம மூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது மணல் திட்டுகளுக்கு இடையிலோ, சேது மற்றும் ஐந்தாவது மணல் திட்டுக்கு இடையிலோ சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதால் கடற்கரை ஒழுங்குமுறையின்படி மாநில அரசுக்கு வருவாய் கிடைக்காது.

இத்திட்டத்தை ராமேஸ்வரம் அடுத்துள்ள கோதண்டராமர் கோயில் - அரிச்சல்முனை இரண்டுக்கும் இடையே உள்ள கரை பகுதி வழியாக செயல்படுத்தினால் அங்கு சிறிய துறைமுகம் அமையும், அதன் வழியாக வணிகம் நடைபெற்று மாநில அரசுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வருவாய் கிடைக்கும்.

ராமர் பாலத்தை சேதப்படுத்திதான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. இலங்கைக்கு அருகே உருவான புயல் மற்றும் சுனாமி உள்ளிட்டவற்றில் இருந்து ராமேஸ்வரத்தைக் காப்பாற்றியது ராமர் பாலம்தான். எனவே ராமர் பாலத்தை தவிர்த்து மாற்று வழியில் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் நிச்சயம் வரவேற்கதக்கது” என்றார்.

"தமிழ்நாடு அரசு தற்போது தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது; இந்து அமைப்புகளைப் பொறுத்த அளவு சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இந்த திட்டத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை," என்கிறார் அவர்.

“இலங்கை கடற்படை சிக்கலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்”

ஜேசுராஜா

பட மூலாதாரம்,JESURAJA

 
படக்குறிப்பு,

ஜேசுராஜா

பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் முழுதாக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள், இந்து முன்னணியோ ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால், விசைப்படகு மீனவர்களோ இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, கடந்த 2006ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

ஆனால் இடையில் ராமர் பாலம் என்ற ஒரு சர்ச்சையால் அந்த பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை மிக குறைந்த தூரத்திலேயே வந்துவிடுகிறது. ஆகவே நாங்கள் அடிக்கடி எல்லை தாண்டி செல்ல நேரிடுகிறது. இதனால் இலங்கை கடற்படையின் பிரச்னையால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் வட பகுதி மீனவர்கள் தென் பகுதிக்கும் தென் பகுதி மீனவர்கள் வட பகுதிக்கும் சென்று மீன் பிடிக்க வசதியாக இருக்கும். மேலும், கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்," என்றார் ஜேசுராஜா.

மணல் மூடாமல் இருக்க பராமரிப்பு பணி முக்கியம்

சேது சமுத்திரத் திட்டத்தால் தூத்துக்குடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பயன் பெறுமா என்பது குறித்து தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க தலைவர் வேல் சங்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சேது சமுத்திர திட்டம் இந்திவுக்கு முக்கியமான திட்டம்," என்றார்.

மேலும், "இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் வரவேற்கிறோம். தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லும் கப்பல்கள் எளிதில் சென்று வருகிறது.

ஆனால் கொல்கத்தா, சென்னை மற்றும் கிழக்கு கடல் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கப்பல்கள் அனைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காலதாமதமாகடச் சுற்றி வருகிறது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றி வரும் நேரம் குறைவதுடன், கப்பல்களுக்கு எரிபொருள் செலவு குறையும் இதனால் ஏற்றுமதி இறக்குமத நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.," என்றார்.

வேல் சங்கர்
 
படக்குறிப்பு,

வேல் சங்கர்

இத்திட்டத்தால் வணிக ரீதியாக லாபம் கிடைப்பதுடன், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு துறை கப்பல்கள் அவசர காலத்தில் சேது கால்வாய் வழியாக பக்கத்து மாநிலங்களுக்கு செல்ல முடியும். இதனால் நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்துள்ள அரசு கால்வாய் தோண்டும்; பகுதியில் உள்ள மணல் மீண்டும் மூடாமல் இருக்க தொடர்ந்து மணலை அள்ளி அப்பகுதியை சூயஸ் கால்வாயை போல் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க தவறினால் நிச்சயம் இத்திட்டம் தோல்வி அடையும்.

சேது சமுத்திர கால்வாயை பராமரிக்க சரக்கு கப்பலிடம் இருந்து வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் போதுமானதாக இருக்காது. எனவே அரசு கூடுதல் கட்டணம் வசூலிக்க நேரிடும். கூடுதல் சுங்க கட்டணம் வசூலித்தால் கப்பல்கள் சேது கால்வாய் தவிர்த்துவிட்டு கூடுதல் எரிபொருள் செலவு செய்து மீண்டும் சுற்றி தூத்துக்குடி வரும்.

எனவே சேது கால்வாய் பராமரிக்கும் தொகையை அரசு ஏற்க வேண்டும் அல்லது பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறவேண்டும். இப்படி செய்தால் சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்,'' என்கிறார் தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க தலைவர் வேல் சங்கர்.

https://www.bbc.com/tamil/articles/cl48pz1zmg6o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.