Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா

image_84b28baee7.jpg

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

அது மட்டுமன்றி இலங்கையில் மதத்தலங்களைத் தரிசிப்பதற்காக வருகைதருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை தலாய் லாமாவின் வருகையின் மூலம் இன்னுமின்னும் அதிகரித்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்று ராமாண்ய மகாசங்கத்தின் பிரதமகுரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு சென்றதன் பின்னர், புத்தகாயாவுக்கு திருதல யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனை கருத்தில் கொண்டே இலங்கை பௌத்த பிக்குகள், தலாய் லாமாவை இலங்கைக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

image_15ef3f74b3.jpg

இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், தலாய் லாமாவின் வருகையானது பொருளாதார ரீதியில் அனுகூலங்களை ஏற்படுத்தும். அத்துடன் இலங்கையில் வாழும் பௌத்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் பெரும் நன்மையளிப்பதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் புத்தகயாவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பிக்குகள் குழுவின் தலைவரே, தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், அவரது வருகைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கையை, தலாய் லாமா ஏற்றுக்கொண்டாரா அல்லது நிராகரித்துவிட்டாரா என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பௌத்த மதத்துக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சித்து வருவதாக திபெத் பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கருத்துத்தெரிவித்திருந்தார்.

சீன இராணுவம் திபெத் பூமியை 1949 இல் ஆக்கிரமித்திருந்தது. இதன்பின்னர் சீன இராணுவத்தின் பிடியில் இருந்து 1959 ஆம் ஆண்டு தப்பித்த தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அன்றுமுதல், இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் தலாய் லாமா வசித்துவருகின்றார்.

இந்தியாவின் இமாச்சல மலைப்பிரதேச நாடுகளில் பௌத்த மதம் வியாபித்து பரவியுள்ளது. குறிப்பாக சீனாவின் மங்கோலியாவில் பௌத்த மதம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால், பெளத்த மதத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு விஷமாகவே கருதுகின்றது. பௌத்த மதத்தை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபடுகின்றது. என்றாலும், அந்த மதத்தை அழிப்பதற்கு முடியவில்லை.

சீனாவை பொறுத்தவரையில், திபெத் மற்றும் சீனாவில் பௌத்தமத மடாலயங்கள் பலவற்றை அழித்துள்ளது.

‘பனி பூமி’ என்றழைக்கப்படும் திபெத் பல்வேறான துயரங்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கின்றது. திபெத்தின் துயரங்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பௌத்த மதத்தை அறிந்துகொண்டிருக்கின்றது. இலங்கைக்கு தலாய் லாமா வருகைதருவாராயின், இலங்கையை பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் கூட அறிந்துகொள்வார்கள் என்பது உண்மையாகும்.

இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளுடன் வருகைதந்த தலாய் லாமாவை, இந்தியா தன்பிடிக்குள் வைத்திருப்பது சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அவர், இந்தியாவில் இருந்துகொண்டு தங்களுக்குத் தொல்லை தருகின்றார் என சீனா கருதுகின்றது. அதனால்தான், தலாய் லாமாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சீனா விரும்புகின்றது.

image_e0c1325823.jpg

தலாய் லாமாவின் பௌத்த மத நிறுவனம் 1,400 ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு தலாய் லாமாவும் இறந்த பின்னர் அவர் மற்றொரு பிறவியில் லாமாவாக பிறப்பார் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கையாகும்.

தற்போதைய தலாய் லாமா 14ஆவது தலாய் லாமா ஆவர். இவருக்கு இப்போது 85 வயதாகிறது. இவர் மரணித்துவிட்டால். அவரது வாரிசை கண்டுப்பிடிப்பது பெளத்த மதத் துறவிகளான லாமாக்களின் பணியாகும்.

ஆனால், இந்த கண்டுப்பிடிக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகின்றது. தனக்கு இணக்கமான தலாய் லாமாவை நியமிக்கவும் சீனா விரும்புகின்றது. எனினும், அடுத்த தலாய் லாமா யார் என்பதை திபெத்தியர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகின்றது.

எனினும், தலாய் லாமாவின் இலங்கை விஜயம் இன்னுமே உறுதிப்படுத்தபடவில்லை. தலாய் லாமாவின் இலங்கை விஜயத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றது.

