Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதித்துறை Vs மோதி அரசு: தொடரும் கசப்புணர்வு, சர்ச்சைக்கு தீர்வு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறை Vs மோதி அரசு: தொடரும் கசப்புணர்வு, சர்ச்சைக்கு தீர்வு என்ன?

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் மோதல் அதிகரித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதைப்பார்க்கும்போது பிளவு மேலும் அதிகரித்து வருவது போலத்தெரிகிறது.

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரத்தில் கொலீஜியம் என்பது அரசியலமைப்பிற்கு புறம்பான ஒரு ஏற்பாடு என்று அரசு கூறுகிறது. அதே நேரத்தில் நீதிபதிகள் நியமன விஷயத்தில் அரசின் தலையீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானது என்று நீதித்துறை கருதுகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு வகையான கருத்துக்கள் உள்ளன. முதலாவது, நீதித்துறையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டிற்கு எதிரானது.

இரண்டாவது, நீதித்துறையில் சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தன்னிச்சை போக்கு நிலவுகிறது. அதற்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

 

இவ்வாறான நிலையில், இரண்டில் எது சரியானது, இந்த சர்ச்சைக்கு தீர்வு என்ன என்று புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது.

அரசுக்கு உண்மையில் எதுவும் செய்யமுடியாதா?

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் அரசால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்று நீதித்துறையை புரிந்து கொண்ட பலர் கூறுகின்றனர். கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகும், தான் நிறுத்த விரும்பிய நியமனங்கள் அல்லது இடமாற்றங்களை அரசு நிறுத்தியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அகில் குரேஷியின் விவகாரம் அல்லது சௌரப் கிர்பாலின் நியமனத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

கொலீஜியம் பரிந்துரைத்த போதிலும், நீதிபதி அகில் குரேஷி உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை. பம்பாய் உயர் நீதிமன்றத்தில் இருந்து அவர் திரிபுராவுக்கு அனுப்பப்பட்டார். மூத்த வழக்கறிஞர் செளரப் கிர்பாலை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான கோப்பையும் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக சமீப காலமாக அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலைத் தீர்க்க என்ன வழி என்று சட்ட நிபுணரும் எழுத்தாளருமான மனோஜ் மிட்டாவிடம் பிபிசி வினவியது.

"அரசு கொடுக்க முயற்சிக்கும் தோற்றம் சரியானது அல்ல. தற்போதைய அமைப்பில் அது நிராயுதபாணியும் இல்லை. கொலீஜியத்தில் ஒருதலைப்பட்சமான தன்னிச்சை போக்கு நிலவுகிறது என்றும் தலைமை நீதிபதியும் நான்கு நீதிபதிகளும் சேர்ந்து எடுக்கும் முடிவு இறுதியானது என்றும் சொல்லமுடியாது,” என்று மனோஜ் மிட்டா கூறினார்.

இதுபோன்ற உதாரணங்களை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தான் எதிர்க்கும் நியமனங்கள் தொடர்பாக அரசு அமைதி காக்கிறது. பலமுறை அனுப்பப்பட்ட பெயர்களில் ஒன்றிரண்டு பேரை நியமித்துவிட்டு மீதியை திருப்பி அனுப்பியிருக்கிறது என்று நீதிபதி குரேஷி மற்றும் பல உதாரணங்களை மேற்கோள் காட்டி அவர் எழுதியுள்ளார்.

21 நியமனங்களின் பரிந்துரைகள் அடங்கிய கோப்புகளை அரசு ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தற்போதைய செயல்முறையில் முடிவு எடுப்பது யார்?

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு உள்ளது. அவர்கள் ஆலோசனை கலப்புகளை நடத்தி நியமனம், இடமாற்றம் போன்றவற்றிற்கான பரிந்துரைகளை சட்ட அமைச்சருக்கு அனுப்புகின்றனர். சட்ட அமைச்சர் வாயிலாக இது பிரதமரிடம் செல்கிறது. அவரது ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் இறுதி முடிவை எடுக்கிறார்.