இந்நிலையில்,  மல்வத்து மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வேய்,
 

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை எந்தவொரு வெளிநாடும் வரவேற்பதை சீன அரசாங்கமும் மக்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தன்னை ஓர் எளிய பௌத்த துறவி என்று கூறிக்கொள்ளும் 14ஆவது தலாய் லாமா உண்மையில் ஓர் எளிய துறவி அல்ல என்றும் திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முயற்சித்து வரும் அவர், மதப் பிரமுகர் போல் மாறுவேடமிட்டு அரசியல் நாடு கடத்தப்பட்டவர் என்றும் ஹூ மகாநாயக்கரிடம் தெரிவித்தாக சீன தூதரகம் தனர் டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திபெத் தன்னாட்சிப் பகுதி உட்பட சீனாவின் அரசாங்கமும் மக்களும் தலாய் லாமாவை எந்தப் பெயரிலும் பெறுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று மல்வத்து மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரிடம் கடந்த புதன்கிழமை (11) ஹூ வேய் குறிப்பிட்டுள்ளார் என சீன தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும், திபெத் தொடர்பான பிரச்சினை உட்பட பரஸ்பரம் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உறுதியாக ஆதரவளித்து வருவதாக வலியுறுத்திய ஹு, இரு தரப்பினரும் குறிப்பாக பௌத்த சமூகங்கள் திபெத்திய சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், சீன-இலங்கை வரலாற்று உறவுகளை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல பிக்குகள் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் வதந்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த  மகாநாயக்க தேரர், சீனா இலங்கையின் நெருங்கிய நண்பர் என வலியுறுத்தினார்.

சீனாவுடனான நமது உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சீனா வழங்கிய பங்களிப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாகிய நாம் சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு நாங்கள் எப்போதும் கடன்பட்டுள்ளோம் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து அதிகமான பிக்குகள் மற்றும் பிக்குனிகள் சீனாவுக்கு விஜயம் செய்ய முடியும் என்றும் மேலும் சீனாவில் இருந்து அதிகமான பக்தர்கள் இலங்கை மற்றும் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் மகாநாயக்கர் தெரிவித்ததாக சீன தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
image_267d7a0e5e.jpg

இதேவேளை, புத்த கயாவில் பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழு கடந்த ஆண்டு டிசெம்பர் 27 திகதி சந்தித்தது. அதேபோன்று அன்றைய நாட்களில் புத்த கயாவில் பெரும் திரளான உள் நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  காணப்பட்டனர்.

தலாய் லாமா ஏன் இந்தியாவிற்கு வந்தார்? பெரும் திரளான பன்னாட்டு மக்களும் ஏன்  இங்கு வருகின்றனர் போன்ற விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், தலாய் லாமாவை சந்தித்ததன் பின்னர் தெரிவித்திருந்தார்.

தலாய் லாமாவின் புனிதத்திற்கு இந்தியா உதவியது. இதன் காரணமாகவும் அவரது புனிதத்துவத்தின் பிரகாரமும் இன்று இந்தியாவிலும் புத்த கயாவிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கடும் குளிர் மிக்க இந்த நாட்களில்  பொதுவாக மக்கள் வருவதில்லை. ஆனால் தலாய் லாமாவின புனிதத்தால் மக்கள் வருகின்றார்கள். இதனால் புத்தகயா பல வழிகளில் பயனடைகிறது என குறிப்பிட்ட  ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், திபெத் பலன் பெற்றதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

எனவே தான் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது அனைத்து வகையிலும் நாட்டிற்கு நல் வழிகளை காட்டும். குறிப்பாக இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் தலாய் லாமாவின் விஜயம் உதவும் என இலங்கை பிக்குகள் குழு குறிப்பிட்டுள்ளது.

தலாய் லாமா புத்த கயாவிற்கு சென்றது போல் இலங்கைக்கும் வர வேண்டும். அவர் இலங்கைக்கு வந்தால் பல ஆயிரக்கணக்கான பன்னாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். இது பொருளாதாரத்தை மேம்படுத்தும். ஏனெனில் இலங்கை நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. மேலும் அவர் இலங்கைக்கு வருவதால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம், பொருளாதாரமும் உயரும் எனவும் கூறினார்.

தலாய் லாமாவை சந்திப்பதற்கு இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் பிரதம பீடாதிபதி மகுலேவே விமல மகாநாயக்க உட்பட தேரர்களும் சென்றிருந்தனர். புனித தலாய் லாமா ஓர் ஆன்மீகத் தலைவர். அவரை அங்கு சந்தித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கு ஆன்மீக செயல்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளது. எனவே, இலங்கையைச் சேர்ந்த மகாசங்கத்தினராகிய நாங்கள் அவரது புனிதத்துவத்தை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக  ராமஞ்ஞ மகா நிகாயா கூறியது.

வண. அஸ்கிரி பீடத்தின் தேரர் முருத்தேனிய தம்மரதன தேரர் கூறுகையில், உண்மையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்தகயா எங்கள் தாய்நாடு போன்றது. எனவே தான் இங்கு அதிக தடவைகள் வருகிறோம். இது எனது முதல் முறையல்ல. பல முறை வந்துள்ளேன்.  தலாய் லாமாவிடம் ஆசி பெறுவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான லாமாக்கள் மற்றும் துறவிகள் வந்துள்ளனர். அவர்களையும் சந்திக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அங்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டோம். குறிப்பாக தலாய் லாமாவின் உரையைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மறுப்புறம் அவருடைய போதனைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இந்த சந்தர்ப்பத்தை பெரும் அதிஷ;டமாகவே கருதுகிறோம் என்றார்.  

இலங்கை 2022 இல் எதிர்கொண்ட நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாது தீவு தேசத்தில் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. இதனால் இலங்கையால் ஒரளவிற்கு மூச்சு விட முடிந்தது என பௌத்த தேரர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்த உயர்மட்ட இலங்கை பௌத்த பிக்குகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, சவால்களை சமாளிக்க தங்கள் ஆன்மீகத் தலைவவரான  தலாய் லாமாவை இலங்கைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.

எவ்வாறாயினும் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை இதற்கு முன்னரும். இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  ஆனால் அரசியல் காரணங்களால் அது முடியாமல் போனது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையே இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலாய் லாமாவின் இலங்கை விஜயம் குறித்து பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

image_3007bd645f.jpg

கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பினார்

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பது பௌத்தர்களின் விருப்பமாக உள்ளது என்று உபதிஸ்ஸ தேரர் கூறுகிறார்.

கடந்த 1950ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை எனவும் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.

அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் கூறியிருந்தார்.

எனினும், திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் வருகைக்கு, அன்றிருந்த இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. அதற்கு  சீனா வரவேற்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலாய்லாமா எந்த நாட்டிற்கும் செல்வதற்கு, நாங்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அவர் குறித்த நிலைப்பாட்டில், தெளிவாக உள்ளோம். இதை, பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தியுள்ளோம் என்று அன்றும் சீனா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்களாகும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலாய்-லாமாவை-வரவேற்பதை-கடுமையாக-எதிர்க்கும்-சீனா/91-310893

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்

image_c4990e4bba.jpg

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்

“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாம் இயற்கையின்  இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ஒருவரோடு ஒருவா் சார்ந்து வாழ்தலில் தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” இப்படி சொல்லியிருப்பவா் சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் 14வது தலாய் லாமா தான்.

தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. திபெத்தின் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருக்கும்  தலாய் லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற இலங்கையின் பௌத்த பிக்குகள் கோரிக்கை விட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், திபெத்தின் ஆன்மீகத் தலைவரான  தலாய் லாமாவை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராமன்ய மகா சங்கத்தின் பிரதம குரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அழைப்பு விடுத்திருந்ததாக  இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

தலாய் லாமா இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்ததன்  பின்னர், அங்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை  கருத்தில் கொண்டே, தலாய் லாமாவிற்கு இலங்கை பிக்குகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலாய் லாமா தொடா்பான இந்த தகவல் சீனாவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.  குறித்த செய்தியால் சீற்றம் கொண்ட இலங்கைக்கான சீன தூதரகம் கடும் அதிருப்தியை வெளியிட கண்டி நகருக்கே ஓடிச் சென்றது. மகாநாயக்க தேரா்களிடம் மண்டியிட்டு தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது தொடா்பான செய்தி, சீனாவுக்கு ஏன்  சா்ச்சைக்குரிய விவகாரமாய் மாறியது? சீனா  தலாய் லாமாவை வெறுப்பதின் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை  அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

கண்டி மல்வத்து பீடத்தின் பிரதம பிக்கு  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை,  சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் தலாய் லாமாவின் இலங்கை வருகை தொடா்பான தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.

தலாய் லாமாவின் இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என சீனத் தூதரக அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் மிக அதிகமாக வரவேற்பதை கண்டிப்பதாக ஹூ வெய் தெரிவித்திருந்தார். 14ஆவது தலாய் லாமா ஒரு துறவியல்ல என்றும்,  மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும்,  சீனாவுக்கு எதிரான  விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவா் எனவும் ஹூ வெய் மகாநாயக்க தேரரிடம் தொிவித்திருந்தாா்.