இந்த செயல்முறை 1993 முதல் நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு. கொலீஜியத்தில் உள்ளதாக கூறப்படும் உறவினர்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் தன்னிச்சை போக்கு குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது. இதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அரசின் நோக்கம் மற்றும் எதிர்காலத்தில் அது வகிக்க நினைக்கும் பாத்திரம் பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

கொலீஜியம் அமைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் வெளிப்படைத்தன்மை பற்றியது. ஏனென்றால் எந்த அடிப்படையில் நீதிபதி நியமிக்கப்படுகிறார் என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.

முந்தைய அரசுகள் குறிப்பாக மோதி அரசு, தேர்தல் ஆணையம், அமலாக்க இயக்குனரகம், சிபிஐ போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் விதத்தை பார்க்கும்போது நீதித்துறையிலும் அதுவே நடக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ரோஹிண்டன் மிஸ்த்ரி கொலீஜியத்தில் உறுப்பினராக இருந்தார். அகில் குரேஷி போன்ற ஒரு நல்ல நீதிபதியை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும்.  ஆனால் அது நடக்கவில்லை என்றும் மனோஜ் மிட்டா கூறுகிறார்.

சௌரப் கிர்பாலின் நியமனம் தொடர்பான கேள்வி

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,TWITTER/ SAURABH KIRPAL

அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் இழுபறி தொடர்பாக சௌரப் கிர்பாலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நீதிபதிக்கும் அவரவர் கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்கும்போது அவர் பக்கச்சார்பாக இருப்பார் என்பது அதற்கு அர்த்தமல்ல. ஏனெனில் இறுதியில் அரசியலமைப்பின் அடிப்படையில்தான் அவரது முடிவு இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை மீது அரசு தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது. தொழில்ரீதியாக வழக்கறிஞரான குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கரும் கேள்விகளை எழுப்புபவர்களில் அடங்குவார்.

அரசு ஆட்சேபம் தெரிவிக்கும் நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியிருப்பது மிகவும் ஆபத்தானது மற்றும் ஆட்சேபத்திற்குரியது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜு சமீபத்தில் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக அரசின் ஆட்சேபம் உள்ளது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜுஜு, ரா மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் ரகசிய மற்றும் முக்கியமான அறிக்கைகள் குறித்து வெளிப்படையாக விவாதிப்பது நாட்டின் நலனுக்கு ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

ஜனவரி மூன்றாவது வாரத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்றத்தில் நியமனத்திற்காக ஐந்து பேரின் பெயர்களை அரசுக்கு மீண்டும் அனுப்பியது. இதில் மூவர் தொடர்பாக அரசுக்கு ஆட்சேபம் இருந்தது. அரசின் இந்த ஆட்சேபங்களை கொலீஜியம் ரகசியமாக வைக்கவில்லை.

ஒருவரின் பாலியல் நோக்குநிலை தொடர்பாக அரசின் ஆட்சேபம் இருந்தது. மற்றொருவரின் பார்ட்னர் வெளிநாட்டவர் என்று கூறப்பட்டது. இன்னொருவரின் சமூக ஊடக இடுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் அவர் பிரதமர் மோதியை விமர்சித்திருந்தார்.

அரசின் நோக்கம் குறித்த கேள்வி

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,ANI

”நீதிமன்றத்தை தனது ’கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள' அரசு விரும்புகிறது. இல்லையென்றால் நியமனங்களுக்கான பரிந்துரைகள் பலவற்றை தடுத்து நிறுத்தியிருக்காது,” என்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பவன் பன்சல் குறிப்பிட்டார்.

இது முழுக்க முழுக்க தனது சொந்தக்கருத்து என்று கூறிய அவர், ”எங்கள் ஆட்சிக்காலத்தில் கூட அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்து வேற்பாடுகள் இருந்தன. ஆனால் அதில் இத்தகைய கசப்பு இருக்கவில்லை,”என்றார்.

காங்கிரஸ் கட்சியும் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை ஆதரித்தது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

கொலீஜியம் அமைப்பில் மாற்றம் செய்ய அரசு விரும்புவது போலவே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன என்பது இதன்மூலம் தெளிவானது. ஆனால், நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் மறுப்புக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சில ஆண்டுகளாக அமைதி நிலவியது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முழு விவகாரத்தையும் புதுப்பிக்க அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக தற்போதைய தலைமை நீதிபதி சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதை பார்க்க முடியும் நிலையில் இது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று மனோஜ் மிட்டா கூறுகிறார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றில் மாற்றம் தேவை என்பதை மற்றவர்களைப் போலவே மனோஜ் மிட்டாவும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் சட்ட அமைச்சர் கோரியபடி அரசுப் பிரதிநிதியை கொலீஜியத்தில் சேர்ப்பது இதற்கான பதில் அல்ல என்று அவர் தெரிவித்தார்.

அரசு ஒரு சட்ட வரைவை கொண்டு வர வேண்டும். அது குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தீவிர விவாதம் நடக்க வேண்டும். நாடாளுமன்றக் குழுவில் அதை விவாதிக்க வேண்டும். சட்ட ஆணையம் ஆராய்ந்தபிறகு சட்டம் இயற்ற வேண்டும் என்று பவன் பன்சல் கூறுகிறார்.

தீர்வு எப்படி ஏற்படும்?

உச்ச நீதிமன்றம் நீதிபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவை தொடர்பாக 2003-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவின் அடிப்படையிலேயே தற்போது நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் மோதலைத் தீர்க்க முடியும் என்கிறார் ஃபாலி நரிமன்.

நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவை தொடர்பாக 2003-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை அரசு படித்துப் பார்க்க வேண்டும் என்று பிரபல சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் அறிவுறுத்துகிறார்.

இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும், கொலீஜியத்திற்கு பதிலாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களில் கமிட்டி முடிவெடுக்கத் தொடங்க வேண்டும் என்றும் ஃபாலி நரிமன் கூறினார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் NDA அரசு தயாரித்த சட்ட வரைவில், உச்சநீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்றும் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்தக் குழுவில் மேலும் இருவரை நியமிப்பதை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் வந்த காரணமாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய சூழ்நிலை உருவானதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஃபாலி நரிமன் கூறினார்.

அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில், அரசால் நியமிக்கப்படும் இருவருக்கு வீட்டோ என்ற ரத்து அதிகார விதி இருந்தது. நியமனம், இடமாற்றம் மற்றும் பிற விஷயங்களில் உடன்பாடு இல்லையென்றால் அவர்கள் அதை பயன்படுத்தியிருக்க முடியும் என்று இந்த பிரத்யேக நேர்காணலில், ஃபாலி நரிமன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை இல்லை என்று கிரண் ரிஜூஜூ அறிக்கை வெளியிட்டார். அமெரிக்காவில் பெடரல் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது. ஆனால் அந்த செயல்முறை சரியாக இயங்கவில்லை, எனவே அதை கைவிட பேச்சு நடக்கிறது என்று நரிமன் கூறினார்.  .

தலைமை நீதிபதிக்கும், பிரதமர் அல்லது சட்ட அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்பது நரிமனின் அறிவுரை.

நீதிபதிகளை நியமிப்பது நீதிபதிகளின் வேலை அல்ல என்பதை ஃபாலி நரிமன் ஏற்றுக்கொண்டார்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமிப்பது உலகில் எங்கும் நடப்பதில்லை என்று அரசு கூறிவருகிறது. ஆனால் ஜனநாயகத்தில் நீதித்துறையின் சுதந்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் இரு தரப்பின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே தீர்வை எட்டமுடியும்.

https://www.bbc.com/tamil/articles/c9wrzllg3dko

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.