சீனா,  இலங்கையுடன்  தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்ததோடு, சீனாவுக்கும்  இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை தலாய் லாமாவின் வருகை பாதிப்படையச் செய்யும் எனவும் அவா் எச்சரிக்கை தொனியில் கருத்து வெளியிட்டிருந்ததாக ஊடக செய்திகள் கூறியிருந்தன.

இது தொடர்பில் கருத்து தொிவித்த  மல்வத்த பீட மகாநாயக்கா்  திப்பட்டுவாவே சுமங்கல தேரா், சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாம் எதனையும் செய்யப்போவதில்லை என சீன அதிகாரிக்கு  உறுதி மொழி வழங்கியிருந்தாா்.

தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த மோதல்கள் மத, கலாசார, வரலாற்று ரீதியிலான முரண்பாடுகளின் வேர்களை ஆழமாக பதித்த, ஒரு சிக்கலான பிரச்சினையாக பாா்க்கப்படுகிறது.

தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்தின் தேசிய அடையாளமாகவும்  இருந்து வருகிறார்.   தலாய் லாமா அவரைப் பின்பற்றுபவர்களால் இரக்கத்தின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சீனா  திபெத்தின் மீது உரிமையைக் கோரி வருவதோடு, பௌத்த ஆன்மீக தலைவரான   தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தலாகவும் பாா்த்து வருகிறது.

1950களில், சீனா திபெத்தின் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும்  செலுத்தத் தொடங்கியது. இராணுவ தளங்களை திபெத்தில் அதிகமாக நிறுவியது. சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இன சீனர்களை திபெத்தில்  அதிகமாக குடியேற்றியது. சீனாவின் இந்த நடவடிக்கைகள்  திபெத்திய சுதேச மக்களிடையே பரவலான எதிர்ப்புகள் உருவாக காரணமாகியது.  இது திபெத்திய மக்கள் மத்தியில் எழுச்சிகளுக்கு வழிவகுத்தன. இவ்வாறு எழுந்த  திபெத்திய மக்களின் எழுச்சியை சீன அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி இன்று வரை ஒடுக்கி வருகிறது.

திபெத் மீது நிகழ்த்தப்ட்ட  சீனாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னா், 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அன்றிலிருந்து, அவர் இந்தியாவில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசாலாவில்  வசித்து வருகிறார்.

தலாய் லாமா  சர்வதேச சமூகத்தில் ஒரு முக்கியமான பௌத்த துறவியாக கருதப்படுகிறாா்.  தலாய் லாமா திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்காக குரல் கொடுப்பவராக இருந்து வருவதோடு,  திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பையும், அதன் அடக்குமுறை கொள்கைகளையும் கடுமையாக எதிா்த்து வருகிறார்.

இதேவேளை, தலாய் லாமா சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க முயல்வதாக குற்றம் சாட்டும் சீனா, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பல  முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறது.

தலாய் லாமாவை சீனா ஓா் ஆன்மீக தலைவராக பாா்க்காமல், ஓா் அரசியல் சதிகாரா் என்ற கண்ணோட்டத்தில் பாா்க்கிறது. தலாய் லாமா தொடா்பான சீனாவின் அணுகுமுறை ஒரு மதப் பிரச்சினை என்பதையும் ஓா் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில்,  தலாய் லாமா திபெத்தில் சீனா நிகழ்த்தி வரும் அடக்குமுறை ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறாா். அதுமட்டுமல்லாமல், திபெத்  பிராந்தியத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று வாதிட்டு வருகிறாா்.

தலாய் லாமாவை பிரிவினைவாதியாக கருதும் சீனா,  திபெத்தில் அவா் வன்முறையைத் தூண்டி, கலவரத்தைத் தூண்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.  தலாய் லாமாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சீனா பலவிதமான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அவரது நடமாட்டத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதில் சீனா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

சீனாவுக்கும் தலாய் லாமாவுக்குமிடையிலான இந்த மோதல்கள் பல ஆண்டுகளாக பல முனைகளில் இடம்பெற்று வருகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க வியடமாக பாா்க்கப்படுவது,  தலாய் லாமாவின் மறுபிறவி தொடா்பான பிரச்சினையாகும்.

திபெத்திய புத்த மத பாரம்பரியத்தின் படி, தலாய் லாமா என்ற ஆன்மீக தலைமை,  தொடர்ச்சியான வருகின்ற ஆன்மீகத் தலைமைத்துவத்தின் மறு அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும், திபெத்தியா்களிடம் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு  ஒரு முக்கியமான மத, கலாசார, அரசியல் செயல்முறையாக பாா்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க, அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பூரண உரிமை  தனக்கே இருப்பதாக சீனா வாதிட்டு வருகிறது.  இந்த உரிமைக் கோரல்  சீனாவிற்கும் திபெத்திலிருந்து  நாடு கடத்தப்பட்டவர்களுக்கும் இடையே குரோதத்தையும், பெரும் விரிசலையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தலாய் லாமாவை பின்பற்றுபவா்கள், அடுத்த தலாய் லாமாவை தொிவு செய்வது  திபெத்திய பாரம்பரிய,  பௌத்த நடைமுறைகளின்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டு வருவதோடு, சீனாவுக்கு அதற்கான உரிமை கிடையாது என்றும் கூறி வருகின்றனா்.

என்ற போதிலும், கடந்த 2019ம் ஆண்டு சீனா ஓா் அறிவித்தலை வெளியிட்டது. அதில்  அடுத்த தலாய் லாமாவை தாமே தெரிவு செய்யப் போதாகவும்,  அதற்கான  உரிமை தனக்கே இருப்பதாகவும்  சீனா பகிரங்கமாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல்,  இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடக் கூடாது என்று  சீனா இந்தியாவை அந்த அறிக்கையில் எச்சரித்தும் இருந்தது.

தற்போதைய  தலாய் லாமா, அந்த வரிசையில்  14வது தலாய் லாமாவாக கருதப்படுகிறாா். அவாின் வயது தற்போது  87 ஐ தாண்டியிருக்கிறது.  இதன் காரணமாக அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் இரு தரப்பினரிடையேயும் சா்ச்சைகளையும், முறுகல்களையும் தோற்றுவித்திருக்கிறது.

சீனாவுடனான இந்த மோதல்களின் விளைவாக,  திபெத்தில் மனித உரிமை மீறல்களை சீனா அதிகம் நடாத்தி வருவதாக சா்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள், அநீதியான தடுப்புக்காவல்கள், மத அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு  மனித உரிமை மீறல்கள் தொடா்பாக  சீனாவின் மீது பரவலான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சமீப காலங்களில், தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

திபெத்திய போராட்டக்காரா்கள் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ளும் எதிா்ப்பு நடவடிக்கைகள் எழுச்சி பெற்று வருகின்றன.  கடந்த 2009 பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் 2022 மே மாதம் வரை, சீன ஆட்சிக்கு எதிராக 160க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இவ்வாறு தமக்குத் தாமே தீமூட்டி தீக்குளித்து மரணித்துள்ளனா்.

தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள தலாய் லாமா, விடுதலைக்கான அவா்களின் துணிச்சலை பாராட்டியும் இருந்தாா்.  திபெத்தியா்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ள சீனாவின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறாா். எது எப்படியிருப்பினும்,  தலாய் லாமா திபெத்தின் தேசிய அடையாளமாகவும்  மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

தலாய் லாமாவின் இலங்கை விஜயம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சையும், சீனத் தூதரகத்தின் தீவிர எதிர் வினையாற்றலும் மேற் சொன்ன அரசியல் பின்னணிகளோடு பார்க்கப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டு கூட தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது.  இதே போன்று சீனாவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அன்று அதுவும் கைவிடப்பட்டது.  “ஒரே சீனக் கொள்கை” க்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

தலாய் லாமாவின் இலங்கை வருகையை தடுப்பதின் பின்னணியில் தொடா்ந்தும் சீன அரசியலே இருந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுடனான மிகுந்த நட்பை பாதுகாக்கும் நோக்கில் தலாய் லாமா விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.  2015ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த  மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசும் ராஜபக்ஷா்களின் அதே கொள்கையையும் அணுகுமுறையையும் கடைப்பிடித்தது. 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் சீனாவின் நிலைப்பாட்டை எதிா்பாா்த்து நிலைகுலைந்து போயிருக்கும் இலங்கைக்கு தலாய் லாமா விவகாரம் ஒரு புதிய தலை வலியை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சா்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறுவதற்கு இலங்கைக்கு  சீனாவின் கடன் மறுசீரமைப்பு  சான்றிதழ்  மிகவும் முக்கியமானது.

தலாய் லாமாவுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

த பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்திருந்தது.

“சீனாவின் கடும் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலாய்-லாமா-சீன-அரசியலால்-சுற்றி-வளைக்கப்பட்ட-ஓர்-ஆன்மீகத்-தலைவர்/91-311333

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.